ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஆஸ்கர் 2021 - ஒரு பார்வை

 வாசகசாலையின் ’புரவி’ அச்சு இதழுக்காக சில மாதங்கள் முன்பு எழுதிய கட்டுரை...!!


 ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து  வெளியாகும் படைப்புகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்து விளங்கும்  திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும்  அடையாளப்படுத்தி ,பரிசளித்து, புகழாரம் சூட்டும் விழாக்களில் முக்கியமானதுஆஸ்கர்என்று அனைவராலும் அறியப்பட்ட அகாதமி விருதுகள் (Academy awards) விழா

 அமெரிக்காவில் ஆண்டுதோரும் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு, ஒரு சிறு தாமதத்திற்குப் பின் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. 

சர்ச்சைகளும் சலசலப்புகளும்:


எல்லா விருது நிகழ்ச்சிகளையும் போல ஆஸ்கர் விருதுகள் விழாவும் ஊடககங்களாலும் சமூகத்தாலும் பலவிதமான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறையைச் சேர்ந்த ஏப்ரல் ரெய்ன் (April Reign) என்ற ஆஃப்ரிக்க அமெரிக்க பெண் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடங்கிவைத்த #OscarSoWhite என்ற ஹாஷ்டேகும் அதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களும். 

விருதுக்கு தேர்வாகும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கறுப்பின நடிகர்களும், படைப்பாளிகளும் புறக்கணிக்கப்பட்டு வெள்ளையினத்தவரே முன்னிலை படுத்தப் படுவதாக எழுந்த இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பல ஆஃப்ரிக்க அமெரிக்க கலைஞர்களும் ஆஸ்கர் விழாவினைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இது மட்டுமின்றி கடந்த சில, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளிலும் கூட முழுக்க முழுக்க ஆண் இயக்குநர்களே நிறைந்திருப்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த ஆண்டு மேற்சொன்ன அனைத்துக்கும் தீர்வுகாணும் விதமாக இதுவரையில் முதன்மை படுத்தப்படாத ஆஃப்ரிக்க அமெரிக்க கறுப்பின கலைஞர்களும், பெண் இயக்குநர்களும், ஆசியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவின் பிற சிறுபான்மையினருக்கும் சம அளவில்  கவனம் பெற்றிருக்கின்றார்கள்

சிறந்த திரைப்படம்/இயக்குநர்/நடிகை - நோமேட்லேண்ட் (Nomadland )

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ஒரு ஜிப்சம் தொழிற்சாலை மூடப்பட்டுவிட, அதைச் சுற்றி அந்த ஊரில் வாழ்ந்த அனைவரும் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிடுகிறார்கள். அவர்களில் Fernம் ஒருவர். ஏற்கனவே கணவனும் இறந்துவிட்டபடியால் தனக்குச் சொந்தமான அத்தனையையும் விற்று விட்டு ஒரு வேனையே (Van) தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழத் தொடங்குகிறார் ஃபெர்ன்.

ஃபெர்ன் சந்திக்கிற மனிதர்கள், பழகும் நண்பர்கள், பார்க்கும் இடங்கள் என, கிட்டத்தட்ட ஒரு  ஆவணப்படத்திற்கான தன்மையுட தான் செல்கிறது திரைப்படம். ஒட்டுமொத்தமாக இந்தத் திரைப்படமும், காட்சிகளும், இசையும் தந்த உணர்வுகளை நிச்சயமாக வார்த்தைகளில் விளக்கிச் சொல்லிவிட முடியாது. .

உண்மையில் நாடோடிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.எந்த அடையாளத்தோடும் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பாத, எதையுமே தங்களை பிடித்து வைப்பதை விரும்பாத, நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கு பயணித்து, கிடைப்பதை உண்டு ,கிடைத்த வேலையைச் செய்து.. வாழ்கிற நாடோடிகளின் (nomads) வாழ்க்கை மிக மிகக் கடுமையானது. அப்படியொரு தீவிரமான விடுதலை உணர்வையும் , பிடிப்பற்ற தன்மையையும் எதிர்கொள்ள நம்மால் முடியாது.நாம் இருக்கிற, வாழ்கிற, கொஞ்சங்கூட விட்டு விலகிவிட முடியாத பாதுகாப்பான சொகுசான வட்டம் என்னவென்று உண்மையில் ஒரு நாடோடியை எதிர்கொள்ளும்போது தான் விளங்கிக் கொள்ள முடியும் . இதனை மிகச்சிறப்பாக ஃபெர்ன் பாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஃப்ரான்சின் மெக்டார்மண்ட்.

 சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான, நோமேட்லேண்ட் திரைப்படத்தின் இயக்குநர்  க்ளோ ஸாவ் (Chloe Zhao) தனது முந்தைய திரைப்படங்களில் பல பரிசோதனைகளை முயன்றிருக்கிறார். இந்தப் படத்தில் ஃபெர்னாக நடித்திருக்கும் ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் தவிர்த்து க்ளோவின் முந்தைய இரு படங்களிலும் முதன்மைப் பாத்திரங்களாக நடித்தவர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்லர். தத்தமது  சொந்த வாழ்வனுபவத்தையே திரைப்பாத்திரமாக ஏற்று நடிக்க முன்வந்த சாதாரணர்கள் அவர்கள்.

  அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குப்பின்பு தங்கள் உடைமைகளை விற்றுவிட்டு நாடோடி வாழ்வைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் ஜெஸ்ஸிகா ப்ரூடர் எழுதிய ’Nomadland' புத்தகத்தை அடிப்படையாக வைத்தே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் க்ளோ. 

சிறந்த திரைப்படம்சிறந்த இயக்குநர் - க்ளோ ஸாவ்  , சிறந்த நடிகை -  (முதன்மைப் பாத்திரம்) - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட், என  இத்திரைப்படம் மூன்று முக்கியமான பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றிருக்கின்றது.

 சிறந்த நடிகர் - ஆந்தனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins, The Father)

 முதுமையின் காரணமாக ஏற்படும் டெமன்ஷியா (Dementia) என்ற நோயினால் பாதிக்கப்பட்ட 80 வயதான ஆந்தனியின் கதை தான் த ஃபாதர் திரைப்படம்’.நோயினால் ஏற்படும் மறதி, குழப்பமான மனநிலை, இயலாமை, தன் மீதான வெறுப்பை பிறர் மீதான கோபமாக வெளிப்படுத்துதல், தான் பெற்ற மகளாகவே இருந்தாலும் அவள் உதவியை மறுப்பது என உணர்வுகளின் குவியலாக ஒரு சவாலான பாத்திரத்தை ஏற்று மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பழம்பெரும் நடிகர் ஆந்தனி ஹாப்கின்ஸ். 28 ஆண்டுகளுக்கு முன்பு சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ்’ ( Silence of the lambs) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற அவர், மீண்டும் தன்னுடைய 83வது வயதில் இவ்விருதை  வென்றிருக்கின்றார். சென்ற ஆண்டும் டூ போப்ஸ்’ (Two popes) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான  பிரிவின் கீழ் அவர் பெயர் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் உலகம் முழுதும் பல்வேறு திரைவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கிக் குவித்ததோடு மட்டுமின்றி ,ஆந்தனி ஹாப்கின்ஸ் அவர்களுக்கும் மென்மேலும் புகழ் சேர்த்திருக்கின்றது

மறைந்த ஆஃப்ரிக்க அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மனின் பெயர், ‘மா ரெய்னிஸ் ப்ளாக் பாட்டம் என்ற திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த பாத்திரத்திற்காக இதே பிரிவின் கீழ் முன்மொழியப்பட்டிருந்தாலும் விருது அவருக்குக் கிடைக்காதால் உலகம் முழுவதிலும் உள்ள அவருடைய ரசிகர்கள்  சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

சிறந்த துணை நடிகர் - டேனியல் கலூயா ( Daniel Kaluuya, Judas And The Black Messiah)

19ஆம் நூற்றாண்டு தொடங்கிஅமெரிக்காவில் நிலவிய கடுமையான இனவெறி பற்றியும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகவும் சமூக அங்கீகாரத்திற்காகவும் போராடியவர்களான மார்ட்டின் லூத்தர் கிங், மால்கம் எக்ஸ் ஆகிய தலைவர்கள் பற்றியும் அறிந்திருப்போம். 1960களில் இனவெறியையும்கறுப்பின மக்கள் மீதான வெள்ளையின காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்த்தும் அமெரிக்க நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல அரசியல் அமைப்புகள் உருவாகின. சில அமைப்புகள் தங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை தேர்தல் அரசியலின் வாயிலாகவும், வேறு சில அமைப்புகள் வன்முறையின் வாயிலாகவும் தீர்வு காண முற்பட்டனர். அவற்றுள் முக்கியமானதொரு அமைப்பு தான் ப்ளாக் பேந்தர் பார்ட்டி (Black Panther Party).  

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ப்ளாக் பேந்தர் அமைப்பின் இல்லினாய்ஸ் பகுதியின் தலைவராக இருந்தவர் ஃப்ரெட் ஹாம்ப்டன் என்ற இளைஞர். அந்நாட்டு மத்திய புலனாய்வுத்துறையான FBIயின் உளவாளியாகச் செயல்பட்டு ப்ளாக் பேந்தர் அமைப்பில் ஊடுருவி அரசுக்கு தகவல்களைத் தந்து ஃப்ரெட் ஹாம்ப்டன் கொல்லப்பட காரணமானவர் வில்லியம் பில் ஓநீல். இந்த இருவரின் உண்மைக்கதையின் அடிப்படையில் உருவான திரைப்படம் ஜூடாஸ் அண்ட் த ப்ளாக் மெஸ்ஸியா’. ஃப்ரெட் ஹாம்ப்டன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் டேனியல் கலூயா சிறந்த துணை நடிகருக்கானஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றார். 2017ஆம் ஆண்டு வெளியானகெட் அவுட்என்ற திரைப்படத்தில் இனவெறி பிடித்த காதலியின் குடும்பத்தார் மத்தியில் சிக்கிக்கொள்ளும் கறுப்பின இளைஞரின் பாத்திரத்தில் நடித்த டேனியல், ’சிறந்த நடிகருக்கானவிருதுக்காக 2018ல் முன்மொழியப்பட்டார்

பிற பிரிவுகளும் விருதுகளும்:

நம்முடைய சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டிய விவாதிக்கப் படவேண்டிய விஷயங்களை சில சமயம் திரைப்படங்கள் வெகு எளிதாக பலரிடம் கொண்டு சேர்த்துவிடும். அதனாலேயே ஒரு திரைப்படத்தை நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கான ஒன்றாக மட்டும் நம்மால் பார்க்க முடிவதில்லை. அதற்காக கருத்தைச் சொல்கிறேன் பேர்வழி என திரைப்படத்தை பிரசாரப்படமாக எடுத்து வைத்தால் அதுவும் அந்தக் கலைக்குச் செய்கிற நியாயமாக இருக்காது

அதிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளைப் பற்றிய திரைப்படமாக இருந்தால் சொல்ல வந்த கருத்திலிருந்து பிசகாமல், இயக்குநர்/படைப்பாளியின் மனவக்கிரங்களை வெளிப்படுத்துவதாகவும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

இந்தியில் பின்க் திரைப்படம் , அதன் தமிழ் வடிவமானநேர்கொண்ட பார்வைஆகியவை இந்த வகையான திரைப்படங்களில் ஓரளவு நல்ல முயற்சிகளாகக் கொள்ளலாம். No means no என்கிற ஒரு மையப்புள்ளியை இந்தத் திரைப்படங்கள் பரவலாகப் பேசவைத்தன.

கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு தீவிரமான கதைக்களம் தான் ப்ராமிசிங் யங் வுமன்’ (Promising Young Woman) திரைப்படத்தினுடையதும். நமக்குப் பழக்கப்பட்ட பழிவாங்கும் கதையாக இருந்தாலும், நேரடியான வன்முறைக் காட்சிகளோ ரத்தமோ இல்லாமல் சொல்ல வந்ததை மனதில் ஆழமாகத் தைக்கும்படி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையும், கேரி முல்லிகனுடைய (Carey Mulligan) அசாத்தியமான நடிப்பும் ஒரு மறக்க முடியாத திரை அனுபவத்தை நமக்குத் தருகின்றன. இத்திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றது.

 அமெரிக்கர்களின் வாழ்வியலிலும் Blues இசைக்கு ஒரு மிக முக்கியமான பங்கு உண்டு.  அந்த வகையில் Mother or Blues என்று அழைக்கப்பட்ட Ma Raineyன் வாழ்வில் ஒரு நாள், அவரைச் சூழ்ந்திருக்கிற மனிதர்கள், அன்றைய நிகழ்வுகள், பின்பு இசை; இவை மட்டுமே கொண்டு படமாகியிருக்கும் திரைப்படம் மா ரெய்னிஸ் ப்ளாக் பாட்டம்’ (Ma Rainey's Black Bottom) வயோலா டேவிஸ் மாதிரியான அசுரத்தனமான நடிகை திரையில் இருக்கும் போது, வேறு யாருடைய நடிப்புமே கொஞ்சம் கூட எடுபடாது. ஆனாலும் அவருக்கு ஈடுகொடுத்து அற்புதமாக நடித்திருக்கிறார் சென்ற ஆண்டு நம்மைவிட்டு மறைந்த சாட்விக் போஸ்மன்.  

1920களின் அமெரிக்காவில் நிகழ்வதாக கதையமைப்பைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு  இந்த ஆண்டின் சிறந்த ஆடை,சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான இரண்டு பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருக்கின்றன

 அனிமேஷன் திரைப்படங்களில் எப்போதும் கோலோச்சும் டிஸ்னி பிக்ஸார் நிறுவனத்தின் தயாரிப்பான 'ஸோல்' (Soul), இவ்வாண்டின் சிறந்த  முழுநீள அனிமேஷன் படத்துக்கான விருதை வென்றிருக்கின்றது. நம் அன்றாட வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் நம் வாழ்க்கைக்கான பொருள் என்ன ?, நம்மை செலுத்திக்கொண்டிருக்கிற உந்துசக்தி எது ?, வாழ்வின் மீது நாம் கொண்டிருக்கிற பிடிப்பு எதன்மேல் ?, பொருளீட்டும் பொருட்டு நாம் செய்யும் வேலை, மனதிற்கு விருப்பமான வேலை என பலவற்றையும் பற்றி யோசித்திருப்போம். பல்வேறு  முடிவுகளையும் இவற்றின் அடிப்படையில் எடுத்திருப்போம். இந்த விஷயங்களனைத்தையும் அழகாக  ஒரு கதையில் இணைத்து, குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது ஸோல் திரைப்படம்.  சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் இத்திரைப்படமே வென்றிருப்பது கூடுதல் சிறப்பு.

  சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two distant strangers) கறுப்பினத்தவர்களின் மீதான காவல்துறையின் வன்முறைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கிற திரைப்படம். ஒரு இனவெறி பிடித்த போலிஸ் அதிகாரியும் ஒரு அப்பாவி கறுப்பின இளைஞனும் சிக்கிக் கொண்ட ஒரு காலச்சுழலில் (time loop) , அண்மையின் அமெரிக்க காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற இளைஞரின் மரணத்தில் தொடங்கி வெவ்வேறு வகையில் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர்களின்  கதைகள் இந்த காலச்சுழலுக்குள் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுகின்றன. எல்லா கதைகளிலும் இறுதியில் பாதிப்புக்குள்ளாவது யார் ? அது ஏன்? என்ற கேள்விகளை எழுப்பிச் செல்கிறது இந்த 20 நிமிட குறும்படம். 

 சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது பெற்ற 'If anything happens I love you', அமெரிக்காவின் பள்ளிக்கூடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஒரு குழந்தையின் மரணம் அதன் பெற்றோருக்கு ஏற்படுத்திற தாக்கத்தையும் இழப்பையும் உணர்வுப்பூர்வமாகக் காச்சிப்படுத்தியிருக்கின்றது. ஆக, சிறந்த அனிமேஷன் குறும்படம், மற்றும் சிறந்த குறும்படம் என இரண்டு பிரிவுகளிலுமே விருது வென்ற குறும்படங்களும் இன்றைய அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளையே பேசியிருக்கின்றன.

இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவதும் பெரும்பகுதி மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை வாழ முடியாமல் முடங்கிக்கிடந்த நாட்களில், திரைப்படங்கள், புத்தகங்கள், இசை என வெவ்வேறு கலை வடிவங்களே சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வழிவகுத்தன.  அடிப்படைத் தேவைகளுக்கே வசதி வாய்ப்பற்றவர்களுக்கு ஆசுவாசம் என்பதே ஆடம்பரத்தேவை தான் எனினும் , எதிர்காலம் குறித்த அச்சத்திலிருந்து தற்காலிகமாகத் தங்களை விடுவித்துக் கொள்ள பொதுமக்கள் கலையினிடத்தேயே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒரு சில நாடுகள் இடையிடையே திரையரங்குகளைத் திறக்க அனுமதித்திருந்தாலும் வேறு பல நாடுகளில் முழுமையாக மூடப்பட்டே இருந்தன. இன்னும் சில நாடுகளில் படப்பிடிப்புகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான சூழலே அமையவில்லை.இத்தனையையும் தாண்டி, சென்ற ஆண்டு  உலகம் முழுவதிலிருந்தும் பல நல்ல திரைப்படைப்புகள் வெளிவந்தபடிதான் இருந்தன.

 

 

 

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

ஓவியர்/எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் - நேர்காணல் தொடர்பாக


 

Got an opportunity to meet with this amazing human being... Artist, Writer, Padmashri Manohar Devadoss sir (85) for an interview.

❤️
Inspirational என்ற ஒற்றை சொல்லில் எல்லாம் சொல்லிட முடியாத அளவு Inspirationalஆன ஒருவர். மதுரையில் இருக்கிற புராதன கட்டிடங்கள், கோவில் கோபுரங்கள், சித்திரைத் திருவிழா, தமிழகத்தின் பிற ஊர்களுடைய சிற்பங்கள், மெட்ராஸின் பழைய கட்டிடங்கள் என நூற்றுக்கணக்கான கலாச்சார அடையாளங்களை அற்புதமான நுணுக்கமான மை- கோட்டோவியங்களாக (Ink/Pen Sketch Drawings) வரைந்திருக்கிறார் 85 வயதான ஓவியர்/எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்
 
அது போக இவருடைய முதல் புத்தகமான 'Green Well years' தொடங்கி Multiple facets of My Madurai, அண்மையில் வெளியான Madras Inked வரையிலும் என 8 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 
 
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இத்தனையையும் Retinitis Pigmentosa என்கிற மரபணுக் குறைபாட்டின் காரணமாகவும், கண்புரையின் காரணமாகவும் அவருடைய பார்க்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் தொடங்கி முற்றிலும் பார்வை இழந்து கொண்டிருக்கும்போதே செய்திருக்கிறார்.
 
கிட்டத்தட்ட இருபது பதிப்புகளைக் கடந்துவிட்ட இவருடைய புத்தகங்களின் விற்பனையிலிருந்து இதுவரை கிடைத்த, கிடைக்கிற ராயல்டி தொகை மொத்தத்தையும் மதுரையில் தான் படித்த பள்ளிக்கும், அமெரிக்கன் கல்லூரிக்கும், இவருடைய பார்வைக் குறைபாட்டைக் கடந்து ஓவியங்கள் வரைய உதவிய அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கும் தொடர்ந்து வழங்கிவருகிறார். 
 
மனோகர் அவர்களின் 8 புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் அவருடைய மனைவி மஹிமா அவர்களைப்பற்றி எழுதியவை. தன்னுடைய எல்லா நேர்காணல்களிலும் மனோகர் அவர்கள் தவறாமல் குறிப்பிடும் ஒரு விஷயம் அவருடைய மனைவி மஹிமா தனக்கு எத்தனை உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தார் என்பதைத்தான்.
 
திருமணமாகி சில பல ஆண்டுகள் கடந்த பின்னர் இவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்படத்தொடங்கிய அதே நேரத்தில் தான், மஹிமா அவர்கள் ஒரு சாலை விபத்தில் சிக்கி முதுகெலும்பில் அடிபட்டு கழுத்துக்கு கீழ் உடல் முழுவதுமாக செயலிழந்து (Quadriplegic) போகிறார். அதன்பின் 35 ஆண்டுகள் சர்க்கர நாற்காலியின் துணையோடே (wheelchair bound) வாழ்ந்திருந்தாலும் மனோகர் அவரை கருத்தாக கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். "When she became wheel chair bound, I promised her she would never get bedsores. And I kept my promise for 35 years" என்று முகம் மலரக் குறிப்பிடுகிறார். "We were not a couple who'd say Oh dear I'd love you for eternity or things like that. The love was just always there and we enjoyed every moments of our life despite of what it put through" என்றும் சொன்னார். 
 
இருவருக்குமான உடல் உபாதைகளையும் குறைபாடுகளையும் தாண்டி மிக மிக நிறைவான மகிழ்ச்சியான ஒரு வாழ்வை அவர்கள் வாழ்ந்திருப்பதை மனோகர் அவர்களுடைய பேச்சிலிருந்தே அறிந்துகொள்ள முடிகிறது.❤️ மஹிமா மறைந்து எட்டு ஆண்டுகள் ஆன பின்னும் இன்றும் மனோகருடைய மனம், பேச்சு, சொல் என அத்தனையிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
It was a wonderful meeting overall. மேலும் பல விஷயங்களுடன் இந்த நேர்காணல் காணொலி வெளி வரும்போது இணைப்பைப் பகிர்கிறேன். 😊