புதன், 30 மே, 2018

மரணம் - Closure - மறத்தலும் கடத்தலும்



பொதுவாகவே யாருடைய மரணமும் அதீதமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கு. பைக் பயணம் தொடங்கிய நாள் முதல் சாலை விபத்துகளில் உயிரழந்தோர் குறித்தான செய்திகள் மிகையாய் பாதிக்கும்.சாலையில் உயிரிழந்தவர்களை அதுவும் இருசக்கர வாகனமென்றால் ரொம்பவே நெருக்கமாய் உணர்வேன். எந்த வண்டி ? யாருடைய தவறு ? எந்த சாலை ? விபத்தின் காரணிகள் என ? இந்த விபத்து எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் ? எப்படித் தவர்த்திருக்கலாம் ? எனப் பலவாறாக யோசித்து மனம் ஒரு முடிவுக்கு வந்து ஆற்றுப்படும் வரையில் சிந்தனையும் செயலும் அளவுக்கதிகமாய் உழலும்.

எதிலும் கவனம் செலுத்த முடியாது. போலவே தற்கொலைகள் குறித்த செய்திகளும், உயிரிழந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தையும் பதிவுகளைக் காண நேர்தலும் ஒரு துன்பியல் அனுபவம். இந்தப் புகைப்படத்தைப் பதிவிடும்போது தன் உயிரை மாய்த்துக் கொள்கிற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமா ? கடைசியாக யாரோடு பேச வேண்டுமென நினைத்திருப்பார் ? தன்னைச் சார்ந்தவர்கள் குறித்தான கவலை இருந்திருக்குமா ? எல்லா நம்பிக்கைகளுமே அற்றுப்போய் உயிரை மாய்த்துக் கொள்ளமுடிவு செய்யுமளவுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்க முடியும் ? நம் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டிருந்து பேச நேர்ந்திருந்தால் என்னவென்று கேட்டறிந்திருக்கலாமோ ? இப்படி கேள்விச் சுழல் தொடரும்.

பொதுப் பிரச்சனைகள்; அரசியல் காரணங்கள்: சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்முறையால் உயிரிழந்தவர்கள்; இந்த ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளால் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறவர்கள்;இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான மரணங்களும் துயரிலாழ்த்தி குற்றவுணர்ச்சியில் தள்ளும். I'll mourn with guilt over the grief of the lives lost even though I absolutely don't have any control over what has happened to the corresponding indivduals.

அனிதாவின் மரணச்செய்தியை அறிந்தபோது குடும்பத்தோடு குற்றாலத்திலிருந்தோம். தம்பி வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததால் திட்டமிட்ட பயணம் அது. அறையைவிட்டு அருவியில் இறங்க கொஞ்சமும் மனம் ஒப்பவில்லை. அதற்கு முந்தைய நாள்வரை குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கூட எங்கும் பகிரவில்லை. Guilt, helplesness and incapability..! எவ்வளவு தேடியும் சரியான காரணம் இன்னதென முடிவுக்குவர முடியவில்லை. அந்த closure கிடைக்கவேயில்லை. மறதியும் மற்ற வேலைகளின் ஊடாகவும் மட்டுமே அந்த மரணத்தை என்னால் கடக்க முடிந்தது.

தேனி தீவிபத்தின் போது மரணித்தவர்களில் ஒருவர் கூட நேரடியான அறிமுகம் இல்லை. ஆனாலும் அத்தனை மன அழுத்தத்தில் தள்ளியது அந்த மரணம். மீண்டும் அதே கேள்விகள். தேடல். ஒவ்வொருவரின் பெயரும் அவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் (புது மணத்தம்பதிகள் etc), அவர்கள் பயணித்த பாதை; காட்டுத்தீ பரவியிருக்கக் கூடிய சாத்தியங்கள்; அது இதுவென மனம் ஆற்றுப்பட ஏதோவொரு காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருந்தது. பழிசுமத்தவும், கைகாட்டவும், ஏதோவொன்றைத் தேடிப் பற்றி பாரமிரக்கிவிட்டு தப்பித்தோடுகிறது பாழ்மனம். ஓஹ் இதனாலதான் இப்படியாச்சு..இல்லன்னா கண்டிப்பா தப்பிச்சுருக்கலாம் என பொய்யாகவேனும் உச்சுக்கொட்டி மறந்துதான்..மறைத்துதான் கடக்கவேண்டியிருந்தது.

இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைச்சம்பவம்...! அதில் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் பெயர்கள்; புகைப்படங்கள்; குடும்பத்தாரின் அரற்றல்கள்; அரசாங்கத்தை நோக்கி அவர்கள் எழுப்புகிற கேள்விகள். இன்னும் முழுதாக அதிலிருந்து மீளவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படுகின்றது; இந்த கொலைச்சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எல்லா திசையிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கின்றது. நான் உட்பட எல்லோருக்குமே ஒரு தற்காலிக closure கிடைத்துவிடுகின்றது. ஐபிஎல்’லோ,அடுத்து வெளிவரும் திரைப்படமோ, ஏதோவொன்று மொத்தமாய் கவனம் திருப்பி நம்மை மடைமாற்றிவிடக்கூடும்.
ஆனால்...தொக்கி நிற்கிற மரணங்களையும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயத்தையும் யார் கேட்பார்கள் ? என்னவாகும் அந்த உயிர்கள் ? What is the least I could do ? Forget and Move on ?

எப்போதுமே மேற்சொன்ன மாதிரியான எந்தவொரு நிகழ்வின் போதும் உடனடியாக அதைப் பற்றிய செய்திகளையோ என்னுடைய கருத்தையோ பகிராமல் பேசாமல் கடக்க முயல்வேன். உடனடி எதிர்வினை பெரும்பாலும் emotional outburstஆக மட்டுமே இருக்குமென்பதாலும், உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் அடிப்படை அறவுணர்வு மறையக்கூடுமென்பதாலுமே அந்த அழுத்தமான மெளனம். முடிந்தவரையில் அறத்தோடு தர்க்கம் பேசி பிரச்சனை குறித்து எழுதப்படுகிற, என் அலைவரிசைக்கு ஒத்துப் போகிற கருத்துகளை பகிர்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடும்.

எதுவும் கையாலாகாதபோது இப்படி மனம்போனபடி எழுதித் தப்பித்துக்கொள்ளலாம். இந்த எல்லா பிரச்சனைகளைக் குறித்தும் தர்க்க நியாயங்களோட எழுதப்படுகிற கட்டுரைகளைப் படித்தும், என் அன்றாட வேலைகளில் எல்லாவற்றையும் மறந்தும் கடந்து போகலாம்.

ஆனாலும்... 


ஹேராம் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. சாகேத் ராம் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் மறுபடியும் கல்கத்தா வருவான். தான் அபர்ணாவோடு வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவள் வரைந்த காளி ஓவியத்தை எடுத்துக்கொண்டு கையில் வைத்தபடி சாலையில் நடந்து வருவான். அப்போது ஒரு கூட்டம் சுரவர்த்தி (அப்போதைய கல்கத்தா ப்ரீமியர்/கவர்னர்) ஒழிக என்று கோஷம் போட்டபடி நகரும். சாகேத்ராமையும் தங்களோடு இழுத்துக் கொண்டு ஒரு கட்டடத்தின் முன் சென்று நிற்பார்கள். மாடியிலிருந்து ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு மகாத்மா காந்தி தோன்றுவார்; கூடவே கவர்னர் சுஹ்ராவர்த்தியும். கவர்னரைக் கண்டதும் சாகேத்ராம் வெகுண்டெழுந்து அவரை நோக்கி “ Were you not responsible for the killings in Calcutta and Bengal last year ?" என்று கேள்வியெழுப்ப, "We all are responsible",என மழுப்பலாக பதில் சொல்லுவார். 

அந்த பதிலில் சமாதானமடையாமல் சாகேத்ராமன் , “ No please, please answer the question. Were you not responsible as the premier of this state ? Were you not directly responsible for making murderers out of ordinary men ?" என குரல் உரக்க, கூட்டமும் அவனோடு சேர்ந்து கொண்டு சுஹ்ராவர்த்தியை பதில் சொல்ல வற்புறுத்தும். கவர்னர் கொஞ்சம் திகைத்து, “Yes. It was my responsibility. And... I was responsible" என தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிய, உடனே சமாதானமடைகிற கூட்டம் கைதட்டி வாழ்க கோஷம் போட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது. இப்போது சாகேத்ராம் இந்தக் கூட்டம் இவ்வளவு எளிதாக புத்தியை மாற்றிக்கொள்வதைக் கண்டு திகைத்துப் போய் கோபமாக வெளியேறுவான். 

சாகேத்ராம் திரும்பும் வழியில் நீண்டகாலத்துக்குப் பின் எதிர்பாராதவிதமாக எதிர்படும்  நண்பன் அப்யங்கர் மக்களின் இந்த மனப்போக்கைக் குறித்து காந்தியின் மீதான நம்பிக்கை குறித்தும் பேசும்போது சொல்லுவான், "இந்த ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கெடையாது. உனக்கும் எனக்கும் மட்டுந்தான்”

கிட்டத்தட்ட சாகேத்ராமனின் அப்போதைய மனநிலைதான் எனக்கும்.

I didn't get my closure yet or I'm still feeling guilty about the loss of lives. மறுபடியும் கேட்கிறேன்.

What is the least I could do? Forget and Move on?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக