உலகிலேயே
இன்றளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட ’ஒன்று’ அல்லது ’ஒருவர்’ அல்லது ’ஒரு கருத்து’ இந்த ’கடவுள்’ என்பதாகத் தான் இருக்க முடியும். ஒவ்வொரு
தனிப்பட்ட மனிதனுக்கும் கடவுள் என்பது அவனது நம்பிக்கையின் அடிப்படையில் மாறுபடுகின்றது.
இந்த நம்பிக்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சிறுவயதிலிருந்து ஊட்டப்பட்டதாக இருக்கலாம்.
அல்லது நாமே வளர்த்துக் கொண்டதாகவும் இருக்கலாம்.மேலும் பலருக்கு இந்த’கடவுள்’ என்ற நம்பிக்கை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலும் இருக்கலாம்.
- உண்மையாகவே ‘கடவுள்’ என்றால் என்ன ?
- எது கடவுள் என்று நம்பப்படுகின்றது ?
- இன்ன மதத்திற்கு இன்ன கடவுளென்று நிர்ணயித்தது யார் ?
- கடவுளுக்கு உருவம் உண்டா ? இல்லையா?
- இந்த பிரபஞ்சம் தோன்றி, இயங்கிக் கொண்டிருப்பதற்கு கடவுள் தான் காரணமா ?
- உயிர்களைப் படைத்தது கடவுளா ?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தத்துவரீதியாகவோ
அல்லது அறிவியல்ரீதியாகவோ ஒரு முழுமையான விடையை யாரும் அளித்துவிடக்கூடுமா என்ன ??
நிச்சயமாக முடியாது..!!
முடிந்தவரையில்,
நம்மிடமுள்ள நிரூபிக்கப்பட்ட உண்மைகளை ஒரு புறமும் அனுமானங்களை மற்றொரு புறமும் வைத்துக்கொண்டு
வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கலாமேயன்றி இன்னது கடவுளென்று வரையறுப்பது கடினமே.
சரி… கடவுள் இருப்பதாகவே வைத்துக்
கொண்டால் மனிதர்களாகிய நமக்கு அதனால் என்ன பலன் ?
பொதுவாகவே
நம்மில் பெரும்பாலானோர் மனதளவில் மென்மையானவர்கள். என்னதான் தேர்வுக்கு விடிய விடிய
படித்தாலும் வீட்டை விட்டுக் கிளம்புமுன் கும்பிடு போட்டு வேண்டிக்கொண்டு செல்ல ஒரு
கடவுள் தேவைப்படுகின்றார். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
என்று தெரிந்தாலும் “எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்று ’கடவுள் மீது பாரத்தை’ப் போடுகிறவர்கள் நாம்.
”நமக்கும் மேலே சக்தி படைத்த ஏதோ ஒன்று/ ஒருவர் இருக்கின்றார்.அவர் நம்மை வழிநடத்துவார்” என்கிற நம்பிக்கை ஏதோவொரு வகையில் ஒவ்வொருவருக்கும் தேவையாயிருக்கின்றது.நமது பொறுப்புகளையும் மனச்சுமையையும் குறைத்துக்கொள்ள இந்த நம்பிக்கை உதவுகின்றது.
நிற்க…
இப்படி
எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம்மென்றும்… அவரை மீறி இங்கு எதுவுமில்லை என்றும்
மனிதகுலம் கண்மூடித்தனமாக நம்பியிருந்தால் அறிவியல்ரீதியான இந்த முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்காது
அல்லவா ?
நமக்குத்தான்
எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்லித் தந்திருக்கிறார்களே…! முன்பே சொன்னது போல்
வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து… கேள்விகளை எழுப்பினால் நமக்கு குத்துமதிப்பாய் தெளிவு
(என்ன ஒரு முரண்..!!) பிறக்கலாம்.
விஷயத்துக்கு
வருகின்றேன்…
என்னைப்
பொருத்தவரையில் 2013-ம் ஆண்டில் நான் படித்த புத்தகங்களிலேயே ஆகச்சிறந்ததாக சுஜாதாவின்
‘கடவுள்’ தொகுப்பைச் சொல்லுவேன். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு
வார/மாத இதழ்களில் வெளியான கடவுள், மதம், பிரபஞ்சம், உயிரின் தோற்றம்.. ஆகியவை தொடர்பான
கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். ஒட்டுமொத்தமாய் ஒரே மூச்சில் படித்து முடிப்பது
கொஞ்சம் கடினம் தான்.
ஆனாலும்
நீங்கள் கொஞ்சம் அறிவியல் விரும்பியாய்.. கேள்விப் பிசாசாய் இருக்கும்பட்சத்தில் இது
உங்களுக்கு செம்ம ட்ரீட்…!! நிச்சயமாக நவீன அறிவியலின் கோணத்தில் கடவுள்...மதம்…பிரபஞ்சம்
ஆகியவை குறித்த ஒரு பருந்துப் பார்வை கிடைக்கும்.
முடிவாக - ‘உளன் எனில் உளன் அவன் எனில் அவன்’..!!
கடவுள்
– சுஜாதா,
உயிர்மை
பதிப்பகம்
272
பக்கங்கள் – விலை ரு.200/-
ஆன்லைனில்
வாங்க: இங்கு செல்லவும்
ஒரு கேள்விக்கு பதில் தெரியாது என்பதால் அதற்க்கு விடையே இருக்காது என்றோ, அந்த கேள்வியே அர்த்தமற்றது என்றோ ஆகி விடாது. என்னதான் விஞ்ஞானத்தில் தியரி மேல் தியரி வந்தாலும் அதையடுத்து "இது ஏன்?" என்ற கேள்வி நின்று கொண்டே தான் இருக்கும், ஒரு போதும் அகலாது.
பதிலளிநீக்குவிஞ்ஞானம் என்பது பொருட்களின் பண்பை பற்றி அறிவது, இதை வைத்து இதை உருவாக்கிய காரணியைப் பற்றி அறிந்து விட முடியும் என்பது எப்படி என்று தான் புரியவில்லை. மனம், புத்தி, உயிர் இதற்க்கெல்லாம் விளக்கம் என்ன, விஞ்ஞானத்தை வைத்து இவற்றை உருவாக்க முடியுமா என்றும் யோசிக்க வேண்டும். உலகம் உருவான பின்னர் ஒரு கட்டத்தில் சிந்திக்கத் தெரியாத ஜடம் மட்டுமே இருந்திருக்கிறது, அதன் பின்னர் சிந்திக்கத் தெரிந்த உயிர்கள் உருவானது எப்படி?
ஜெய தேவ் சார்...செம்மை கேள்வி.. அப்டின்னு சொல்லிட்டு என்னால ஒதுங்கிப் போயிடமுடியாது... ஆனாலும்...மனம்,உயிர் ஆகியவை பற்றிய மேலோட்டமான விளக்கமும் சரியான பதிலாக இருக்காது. எனக்குத் தெரிந்தவரையில் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்கு‘சிந்தித்தல்’னு நீங்க எதைக் குறிப்பிடுறீங்கன்னு தெரியல. அறிவியல்ரீதியாகவே வருவோம்.உயிர்கள் ஒரு செல் உயிர்களாய் இந்த உலகத்தில் தோன்றியதிலிருந்தே அவைகளின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொண்டு இந்த உலகில் தப்பிப் பிழைத்திருக்கத் தேவையான..அல்லது தாம் இயங்கத் தேவையான அறிவைக் கொண்டிருந்தன. பரிணாம வளர்ச்சின்னு நாம சொல்ற உடல் ரீதியான வளர்ச்சியை மட்டுமல்ல உயிர்களின் இயக்கத்துக்கும், தேவைகளைத் தீர்த்துக் கொள்வதற்குமான அடிப்படை அறிவின் வளர்ச்சியையும் தான்.பேசத்தெரியாத ஆதிமனிதன் கூட அனுபவத்தின் அடிப்படையில் தான் எல்லா விஷயங்களையுமே கற்றுக் கொண்டிருக்கின்றான். இந்த கற்றல் மற்றும் அனுபவம் தான் நீங்கள் குறிப்பிடுகிற சிந்தனை.