வியாழன், 19 மார்ச், 2015

புல்லட்டுப் பாண்டியின் கதை


பெரும்பாலானவங்களுக்கு மோட்டர்பைக் மேல ரொம்ப சின்ன வயசுலயே ஒரு விருப்பமும் ஆர்வமும் வந்துடும்.அதுக்குக் காரணமா நம்ம அப்பாவுடைய ஸ்கூட்டரோ, இல்ல மாமாவுடைய  யமஹாவோ எதுவா வேணா இருக்கலாம். எனக்கு அப்டி மொத மொதல்ல அறிமுகமானது ராஜ்தூத் வண்டிதான். (வழக்கம்போல) என் தாய் மாமாவுடைய வண்டி அது. சாவித்துவாரம் ஹெட்லைட் மேல இருக்கும். சாவி சின்னதா சுத்தியல் மாதிரி தலைல ஒரு கொண்டையோட இருக்கு. சின்ன வயசுல, டேங்க்ல பெட்ரோல் வாசனைய மோப்பம் பிடிக்கிறது, ஸ்டாண்ட் போட்ட வண்டி மேல ஏறி போஸ் குடுக்குறதுன்னு எல்லா கிறுக்குத் தனமும் பண்ணிருக்கேன்.வித்தியாசமான சத்தம் அந்த வண்டியோடது.மாமாவுடைய மொத்த குடும்பத்துக்கு எமோஷனலி வெரி அட்டாச்டு வண்டி.

 அப்புறம் ரொம்ப கவர்ந்த வண்டின்னா அது யமஹா தான்.80கள், 90கள்ல பிறந்தவங்கள்ல யமஹா RX 100ஐ பிடிக்காதுன்னு இதுவரைக்கும் யாரும் சொல்லிக் கேட்டதில்ல.அந்த இஞ்சின் சத்தமும், உறுமலும்...! வாய்ப்பேயில்ல. நான் மொத மொதல்லப் பாத்தது எங்க ஊர்ல ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் பையன் ஓட்டிதான். சும்மா தாறுமாறா பறப்பாப்ள.

இதுல அந்த பைலட் வண்டிங்க இல்ல :( :(
புல்லட் எனக்கு அறிமுகமானது ரொம்ப லேட்டுதான்.ஆனாலும் எல்லாரையும் போல அந்த வண்டியை தனியா கவனிக்க வெச்சது அந்த ’டுப்...டுப்..டுப்..’சத்தம் தான். திருவாரூர் அல்லது சுத்துவட்டார மக்களுக்கு அங்க நடக்குற காணும் பொங்கல் மோட்டார்சைக்கிள் ரேஸ் பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் .100சிசி மொபெட்டுகளுக்கான பந்தயம் நடக்கும் போது அந்த வண்டிகள்லாம் வர்ரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி ரோட்ல ரெண்டு பக்கம் நிக்கிற கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் ஒரு பாதுகாப்புக்காகவும் ரெண்டு பேர் புல்லட்ல செம்ம வேகமா வருவாங்க. அந்த வண்டிகளுக்கு பைலட் வண்டின்னு பேரு.அது வந்தா பின்னாடி ரேஸ் வண்டி வரப்போகுதுன்னு புரிஞ்சுக்கலாம்.அந்த ரெண்டு புல்லட்டும் சும்மா அதிர அதிர வரதப் பாத்து ஊரே வாயப் பொளக்கும். அத ஓட்டுறதுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளுடைய ஜம்போ பாடிகார்ட்ஸ் மத்தியில செம்ம போட்டி நடக்கும். அப்படியாப்பட்ட ஒரு காணும் பொங்கல் ரேஸ்ல தான் நான் மொத மொதல்ல புல்லட்டப் பாத்தது. அப்போ எங்கப்பாட்ட இருந்தது வெஸ்பா ஸ்கூட்டரு.Obviously மனசு புல்லட் பக்கம் சாய்ஞ்சுடுச்சு.இப்படியாக என் வாழ்க்கைல நான் மூனாவதா பாத்து அசந்த புல்லட்டு.. என் மனச முழுசா ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது.

ஸ்டாப் ப்லாக்ல... நான் இப்போ பெரிய பையன் ஆயிட்டேன்.காலேஜ் போக ஆரம்பிச்சாச்சு.ஆனாலும் வண்டி வாங்கவுமில்ல ஓட்டவும் கத்துக்கல.என் தோஸ்த்து சிவாவுடைய கேலிபர்ல தான் வண்டியோட்டிக் கத்துகிட்டதெல்லாம்.அப்போ சிவராஜ்னு இன்னொரு பங்காளி ஒரு யமஹா RX100 வாங்குனான்.என் வாழ்க்கைல மறுபடி வந்துச்சு யமஹா.வண்டிய வாங்குன அசல் விலைய விட 23 மடங்கு அதிகமா செலவு பண்ணிருப்பான் அதுக்கு.அத்தன ஆக்சிடண்ட். அத்தன் ரீமாடல்.அந்த வண்டிய அப்போ எனக்கு ஸ்டார்ட் மட்டும் தான் பண்ண முடியும். கியர் போட்டு க்ளட்ச்ச விட்டா வண்டி ஆஃபாயிடும்.கருமம்...!அவ்ளோ சென்சிடிவ் அது.செம்ம பிக்கப் வேற. எல்லாரும் தாறுமாறா கலாய்ப்பானுக.வண்டிய நீ ஒரு பத்தடி மூவ் பண்ணிட்டேன்னா ஒரு நாள் பூரா உங்கிட்டயே குடுத்துடுறேன்னு எம்மேல நம்பிக்கையா பெட்டு வேற கட்டுவான் சிவராஜ்.நமக்கு... ஊஹும்... ஸ்டார்ட்டு....கியரு..க்ளட்ச்சு... டுஜுக்; ஸ்டார்ட்டு....கியரு..க்ளட்ச்சு... டுஜுக்; போகாது ஜீவாஆஆஆ தான்.

அப்போ எங்க க்ருப் பசங்கள்ல புல்லட் ஓட்னவங்க ரெண்டே பேர் தான்.ஒருத்தன் திலீபன்.இன்னொருத்தன் விஜய். திலீபன் ஸ்கூல் படிக்கும்போதே புல்லட்ல போறவன்.பட்டைய கெளப்புவான்.அப்போ அவ்வளவா பழக்கமில்ல.ஆனா ஏரியால அடிக்கடி பாப்பேன். விஜய் ஓட்டுனது அவன் ஃப்ரெண்டோட புல்லட்டு; 86 மாடல் - சும்மா ரதம் மாதிரி இருக்கும்.அப்பப்போ பசங்க தங்கியிருந்த ரூம்க்கு எடுத்துட்டு வருவான்.அவன்கிட்டேயும் கெஞ்சுவேன் ஒரு ரவுண்டு டா ன்னு. இந்தான்னு வண்டிய கைல குடுத்துட்டு.. செண்டர் ஸ்டாண்ட் போட்டுடு.சாவியக் குடுத்துர்ரேன்னு சொல்லுவான்.அப்போ நா இருந்த பாடி கண்டிஷனுக்கு  (56 கிலோ) வண்டிய என்னால தாங்கிப் பிடிக்கவே முடியாது.சோ.. மூஞ்ச தொங்கப்போட்டுட்டு வண்டியக் குடுத்துடுவேன்.


அடுத்த ஸ்டாப் ப்லாக்...!காலேஜ் முடிஞ்சு சென்னைப் பயணம்...மொதல் வேல... வேற வேல... வீடு மாற்றம்..ஏரியா மாற்றம்... ஃபேமிலி ஷிஃப்டிங்.எல்லாம் ஆச்சு.அப்பவும் நான் வண்டி வாங்கல.MTC அண்ட் எலெக்ட்ரிக் ட்ரெய்ன் துணைன்னு பொழப்பு போச்சு.அப்போ எங்க அத்தாச்சிக்கு கல்யாணமாகி எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல குடிவந்தாங்க. எங்க அண்ணன் புது மாப்பிள்ளை, அது வரைக்கும் பேச்சுலரா தங்கியிருந்த வீடு அது. அவர் ஒரு வண்டி வெச்சுருந்தாரு. கறுப்புக் கலர்..ஷார்ட்டா.. கொஞ்சம் பழசா.. வேறென்ன.. சாட்சாத் யமஹாவேதான். ஆனா RX-135.சரி அண்ணன் வண்டிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டீங்கன்னா.. கனெக்‌ஷன் இருக்கு. அண்ணன் ஃபேமிலிமேன் ஆகிட்டதால புது வண்டி வாங்க வேண்டிய peer pressure. So, ஒரு புது பச்சை passion வந்து எறங்குச்சு.அப்புறம் யமஹாவை யாரும் சீண்டல. எங்க வீடு பக்கம்ங்குறதுனால அண்ணன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி அடிக்கடி ஒட்டிட்டு போய்டுவேன். என் மச்சான் சென்னை வரும்போது மட்டும் நானும் அவனும் சேந்து சுத்துவோம்.மத்த நேரத்துல எங்க வீட்லதான் இருக்கும். 

இந்த RX135யா நான் ஓட்டுன அந்த டைம் பீரியட் ஒரு மிக மிக முக்கியமான காலகட்டம் எனக்கு. சென்னைய நெறைய சுத்தவேண்டியிருந்துச்சு.மறக்க முடியாத சில அதிகாலை ரைடெல்லாம் அதுல தான்.அதனால அந்த வண்டி கூட ஒரு மாறி எமோஷனலா அட்டாச் ஆகியிருந்தேன். அப்புறம் வேற காரணங்களால அந்த வண்டி சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கே பயனமாச்சு.நான் மறுபடியும் பைக்கில்லாத பக்கியா.. தனிமரமா நின்னேன்.லவ் ஃபெயிலியரானவங்க கொஞ்ச நாள் எந்த ஜோடியப் பாத்தாலும் கடுப்பாகுற மாதிரி எந்த வண்டியப் பாத்தாலும் உக்கிரமா மொறச்சுட்டு மூஞ்ச திருப்பிக்குவேன்.அப்புடியே சில வருஷங்கள் போச்சு.வேற ஆஃபிஸ் மாற வேண்டிய நேரம்.

குருவிக்குக் கூட கூடு இருக்கிறது..உங்களுக்கென்று ஒரு வீடு வேண்டாமா ரேஞ்சுல பார்க்குமிடமெங்கும் நீக்கமற பைக் விளம்பரங்கள்.சரி எதானாலும் ஆச்சு இந்த வருஷம் வண்டி வாங்கியே தீரனும்னு கொஞ்சம் காசு சேக்க ஆரம்பிச்சேன்.அதுவும் புல்லட்டே தான் வாங்கனும்னு முடிவு பண்ணேன்.அம்மா அப்பாவும் உன் இஷ்டம்ப்பான்னு க்ரீன் சிக்னல் குடுத்துட்டாங்க.சில மாதங்கள்...ஓரளவு டீசன்ட் அமவுண்ட் சேந்ததும் வண்டி ரேட் விசாரிக்க ஆரம்பிச்சேன். அடுத்த பகீர்.நான் சேத்த அமவுண்டு வண்டியுடைய மொத்த விலைல 40% தான்.ரைட்டு லோன் போடுவோம்னு முடிவு பண்ணி லோனப் போட்டு, ஒருவழியா துட்டு ரெடி பண்ணிட்டு அம்மாவக் கூட்டிட்டு விருகம்பாக்கம் புல்லட் ஷோரூமுக்கு போனேன். எல்லா மாடலையும் வளைச்சு வளைச்சு பாத்துட்டு..ஆங் இதெவ்ளோ,,, ஓகோ..செல்லாது செல்லாது..ன்னு ஒவ்வொன்னா ஒதுக்கி.. கடேசியா Black Electra ன்னு முடிவு பண்ணி புக் பண்ணா...அடுத்த குண்டு; மூனு மாசம் வெய்ட்டிங்.சரி பரவால்லன்னு புக் பண்ணியாச்சு.நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்குக் காத்திருக்குற ஃபீலிங்கு.என் அதிர்ஷ்டம் புக் பண்ணி பதினெட்டாவது நாள் ஷோரூம்லேர்ந்து ஒரு ஃபோன் கால்.”சார் உங்களுக்கு முன்னாடி புக் பண்ணவரு லோன் அரேஞ்ச் பண்ணல.நீங்க கேஷ் ரெடியா வெச்சுருந்தீங்கன்னா நாளைக்கே வண்டிய எடுத்துக்கலாம்”னு காதுல தேனை பாய்ச்சுனாங்க. என்ன ஒரு ஆனந்தம் எனக்கு.. தக தகன்னு குதிச்சு ஒடிப்போய் FD போட்ருந்த மொத்த துட்டையும் தொடச்சு எடுத்து.செக் ரெடி பண்ணிட்டு அன்னைக்கு சாய்ந்திரமே ஷோரூம்ல குடுத்துட்டேன்.ரெஜிஸ்ட்ரேஷனுக்கு மூனு நாள் ஆகும்னு சொன்னாங்க. என்னடா இது சுதர்சனுக்கு வந்த சோதனைன்னு நொந்துகிட்டு இன்னொரு மூனு நாள் தானன்னு பல்லக் கடிச்சுகிட்டு வெய்ட் பண்ணேன். 


கடேசியா..அந்த நாளும் வந்திடாதோன்னு ஏங்குன அந்த நாள் வந்துச்சு.எனக்கே எனக்குன்னு நான் வண்டி வாங்குன..அதுவும் புல்லட்டே வாங்குன நாள்.காலைலேயே ஃபோன் பண்ணிட்டாங்க வந்து வண்டிய எடுத்துக்கச் சொல்லி. சாயந்திரமா என் ஃப்ரெண்டு சந்தோஷ கூப்டுகிட்டு அங்க போனேன். இஞ்சியர் சின்னதா ஒரு ஹேண்ட்லிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் இண்ட்ரோ குடுத்து முடிச்சுட்டு.வண்டி சாவிய என் கைல குடுத்தாரு. நான் அத சந்தோஷ் கைல குடுத்து ‘மாப்ள..வண்டிய எறக்குடா’ன்னேன்.’டேய்.. சும்மா நீயே எறக்குடா.. ஏறு இந்தா’ன்னு திருப்பி என் கைல குடுத்தான். வண்டியில ஏறி உக்காந்து சாவியப் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஷோரும்லேர்ந்து ரோட்ல எறக்குன அந்த செகண்ட் எனக்கு கண்ணே கலங்கிடுச்சு.

அம்மாவோட கண்டிஷன்னால கோயில் பூஜைன்னு எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து.அம்மாவ ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப் போனேன்.ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டு காம்ப்ளான் விளம்பரம் பாத்துட்டு மல்லுக்கட்டி அவங்கள சைக்கிள்ள உக்காரவெச்சு டபுள்ஸ் அடிச்சப்போ என்னா ரியாக்‌ஷன் குடுத்தாங்களோ அதே ’கண்ல தண்ணி-ஹமாம் அம்மா’ ரியாக்‌ஷன்.அந்த நாள் தொடங்கி இந்த மூனு மாசத்துல அப்படி இப்படின்னு இன்னையோட வெற்றிகரமா ஐயாயிரம் கிலோ மீட்டர் ஓட்டி முடிச்சுட்டேன். அது குடுக்குற சந்தோஷத்தையும்..நம்ம கஷ்டப்பட்டு வாங்குனதுங்குற தட் மொமன்ட்டையும் ரசிச்சு ரசிச்சு அனுபவிச்சுட்டு இருக்கேன்.அதாகப்பட்டது...நாஞ்சொல்லவந்தது என்னன்னா.... பைக் வாங்குங்க பாஸ்... லைஃப் நல்லாருக்கும். :) :) :)

1 கருத்து :

  1. சிறு வயதில் நான் வாங்க விருப்ப பட்ட வாகனம் Sunny ☺

    பலாக் சூப்பர் 👌

    பதிலளிநீக்கு