புதன், 3 ஆகஸ்ட், 2022

லகுடு - அதிர்ஷ்டத்தின் சூதாட்டம்

 


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

குறள் 932 - அதிகாரம்: சூது

பொருள்:    ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

 நாம் தற்செயல் என்றோ அதிர்ஷ்ட்டம் என்றோ நினைக்கிற விஷயங்கள் உண்மையில்  தற்செயலானவை தானா ? நிகழ்தகவுகளைக் கொண்டு எண்களோடு விளையாடி பெரும்பாலான களங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான எல்லா வாய்ப்புகளையும் கணித்து விட முடிந்தாலும், உண்மையில் நிகழக்கூடியவை நமது தனிப்பட்ட அனுமானங்கள் எல்லாவற்றையும் மிஞ்சியவையாக இருந்தால் என்ன செய்வது ? காரண காரியங்களை ஆராய்ந்து கேள்விகளுடன் துறத்தி , சூட்சுமங்களை அறிந்துகொண்டு எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துவிட முடியுமா ? ஒரு தனிமனிதன் செய்யக் கூடியவையா இவையெல்லாம் ? 

 கால்பதித்து நடப்பதற்கு சரியான பாதையோ, கையால் பற்றிக்கொண்டு மேலெறி விட கொடிகளோ எதுவுமற்ற பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு மலையுச்சியையும் தாண்டி பறக்கத் துடிக்கிறவனின் கதை தான் லகுடு. ’லகுடு’ என்பது ஒரு வகைக் கழுகின் பெயர்; கிட்டத்தட்ட அதற்கு இரையாகிவிடக் கூடிய ஒரு சிற்றுயிரைப் போன்றவன், வேட்டைப் பறவையாக உணவுச் சங்கிலியின் மேலேயிருக்கிற லகுடாக தன்னை வறித்துக்கொள்கிறான். அவன் மனதளவில் எப்போதுமே உயரங்களை விரும்புகிற உயரப்பறத்தலை விரும்புகிற ஒரு வேட்டைப் பறவையாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்ளுகிறான்.  

காலில் கட்டியிருக்கிற சிறுநூலை வெட்டி அறுத்துவிட்டு  எப்போது பறப்பது ? எது உயரமென எப்போது தெரியும்? எனக்குக் கற்றுக் கொடுக்க ஆளில்லையா ? 

’லகுடு’- சரவணன் சந்திரன்

 சூதின் வேறொரு பெரு வடிவமான லாட்டரிச்சீட்டுகளின் உலகம் தான் கதைக்களம், அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணியாக, தெருத்தெருவாய் லாட்டரிச் சீட்டு விற்கிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டு ஏதேனும் ஒரு இழையைப் பிடித்து மேலேறிவிடத் துடிக்கிறவன் லகுடு. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் செய்கிற சில்லறைத் தொழிலில் நியாயமும் நேர்மையும் வேண்டுமென நினைக்கிறவர் அப்பா. அதிர்ஷ்டத்தை தற்செயல் என எண்ணிக்கொண்டு அதை எதிர்நோக்கி காத்திருக்கிற இடத்தில் இருந்து தான் நினைக்கிற நேரத்தில்  விரும்புகிற ஆளுக்கு அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரக் கூடிய இடத்திற்கு நகர்கிறான் கதைசொல்லி. ஒவ்வொரு கட்டத்திலும் அந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு யாராவது ஒருவரின் கைபிடித்து மேலேறிவிடத் துடித்தவன் கடைசியில் என்னவானான் என்பது மீதிக்கதை 

உள்ளூரில் துணை நிற்கிற கதிர்வேலு, அடுத்தகட்டத்துக்கு இழுக்கிற பாலக்காடு ஜோசப் என்கிற செல்வம், லகுடை நம்பி தொழிலில் இறங்கிய அந்தப் பெயரில்லாத முதலீட்டாளர், காசு பணம் பார்த்தாலும் நிதர்சனம் பேசுகிற நண்பன் சோலைச்சாமி, வேளொரு தளத்தில் கூட நிற்கிற நண்பன் மாணிக்கவாசகம், காலைத்தாங்கி நடந்து தேய்ந்தாலும் நேர்மை பேசும் அப்பா,  அம்மா விட்டுப் போன மாதா சிலைய, கடைசியாக நிலாப் பெண் அர்ச்சனா என அத்தனை பாத்திரங்களும் மனதில் நிற்கின்றார்கள். 

உண்மையில் லாட்டரிச்சீட்டுகள் பற்றியும் அது எத்தனை பெரிய வலைப்பின்னல், எத்தனை கைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன, அதிர்ஷ்டம் யாரால் யாருக்காக நிர்ணயிக்கப்படுகிறது என்கிற  விவரங்களையும் படிக்கையில் வியப்பும் ஆயாசமுமே ஒருசேர மிஞ்சுகிறது. சரவணன்சந்திரன் அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியினால் நம்மை இந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறார்.ஒரு காலத்தில் அதிர்ஷ்டத்தின் பெயரால் எத்தனையோ உழைக்கும் மக்கள் தங்களுடைய் வருமானத்தையும் வாழ்வாதரத்தையும் லாட்டரிச்சீட்டுகளில் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில், இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமாவது லாட்டரிச்சீட்டுகளை அரசு முழுமையாக தடை செய்திருப்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

 ’லகுடு’ நாவலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமான விஷயம் எதுவென்றால், அடிமட்டத்தில் இருக்கிற ஒருவன் கடைத்தேற்றம் பெறுவான் என்கிற முகக்குறி தெரிந்தால் சுற்றியிருப்பவர்கள அவனை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவன் பாதை மாறி போவது தெரிந்தால் ‘தம்பி இது தப்புடா, ஒதுங்கிப்போ’ என எச்சரிப்பார்கள். மனம் நிறைய நம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு வெறும் கையோடு நிற்கிறவனுக்கு தைரியம் சொல்லி சரியான நேரத்தில் கைதூக்கி விடாவிட்டாலும் வழியாவது காட்டிவிடுவார்கள். இந்த நாவல் முழுக்கவும் அந்த மாதிரி நிகழ்வுகளும் மனிதர்களும் உண்டு. என்னுடைய வாழ்விலும் வெவ்வேறு தருணங்களில் அப்படியானவர்களைக் கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரியான தருணத்தில் படிக்க வேண்டுமென இரண்டாண்டுகளாய் காத்திருந்துவிட்டு, ஒரு வழியாக 7800  அடி உயர மலைமேல்  தேயிலைத்தோட்டத்தின் குளிர் சாரலில் அமர்ந்து கொண்டு, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படித்து முடிக்கையில் ஒரு லகுடாக பறந்து கொண்டிருந்தேன். இதுவரை அவருடைய ‘அஜ்வா’ நாவலை எனக்கானதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி அந்த இடம் ‘லகுடு’க்கு தான். சுபிட்ச முருகனிலும், அத்தாரோவிலும் எனக்கு பிடிபடாதது லகுடுவில் பிடிபட்டதாக உணர்கிறேன்.

வாழ்த்துகளும் நன்றியும் அண்ணே..! <3

லகுடு - சரவணன் சந்திரன்

கிழக்கு பதிப்பகம் | விலை ரூ. 200 | 183 பக்கங்கள்