புதன், 5 ஏப்ரல், 2023

ஹீலியந்தே - Redamancy of the Livsnjutare

 

girl-red-dress-sunflower-farm

பேரன்பின் ஹீலியந்தே,

 காதல் எப்போதும் நாம் எதிர்பார்க்கிற இடத்திலிருந்து எதிர்பார்க்கிற நேரத்தில் எதிர்ப்பார்க்கிற அளவில் வருவதில்லை; அது எப்போதும் நெருங்கிவிடும் தொலைவில் மறந்திருந்து பார்த்தபடியே இருந்துகொண்டு, எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத ஒருவரின் வழியாக வெளிப்பட்டு முற்றிலுமாய் ஆக்கிரமித்துக் கொண்டு சுற்றிச் சுழன்று முற்றும் முழுகடிக்கும். அப்படியானதுதான் நம் இருவருக்குமான காதலும்.  நீ எனக்கு அறிமுகமான பொழுதில் நாம் ஒருமுறை கூட ஒருவரையொருவர் நேரில் சந்தித்திருக்கவில்லை. 

உனக்கு என் குரலும் புகைப்படமும், எனக்கு உன் குரலும் புகைப்படமும் மட்டுமே அறிமுகம். உன்னைப் பார்த்த மாத்திரத்தில் நான் அறிந்த கொண்டது இவளோர் அன்பின் பேரருவி என்பதை மட்டுமே. உனது புன்னகையும் , குரலில் தொனிக்கிற வாஞ்சையும் ஒரு பரிச்சயப்பட்ட ஆன்மாவாகவே உன்னை முன்னிறுத்தின. அதிகம் பேசிப் பழகும் முன்பே மனதளவில் நெருக்கமாகிவிட்ட உனக்கு, இதை வேறெந்த சொற்களில் எழுதிப் புரிய வைப்பதென தெரியவில்லை எனக்கு.

இந்த நெருக்கம் இருந்தாலுமே, கண்ணாடித் திரைக்குப் பின்நின்றபடி சைகை மொழியில் பேசிக்கொள்பவர்கள் போல்,  உடல்களாய் நாம் இந்த உலகின் இருவேறு மூலைகளில் இருந்தோம். நான் கண்விழிக்கும்போது உனது இரவுகளாயும், நீ கண்ணயர்ந்தபோது எனது பகல்களாயும் நாட்கள் கழிந்தன. உனக்கும் எனக்கும் இடையே இருந்த ஒட்டு மொத்த தூரத்தையும், நாம் நேரில் சந்தித்துக் கொண்ட ஓர் நாளின் நன்பகல் மழைத்துளிகள் இட்டு நிரப்பின. ஆம் உனக்காக உன்னோடான ஓர் நாளென்று இருந்தது பின்பு நமக்கான நாளாகிப் போனது. 

அன்றைக்கு இந்த பெருநகரின் நெடுஞ்சாலைகளில் எனது மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிகையில், உன் அருகாமை தவிர்த்து வேறொன்றும் நினைவில் ஆழப்பதியவில்லை. முன்பு வெயிலில் காய்ந்து பின் மழையில் நனைந்துபோன உடைகளுடன் , ஓர் இறுக்கமான அணைப்பை மட்டும் தந்து விடைபெற்றுக் கொண்டோம். அன்றைய நாளை மொத்தமாய் அசை போட்டபடி , உனக்காகவென ஒரு கவிதையை தேடிப்பிடித்து அனுப்பிவைத்தேன். அந்தக் கவிதை நாம் பேசிக்கொள்ளாத ஓர் உரையாடலின் பகுதியாகிப் போனது. நான் உணர்ந்ததையே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்பதை விளங்கிக் கொண்டேன்.

 பின்பு எனது அன்றாடங்களின் ஒரு பாதி உனக்காக என்றானது. உனது குறுஞ்செய்திக்காகவும், நீ அனுப்பிவைக்கும் உன் புகைப்படங்களுக்காகவும் காத்திருத்தலென்பது ஓர் அலாதி இன்பமாகிப் போனது. உனக்காக ஓர் பாடல்வரியை எடுத்துப் பகிரவும், பாடல் பாடி அனுப்பிவைக்கவும், பிரத்யேகமாய் உனது புகைப்படத்திற்கான கவிதையொன்றை எழுதி அனுப்பவும் சிந்தித்தல் என்பதே சிலிர்ப்ப்பூட்டும் அனிச்சை செயலானது. 

உன் உலகத்தில் கொஞ்சமாய் சஞ்சரிக்கத்தொடங்கினேன் நான்.

உனக்குப் பிடித்தமான சிவப்பு வண்ணம், 

உனக்குப் பிடித்தமான சூரியகாந்திப் பூ, 

நீ ரசித்த பாடல்வரிகள், 

நீ பிடித்த நிலவின் நிழற்படங்கள், 

உன் காட்டாற்றுக் கூந்தல் மேகத்துக்கு நீ தீற்றிக் கொள்ளுகிற வண்ணங்கள், 

உனது பிரியமான உதட்டுச்சாயம், 

நீ விரும்பி அணிந்துகொள்கிற ஷூ, 

நீ நடந்து திரிகிற சாலைகள், 

நீ விரும்பி அருந்தும் ஹாட் சாக்லெட் பானம், 

உனது நீள விரல்களில் வெவ்வேறு மலர்களை ஏந்திக்கொண்டிருக்கிற படங்கள், 

நீ எப்படி அணிந்து கொண்டாலும் உன்னை அழகாய்க் காட்டும் உன் விருப்பமான உடைகள்,

நீ தேடியலைந்து பார்க்கிற திரைப்படங்கள், 

உன் பிரியமான நாய்க்குட்டி,

உன் உலகத்து மனிதர்கள்,

உன் மாறாப் புன்னகை, 

உன் ஊடுருவும் பார்வை, 

உனது இருப்பு,

நீ...!

மொத்தமாய் இத்தனையையும் உள்வாங்கியபடியே இருந்திருக்கிறேன் நான். ஒவ்வொரு முறை உனக்காக ஏதோவொன்றை செய்துவிட்டு நான் காத்திருக்கையில், வார்த்தையாய் எனது பெயரெழுதி நீ அனுப்பிவைப்பதையும்,  மகிழ்ழ்சியும் அங்கலாய்ப்புமாய் புன்னகையுடன் என் பெயரை உச்சரித்து சின்ன ஒலிக்குறிப்பாய் நீ அனுப்பிவைப்பதையும் நான் மனம் மலர வாசித்துக் கொண்டும் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டும் இருப்பேன். நிபந்தனையற்ற அன்பு எனும் சொல்லை பலர் கூறக் கேட்டிருந்தாலும் உன் வழியாக அது இன்னதென்று உணரப் பெற்றேன். எப்போதும் அளவில்லாமல் அன்பைத் தந்து மட்டுமே பழக்கப்பட்ட ஒருவனுக்கு முதல்முறை அது பலமடங்காய் திரும்பக் கிடைப்பதெல்லாம் பேரதிசயம்; பெருவரம். அது எனக்கே நிகழ்ந்ததில் நானும் திக்குமுக்காடித்தான் போனேன். 

இந்த உறவுக்குப் பெயரிட்டு, வகுத்து வைத்த வரையறைக்குள் அடைக்கப் பார்ப்பதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. அதில் விருப்பமும் இல்லை. நமது தனித்தனியான பயணங்களில் ஏதோவொரு இடத்தில் நாமிருவரும் சக பயணிகளாய் ஒரே ரயிலில் பயணித்துக் கொண்டிருப்பதாய் உருவகப் படுத்திக்கொள்கிறேன். நிறுத்தம் எதுவென தெரியும் வரையிலும்தொடர்ந்து பயணிப்போம் என நம்புகிறேன்.உன் வானம் எப்போதும் சூரியஉதயங்களாலும், நட்சத்திரங்களாலும், நிலவொளியாலும், வானவில்களாலும் நிரம்பியிருக்க இந்த பிரபஞ்சத்தை வேண்டி வாழ்த்துகிறேன்.

இன்னும் சில ஒளியாண்டுகள் உன்னுடன் பயணிப்பேன் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

 காதலுடன்,

உன் சக பயணி <3