திங்கள், 18 மே, 2020

வெறுப்பின் வேர்கள் - The anatomy of hate by Revati Laul



வெறுப்புக்கும் கோபத்திற்குமான வேறுபாடு என்ன ? கோபம் ஒரு நொடிப்பொழுதில் ஒரு குறிப்பிட்ட சூழலில் அப்போதைக்கு நிகழ்கிற உணர்வுப்பூர்வமான எதிர்வினை (emotional response) அல்லது ஒரு உணர்வு வெளிப்பாடு . வெறுப்பென்பது அப்படியல்ல; பல காலமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைப்படுகிற ஒன்று. தவறான முன்முடிவுகள், மதிப்பீடுகள், அருவருப்பு, கோபம், பழி உணர்வு, ஏமாற்றம் உள்ளிட்ட பலவற்றின் கலவைதான் வெறுப்பெனக் கொள்ளலாம்.

மேலும், உளவியல் ரீதியாக தனி மனிதர்களைக் காட்டிலும் ஒரு குழுவின் மீதான வெறுப்பை வளர்த்துக்கொள்வது எளிதென சொல்லப்படுகிறது. நீங்கள் முகந்தெரியாத யாரோ ஒருவர் மீது உடனேயே கோபப்பட முடியும்; ஆனால் அவரை நீங்கள் வெறுப்பதற்கு உங்களுக்கு தொடர்ச்சியாக நிறைய காரணிகளும், நியாயங்களும் தேவைப்படலாம். அப்படி காலம் காலமாக ஒரு மதத்தின் பெயரால் மற்றொரு மதத்தின் மீது வெறுப்பை ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவர்களுக்கு , அதை மொத்தமாக வெளிக்காட்டிக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்ன ஆகும் ? எதிர்படுகிறவர்களின் நிலை என்ன ? அங்கே ஒரு உயிருக்கான மதிப்பு இருக்குமா ?



2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த மதக்கலவரங்களும் , உயிர்கள், உடைமைகள் என பெரும் சேதம் விளைந்ததையும்,  கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக (அதிகாரப்பூர்வமான தகவல் மட்டும்)  நாம் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரே நாளில் நடந்துவிட்ட ஒர் நிகழ்வா ? கலவரங்களைச் செய்தவர்களும், வீடுகளைக் கொளுத்தியவர்களும், கடைகளைச் சூரையாடியவர்களும் , பெண்களை வன்புணர்ந்தவர்களும், வேறு பல குற்றச்செயல்களைச் செய்தவர்களும் ஒரு நாள் கோபத்திலா இத்தனையையும் செய்தார்கள் ? நிச்சயமாக இல்லை.

சுரேஷ் - ச்சர்ரா (Chharas) என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். 1871 ல் ப்ரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றப்பரம்பரையினராக அடையாளப் படுத்தப் பட்டவர்கள் இந்த ச்சர்ரா மக்கள். திருடுவதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் பெருமளவு குடியிருந்த குஜராத்தின் ச்சர்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தான் சுரேஷ். குடும்பத்தின் அடையாளமும் அதனால் எழுந்த பிரச்சனைகளின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்.

டங்கர் - பில் (Bhil) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கல்லூரி சென்று பட்டப்படிப்பு வரையிலும் பயின்றவர் . இறைச்சி உண்கிற, மது குடிக்கிற தன்னுடைய சொந்த சமூகம் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மை டங்கருக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. உண்மையில் தான் பழங்குடி அல்ல; ஒரு ராஜபுத்திர ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளவே அவர் எப்போதும் உள்ளூர விரும்பினார்.

ப்ரணவ் - முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்ற ஓரளவு வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவர்களுடைய குடும்பத்திற்கென சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. ப்ரணவ்வின் தந்தை போர்வெல் தொழிலை நடத்திவந்தார். ப்ரணவ்வின் குடும்பத்தில் அனைவருமே சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்

ஒருவரோடு மற்றொருவருக்குத் தொடர்பில்லாத மூன்று பேர்; மூவருமே சமூகப் பின்னணியிலும் , பொருளாதார நிலையிலும் , கல்வியிலும், வெவ்வேறு படிநிலைகளிலிருந்து வந்தவர்கள். மூவருமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மதத்தைத் தவிற மூவரையும் இணைக்கிற புள்ளி  குஜராத்தின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்கள்  மட்டுமே.இம்மூவரின் வாழ்க்கையையுமே சிறுவயதிலிருந்து  தொடங்கி , குஜராத் கலவரங்களோடு இவர்கள் எந்த வகையில் இணைகிறார்கள் என்பது வரையிலும் விவரித்திருக்கிறார் புத்தகத்தை எழுதிய ரேவதி லால் .

எல்லா எளிய மனிதர்களைப் போலவும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்புகளைத் தருகின்றது. அவர்கள் தேர்ந்தெடுக்கிற பாதைகளைப் பொருத்து சிலருக்கு மீட்சியும் சிலருக்கு மீளாத் துயரும் மிஞ்சுகின்றது.
Choice, however, is a vexing word. What part of choice applies when a tidal wave of anger tears through a state What part of it is the moment, the madness, the collective, and what part individual, personal history -Revati Laul, The anatomy of hate

உண்மையில் சிறுவயதிலிருந்தே மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் இவர்களுக்கு ஊட்டப்படுகிற வெறுப்பு அச்சமூட்டுவதாக இருக்கின்றது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS), விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) , பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் சமூகத்தினூடாகவும் மக்களினூடாகவும் அந்தளவு ஊடுருவியிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி, பில்கிஸ் பானோ, நரோதா பாட்டியா படுகொலைகள்; இந்தப் பெயர்களையெல்லாம் நாம்செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நிறையவே கேட்டிருப்போம். உண்மையில் அந்த ஒவ்வொரு பெயரின் பின்னாலும் பல ரத்தக் கறையோடான கதைகள் இருக்கின்றன. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் அத்தனை கொடூரமான செயல்களை செய்தவர்களும், செய்யத்தூண்டியவர்களும், அதனை அனுபவித்தவர்களும், மனிதர்கள் என்னும் உண்மையை மட்டுமே. 

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரில் இருவர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, இந்து மதம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் இவர்களைக் கொண்டு வந்து அந்த மதத்தின் பெயரால் வன்முறைச் செயல்களைச் செய்யத் தூண்டியது எது ? இந்த இணைப்பு எப்படிச் சாத்தியமாயிற்று ? 

சுரேஷ் (ச்சார்ரா) ஆகட்டும் , டங்கர் (பில்) ஆகட்டும் இவர்களுடைய தொடக்கம் என்பது அவரவர்களுடைய பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைப்பதிலேயே தொடங்கியிருக்கின்றது. ஒரு சிறு குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தொடங்கி, மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு கூட்டம் கூட்டுவது, அவர்கள் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆட்கள் சேர்ப்பது, தேர்தலுக்காக வேலை செய்வது, எனத் தொடங்கி அவரவர்ககளின் தனிப்பட்ட மேற்பார்வையில் கட்சியோ/இயக்கமோ செய்ய விரும்பும் பெரும் வன்முறைச் செயல்களைச் செய்ய இந்த குழுக்களுக்கு தலைவர்களாக தங்களை வரித்துக் கொள்வது வரை உள்ள உளவியலை நாம் கண்டுணர வேண்டும்.  

VHP, RSS, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக இளைஞர்களுக்கு போலியானதொரு தலைமைப் பொறுப்பையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் வழங்குவதன் மூலமே அவர்களை மதம் என்ற குடையின் கீழ் ஒன்றுதிரட்டுகின்றார்கள். முறையான கல்வியும், வேலை வாய்ப்பும் மட்டுமே அவர்களுடைய சமூகப் பொருளாதார பின்னணியை மேம்படுத்தி இந்த அடையாளச் சிக்கலிலிருந்து அவர்களை மீட்க வழிவகை செய்யும். இந்த மீட்சியானது தனி மனிதர்களுக்கு மட்டுமான தற்காலிகமான் ஒன்றாக இல்லாமல்  அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினர் வரையிலும் தொடரக்கூடிய நிரந்தமான , உண்மையான மீட்சியாக இருக்கும். 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் கலவரங்களில் தொடர்புடையவர்களை நேர்கண்டு, பல ஆவணங்களைச் சேகரித்து, தீர ஆய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றார் பத்திரிகையாளரான ரேவதி லால். மதத்தின் பெயரால் மக்கள் மனதில் விதைக்கப்படுகிற நஞ்சைப் பற்றியும் அரசியல் லாப நோக்கங்களுக்காக பொதுமக்களின் உயிரைக் கொல்லவும் தயங்காத தனி மனிதர்கள் குறித்தும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகச்சிறந்த தொடக்கம்.

The Anatomy of Hate Paperback by Revati Laul (Author) - Amazon

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக