புதன், 5 மே, 2021

அரசியல் - சமூக அறிவியல் - புரிதல் ?

இதுவரைக்கும் இல்லாத வகைல இந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தான் என் வட்டத்தில் உள்ள பலரிடமும் நேரடியாக அதிகளவில் அரசியல் பேசியிருக்கிறேன்.. கேள்விகள் கேட்டிருக்கிறேன்... விவாதித்திருக்கிறேன்.. சண்டையிட்டு முரண்பட்டிருக்கிறேன். இந்த வட்டம் என்பதில் சொந்த ஊர் பள்ளி/கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் , பணியிட/வாழிட நண்பர்கள் ஆகியோர் அடக்கம்...(முழுக்க முழுக்க என்னுடைய உரையாடல்/ புரிதல் அடிப்படையிலான அனுமானம் தான்...தரவுகளின் அடிப்படையிலான சர்வே அல்ல) 

இதுல தெள்ளத்தெளிவா புரிஞ்ச விஷயம் வயது, பாலினம், கல்வி, சமுகப் பொருளாதரப் பின்னணி... எந்த வேறுபாடுமில்லாம பலருக்கும் அரசியல் பற்றிய புரிதலும் தெளிவும் ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு...சட்டமன்றம்னா என்ன? ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய வேலை என்ன ? உள்ளாட்சித் தேர்தல்னா என்ன ? அதுக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன தொடர்பு ? எத்தனை சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ? பாரளுமன்ற உறுப்பினருடைய பணி என்ன ? மக்களவைக்கும் மாநிலங்களவைக்குமான வேறுபாடு என்ன ? ஒரு சட்டத்திருத்தம் எப்படி நிறைவேற்றப் படுது ? மசோதான்னா என்ன ? சட்டமன்ற ஓட்டெடுப்பு எப்படி நடக்கும் ? ஆட்சி அதிகாரம் எப்படி பகிர்ந்தளிக்கப்படுது ? அமைச்சர்கள் துறை சார்ந்து எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுது ? மாநில பட்ஜெட்..மத்திய பட்ஜெட்... தொகுப்பு நிதி.. இட ஒதுக்கீடு மாதிரி சமூக நீதி சார்ந்த விஷய்ங்கள்... இன்னும் சுத்தம்....! இந்த மாதிரி பல விஷயங்கள் அரசியல் பேசுகிறவர்கள், சமூக வலைத்தள பரிச்சயம் உள்ளவர்கள், TNPSC மாதிரியான அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் தவிர்த்து பொது நீரோட்டத்தில் உள்ளவர்களுக்கு பெரிய பரிச்சயம் இல்ல.

 இன்னொரு வியப்பூட்டும் விஷயம் இதுல பெரும்பாலானவர்கள் இருபதுகளின்/முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறவர்கள் என்பது தான். வயதில் பெரியவர்கள் (40+ ) தோராயமாகவாவது புரிந்து வைத்திருக்கிறார்கள் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிக்கிற பெரிய கூட்டம் ஒன்னு இருக்கு ...!! )

 இதெல்லாம் தெரிஞ்சுக்கிறது அத்தியாவசியமா.. ஓட்டு மட்டும் போட்டா பத்தாதான்னு கேட்டீங்கன்னா நிச்சயமா பத்தாது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க தானே. எனக்கு தனிப்பட்ட முறைல பள்ளி பாடப்புத்தகங்கள் தாண்டி அறிவியலின் மீது ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்படக்காரணம் த.நா.அ.இ தான். தமிழ் வழிப்பள்ளிகளுக்காக துளி விநாடி வினா, ஆங்கில வழி பள்ளிகளுக்காக ஜந்தர் மந்தர் விநாடி வினா என தமிழகத்தோட சந்து பொந்துல இருக்கிற பள்ளி மாணவர்களிடமும் அடிப்படை அறிவியலை கொண்டு சேர்த்த பெருமை இந்த இயக்கத்துக்கு உண்டு . 

நான் பல வருஷம் பல போட்டிகள்ல கலந்துட்டு இருக்கேன். இது போக இளம் அறிவியலாளர் மாநாடு மாதிரியான (National Children Science Congress/ Young Scientist ) மாதிரி பல செயல்பாடுகளை பல வருடங்களா தொடர்ந்து நடத்திட்டு வர்ராங்க. மாணவர்கள் கிட்ட அரசியலைக் கொண்டு போன அதே அளவுக்கு (SFI/DYFI) அறிவியலையும் கொண்டு சேர்த்ததுல இடதுசாரி இயக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு,

இளைஞர்களுள், அரசியல்வயப்படாதவர்களை / அரசியல்படுத்தப்படாதவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள் என குறை மட்டும் சொல்லி ஒரு பயனும் இல்லை. தேர்தல் அரசியலுக்கு முன்பே சமூக அறிவியலை, பாடப்புத்தகம் தாண்டி எளிமையாக ஆழமாக கொண்டு சேர்க்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாதிரியான ஒரு இயக்கம் கட்டாயம் வேண்டும் என்பது என் எண்ணம். இதனை கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.... ஓரளவு தெளிவான கொள்கைப்பிடிப்புள்ள சமூக இயக்கம் (எ.கா: திராவிட இயக்கத் தமிழர் பேரவை) இதனை முன்னின்று நடத்தினால் கட்சிகளின் network/infrastructure/financial support இதனை மாநிலம் முழுவதும் பரவலாக கொண்டு செல்ல பெரிதும் உதவும். 

 உங்க கருத்து என்ன ? உங்களுடைய வட்டத்துல ஒரு கட்சி சார்ந்து அல்லது ஒரு கட்சியை எதிர்த்து பேசிய அனுபவம் எப்படி இருந்தது ? இந்த Social science awareness பற்றிய உங்கள் கருத்து என்ன ? சொல்லுங்க பேசுவோம்...!