வெள்ளி, 22 நவம்பர், 2024

தரூக் - கார்த்திக் பாலசுப்ரமணியன்

 

"நீயே கவனி. நடைபெற சாத்தியம் குறைவாக இருக்கும் ஒன்றைப் பற்றி யோசித்து பயந்து இப்போதிருக்கும் இத்தனை அழகான பொழுதை வீணடிக்கிறாய். எப்போதும் உன் மனம் எதையாவது பற்றி எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. உன்னை நீயே மறைத்துக்கொள்கிறாய். மனத்தைத் திறந்து பேசக்கூட அஞ்சுகிறாய். எதிரே இருப்பவரை விடுத்து எங்கோ இருப்பவரை நினைத்துப்பயப்படுகிறாய். இந்த வாழ்க்கையை ஒரு சின்ன சிராய்ப்புகூட படாமல் வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறாய். ஆனால், அதன்பொருட்டே உன்னை நீயே வருத்திக்கொள்கிறாய். பக்கத்தில் பார் அந்தக் குழந்தையை! எவ்வளவு சந்தோசம் அதன் முகத்தில், நம்மால் அப்படி இருக்க முடியாதுதான். அதைப் பார்த்துப் போலியாக நகல் செய்வதுகூட தப்பில்லை என்று தோன்றுகிறது எனக்கு.”

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து 1400 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையில் ஆஸ்த்ரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதிக்கு வந்தடைகின்றன ‘கான்விக்ட் கார்கோ’ (convict cargo) என்றழைக்கப்பட்ட அந்த பதினோரு கப்பல்கள். இதற்கு சரியாக பதினெட்டு  ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்த்திரேலியாவின் இதே இடத்துக்கு பயணப்பட்டு அங்கிருக்கிற பூர்வகுடியினர் பற்றியும் வனவாழ் உயிர்கள் பற்றியும் விரிவான குறிப்புகளை பதிவுசெய்துவைத்தவர் கேப்டன் ஜேம்ஸ் . இவர்கள் இருவருமே உண்மையிலேயே இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இதில் கேப்டன் ஆர்தர் ஃபிலிப் ஆஸ்த்ரேலியாவுக்கு வந்திறங்குகிற நிகழ்வில் தான் துவங்குகிறது ’தரூக்’ நாவல்.

கேப்டன் ஃபிலிப்பின் கப்பலில் கூட வரும் வில்லியம், காபா உள்ளிட்டோரின் பின்புலமும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைந்து வேரூன்ற முனையும் கதையும் ஒரு புறம். தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த மென்பொறியாளன் காசிம், அவனுடைய மனைவி ஃபர்ஸானா இவர்களின் சமகால வாழ்வும் கதையும் மற்றொரு புறமும் என நாவல் நகற்கிறது. கார்த்திக்கின் முதல் நாவலான நட்சத்திரவாசிகள் போல எளிமையான ஒரு நேர்கோட்டுக் கதையாக இல்லாமல், வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கிற கதைகளுடன் கூடவே பல்வேறு பாத்திரங்களின் கிளைக்கதைகளையும் இணைத்து பல அடுக்குகளுடன் கூடிய ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கிறது தரூக். 

கடந்தகாலக் கதையிலும் சரி நிகழ்காலக் கதையிலும் சரி , இடம்பெறுகிற முக்கியப் பாத்திரங்கள் அனைவருக்கும் தங்கள் அடையாளம் சார்ந்த ஒரு பின்கதையும், அதனைத் தொடர்ந்த தேடலும் இருந்துகொண்டேயிருகிறது.

கடந்த காலக்கதையில்

தென் ஆஃப்ரிக்காவின் கலஹரி பாலைவனத்தின் பழங்குடியான காபா, ஐரோப்பியர்களின் காலணியாதிக்கத்தால் பாதிக்கபட்டு தன் நிலத்தையும், அடையாளத்தையும் இழந்து கொத்தடிமையாக்கப் பட்டு அங்கிருந்து தப்பிக்க கிடைக்கும் வேலைகளைச் செய்து எங்கெங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறவன்.

கலோடன் போருக்குப் பிறகு ஸ்காட்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தபின்னும் மனதில் தன் கிராமத்தையும் ஹாக்மனே எனும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நினைவுகளையும் சுமந்துகொண்டேயிருந்தவர் வில்லியமின் தாய். வில்லியம் ப்ரித்தானிய அரசுக்காக பணிபுரிந்தாலும் அவர்களால் எப்போதும் ஒரு வேற்றாளாகவே பார்க்கப்படுபவன். அம்மை நோய்க்கு தாயைப் பறிகொடுக்கும் வில்லியம் காலத்துக்கும் அவருடைய நினைவுடனேயே வாழ்கிறான்.

 போர்ட்ஸ்மவுத் தங்கும் விடுதியில் பணிப்பெண்ணாக அறிமுகமாகி பின்பு வில்லியமின் காதலியாகும் ரெபெக்கா , ஓவியங்களில் வழியே தன் தாயின் சாயலில் தன்னைத் தேடிக்கொண்டிருக்கிற ஒரு பெண். ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வந்து பெரும் செல்வந்தனை மணந்து ரெபேக்காவைப் பெற்றெடுத்து பின்பு கணவருடனான மனவருத்தத்தில் அவரைப் பிரிந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் தாயை நன்றாக கவனித்துக் கொள்ளும் பொருட்டு உழைத்துக் கொண்டிருப்பவள் ரெபேக்கா.

தற்காலக் கதையில்

தன்னை சுற்றியிருக்கிற அனைத்திலும் சுத்தத்தையும் ஒழுங்கையும் எதிர்பார்க்கிற ,அதிகம் பேசாத ஒருவனான காசிம் ஃபர்ஸானாவின் கட்டாயத்தால் சொந்தநாட்டை விட்டு ஆஸ்திரேலியா வந்தாலும் எங்கும் ஒட்டி ஒன்றி ஒத்துப்போகமுடியாமல் மன அமைதியின்றி அடையாளச் சிக்கலுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறவன். ஒரு மாதிரி உள்ளுக்குள் பதற்றத்துடனும் அமைதியில்லாமல் குழப்பத்துடனேயே அத்தனையையும் எதிர்கொள்கிறவன்.

காசிமின் மனைவி ஃபர்ஸானா.இந்த நாவலில் இடம்பெற்ற பாத்திரங்களிலேயே மிகத்தெளிவான மனம் கொண்ட பெண். ஊரார் உறவினர் முன்பு காசிமுடன் இன்னும் பெரிதாக வாழ்ந்து காட்டிவிட வேண்டுமென வைராக்கியத்துடன் அவனை ஆஸ்த்ரேலியாவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தவளும் அவள்தான். இந்தியாவில் சொந்த ஊரில் புர்கா அணிந்து கொள்ள மறுக்கவும், வெளிநாட்டில் கட்டாயம் புர்கா அணிந்துகொள்ளவும் தெரிந்த அளவுக்கு மனத்தெளிவு கொண்டவள்.

தனது கடந்த காலத்தையும் தான் பிறந்த  பூர்வகுடியினரின் வரலாற்றை தேடிப்பதிவு செய்யும் வேட்கையுடன் அலைகிற பெண் ஜெட்டா.தனது குடும்ப உறவுகள், தன் பிறப்பின் அடையாளம் சார்ந்த குழப்பங்கள் என சிக்கலான மனவார்ப்பைக் கொண்டவள்.  காசிம் உடனான அவளுடைய உறவு தொடங்கும் விதமும் வளர்ந்து முடியும் விதமும் அதற்குச் சான்று. 

வில்லியம் ரெபெக்கா, காசிம் - ஜெட்டா என இருவரிடமும் இரண்டு காலகட்டத்திலும் இடம்பெறுகிற பிரியத்தின் கல், வில்லியம் முதன்முதலில் குடை ஓவியங்களை காணுமிடம்,  பூமராங்-நிலவு தொடர்பான பழங்குடிகளின் கதை, காபாவின் மதிப்பீடுகளும் அவன் உலகை அணுகும் விதமும், கடந்த காலத்தில் ஐரோப்பிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளின் கொடூரமான ஆக்கிரமிப்பு மனநிலை ,அதன் பொருட்டு அவர்கள் செய்யும் மனிதத்தன்மையற்ற செயல்கள், சமகாலத்தில் குழந்தைப்பருவத்திலேயே அவர்கள் மனதில் மற்ற நாட்டவரைப் பற்றி விதைக்கப்பட்டு வெளிப்படுகிற வெறுப்பு என நுணுக்கமாய் அத்தனை விஷயங்கள் நாவல் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. இன்னும் இங்கே குறிப்பிடாத பல விஷயங்கள் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. நாவலை படித்து முடிக்க எடுத்துக் கொண்ட காலம் தாண்டி அதனை திரும்ப அசைபோடவும் மீள்வாசிப்பு செய்யவும் அதிகம் நேரம் தேவைப்பட்டது. 

நாவல் முழுவதும் கார்த்திக்கின் எழுத்துநடை ஒரு மொழிபெயர்ப்பு நாவலுக்குரியதைப் போலவே தோன்றியது. கார்த்திக்கின் கடுமையான உழைப்பும் வரலாற்றுத் தரவுகளை கதையுடன் இணைக்க எடுத்துக்கொண்ட  முயற்சியும் சிறப்பான பலனைத் தந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஏற்றவாறு சிறப்பான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் ஓவியர் சுரேஷ் குமார் ராமர். காசிமின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் எதிர்பாராத ஒன்றாக இல்லை என்பது கதை சொல்லலின் வெற்றி எனக்கொள்ளலாம். 

 ஒரு நிலத்தின் பூர்வீக ஆதிக்குடியினருக்கும் (natives) , அந்நிலத்தின் வளங்களின் பொருட்டும் ஏனைய காரணங்களுக்காகவும் நிலத்தையும் மக்களையும் அடக்கியாள நினைக்கிற ஆதிக்கவாதிகளுக்கும் (colonizers), பிழைப்புத் தேடியோ அல்லது சூழலின் காரணமாகவோ வலசைப் பறவைகள் போல குடியேறும் புலம்பெயர்ந்தோருக்குமான (immigrants) போராட்டம் என்பது நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் இப்போது வரையிலும் தொடரும் ஒரு நிகழ்வு. கார்த்திக் பாலசுப்ரமணியனின்’தரூக்’ நாவலில் இதே மாதிரியான போரட்டங்களின் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் கதைகளும் கிளைக்கதைகளுமாக சொல்லப்பட்டிருக்கிறது.

A well written, well edited novel . Must read. And Karthik has arrived ...! <3  வாழ்த்துகள் கார்த்திக் !!!

தரூக், கார்த்திக் பாலசுப்ரமணியன், காலச்சுவடு பதிப்பகம், 311 பக்கங்கள், விலை ரூ. 350

https://www.panuval.com/4539/taruuk-10025445

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக