திங்கள், 15 ஏப்ரல், 2013

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி



இப்போது இப்படி இருக்கும் ஒரு விஷயம் ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கும் ?? இந்த கேள்வி பொதுவா எல்லோருடைய மனங்களிலும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்கும். சிலருக்கு பழசைப் பேசுவது பிடிக்காது. ஏனைய சிலருக்கு பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அசைபோடுவதில் தனி ஆனந்தம்…! இந்த உணர்வை தான் ஆங்கிலத்தில் ’நாஸ்டால்ஜியா’ (Nostalgia) என்கிறோம். இணையான தமிழ் வார்த்தை எதுவும் தட்டுப்படவில்லை.

இந்த ‘நாஸ்டல்ஜியா’வுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.தங்கள் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களையும், இளமைக் காலத்தில் வசித்த இடங்களையும் நினைத்துப் பார்த்து அசை போடுவது யாருக்குத் தான் பிடிக்காது. இந்த புத்தகமும் கிட்டத்தட்ட தில்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த ஒரு தமிழரின் மறக்கவியலா அனுபவங்களும், கடந்து வந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களும், பயணங்களும் நிறைந்த ஒரு நாஸ்டால்ஜிக் புத்தகம் தான்.

ஏற்கனவே சுகா அவர்களின் ’மூங்கில் மூச்சு’ மற்றும் ’தாயார் சன்னதி’ ஆகிய புத்தகங்களை அவை தந்த உணர்வுகளுக்காகவே மிகுந்து ரசித்தவன் நான். சுகா அவர்கள் தனது தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பின்பே புத்தகத் திருவிழாவில் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’-ஐ வாங்கலானேன். எழுதியவர் திரு.பாரதி மணி அவர்கள். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்ததே S.K.S.மணி-ஆக இருந்தவர் ‘பாரதி’ மணி ஆகக் காரணம். பாபா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரை பார்த்தது நினைவிருக்கலாம் உங்களுக்கு.
உயிர்மையில் பல்வேறு காலங்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் ‘பாரதிமணி அவர்களைப் பற்றி அவருடைய நண்பர்களின் எண்ணங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த புத்தகம்.

இன்று உலகறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரோடு பாரதி மணி அவர்கள் சக நடிகராக நடித்த இன்டோ-ஆங்கிலத் திரைப்படம் ‘தி எலக்ட்ரிக் மூன்பற்றியது முதல் கட்டுரை.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது இந்தத் திரைப்படம். அந்த எழுத்தாளர் – அருந்ததி ராய் அவர்கள்…!! நாற்பத்தைந்தே நாட்களில் அட்டகாசமான திட்டமிடலோடு தயாரான இந்த திரைப்படத்தின் உருவாக்கம் நிச்சயமாக வியப்பூட்டுகின்றது

பாரதி மணி அவர்கள் பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று வந்திருப்பதால் பல பயணங்களில் எதிர்பாராதவிதமாக பல பெரும்புள்ளிகளை எதிர்கொண்டிருக்கிறார். உதாரணம்: அன்னை தெரசா அம்மையார், முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள்...! இப்படி ஆச்சரியப்படுத்துகின்றது இந்தப் பட்டியல்.

நாடகங்களைப் பொருத்தவரை S.V.சேகர், க்ரேஸி மோகன், Y.G.மகேந்திரன் ஆகியோர் வாயிலாக மட்டுமே மேடை நாடகம் என்ற விஷயத்தைக் கேள்விப்படும் இந்த தலைமுறையைச் சேர்ந்த நமக்கு டில்லி வாழ் தமிழர்கள் மேடை நாடகங்களுக்குத் தந்த முக்கியத்துவமும் அங்கீகாரமும் பற்றி பாரதி மணி அவர்கள் குறிப்பிடும்போது வியப்பேற்படுவதை தவிர்க்க முடியவில்லை. நாடகங்களின்பால் அவர் கொண்ட ஈடுபாடும் ,அதன் பொருட்டு ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியவை.

காருக்குறிச்சியாரையும், திருவாவடுதுறை பிள்ளைவாள் அவர்களின் நாதஸ்வர வாசிப்பை சிலாகிப்பதாகட்டும்... செம்மீன் படத்துக்கு எப்படியாவது தேசிய விருது கிடைத்துவிடவேண்டுமென பிரயத்தனப்பட்டதாகட்டும்....வங்கத்தந்தை முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மகள், கனவரோடு ரகசியமாய் இந்தியாவில் தங்கியிருந்தபோது அவர்களுக்காக ஹீல்ஸா மீன் கொண்டு சென்றதாகட்டும்....!! அத்தனை நிகழ்வுகளையும் அவர் விவரித்திருக்கும் நடை அலாதியானது. அத்தனை ஆச்சரியங்கள்...சுவாரஸ்யங்கள். எழுத்தாளார் சுஜாதா, நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்,இசை விமர்சகர் சுப்புடு,எதேச்சையாக கூட அமர்ந்து தேனீர் அருந்தும் ஆங்சாங் சூகி (!!), நாடக விழாவுக்கு தலைமை தாங்கிய பிரதமர் நேரு அவர்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை விவரணைகள். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ‘நிகாம்போத் சுடுகாடு’ கட்டுரை. மரணமும் மரண நிமித்தமுமாய் உதிர்த்திருக்கின்ற வார்த்தைகளைத்தும் அத்தனை நிதர்சனமானவை...உணர்வுப்பூர்வமானவை.

பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்:பாரதி மணி
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ.100

உயிர்மை தளத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சிலவற்றின் சுட்டிகள் கீழே:

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக