திங்கள், 9 ஜனவரி, 2017

பாம்புக்காதலன் - My Husband & Other Animals - Janaki Lenin


சென்றாண்டு படித்த புத்தகங்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமானவற்றுள் ஒன்றாக நிச்சயம் ஜானகி லெனின் எழுதிய 'My Husband and Other animals' புத்தகத்தைத் தான் சொல்லுவேன். இது ஒரு சிறந்த கலை வடிவமா எனக்கேட்டால் அதற்கான பதில் எனக்குத் தெரியாது, ஆனால் பூச்சிகள் குறித்தும், ஊர்வன குறித்தும், காடு, வனவிலங்குகளின் பழக்கங்கள் குறித்தும் நிச்சயம் ஒரு எளிய அறிமுகத்தைத் தரக்கூடிய புத்தகமாகத்தான் கருதுகிறேன்.‘The Hindu'வில் தொடர் பத்தியாக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பின் தொகுக்கப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.

ரோமுலஸ் விட்டேக்கர் (Romulus Whitaker) ஒரு herpetologist  (ஊர்வன மற்றம் நீர்நில உயிர்கள் தொடர்பான இயல் தான் herpetology). பிறந்தது அமெரிக்காவில். இளவயதில் குடும்பத்தோடு இந்தியாவுக்கு குடிபெயர்ந்துவிட்ட ரோமுக்கு பாம்புகளின் மீது சிறு வயதிலிருந்தே ஒரு தனி ஆர்வம். சென்னைவாசிகள் அனைவருக்கும் பரிச்சயமான கிண்டி பாம்புப் பண்ணையும் , கிழக்கு கடற்கரை சாலையின் முதலைப் பண்ணையும் இவர் உருவாக்கியவை தான். 1960களில் பாம்புகளை வேட்டையாடி வெளிநாட்டுக்கு கடத்தும் மாஃபியா மிகப்பெரியளவில் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய அரசாங்கம் மிகத் தாமதமாக விழித்துக்கொண்டு பாம்புகளின் ஏற்றுமதியை தடைசெய்கிறது. பாம்புகள் பிடிப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த இருளரின பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட, பாம்புகளைப் பாதுகாக்கவும் இருளரின மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் சென்னை பாம்புப் பண்ணை உருவாகிறது. மருத்துவத்துறையிலும், விஷ முறிவு மருந்துகளை உருவாக்கவும் தேவையான பாம்பு விஷத்தை எடுக்கிற வேலையில் இருளரின மக்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
Romulus Whitaker with a baby gharial. Photo: Shaju John
Courtesy: http://www.thehindu.com/features/metroplus/Into-the-wild-with-Whitaker/article14479839.ece

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் முதலைகள் அழிந்துவந்ததை தன் கணக்கெடுப்பின் மூலம் அறிந்துகொண்ட ரோம், அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தன்னுடைய சொந்தப் பணத்தில் 1976ல் தொடங்கியது தான் சென்னையின் முதலைப் பண்ணை. இன்று முதலைப் பண்ணையில் Mugger, Ghariyal உள்ளிட்ட 12வகை முதலைகள், ஆமைகள், பல்லிகள், பாம்புகள் ஆகியவை பாதுகாக்கப் படுகின்றன. ஒரு தனி மனிதனாக வனஉயிர் பாதுகாப்புக்காக (Wildlife Conservation) ரோம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மலைக்கவைக்கின்றன. அந்தமான்/நிக்கோபார் தீவுகளில் (அப்போது) அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் பொருட்டு தன்னுடைய அமெரிக்க பாஸ்போர்ட்டையே இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு அனுமதி வாங்கியிருக்கிறார்.
Courtesy: http://motivateme.in/

பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன பற்றி ஆராய்ச்சி செய்யவும் ஆவணப் படங்களை உருவாக்கவும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்திருக்கிறார் ரோம். அவருடைய பயண அனுபவங்களும் , அவரோடு பயணித்த ஜானகியின் அனுபவங்களுமே இந்தப் புத்தகத்தில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆவணப்படங்களின் மூலம் ஈட்டிய வருவாயையும், வெவ்வேறு அமைப்புகள் அங்கீகரித்து வழங்கிய விருதுப் பணத்தையும் வன உயிர்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே செலவளித்திருக்கிறார். கர்நாடகவின் ஆகும்பேவில் உள்ள ராஜநாகங்களைப் பற்றி ஆராய்ச்சியை முக்கியமாக மேற்கொள்ளும் Rainforest research center  அப்படி விருதுப் பணத்தில் உருவானது தான்.
Smokey Cat - பொகையன் புலி
Courtesy: Mr.Sandesh Kadur http://www.sandeshkadur.com/projects/monsoon/

பறவைகளுக்கு அடிக்கடி பெயர் மாற்றி அழைக்கப்படுவதனால் ஏற்படுகிற சிக்கல்கள், செங்கல்பட்டிலுள்ள தங்களுடைய பண்ணை வீட்டில் நீக்கமற நிறைந்திருந்த தவளைகள்; எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டு வந்தாலும் சரியாய் திரும்பி வந்துவிடுகிற அவற்றின் ஞாபகசக்தி, கிட்டத்தட்ட ஒரு சிறுத்தைப் புலியளவுக்கு இருக்கிற சாம்பல் நிற ‘பொகையன் புலி’ (Smokey Cat)ஐ  மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ரோம் பார்த்த கதை, ஒரு நாய்க்குட்டி போல கறித்துண்டு போட்டால் சொன்ன பேச்சைக் கேட்டு கட்டளைகளைப் புரிந்து கொண்டு நடக்கிற முதலைகளின் பழக்கம், ஒரு காலத்தில் போதைப் பொருள்/  விலங்குகள் கடத்தலில் ஈடுபட்டு பின்னாட்களில் உலகப்புகழ் பெற்ற கலைஞர் ஆண்டி வார்ஹோல் (Andy Warhol) உடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞராய் விளங்கிய Nat Finkelstein ஐ ஜானகி நேரில் பார்த்த கதை, பிற விலங்குகளின் குரலை மிமிக்ரி செய்கிற ’துடுப்பு வால் கரிச்சான்’ பறவை (Greater racket tailed Drongo), Parthenogenesis என்கிற ஆண் உயிரின் தேவை இல்லாமல் தானே கருத்தரிக்கிற ஒரு தன்மையைக் கொண்டிருக்கிற பாம்பு-பல்லிகள்-கொமடா ட்ராகன்கள் பற்றிய தகவல்கள், 'Watchers in the pond' மாதிரியான அறியப்படாத சின்ன புத்தகங்கள் பற்றிய அறிமுகம், அப்புறம் நிறைய....நிறைய.....பாம்புகள் பற்றிய தகவல்கள்..கதைகள்...! இப்படியாக நம்மைச் சுற்றியிருக்கிற உலகைப் பார்க்கும்விதமே மாறிப்போகும் அளவுக்கு தகவல்கள் நிறைந்த புத்தகம். மொத்தமாக 95 தனிக் கட்டுரைகள். கிட்டத்தட்ட 300 பக்கங்கள்; நிச்சயமாக கொஞ்சமும் சலிப்படையாமல் படித்து முடிக்க ஜானகியுடைய மெல்லிய நகைச்சுயுணர்வு தான் காரணம்.

எல்லாத்துக்கும் மேல ஒரு வாழ்க்கைத் துணையாக இருப்பவர்களுடைய passionஐ புரிந்துகொண்டு அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் அர்ப்பணித்து , தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு வாழ்க்கைமுறையை மகிழ்ச்சியாக ஏற்றுகொண்ட ஒரு பெண்ணின் அட்டகாசமான ஸ்டேட்மெண்ட்டாகத் தான் இந்தப் புத்தகத்தைப் பார்க்கிறேன்.

பொதுவாக ’பிற உயிர்களிடத்தே அன்பு’ செலுத்துவது குறித்து நம்மிடையே பல வேறுபட்ட கருத்துகள் நிலவுவதுண்டு. அன்பு செலுத்துவது கூட இரண்டாம் பட்சம் தான். அந்த உயிரை ஒரு பொருட்டாகவாவது கொள்கிறோமா என்பது கேள்வி. சில சமயம் சக மனிதர்களையே ஒரு பொருட்டாகக் கொள்வதில், மதிப்பதில் சிக்கல் இருக்கிற நமக்கு பிற உயிர்கள் எம்மாத்திரம். காட்டு விலங்குளை விட்டுவிடுவோம். வீட்டு விலங்கான ஒரு நாய் மீதோ, பூனை மீதோ, அல்லது ஒரு மாட்டின் மீதோ காட்டப்படுகிற கரிசனம்  ஊர்வன, பூச்சியினம் ஆகியவற்றின் மீது காட்டப்படுகின்றதா ? அதீதமான அருவெறுப்பு அல்லது அச்சத்தின் காரணமாக பெரும்பாலும் நாம் அவ்வுயிர்களை ஆபத்துக்குள்ளாக்கி விடுகிறோம் அல்லது சாகடித்து விடுகிறோம். பிற உயிர்கள் பற்றிய போதிய அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம். கொஞ்சம் தேடலும் ஆர்வமும் வாசிப்பும் இருந்தால் நம்மைச் சுற்றியிருக்கிற சின்னச்சின்ன விஷயங்களைக் கூட வியந்து பார்ப்போம்.

தவறவிடக்கூடாத புத்தகம். கட்டாயம் படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொடுங்கள்.

'My husband and other animals' - Janaki Lenin - Westland books - Rs.250

ஆன்லைனில் வாங்க:  லின்க் இங்கே

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக