செவ்வாய், 15 ஜூன், 2021

The Mitchells vs The Machines. - அனிமேஷன் திரைப்படம்

வழக்கமான ‘post-apocalyptic world taken over by bla bla bla’ வகை அனிமேஷன் படம் தான். ஆனாலும், படம் பாக்கும்போது இந்த அனிமேஷன் கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சுது. கிட்டத்தட்ட Spiderman:Into the spiderverse மாதிரி ஒரு ஒரு காட்சி அனுபவத்தை தந்துச்சு. 

இதப் பத்தி தேடிப்பாத்தப்போ படக்குழுவினர் விரிவா பேசுன சில articles and youtube videos கிடைச்சுது. வாட்டர் கலர் ஓவியங்கள் மாதிரியான texture கொண்டு வர்ரதுக்காக 2d அனிமேஷன 3d யோட சேர்த்து புதுசா ஒரு முறைல ரெண்டர் பண்ணியிருக்காங்க போல. 

அதுமட்டுமில்ல இதுக்குன்னே தனியே ஒரு toolம் உருவாக்கியிருக்காங்க . ஸ்பைடர்மேன் தொடருக்காவது காமிக்ஸ் ரெஃபரன்ஸ் இருந்துச்சு; இந்தப் படத்துக்கு அப்படி எதுவும் இல்லாம தங்களுக்கு வேண்டியபடி புதுசா எல்லாத்தையும் உருவாக்கிகுறதுக்கான creative spaceம் இருந்திருக்கு. 

படத்துல வர்ர மிட்சல் குடும்பத்தினர், ஒரு dysfunctional family. அவங்களுக்குள்ள இருக்கிற சின்னச் சின்னக் குறைபாடுகள், imperfections and flaws எல்லாத்தையும் அனிமேஷன்லயும் வெளிப்படுத்துற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. 

படத்தோட முக்கியப் பாத்திரங்கள்ல ஒருத்தரான Katie, அதீதமான கற்பனைத்திறம் வாய்ந்த ஒரு பொண்ணு. திரைப்படங்கள உருவாக்கனும்னு ஆசப்பட்ற, எல்லாத்தையும் காட்சிமொழில வெளிப்படுத்துற GenZ பொண்ணுங்குறதனால அவங்களோட தலைமுறைக்கான , மீம்ஸ் மாதிரியான expressionsம் நிறைய வருது.

 தொழில்நுட்ப விஷங்களைத்தாண்டி, அப்பா-மகளுக்கு இடையேயான அன்பு, குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையேயான மென் உணர்வுகள், உரையாடல்கள் என் அத்தனையுமே அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன. 

இதையெல்லாம் ரொம்ப நுணுக்கமா பாத்துப் பாத்துப் பண்ணதுல படத்தோட character designer ‘Lindsay Olivares’ங்குற பெண்ணுக்கு பெரும்பங்கு இருக்கு.
படத்துல ரோபாட்டுகளுக்கான கேமிரா கோணங்களுக்கும், மிட்சல் குடும்பத்தினருக்கான கேமரா கோணங்களுக்கு இருக்கிற வேறுபாடுகள் (symmetrical vs handheld) பத்தியும் படக்குழுவினர் ரொம்ப விரிவா பேசியிருக்காங்க. 

இது எல்லாமே ஒன்னா சேர்ந்து தான் இந்த கதையை படமா பாக்குற நம்முடைய அனுபவத்தை ஒரு படி அதிகமாக்கி, படத்தை நம்ம மனசுல நிக்க வைக்குதுன்னு நினைக்கிறேன். இந்தப் படம் பத்தி நான் படிச்ச பாத்த எல்லாத்துக்கும் கீழ லின்க் குடுத்துருக்கேன். தவறாம பாத்துடுங்க.

'The Mitchells vs. the Machines' is streaming on Netflix now.

References:

https://www.youtube.com/watch?v=7mU0BwqRYdk/

https://www.youtube.com/watch?v=YJ42ruf2WQE

https://collider.com/tag/the-mitchells-vs-the-machines/

https://www.firstpost.com/entertainment/the-mitchells-vs-the-machines-is-as-genre-bending-as-its-makers-predecessor-spider-man-into-the-spider-verse-9593451.html


ஞாயிறு, 13 ஜூன், 2021

நெருங்கி வந்த ’நட்சத்திரவாசிகள்’


 நெருங்கி வந்த 'நட்சத்திரவாசிகள்’...!
*****************************************

‘நட்சத்திரவாசிகள்’ படித்து முடித்து விட்டேன்.  எனக்கு நன்கு பரிச்சயமான, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நான் வாழ்ந்துலவுகிற உலகின் மற்றொரு பிரதியை வேறொருவரின் பார்வையில் படிக்க அத்தனை உவப்பாயிருந்தது.

முதன் முதலில் இந்த துறைக்குள் பெருங்கனவுகளோடு அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளில் தான், தகவல் தொழிநுட்ப  நிறுவனத்தை கதையின் பின்னணியாகக் கொண்ட ஒரு தமிழ் நாவலை மிகுந்த ஆர்வத்துடன் படிக்கத் துவங்கி, பெரும் ஏமாற்றத்துடன் முடித்தேன். என்னடா இது, நாம் பார்க்கிற மனிதர்கள் இவர்களில்லையே... இது நம்மோடு இருக்கிறவர்களின் கதை இல்லையே என குழம்பிப்போனேன். இந்த துறை குறித்து அப்போது பொது மக்கள் கொண்டிருந்த எல்லா அனுமானங்களுக்கும் உருவேற்றினாற் போல இருந்தது.  என்னைப் போலவே சக நண்பர்களும் ஏமாந்திருந்தது மட்டுமே அப்போதைய ஆறுதல்.

 அதன்பின் ”ஐடி பேக்ரவுண்ட்ல ஒரு கதை/புத்தகம்” என்று யாரேனும் சொன்னால், நமக்குத் தெரியாத நாம் பார்க்காத ஒன்றையா இவர்கள் எழுதியிருக்கப் போகிறார்கள் என தவிர்த்துக் (உண்மையில் பயந்து) கொண்டிருந்தேன். ஆனால் நெருங்கிய நண்பர்களின் பரிந்துரைகளும் கருத்துகளுமே ‘நட்சத்திரவாசிகள்’ நாவலை படிக்க உந்திய முக்கிய காரணிகள்.

  உண்மையில் எல்லா துறைசார் நிறுவனங்களையும் போல ஐடி என்றழைக்கப்படுகிற தகவல் தொழில்நுட்பம் / மென்பொருள் துறையிலுமே பல படிநிலைகளில் பல வித மனிதர்களின் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. எழுத வேண்டுமென முடிவு செய்தால் என்னென்னவோ எழுதலாம். இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் ஐந்து வெவ்வேறு நிறுவங்களில் பணியாற்றியிருக்கின்றேன். எத்தனையெத்தனையோ பேருடன் உரையாடியிருக்கிறேன். அந்த வகையில் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலில் கார்த்திக் உருவாக்கியிருக்கிற ஒவ்வொரு பாத்திரத்திலும் நான் கடந்து வந்தவர்களுள் யாரோ ஒருவர் அல்லது சிலர், மிகச்சரியாகப் பொருந்திப் போனார்கள்; என்னால் பொருத்திக் கொள்ள முடிந்தது. வெவ்வேறு மனிதர்களாய் இருந்தாலும் அவர்களுடைய கதைகளும் போராட்டங்களும் ஒரே மாதிரியானவை தான். கார்த்திக் அந்த இழையை மிகச்சரியாகத் தொட்டிருக்கின்றார்.

”உக்காந்த எடத்துல வேலை, ஃபுல்லா ஏசி தான், அப்டியென்ன உழைச்சு கொட்றீங்க”, மாதிரியான முன்முடிவுடனான கேள்விகளுக்கெல்லாம் பெரிதாய் விளக்கமோ பதிலோ சொல்லிவிட முடியாது. அவரவர்களின் கடமையுணர்வு, பொறுப்புணர்வு, பணிச்சுமை, பதவிக்கான அழுத்தம்,  இவற்றைப் பொறுத்தே வேலை உங்களை எப்படி நடத்துகிறதென்பதெல்லாம். ஆகையால் இந்த கேள்விகளுக்கான பதில்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

 நித்திலனைப் போல முதல் தலைமுறை பட்டதாரிகளாக நுழைந்து எப்படியாவது எதையாவது கற்று மேலேறிவிடத் துடிக்கிறவர்கள், விவேக் போல ”விசா கெடச்சு ஒரு வாட்டி லாங் டெர்ம் பொய்ட்டு வந்தா இங்க லோன் முடிச்சு செட்டில் ஆயிடலாம்” என ஆசைப்பட்டு வேரையும் விட முடியாமல் புதிய நாட்டிலும் காலூன்ற மனமின்றி அலைகழிகிறவர்கள், மன முறிவோ அல்லது மண முறிவோ ஏதோ ஒன்றின் காரணமாக தனிப் பெற்றோராய் தங்கள் குழந்தைகளையும் வளர்த்தபடி பணிச்சுமையையும் வலிந்து ஏற்கிற அர்ச்சனாவைப் போன்ற பெண்கள், ’லட்சம் பேர் வேலை பார்த்தாலும் நாமெல்லாம் தனித்தனியான உதிரிகள்’ தான் என உணர்கிற, உணர்த்துகிற சஜூ மாதிரியானவர்கள், அதிகாரத்தின் தூதுவர்களாக தனக்குக் கீழ் பண்புரிகிறவர்களை வெறுமனே பகடைக்காய்களாக/சிப்பாய்களாக மட்டுமே பார்க்கிற சத்யமூர்த்தி, வேணு மாதிரியானவர்கள். என எத்தனை மனிதர்கள்...எத்தனைக் கதைகள்...!

 நிறுவனத்தின்  உள்ளே இருக்கிற பாத்திரங்கள் மட்டுமின்றி வெளியே இருக்கிற அடுத்தடுத்த படிநிலைகளில் உள்ள காவலாளி ராமசுப்பு, வாகன ஓட்டுநர், தூய்மைப் பணியாளர் என அத்தனை பேரின் கதைகளையும் அழகாகக் கோர்த்தளித்திருக்கிறார். நாவலின் தொடக்கத்தில் வந்த பாத்திரங்களையும் காட்சிகளையும் திரைக்காட்சி போல இறுதி அத்தியாயத்தில் முடிச்சுப் போட்ட விதமும் அருமையாக இருந்தது.

பெரும் அரசியல் வரலாற்றுப் புதினங்களை எல்லாம் மிஞ்சிவிடக்கூடிய அளவுக்கு அதிகாரப் போட்டிகளும், வஞ்சமும், உள்ளரசியலும் நிறைந்தவை மென்பொருள் நிறுவனங்கள். (எங்குதான் அரசியல் இல்லை :) ) ஒரு சிலருக்கு அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதை விட குறைவாக உழைத்தாலே, அவர்களுக்கான வளர்ச்சியும் அங்கீகாரமும் கேட்காமல் தேடி வரும். இன்னும் சிலருக்கு எதிர்ப்பார்ப்பைத் தாண்டி மூன்று மடங்கு உழைத்து, தன்னையே உருக்கிக் கொண்டாலும், அதிகாரத்தின் கடைக்கண் பார்வை கூட அவர்களின் மீது விழாது. இதற்கெல்லாம் காரணம் தேடிக் கண்டுபிடிக்க முயன்றால் காலமெனும் கடலலைகள் தன் போக்கில் உங்களை அடித்துக் கொண்டு போய் அலைக்கழித்து எங்காவது ஓரிடத்தில் நிறுத்தியிருக்கும், நீங்கள் சற்று சுதாரித்து எழுவதற்கு முன்பு மற்றுமோர் பேரலையில் சிக்கிக் கொள்ளக் கூடும்,. கலங்கரை விலக்கங்களும், படகுகளும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

மொத்தத்தில், மென்பொருள் துறையைச் சுற்றி பொதுப்புத்தியில் கட்டப்பட்டிருக்கிற மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை உடைத்து, ஜிகினாத்தாள் அலங்காரங்களை தூக்கியெறிந்து விட்டு உங்களைப் போலவே எங்களுக்கும் ஆயிரம் சிக்கல்களும் போராட்டங்களும் உண்டென சாமானியர்களின் கதைகளின் வழியாக வலுவாக நிறுவியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாவலுக்கு மிகப் பொருத்தமான ‘நட்சத்திரவாசிகள்’  (நன்றி: பிரமிள்) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்ததற்கும் சேர்த்து, வாழ்த்துகள் கார்த்திக்...! 

நட்சத்திரவாசிகள்

கார்த்திக் பாலசுப்ரமணியன்

காலச்சுவடு பதிப்பகம்