வெள்ளி, 29 மார்ச், 2013

இந்த 'கலாச்சாரம்'னா என்னங்க…??



பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது”.

"பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள்அறிவு பரம்பல்கள்வாழ்வியல் வழிமுறைகள்சமூக கட்டமைப்புஎன்பனவற்றை சுட்டி நிற்கின்றதுமொழிஉணவுஇசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்." இப்படிச் சொல்கிறது விக்கி.

சாதாரணமான வார்த்தைகளில் சொல்லனும்னா ஒரு நாடுன்னு எடுத்துகிட்டா அங்க இருக்கிற மக்களுடைய உணவுப்பழக்கம், உடைகள், இனம், பேசும் மொழி, பழங்கால இலக்கியங்கள்,  வாழ்வியல், இசை, நாகரிகம், ரசனை, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் வழக்கங்கள், விளையட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகள் ஆகியவையே அடிப்படைக் காரணிகள் (Basic Factors). இவை அனைத்தின் அடிப்படையிலேயே இந்த கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை வரையறுக்கப்படுகின்றன.

உலக அளவில் பல நாட்டு மக்களிடையே பலவகை கலாச்சாரங்கள் பழக்கத்தில் இருந்தாலும் இந்திய நாட்டைப் பொறுத்தவரை இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகளாக நாம் குறிப்பிட்டவை அனைத்துமே மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டவையாகத் திகழ்கின்றன. இன்னும் அணுக்கமாகப் பார்த்தால் நம் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகள் வேறுபடும்.(உதாரணம் – பேச்சு வழக்கு, உணவு பழக்கம், இறை வழிபாடு, சடங்குகள்)

இந்த கலாச்சாரத்தின் முக்கியமான கூறாக நான் கருதுவது இதன் மாற்றம் அல்லது வளர்ச்சி. இந்த மாற்றமும் வளர்ச்சியும் காலத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. இந்த காலத்தினால் ஏற்படும் மாற்றம் என்பது ‘கலாச்சாரம்மட்டுமல்லாது  சமூகத்தில் உள்ள ஏனைய விஷயங்களிலும் எதிரொலிக்கும். உதாரணமாக எண்பதுகளில் மக்களின் இசை ரசனை, பெல் பாட்டம் உடைகள், ஹிப்பி ஹேர்ஸ்டைல், அதன் பிறகு 90களில் ஏற்பட்ட மாற்றங்கள், இப்போது இந்த விஷயங்களில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி முன்னேற்றம் இவைகளே.


இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்களாக நான் கருதுவது புத்தகங்களும் ,திரைப்படங்களும் தான். அதனாலேயே வித்தியாசமான கலாச்சாரங்களையும், வெவ்வேறு காலகட்டங்களையும்,அந்தந்த காலகட்டத்தின் ரசனைகளையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கக்கூடிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித்தேடி பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன்…!!

என்னாலியன்றவரையிலும் எனக்குப் புரிந்தவரையிலும் அவைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்கின்றேன்…!! உங்களுக்குப் பிடித்தமான,மேற்சொன்ன வரையரைக்குள் வருகின்ற திரைப்படங்களையும், புத்தகங்களையும் பற்றி பின்னூட்டங்களில் மறக்காமல்  பகிர்ந்து கொள்ளுங்கள்…!!
Images Courtesy: Original uploaders

திங்கள், 18 மார்ச், 2013

பாலாவின் ‘பரதேசி’


பாலாவின் பரதேசி பார்த்தாகிவிட்டது. ஊர் உலகமே படம் பற்றி நிறைய பேசவும் எழுதவும் செய்கின்றார்கள். எனக்கும் இந்த படம் பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

முதலில் ஆங்கிலத்தில் ‘Red Tea’யாக எழுதப்பட்டு பின்பு தமிழில் ‘எரியும் பனிக்காடு’-ஆக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தின் முழுமையான தழுவலாக இந்த படம் இல்லை. ஆதலால் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது நலம். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக பஞ்சம் பிழைக்கச் சென்று ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கு ஆளான மக்களின் கதை என்ற அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதன்மீது ஒரு திரைக்கதையினைக் கட்டமைத்திருக்கின்றார் பாலா.

படம் வெளிவரும் முன்பு வெளியிடப்பட்ட டீசரை பார்த்துவிட்டு கொஞ்சமும் புரிதல் இல்லாமல் இயக்குனர் பாலாவை இந்தாளு ஒரு சைக்கோ என்று பேசியவர்களெல்லோரும் படம் பார்த்தபின் அந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றியிருப்பார்கள். பாலாவின் Perfection ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகின்றது. கதை என்றவகையில் கொஞ்சம் அழுத்தமில்லாமல் சோகையாகிப்போனது வருத்தமே. ஆனாலும் ஒரு தேயிலைத்தோட்ட அடிமைகளாகச் சென்றழிந்த மக்களின் வாழ்வைப்பற்றிய குறிப்பிடத்தக்க ஆவணமாக ’பரதேசி’ நிச்சயம் திகழும்.

அதர்வாவுக்கு இந்தப் படம் ஒரு மைல்கல். அப்பாவி ஒட்டுப்பொறுக்கி ‘ராசா’வாக அப்படியே அள்ளிக்கொண்டு போகின்றார். இறுதியில் பாறை மீது உட்கார்ந்துகொண்டு ”கொஞ்சம் இரக்கம் காட்டுங்க நியாயமாரே” என்று கதறும்போது நம்மைக் கலங்கடிக்கின்றார். கங்காணியாக நடித்திருக்கும் இயக்குநர் ஜெர்ரி, அங்கம்மாவாக வரும் வேதிகா, இரண்டாம் பாதியில் வரும் தன்ஷிகா, கருத்தக்கன்னி ரித்விகா, சாலூர் ராசாவின் கூன் பாட்டி, சோக்காளி ஊர்ப்பெரிசாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன்  என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே பாலா பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு மின்னுகின்றார்கள் .

ஒளிப்பதிவாளர் செழியன் பாலாவின் கண்களாகவே செயல்பட்டிருக்கின்றார். முதல் காட்சியில் தடதடவென ஓடி சாலூர் கிராமம் மொத்தத்தையும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையையும் காட்டிவிடுவதில் தொடங்கி சாலூர் மக்கள் கால்நடைப் பயணமாக சென்று தேயிலைத் தோட்டங்களினூடே தங்கள் வாழ்வைத் தொலைப்பது வரையிலுமான அத்தனைக் காட்சிகளிலும் தனித்து தெரிகின்றார்.

படத்தின் நெருடலாக குறிப்பிட வேண்டியவை என்று சொன்னால் இரண்டே விஷயங்கள் தான். ஒன்று சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை மதம் மாற்றிய கிறிஸ்தவ மிஷனரிக்கள் பற்றிய பகுதியை காமெடியாக்கியது. அதனைத் தவிரவும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுநிலையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கொஞ்சமாவது முன்னேற காரணமாக இருந்தவையும் இந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தாம். நாவலின் அடிப்படையில் பார்த்தால் இங்கு சிவசங்கர் மாஸ்டர் ஏற்றிருக்கும் டாக்டர் கதாப்பாத்திரமே (நிஜத்தில் டாக்டர்.டேனியல்) அந்த மக்களின் துயரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர். 'ரெட் டீ'யை  எழுதியவரும் இவரே.அதனை இப்படி கோமாளித்தனம் ஆக்கியிருக்க வேண்டாம். நிச்சயமாக இன்னும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க வேண்டிய விஷயமிது. அதிலும் அந்த ‘அல்லேலோயா’ பாடல் படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் அழுத்தத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. ரிலாக்சேஷன் என்று நினைத்து அந்த பாடலை பாலா வைத்திருக்கலாம். (ஆனாலும் பாட்டு எனக்கு பிடித்திருந்தது ’கானா’ பாலாவின் குரலுக்காகவும் இயக்குநர் பாலாவின் நையாண்டிக்காகவும் J)

மற்றொன்று ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. அப்பட்டமான இளையராஜா சாயல் ‘அவத்தப் பையா’ பாடலும், வைரமுத்துவின் வரிகளுக்காக ‘செந்நீர்தானா’ பாடலையும் தவிர இசையைக் குறிப்பிட்டு சொல்ல வேறெதுவுமில்லை. ஷெனாயை உச்சஸ்தாயியில் அலறவிடுவது தான் உணர்வுப்பூர்வமான இசை என்று இவருக்கு யார் கற்றுக்கொடுத்தார்களெனத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் சரி this movie deserves Raja sir…!!

திரையரங்கை விட்டு வெளியேவரும்போது இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள் “இதே மத்த டைரக்டரு எவனாவது எடுத்துருந்தா ஹீரோ கங்காணியையும் வெள்ளைக்காரனையும் அடிச்சுப்போட்டுட்டு ஜனங்களையெல்லாம் காப்பாத்துற மாதிரி காட்டிருப்பானுகடா மாப்ள..! நல்லவேள பாலா அப்புடி செய்யலை. செஞ்சிருந்தான்னா அது பாலா படம் இல்ல…”

அது.. அது தான் பாலா…!! இந்த மாதிரி படமெடுக்க பாலாவை விட்டா தமிழ் சினிமாவுக்கு வேற ஆளே கிடையாது.
Thank you Bala sir – For an emotional journey through the lives of thousands of people…!!

கண்டிப்பாக பார்க்கவேண்டிய இரண்டு காணொளிகள் கீழே
படத்தின் முழுமையான மேக்கிங் வீடியோ


விஜய் டி.வி-இல் வெளியான ’பரதேசி’ படக்குழுவினரின் உரையாடல்


Images courtesy: Moviegalleri.net