வீடுங்கறது எல்லா மனுஷனுக்கும் அடிப்படைத்தேவைகள்ள ஒன்னு... சொந்தமா ஒரு வீடு கட்டனும் / வாங்கனும்னு ஆசை இருக்கும்... அப்படி இல்லாதவங்க வாடகை வீட்லயோ இல்ல ஒத்திக்கோ வீடு புடிச்சு குடி போவாங்க.குறஞ்சது ஒரு அஞ்சு வருஷமாவது வீடு மாத்த மாட்டாங்க.ஏன்னா அது எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்கே தெரியும். ஆனா எங்க வீட்டுக்கு மட்டும் இது வேற மாதிரி.நாங்க சொந்த வீட்ட விட்டு வந்ததுக்கு அப்புறம் ஒன்னு இல்லனா ரெண்டு வருஷத்துல அடுத்த வீடு மாத்துறதுனு..இப்போ ஒன்பதாவது வீட்டுல இருக்கோம்...
முதல்ல எங்க சொந்த வீடு...காரைக்காட்டுத்தெரு, திருமஞ்சன வீதி இந்த வரிசைல வர்ற நகரமட சந்துல இருந்தது...மூணு கட்டு வீடு அது...ரொம்ப பெருசு...அங்கே விளையாடுனது..அடி வாங்குனது... குடும்ப விழாக்கள்... வீட்டுல இருந்த சேகரி அத்தை, பத்மா அத்தை, உஷா சித்தி, வேம்பு சித்தி, பெரிய ஆத்தா, சின்ன ஆத்தா, எங்க சித்தப்பாவும் அவங்களோட தனி ரூமும், வீட்டு பின்னாடி இருந்த குளுந்தான் குளம், எங்களோட பழைய மோரீஸ் மைனர் கார் , என்னோட முதல் பிரெண்டு சிட்டு, அப்பாவோட செடாக் ஸ்கூட்டர், இப்படி எதையுமே மறக்க முடியாது...எங்க பழைய வீட்டை பத்தி எழுத ஆரம்பிச்சா அதையே தனி பதிவா போடலாம்.அப்போ ரொம்ப சின்ன பையன், ஆரூர் வித்யா மந்திர் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன்.
அங்கிருந்து மடப்புரம் வீட்டுக்கு மாறும்போது ஏன் வீடு மாத்துனோம்னே தெரியாது.
மடப்புரம் வீடு அது பெரிய காலனி.எங்க வீடு முன்பக்கம் மடப்புரத்துல இருந்தது.பின்னாடி காலனி நீண்டு போயி ஜவுளிக்காரத்தெருவுல முடியும்.எனக்கு நெறைய நண்பர்கள் கிடைச்ச இடம் இது. சீனு, செந்தில், சின்ன சுதர்சன், ஜெயந்த், சிவா, தியாகு அண்ணன், மூர்த்தி அண்ணன், சுரேஷ் அண்ணன், ஹேமா அக்கா, சுஜா அக்கா, காஞ்சனா அக்கா...இப்படி நிறைய பேர்.சனி ஞாயிறு ஆனா எல்லாரும் சீனு வீட்டுல போயி கூடிடுவோம் சக்திமான், ஸ்ரீ கிருஷ்ணா, கேப்டன் வியோம் எல்லாம் பாக்குறதுக்கு.எங்க வீட்டுல டி.வி இருந்தது, இருந்தாலும் நண்பர்களோட பாக்குற மாதிரி வருமா... லீவு விட்ட கொண்டாட்டம் தான். கிரிக்கெட், ஒளிஞ்சான் புடிச்சான், லாக் அண்ட் கீ... இப்புடி அது தனி லிஸ்டு... அப்போ ஜெயந்த் நெறைய காமிக்ஸ் படிப்பான்...எங்களுக்கு மாயாவி கதை சொல்றது அவன் தான்...சீனு என்ன விட சின்ன பையன்..ஆனா நல்ல விளையாடுவான்...எனக்கு முதல் முதல்ல கிரிக்கெட் சொல்லித்தந்த குரு அவன் தான்.இப்போ வரைக்கும் நானும் கத்துக்கிட்டே தான் இருக்கேங்குறது வேற விஷயம்...இதைப்பத்தி இன்னொரு பதிவுல சொல்றேன். அப்போ ஜவுளிக்காரத்தெருவுல டி.எம்.சி மருத்துவமனை கட்டிக்கிட்டு இருந்தாங்க...அங்க போயி பெரிய மணல் மேட்டுல குதிச்சு விளையாடுறது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு எங்களுக்கு...
சாரு மேன்ஷன் காலனி...
இதுக்கு அடுத்ததா நாங்க போனது துர்காலயா ரோடு, சாரு மேன்ஷன் காலனிக்கு...37Mஅதான் எங்க வீட்டு நம்பர்.இங்க மொத்தம் 16 வீடு தான். நாங்க இருந்தது மாடியில.இந்த காலனிக்கு வந்து எனக்கு கிடைச்ச முதல் நண்பன் சதீஷ் ராஜா. அவன் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல்ல...நான் வேலுடையார் ஸ்கூல்... அவனுடைய நண்பர்களோட சேர்ந்து நானும் கிரிக்கெட் விளையாட முயற்சி பண்ணுவேன்...ஆனா எப்பவும் போலவிளையாடத்தெரியாம திட்டு வாங்கிட்டு மொக்கையா உக்காந்துடுவேன்.அப்போ எனக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் அவன்கிட்ட தான் சொல்லுவேன். அவனும் நானும் எப்பவும் ஒண்ணா ரெஸ்லிங் (Wrestling) பார்ப்போம்...எப்போதும் ஒன்றாக சுத்துவோம்...இப்பவும் மறக்க முடியாத நாட்கள்....!!!!
காலனில இருந்த ஒவ்வொருத்தரையும் மறக்க முடியாது... அதுல முக்கியமானவர் யாருன்னு பாத்தா எங்க டாக்டர் அங்கிள் (ஜெயசேகர்)... இவர பத்தி பின்னாடி நிறைய சொல்ல வேண்டியது இருக்கு... சே குவேரா , மாசேதுங், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், இவங்களோட புகைப்படத்தை எல்லாம் நான் முதல்ல பாத்தது இவர் வீட்டுல தான்...ரொம்ப எளிமையானவர்...பகுத்தறிவாளர்... எழுத்தாளர்...
பாரதியை அதிகம் விரும்பியவர்...தமிழ் பற்றாளர்...சத்தியமா இந்த மாதிரி ஒரு டாக்டர யாரும் எங்கயும் பார்த்திருக்க முடியாது... இன்னும் நிறைய சொல்லலாம்...
சாரு மேன்ஷன்ல நாங்க ரெண்டு வருஷம் இருந்தோம்...
அதுக்கப்புறம் திருமஞ்சன வீதி, கீழ சன்னதித்தெரு, ராஜாத்தெரு, முதலியார் தெரு, மறுபடியும் சாரு மேன்ஷன், திரும்ப ராஜாத்தெரு இப்படியாக மாறி மாறி...கடைசியா இப்போ கே.டி.ஆர் எஸ்டேட்ல இருக்கோம்.... இதுல ஒவ்வொரு தெருவுலயும் நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க...
திருமஞ்சன வீதியில மகதி, வினோத், ராம்குமார்,விக்ரம்,ராஜேஷ்,....
சன்னதித்தெருவுல பாரத், பாரதி, ராம், மணி....இப்படி நிறைய பேர்.. இதுல அதிகமா செட் சேர்ந்தது ராஜத்தெருவுல தான்... சத்யா தான் எல்லாருக்கும் தலைவன் மாதிரி... அவங்க அப்பா எங்க அப்பாவோட ஒண்ணா பாங்க்ல வேலை செஞ்சாங்க... அதனால நானும் என் தம்பியும் சத்யாவோட அறிமுகமாகி நண்பர்கள் ஆயிட்டோம். என் தம்பி, சத்யா தம்பி சூர்யா, லாலா விக்கி, இவங்கல்லாம் ஒரு க்ரூப். நான், சத்யா, இளையராஜா,ரஞ்சித்,மணி, வடை தினேஷ், ராஜேஷ், கோழி சந்தோஷ் நாங்க எல்லாரும் சேர்ந்தது ரொம்ப பெரிய கூட்டம்... என்னுடைய தெரு நண்பர்களோட அதிகம் சுத்துனதும், ரொம்ப என்ஜாய் பண்ணதும் இங்கே தான்... காகிதக்காரத்தெரு மாரியம்மன் கோவில் பக்கத்துல கிரிக்கெட் விளையாடுறது, கோவில் சாப்பாடு, விடிய விடிய நியூ இயர் கொண்டாடியது, கண் முழிச்சு கம்ப சேவை பார்த்தது, தீமிதி திருவிழா ஆர்கெஸ்ட்ரா நடக்கும்போது ஆட்டம் போட்டு அழும்பு விடுவது... இப்படி நிறைய உண்டு...
இரண்டாவது முறை ராஜாத்தெருவிலும், சாரு மேன்ஷனிலும் இருந்தபோது தான் என்னுடைய பெரும்பாலான கல்லூரி நாட்களை கழித்தது... எங்கள் வீட்டிற்கு எப்போதும் என் நண்பர்கள் வந்தபடி இருப்பார்கள்... தேர்வு நேரத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும்.... விடிய விடிய படிக்க முயற்சி பண்ணுவோம்... ஆனா படிச்சதை விட டீ போட்டு குடிச்சதுதான் அதிகமா இருக்கும்....
ஒவ்வொரு முறை வீடு மாத்தும்போது அம்மா படும் பாடு தான் பாவமாக இருக்கும்...எல்லாத்துலயும் அடுக்கி, எடுத்து வைத்து, பெட்டியில் கட்டி, சாக்கில் கட்டி, புது வீட்ல போயி திரும்ப எல்லாத்தையும் எடுத்து வச்சு, அடுக்கி....அப்பப்பா... இப்போ நினைச்சாலும் முடியல....எங்களுக்கு வீடு மாத்தி மாத்தி பழகிப்போய் அதுல ஒரு புரோபஷ்ஷனல் டச்சே வந்துடுச்சு...ஒவ்வொரு முறை வீடு மாத்தும்போதும் பொருட்களை குறைத்து கழித்து கட்டி விடுவோம்...எப்போ அடுத்த வீடு மாறப் போறோம்னு தெரியல... எல்லார் மாதிரியும் எதிகாலத்துல வீடு கட்டிடலாம்னு ஒரு கனவு இருக்கு... பார்க்கலாம்...!!!
உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்... பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.... - சுதர்
கூடிய விரைவில் நீங்கள் சொந்த வீடு கட்டுவதற்கு எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹாய் சுதர்சன், நம்ம ஊர்க்காரர் அறிமுகம் ஆனது ரொம்ப சந்தோசம். எனக்கு திருமஞ்சனவீதிதான். வினோத், ராம்குமாருக்கு என்னைய நல்லா தெரியும். உங்களை நான் பார்த்திருப்பேனான்னு தெரியல. வீடு மாறிகிட்டே இருக்குறது ரொம்ப கஷ்டம்தான். சொந்த வீட்டுக் கனவு மீண்டும் அதிவிரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாடகை வீடுன்னாவே மாறுவதும், அடுக்குவதும்,பிரிப்பதும்,கொடுமை தான்.ஆனால், நிறைய அனுபவம் கிடைக்கிறது.10 வருடங்களில் நாங்கள் இப்போது இருப்பது 6ஆவது வீடு. இனிமேல் சொந்த வீட்டிற்கு தான் குடி போகணும் என்று சபதமே போட்டு இருக்கிறோம்.பார்க்கலாம்.
பதிலளிநீக்கு