சனி, 24 செப்டம்பர், 2022

அம்பரம் - போர்கண்ட நெஞ்சம்

ambaram-book-cover

 

மனிதன் தன் நிலத்தின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறான். பருவகாலங்களுக்குத் தக்கபடி நிலம் தன்னை மாற்றிக் கொண்டு முன்னகர்த்திச் செல்லும்போதெல்லாம் மனிதன் அச்சம் கொள்கிறான். மற்றங்களைப் புரிந்து கொண்டு வாழப்பழகாமல் நிலம் தன்னைக் கைவிட்டுவிட்டதான அச்சத்தில் ஓடத்துவங்கும் போது இடம்பெயர்தல் நிகழ்கிறது.

- அம்பரம்/ ரமா சுரேஷ்

 ***********************************************************************************

  உண்மையில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்பது என்ன ?   அவனுடைய நாடா ? அவன் பேசும் மொழியா ? அவன் கடைபிடிக்கும் மதமா ? அவனுடைய தொழிலா ? அவனுடைய பெற்றோரும் சுற்றத்தாருமா ? ஒரே இடத்தில் பிறந்து , வளர்ந்து, அங்கே புழக்கத்தில் இருக்கிற மொழியைப் பேசி, வாழ்ந்து, பின்பு மரித்துப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் மேற்கண்டபடி நிலையான அடையாளமாய் சொல்லிக் கொள்ள ஏதேனும் இருக்கலாம். ஆனால், உயிரையும் உடைமைகளையும் , குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும், உயிர்பிழைத்துக் கிடக்கவும் புலம் பெயர்கிறவர்களுக்கு அப்படியான நிலையான அடையாளமென்று ஏதுமிருப்பதில்லை. அவர்கள் செல்லும் எந்த நாடும், வாழும் எந்த ஊரும் , பேசும்  எந்த மொழியும், அவர்களுக்கான  நிலையான அடையாளமாக இருந்ததில்லை. அப்படி நிலையான அடையாளங்களை அவர்கள் கைக்கொள்வதையும் ஏனையோர் விரும்பியதில்லை. மனதில் நினைவுகளைச் சுமந்து கொண்டு என்றாவது ஓர் நாள் ஊர்திரும்பிவேண்டுமென அன்றாடம் ஓடிக்கொண்டேயிருக்கிற அல்லது தங்களது வேர்களை வேறிடத்தில் பதியம் போட்டுக்கொள்ளத் துடிக்கிற ஒருவனின் கதையைத் தான் அம்பரம் நாவல் பேசியிருக்கின்றது.

 ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மோக்லி பதிப்பகம் வெளியிடும் நாவல்; அதுவும் பர்மாவை கதைக்களமாகக் கொண்ட நாவல் என்பதே போதுமானதாக இருந்தது ‘அம்பரம்’ நாவலை வாசிப்பதற்கு. 1824ல் பர்மாவில் துவங்குகிறது கதை. முதல் ஆங்கிலோ-பர்மிய போர்க்கால பின்னணியில்,  ஸ்வெடகன் பகோடா என்னும் பழமையான பெளத்த ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ‘சிண்ட் கூ’ எனும் பெரிய மணியையும் எடுத்துச் செல்ல ப்ரிட்டிஷாரின் முயற்சிகளும் அதனைத் தடுக்க முயலும் பெளத்த பிக்குகளின் முயற்சிகளுமாக காட்சிகள் விரிகின்றன. முதல் பதினைந்து பக்கங்களைப் படிக்கையில் ஒருவேளை இந்த நாவல் ஒரு முழு வரலாற்று நாவலாக இருக்குமோ என யோசிக்க வைத்தாலும், பின்பு கதை வேறு திசையில் வேறு கோணத்தில் பல்வேறு பாத்திரங்களினூடாகவும் அவர்தம் வாழ்வினூடாகவும் நகர்கின்றது.

 பர்மியனான ’மெளன் போ’வைக் காதலித்துக் கரம்பிடித்து, பின்னாட்களில் அவன் தன் தன்னையும் தன் மகனையும் விட்டு எங்கோ சென்றுவிடுகையில் மகனின் கைபிடித்து கணவனைத்தேடி புறப்படும் ஆயிஷாவின் கதை; எங்கோ மன்னார்குடியில் பிறந்து நாகப்பட்டிணத்தில் வளர்ந்து, பிழைப்புத் தேடி கப்பலில் சிங்கப்பூருக்கு செல்வதாக எண்ணிக்கொண்டு பர்மாவில் செட்டியார்கடைக்கு பெட்டிப்பையனாக வந்து சேர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தையும் சமூக அந்தஸ்த்தையும் வளர்த்துக் கொண்டு பர்மாவில் காலூன்றும் சிவராமனின் கதை: ஆயிஷா பெற்ற மகனாக இருந்து பின்பு சிவராமனின் வளர்ப்பு மகனாய் மாறுகிற நாவலின் மையப்புள்ளியான முகமக யூசுப்பின் கதை. இம்மூவரைத் தவிர்த்து மற்ற பாத்திரங்களும் அவர்களின் வாழ்வும் இம்மூவரைச் சுற்றியே எழுதப்பட்டுள்ளது.

யூசுப் ஆயிஷாவிடமிருந்து சிவராமனிடம் வந்து சேர்தல், அதன் பின் பர்மாவில் ஒரு குத்துசண்டை வீரனாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் ,காஜியாவுடனான அவனுடைய காதல்,  பாஹிர் உடனான அவனது நட்பு என பர்மாவிலும் சிங்கப்பூரிலுமாக யூசுப்பின் வாழ்வில் நடப்பவையே ’அம்பரம்’ நாவலின்  மீதிக்கதை. குத்துச்சண்டை குறித்த வர்ணணைகள் எழுதப்பட்டிருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. போலவே சிட்-போ வுக்கும்  யூசுப்பிற்குமான நட்பை எழுதியிருந்த விதமும் புதியதாய் இருந்தது. போட்டி மனப்பாங்கு கொண்ட இரண்டு முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரர்களுக்கிடையேயான நட்பை  (almost bromance !?)  இத்தனை மென் உணர்வுகளுடனான ஒன்றாக எழுதமுடியுமா என யோசிக்க வைத்திருக்கிறார் ரமா சுரேஷ் . முகமது யூசுப்பின் பாத்திரப்படைப்பு என அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலியை நினைவூட்டியது. காரணம் என்னவென நாவலை வாசிக்கையில் உணர்ந்து கொள்வீர்கள். இங்கு குறிப்பிடப்படாத மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கதைகளும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் பின்னணியில் அமைந்த நாவல் என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடி, பர்மாவின் வரலாறு, ப்ரித்தானிய காலனியாதிக்கம், பெளத்த மத தத்துவங்கள், ஷின்பியு உள்ளிட்ட பல பர்மிய கலாச்சார நிகழ்வுகள் , அங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை, இந்தியா-பர்மா-சிங்கப்பூர்-சீனா-ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளின் இரண்டாம் உலகப்போர் காலத்து சர்வதேச புவியரசியல் நிகழ்வுகள்,  என அத்தனையையும் 400 பக்கங்களுக்குள் சொல்லிவிட முயன்றிருக்கிறார். 1930ஆம் ஆண்டில் பர்மாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், Prince of Wale, Repulse உள்ளிட்ட பிரித்தானிய போர்க்கப்பல்கள் ஜப்பானால் சிங்கப்பூர் படையெடுப்பின் போது மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு, ஜப்பானியர்கள் சிங்கப்பூரிலும் பர்மாவிலும் இந்திய சீன போர்க்கைதிகளை நடத்திய விதம், சீனாவின் மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது சீனாவுக்கு உதவும் பொருட்டு ப்ரிட்டிஷ் உதவியுடன் அமைக்கப்பட்ட  லெடோ சாலை (Ledo road),  INA வின் தோற்றமும் மலேயாவிலும், பர்மாவிலும் சிங்கப்பூரிலும் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர்கள் பெருமளவில் INAவில் சேர்ந்ததற்கான காரணமும், என பல உண்மை நிகழ்வுகளையும் துல்லியத்தன்மையுடன் நாவலின் போக்கில் இணைத்து சிறப்பாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ரமா சுரேஷ் அவர்கள்.

இந்த அதீதமான வரலாற்றுத் தகவல்களும் , நிலவியலை விளக்க துல்லியத்தன்மைக்காக குறிப்பிடப்படும் அளவீடுகளும் எண்களுமே ( 4000 சதுர கிலோ மிட்டர் பரப்பளவு, 300 அடி உயரம் , இங்கிருந்து கிழக்கே அங்கிருந்து வடமேற்கில்.. மாதிரியான அளவீடுகள் தொடர்ந்து வருவது) கதையை விட்டு நம்மை கொஞ்சம் வெளித்தள்ளிவிடுகின்றன. போலவே கதைக்களம் சூழல் பற்றி விவரணைகளுக்கும், கதைப் பாத்திரங்கள் அவர்களுடைய உணர்வுகள் பற்றி விவரணைகளுக்குமான சமநிலை சரியாக அமையாதது போலவும் தோன்றியது.மேலும் ‘அம்பரம்’ நாவலில் அந்தந்த  நாடுகளைச் சார்ந்த நிறைய கலாச்சார கலைசொற்களும், நிலவியல் குறிச்சொகளும் இடம்பெற்றிருக்கின்றன.  

எ.கா: 

தணக்கா (Thanaka) - பர்மியர்கள் முகத்தில் அழகுக்காக பூசிக்கொள்ளும் ஒருவகை மாவு

ஏ கலா - பர்மியர்கள் தமிழர்களைக் குறிப்பிடும் விளி

சுவெ மொடா பயாச்சி (Shwehmawdaw Pagoda) - பர்மாவின் பெகு நகரில் அமைந்துள்ள ஒரு பெளத்தமடாலயம்

இம்மாதிரியான சொற்களுக்கு எந்தவகையான அடிக்குறிப்போ (footnote)  இணையான ஆங்கில உச்சரிப்போ குறிப்பிடப்படவில்லை. நாவலில் சொல்லியிருக்கிற தகவல்கள் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ள இணையத்தை நாடுவதிலும் சிரமமிருந்தது. 

அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, கடல், உயர்ந்த வெளி, வானம், என பல பொருள் சொல்லுகிறது இணைய அகராதி. நாவல் புலம்பெயர்ந்தோரின் நிலம் சார்ந்த அடையாளம் குறித்தது என்பதால் நிலத்தைக் கடலாகவும், அடையாளத்தை ஆடையாகவும் உருவகித்துக் கொண்டால் இரண்டுக்கும் ‘அம்பரம்’ எனும் தலைப்பு பொருந்திப் போகின்றது

இறுதியாக, தன்னுடைய முதல் நாவலுக்கு இத்தனை பெரிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதன் வழியே தத்துவம், மதம், சர்வதேசிய அரசியல், போரினால் சாமனியர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம், புலம்பெயர்வோரின் அடையாளச்சிக்கல்கள் ,தனி மனிதர்களின் உணர்வுப்போராட்டகளென அத்தனையையும் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர். அவருடைய முன்னுரையிலிருந்து இந்த நாவலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்திருப்பதையும், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகப் பயணித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த உழைப்பு வீண்போகவில்லை. நாவலின் இறுதிவடிவம் சிறப்பாக அமைந்ததற்கு அந்தக் கடுமையான உழைப்பே காரணமென நினைக்கிறேன்.

 ரமா சுரேஷ் அவர்களுக்கும், பதிப்பாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் <3 

அம்பரம் | ரமா சுரேஷ் | மோக்லி பதிப்பகம் | 400 பக்கங்கள் | விலை ரூ. 350

புத்தகம் வாங்க: இணைப்பு இங்கே

References:

https://en.wikipedia.org/wiki/First_Anglo-Burmese_War

https://en.wikipedia.org/wiki/Shinbyu

https://en.wikipedia.org/wiki/1930_Bago_earthquake

https://en.wikipedia.org/wiki/Ledo_Road

https://en.wikipedia.org/wiki/Second_United_Front

https://en.wikipedia.org/wiki/Thanaka

https://en.wikipedia.org/wiki/Shwemawdaw_Pagoda

https://www.bbc.com/news/world-asia-28832296


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக