வெள்ளி, 30 டிசம்பர், 2022

விட்னஸ் - Witness - 2022


இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மிக முக்கியமான திரைப்படம் 'விட்னஸ்' தான். மலக்குழி மரணங்கள் (உண்மையில் அவற்றை கொ.லை.கள் என்றே சொல்ல வேண்டும்) நம் நாட்டின் மிகப்பெரிய அவலம். பல வருடங்களாக யாராரோ என்னென்னவோ முயற்சிகள் செய்தும் சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிறகும் கூட தடுக்க முடியாத துயரம்.

இந்தியாவில் கழிப்பறை சார்ந்தும், துப்புறவு பணியாளர்கள் சார்ந்தும் சாதியின் அடிப்படையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்து Where India Goes, Unseen (The story of India's manual scavengers), மாதிரியான ஒரு சில புத்தகங்களிலும்.. கக்கூஸ் ஆவணப்படத்தின் வாயிலாகவும் பேசியிருக்கிறார்கள். பெஸாவாடா வில்சன் மாதிரியான தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் இது குறித்து கேள்வி எழுப்பியபடியே இருக்கின்றார்கள்.  புகைப்படக் கலைஞர் பழனிகுமார் கடந்த 6/7 ஆண்டுகளாக மலக்குழி மரணங்களை தன்னுடைய புகைப்படங்களின் வழியாக ஆவணப்படுத்தி வருகிறார். 

எத்தனை பேர் எவ்வளவு போராடியும் இந்த சிக்கலுக்கு ஒரு நிரந்தரமான தீர்வோ முடிவோ இதுவரை இல்லை. கடந்த 27 ஆண்டுகளில் 1014 பேரின் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது  ஒன்றிய அமைச்சரைவையின் (Ministry for social justice and empowerment) அதிகாரப்பூர்வமான தகவல். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம்.

 இதுவரை மலக்குழி மரணங்களுக்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் 99 சதவிகிதம் இந்திய தண்டனை சட்டபிரிவு 304A, 1860 ன் படி அலட்சியம் காரணமாக நிகழ்ந்தவை என்றே பதியப்பட்டிருக்கின்றன. (Death due to negligence) ஒரே ஒரு சதவிகிதம்  மட்டுமே Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 ன் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. (link for article

விட்னஸ் திரைப்படத்தின் கரு மேற்சொன்ன தகவலின் அடிப்படையிலானது தான். ஒரு 20 வயது  இளைஞனின் அகால மரணமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தான் திரைப்படம். ஒரு பரபரப்பான investigative thriller திரைப்படமாக மாற்றிவிடக்கூடிய அத்தனை சாத்தியமும் இருந்தாலும் அதைச் செய்யாமல் எந்த வித romanticismம் இல்லாமல் நிதானமாக தான் சொல்ல வந்ததை நேர்பட சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதுவே திரைப்படம் சொல்ல வந்த கருத்தை மிக ஆழமாக நம் மனதில் பதியவைத்திருக்கிறது.
கூடவே பெருநகரின் மத்தியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு புறநகர்ப் பகுதிகளில் குடிவைக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், இந்த அரசு இயந்திரத்தின் அமைப்புச் சிக்கல்களில் அவர்கள் சிக்கித் தவிப்பதையும் கதையினூடாகவே பேசியிருக்கிறார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை நேரடியாக வெளிப்படையாக சித்தரித்திருக்கின்றார்கள். (இதுல என்ன பல பேருக்கு கோவம்/வெறுப்பு/வன்மம்னு தெரியல) உண்மையில் தோழர் செல்வா  நிஜவாழ்வில் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற பணியையே இந்த திரைப்படத்தில் தான் ஏற்ற பாத்திரமாகவும் செய்திருக்கிறார். (அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு - விகடனில் செல்வா தோழர் பற்றி எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் கட்டுரை இணைப்பு

 
இத்தனை ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத இந்த அவலத்திற்கு இனியேனும் ஒரு முடிவு பிறக்குமா தெரியவில்லை. 
ஆனால் இப்படியொரு பிரச்சனை இருப்பதையும், இதன் பின்னணியில் இருக்கிற சாதியின் அடிப்படையிலான சிக்கல்களையும் குறித்து ஒரு உரையாடலை ஏற்படுத்திய வகையில் இந்த ஆண்டின் கருத்தியல் அடிப்படையில் மிக முக்கியமான திரைப்படமாகிறது விட்னஸ். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 

Witness (Tamil) movie is streaming on Sony Liv OTT

செவ்வாய், 13 டிசம்பர், 2022

நெருநல் உளனொருவன் இன்றில்லை - Eulogy Hymn


 
என் நண்பர்கள் இறக்கிறார்கள்
வரிசையாக
கண்ணாடி சவப்பெட்டிகள் முன்
தலை கவிழ்ந்து நிற்பது
வழக்கமான கடமையாகிவிட்டது
 
நான் இப்போதெல்லாம்
சாவுக்கு அவ்வளவு சகஜமாகிவிட்டேன்
சாவு ஒரு சிறுபூனைபோல
என் நெஞ்சில் படுத்து
கதகதப்பாக உறங்குகிறது
அதன் களங்கமற்ற கண்களைக்காண
என் கண்களில் நீர் தளும்புகிறது
 
- நெஞ்சில் தூங்கும் மரணம், மனுஷ்ய புத்திரன்

 பேரன்பின் ராஜாவுக்கு,

 நீ எங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடை பெற்று இன்றுடன் நூற்றி சொச்சம் நாட்கள் கடந்து விட்டன. நீயில்லாத உலகில் தனக்கும் இடமில்லையென உன் அம்மாவும் புறப்பட்டுவிட்டார்கள்

இயல்பு வாழ்வென ஒன்று இருப்பதால்,  உன் இழப்பிலிருந்தும் நினைப்பிலிருந்தும் மீண்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு மற்ற அனைத்திலும் கவனம் செலுத்த முயன்று கொண்டேயிருக்கேன். விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன். பசிக்கு மீறி உண்டு திணறுகிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அலுவல்கள், கடமைகள், நண்பர்கள், பயணங்களென முற்றாய் என் உடலும் உள்ளமும் களைத்துப் போகுமளவு எல்லாவற்றிலும் எல்லாரிடமும் என்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன். 

ஆனாலும் உன் இன்மை, ஒரு நிழல் போல . கருமேகம் போல, ஒரு பூனையைப்போல என்னைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றது. நானும் என்னைப் போல் உன் மீது அன்பு கொண்ட, நீ வாழ்ந்து தொலைத்திருக்கலாம் என்று திட்டித்தீர்க்கிற ஏனையோரும் என்ன செய்திருந்தால் உன்னைப் பிடித்து வைத்திருக்கலாமென யோசித்துக் களைத்து , இப்போதாவது அவன் விரும்பிய அமைதியை அவன் அடைந்துவிட்டிருப்பானென சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். குற்ற உணர்விலிருந்தும் கையறு நிலையிலிருந்தும் எங்களை விடுவித்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும் ?

நீ சிக்கிக் கொண்டிருந்த சுழலிருந்து மேலேறி வர, உன்னை மீட்கும் பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் ஒன்றையேனும் நீ பற்றிகொண்டிருக்கலாம் ராஜா. 

 ஆனால் உன் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. எப்போதும் மனிதர்கள் சூழ இருந்தவன் நீ. உன்னுடைய விருப்பத்தை விடவும் சுற்றத்தாரின் விருப்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை தந்து அவர்களைக் கொண்டாடித் தீர்த்தவன் நீ . எல்லா கொண்டாட்ட பொழுதுகளிலும் உன்னை எளிதாக பொருத்திக் கொள்வாய். உன் வட்டத்து நண்பர்களின் வாழ்வில் அவர்களுடைய நன்னாட்கள் அத்தனையிலும் நீ உடனிருந்திருக்கிறாய். நான் உட்பட; ஆனாலும் எங்கள் யாருக்கும் உன்னோடு நிற்கும் அந்த நல்வாய்ப்பைத் தர மறுத்துவிட்டாய்.என் வருத்தமெல்லாம் இத்தனை பேருக்கு மத்தியிலும் நீ தனியனாய் உணர நேர்ந்ததைப் பற்றித்தான்.

 நீ முற்றிலுமாய் உனது இருப்பை அழித்துக் கொள்வதற்கு முன் எல்லோரிடமிருந்தும் உன்னை விலக்கிக் கொண்டாய். நீ ஒரு கடும் பிடிவாதக்காரனாக உன்னை வரித்துக் கொண்டது உன் விலகலை விடவும் வேதனையானது . ஒரு பயணியானவன் தான் நிழலுக்காய் அமர்ந்த மரங்களை எப்போதும் காயப்படுத்தில்லை. உன் மீதான அன்பை மறக்கச்செய்யுமளவு கடுமையான கோபத்துடனேயே இருந்தேன் நான். இப்போதும் ஏதெனும் ஒரு வசை சொல்லி அவ்வப்போது உன்னை வாய்விட்டு திட்டிவிடுகிறேன். 

விலகிச் செல்கிற தேவதைகளின் முன்பு உள்ளங்கைகளில் மெழுகுவர்த்தியுடன் நீ மண்டியிட்டு பிரார்த்தித்திருக்க வேண்டாம் ராஜா. 

இன்னும் கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ எனத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.நீ வசித்த தெருவை கடந்து போகும்போதெல்லாம், நீ எப்போதும் செல்கிற டீக்கடையை தாண்டும்போதெல்லாம், நீ அடிக்கடி திரிகிற மாலுக்கும் திரையங்கிற்கும் செல்லும்போதெல்லாம், உனக்கு விருப்பமான நடிகனின் திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம்,  நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நீ ஆடிக்களைத்த பாடல்களை கேட்கும் போதெல்லாம், உனது இருப்பை இந்த உலகம் எனக்கு நினைவூட்டியபடியே இருக்கின்றது.

அழ வேண்டியதெல்லாம் அழுது முடித்தாயிற்று. கேட்க வேண்டிய அத்தனையும் கேட்டு முடித்தாயிற்று. எந்த முடிவுக்கும் வர வேண்டிய நிர்பந்தமோ, காரணம் தேடும் கட்டாயமோ இல்லை. உன்னையும் உனது நினைவுகளையும்
இந்த உலகம் நிதானமாக ஆனால் நிச்சயமாக கடந்து சென்றுவிடும்.எங்கள் மனதில் உனது இன்மை அல்லது உன் இருப்பின் வெற்றிடம் வேறு பல மனிதர்களாலும் அவர்தம் கதைகளாலும் நினைவுகளாலும் நிரப்பப்பட்டுவிடும். உன்னைப் பற்றி மற்ற யாரிடத்திலும் இனி பேசுவேனா தெரியாது ராஜா.

இந்தக் கடிதத்துக்காக எந்த விதமான பதிலையும் நான் எதிர்பார்க்கவில்லை . என் மனச்சுமையை இறக்கிவைக்கும் பொருட்டு சுயநலமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ராஜா . இன்னும் ஓரிரு வாரங்களில் உனது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்மஸ் விடுமுறையில் தொடங்கி ஏதேனும் ஒரு  ஊருக்கு பயணப்பட்டு, உன் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்து விட்டு புத்தாண்டுக்கு ஊர் திரும்புவாய். எப்போதும் உனது பிறந்தநாளின் போது நீ ஊரில் இருந்ததேயில்லை.இப்போதும் அப்படித்தான் என எண்ணிக்கொள்கிறேன். இம்முறை நீ வெகு தொலைவில் ஓரிடத்துக்கு பயணப்பட்டிருக்கிறாய். நீ விரும்பிய யாவும் அங்காவது உனக்கு கிடைக்க வேண்டுமென இந்த பிரபஞ்சத்திடம் உன் சார்பில் கோரிக்கை வைக்கிறேன் ராஜா. 

Advanced birthday wishes...Long may you live in our hearts Raja...! :'( :'( :'(

என்றென்றும் அன்புடன்,

நான்


 

 



வியாழன், 8 டிசம்பர், 2022

 Dall-Eம் ChatGPTம் பின்னே நானும்




சில பல மாதங்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் (AI - Artificial Intelligence) அடிப்படையில் இயங்கும் Dall-E என்ற வலைத்தளம் பேசுபொருளானது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் சொற்களாக எழுதும் குறிப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல டிஜிட்டல் ஓவியமோ நிழற்படமோ உருவாக்கித் தரும்.

உதாரணத்துக்கு a digital art with Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று குறிப்பெழுதினால் இணைப்பில உள்ளதைப் போன்ற படம் கிடைக்கும். இந்தக் குறிப்பையே வேறு சில சொற்களுடன் உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்றார் போல் மாற்ற, படத்தில் மாற்றங்கள் செய்து டாலி உங்களுக்குத் தரும்.

A van gogh style painting of Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று ஒரு சில சொற்களைச் சேர்த்தால் வான்காவின் பாணியில் வரையப்பட்ட ஓவியமாக உங்கள் கற்பனைக்கு உருவம் கிடைத்துவிடும்.

 





இந்த டாலி, OpenAI என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் ஆக்கம். அதே நிறுவனத்தின் மற்றுமோர் புரட்சிகரமான தொழில்நுட்ப ஆக்கம் தான் ChatGPT எனப்படும் செயலி . உலகம் முழுக்க பல நிறுவனங்கள் தங்களுடைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கவும் அவர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தரவும் Chatbot என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உள்ளீடு இல்லாமல் செய்ய தாமாகவேசெயல்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக்கூடியவை இந்த பாட்கள். ChatGptம் இதே மாதிரியான ஒரு பாட் தான். ஆனால் அதீத திறன்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட chat bot.

எந்தளவுக்கு திறன் வாய்ந்ததென்றால் ஒரு கணினி நிரலின் பகுதியைக் (code snippet) கொடுத்து சந்தேகம் கேட்டால் அதனைத் தீர்த்து வைப்பதோடல்லாமல் மாற்று வழிகளையும் தரும்.

ஒரு சில சொற்களையோ அல்லது சொற்றொடரையோ தந்து கதையெழுதச் சொன்னால் எழுதும்.

ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை குறித்த கட்டுரை எழுதித்தரச் சொன்னால், கருத்துக் கேட்டால் தெள்ளத் தெளிவாகத் தரும்.

ஒரு சிறிய கணினி நிரலையோ (code/program), செயலியையோ உருவாக்கித் தர குறிப்புகள் தந்தால் அதையும் செய்யும்.

சமையல் குறிப்புகள், ஜோக்குகள், கவிதை எனத் துவங்கி உங்கள் ரெஸ்யூமில் செய்ய வேண்டிய மாற்றங்கள் வரை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.

கூகுள் அடிப்படையில் ஒரு தேடுபொறி. இது இங்கே இருக்கிறது; இதற்கான தீர்வு இங்கே கிடைக்கலாம்: அதற்கான பதில் அங்கே கிடைக்கும் என சரியான திசைக்கு நம்மைச் செலுத்தும் வழிகாட்டி போல என வைத்துக்கொண்டால் ChatGpt அதன் அடுத்தகட்டமாக நமக்கு வேண்டியதைச் செய்துதருகிற விளக்கு பூதம் போல எனச் சொல்லலாம்.

உண்மையில் இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம். கற்பனைத் திறனின் உச்சமும் தொழில்நுட்பமும் சந்திப்பது குறித்து எனக்கு பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உண்டு. இப்போதைக்கு ஆங்கிலம் மட்டும் புரிந்துகொள்ளும் டாலி, தமிழ் உட்பட உலக மொழிகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. ChatGPT இப்போதே அதையும் செய்கிறது. தமிழ் உட்பட பல மொழிகளிலும் உள்ளீட்டைப் புரிந்துகொள்கிறது.

டாலியின் துணை கொண்டு நான் உருவாக்கிய படங்களையும், ChatGPTன் தற்போதைய பயன்பாடுகளின் பட்டியலையும் (usecases/applications) இணைத்திருக்கிறேன். அந்த தளங்களின் இணைப்பு கமெண்ட்டில். இலவச சேவைகளாக வழங்கப்படும் இவையிரண்டும் விரைவிலேயே கட்டணச் சேவைகளாக மாறக்கூடும்

ஏற்கனவே விகடன் மாதிரியான சில பத்திரிகைகள் அவர்கள் வெளியிடும் கவிதைகளுக்கான ஓவியத்தை டாலியின் துணை கொண்டு வரையத் துவங்கியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் fillers எனப்படும் பகுதிகள் அத்தனையும் ChatGPTன் துணை கொண்டு எழுதப்படலாம். இன்னும் இதன் முழுமையான சாத்தியக் கூறுகள் போகப் போகப் புலப்படலாம். நிறுவனங்கள் முழுநேரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக OpenAI மாதிரியான தளங்களில் credits வாங்கி வைத்துக் கொண்டு நுண்ணறிவு செயலிகளை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கலாம்.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் எந்தளவுக்கு வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவு கொஞ்சம் அச்சத்தையும் மெலிதான கலக்கத்தையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எதிர்காலம் நமக்காக மேலும் என்னவெல்லாம் வைத்திருக்கிறதோ?! பார்க்கலாம்.

#DallE2art #ChatGPT


 https://openai.com/dall-e-2/  

https://openai.com/blog/chatgpt/