ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை, முறைசாரா தொழிலாளர்கள், Skilled labourers


 

சென்ற ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை செய்பவர்கள் தொடங்கி, எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், நெசவாளர்கள் என பல துறைகளிலும் இந்த வகை திறன் தொழிலாளர்கள் உண்டு. புதிய கல்விக் கொள்கை -2020 வழிகாட்டலின் படி ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வியை அறிமுகம் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் நாட்டில் இந்த திறன் தொழிலாளர்களுக்கான தேவையை இட்டு நிரப்பிட முடியும் என்பது ஒரு தரப்பினரின் வாதம். இது நியாயமான தீர்வாக இருக்க முடியுமா ?

இப்படியான திறன் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் , இவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றை நெறிப்படுத்தவும் மத்திய அரசோ மாநில அரசோ எந்த , வரைமுறைகளையும் இதுவரை செயல்படுத்தவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் unorganized sector எனப்படும் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதும் ஒரு காரணம். (mostly level 1 and 2)

முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008 (The Unorganized Workers' Social Security Act (2008)) -ன் படி, மத்திய மாநில அரசுகள் சில பல காப்பீட்டுத் திட்டங்களையும் , இழப்பீடுகளையும் பரிந்துரைக்கிறதே அன்றி கட்டாயமாக்கவில்லை. மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் தெளிவான விளக்கங்கள் இல்லை. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வாரியங்களை அமைத்திருக்க வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்கள் உட்பட வெறும் பதினோரு மாநிலங்கள் மட்டுமே இதைச் செயல்படுத்தின.

2010-11 ஆண்டுகளில் அப்போதைய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக (National Social Security Fund - NSSF) , 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.  அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பும், பாதித் தொகையோ அல்லது மூன்றில் ஒரு பங்கோ மட்டும் வழங்கப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை குழு (Comptroller and Auditor General - CAG) தாக்கல் செய்த அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டு  பின் பயன்படுத்தப்படாமல் தேங்கிய தொகை மொத்தம் ரூ.1927 கோடிகள். இந்தத் தொகை மீண்டும் மத்திய தொகுப்பு நிதியிலேயே (Consolidated Funds of India) சேர்க்கப்பட்டது.

அப்படியே இந்த தொகை முறையாகவும் முழுமையாகவும் வழங்கப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆணையங்களும் அமைக்கப் பட்டிருந்தாலும், போதுமானதாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே ? ஏன் ?

CBAG (Centre for Budget and Governance Accountability) என்கிற அமைப்பு தாக்கல் செய்த ஆய்வறிக்கையின் படி , உன்மையில் முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருக்கவேண்டிய தொகை ரூ.22,841 கோடிகள் (நாட்டின் மொத்த GDPல் 0.39 சதவிகிதம்) இந்த பரிந்துரைக்கப்பட்ட தொகைக்கும் அரசு ஒதுக்கிய தொகைக்குமான வேறுபாட்டிலேயே உண்மை நிலையை விளங்கிக் கொள்ளலாம்

2019ஆம் ஆண்டின் இறுதியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட Code on Social Security 2019 சமூகப் பாதுகாப்பு மசோதா , பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிட்டத்தட்ட தொழிலாளர் நலம் தொடர்பான பத்து சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கூறுகளைக் கொண்டிருந்த இந்த மசோதாவில் தான் முறைசாரா தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் gig workers, platform workers (ஸ்விக்கி, ஊபர், மாதிரியான தளங்களின்  ஒருங்கிணைப்பில் பணிபுரிகின்றவர்கள்), தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், கட்டிடத் தொழிலாளர்கள், வேற்று மாநிலத் தொழிலாளர்கள்  (Inter state migratory workers) உள்ளிட்டவர்களையும் அரசு வகைமைப்படுதியிருக்கின்றது. இவர்களின் நலனுக்கான வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவக் காப்பீடு, ஜன் தான் திட்டம் உள்ளிட்டவற்றையும் பரிந்துரைத்திருக்கின்றது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு , செயல்படுத்தப்பட்டால் தான் இவற்றில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். 

இப்போது புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிற சில பரிந்துரைகளோடு பார்க்கலாம். 

1.மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத் தேர்வுகள்

2. ஆறாம் வகுப்பிலிருந்தே மாணாக்கர்களுக்கு தொழிற்கல்வியை (உள்ளூர் திறன்தொழிலாளர்களோடு இணைந்து) அறிமுகப்படுத்தல்

3. இளங்கலை/அறிவியல்/பட்டயப் படிப்புகளுக்கு - மூன்றாண்டுகள் கட்டாயம் , இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு - நான்கு ஆண்டுகள் கட்டாயம் - இந்த முறையை மாற்றி முதல் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய கல்வியை இடைநிறுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ற சான்றிதழ் வழங்கப்படும் என மாற்றம்

4. மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், என அத்தனைக்கும் இளங்கலை/முதுகலைக்கென தனித்தனி நுழைவுத் தேர்வுகள், தேசிய திறனறி தேர்வுகள், தகுதித் தேர்வுகள், தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள்

5. கட்டாய மும்மொழிக் கொள்கை - கட்டாய தாய்மொழிக் கல்வி 

6. கல்வியில் மாநிலங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு மாற்றல் 

தொழிலாளர் நலம் சார்ந்த சட்டங்கள், சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மேற்சொன்ன அத்தனையையும் மனதில் நிறுத்தி, அவற்றை புதிய கல்விக்கொள்கை முன்வைக்கிற திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 

பலதரப்பட்ட சமுகப் பொருளாதரப் பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதே ஓர் அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, தரத்தின் பெயரால் கல்வியைப் பெற இத்தனை முட்டுக்கட்டைகளைப் போட்டு அவர்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் மறைமுகமாகத் தடுத்து நிறுத்துவதாக இருக்கக் கூடாதல்லவா ?

Skilled labour கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சுற்றிவளைத்து புலம்புவதெல்லாம் cheap labour கிடைக்கவில்லை என்பதாவே புரிந்து கொள்கிறேன்.

குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பையும் நிலையான ஊதியத்தையும் வழங்குகிற சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் நுழைய உதவும் தற்போதைய கல்விமுறையை மாற்றி, பணிப்பாதுகாப்போ, சட்டப்பாதுகாப்போ, நிலையான ஊதியமோ இல்லாது முறைசாரா தொழில்களுக்குள், திறன் தொழிலாளர்கள் என்ற பெயரில் நம் குழந்தைகளைத் தள்ளுவதா அறம் ?

இது அமைப்புசார் அடக்குமுறை (systematic oppression) அல்லவா ? 

***Spoilers ahead***

Snowpiercer என்ற  ஒரு கொரியத் திரைப்படம் உண்டு. உலகம் மொத்தமும் பணி சூழ்ந்து வாழத் தகுதியற்றதாக மாறிய பின் உலகின் கடைசி மக்கள் கூட்டம், நில்லாமல் ஓடும் ஒரு ரயிலில் பயணிக்கும். அங்கேயும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு.ரயிலில் செல்வச் சீமான்கள் சொகுசான முன் பகுதிப் பெட்டிகளிலும் அந்த ரயிலைத் தொடர்ச்சியாக ஓடவைக்கிற உழைக்கும் ஏழைத் தொழிலாளர்கள் ரயிலின் பின் பகுதிப் பெட்டிகளிலும் வாழ்ந்து வருவார்கள்.  

ஏழைகளின் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உயரமும் எடையும் கொண்டிருக்கிற குழந்தைகள் வருடந்தவறாமல் தொடர்ச்சியாகக் காணாமல் போவார்கள். இதனைத் தடுத்து அந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆனது என கண்டறியும் பொருட்டே தொழிலாளர்களிடையே கிளர்ச்சி எழும். ஆயுதம் ஏந்தி ஒரு தலைவன் பின்னால் அணிவகுத்து போராடுவார்கள். பெரும் உயிர்ச்சேதமும் போராட்டமும் நிகழ்ந்தபின் அந்தத் தலைவன் ரயிலை இயக்குகிற இஞ்சின் பெட்டியை அடைவான். குழந்தை எங்கு தேடியும் கிடைக்காம இறுதியில்  இஞ்சின் கதவைத் திறக்கும்போது அவன் காணும் காட்சி நம் இதயத்தை உறையவைக்கும். 

காணாமல் போகும் அந்தக் குழந்தை, பழுதாகிப் போன ஒரு இஞ்சின் பாகத்துக்குப் பதிலாக கையால் அந்த வேலையை செய்ய உட்காரவைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட வயது, உயரம், எடையில் அதுவரை காணாமல் போன அத்தனைக் குழந்தைகளும் அதற்காகத்தான் பயன்படுத்தப் பட்டிருப்பார்கள் என்ற உண்மை புலப்படும். 

***Spoiler ends***

இதற்குமேல் நேரடியாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. 

நம்மாலானதெல்லாம் குறைந்த பட்சம் நம்முடைய வட்டத்தில் இருப்பவர்களுக்காவது இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. அதையாவது முழுமையாகச் செய்வோம். 

உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பேசுவோம்

***********************************************************

References:

https://thewire.in/labour/national-social-security-fund-unorganised-workers

https://cag.gov.in/sites/default/files/audit_report_files/Report_No.44_of_2017_-_Financial_Audit_on_Accounts_of_the_Union_Government.pdf

https://www.inventiva.co.in/stories/riyarana/india-lockdown-most-affected-is-unorganized-sector-it-is-93-of-the-total-workforce-41-crore-people-lack-economic-security/

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://economictimes.indiatimes.com/news/economy/indicators/national-database-of-workers-in-informal-sector-in-the-works/articleshow/73394732.cms?from=mdr

https://www.prsindia.org/billtrack/code-social-security-2019#:~:text=The%20Code%20on%20Social%20Security%2C%202019%20was%20introduced%20in%20Lok,for%20Labour%20and%20Employment%2C%20Mr.&text=It%20replaces%20nine%20laws%20related,'%20Social%20Security%20Act%2C%202008.

https://www.financialexpress.com/opinion/skill-india-why-there-is-a-gap-between-current-status-and-goals-explained/1520633/#:~:text=The%20proportion%20of%20formally%20skilled,and%2096%25%20in%20South%20Korea.

https://www.rediff.com/business/column/does-india-have-enough-skilled-labour/20190930.htm