புதன், 30 அக்டோபர், 2024

Meyyazhagan - மெய்யழகன்


  

மெய்யழகன் படம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பார்வையும் கருத்தும் இருக்கிறது. பலரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டதாகவும் சில காட்சிகளில் அழுததையும், நெகிழ்ந்ததையும் குறிப்பிட்டு இருந்தார்கள் .

டெல்டா மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக ஊர் பெயர்ந்த பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒரே மாதிரியான கதை இருக்கும். நிலம்/வீடு உள்ளிட்ட அனைத்தும் இருந்து பின்பு ஒன்றுமில்லாமல் போனபின் தான் தலையெடுக்க ஊரை விட்டு வந்தவர்கள். அல்லது பூர்வீக சொத்தை சொந்த பந்தங்களிடமோ பங்காளிகளிடமோ ஏமாந்து எழுதிக்கொடுத்துவிட்டு ஒன்றுமில்லாமல் போனபின் புதிய தொடக்கத்திற்காய் ஊர் மாறிப் போனவர்கள் என ஏதோவொரு கதை. எதுவும் இல்லையெனில் சாமர்த்தியம் போதாமல், வைத்துக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் , குடி சூது கடன் என உட்காந்து தின்று சொத்தை அழித்தவர்கள். அல்லது இது எதுவுமே இல்லாமல் கல்விக்ககவோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்காக ஊரை விட்டு வந்தவர்கள்.ஒரு சிலர் கேட்டிருந்தது ஏன் இரவோடு இரவாக கிளம்பி வர வேண்டும் என. அது ஒரு மாதிரியான உள்ளுணர்வு. சொந்த வீட்டை விற்றுவிட்ட பின்னர் அதே ஊரில் நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் வாடகை வீடுகளில் குடியிருந்தாலும் கடைசியாக சென்னை வரும்போது இப்படித்தான் இரவோடு கிளம்பி வந்தோம்.இன்னும் இந்தப் படத்தில் என்னவெல்லாம் relatable எனச்சொல்ல முயன்றால் நிறைய சொந்தக்கதை சோகக்கதை சொல்ல வேண்டிவரும். அது வேண்டாம். அதனை விரும்பவில்லை.  

நாங்களும் இதில் ஏதோ ஓர் வகைமையில் அடங்கிப் போகும் கதையைக் கொண்டவர்கள் தாம். சொந்த ஊருக்கும் எங்களுக்குமான கடைசிக் கண்ணி அப்பா தான் . அவர் போனதும் திரும்ப ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமோ உந்துதலோ எதுவுமே இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில் தனிப்பட்ட முறையில் என்னால் ரொம்பவே உணர்ந்து கொள்ளக் கூடிய படமாக இருந்தது ‘மெய்யழகன்’. ஆனால் கீழத்தஞ்சை டெல்டா பகுதிகளை பிரேம்குமார் அசலாக காண்பித்திருக்கிறாரா எனப் பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். எப்போதோ ஊரைவிட்டு வந்த ஒருவரின் ஊர் சார்ந்த நினைவுகளின் மீட்டுருவாக்கம் தான் மெய்யழகன் திரைப்படம். அவர் மனதில் தஞ்சை பற்றிய நினைவுகளையும் அது சார்ந்த சில கற்பனைகளையும் தனக்கேயுரிய நகரத்து அழகியல் (urban aesthetics) உடன் உருவாக்கி கதையாக்கியிருக்கிறார். வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் , தஞ்சை பெரிய கோவில், நீடாமங்கலம், பேருந்து வழித்தடம் , தெரு, வீடு இவையனைத்தையும் சேர்த்து அங்கே சில கதைமாந்தர்களையும் உலவவிட்டு தான் சொல்லவந்த கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார் (Thanjavur in his mind or his idea of Thanjavur). இந்த அழகியலின் காரணமாகவே திரைப்படத்தில் அதீதமான நாடகத்தன்மை இருந்தாலும், கதையின் போக்கில் அது மறந்துவிடுகிறது. அசலான டெல்டா திரைப்படம் எனக்கேட்டால் இன்னமும் ‘களவானி’ திரைப்படத்தைத்தான் சொல்வேன். 

 சென்னையில் தக்‌ஷின் சித்ரா என்று ஒரு இடம் உண்டு. கிராமங்களும் அங்குள்ள வீடுகளும், பொருட்களும் எப்படி இருக்குமென வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். பணிபுரிகிற நிறுவனத்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் நம்மாட்கள் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிற முதல் இடம் அதுவாகத்தான் இருக்கும். அவர்களும் village experience என்று மகிழ்ந்து போவார்கள். கிட்டத்தட்ட அந்த மாதிரியான அழகியல் தான் மெய்யழகன் திரைப்படத்தினுடையதும். அதனைத் தவிர்த்து படத்தில் ரசிக்கவும் , ஒன்றிப்போகவும் நிறைய விஷயங்கள் உண்டு. ராஜ்கிரணுக்கும் ஜெயப்பிரகாஷுக்குமான தொலைப்பேசி உரையாடல் காட்சி, கார்த்தி அரவிந்த்சாமியிடம் அவர் விட்டுச்சென்ற சைக்கிள் தங்கள் வாழ்க்கையையே மாற்றியது பற்றி சொல்லுமிடம், அதிகம் பேரால் குறிப்பிட்டு சொல்லப்பட்ட கல்யாண மேடையில் தங்கைக்கு கொலுசு அணிவிக்கிற காட்சி என இன்னும் நிறைய. 

   பரபரப்பில்லாத கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்துப் பழகாத நமக்கு ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் நிதானம் ஆரம்பத்தில் பிடிபடவில்லை.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என எல்லாவற்றிலும் அதே நிதானம். கொஞ்சம் கொஞ்சமாய் அதற்குப் பழகி படத்தில் நாம் ஒன்றிப்போகும்போது படம் முடிவடைகிறது. ஜல்லிக்கட்டு காளை தொடர்பான காட்சிகள் தவிர்த்து (வெட்டப்பட்டவை உட்பட) படத்திலிருந்து விலகி நிற்கிற அம்சம் என எதுவுமில்லை. It was so calming at the end , that I forgot to even look at my phone for more than hour. கோவிந்த் வசந்தாவின் இசையும் கமல் குரலில் வருகிற பாடலும் அதனைப் பயன்படுத்தியிருந்த விதமும் அற்புதம். படம் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது இதுவும் ஒருமாதிரியான fantasy திரைப்படம் தான் என. சுற்றியிருக்கிற அத்தனை உறவுகளும் நம் மீதான அன்புடனும் பரிவுடனும் வெள்ளந்தியாகவும் வெளிப்படையாகவும் இருப்பதான காட்சிப்படுத்தல் ஒரு மிகையான ஆனால் அழகான கற்பனை. போலவே ஒருகட்டத்தில் மெய்யழகனும் அருள்மொழியும் ஒரே ஆளின் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தின் வயதின்/பிரதிபலிப்பு என்று தோன்றியது.Meyyazhagan is Arul's past/lost self which he eventually rediscovers through his journey . இரண்டு ஆண்களுக்கு இடையேயான நட்பை கடைசியாக இத்தனை அழகாக திரையில் பார்த்தது கார்த்தியின் ‘தோழா’ திரைப்படத்தில்தான். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அழகான bromance. அதிஷா இதைப் பற்றி மட்டுமே சிறப்பான ஒரு பதிவெழுதியிருக்கிறார். தேடிப்படித்துவிடவும்

 கார்த்தியைத் தவிற இந்தப் பாத்திரத்தை இவ்வளவு சிறப்பா நடிச்சிருக்க முடியுமா தெரியல. பேசுற தொனி உட்பட அப்படியே மாறியிருக்காரு. அரவிந்த்சாமியுடைய நடிப்பு பத்தியும் நாம தனியா  சொல்லத்தேவையில்லை. கடைசில அந்த மனப்போராட்டத்தோட ஊரவிட்டு கிளம்பி வர்ரதெல்லாம் அவ்வளவு அழுத்தம். கொஞ்ச நேரம் வந்தாலும் ஸ்ரீதிவ்யாவுடைய பாத்திரமும் நடிப்பும் கூட அழகா இருந்துச்சு. எனக்கு ரொம்பவே பிடிச்சது. I absolutely love then way how Premkumar writes the leads in his movies. Their awkwardness and how they unravel later is all so poetic and pleasing.

And yes நானும் ஒரு சில இடங்கள்ல அழுதேன் தான். This movie is capable of doing that to you.

மத்தபடி ராவோட ராவா ஏன் கிளம்பி வந்தாங்க, வேற யார்கிட்டயாவது  அவன் யாருன்னு கெட்ருக்கலாமே, கேட்டவ்வுடனே 25 லட்சம் எவன் தருவான் மாதிரியான logical கேள்விகளை பெருசா எடுத்துக்க தேவையில்லை. இந்த மாதிரி உடைக்க ஆரம்பிச்சா எல்லா சினிமாவையும் எல்லா கதைகளையும் சுலபமா உடைச்சிட்டு போகலாம். அது அவசியமில்லைன்னு தோணுது. At least I cannot be that cynical while approaching any work of art and could never ridicule it baseless just for my clout .

 Meyyazhagan is beautiful tale and a much needed breather. Please do watch it if you haven't already. <3 <3 <3