வியாழன், 21 ஜனவரி, 2021

பட்டக்காடு - அமல்ராஜ் பிரான்சிஸ்

 ”மனிதர்கள் தங்களாகக் கட்டமைத்து வைத்திருக்கும் அத்தனை பிரிவினைகளையும்  கடல் போக்கிவிடுகிறது.அத்தனை அல்பத்தனங்களையும் அடித்து நொறுக்கிவிடுகிறது. அத்தனை மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பரிவோடு ஆட்டுகிறது. கடல் கொடுக்கும் உயிர்ப் பயம் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானதுதாம். தன் சினத்திற்கு முன்னால் இந்துவும் ஒன்றுதான், கிறிஸ்தவனும் ஒன்றுதான் என்கிறது கடல்”

- பட்டக்காடு, அமல்ராஜ் பிரான்சிஸ்

பட்டக்காட்டைச் சேர்ந்த ஜோசஃப் கணக்குப் பிள்ளையின் அறிமுகத்தோடு தொடங்குகிறது முதல் அத்தியாயம். அதன் பின் அவருடைய மகனும் கதையின் நாயகனுமான மதன் குறித்த அறிமுகம். ஓரிரு அத்தியாயங்களில் கயல் என்ற பாத்திரத்தின் அறிமுகமும் அதனைத் தொடர்ந்த வர்ணனைகளும் வந்தபோது, இலங்கைப் பின்னணியில் ஒரு தேய்வழக்காகிப்போன காதல் கதையாக இந்த நாவல் இருந்துவிடுமோ என ஐயப்பட்டேன். நல்லவேளை அப்படியெதுவும் ஆகவில்லை.

மதன் என்னும் மீன்பிடி கிராமத்து இளைஞன், அவனுடைய சுற்றம், நட்பு, காதல், அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள் என மதனைச் சுற்றித்தான் மொத்த நாவலும். அவருடைய பார்வையிலேதான் நமக்கு கதை சொல்லப்படுகிறது. மீன்பிடித்தொழிலுக்கு இணையாக விவசாயமும் செழித்த இடமாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அதிகம் வாழ்ந்த ஊராகவும் பட்டக்காடு நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் இயக்கக் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதி ஊர்களைப் போலல்லாது பட்டக்காடு இலங்கை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்றும் அறிந்துகொள்கிறோம்.

 ஆரம்பத்தில் மதன் தன் நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்குள் செல்கையில் கொண்டாட்டத்துடனும் சாகச மனநிலையுடனும் தொடங்கி, பின் படிப்படியாக கதையோட்டத்தின் தீவிரத்தன்மை கூடிக்கொண்டே போகிறது. தொடக்க அத்தியாயங்களில் கதையினூடாகவே பட்டக்காட்டு மீன்வாடிகள், சம்மாட்டிகளின் தொழில்முறை, கட்டுவலைக்கும் சுருக்கு வலைக்குமான வேறுபாடுகள், கடல்பரப்பின் காற்றோட்டம், கட்டாக் கருவாடு, ரோலர் படகுகளால் பாதிக்கப்படும் சிறு மீனவர்களின் வாழ்வாதரம் என பலவற்றைப் பற்றி பேசியிருக்கிறார் அமல்ராஜ் . அது போக குணம் பரியாரி, பர்னாந்து மாமா,’வட்டி’ தேவா சம்மாட்டி என பல சுவாரஸ்யமான பாத்திரங்களைக் குறித்த உபக்தைகளும் உண்டு.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில், போர் உச்சம் பெற்ற நிலையில் எதிர்பாராத ஒரு நிகழ்வின் காரணமாக மதன் அவனுக்கு பரிச்சயமில்லாத புதிய ஊரில், சொந்த ஊருக்குத் திரும்பவோ குடும்பத்தினரைக் காணவோ வழியில்லாமல், முற்றிலும் வேறுமாதிரியான ஒரு வாழ்வை வாழ நேர்கிறது.    போரினால் நேரடியாக பாதிப்படையாவிட்டாலும் அரசுக்கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்த மக்களும் மறைமுகமாக நிறைய துன்பங்களுக்குள்ளாவதை, மதனின் குரலில் சொல்லியிருக்கிறார்அமல். மதன் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக, ஒரு சாமானிய  குடும்பப் பின்னணி கொண்ட இளைஞனாக இலங்கை அரசையும் இராணுவத்தையும் விமர்சிக்கும் அதே அளவு, இயக்கச் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறான்.

நாவலின் பிற்பகுதி அத்தியாயங்களைக் குறித்தும்,  இடங்களைக் குறித்தும் என்ன சொன்னாலும் கதையை வெளிப்படுத்துவது போலாகிவிடும் என்பதால், மீதிக் கதையை  புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். :) கிட்டத்தட்ட 500 பக்கங்களை கொண்ட நாவலாக இருந்தாலும், அமல்ராஜின் எளிமையான மொழிநடையினால் கொஞ்சமும் ஆர்வம் குறையாமல் படித்து விட முடிகிறது. தொடக்க அத்தியாயங்களில் இளமையும் எள்ளலும் கிண்டலுமாய் கதை நகரும்போதும் சரி , தீவிரத்தன்மையுடன் போருக்குப் பிந்தைய விஷயங்களைப் பற்றி விவரிக்கும்போதும் சரி ஒரே மாதிரியான தெளிவான மொழிநடையைக் கையாண்டிருக்கிறார்.

இலங்கையை பின்னணியாகக் கொண்டு தமிழில் இதுவரையிலும் பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.  ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த கதைக்களங்கள், இயக்கக் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்களின்அனுபவங்கள், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வலிகளையும் பேசிய கதைகள் என அத்தனையையும் படித்திருப்போம். ஆனால்,  இதுவரையிலும் அதிகம் பேசப்படாத மன்னார் பகுதியை கதைக்களமாக எடுத்துக் கொண்டு பட்டக்காடு என்னும் மீனவ கிராமத்தைச் சுற்றி ஒரு நல்ல நாவலை எழுதியிருக்கின்றார் அமல்ராஜ் பிரான்சிஸ். இது அவருடைய முதல் நாவலும் கூட. வாழ்த்துகள் அமல்ராஜ்...!

பட்டக்காடு -  அமல்ராஜ் பிரான்சிஸ்

எழுத்து பிரசுரம் - புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இணைப்பு இங்கே

1 கருத்து :

  1. வாழ்வியல் பின்னனியில் எழுதப்படும் கதைகள் சுவாரஸ்யமானது. அது அனுபவப் பகிர்வு போன்றது. அதனால் வாசிப்போர் பலர் தத்தம் அனுபவங்களோடு கதையை இணைத்துக் கொண்டு மென்மேலும் உயிர்பிக்கின்றனர். வாசிப்பு குறைந்து விட்ட, இக்கால கட்டத்தில் வாசிப்பை நேசிப்பது மட்டுமன்றி, பிறரையும் வாசிக்கத் தூண்டுவது பாராட்டுக்குரியது. அத்தகைய கதையை எழுதிய கதாசிரியருக்கு பாராட்டுகளும், மென்மேலும் சிறந்த கதைகள் எழுதி சிறப்புற வாழ்த்துக்களும்🙌

    பதிலளிநீக்கு