செவ்வாய், 25 ஜூன், 2019

இந்தியாவின் கழிப்பறைக் குழப்பம் - Where India goes ?


புதிய இந்தியா - 2019:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறோம். பெருவாரியான மக்களின் தேர்வாக மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி. வெற்றிக்குப் பின்னான தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் ஒரு ‘புதிய இந்தியா’வை அமைக்க இருப்பதாக பேசி இருக்கிறார் திரு.மோடி அவர்கள்.

பழைய சிக்கல்கள்:

GST வரிவிதிப்பு , பணமதிப்பு நீக்கம், சிறு குறு தொழிலாளர்களின் முடக்கம்,  
பொருளாதார சிக்கல்கள், மதம்/சாதியின் பெயரால் நாடு முழுவதும் நிகழ்த்தப்படும் வன்முறைகள், வேலைவாய்ப்பின்மை,  NEET மாதிரியான தேர்வுகளின் வாயிலாக கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படும் மருத்துவக் கல்வி, CBSE பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றப்படும் கல்விக் கொள்கைகள், என இதுவரை நாடு சந்தித்த பிரச்சனைகளுக்கு சரியான நிலையான முழுமையான தீர்வுகள் கிட்டாத நிலையில், நாட்டின் மிக முக்கியமான பொது சுகாதாரம் சார்ந்த  மற்றுமொரு பிரச்சனை Open Defecation - OD எனப்படும் திறந்தவெளி மலம் கழித்தல்.
தூய்மை இந்தியா:

மத்திய அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்தில் அதிக முக்கியத்துவம் அளித்த திட்டங்களுள் முதன்மையானது மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னெடுத்த  ‘Swachh Bharat Mission' எனும் ’தூய்மை இந்தியா’ திட்டம். கங்கையை சுத்தப்படுத்துதல், நகரங்களும் கிராமங்களுக்குமான தனித்தனி தூய்மை இந்தியா திட்டங்கள், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தோடு இணைந்து வகுக்கப்பட்ட திட்டங்கள், முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள்/பாரம்பரியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களின் தூய்மையை மேம்படுத்துதல் என பல துணைத்திட்டங்களை உள்ளடக்கியது இந்த ‘தூய்மை இந்தியா’ திட்டம். 

2014 துவங்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக சொல்லப்பட்டது ODF (Open Defecation Free - ODF) - திறந்தவெளி மலம்கழித்தல் அற்ற நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டுமென்பதே. 

Courtesy: indiatoday.in

தூய்மையின் நிலை ? 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கிராமங்களுக்கான தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM-G) சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீடு கீழ்கண்ட செய்தியைச் சொன்னது.

2018 நவம்பர் மாதம் தொடங்கி 2019 ஃபிப்ரவரி மாதம் வரையிலும் நடத்தப்பட்ட  தேசிய வருடாந்திர ஊரக சுகாதார கணக்கெடுப்பின் (The National Annual Rural Sanitation Survey - NARSS) படி ,  இந்திய கிராமப்புறங்களில் 93% வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதாகவும், 96.4 % வீடுகளில் கழிப்பறையைப் பயன்படுத்தும் வசதி இருந்தால் கட்டாயம் பயன்படுத்துவதாகவும் சொல்லப்பட்டது. இந்திய கிராமங்களில் 90.7%, திறந்தவெளி மலம்கழித்தலற்றவை  (ODF - Open defecation free)  என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 6136 கிராமங்களில் 92040 குடும்பங்களை சுயாதீன சரிபார்ப்பு நிறுவனங்களின் (IVA - Independent verification agency) துணையோடு நேரடியாக சரிபார்த்ததிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

உண்மையிலே தூய்மையானதா இந்தியா ?

முதலில் இந்தியாவின் திறந்தவெளி மலம்கழித்தல் குறித்த வேறு சில தரவுகளின் அடிப்படையிலான தகவல்களைப் பார்க்கலாம். கீழ்காணும் படம் உலக வங்கியின்  தரவுகள் அடிப்படையிலானது. இந்தியாவின் கிராமப்புறங்களில் கடந்த 2000 ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும் திறந்தவெளியில் மலம்கழிப்போரின் சதவிகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இறுதியாக 39.84 % சதவிகிதம் பேர் இந்திய கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக சொல்லப்பட்டது.
இனி, நமது அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு முதல், இந்திய மாநிலங்களில் 96 சதவிகிதத்துக்கு மேல் திறந்தவெளி மலம் கழித்தலற்றதாக அறிவித்த  2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமான அரசு தரப்பின் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் பார்க்கலாம்.

வட இந்தியாவின் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான பிகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தரவுகளையே ஒப்பீடுகளுக்கு எடுத்துக் கொள்வோம். IHHL (Individual Household Latrine) எனப்படும் கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்டு, மக்களின் தினசரி பயன்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையிலேயே இத்தனை சதவிகிதம் ODF (Open Defecation Free) திறந்தவெளி மலம்கழித்தலற்ற கிராமங்களாக/மாவட்டங்களாக/மாநிலங்களாக அரசு தரப்பு அறிவிக்கின்றது.



இனி, இந்தியாவில் பொது சுகாதாரம், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளர்ச்சி என பல்வேறு துறைகளில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டு வரும் RICE எனப்படும் Research Institute for Compassionate Economics நிறுவனம் நடத்திய ஆய்வுகளையும் அதன் அடிப்படையிலான தரவுகளையும் பார்க்கலாம். இந்த தகவல்களும் மேற்கண்ட அதே நான்கு மாநிலங்கள் சார்ந்தவையே.

RICE நிறுவனத்தின் 2014 ஆண்டின் கனக்கெடுப்போடு 2018 ஆண்டு கனக்கெடுப்பின் முடிவுகளை ஒப்பிட்டு, கழிவறை பயன்பாடு/அணுகல் (access to toilets) அதிகரித்திருப்பதை கீழ்கண்ட படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகித வேறுபாட்டில் காணலாம்.


RICE நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கழிப்பறை இல்லாமல் இருந்து, 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது கழிப்பறை கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் சதவிகிதமும், அவற்றுள் அரசு உதவி/ மானியத் தொகை பெற்று கழிப்பறை கட்டிய வீடுகளின் சதவிகிதமும் குறிப்பிடப்பட்டுள்ளது (கீழ்க்காணும் படம்)

தூய்மை இந்தியா திட்டவரைவின் கணக்கெடுப்பு முடிவுகளின் படியும், RICE அமைப்பின் கணக்கெடுப்பு முடிவுகளின் படியும், கழிப்பறை அணுக்கம் (access to toilets) அதிகரித்திருக்கின்றது; கட்டப்பட்ட கழிப்பறைகளின் எண்ணிக்கையும் கூடியிருக்கின்றது; 2014ஆம் ஆண்டை விட திறந்தவெளியில் மலம் கழிப்போரின் சதவிகிதம் பெருமளவு குறைந்திருக்கின்றது;

என்ன சிக்கல் ? எங்கே குழப்பம் ?

தூய்மை இந்தியா திட்டத்தின் வாயிலாக  மேற்கொள்ளப்பட்ட அத்தனை முன்னெடுப்புகளும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளும், அடிப்படையில் சில விஷயங்களில்  மட்டுமே கவனம் செலுத்தின. அதில் முக்கியமானது கழிப்பறைகள் கட்டுதல். கழிப்பறைகள் கட்டிமுடிப்பதன் மூலம் மட்டுமே அந்தந்த  பகுதிகள் (கிராமம்/நகரம்/மாநிலம்) திறந்தவெளி மலம்கழித்தலற்றவை (Open Defecation Free) என அறிவிக்கப்பட்டன.

மேலே குறிப்பிட்ட நான்கு மாநிலங்களிலுமே காலை நேரங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் கிராம மக்களை வெவ்வெறு வகையில் மிரட்டுதல்,அவமானப்படுத்துதல், கழிப்பறை கட்டாத குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை தர மறுத்தல், விவசாய மானியங்கள்  மறுத்தல், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மறுத்தல், கடுமையான அபராதங்கள் வசூலித்தல்,   என உள்ளாட்சி அதிகாரிகளும் இன்னபிற அரசு ஊழியர்களும் அவர்களுடைய மேலதிகாரிகள் உத்தரவின் பெயரிலேயே இத்தனை காரியங்களையும் செய்துவந்ததாகத் தெரிகிறது.  பிரதமரின் அறிவிப்பின்படி ஸ்வச் பாரத் திட்டத்தின் வாயிலாக இந்தியா மொத்தமும் நான்காண்டுகளில் முழுமையாக தூய்மை அடைந்துவிட்டதாக காட்டும் பொருட்டே இவை அனைத்தும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

Where India goes ? ஆய்வுப்பார்வையும், வேறு கோணங்களும்

இந்திய புள்ளியியல் கழகத்தின் (Indian Statistical Institute) ஆராய்ச்சியாளர்களும், R.I.C.E அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான  டயேன் காஃபே (Diane Coffey) மற்றும் டீன் ஸ்பியர்ஸ், தங்களுடைய 'Where India Goes: Abandoned toilets, Stunted development and the costs of caste' என்ற புத்தகத்தில் இந்தியாவின் தலையாய பிரச்சனைகளுல் ஒன்றான இந்த திறந்தவெளி மலம்கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப்பார்வையை முன்வைத்திருக்கின்றனர்

இந்தியாவின் கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதை சார்ந்த பிற சிக்கல்களையும் , காரணங்கள் (Causes), விளைவுகள் (Consequences), எதிர்வினைகள் (responses)  என மூன்று பிரிவுகளின் கீழ் பத்து அத்தியாயங்களில் தீர ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர். இந்தியாவைவிட பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் பிந்தங்கிய நிலையிலுள்ள பல ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகளில் கூட ’தி.வெ.ம.க’ சதவிகிதம் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், நம் நாட்டில் என்னதான் பிரச்சனை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் டயேனும் டீனும்.

குழந்தைகள் இறப்பு விகிதம் (infant mortality rate), குழந்தைகளின் சராசரி வளர்ச்சி/உயரம் உள்ளிட்ட பல விஷயங்களில் திறந்தவெளி மலம் கழித்தலின் நேரடி பாதிப்பு பற்றி பேசுகின்றனர். மேலும் இந்த பிரச்சனையின் பின்னால் மிகப்பெரிய பங்கு வகிக்கின்ற சாதிரீதியான தீண்டாமை குறித்தும் ஒடுக்குமுறைகள் குறித்தும் நிறையவே பேசப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளேயோ அருகிலோ கழிப்பறை கட்டினால் அதை சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்ட சாதியினரை தாங்கள் வசிக்குமிடம் அருகே வர அனுமதிக்க நேரும் என்பதாலேயே பெரும்பாலான கிராம மக்கள் கழிப்பறைகள் கட்ட முன்வராதது டயேனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

சாதி... தீண்டாமை..தூய்மை ?!!

RICE அமைப்பு நடத்திய SQUATS (Sanitation quality- use, access and trends) கணக்கெடுப்பின்போது கழிப்பறை கட்டுமளவு வசதி வாய்த்த அந்தந்த கிராம மக்கள் சொன்னது, ”இந்திய அரசாங்கமும், தூய்மை இந்தியா திட்டமும் பரிந்துரைக்கும் அளவில் சிறிய நிலத்தடி கழிவுத்தொட்டிகள் கொண்ட கழிப்பறைகளை கட்டினால் அவை அடிக்கடி நிரம்பும். அப்படி கழிவுத்தொட்டிகள் நிரம்பும் பட்சத்தில் அதை சுத்தம் செய்ய (தலித்கள்) மலமள்ளும் தொழிலாளர்கள் யாரும் கிடைப்பதில்லை. நாங்கள் (உயர்சாதியினர்/பிராமணர்) இந்த வேலையை செய்ய மாட்டோம். அதனால் பெரிய தொட்டிகளை கட்டுகின்றோம். அதற்குமே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து நிறைய செலவு செய்து லாரி/மோட்டார் வைத்து சுத்தம் செய்ய வேண்டியிருக்கின்றது” .

1993 ஆம் ஆண்டு முதன்முதலில்  தொழிலாளர்களை கைகளால் மலமள்ள பணித்தலை பல மாநிலங்களில் தடைசெய்து இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்பு 2013ஆம் ஆண்டு நிறைவேறப்பட்ட The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Bill சட்டம், நாடுமுழுவதுமே தொழிலாளர்களை கைகளால் மலமள்ள பணித்தலை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. சிறை தண்டனையும் அபராதமும் கூட உண்டு. ஆனாலும் தேசிய குற்ற ஆவண காப்பகம் அளிக்கும் தகவலின்படி இன்றுவரை இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு வழக்கு கூட பதிவுசெய்யப்படாதது விந்தையே.

கிராம மக்கள் தூய்மை எனவும் மாசு எனவும் எந்தெந்த விஷயங்களை கணக்கிலெடுத்துக் கொள்கின்றார்கள் ?; சாதிக் கட்டமைப்பினால் நேரடியாகவும் மறைமுகவாகவும் என்னென்ன பாதிப்புகள் என்ன ? இவை குறித்து விவாதிப்பதன் மூலமும் கிராம  மக்களோடு நிறைய நாட்கள் செலவிடுவதன் வாயிலாகவும் இந்திய கிராமங்களில் சாதீய பாகுபாடுகள் குறித்து ஒரு புரிதலுக்கு வருகின்றனர்.

There are ways in which caste is similar to systems of dividing and ranking people that exist in other societies, such as race in the US, South Africa or Latin America. Yet, there are also ways in which caste in South Asia is a unique social institution. 
Much has been written about the elaborate rituals that some Brahmin and members of other higher castes perform to assert and maintain their purity (and therefore superiority) over other people from other castes. In addition to believing that objects (such as feces and drains) and situations (such as death and childbirth) can affect the purity of a person who interacts with them, many of the higher caste people also believe that people from lower castes are 'polluting'.
 (excerpts from the book) 

சாதீய ஒடுக்குமுறைகளுக்கும், தீண்டாமைக்கும்,  தூய்மை இந்தியா திட்டம் ஒழிக்க முயல்வதாகச் சொல்லும் திறந்தவெளி மலம்கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியுமென்பதைப் புரிந்து கொள்ளவே அதீத முயற்சியும், பொறுமையும், வாசிப்பும், பொதுநல நோக்கும் தேவைப்படுகின்றன.டெல்லி பல்கலைக்கழக சமூகவியலாளர் பேராசிரியர் ஆந்த்ரே பெதெய்ல் (Andre Beteille) சொல்வதுபோல “In our obsession for ritual purity, we make compromises with physical cleanliness.” 
The first part to our two-part answer to this central question: Why do so many people in rural India defecate in the open? Although many societies have ideas about what is clean and dirty, rural Indians' ideas about purity and pollution are globally unique and are intimately related to the Hindu caste system
(excerpt from the book)

இதை விட முக்கியமான மற்றொன்று கழிப்பறைகளின் கட்டுமானமும்  அதற்காக செய்யப்படும் அபரிமிதமான செலவினமும். சராசரியாக உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி,  1.5 க்யூபிக் மீட்டர் கன அளவு கொண்ட நிலத்தடி இரட்டை மலக்குழியோடு (twin pit latrine) கட்டப்படும் கழிப்பறைக்கு வங்கதேசம் மாதிரியான நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பில் 2000ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை செலவாகக்கூடும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படும் கழிப்பறைகள் கட்ட 12000ரூபாயிலிருந்து 21000 ரூபாய் வரை செலவளிக்கின்றனர் இந்திய கிராமத்தினர். உலக சுகாதார மையம் பரிந்துரைக்கும் சராசரி அளவை விட ஐந்து மடங்கு பெரிய நிலத்தடி கழிவுநீர்/மலத் தொட்டியை கட்டுவதாலேயே இந்த செலவு. இதன் பின்னாலுள்ள உளவியல் குறித்து டயேன்/டீன் பின்வருமாறு கேள்வியெழுப்புகின்றனர்.

Why do rural Indians want such expensive toilets that sit atop large pits? Why do they reject the affordable options that are found in other developing countries? In short, why do rural Indians reject government pit latrines? Answering these questions requires an understanding of rural India's history of untouchability, and particularly the practice of manual scavenging.
(excerpt from the book)


மற்றொரு அத்தியாயத்தில் திறந்தவெளி மலம்கழித்தலால் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதை பற்றிப் பேசும்போது, Muslim mortality paradox என்கிற ஒரு விஷயத்தையும் குறிப்பிடுகின்றனர். இந்திய அரசின் குடும்பநல மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் , இந்து குழந்தைகளை விட இஸ்லாமிய குழந்தைகளின் இறப்பு விகிதம் 21% குறைவாக உள்ளதாக கண்டறிந்தனர்.சமூகத்தில் சிறுபான்மையினராகவும் பொருளாதார நிலையில் இந்துக்களை விட பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இஸ்லாமியர்களிடையே திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அதிகளாவில் இல்லாததும் அவர்கள் சக இஸ்லாமியர்கள் வாழும் பகுதியிலேயே வாழ்வதாலுமே, திறந்தவெளி மலம்கழித்தலால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றப் படுவதாகச் சொல்கிறார்கள்.
Open defecation kills children and stunts the growth of those who survive. It explains why some poorer children are more likely to survive than some richer children and it lets children in some of the poorest countries grow taller than children born in an India that has been experiencing rapid economic growth. These facts average over, all Indians: Open defecation is a relatively egalitarian health hazard.
If the effects of open defecation remain similar in the coming decades, over five million Indian children may die before open defecation is eliminated, if the decline continues at the same slow rate.
(excerpts from the book)

இறுதியாக...

இந்த பிரச்சனையின் நடைமுறைச் சிக்கல்களையும் ,இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி அலசி ஆராய்ந்த பின்னர், டயேன், டீன் இருவரும் மூன்று முக்கியமான பரிந்துரைகளை முன்வைக்கிறார்கள்.

1: திறந்தவெளி மலம்கழித்தல் சார்ந்த கணக்கெடுப்புகளை சுயாதீன அமைப்புகளின் மூலம் நடத்தி, ஓரளவு நடமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுத்தல்

2. மக்களிடையே கலாச்சாரம் குறித்தும், தனிப்பட்ட அவர்களுடைய தேர்வுகள் மற்றவர்களை எப்படி நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்றது என்பதையும், சாதி-தீண்டாமை பற்றியும்  உரையாடலைத் துவக்க/நிகழ்த்த வேண்டும்.

3. பொது சுகாதாரம் , துப்புறவு, சார்ந்து நடைமுறைபடுத்தப்படும் திட்டவரைவுகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி தேவையான மாறுபாடுகளைச் செயல்படுத்தவேண்டும்.

திறந்தவெளி மலம் கழித்தல் என்பது மக்களின் அடிப்படை பழக்க வழக்கம் மற்றும் குணாதிசயம் சார்ந்த ஒரு பிரச்சனை. முறையான கல்வியும், அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், தொடர் முயற்சிகளும் மட்டுமே இப்படியான பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை தரக்கூடியவை.
அரசாங்கம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு கொள்கை ரீதியான தீர்வுகளை முன்னெடுத்தால் மட்டுமே நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஓரளவுக்காவது பயனடைய முடியும்.

"I shall have to defend myself on one point, namely, sanitary conveniences. I learned 35 years ago that a lavatory must be as clean as a drawing-room. I learned this in the West. I believe that many rules about cleanliness in lavatories are observed more scrupulously in the West than in the East. There are some defects in their rules in this matter, which can be easily remedied. The cause of many of our diseases is the condition of our lavatories and our bad habit of disposing of excreta anywhere and everywhere. I, therefore, believe in the absolute necessity of a clean place for answering the call of nature and clean articles for use at the time, have accustomed myself to them and wish that all others should do the same. The habit has become so firm in me that even if I wished to change it I would not be able to do so. Nor do I wish to change it"
 - M.K.Gandhi, Navajivan (24-5-1925)
ஆங்கிலத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க : இங்கு 

எதிர் வெளியீடு இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ’எங்கே செல்கிறது இந்தியா’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். (நான் தமிழ்ப்பதிப்பை இன்னும் படிக்கவில்லை)

-----------------------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கட்டுரைக்கான தரவுகள், ஆய்வறிக்கைகள், புள்ளிவிவரங்கள், பத்திரிக்கை செய்திகள், ஆய்வுக்கட்டுரைகள் அத்தனையின் இணைப்புகளும் இந்த word கோப்பில். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்