சனி, 10 மே, 2014

புனைவின் நிழல் - மனோஜ்

izquotes.com
பொதுவாவே படிக்கிறது ஜாலியான விஷயம்… இன்னது தான்னு இல்லாம கண்டதையும் படிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பகுத்து பார்த்து ரசிக்கக் கத்துக்குறதெல்லாம் வேற கத. ஆனாலும் வாசிக்கிறது சுகம் தான்… புனைவுகள்.. கட்டுரைகள்.. சுய(சொறிதல்)சரிதை… அறிவியல்… கவிதை… எல்லாமே வெவ்வேற உலகம். நம்ம கண்ணைக் கட்டி காலத்துக்கு நடுவுல கடத்திட்டுப் போகக்கூடிய வல்லமை புனைவிலக்கியத்துக்கு இருக்கு. ஒரு சிறுகதைன்னு எடுத்துகிட்டா அதுல வர பாத்திரங்கள் (சட்டி பானைய சொல்லல).. கதை நிகழ்கிற இடம்.. சூழல்… தனிமனிதர்களின் நியாயங்கள்.. அவங்க கொடுக்குற தீர்வுன்னு பல விஷயங்கள் இருக்கு. ஒரு சிறுகதையையோ நாவலையோ அல்லது எந்தவொரு புனைவிலக்கியத்த நாம வாசிக்கும்போதும் ஒரு வெள்ளை கேன்வாஸ்ல கோட்டோவியத்துல தொடங்குற மாதிரி ஆரம்பிச்சு கடைசில அந்த கதை முடிவை அடையும்போது ஒரு அழகான (சில சமயம் சொதப்பலான/மொன்னையான) ஓவியமா நம்ம கற்பனைல நிறைவடையுது.


ஃபேண்டஸின்னு (fantasy) தனியா ஒன்னும் கெடையாதுங்குறது என்னுடைய எண்ணம். ஃபிக்‌ஷன் எல்லாமே ஃபேண்டஸி தான். உங்க கற்பனைக்குள்ள நீங்க உருவாக்கிக்குற உலகம் தான்.அந்த களத்தை உங்களுக்கு ஒரு எழுத்தாளர் அமைக்குறாரு; அவ்வளவே.ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ திரைப்படமா எடுக்கப்படும்போது மக்கள் பெரும்பாலும் புத்தகத்துக்கு நிகரா படம் இல்லன்னு தான் சொல்லுவாங்க. ஏன்னா உங்க மனசு ரொம்பவே பெரிய கேன்வாஸ்..எல்லைகள் கிடையாது.. அந்த உலகத்துல உலவுறவங்க எப்படி இருப்பாங்கன்றத நீங்கதான் தீர்மானிக்கிறீங்க. தங்களுடைய தனிப்பட்ட கற்பனைய வேறொரு வரையறைக்குள்ள அடைச்சு காட்சிப்படுத்துறத பெரும்பாலாவர்கள் விரும்புரதில்ல. ஆனாலும் காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற இடம் தான் புனைவின் உச்சம். அங்கதான் எழுத்தாளர் ஜெயிக்கிறார்.


எதுக்கு இவ்ளோ பீடிகைன்னு கேட்டீங்கன்னா அதுக்குக் காரணம் ஒரு புத்தகம் தான். ஒரு (அ)சாதாரணமான சிறுகதைத் தொகுப்பு.சத்தியமா இந்த மாதிரி ஒரு அனுபவத்தை எதிர்பார்த்து நான் இந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கல.’புனைவின் நிழல் ’ மனோஜ் எழுதுனது. மொத்தம் 15 சிறுகதைகள். Versatilityன்னு ஒரு வார்த்தை இருக்குல்ல… அதுக்கு சரியான உதாரணம் இந்த தொகுப்பு தான். ஒன்னு ரெண்டு கதைகள் மட்டும் கொஞ்சம் வெகுஜன இதழ் பாணி ‘கடைசி வரி பன்ச்’ கதைகள். மத்ததெல்லாமே ஒவ்வொன்னும் ஒரு உலகம்… ஒரு டைம் மெஷின்… ஒரு Black Hole… எப்புடி வேணாலும் சொல்லிக்கலாம். 

‘அட்சர ஆழி’ – முதல் பால் சிக்ஸர். நான் ரெண்டாவது பத்தியோட முடிவுல சொன்ன மாதிரி //காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற // வித்தைக்கு ஒரு சின்ன உதாரணம். கதையே ‘எப்படி விளங்கவைப்பது என்பதுதான் எனக்குள்ள பிரச்சனையே’ இப்படித்தான் தொடங்குது. J

ஏவாளின் விலா எலும்பு, 857, மஹல்… இந்த மூன்று கதைகளையும் வரலாறு அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்து புனைகதைகள்னு சொல்லலாம். Trust me… கண்டிப்பா அசந்து போவீங்க. ஆதாம் ஏவாள் காலத்துக் கதையாகட்டும்… மொகலாய மன்னர்கள் கதையாகட்டும் வர்ணனைகளும் வார்த்தைகளும் உங்களைக் கட்டிப்போடும்.

றெக்கை.. பால்… சர்ப்பவாசனை.. இந்த கதைகளெல்லாம் ஒரு மாதிரி trance ஃபீலிங் தந்துச்சு எனக்கு. வாசனையையும்...வெம்மையும்… வெறுமையையும்.. தனிமையையும்… வார்த்தைகளில் கடத்திவிட முடியுமா என்ன..?? வாவ்…!!! எனக்கு ரொம்ப நாளாவே இந்த ‘பின்நவீனத்துவம்’னா என்னன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ராஜேஷ் அட்டகாசமா ஒரு விளக்கம் (மினி தொடர்) எழுதிருந்தாரு (கட்டுரை இங்கே). கொஞ்சமா புரிஞ்சாலும் அதை படிச்சப்புறமும் என்னால சரியா ரிலேட் பண்ணிக்க முடியல. மனோஜின் கதைகள் postmodernismனா என்னன்னு ஓரளவுக்கு உணர்த்துச்சு.

இந்தத் தொகுப்புலேயே என்னுடைய personal favorite-னா அது ‘கச்சை’ சிறுகதை தான். அதிலிருக்குற அமானுஷ்யமும்… அழகும்… ஊடுபாவாக சொல்லப்படுற சாதீய/சமூகக் கொடுமைகள பத்தின தகவல்களும்… நிச்சயமா இதுவொரு க்ளாசிக்னு சொல்லலாம். ‘அச்சாவோட சிச்சாமணி’ன்னு ஒரு கதை இருக்கு பன்னிரெண்டாவதா இருந்தாலும் நீங்க இத கடைசியிலேயே படிக்கலாம். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டப்புறம் மனோஜ் தந்த ஸ்வீட் பீடா. நெஜம்மாவே விழுந்து பொரண்டு சிரிச்சேன்.

மொத்தத்துல புனைவு விரும்பிகளுக்கு/சிறுகதை ரசிகர்களுக்கு இது ஒரு செம்ம வெரைட்டியான விருந்து. கண்டிப்பா படிச்சுடுங்க.

புனைவின் நிழல்
ஆசிரியர்-மனோஜ்
உயிர்மை பதிப்பகம்
விலை – ரூ.70
ISBN:81-89912-00-3


ஆன்லைனில் வாங்க : இங்கு க்ளிக்கவும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக