ஞாயிறு, 30 நவம்பர், 2014

காவியத்தலைவன்




நேத்து காவியத்தலைவன் பாத்துட்டேன். வழக்கமா வசந்தபாலன் படங்களில் இருக்கிற சோகமோ...இருன்மையோ இல்லாம ரொம்ப கொண்டாட்டமா கலர்ஃபுல்லா இருந்துச்சு படம். என்னுடைய தாத்தா அந்த காலத்துல ஏகப்பட்ட மேடை நாடகங்கள்ல நடிச்சவரு... நிறைய கதைகள சொல்லுவாரு... சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்கள்.. நாடக நடிகர்களுடைய வாழ்க்கைமுறை... அரிதாரம் பூசிக்கிறதுல தொடங்கி... மண்ணெண்ணை வெச்சு தேங்கா நார போட்டு தேய்ச்சு வேஷங்கலைக்குற வரைக்கும்...நெறைய சொல்லிருக்காரு. அந்த வெத்தலை குதப்பலோட கண்ல கொஞ்சம் போதையோட பேசுகிற ஸ்டைலாகட்டும்... மல் துணி சட்டையாகட்டும்... நான் கேள்விப்பட்ட விஷயங்கள் எல்லாமே படத்துல Close to reality காமிச்சுருக்காங்க. அதப் பத்தி எழுத ஆரம்பிச்சா இன்னும் எழுதிட்டே போலாம்.

அப்புறம் நாடக நடிகர்களுக்கு கெடைச்ச சமூக அங்கீகாரம் பத்தி படத்துல பாதி தான் (இராஜ பார்ட் மட்டும்) வருது.இது இல்லாம ஸ்த்ரீ பார்ட் போடுறவங்க.. கள்ளபார்ட் வேஷம் கட்டுனவங்க.. அவங்கள மக்கள் நடத்துன விதம் (ஸ்த்ரீ பார்ட் -கேலி, கள்ள பார்ட் - வெறுப்பு) இதெல்லாம் தாத்தா சொல்லி கேட்டுருக்கேன்.ரொம்ப பழைய படங்கள் மேல ஆர்வமேற்பட்டதுக்கு என் பெரிய மாமாவும் தாத்தாவும் தான் காரணம்.

படத்துல சொல்லப்பட்டிருக்குறது எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் அவர்களுடைய கதைன்னு சொன்னாலும்... சித்தார்த்துடைய அந்த வாழ்ந்து கெட்ட பாத்திரம் எனக்கு தியாகராஜ பாகவதரைத் தான் ஞாபகப் படுத்துச்சு.அவருடைய Rise and fall மட்டும் ஓரளவு ஒத்துப் போகுது.. ஆனா சுதந்திரப் போராட்ட பின்னணி..சினிமா வாழ்க்கை இதிலெல்லாம்..MKT வாழ்க்கை irrelevant.

பிருத்விராஜுங்குற நடிப்பு ராட்சசனுக்கு முன்னால சித்தார்த் டல்லடிச்சு தான் போறாரு.என்னவோ என்னால சித்தார்த் கேரக்டரோட ஒத்துப்போகவே முடியல...!அந்த ஜமீந்தார் மகளுடனான காதலாகட்டும்..அவளுடைய மறைவுக்குப் பின்னான சோகமும் அழுகையுமாகட்டும்.. சித்தார்த்துடைய நடிப்பு கொஞ்சங்கூட என்ன பாதிக்கல. பிருத்விராஜ் அடிச்சு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பட்டைய கெளப்பிருக்காரு.வேதிகாவைப் பத்தியும் சொல்லனும்..ரொம்ப இயல்பான...அழகான நடிப்பு. வெச்ச கண் வாங்கல :) :) அழ...கி..!


செட்கள், எழுத்து, ஒப்பனைன்னு எல்லா விஷயத்தையும் பாத்துப் பாத்து பண்ணிருக்காங்க.ஆனாலும் வசனங்கள் எனக்கு திருப்தியில்ல...! :( ராஜேஷ் சொல்லிருக்க மாதிரி ரொம்பவே சாதாரணமான வசனங்கள்.இதுக்கு ஜெயமோகன் தேவையில்ல.அப்புறம் இதுவரைக்கும் இல்லாத வகைல.. இது ரஹ்மான் இசைன்னு துருத்திகிட்டுத் தெரியாம.. நம்மள distract பண்ணாம (ARR எப்பவும் அப்படியில்ல..ஆனாலும் இசை தனியா தெரியும்) படத்தோட ஒன்றி பாக்கமுடிஞ்சுது. (ஏற்கனவே இந்தப்படப் பாடல்களுக்கு நான் அடிமை) பாட்டா கேக்கும்போது கொஞ்சம் போரடிச்சது எல்லாம் படத்துல ரசிக்குற விதமாதான் இருந்துச்சு.



ஒரு துறைல ஒரே சமயத்துல நுழையுற ரெண்டு பேரு.. அதுல ஒருத்தருக்கு கிடைக்குற புகழ்.. அங்கீகாரம்... இதனால இன்னொருத்தருக்கு வர கோபம்.. வெறுப்பு ..வஞ்சம்...ego. இதையெல்லாம் ஏற்கனவே ‘இருவர்’ல கொஞ்சம் பாத்துருக்கோம். நாசருடைய கேரக்டர் வேற அதையே ஞாபகப்படுத்துச்சு.நாசர்.. பொன்வண்ணன்...இவங்களுக்கு நாம சர்டிஃபிகேட் தரத்தேவையில்ல.பட்டாசு performance.படம் முழுக்க நெறைய டீட்டெய்லிங் இருந்தாலும்...முடிவு மட்டும் ஏனோ திருப்தியில்ல. கண்டிப்பா பாக்கலாம்.பழைய நாடகங்கள் பத்தி கேள்வியே படாதவங்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாதான் இருக்கும்.

கீழே: ராஜேஷ் எழுதுன ‘காவியத்தலைவன்’ விமர்சனம். இன்னபிற விவரங்களோட விரிவான விமர்சனம்.கண்டிப்பா படிங்க.

http://karundhel.com/2014/11/kaaviya-thalaivan-2014-tamil-review.html

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஜில் கதைகள் - காஃபி வித் காதல்


ஃபேஸ்புக்ல நம்ம தோஸ்த் ஒருத்தரு இப்டி ஒரு ஸ்டேட்டஸ் போட்ருந்தாரு

சரி நாமளும் ஒரு ட்ரை பண்ணுவோமேன்னு எழுதி வெச்சேன். இனி ஓவர் டூ கதை
*********************************************************************************************************************
காலையிலிருந்து செம வேலை. ஜில் பே பக்கமே நான் போகவில்லை. ஆறு மணி இருக்கும். எங்கிருந்தோ ஜில் வாசனை அடிப்பது போலிருந்தது. சுற்றிலும் கண்ணை ஓடவிட்டேன். தூரத்தில் ஜில் நடந்து வருவது தெரிந்தது. இயல்பாய் கவிஞர்கள் வர்ணிக்கும் எந்த நடையழகும் ஜில்லுக்குப் பொருந்தாது. மிக யதார்த்தமான ஒரு நடை. போன பிறவியில் தேவதையாக பிறந்திருந்த போதும் அவள் இப்படித்தான் நடந்தாக நினைவு.
இப்போது தெளிவாக பார்க்க முடிவது போல நெருங்கி விட்டிருந்தாள். எங்கிருந்தோ கசிந்த ஏசி காற்று அவளது கூந்தலையும் என் மனசையும் சேர்த்து கலைத்துவிட்டுப்போனது. லேசாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். நெற்றியிலிருந்து அந்த ஸ்ட்ராபெரி உதடுகளை ஒட்டி விழுந்திருந்த முடிகற்றை அவளை இன்னும் செக்ஸியாக காட்டியது.
ஜில்லு நீ ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் டீ என அவளிடம் லட்சம் தடவை சொல்லியிருக்கிறேன். நிலவொன்றை டெலக்கோப் வைத்து பார்த்தது போல இருக்கும் அப்போது அவளது வெட்கம் கலந்த சிரிப்பு.
இரண்டு கைகளையும் டேபிளில் ஊன்றி நின்றாள். நிஜமாகவே வேலை போனாலும் பரவாயில்லை என முத்தமிட்டு விடலாமா எனப்பார்த்தேன். அதற்குள் நல்லவேளை பேசிவிட்டாள்.
"டேய்"
"ம்ம்ம்...சொல்லு ஜில்லு" என்றேன் குரலில் காமத்தை தோய்த்துக்கொண்டு.
அதைக்கண்டுகொண்டவளாக "பிச்சுடுவேன் நாயே...Officeல போயி"
"அட...அப்ப எடம் தான் பிரச்சன மேடம்க்கு...,மத்ததெல்லாம் ஓக்கே தான்" என்றேன் கண்ணடித்துக்கொண்டே.
................ கண்ட்டினியூ
**********************************************************************************************************************
இங்கிருந்து நான் கதையைத் தொடர்கிறேன்
**********************************************************************************************************************
போடா.. லூசு..” என்றபடி நெற்றி முடியை ஒதுக்கினாள்.. கூட ஒரு க்ளுக் சிரிப்பு வேறு.
 ”ஆமாமாம்..” சீட்டிலிருந்து எழுந்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றேன்.

ஏன்டா இப்டி embarrass பண்ற .??”  வழக்கம்போல என் கண்ணைப் 
பார்க்காமல்..உதட்டோரம் சிரித்தபடிகாஃபி போலாம்..வரியாஎன்றாள்.

வித் ப்ளெஷர் ஜில்லு..”

  அக்செஸ் கார்டை ஒரு கையிலும்.. அவளின் விரல்களை மறு கையிலும் பிடித்தபடி..அந்த கண்ணாடிக் கூண்டை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினேன்.
 ”லிஃப்டா...??”

 ”வேணாம்டா... டக்குனு கீழ போய்டுவோம்... ஸ்டெப்ஸ்லயே போலாம் “.  தேவதை பேச்சுக்கு ஏது மறு பேச்சு.. வியர்க்க விறுவிறுக்க ஏழு மாடி இறங்கி காரிடாருக்கு வந்தாயிற்று.

ஒரு காஃபிக்கு ஏழு மாடி ஓவர் ஜில்லு..ஏண்டி இப்டி ஓட விட்ற.”

 “போடா... காஃபிக்காக ஒன்னும் நான் உன்ன கூப்டல... Just felt like talking to you. அதான்

 மொத்த வியர்வையும் அடங்கிப் போய் உடலும் மனமும் ஐஸ் அண்டார்டிக்காவானது எனக்கு. அட என்னடா இவ..நமக்குள்ள தூங்கிட்டுருக்குற  தபூ சங்கர எழுப்பாம விட மாட்டா போலருக்கே என நினைத்தபடி,

சொல்லுடா. அதான் வந்துட்டேன்ல.. “ வாய் மட்டுமில்லாமல் சகலமும் சிரித்தது எனக்கு.

ஹ்ம்ம் சும்மாதான்… இப்போ நான் கூப்ட உடனே டக்குன்னு கெளம்பி வந்தல்ல.. அதேமாறி நான் என்ன சொன்னாலும் கேள்வி கேக்காம செய்வியா ? “

“ஹைப்போதெட்டிகல் க்வெஸ்டின் ஜில்லு.. நீ என்ன கேக்குறங்குறதப் பொறுத்து நான் எப்டி ரியாக்ட் பண்ணுவேங்குறது மாறலாம் “ கண்ணடித்தபடி சொன்னேன்.

“எப்பப்பாரு இதே பேச்சு..dog… “ அந்த தெற்றுப்பல்லைக் கடித்தபடி என் வலது கையில் ஒரு நறுக் கிள்ளு விழுந்தது.

அழகுப் பிசாசு… அந்தக் கண்களும்.. சிரிப்பும்.. காற்றில் பறக்கிற கத்தி முடியும்… மிதந்தபடி நடக்கிற நடையும்.. மனதுக்குள் “வேற எதடீ நெனைக்க விட்ட..?” சொல்லிக்கொண்டேன்.

“லவ் யூ ஜில்லு”

“ஹ்ம்ம் ஹ்ம்ம்…I know that.. But dunno how long u could do that... “
இங்க்லீஷைக் கண்டுபிடித்தவன் கூட இந்த தொனியில் பேசியிருக்கமாட்டான் ஜில்லு. என்ன ஒரு ஸ்டைல். மனது எலக்ட்ரான்.. நியூட்ரான்.. ப்ரோட்டானாக.. ஜில்லுவை ரசித்துக் கொண்டிருந்தது.

வாய்… “ஏன் ஜில்லுமா..ஏன்…?? அதான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல. நம்ம ரிலேஷன்ஷிப் ந்யூட்டன்ஸ் ஃபர்ஸ்ட் லா மாதிரி stays in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force. அந்த அன்பேலன்ஸ்ட் ஃபோர்ஸ் நீதான். போதுமா “ என்றது.

அந்த நேனோ செகண்ட் கோபத்தில் மூளை பரபரத்து கையிலிருந்த காஃபி கீழே கொட்டியபோது.. இடது பேண்ட் பாக்கெட்டில் விர்ரிட்ட செல்ஃபோனைக் கையிலெடுத்துப் பார்த்தேன்.

Jillu Calling...

கம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா


ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மிதிலைக்குள் நுழையும்போது சீதையும் இராமனும் ஒருத்தருக்கொருத்தர் முதல் முறை பாத்துக்குறாங்க.அப்புறம் வேற என்ன ‘கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு.. காதல் வந்து ஒட்டிக்கிச்சு…’ தான்.

இராமாயணத்துலயும் most romantic பாடல்கள் இந்த பகுதிகள்ல தான் வருது. நமக்கு பிடிச்ச ஏரியாங்குறதால நானும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன். ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச ‘அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்’ வரியும் இங்கதான்.

அழகோட எல்லை இதுதான்னு மனசால நினைக்கமுடியாத அளவுக்கு அழகுடைய சீதை… அரண்மனை மாடத்துல நின்னுட்டு இருக்கும்போது வீதியில நடந்து போற இராமனை பாக்குறாங்க… அதே நேரத்துல இராமனும் சீதைய பாக்குறாரு (எப்டின்னெல்லாம் கேக்காதீங்க..அதெல்லாம் வசூல்ராஜால வர மாதிரி ஃபீலிங்க்ஸ்… ;) ) அவங்க ரெண்டு பேரோட பார்வையும் ஒன்னை ஒன்னு அப்படியே கவ்விடுச்சாம். அவங்க ரெண்டுபேருடைய மனசும் அதனதன் இடத்துல நிக்காம அப்படியே அலைஞ்சு திரிஞ்சு ஒன்னா கலந்துடுச்சு.

’எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக்

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’


தமிழ் சினிமாவின் தலையாய கச்சாப்பொருளான காதல்ல அதிக முறை பயன்படுத்தப்பட்டது இந்த ‘கண்ணும் கண்ணும்’ சந்திச்சுக்குற scenario தான்.அதனைத் தொடர்ந்து மெளனமாய் பேசுறது… கண்ணாலேயே பேசுறதுன்னு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு…

எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமால இந்த themeல வந்த பாடல்களையெல்லாம் சொல்றேன்…

”கண்ணாலே பேசிப் பேசி… கொல்லாதே” – படம்: அடுத்த வீட்டுப் பெண்

” மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்” - படம்: காதலிக்க நேரமில்லை

”பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே ! ” -படம்: யார் நீ

இதுக்கு அடுத்து இன்னொரு கம்பராமாயண பாட்டு…இதே படலத்துல.. அதுவும் சாதாரணம் இல்ல…

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.

வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.

இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.

அதாவது இராமனும் சீதையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்த (அழகை ரசித்துப் பருகிய ) பார்வை, கயிறு மாதிரி அவங்க ரெண்டு பேரின் உள்ளத்தையும் இணைச்சதனால… அவங்க மனசு இங்கயும்..இவர் மனசு அங்கயும் இடம் மாறி குடியமர்ந்துடுச்சு…. எப்புடீ…??!! :) :)

இந்த பாட்டை படிச்சதும் எனக்கு நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல்
”விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே”

வேற எதாவது ரெஃபரன்ஸ் இருக்கான்னு தேடுனா.. திருவள்ளுவர் ஏற்கனவே ரெண்டு மூனு சிக்ஸர் அடிச்சு வெச்சுருக்காரு…

”கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில”

கண்ணும் கண்ணும் பேசிக்கும்போது அங்க வார்த்தைக்கு (மொழிக்கும்) என்னடா வேலை…?!! :)

”நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்னது உடைத்து”

நான் பார்த்தவள் பதிலுக்கு என்னைப் பார்க்கும்போது அந்த பார்வை எப்படி இருந்துச்சுன்னா… ஒரு பெரிய படையையே கொண்டுவந்து தாக்குன மாதிரி இருந்துச்சாம். இதுல ’தாக்கணங்கு’ங்குற வார்த்தை அழகால மத்தவங்கள மயக்குற மோகினி மாதிரியானவளைக் குறிக்கும். வெறும் அழகாலேயே நம்மை தோற்கடிக்கக்கூடியவள் ஒரு படையோட வந்து மோதினதுக்கு சமம்.. அந்த ஒற்றைப் பார்வை…!!

இதையே நம்ம பாவேந்தர் இப்படி சொல்லிருக்காரு….!!

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்”

சரி… பார்வை மட்டுந்தானா… வேற ஒன்னுமில்லையா… இந்த சிரிப்பு இருக்கே (புன்)சிரிப்பு… அதையும் கம்பர் எழுதிருக்காரு… ஆனா ஒரு மாறுதலுக்கு பையனோட சிரிப்ப பாத்து பொண்ணு மயங்குறதை சொல்லிருக்காரு.

”இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்;

சுந்தர மணி வரைத் தோளுமே அல;

முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே!”

( ரொம்ப இழுக்காம நம்ம ஸ்லாங்ல சொல்றேன்) சீதை சொல்றாங்க… ”இராமனுடைய ஹேர்ஸ்டைல பாத்தோ…அவனுடைய ஃபேஸ்கட்ட பாத்தோ… இல்ல அவனுடைய ஸ்ட்ராங்கான ஆர்ம்ஸைப் பாத்தோ நான் மயங்கல… அவனுடைய அந்த புன்சிரிப்பு இருக்கே..அது.. அது தான் அப்புடியே வந்து என் உசுரை அள்ளிட்டு போய்டுச்சு..”

பட்டாசுல்ல… :) :) :)

பி.கு: மேற்கண்ட சிச்சுவேஷன்கள் எல்லாத்துக்கும் பொருந்துகிற மாதிரியான திரையிசைப்பாடல்கள்.. அது பத்தின தகவல்கள்.... உங்களுக்கு தெரிஞ்சத..பிடிச்சத சொல்லுங்க…! :) :)

Images courtesy:Original Uploaders

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இசை சூழ் தனிமை - Playlist #1

Courtesy: http://www.hdwallpapers-3d.com

திரையிசைப் பாடல்களல்லாத பிற ஆல்பங்களைக் கேட்கிற ட்ரெண்ட் காலங்காலமாக நம்மிடையே இருந்து தான் வந்திருக்கின்றது. ஆங்கிலமோ, ஹிந்தியோ, கஸல் பாடல்களோ...அல்லது வேறேதும் இசைக்குழுக்களின் தனி ஆல்பங்களோ...இசைக்கோவைகளோ...ஏதோவொன்று மக்களை வந்தடைந்து அவர்களின் மனதைக் கவர்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ன ஒன்று.. முன்பு கேசட்களின் காலத்தில் இந்த தேடலும் அடைதலும் கொஞ்சம் கடினம்.90களுக்குப் பின்னான சி.டி யுகத்தில் பெருநகரங்களில் இந்த மாதிரி தனி ஆல்பங்களைத் தேடிப்பிடிப்பதென்பது அத்தனை கடினமாகவெல்லாம் இல்லை.இன்றைக்கு உலகின் எந்த மூலையில் இருக்கிற இசைக்குழுக்களின் பாடல்களைக் கூட யூட்யூபிலேயே கேட்க முடியும்.

சரி...சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.

நண்பர்கள் மூலமாகவோ புத்தகங்கள் மூலமாகவோ அல்லது வேறெந்த வகையிலோ எனக்குப் பரிச்சயமாகி மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட பாடல்களைப் பற்றி இந்த மாதிரி பட்டியல் போட்டு பகிரலாம் என்றிருக்கின்றேன்.என்னுடைய மனநிலைக்கு தகுந்தாற்போல ஏதோவொரு பாடலைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுக் கொண்டிருத்தல் ஒரு ரசனையான அனுபவம்.அதை உங்களுக்கும் கடத்திவிட முடியுமென்று நம்புகின்றேன்.

முதலில்

1. 2008ம் வருடம் சூப்பர் சிங்கரின் இரண்டாவது எடிஷன்.ரவி, ரேணு, அஜீஷ், பிரசன்னா,விஜய்  என எல்லாருமே அட்டகாசமான பாடகர்கள்.போட்டியின் இறுதிக்கட்டங்களில் ஒரு மெட்லி ரவுண்ட்.ஏதாவதொரு ராகத்தை எடுத்துக் கொண்டு அந்த ராகத்தில் அமைந்த வெவ்வேறு பாடல்களை இணைத்துப் பாடவேண்டும்.என்னுடைய favorite பாடகர் ரவி தேர்ந்தெடுத்தது சாருகேசி ராகம். ஒரு ஆலாபனையில் தொடங்கிய அவர் முதலில் பாடியது ‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல்.அதிலிருந்து ’ஆடல் கலையே தேவன் தந்தது’.இடையில் ஒரு ஹிந்தி கஸல் பாடலின் சரணம்.இறுதியாக ‘உதயா உதயா’ பாடலில் முடித்தார்.அட்டகாசமான ஒரு அனுபவம்.இந்த கலவையில் என்னைக் கவர்ந்ததென்னவோ அந்த ஹிந்தி கஸல் தான்.உடனே அவர் பாடிய வார்த்தைகளை நான் புரிந்து கொண்டவரையில்  ஆங்கிலத்தில் டைப் செய்து கூகிளில் தேடத் தொடங்கினேன். (jiz ta rab jaaye) ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் அந்த ஒரிஜினல் பாடலைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை,இந்தத் தேடல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் போய்க்கொண்டிருந்தது.என்ன பாடல் கேட்டாலும் என்ன வேலை செய்தாலும் உள்ளுக்குள் இது ஓடிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு யூட்யூப் கமென்டிலேயே தான் என் தேடலுக்கான விடை கிடைத்தது.


அந்த பாடல் ஹரிஹரன் அவர்களுடைய ’ஹாஸிர்’ (Hazir) கஸல் ஆல்பத்தில் வந்த 'ஷெஹர் தர் ஷெஹர்' (shehar dar shahar).ஹரிஹரனுடைய குரலே பட்டையைக் கிளப்பும்.இதில் உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் தபேலாவும் சேர்ந்தால் the song goes to an entirely different level.எத்தனை முறை கேட்டிருப்பேனென்றே நினைவிலில்லை.So addictive...!தவறாமல் கேளுங்கள்


2.அடுத்ததாக கைலாஷ் கெர் (Kailash Kher).தமிழில் இவருடைய குரலை நிறைய கேட்டிருக்கலாம் (வெயிலோடு விளையாடி, ரங்கு ரங்கம்மா - பீமா, ஒரே ஒரு - அபியும் நானும்..இன்னும் ஏராளமான பாடல்கள்).வித்தியாசமான, Folk பாடல்களுக்கான பிரத்தியேகமான ஹைபிட்ச் குரல்.கைலாஷ் கெரின் அறிமுகம் M Tvயில் அடிக்கடி ஒளிபரப்பான Tauba Tauba பாடலின் மூலம்தான்.ஹிந்தி பாடல்களில் கொஞ்சம் ஆர்வம் வந்த பின்பு என்னுடைய வழக்கமான ஆ.கோ வினால் இவர் பாடிய எல்லா பாடல்களையும் தேடித்தேடிக் கேட்க ஆரம்பித்தேன்.(ஹிந்தி டாப்-10 திரைப்பாடல்களை கடைசியில் சொல்கிறேன்) அப்படி எதேச்சையாக யூட்யூபில் பார்த்தது தான் 'Tu kya Jaane'.

வழக்கமான வார்த்தைகளில் சொல்வதானால் இந்த பாடல் ஒரு விஷுவல் கவிதை.எனக்கு ஹிந்தி தெரியாததால் இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை கூகிளில் தேடிப் பி(ப)டித்துத் தெரிந்து கொண்டேன்.
tu kya jaane
tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane
mere jee ki baat tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane

bhooli nahi abhi chandni raatein
bhooli nahi teri pyaari baatein
tujh bin ye din nahi bhaate
kya batayen hum

wohi khile khile sapne salone
bas gaye hon jo kone kone
ban gaye jazbaat khilone
dil tadpe par tu kya jaane
what do you know
what do you know
you are without heart and feelings, god knows..
what do you know about what's happening in my heart
you are without heart and feelings, god knows..

the moonlit nights aren't yet forgotten,
your lovely talks aren't yet forgotten,
without you I don't like these days,
what should I tell..

those blossoming beautiful dreams,
which lived in every corner,
the feelings became toys,
the heart is in agony but what do you know
செம்ம லிரிக்ஸ்... செம்ம ஃபீலிங்.. மொத்த பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே

அப்புறம் M.Tv யின் கோக் ஸ்டூடியோ நிகழ்ச்சியில் வந்த இந்த பாடல்.அட்டகாசமான மிக்ஸ்.பாடகி தஞ்சாவூர் சின்னப்பொண்ணு கைலாஷ் கெர் கூட சேர்ந்து பட்டையை கிளப்பியிருப்பார்,.செம்ம  கொண்டாட்டமான பாட்டு.இதையும் கேட்டுடுங்க.




3.அடுத்தது 'Da Saz' என்கிற தில்லியைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவின் பாடல்.இந்த இசைக்குழு பற்றியும் இவர்களின் ’Jet Lag' ஆல்பம் பற்றியும் தெரிந்துகொண்டது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘கலகம்.. காதல்..இசை..’ புத்தகம் வாயிலாக.வழக்கம் போல கூகிள் தேடல் தான்.பாடல் வரிகள் நேரடியான ஹிந்தி அல்ல.பஞ்சாபி என நினைக்கிறேன்.ரொம்ப அர்த்தமுள்ள ஆழமான வரிகள்.அமைதியான சூழலில் கண்களை மூடி கேட்டால் தியானம் செய்த உணர்வு.Please..don't miss it.An awesome sufi rendition...!! 'Hindu'வில் வெளிவந்த Da Saz குழுவின் பேட்டியை படிக்க இங்கு க்ளிக்கவும்.


(எவ்வளவு தேடியும் வரிகளோ அல்லது ஆங்கில மொழிபெயர்ப்போ கிடைக்கவில்லை.)

இந்தப் பட்டியல் தொடரும் (நேரம் கிடைக்கும் போது)...

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

6174 - க.சுதாகர் - கனிதம், லெமூரியா, க்ரிஸ்டல்லோக்ராஃபி மற்றும் பல

6174 is known as Kaprekar's constant after the Indian mathematician D. R. Kaprekar. This number is notable for the following property:
  1. Take any four-digit number, using at least two different digits. (Leading zeros are allowed.)
  2. Arrange the digits in descending and then in ascending order to get two four-digit numbers, adding leading zeros if necessary.
  3. Subtract the smaller number from the bigger number.
  4. Go back to step 2.
The above process, known as Kaprekar's routine, will always reach its fixed point, 6174, in at most 7 iterations. Once 6174 is reached, the process will continue yielding 7641 – 1467 = 6174
-Wikipedia

சாதாரணமான வாழ்வியல் அனுபவங்களை வைத்து எழுதப்படுகின்ற புதினங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வெவ்வேறு கதைக்களங்களில் எழுதப்படுகிற புனைவுகளில் எனக்கு எப்போதுமே தனி ஆர்வமுண்டு.அதுவும் அறிவியல் புனைவென்றால் அது ரொம்பவே ஸ்பெஷல்.அந்த வகையில் சென்ற புத்தகக் கண்காட்சியில் நிறைய நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சுதாகர் அவ்ரகளின் 6174 நாவலை வாங்கினேன்.

பொத்தாம் பொதுவாக Science fiction என்று சொல்லவிடமுடியாது. கனிதம், Geometry, Crystallography, Anthropology, கோலங்கள்,  அப்புறம் சங்கத் தமிழ் வெண்பாக்கள் அத்தனையும் உண்டு.
உள்ளடக்கத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரு விருந்து.

நிகழ்வு 1: கதை லெமூரியர்களின் காலத்தில் துவங்குகின்றது.அவர்களின் சக்தி பீடமாகிய ஒரு பிரமிட் (Transformers திரைப்படத்தில் காட்டப்படுகிற Tesseract மாதிரி ) பரிணாம வளர்ச்சியில் பிற்காலத்தில் தோன்றப்போகும் மனிதர்களின் கைகளில் கிடைத்தால் உலகில் பேரழிவு நிகழுமென அதை அழித்துவிட்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

நிகழ்வு 2: கொரிய, ரஷ்ய போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் பயிற்சியில் ஈடுபடும்போது திடீரென ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுபோகின்றன.இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்புகின்றது.நாடுகளுக்கிடையே போர்மூளும் அபாயத்தையும் மறைமுகமாக ஏற்படுத்துகின்றது.

நிகழ்வு 3: பூமியின் புவிவட்டப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு மிகப்பெரிய விண் கற்கள் பூமியை எந்நேரமும் தாக்கிவிடக்கூடிய ஆபத்தில் விண்வெளியில் மிதந்தபடி இருக்கின்றன.

நிகழ்வு 4: சர்வதேச தீவிரவாத கும்பல் ஒன்று உலகத்தில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தேடலோடு வெவ்வேறு நாடுகளில் முனைப்போடு இயங்கத்தொடங்குகின்றனர்.

நிகழ்வு 5:இஸ்ரோவின் விஞ்ஞானியான சடகோபன் பல வருடங்களுக்கு முன்பு தன் மாணவர்களாக இருந்த ஜானகி, ஆனந்த் இருவரையும் ஒரு முக்கியமான விஷயமாக தொடர்பு கொண்டு வரவழைக்கின்றார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தொடங்குகின்ற இவர்களின் தேடல் பயணம் ஒடிஷா, மணிப்பூர், மியான்மர், தாய்லாந்து என நீள்கின்றது.

இந்த நிகழ்வுகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி ஒரு 400 பக்க நாவல் என யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது.அதிலும் ஏகப்பட்ட தகவல்கள்.முன்பே சொன்னது போல வடிவக் கனிதத்தில் தொடங்கி...கோலங்கள் தொடர்பான தகவல்கள்.. சீலகந்த் மீன்..யமுனையாற்றின் டால்ஃபின்கள்.. பர்மாவின் பகோடா கோவில்கள்.. தமிழர்களின் வரலாறு... எண் கனித புதிர் வெண்பாக்கள் வரை அத்தனை தகவல்கள்.. அத்தனை hard work.

எனக்கு கணக்கே ஆகாது.நானே ஏகப்பட்ட கனிதப் புதிர்களையும் விநோத எண்களையும் கூகிள் பண்ண வேண்டியதாகிவிட்டது.அதுமட்டுமல்லாமல் கதையில் வருகிற தகவல்கள் வெவ்வேறு துறை சார்ந்த துணுக்குகள் எல்லாவற்றையும் கூகிளில் தேடி பின்னணியைத் தெரிந்து கொண்டேன்.புத்தகத்தின் முடிவில் சுதாகர் அவர்கள் தந்திருக்கின்ற referenceகளைப் பார்த்தாலே தகவல்களின் துல்லியத்தன்மை தெரிகின்றது

அவருக்கு சப்ஜெக்டின் மேல் இருக்கிற காதலாலோ என்னவோ தெரியவில்லை நாவல் முக்கியக்கட்டத்தை நெருங்க நெருங்க கதை சொல்லும் நடை ஒரு அறிவியல் விரிவுரையாளரை ஒத்ததாக மாறிவிடுகின்றது.இது என் போன்ற கனிதம் பிடிக்காத பார்ட்டிகளுக்கு கொஞ்சம் வேகத்தடை போட்டது போலாகலாம்.வடிவக் கனித விளக்கங்களை பல முறை படித்த பிறகே புரிந்து கொள்ள முடிந்தது.அவை கொஞ்சமே கொஞ்சம் எளிமையாகவும்..கதையோட்டத்தின் வேகத்தைக் குறைக்காத வகையிலும் இருந்திருக்கலாமென்பதே என் ஒரே ஆதங்கம்.

மற்றபடி...

சொன்னால் கொஞ்சம் மிகையாகவோ க்ளிஷேவாகவோ இருக்கலாம்.ஆனாலும்... தமிழின் டான் ப்ரவுன் என்று சொல்லக்கூடிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கின்றார் சுதாகர் அவர்கள். My hearty congrats sir...!! Eagerly looking forward for your next novel..!!


திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஐ.டி - வேலையுள்ள பட்டதாரி



இன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம் இஞ்சினியர்கள் படிப்ப முடிச்சு வெளில வராங்க.அதுல எத்தன பேருக்கு வேல கெடைக்குது...?? பெரும்பாலானவர்கள் சைபர் கூலிகள் தான்.அடிமைத்தனமா ஐ.டி யுடைய மேல்மட்ட வேலைகள்ள சேந்துக்குறாங்க…எதையும் புதுசா உருவாக்கல…” அப்டி இப்டின்னு பேத்திகிட்டே.. ச்சை.. பேசிகிட்டே போனாரு.

 இப்பொ ட்ரெண்ட் இதான் போல.பொறியியல் படிச்சு முடிச்சவன் தன்னுடைய core (mechanical/electrical/civil) துறைல வேலைக்குச் சேர்ந்தான்னா ஆரம்பகால சம்பளம் அவ்வளவு சிலாக்கியமில்ல.அடிமட்ட ட்ரெய்னியா வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வேலையக் கத்துக்கிட்டு மேல வர்ரதுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகலாம்.எடுத்த உடனே காசு பார்க்க முடியாது. பெத்தவங்களும் அத விரும்புரதில்ல... அவங்களுக்குத் தேவையானதெல்லாம் ready cash..US Visa..கல்யாணம்… கார்..வீடு.. எட்செட்ரா. Peer pressure வேற. So பசங்க ஐ.டி ய தேர்ந்தெடுக்குறாங்க.அதிக உடல் உழைப்பு தேவையில்ல (ஆனா அதீத மன உளைச்சல் பைத்தியம் பிடிக்க வெச்சுடும்) முதல் நிலையிலேயே ஓரளவு convincingஆன சம்பளம் (12000-14000னு வெச்சுக்கோங்க).அப்புறம் அந்த sophistication அவங்கள வெளில வர விடாது.And it goes on...!!

இப்போ BPO க்கு வரேன்.இங்க கதையே வேற.குறைந்த பட்சம் 7000-8000ல தொடங்கி திறமைக்கும்/அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி  படிப்படியா சம்பள உயர்வு கிடைக்கும்.(ரொம்ப யோசிக்காதீங்க..நாலு வருஷம் கழிச்சு 15000 சம்பாதிச்சா பெருசு) ஐ.டி கம்பெனி இண்ட்ர்வ்யூல கழிச்சு கட்டுனவங்களும்… குறைவான சதவீதம் மதிப்பெண் வாங்குனவங்களும்...அரியர்ல Man of the series வாங்குனவங்களும்… ஊர்ப்பக்கத்துலேர்ந்து இங்க வர்ர B.Sc\B.Com\B.C.A பட்டதாரிகளும் தான்.இவங்களுக்கெல்லாம் பெரும்பாலும் வேலைக்குப் போய் சம்பாதிச்சே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும்.ஏதோ ஒரு நிர்ப்பந்தமிருக்கும். (டைம் பாஸ்க்கு வேலைக்கு வர்ர பணக்கார சொட்டவாளக்குட்டிகள் விதிவிலக்கு) ஏன் BPOல ஜாயின் பண்ணேன்னு கேட்டா ஐ.டி ல கெடைக்கல அதான் communication இம்ப்ரூவ் பண்ணிக்கலாமேன்னு சேர்ந்தேன்னு சொல்லுவாங்க. தொடர்ச்சியான நைட் ஷிஃப்ட்...இடத்த விட்டு நகர முடியாத அளவு பணிச்சுமை...செய்ற வேலைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊதியம்னு..எல்லாம் சேர்ந்து அவங்க உடல் இயக்கத்தையே தலைகீழா மாத்திப் போட்டுடும்.ஒரு மூனு நாலு வருஷம் BPO ல வேலை செஞ்சவங்கள்ட்ட பேசுனீங்கன்னா அவங்களோட அதிபட்ச கோரிக்கை “Day shiftல எதாவது ப்ராஜெக்ட் கெடைச்சா பரவால்ல பாஸுங்குறது தான்.

எதுவுமே செய்யாம இருக்குறதுக்கு எதாவது ஒரு வேலை செய்வோமேங்குறது தான் பெரும்பாலான பசங்களோட எண்ணம். அதுக்கும் மேல, வேற பெரிய கனவுகளோட... ஐடியாக்களோட..சொந்தமா எதாவது தொழில் பண்ணனும்..மார்கெட்ல இல்லாதத புதுசா யோசிக்கனும்னு..யாரவது திரிஞ்சாங்கன்னா இன்னும் சுத்தம்..அவங்க வீடு சுற்றம் தொடங்கி போற வர்ரவனெல்லாம் அவனுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.”Practicalஆ யோசி..இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயஙகள்னு பேசி அவனோ கனவெல்லாத்தையும் போட்டு நசுக்கிட வேண்டியது.அப்புறம் அவனா தக்கி முக்கி எதையாவது பண்ணி மேல வர்ரதுக்கு முயற்சி செஞ்சு..சறுக்கிட்டான்னா…
அவ்ளோதான்..மொத்தமா வந்துடுவாங்க..”பாத்தியா..நான் அப்பவே சொன்னேன்ல..உனக்கேன் இந்த வேண்டாத வேலைன்னு. Entrepreneurship ங்குறது இந்தியாவுல ஒரு சபிக்கப்பட்ட விஷயம். You can never create entrepreneurs just by graduating them with an MBA from premier institutions.

இதுவரைக்கும் சொன்ன எல்லா விஷயமும் அபார திறமையும் அறிவும் உள்ள, அதுக்கேத்த வசதி வாய்ப்பும், தரமான கல்வியும் கிடைக்குற இளைஞர்களுக்கு இல்ல. எல்லாத்துலயுமே mediocreஆ இருக்குற தன்னுடைய survivalக்காக ஓடிகிட்டே இருக்குற பெரும்பான்மையான இளைஞர்களுக்கானது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள்ள வேல பாக்குற எல்லாரும் என்னமோ திட்டம்போட்டு அமெரிக்காவுக்கும் இன்னபிற வெளிநாடுகளுக்கும் அடிமை வேல பாக்கப் போன மாதிரியும்..லட்ச லட்மா பணத்துல குளிக்கிற மாதிரியும் ஒரு பிம்பத்த, சினிமாவும்..பிற ஊடகங்களும் உருவாக்கி வெச்சுருக்கு.மக்களோட பொது புத்தியிலயும் அது பதிஞ்சு போச்சு.பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவத் தொறந்து விட்ட அரசை எதிர்த்து யாரும் மூச்சு கூட விட மாட்டாங்க.சரியான வேலை வாய்ப்புகளையும் உருவாக்காம..இருக்குற வேலைகளுக்குத் தகுதியான பட்டதாரிகளையும் உருவாக்காம… அவனவன் சொந்தக் கஷ்டத்துக்கு ஏதோ கெடைச்ச வேலைக்குப் போறவனப் புடிச்சு நீ அடிமை..நீ கூலி… அது இதுன்னு வறுத்தெடுக்குறது எந்த வகைல நியாயம் ??? 


ஞாயிறு, 6 ஜூலை, 2014

Green Street Hooligans (2005) - Football வெறியர்கள்




                   மக்களுக்கு நாடி நரம்பெல்லாம் ஃபுட் பால் வெறி ஏறிப்போயிருக்க இந்த சீஸன்ல ஒரு ஃபுட்பால் படம் பத்தி எழுதலாம்னு நெனச்சேன்.இது நேரடியான கால் பந்தாட்டம் பற்றிய படமா இல்லன்னாலும் விளையாட்டுக்கு பின்னாடி இருக்குற மனுஷங்கள பத்தின கதை தான்.ஏதாவதொரு விளையாட்டு எல்லா நாட்லயும் அந்தந்த நாட்டுடைய கலாச்சாரத்துல ஒரு பகுதியா காலம் காலமா இருந்துட்டு இருக்கு.அமெரிக்காவுக்கு NFL,Baseball..இந்தியாவுக்கு க்ரிக்கெட்... இங்கிலாந்துக்கு ஃபுட்பால், க்ரிக்கெட்...!! இப்படி

பொதுவா விளையாட்டுப் போட்டிங்குறது அதுல விளையாடற வீரர்களுக்கு (அவங்களுடைய sportsmanshipஐ பொருத்து) just another game-ஆ இருக்கலாம். ஆனா ரசிகர்களுக்கு இது அவங்க ego சம்பந்தப்பட்ட விஷயம்.தன்னுடைய அணி தான் ஜெயிக்கனும்னு நெனைக்குற ஒரு தீவிரமான போட்டி மனப்பான்மை இருக்கும்.சில சமயம் இந்த தீவிரத்தன்மை, தனி மனிதர்களின் மன வன்மத்துக்கும் வன்முறைக்கும் காரணமா அமைஞ்சுடும்.நம்ம நாட்ல அதிக viewership இருக்குறது க்ரிக்கெட்டுக்கு தான்.இந்திய ரசிகர்களும் IPL மாதிரியான போட்டிகளின் போது social networking sitesல மற்ற மாநில ரசிகர்களோட நாயா பேயா அடிச்சிகிட்டாலும் நெஜத்துல அவங்களுக்குள்ள அடிச்சிகிற சம்பவங்கள் ரொம்ப குறைவு (இல்லவே இல்லன்னு கூட சொல்லலாம்).அப்படியே வன்முறைல இறங்குனாலும் வீரர்கள் வீட்ல கல் எறியிறது... கொடும்பாவி கொளுத்துறதுன்னு public nuisance தான்.

ஆனா இங்கிலாந்துல கதையே வேற.அங்க Football அவங்க ரத்ததுல கலந்த விஷயம்.கால்பந்தாட்டத்துக்கு கிட்டத்தட்ட 150 வருஷ வரலாறு உண்டு.19ஆம் நூற்றாண்டுல தொடங்கி படிப்படியா பரிணாம வளர்ச்சி அடைஞ்சு இன்னைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்காண ரசிகர்களால விளையாடப்படுகிற பார்க்கப்படுகிற ஒரு விளையாட்டு.209 நாடுகள் அதிகாரப்பூர்வமா FIFAனு சொல்லப்படுற பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புல உறுப்பினர்களா இருக்காங்க. இங்கிலாந்தைப் பொருத்தவரைக்கும் ஒரு ஊருக்கு ரெண்டு டீம்னு வெச்சா கூட கிட்டத்தட்ட 7000 ஃபுட்பால் க்ளப்புகள் பலதரப்பட்ட டிவிஷன்கள் கீழ வரும்.

ஓவ்வொரு ஃபுட்பால் க்ளப்புக்கும் ஒரு ரசிகர் படையே இருக்கும்.Manchester United மாதிரி பெரிய க்ளப்பா இருந்தாலும் சரி...ஏதோவொரு சின்ன ஊரைச் சேர்ந்த க்ளப்பா இருந்தாலும் சரி.கண்டிப்பா இந்த Fan following இருக்கும்.இவங்க ஓவ்வொரு க்ரூப்புக்கும் ஒரு பேரு இருக்கும்..தனி ட்ரெஸ் கோட் இருக்கும்..ஏதாவ்து ஒரு தீம் சாங் வெச்சுப்பாங்க.தங்களை gangனோ gangsters னோ சொல்றது இவங்களுக்கு பிடிக்காது.தங்களுடைய க்ருப்ப 'Firm'னு சொல்லிப்பாங்க.இந்த ரசிகவெறியர்களோட வேலையே அவங்க டீம் மேட்ச் எங்க நடந்தாலும் அந்த க்ரவுண்டுக்கு போய் அவங்க டீமுக்கு சப்போர்ட் பண்றது தான்.அத மட்டும் பண்ணா பரவால்லயே.. எதிர் டீம் ரசிகர் படையோட சண்ட போடுறதுதான் இவங்களுடைய முக்கிய அஜெண்டா.சாதாரணமான சண்டை இல்ல...கலவரம். இந்த மாதிரி கால்பந்தாட்ட வெறியர்கள் விளையாட்டோட பேர்ல பண்ற ரவுடியிஸத்துக்கு தான் Hooliganismனு பேரு.


இந்த படம் West Ham United மற்றும் Millwall ஆகிய ரெண்டு டீம்களின் Firmsக்கு (Green Street Elites, Millwall Bushwackers)  இடையேயான (நிஜமான) பகைமையை அடிப்படையாக கொண்ட கதைதான்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துல ஜர்னலிஸம் படிக்கிற Matt சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா expel ஆயிட்றான்.அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்னு லண்டன்ல இருக்க அவங்க அக்கா ஷானன் வீட்டுக்கு கெளம்பிப் போறான்.அவங்க அக்கா கிட்ட விஷயத்த சொல்லி அங்க தங்க வேண்டிய நிர்பந்தத்தையும் சொல்றான். அக்காவுடைய கணவன் Steve ,Mattஐ தன் தம்பி Peteகூட ஃபுட்பால் மேட்ச் பாக்க அனுப்பி வைக்குறான். Pete கொஞ்சம் ரவுடிப்பையன்...ஆரம்பத்துல கொஞ்சம் பிகு பண்ணாலும் சரி போனா போகுதுன்னு Mattஅ கூட கூட்டிட்டு போறான்.அவனோட நண்பர்கள் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்குறான்.ஆரம்பத்துல அவன் ஒரு அமெரிக்கன்ங்குறதால அதிகமா ஒட்டாத Pete உடைய நண்பர்கள் கொஞ்ச நாள் போகப்போக நல்ல பழக ஆரம்பிக்குறாங்க. Bovverங்குற ஒரே ஒருத்தனத் தவிர.காரணம் Bovverக்கு அமெரிக்கர்கள்னாலே ஒரு வெறுப்பு.தங்களுடைய க்ரூப்புல ஒரு அமெரிக்கன் இருக்குறது அவனுக்கு பிடிக்கல.இருந்தாலும் Peteக்காக பொறுத்துக்குறான்.


எப்பவும் அவங்க கூட வெளில சுத்த தொடங்குறான் Matt. ஒரு நாள் ரோட்ல வேற ஒரு க்ரூப் இவங்கள அடிக்கத் தொரத்தும்போது தான் Mattக்கு West Ham United டீமுடைய ரசிகர் படையான Green Steet Elite (GSE) பத்தி தெரிய வருது.Pete தான் அந்த firmக்கு தலைவன்.2அந்த Firm ஒருகாலத்துல தொடங்கி வெச்ச 'The Major'ங்குற ஒரு கெத்து பார்ட்டி பத்தியும் தெரிய வருது.

அநியாயத்துக்கு பழமா..நல்லவனா இருக்க Matt, Pete கூட சேர்ந்து எல்லா தெரு சண்டைக்கும் போக ஆரம்பிக்கிறான். இத கேள்விப்பட்டு செம்ம கடுப்பாகுற Steve இவங்க ரெண்டு பேரையும் வீட்ட விட்டு வெளில அனுப்பிடுறான்.இது எல்லாத்துக்கும் நடுவுல GSE அவங்களுடைய அதி தீவிர எதிரி க்ருப்பான  பக்கத்து ஊரு Milwal டீமுக்கும் தங்களுடைய டீமுக்கும் பல வருஷம் கழிச்சு நடக்க போற மேட்ச்ல பெரிய அளவுல சண்டை போட திட்டம் போடுறாங்க.அந்த சண்டைக்கு போகப் போறவங்கள்ல Mattஐயும் Pete தேர்ந்தெடுத்தது Bovverக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.அதனால எதிரி க்ருப்புக்கு இந்த ப்ளான் பத்தி உளவு சொல்லிடுறான். Milwal Bushwackers க்ரூபோட தலைவன் Tommy ஏற்கனவே GSE மேல கொல வெறில இருக்கான். (காரணம் தன்னுடைய மகனை GSE உடனான ஒரு பழைய கலவரத்தின்போது இழந்ததுனால).GSE-இன் பழைய தல 'The Major'ம் இந்த சண்டைக்கு வரப்போறதா தகவல் வந்ததால டாமி Major ஐயும் Pete ஐயும் போட்டுத் தள்ள ப்ளான் பண்றான்.

இது இல்லாம Mattஐ பார்க்க லண்டன் வர்ர அவங்கப்பா (சர்வதேச பத்திரிகையாளர்) அவன Time பத்திரிகையுடைய அலுவலகத்துக்கு கூட்டிட்டு போய் தன் நண்பர்கள் கிட்ட அறிமுகப்படுத்தி வைக்குறாரு. இத தூரத்துலேர்ந்து பாக்குற Bovver தன் நண்பர்கள்கிட்ட வந்து Matt ஒரு பத்திரிகைக்காரன்னும் நம்மளப் பத்தி தகவல் தெரிஞ்சுகிட்டு பத்திரிக்கைல எழுதுறதுக்காக தான் நம்ம கூட சுத்திட்டு இருக்கான்னும் சொல்றான்.அவன் தினமும் எழுதுற டைரில நம்மளப் பத்தி நோட் பண்ணி வெச்சுக்குறான்னும் சொல்றான்.இது மறுபடி ஒரு பெரிய பிரச்சனைய கெளப்புது.இந்த பஞ்சாயத்த தீர்த்து வைக்க 'Major' அவரே நேர்ல வர்ராரு.

கடசில..அந்த சண்ட நடந்துச்சா...?? Pete,Matt எல்லாரும் என்ன ஆனாங்க...??, 'The Major' யாரு...டாமி சொன்னபடி எல்லாரையும் போட்டுத் தள்ளிட்டானா..?? இதெல்லாம் நேரமும் ஆர்வமும் இருந்தா... படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.

Extra: கடைசியா இந்த ரெண்டு க்ரூப்புக்கும் நடந்த ரத்தக்களரிய பத்தி படிக்க இங்கு க்ளிக்கவும்

சனி, 10 மே, 2014

புனைவின் நிழல் - மனோஜ்

izquotes.com
பொதுவாவே படிக்கிறது ஜாலியான விஷயம்… இன்னது தான்னு இல்லாம கண்டதையும் படிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பகுத்து பார்த்து ரசிக்கக் கத்துக்குறதெல்லாம் வேற கத. ஆனாலும் வாசிக்கிறது சுகம் தான்… புனைவுகள்.. கட்டுரைகள்.. சுய(சொறிதல்)சரிதை… அறிவியல்… கவிதை… எல்லாமே வெவ்வேற உலகம். நம்ம கண்ணைக் கட்டி காலத்துக்கு நடுவுல கடத்திட்டுப் போகக்கூடிய வல்லமை புனைவிலக்கியத்துக்கு இருக்கு. ஒரு சிறுகதைன்னு எடுத்துகிட்டா அதுல வர பாத்திரங்கள் (சட்டி பானைய சொல்லல).. கதை நிகழ்கிற இடம்.. சூழல்… தனிமனிதர்களின் நியாயங்கள்.. அவங்க கொடுக்குற தீர்வுன்னு பல விஷயங்கள் இருக்கு. ஒரு சிறுகதையையோ நாவலையோ அல்லது எந்தவொரு புனைவிலக்கியத்த நாம வாசிக்கும்போதும் ஒரு வெள்ளை கேன்வாஸ்ல கோட்டோவியத்துல தொடங்குற மாதிரி ஆரம்பிச்சு கடைசில அந்த கதை முடிவை அடையும்போது ஒரு அழகான (சில சமயம் சொதப்பலான/மொன்னையான) ஓவியமா நம்ம கற்பனைல நிறைவடையுது.


ஃபேண்டஸின்னு (fantasy) தனியா ஒன்னும் கெடையாதுங்குறது என்னுடைய எண்ணம். ஃபிக்‌ஷன் எல்லாமே ஃபேண்டஸி தான். உங்க கற்பனைக்குள்ள நீங்க உருவாக்கிக்குற உலகம் தான்.அந்த களத்தை உங்களுக்கு ஒரு எழுத்தாளர் அமைக்குறாரு; அவ்வளவே.ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ திரைப்படமா எடுக்கப்படும்போது மக்கள் பெரும்பாலும் புத்தகத்துக்கு நிகரா படம் இல்லன்னு தான் சொல்லுவாங்க. ஏன்னா உங்க மனசு ரொம்பவே பெரிய கேன்வாஸ்..எல்லைகள் கிடையாது.. அந்த உலகத்துல உலவுறவங்க எப்படி இருப்பாங்கன்றத நீங்கதான் தீர்மானிக்கிறீங்க. தங்களுடைய தனிப்பட்ட கற்பனைய வேறொரு வரையறைக்குள்ள அடைச்சு காட்சிப்படுத்துறத பெரும்பாலாவர்கள் விரும்புரதில்ல. ஆனாலும் காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற இடம் தான் புனைவின் உச்சம். அங்கதான் எழுத்தாளர் ஜெயிக்கிறார்.


எதுக்கு இவ்ளோ பீடிகைன்னு கேட்டீங்கன்னா அதுக்குக் காரணம் ஒரு புத்தகம் தான். ஒரு (அ)சாதாரணமான சிறுகதைத் தொகுப்பு.சத்தியமா இந்த மாதிரி ஒரு அனுபவத்தை எதிர்பார்த்து நான் இந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கல.’புனைவின் நிழல் ’ மனோஜ் எழுதுனது. மொத்தம் 15 சிறுகதைகள். Versatilityன்னு ஒரு வார்த்தை இருக்குல்ல… அதுக்கு சரியான உதாரணம் இந்த தொகுப்பு தான். ஒன்னு ரெண்டு கதைகள் மட்டும் கொஞ்சம் வெகுஜன இதழ் பாணி ‘கடைசி வரி பன்ச்’ கதைகள். மத்ததெல்லாமே ஒவ்வொன்னும் ஒரு உலகம்… ஒரு டைம் மெஷின்… ஒரு Black Hole… எப்புடி வேணாலும் சொல்லிக்கலாம். 

‘அட்சர ஆழி’ – முதல் பால் சிக்ஸர். நான் ரெண்டாவது பத்தியோட முடிவுல சொன்ன மாதிரி //காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற // வித்தைக்கு ஒரு சின்ன உதாரணம். கதையே ‘எப்படி விளங்கவைப்பது என்பதுதான் எனக்குள்ள பிரச்சனையே’ இப்படித்தான் தொடங்குது. J

ஏவாளின் விலா எலும்பு, 857, மஹல்… இந்த மூன்று கதைகளையும் வரலாறு அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்து புனைகதைகள்னு சொல்லலாம். Trust me… கண்டிப்பா அசந்து போவீங்க. ஆதாம் ஏவாள் காலத்துக் கதையாகட்டும்… மொகலாய மன்னர்கள் கதையாகட்டும் வர்ணனைகளும் வார்த்தைகளும் உங்களைக் கட்டிப்போடும்.

றெக்கை.. பால்… சர்ப்பவாசனை.. இந்த கதைகளெல்லாம் ஒரு மாதிரி trance ஃபீலிங் தந்துச்சு எனக்கு. வாசனையையும்...வெம்மையும்… வெறுமையையும்.. தனிமையையும்… வார்த்தைகளில் கடத்திவிட முடியுமா என்ன..?? வாவ்…!!! எனக்கு ரொம்ப நாளாவே இந்த ‘பின்நவீனத்துவம்’னா என்னன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ராஜேஷ் அட்டகாசமா ஒரு விளக்கம் (மினி தொடர்) எழுதிருந்தாரு (கட்டுரை இங்கே). கொஞ்சமா புரிஞ்சாலும் அதை படிச்சப்புறமும் என்னால சரியா ரிலேட் பண்ணிக்க முடியல. மனோஜின் கதைகள் postmodernismனா என்னன்னு ஓரளவுக்கு உணர்த்துச்சு.

இந்தத் தொகுப்புலேயே என்னுடைய personal favorite-னா அது ‘கச்சை’ சிறுகதை தான். அதிலிருக்குற அமானுஷ்யமும்… அழகும்… ஊடுபாவாக சொல்லப்படுற சாதீய/சமூகக் கொடுமைகள பத்தின தகவல்களும்… நிச்சயமா இதுவொரு க்ளாசிக்னு சொல்லலாம். ‘அச்சாவோட சிச்சாமணி’ன்னு ஒரு கதை இருக்கு பன்னிரெண்டாவதா இருந்தாலும் நீங்க இத கடைசியிலேயே படிக்கலாம். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டப்புறம் மனோஜ் தந்த ஸ்வீட் பீடா. நெஜம்மாவே விழுந்து பொரண்டு சிரிச்சேன்.

மொத்தத்துல புனைவு விரும்பிகளுக்கு/சிறுகதை ரசிகர்களுக்கு இது ஒரு செம்ம வெரைட்டியான விருந்து. கண்டிப்பா படிச்சுடுங்க.

புனைவின் நிழல்
ஆசிரியர்-மனோஜ்
உயிர்மை பதிப்பகம்
விலை – ரூ.70
ISBN:81-89912-00-3


ஆன்லைனில் வாங்க : இங்கு க்ளிக்கவும்

ஞாயிறு, 4 மே, 2014

Here Comes The Boom (2012) - இது ‘மான் கராத்தே’ அல்ல

நம்ம படத்தோட ஹீரோ ஒரு அப்பாவி.பாக்சிங் மாதிரியான சண்டைகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமா ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டை போட்டில கலந்துக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுது.எதிராளி ஒரு professional fighter. தோல்விங்குற விஷயத்த கேள்வியேபடாத Killer அவரு. நம்மாள் அதுநாள் வரைக்கும் காமெடியான opponents கூடவே மோதி ஜெயிச்சவரு.இந்த மிகப்பெரிய போட்டில எதிராளி அவ்ளோ டெர்ரர் பார்ட்டின்னு தெரிஞ்சதும் நம்ம ஹீரோவுடைய சுற்றமும் நட்பும் இவர சண்ட போட வேணாம்னு தடுக்குறாங்க.ஆனா நம்ம ஹீரோ வெறியோட போட்டில கலந்துக்குறாரு.முதல் ரவுண்ட்லேயே சாவடி வாங்குறாரு. எப்படியோ தாகுப்பிடிச்சு கடைசில.. ஹீரோ ஜெயிச்சாரா... இல்லையா...?? க்ளைமாக்ஸ்.... 

Wait... இந்தக் கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு உங்களுக்கு டவுட் வருமே…??! ஆங்.. நம்ப future perfect continuous சூப்பரு இசுடாரு சினா.கானா ’நடிச்ச’ டுபாக்கூர் கராத்தேங்குற காமெடி (!) காவியம் ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்பில்ல.ஏன்னா இது அது இல்ல.இது வேற படம். ஒரு ‘நிஜமான’ ஸ்போர்ட்ஸ் காமெடி படம்.


காமெடி படத்துக்கெல்லாம் எதுக்கு சார் லாஜிக்னு கேக்குறவங்க தயவுசெஞ்சு இந்த படத்த ஒரு தபா பாத்துடுங்க.கதைப்படி ஹீரோ  ஒரு பயாலஜி வாத்தியார். எப்பவோ சின்ன வயசுல ஸ்கூல் மல்யுத்த டீம்ல இருந்துருக்காரு. அவ்ளோதான் அவருக்கும் சண்டைக்கும் இருக்குற தொடர்பு.சரி இவருக்கு ஏன் இந்த  அடிதடியெல்லாம்.காதல்..கீதல்னு எதுலயாவது உழுந்து... காதலிய இம்ப்ரெஸ் பண்றதுக்காக குத்துச்சண்டைக்கு போறாரா..?? ஒரு புடலங்காயும் இல்ல.

அவரு வேல செய்யுற ஸ்கூல்ல அரசாங்க ஸ்பான்சர்ல ஒரு இசைப்பயிற்சி வகுப்பு நடந்துட்டிருக்கு. அத ஒரு (அல்மோஸ்ட்) வயசான ம்யூசிக் வாத்தியார் தான் நடத்துறாரு. திடீர்னு அரசாங்கம் அந்த இசை வகுப்புகளுக்கான நிதியை கட் பண்ணிடறதனால பள்ளி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையை காரணமா காட்டி இசை பயிற்சி வகுப்புகளுக்கு கத்தரி போடப்போறதா சொல்றாங்க. அப்புடி நிறுத்துனா obviously நம்ப வயசான வாத்தியாரையும் வூட்டுக்கு அனுப்பிடுவாங்க. அவரு குடும்பஸ்தரு. அவருடைய குடும்பத்துக்கு ஒரு புது ஆள் வேற ‘ஆன் தி வே’.

இந்த நெலமைல அவருக்கு வேல போயிட்டா என்ன பண்ணுவார்னு பாவப்பட்டு அதுக்கு நிதி திரட்டத்தான் நம்ப ஹீரோ சின்ன லெவல் சண்டைப்போட்டிகள்ல கலந்துக்க யோசிக்கிறாரு. சின்ன லெவல் போட்டியா இருந்தாலும் பயிற்சி இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுங்குறதுனால அவரு பார்ட் டைமா பாடம் நடத்துற immigrants கூட்டத்துலேர்ந்து ஒரு மெக்சிகன் ‘முன்னாள்’ குத்துச்சண்டையாளன தேர்ந்தெடுத்து அவன்கிட்ட உதவி கேக்குறாரு. அவரும் சாதாரணமா ஒத்துக்கல...எப்டியோ அவர கன்வின்ஸ் பண்ணி பயிற்சியெடுக்க ஆரம்பிச்சு சின்ன சின்ன போட்டிகளா ஜெயிக்க ஆரம்பிக்குறாரு. அதுல   வர்ர பணத்தையெல்லாம் அவங்க ஸ்கூல் அக்கவுண்டண்ட் கிட்ட கொடுத்து வைக்குறாரு (இத ஞாபகம் வெச்சுக்கோங்க..கடைசில இத வெச்சு தான் ட்விஸ்ட்..)

நம்ப ஹீரொவுடைய சண்டைகள பாக்குற UFC (Ultimate Fighting Championship) ஆளுங்க அவருக்கு UFCல ஒரு ஃபைட் பண்ண ஒரு சான்ஸ் தராங்க.
அதுக்கப்புறம்….

முதல் பத்திய படிச்சுக்கோங்க…!!

செம்ம டைம்பாஸ் படம்… சிரிப்புக்கு நான் உத்திரவாதம் J J ஜாலியா பாக்கலாம்.

கொசுறு: இந்த படத்துல வர்ரது exact-ஆ பாக்சிங் இல்ல. ஒரு மாதிரி எல்லா சண்டையும் கலந்த Mixed Martial Arts(MMA). இதே MMA வெச்சு வெளிவந்த ஒரு சீரியஸ் ஆக்‌ஷன் படத்தைப் பத்தி இங்கே க்ளிக் பண்ணி படிக்கலாம்.
Images Courtesy: Original Uploaders

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தனிமைத் திணை


நீ களவாடிச் செல்லும் என்னுடைமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது..!


என் இரவுகள்... 


என் தனிமை.. 


என உறக்கம்... 


என் கனவுகள்...

காணக் காத்திருத்தலின் சுகத்தை மட்டும் மிச்சமாய் விட்டுவிட்டு...


தனிமையும் தனிமையின் நிமித்தமுமாய் ஆன ஒரு புதுத் திணையில் என்னை இருத்திவிட்டு...


உனக்கும் எனக்குமான இடைவெளியை மட்டும் அதிகமாக்கி..


எங்கோ ஓடி மறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றாய் நீ.


சலிக்காமல் களைக்காமல் தேடியோடி வந்து கொண்டிருக்கின்றேன் நான்.

2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1. சாமானியனின் முகம் – சுகா – வம்சி பதிப்பகம் – ரூ.170

2. பீக்கதைகள் – பெருமாள் முருகன் – அடையாளம் பதிப்பகம் – ரூ.60

3. அனுபிஸ் மர்மம் – சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்) – பாரதி புத்தகாலயம் – ரூ.30

4. நெப்போலியனின் கடிதம் - சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்) – பாரதி புத்தகாலயம் – ரூ.50

5. ’குடி’யின்றி அமையா உலகு… - முத்தையா வெள்ளையன் (தொகுப்பு) – புலம் – ரூ.120

6. என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா ப்ரூஸ் – விருட்சம் – ரூ.100

7. வளையல்கள் அடித்த லூட்டி – விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

8. பென்சில்களின் அட்டகாசம் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

9. மாகடிகாரம் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.30

10. டாலும் ழீயும் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

11. மலர் அல்ஜீப்ரா – ‘ஆயிஷா’ இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் - ரூ.30

12. புனைவின் நிழல் – மனோஜ் – உயிர்மை – ரூ.70

13. பட்டு – அலெசான்ட்ரோ பாரிக்கோ (சுகுமாரன்) – காலச்சுவடு – ரூ.95

14. எப்படி ஜெயித்தேன் – எம்.ஜி.ஆர் – நாதன் பதிப்பகம் – ரூ.50

15. ஆதிமங்கலத்து விசேஷங்கள் – க.சீ.சிவகுமார் – விகடன் பிரசுரம் – ரூ.50

16. உலக இலக்கிய பேருரைகள் – ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் –   
 எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60

17. அணுவின் உள்ளே – ஐஸக் அஸிமோவ் (என்.ராமதுரை) – தையல் வெளியீடு – ரூ.70

18. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன் – காலச்சுவடு

19. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா – உயிர்மை – ரூ.175

20. கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை – ரூ.70

21. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – விசா பப்ளிகேஷன்ஸ்

22. விவாதங்கள் விமர்சனங்கள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்

23. தோரணத்து மாவிலைகள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்

24. நேனோ-ஓர் அறிமுகம் – அருண் நரசிம்மன் – தமிழினி – ரூ.75

25. ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் ஞானப்பறவை – ரிச்சர்ட் பாக் – விஜயா 
பதிப்பகம் – ரூ.35

26. இராசராசன் துணுக்குகள் நூறு – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

27. லிண்ட்சே லோஹன் – w/o மாரியப்பன் – வா.மணிகண்டன் – யாவரும்.காம் – ரூ.90

28. 6174 – சுதாகர் கஸ்தூரி – வம்சி பதிப்பகம் – ரூ.300


புத்தகங்கள் வாங்குவதைக் காட்டிலும் நண்பர்களையும் ஆதர்சங்களையும் சந்திப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்காகத்தான் ஓவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது குதூகலாமாய் போய் வருவது. இந்த முறையும் ஏகப்பட்ட நண்பர்களை சந்தித்தேன்.புதிய நட்புகள் கிடைக்கப் பெற்றேன். இதுவரையில் நேரில் பார்த்திராத ஆதர்சங்கள் பலரையும் பார்த்துப் பேசியதில் மகிழ்ச்சி.

பட்டியலில் சில பல புத்தகங்கள் நண்பர்கள் பரிசளித்தவை. பரிசல் அண்ணனின் திடீர் பரிசு தான் ஜி.நாகராஜனின் புத்தகம். ரொம்ப மகிழ்ச்சியளித்தது J J. சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தும் என் மாமா வாங்கித் தந்தவை. ரொம்பவே எதிர்பார்த்து புத்தகத் திருவிழா நிறைவடையும் வரையில் வெளிவராத புத்தகங்கள் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு (உயிர்மை), அருண் நரசிம்மனின் அறிவியல் கட்டுரைகள் (தமிழினி, அமிர்தா) ஆகியவை. ஏகப்பட்ட புதினங்களை நண்பன் வேதாளம் வாங்கிக் குவித்திருப்பதால் ‘டேய் நீ எதுவும் வாங்கிடாத…என்கிட்ட கேட்டுட்டு வாங்கு’ என மிரட்டல் விடுத்திருந்தான்.

அதனால் முடிந்தவரையில் புனைவல்லாதவையில் அறிவியல் கட்டுரைகள், பிற கட்டுரை தொகுப்புகள், சிறுவர் இலக்கியம், வரலாறு தொடர்பான புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். வாங்குறது முக்கியமில்ல படிக்குறது தான் முக்கியம் என்று யாரவது கமெண்ட் பண்ணும் அபாயமிருப்பதால் நிச்சயம் எல்லா புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன் என முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? - ராஜ் சிவா


காலம்: 5054A.D 
மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது. ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகனங்கள் சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. பரிணாம வளர்ச்சியினால் மனிதர்களாகிய நமது உருவமும் மொழியும் உருமாறிவிட்டிருக்கின்றன. காலவெளியில் பயணம் செய்யக்கூடியடைம் மெஷினைகூட உருவாக்கிவிட்டோம்அப்போது மனித இனத்துக்கு ஒரு விபரீத ஆசை வருகின்றது. அது தம்முடைய மூதாதையர்களை, காலத்தில் பின்னோக்கி பயணம் செய்து சந்திக்கவேண்டுமென்பதே. ‘டைம் மெஷினில்வார்ம் ஹோல் ஒன்றை உருவாக்கி 3000 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கின்றார்கள். 1… 2… 3… @#$@#%#$%^$^*&^* ஸூம்…!!!!! 

காலம்: 2014 A.D 
ஏதோவொரு நாட்டின் ஏதோவொரு கிராமம். திடீரெனத் தோன்றும் ஒளிவெள்ளத்திலிருந்து இறங்குகின்றது ஒரு வித்தியாசமான விண்கலம். அதிலிருந்து இறங்கிவரும் பரிணாமவளர்ச்சியில் முற்றிலும் வேறுபட்ட எதிர்காலத்தின் மனிதர்களைச் சமகால மனிதர்களாகிய நம்மால் நம்மவர்களாக நம்பமுடியவில்லைஅவர்களின் உருவத்தையும் பேசும் மொழியும் கண்டு திகைக்கின்றோம். தொழில்நுட்பத்தில் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்ற அவர்கள் நிச்சயம் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக்கூடுமென முடிவுசெய்கின்றோம. நம்முடன் பேசி எதையும் புரியவைக்கமுடியாத அவர்கள் தாங்கள் வந்துவிட்டு சென்றதற்கான அடையாளமாக எதையாவது செய்துவிட்டுச் செல்வோம் எனமுடிவு செய்து பூமியில் ஆங்காங்கே மிகப்பெரிய அடையாளங்களை ஏற்படுத்திவிட்டு தங்களின் காலத்துக்குத் திரும்பிச் செல்கின்றார்கள்

கட்…!! 


vமேலே நீங்கள் படித்த நிகழ்வு ஏதோ அறிவியல் புனைகதை போலத் தோன்றியதா உங்களுக்கு…?? 
v  இப்படி ஒரு நிகழ்வு உண்மையில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன…?? 
v ஒருவேளை அப்படி உண்மையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததற்கான அடையாளங்களைக் கண்டால் இதெல்லாம் உண்மை என்று ஒப்புக்கொள்வீர்களா…?? 
vஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி நிறையக் கதைகளை வாசித்திருக்கின்றோம்நிறையத் திரைப்படங்கள் பார்த்திருக்கின்றோம்.அதெல்லாம் நிஜமா ?? 
vஉண்மையாகவே இந்தப் பேரண்டத்தில் மனிதர்களான நம்மை விட அறிவிலுயர்ந்தவர்களாக எங்கேனும் ஒளியாண்டுகள் தொலைவுக்கப்பாலுள்ள ஒரு கோளில்உயிரினங்கள் வாழ்கின்றனவா…?? 

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? 

சரி.. கீழே இருக்கின்ற படங்களைப் பாருங்கள்…!! 



அற்புதமான கலைப் படைப்படைப்புகளாகத் தோன்றும் இந்தச் சித்திரங்களெல்லாம் யாரால்.. எங்கு.. எப்பொழுது வரையப்பட்டவை…??? என்ற கேள்வி எழுகிறதல்லவாஇவையெல்லாமே பயிர்வட்டங்கள் (Crop Circles) என்று அழைக்கப்படுகிற, வயல்வெளிகளில் சிலமணி நேரங்களில் அதிசயமான முறையில், ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகளால் வரையப்பட்டதாகச் சொல்லப்படும் சித்திரங்கள். (முதலிரண்டு பத்திகளில் படித்த கற்பனையின் க்ளைமேக்ஸ் நினைவுக்கு வருகின்றதா…???ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தும் இந்தப் பயிர்வட்டங்கள் பற்றிய தகவலோடு தான் தொடங்குகின்றதுராஜ் சிவாஅவர்கள் எழுதி உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும்               
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ?’ கட்டுரைத் தொகுப்பு

இந்த மாதிரியான பயிர் வட்டங்களை வரைவதற்கு தேவைப்படும் அசாத்தியமான மனித உழைப்பும், இவைகளின் அளவீடுகள் கொண்டிருக்கும் வடிவியல் துல்லியத் தன்மையும் (Geometric Accuracy), இவைகள் உருவாக/உருவாக்கப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் ஆகியவையே இந்த பயிர்வட்டங்கள் மனிதர்களால் வரையப்பட்டவையல்ல என்று ஆராய்ச்சியாளார்கள் உறுதியாகச் சொல்வதற்கான காரணங்கள்.  இந்த முதல் தகவல் அளிக்கின்ற ஆச்சரியத்தில் அசந்து போகும் நம்மை, மேலும் மேலும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளாலும் சான்றுகளாலும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றார் ‘ராஜ் சிவா’. 

தகவல்களைப் பொருத்தமட்டிலும் UFO, ஏலியன்கள் பூமிக்கு வந்த நிகழ்வுகள், ரோஸ்வெல் அதிசயம், காலப்பயணம், பிரபஞ்சத்தின் தோற்றம், Parallel Universe, SETI, அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘ஏரியா-51’ பகுதி,  ஏலியன்களோடு பேரம் பேசிய அமெரிக்க பிரதமர், காலவெளிப் பயணம் மேற்கொண்ட பெண் ஆஸ்ட்ரானட், ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம், String Theory, M Theory, ஏலியன் அனுப்பிய ரேடியோ சிக்னல்கள்...என ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன. இத்தனை தகவல்களையும் மிகவும் நேர்த்தியாகவும் வாசிப்பவனுக்கு எந்த குழப்பமுமில்லாமலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய விதத்திலேயே எழுத்தாளர் வெற்றி பெற்றுவிட்டார். 



பொதுவாக ஏலியன்கள் மாதிரியான மர்மான விஷயங்களைப் பற்றிய தகவல்களை எழுதுகிறவர்களோ பேசுகிறவர்களோ அந்த விஷயத்தின் நம்பகத்தன்மை குறித்த ஓர் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்வது மிகக் கடினம். எழுதப்பட்ட/சொல்லப்பட்ட தகவல்களைப் படிக்கும் வாசகனின் அறியாமை அல்லது அறிவுக்கூர்மையைப் பொருத்து சொல்லப்படும் விஷயங்களை, முழுமையாக நம்பவோ அல்லது முழுமையாக மறுக்கவோ வாய்ப்பிருக்கின்றது

இங்கே கட்டுரையாசிரியர் அல்லது எழுத்தாளரின் பணி கயிற்றின் மேல் நடப்பது போலாகிவிடுகிறது (வேற உதாரணம் கெடைக்கல.. க்ளிஷே தான்..மன்னிச்சுடுங்க) அறிவியலின் பக்கமும் நம்பிக்கையின் பக்கமும் சரிசமமாகத்தான் எந்தக் கருத்தையும் வாசகனிடம் முன்வைக்க வேண்டியிருக்கின்றது. இன்னது தான் உண்மை...இதுதான் சரி... என்கிற முடிவெடுக்கும் உரிமையையும் வாசகனுக்கே அளித்துவிடுகின்றார். அதுவே அறிவியல் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் அறிவியலுக்கு செய்கின்ற மிகப்பெரிய நியாயமுமாகும். அந்தவகையில் அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏலியன் முதலிய விஷயங்களில் ஆர்வமுடையவர்களுக்கு ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ?’ புத்தகம் ஒரு மறக்கமுடியாத பரிசு. ’ராஜ் சிவா’ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....!!

புத்தாண்டன்று நடைபெற்ற உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசிய ‘கிழக்கு’ பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அறிமுகக்  கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.