புதன், 28 ஆகஸ்ட், 2019

கேள்விகளின் தொடர்சுழல் - Qarrtsiluni


பேரன்பின் பார்ட்னருக்கு,

கடிதங்கள் எழுதுவதற்கான காரணங்கள்  அற்றுப்போய்விடவில்லை எனினும், ஓய்ந்தமர்ந்து எழுத நேரமிருந்தும், ஏனோ மனம் வரவில்லை. இந்தப் புதிய பாதையில் கொஞ்சமாய்  நடந்து பழகத் துவங்கியிருக்கின்றேன் பார்ட்னர். ஆங்காங்கே சிராய்ப்புகளும் சிறு கீறல்களும் இல்லாமலில்லை. விழுந்து, எழுந்து, நிதானித்து, பின் தொடர்ந்து நடக்கிற செயற்சுழல் ஓரளவு பழகி, புரிந்து, தொடர்கிறது. பெரிதாய் இளைப்பாறல்கள் ஏதுமில்லை; தேடும் திசையும் தெரிந்தேனில்லை. வழக்கமாய் கைதரும் வாசிப்பும் , யாருக்காகவேனும் பாட்டுப் பாட வாய்க்கிற இரவுகளும், சேர்த்து யோசிக்க இன்னொரு உயிருமாய் நாட்கள் நகர்த்துகின்றேன்.

எந்தன் பழைய கடிதங்களை, அவ்வப்போது வாசிக்க நேர்கையில் முற்றிலும் வேறொருவனாக என்னை நானே கற்பனை செய்து கொள்கின்றேன் பார்ட்னர். நித்ய பயணியாயும், நாடோடியாயும், வனாந்திரங்களில் உலவித்திரிகிறவனாயும், தனிமையின் காதலனாயும்,  வெறுமையின் கவிஞனாயும் என்னை நானே உருவகித்துத் திரிந்த, அந்த கற்பிதங்களின் தொகுப்புருவானவனை எங்கே எனத் தேடிக் கொண்டிருக்கிறேன் பார்ட்னர். வலிந்து வருந்தி உருவாக்கி, வலிந்து வருந்தித் தொலைத்த அந்த உருவின் இன்மை உணர்கின்றேன் பார்ட்னர்.

இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்த கடலை கண்னீராக நான் வெளியேற்ற முடியும்! என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது எப்படி நான் அழாமலிருக்க முடியும்!- ஜெ பிரான்சிஸ் கிருபா ,கன்னி

இப்போதைய என் இரவுகள் அத்துனை நீளமில்லை பார்ட்னர். மாதக்கணக்கில் வாராதிருக்கிற மழையும் , வான் நீங்கி வாட்டித் தீய்த்துக் கொண்டிருக்கிற காலமிது. சாலைகளின் தகிப்பும், காற்றின் அனலும், வியர்வை நெடியும் ஒன்றுகூடி தோள்மீதமர்ந்து சுமை சேர்க்கின்றது பார்ட்னர். நாள்தோரும் உலகில் நிகழ்கிற அத்தனை மரணங்களுக்காவும் உள்ளூர வலிய துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். எல்லா மரணங்களுக்காகவும் கோபப்பட்டு, எல்லா மரணங்களுக்காகவும் வருந்தி, எல்லா மரணங்களுக்காகவும் கண்ணீர் சிந்தி , பின் என்னை நானே மீளத் தேற்றிக் கொள்ளுகிறேன். மனம் துயருறும் பொருட்டான காரணங்கள் ஏதுமில்லாததே பெரும் அழுத்தமும் அச்சமுமாய்க் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர்.

குளிர் தனிமையென்றால் கோடை பிரிவல்லவா ? பின்பு, மழையே கூடல்...! காலமும் வார்த்தைகளும் பெரும் பாலைவனத்தின் மணல் புயல் பார்ட்னர். சுட்டுப் பொசுக்கும் புதைமணலிலிருந்து மீட்டெடுத்துக் கைதூக்க தோதாய் ஒரு கவிதையோ, பாடலோ, இசைத் துணுக்கோ எக்கனமும்  தோன்றிவிடக்கூடும். நெடிந்து நீள்கிற சிறகுகளையும் பிழைத்தலின் பொருட்டு முடக்கி கூடடைக்க வேண்டியிருக்கின்றது. வானக் கூரை இடிந்து விழுந்தாலென்ன பார்ட்னர். நான் பறக்கா வானமும், நான் ஓட்டா சாலைகளும் யார் பொருட்டு இருக்கின்றன பார்ட்னர்

இதுவரையான என் வாழ்வின் எல்லா முடிவுகளும் எல்லா தெரிவுகளும் கேள்விகளுக்கு உட்படுகின்றன. நானே கேட்டுக் களைக்கிறேன். எது சரி எது தவறென திண்ணமாய் முடிவுசெய்யமுடியாத வெளியொன்றின் ஒற்றைப் பேரரசனாய் முடிசூட்டிக்கொள்ளுகின்றேன். நான் தவறவிட்ட மனங்களுக்காயும் என்னைத் தவறவிட்ட மனங்களுக்காயும் அன்றாடம் சில நொடிகள் மெளனமாய் இரங்கல் தெரிவிக்க வேண்டியதாயிருக்கின்றது. உலகம் முழுக்கவே கூட்டத்தில் தனித்துவிடப்பட்டு, துயருறும் மனங்களுக்கான பொதுப்படை பண்புநலன்களையும், ஆற்றுப்படுத்தும் வழிகளையும் யாரேனும் ஆராய்ந்து சொல்வார்களாயின் நான் அவர்தம் நம்பிக்கையாளனாவேன் பார்ட்னர்.

மகிழ்ச்சிக்கும்மகிழ்ச்சி என நான் நம்புவதற்கும் இடையே ஆயிரம் மைல்கள் இருக்கின்றனஇந்த நகரத்தில் என்னைப் போல் எங்குமிருக்க முடியாமல்அலைந்துழல்பவர்களில் நான் எத்தனையாவது ஆள்?-மனுஷ்ய புத்திரன்
அல்லால், தனிமையின்பாற்பட்ட எவனொருவனும் எவளொருத்தியும் மற்றேனைய மனங்களோடு தங்களைப் பொருத்திக் கொள்வார்களாயின்; இந்த உயிர்க்கூட்டங்களில் கலந்துவிட முயல்வார்களாயின்; இப்படி ஊசலாடி அலைக்கழிய வேண்டுமென்பதே உலக முறைமையோ ?அல்லது தம்மை எங்கே பொருத்திக் கொள்ளவேண்டுமென யோசித்து யோசித்தே சோர்ந்தயர்வதால் ஏற்படும் அடையாளச் சிக்கலோ ? Existential Crisis என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா பார்ட்னர் ? இருத்தலியலின் நெருக்கடி...! இங்கே பிழைத்துக் கிடத்தலும் அடையாளங்களைத் தேடிக் கண்டடைதலுமே போராட்டம் பார்ட்னர். எல்லாவற்றையும் தாண்டியும் தானே இங்கு எல்லாமுமே ? சில்வியா ப்ளாத் சொன்னதைப் போல ,' I am a victim of introspection'. தொடர்கேள்விகள் ஒரு சுழலும் முடிவிலி பார்ட்னர். அத்தனை எளிதாய் ஒருவனால் விடை தேடி விட முடியுமா என்ன ?

மனித மனங்களை நிரந்தரமாய் நம்பப்போவதில்லையென தீர்மானித்தேனாயின் இன்னமும் பிழைத்துக்கிடக்க வாய்ப்பு உண்டு. நட்புக்கும், அன்புக்கும், காதலுக்கும், குடும்பத்துக்கும், உறவுக்கும், பிரிவுக்கும், எதற்குமே தனித்தனியே இடமொதுக்காதிருந்து, மொத்தமாய் சாலையைக் கடக்கிற மந்தையாடுகளெனக் கொண்டால், நான் மேய்ப்பனாய் இருப்பதைக் காட்டிலும் சாலையாய் இருப்பதையே அதிகம் விரும்புகிறேன் பார்ட்னர். பொறுப்புத் துறப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் வேலையில்லை. உடைந்த எதையும் ஒட்டவைக்க பெரிதாய் முயற்சி செய்வதில்லை; யாருடைய நேரத்தையும் கோருவதில்லை; எழுதுவதை வாசிக்கச் சொல்லி கேட்டேனில்லை; ஆனாலும் எழுதுவதையும், படிப்பதையும், கேட்பவர்களுக்காகவும் பிடித்தவர்களுக்காகவும் பாடுவதையும்,  நிறுத்தவில்லை. பாதை நீள நீள, என் பயணம் தொடர்கின்றது பார்ட்னர்.

இதோ இந்தக் கடிதத்தின் கடைசிப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கையில் இத்தனை நாட்களாய்க் காத்திருந்த மழை, தயங்கித் தயங்கி பெய்யத் தொடங்கின்றது. எல்லா துவக்கங்களையும் ஒரு பெருமழை உன்னதமாக்கி விடுகிறது இல்லையா ? எல்லா உயிர்களின் தனிமையையும் வெறுமையையும் மொத்தமாய் இட்டு நிரப்பிவிட முடிந்தவளல்லவா மழை..!!


இப்படிக்கு,
மழைதரும் நம்பிக்கையோடும்,
விடையில்லாக் கேள்விகளோடும்,
நான்..!