சனி, 2 மே, 2015

வால்ட் டிஸ்னியின் மேரி பாப்பின்ஸ்



Courtesy: http://tweethope.com/
ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு புதிய படைப்பை உருவாக்கும் போது முழு சுதந்திரத்துடனும் தாங்கள் விரும்பியதை உயிர்ப்பிக்கின்ற உரிமையுடன் தான் செயல்படுகிறார்கள்.தான் வரைகின்ற கேன்வாஸில் இன்ன இடத்தில் இந்த பொருள் அல்லது இந்த நிறம் தான் இருக்கப் போகிறதென தீர்மானிப்பது அந்த ஓவியரின் விருப்பம்.அது அவரது உரிமையும் கூட.ஒரு சிறுகதை அல்லது நாவல் எழுதுகிற எழுத்தாளருக்கும்,ஒரு கவிஞனுக்கும்,ஒரு திரைப்படத்தை எழுதி இயக்குகிற இயக்குநருக்கும் கூட இது பொருந்தும்.

இதில் ஒரு படைப்பை வேறொடு படைப்பாளி எடுத்தாளும்போது நேர்கிற சிக்கல்கள் சாதாரணமானவையல்ல. உதாரணம் ஒரு நாவல் அல்லது சிறுகதை அல்லது நாடகம் திரைப்படமாக்கப் படும்போது வருகிற  கருத்து வேறுபாடுகள் அல்லது ஒரு மொழியில் எடுக்கப்படுகிற திரைப்படத்தை வேறு மொழியில் மறுவுருவாக்கம் செய்யும்போது நேர்கிற மோதல்கள் ஆகியவை.
என்னதான் மோதல்கள் இருந்தாலும் இறுதியாக ஒரு சிறந்த படைப்பின் இரண்டு வேறுபட்ட வடிவங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது ஒரு சிறந்த படைப்பின் சிதைந்த வடிவமும் கிடைக்கலாம்.

இப்போது...
Courtesy: http://schmoesknow.com/

கதை 1

வால்ட் டிஸ்னி... கனவுகளுக்கு உயிரூட்டி வண்ணம் தீட்டி உயிரோடு உலவவிட்ட creative monster/master. தன்னுடைய இரு செல்ல மகள்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு கதையினை குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார். அந்த கதை 'மேரி பாப்பின்ஸ்' என்கிற 1934ல் இருந்து வெளிவந்த கதை வரிசை. எழுதியவர் ஆஸ்த்ரேலியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் P.L.ட்ராவர்ஸ். (P.L.Travers) Strict and mean lady. யாருக்காகவும் எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாத பெண்மணி. அவரிடம் பேசி சம்மதம் வாங்கி உரிமை பெற்றால்தான் படமாக எடுக்க முடியும். வால்ட் டிஸ்னியின் சமூக அந்தஸ்த்துக்கு இது சாதாரண விஷயமாக நமக்குத் தோணலாம். ஆனால் இதனை சாதிக்க அவருக்கு 20 வருடங்கள் பிடித்தன. 

20 வருட வற்புறுத்தலுக்குப் பின் ட்ராவர்ஸ் தனது படைப்பின் உரிமையைத் தர முன் வருகிறார் ஆனால் கீழ்கண்ட நிபந்தனைகளை விதிக்கிறார்.
1. 100,000 டாலர்கள் அட்வான்ஸ்
2. திரைக்கதையை படித்துப் பார்த்து ஒப்புதல் அளிக்கிற உரிமை
3. அனிமேஷன் கூடாது
4. கதையின் உணர்வுகளை நீர்த்துப்போகச் செய்கிற மாதிரியான இசை கூடாது.

இப்படியான கண்டிப்புகளுக்கிடையே ட்ராவர்ஸின் மேற்பார்வையிலேயே படம் உருவாகின்றது. டிஸ்னி ஒவ்வொரு சின்ன விஷயத்துக்காகவும் போராட வேண்டி வருகிறது. ஒரு வழியாக படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது.

Courtesy: https://getnutmegged.files.wordpress.com

கதை-2

Courtesy: http://cdn.screenrant.com/


1900 களின் தொடக்கம்...
வங்கி ஊழியர் காஃப் (Goff) அவரது மனைவி மற்றும் மகள்களோடு தனது சொந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்குக் குடி பெயர்கிறார். எப்போதும் கொஞ்சம் போதையிலும் நிறைய கனவுகளிலும் மிதக்கிறவன். தனது மகள்களை தேவதை போல... ராஜகுமாரி போல நடத்த விரும்புகிறவன். குறிப்பாக அவனுடைய மூத்த மகள் ஹெலன் மீது அதீத பாசம் கொண்டவன்.அவளும் தந்தையைப் போலவே கற்பனை உலகில் மிதப்பவள். காஃபின் மனைவிக்கு இவர்களின் இந்த போக்கு பிடிப்பதில்லை. இதற்கிடையில் காஃபின் வேலை பறிபோகிறது. நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிறான். ஒரு நாள் இறந்தும் போகிறான்.குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகிறது. ஹெலனின் தாய் தற்கொலைக்கு முயன்று பின் தன் மனதை மாற்றிக்கொள்கிறாள். இந்நிலையில் ஹெலனின் தூரத்து உறவான ஒரு பெண் இவர்களை கவனித்துக் கொள்ளும் பொருட்டு வந்து சேர்கிறார். அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடியவளென ஹெலன் நம்புகிறாள். இந்த அத்தனை நிகழ்வுகளும் சிறுமி ஹெலன் மனதில் ஆழமாக பதிகின்றன.

இந்த இரண்டு கதைகளுக்கான காட்சிகளின் கோர்வையும் இரண்டுக்குமான தொடர்பும் தான் டாம் ஹாங்க்ஸ், காலின் ஃபேரல், எம்மா தாம்ஸன் ஆகியோர் நடித்த 'Saving Mr.Banks' திரைப்படம். ரொம்பவும் எளிமையான அழகான ஒரு feelgood திரைப்படம். ஒரு கதையை திரைப்படமாக்கியதைக் கூட எப்படி சுவாரஸ்யமான திரைப்படமாக்கலாமென்கிற டிஸ்னிகாரர்கள் திறமைக்கு இது ஒரு உதாரணம். நிச்சயம் பாருங்கள்.
   
மேலதிக triviaக்களுக்கு:

http://mentalfloss.com/article/51926/story-behind-saving-mr-banks-starring-tom-hanks-walt-disney
http://www.theguardian.com/books/2013/dec/07/pl-travers-saving-mr-banks-original-mary-poppins

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக