வியாழன், 19 ஏப்ரல், 2012

மூங்கில் மூச்சு - இது திருநவேலி காவியம்லா

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் எழுத நேரம் கிடைத்தது.முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்து முடித்துவிட்டு அவற்றைப் பற்றி எழுதலாம் என எண்ணியிருந்தேன்.முதலில் படித்து முடித்த சுகா -வின் 'மூங்கில் மூச்சு'  பற்றிய என் அனுபவம்...

மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே அவர்களின் பெற்றோர்,கல்வி, வளரும் சூழல்,நண்பர்கள் என பல காரணிகளின் அடிப்படையில் அவரவர்களின் விருப்பங்களும் ரசனைகளும் மாறுபடும்.ஆனால் சில விஷயங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக எல்லோருக்குமே பொதுவானதாக அமைந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு விஷயம் தான் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மேல் நாம் கொண்டிருக்கும் 'ஊர்ப்பாசம்'. நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... சமுதாத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி..ஒரு நிமிடம் நமக்கு மிகவும் பிடித்த இடம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் அது நிச்சயம் நம் சொந்த ஊராகத்தான் இருக்கும்.

ஏனெனில் நம் ஊரின் ஒவ்வொரு தெருவிற்குப் பின்னும், ஒவ்வொரு இடத்திற்குப் பின்னும் நமக்கு ஒரு மறக்க முடியாத கதை இருக்கும்.ஒரு இனிமையான நிகழ்வு இருக்கும்.ஒரு மறக்க முடியாத மனிதர் இருப்பார். முதன்முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகிய தெரு, முதன்முதலில் குடிபெயர்ந்த வாடகை வீடு, வெயில் மறந்து விளையாடிய மைதானங்கள், பதின் பருவ காதலிக்காக காத்திருந்த தெருமுனை, திருவிழாக் காலங்களில் தூக்கம் மறந்து சுற்றித்திரிந்த வீதிகள், நண்பர்களோடு கும்மாளமிட்ட ஆற்றங்கரை, நீச்சல் பழகிய கோவில் குளம், பால்வாடியிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம்,வீட்டுக்கு தெரியாமல் படம் பார்த்த சினிமா கொட்டகை, இப்படி நினைத்துப் பார்த்து நெகிழ்ந்து போக எத்தனையோ உண்டு.

அப்படி தான் பிறந்து வளர்ந்த ஊரையும், ஊர் மக்களையும் பற்றி மண் மனம் மாறாமல்...ரசித்து..சிலாகித்து.. 'சுகா' எழுதியது தான் இந்த மூங்கில் மூச்சு. சுகா - சுத்தமான 'திருநவேலி'க்காரர்.இப்போது வசிப்பது சென்னையில்.திரைத்துறையில் பணிபுரியும் இவரின் முதல் படமான 'படித்துறை' விரைவில் வெளிவர இருக்கின்றது.பாலுமகேந்திரா பட்டை தீட்டிய வைரங்களுள் இவரும் ஒருவர்.வேணுவனம் என்ற பெயரில் ஒரு வலைப்பூவும் எழுதிவருகின்றார்.வேணுவனம் - இது அவரது வலைப்பூவின் சுட்டி.இவரது 'மூங்கில் மூச்சு' விகடனில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பினைப் பெற்று, பின்பு விகடன் பிரசுரத்திலேயே புத்தகமாக வெளிவந்தது.


திருநெல்வேலி என்றாலே அல்வா,அறுவா,வாலே போலே நெல்லைத் தமிழ் என்று நமது தமிழ்த்திரையுலகம் அடையாளப் படுத்தியிருக்கின்ற வேளையில் நெல்லைத் தமிழ் மணக்க சுகா ஊர்ப் பெருமைகளை எடுத்தியம்புகையில் நமக்கு ஆச்சரியம் மிகும் என்பது உறுதி.வெறுமனே ஊர்ப்பெருமை மட்டும் பேசாமல் அந்த ஊரில் தன் வாழ்வில் சந்தித்த/கடந்து சென்ற பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அழகுற சொல்லியிருப்பது தான் மூங்கில் மூச்சின் தனிச்சிறப்பு.எப்படி அமரர் 
திரு.சுஜாதா அவர்களின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’-இன் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும் நம்மால் இன்றளவும் மறக்க முடியாதோ..அதேபோல் கனேசண்ணனையும், குஞ்சுவையும், வரதராஜன் மாமாவையும்,சுந்தரம் பிள்ளை பெரியப்பாவையும் நம்மால் மறக்கவே முடியாது.

தாமிரபரணி (தாம்ரவருணி) பெருமையோடு தொடங்கும் முதல் அத்தியாயம் அப்படியே ஒரு நெடும் பயணமாய்த் தொடங்கி பாலுமகேந்திரா, எம்.ஜி.ஆர்-சிவாஜி;ரஜினி-கமல் கால ரசிகர் மன்ற போட்டிகள்,ஆங்கிலம் படுத்திய பாடு, இலங்கை வானொலியில் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த பாடல்கள், பாடல்களுக்கு பின்னாலிருந்த காதல்கள், டூரிங் டாக்கீஸ் சினிமா, திருவிழாக்கால தேவதைகள் துரத்தல்,நெல்லைத்தமிழ், ஐஸ்பால் விளையாட்டு,சென்னையில் வீடு தேடியலைந்த கதை,கேசட்டில் விரும்பி பதிந்த பாடல்கள், நண்பன் குஞ்சு-வின் ரகளைகள்,இளையராஜாவின் இசை, ரிக்‌ஷாக்கார செல்லப்பா மாமா,பாட்டுக் கச்சேரிகள்,குற்றால சீசன்,நெல்லையின் கிளப் கடைகள் (உணவகங்கள்) என பலவாறாகப் பயணித்து காலங்களைக் கடந்து தற்போதைய சுகா-வோடு நம்மை இணைக்கின்றது.

நெல்லை வட்டார வழக்கையும், காலத்தினால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும், நமக்குத் தெரியாத சென்ற தலைமுறை மனிதர்களையும், இசை-உணவு-உடை என பல்வேறு 
தளங்களில் அவர்களின் விருப்பங்களையும், மிக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார் சுகா.மெலிதான நகைச்சுவை இழையோடும் 
நடையைக்கொண்டிருந்தாலும் அங்கங்கே நெஞ்சை உலுக்கும் சோகங்களையும் தரத் தவறவில்லை இந்த ’மூங்கில் மூச்சு’.
 
மொத்தத்தில் 'மூங்கில் மூச்சு' படித்து முடித்தவுடன், "சே... நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கே....எத்தனயோ வித்தியாசமான மனுஷங்க இருக்காங்களே.... கண்டிப்பா நம்ம ஊரப் பத்தியும்..மக்களைப் பத்தியும் நாமளும் எழுதனும்யா " என்று எண்ண வைப்பது தான் சுகாவுக்குக் கிடைத்த வெற்றி.திருவாருர்க்காரனான எனக்கு திருநெல்வேலியைப் பிடிக்கவைத்த/ரசிக்கவைத்த  இந்த 'மூங்கில் மூச்சு'  நிச்சயமாக ஒரு தவறவிடக்கூடாத புத்தகம்.

புத்தகம்: மூங்கில் மூச்சு
ஆசிரியர் : சுகா
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை : ரூ.95 



1 கருத்து :