சனி, 28 நவம்பர், 2020

The Trial of the Chicago 7 (2020) - Netflix - 2020

உலகம் முழுவதும் போராட்டங்களுக்கென ஒரு நெடிய வரலாறு உண்டு. வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், அடிப்படை உரிமைகளுக்காகவும் என காரணங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். சில நேரங்களில் உயிர்பிழைத்து வாழ்வதற்காகக் கூட மக்கள் போராட வேண்டிய சூழல் நிலவக்கூடும்.

தனி மனிதர்களின் குரல்களுக்கு அரசோ அதிகாரமோ அமைப்போ எவ்வகையிலும் செவி சாய்க்காதபோது, அவர்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்க்கும் பொருட்டும், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கவும் போராட்டங்கள் அவசியமாகின்றன. உலக அரசியலில் பெருமளவு மாற்றங்களை நிகழ்த்திய புரட்சிப் போராட்டங்கள் அத்தனைக்குமே தங்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும் என்கிற அடிப்படைக் காரணமே தொடக்கப்புள்ளியாக இருந்திருக்க வேண்டும். 

அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதற்காக வெவ்வேறு குழுக்களுக்குத் தலைமை தாங்கிய ஏழு பேர் மீது வழக்குத் தொடுக்கிறது அமெரிக்க அரசு. முறையான அனுமதி பெறாமல் கூட்டம் சேர்த்து பொது அமைதிக்கு ஊறு விளைவித்து அரசாங்கத்துக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டதாக காரணம் சொல்லப் படுகின்றது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த வழக்கின் தொடக்கம் முதல் தீர்ப்பு வரை நடந்த சம்பவங்கள்தான் ’The Trial of the Chicago 7’ திரைப்படம். 
இந்த திரைப்படத்தில், அப்போது அமெரிக்காவில் சொல்லப்படும் பல விஷயங்களை இங்கே நடக்கும் சம்பவங்களோடு (பிமா கோரேகான், டெல்லி போராட்டங்கள்) எளிதாகப் பொருத்திப் பார்க்கலாம். குரலற்றவர்களின் குரலை ஒடுக்குதல், நியாயம் கேட்டு தங்களுடைய உரிமைக்காக போராடுகிறவர்களை அவர்களின் கோரிக்கைகள் என்னவென்று கூட கேட்காமல் குற்றம் சுமத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் என முத்திரைகுத்துதல் என நீளும் அந்தப் பட்டியல்.

எல்லா தரப்பையும் தீர ஆய்ந்து நேர்மை தவறாது தீர்ப்பு வழங்கவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையது. ஆனால் நீதித்துறையும், நீதிபதிகளும் ஒரு தலைப்பட்சமாகவும் அரசியலமைப்பிற்கு எதிராகவும் செயல்பட்டால் ? முன்முடிவுகளோடு வழக்கை அணுகினால் ? மக்கள் யாரை நம்புவார்கள்..?! 

கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடிய Black Panther கட்சியின் நிறுவனர்களுள் ஒருவர் Bobby Seale . இந்த வழக்கில் 8வது ஆளாக சேர்க்கப்பட்டு பின் நீக்கப்படுவார். அதற்குக் காரணமான சம்பவம் திரையில் காட்சிகளாக விரியும் போது நிச்சயமாய் உங்கள் மனதை உலுக்கிப்போடும்.

வேறொரு நேரத்தில் பாபிக்கும் , வழக்கில் தொடர்புடைய மற்றொரு சமூகப் போராளி டாம் ஹேடனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடல்..இது...

Bobby: The seven of you, you all got the same father, right ? I'm talking to you... You all got the same father right ? "Cut your hair....don't be a fag...respect authority...respect America...respect me." Your life is a fuck you to your father right ? a little...

Tom: (remorsefully says) May be...

Bobby: And you can see how that's different from a rope on a tree ?

வரலாற்றில் சில போராட்டங்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கலாம். போராடுகிறவர்களின் முகங்களும், குரல்களும், வழிமுறைகளும் மாறினாலும் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கும். 
The Trial of the Chicago 7 (2020) - Netflix தளத்தில் இந்த திரைப்படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக