வெள்ளி, 22 நவம்பர், 2024

தரூக் - கார்த்திக் பாலசுப்ரமணியன்

 

"நீயே கவனி. நடைபெற சாத்தியம் குறைவாக இருக்கும் ஒன்றைப் பற்றி யோசித்து பயந்து இப்போதிருக்கும் இத்தனை அழகான பொழுதை வீணடிக்கிறாய். எப்போதும் உன் மனம் எதையாவது பற்றி எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. உன்னை நீயே மறைத்துக்கொள்கிறாய். மனத்தைத் திறந்து பேசக்கூட அஞ்சுகிறாய். எதிரே இருப்பவரை விடுத்து எங்கோ இருப்பவரை நினைத்துப்பயப்படுகிறாய். இந்த வாழ்க்கையை ஒரு சின்ன சிராய்ப்புகூட படாமல் வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறாய். ஆனால், அதன்பொருட்டே உன்னை நீயே வருத்திக்கொள்கிறாய். பக்கத்தில் பார் அந்தக் குழந்தையை! எவ்வளவு சந்தோசம் அதன் முகத்தில், நம்மால் அப்படி இருக்க முடியாதுதான். அதைப் பார்த்துப் போலியாக நகல் செய்வதுகூட தப்பில்லை என்று தோன்றுகிறது எனக்கு.”

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து 1400 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையில் ஆஸ்த்ரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதிக்கு வந்தடைகின்றன ‘கான்விக்ட் கார்கோ’ (convict cargo) என்றழைக்கப்பட்ட அந்த பதினோரு கப்பல்கள். இதற்கு சரியாக பதினெட்டு  ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்த்திரேலியாவின் இதே இடத்துக்கு பயணப்பட்டு அங்கிருக்கிற பூர்வகுடியினர் பற்றியும் வனவாழ் உயிர்கள் பற்றியும் விரிவான குறிப்புகளை பதிவுசெய்துவைத்தவர் கேப்டன் ஜேம்ஸ் . இவர்கள் இருவருமே உண்மையிலேயே இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இதில் கேப்டன் ஆர்தர் ஃபிலிப் ஆஸ்த்ரேலியாவுக்கு வந்திறங்குகிற நிகழ்வில் தான் துவங்குகிறது ’தரூக்’ நாவல்.

கேப்டன் ஃபிலிப்பின் கப்பலில் கூட வரும் வில்லியம், காபா உள்ளிட்டோரின் பின்புலமும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைந்து வேரூன்ற முனையும் கதையும் ஒரு புறம். தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த மென்பொறியாளன் காசிம், அவனுடைய மனைவி ஃபர்ஸானா இவர்களின் சமகால வாழ்வும் கதையும் மற்றொரு புறமும் என நாவல் நகற்கிறது. கார்த்திக்கின் முதல் நாவலான நட்சத்திரவாசிகள் போல எளிமையான ஒரு நேர்கோட்டுக் கதையாக இல்லாமல், வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கிற கதைகளுடன் கூடவே பல்வேறு பாத்திரங்களின் கிளைக்கதைகளையும் இணைத்து பல அடுக்குகளுடன் கூடிய ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கிறது தரூக். 

கடந்தகாலக் கதையிலும் சரி நிகழ்காலக் கதையிலும் சரி , இடம்பெறுகிற முக்கியப் பாத்திரங்கள் அனைவருக்கும் தங்கள் அடையாளம் சார்ந்த ஒரு பின்கதையும், அதனைத் தொடர்ந்த தேடலும் இருந்துகொண்டேயிருகிறது.

கடந்த காலக்கதையில்

தென் ஆஃப்ரிக்காவின் கலஹரி பாலைவனத்தின் பழங்குடியான காபா, ஐரோப்பியர்களின் காலணியாதிக்கத்தால் பாதிக்கபட்டு தன் நிலத்தையும், அடையாளத்தையும் இழந்து கொத்தடிமையாக்கப் பட்டு அங்கிருந்து தப்பிக்க கிடைக்கும் வேலைகளைச் செய்து எங்கெங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறவன்.

கலோடன் போருக்குப் பிறகு ஸ்காட்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தபின்னும் மனதில் தன் கிராமத்தையும் ஹாக்மனே எனும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நினைவுகளையும் சுமந்துகொண்டேயிருந்தவர் வில்லியமின் தாய். வில்லியம் ப்ரித்தானிய அரசுக்காக பணிபுரிந்தாலும் அவர்களால் எப்போதும் ஒரு வேற்றாளாகவே பார்க்கப்படுபவன். அம்மை நோய்க்கு தாயைப் பறிகொடுக்கும் வில்லியம் காலத்துக்கும் அவருடைய நினைவுடனேயே வாழ்கிறான்.

 போர்ட்ஸ்மவுத் தங்கும் விடுதியில் பணிப்பெண்ணாக அறிமுகமாகி பின்பு வில்லியமின் காதலியாகும் ரெபெக்கா , ஓவியங்களில் வழியே தன் தாயின் சாயலில் தன்னைத் தேடிக்கொண்டிருக்கிற ஒரு பெண். ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வந்து பெரும் செல்வந்தனை மணந்து ரெபேக்காவைப் பெற்றெடுத்து பின்பு கணவருடனான மனவருத்தத்தில் அவரைப் பிரிந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் தாயை நன்றாக கவனித்துக் கொள்ளும் பொருட்டு உழைத்துக் கொண்டிருப்பவள் ரெபேக்கா.

தற்காலக் கதையில்

தன்னை சுற்றியிருக்கிற அனைத்திலும் சுத்தத்தையும் ஒழுங்கையும் எதிர்பார்க்கிற ,அதிகம் பேசாத ஒருவனான காசிம் ஃபர்ஸானாவின் கட்டாயத்தால் சொந்தநாட்டை விட்டு ஆஸ்திரேலியா வந்தாலும் எங்கும் ஒட்டி ஒன்றி ஒத்துப்போகமுடியாமல் மன அமைதியின்றி அடையாளச் சிக்கலுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறவன். ஒரு மாதிரி உள்ளுக்குள் பதற்றத்துடனும் அமைதியில்லாமல் குழப்பத்துடனேயே அத்தனையையும் எதிர்கொள்கிறவன்.

காசிமின் மனைவி ஃபர்ஸானா.இந்த நாவலில் இடம்பெற்ற பாத்திரங்களிலேயே மிகத்தெளிவான மனம் கொண்ட பெண். ஊரார் உறவினர் முன்பு காசிமுடன் இன்னும் பெரிதாக வாழ்ந்து காட்டிவிட வேண்டுமென வைராக்கியத்துடன் அவனை ஆஸ்த்ரேலியாவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தவளும் அவள்தான். இந்தியாவில் சொந்த ஊரில் புர்கா அணிந்து கொள்ள மறுக்கவும், வெளிநாட்டில் கட்டாயம் புர்கா அணிந்துகொள்ளவும் தெரிந்த அளவுக்கு மனத்தெளிவு கொண்டவள்.

தனது கடந்த காலத்தையும் தான் பிறந்த  பூர்வகுடியினரின் வரலாற்றை தேடிப்பதிவு செய்யும் வேட்கையுடன் அலைகிற பெண் ஜெட்டா.தனது குடும்ப உறவுகள், தன் பிறப்பின் அடையாளம் சார்ந்த குழப்பங்கள் என சிக்கலான மனவார்ப்பைக் கொண்டவள்.  காசிம் உடனான அவளுடைய உறவு தொடங்கும் விதமும் வளர்ந்து முடியும் விதமும் அதற்குச் சான்று. 

வில்லியம் ரெபெக்கா, காசிம் - ஜெட்டா என இருவரிடமும் இரண்டு காலகட்டத்திலும் இடம்பெறுகிற பிரியத்தின் கல், வில்லியம் முதன்முதலில் குடை ஓவியங்களை காணுமிடம்,  பூமராங்-நிலவு தொடர்பான பழங்குடிகளின் கதை, காபாவின் மதிப்பீடுகளும் அவன் உலகை அணுகும் விதமும், கடந்த காலத்தில் ஐரோப்பிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளின் கொடூரமான ஆக்கிரமிப்பு மனநிலை ,அதன் பொருட்டு அவர்கள் செய்யும் மனிதத்தன்மையற்ற செயல்கள், சமகாலத்தில் குழந்தைப்பருவத்திலேயே அவர்கள் மனதில் மற்ற நாட்டவரைப் பற்றி விதைக்கப்பட்டு வெளிப்படுகிற வெறுப்பு என நுணுக்கமாய் அத்தனை விஷயங்கள் நாவல் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. இன்னும் இங்கே குறிப்பிடாத பல விஷயங்கள் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. நாவலை படித்து முடிக்க எடுத்துக் கொண்ட காலம் தாண்டி அதனை திரும்ப அசைபோடவும் மீள்வாசிப்பு செய்யவும் அதிகம் நேரம் தேவைப்பட்டது. 

நாவல் முழுவதும் கார்த்திக்கின் எழுத்துநடை ஒரு மொழிபெயர்ப்பு நாவலுக்குரியதைப் போலவே தோன்றியது. கார்த்திக்கின் கடுமையான உழைப்பும் வரலாற்றுத் தரவுகளை கதையுடன் இணைக்க எடுத்துக்கொண்ட  முயற்சியும் சிறப்பான பலனைத் தந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஏற்றவாறு சிறப்பான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் ஓவியர் சுரேஷ் குமார் ராமர். காசிமின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் எதிர்பாராத ஒன்றாக இல்லை என்பது கதை சொல்லலின் வெற்றி எனக்கொள்ளலாம். 

 ஒரு நிலத்தின் பூர்வீக ஆதிக்குடியினருக்கும் (natives) , அந்நிலத்தின் வளங்களின் பொருட்டும் ஏனைய காரணங்களுக்காகவும் நிலத்தையும் மக்களையும் அடக்கியாள நினைக்கிற ஆதிக்கவாதிகளுக்கும் (colonizers), பிழைப்புத் தேடியோ அல்லது சூழலின் காரணமாகவோ வலசைப் பறவைகள் போல குடியேறும் புலம்பெயர்ந்தோருக்குமான (immigrants) போராட்டம் என்பது நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் இப்போது வரையிலும் தொடரும் ஒரு நிகழ்வு. கார்த்திக் பாலசுப்ரமணியனின்’தரூக்’ நாவலில் இதே மாதிரியான போரட்டங்களின் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் கதைகளும் கிளைக்கதைகளுமாக சொல்லப்பட்டிருக்கிறது.

A well written, well edited novel . Must read. And Karthik has arrived ...! <3  வாழ்த்துகள் கார்த்திக் !!!

தரூக், கார்த்திக் பாலசுப்ரமணியன், காலச்சுவடு பதிப்பகம், 311 பக்கங்கள், விலை ரூ. 350

https://www.panuval.com/4539/taruuk-10025445

புதன், 30 அக்டோபர், 2024

Meyyazhagan - மெய்யழகன்


  

மெய்யழகன் படம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பார்வையும் கருத்தும் இருக்கிறது. பலரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டதாகவும் சில காட்சிகளில் அழுததையும், நெகிழ்ந்ததையும் குறிப்பிட்டு இருந்தார்கள் .

டெல்டா மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக ஊர் பெயர்ந்த பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒரே மாதிரியான கதை இருக்கும். நிலம்/வீடு உள்ளிட்ட அனைத்தும் இருந்து பின்பு ஒன்றுமில்லாமல் போனபின் தான் தலையெடுக்க ஊரை விட்டு வந்தவர்கள். அல்லது பூர்வீக சொத்தை சொந்த பந்தங்களிடமோ பங்காளிகளிடமோ ஏமாந்து எழுதிக்கொடுத்துவிட்டு ஒன்றுமில்லாமல் போனபின் புதிய தொடக்கத்திற்காய் ஊர் மாறிப் போனவர்கள் என ஏதோவொரு கதை. எதுவும் இல்லையெனில் சாமர்த்தியம் போதாமல், வைத்துக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் , குடி சூது கடன் என உட்காந்து தின்று சொத்தை அழித்தவர்கள். அல்லது இது எதுவுமே இல்லாமல் கல்விக்ககவோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்காக ஊரை விட்டு வந்தவர்கள்.ஒரு சிலர் கேட்டிருந்தது ஏன் இரவோடு இரவாக கிளம்பி வர வேண்டும் என. அது ஒரு மாதிரியான உள்ளுணர்வு. சொந்த வீட்டை விற்றுவிட்ட பின்னர் அதே ஊரில் நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் வாடகை வீடுகளில் குடியிருந்தாலும் கடைசியாக சென்னை வரும்போது இப்படித்தான் இரவோடு கிளம்பி வந்தோம்.இன்னும் இந்தப் படத்தில் என்னவெல்லாம் relatable எனச்சொல்ல முயன்றால் நிறைய சொந்தக்கதை சோகக்கதை சொல்ல வேண்டிவரும். அது வேண்டாம். அதனை விரும்பவில்லை.  

நாங்களும் இதில் ஏதோ ஓர் வகைமையில் அடங்கிப் போகும் கதையைக் கொண்டவர்கள் தாம். சொந்த ஊருக்கும் எங்களுக்குமான கடைசிக் கண்ணி அப்பா தான் . அவர் போனதும் திரும்ப ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமோ உந்துதலோ எதுவுமே இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில் தனிப்பட்ட முறையில் என்னால் ரொம்பவே உணர்ந்து கொள்ளக் கூடிய படமாக இருந்தது ‘மெய்யழகன்’. ஆனால் கீழத்தஞ்சை டெல்டா பகுதிகளை பிரேம்குமார் அசலாக காண்பித்திருக்கிறாரா எனப் பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். எப்போதோ ஊரைவிட்டு வந்த ஒருவரின் ஊர் சார்ந்த நினைவுகளின் மீட்டுருவாக்கம் தான் மெய்யழகன் திரைப்படம். அவர் மனதில் தஞ்சை பற்றிய நினைவுகளையும் அது சார்ந்த சில கற்பனைகளையும் தனக்கேயுரிய நகரத்து அழகியல் (urban aesthetics) உடன் உருவாக்கி கதையாக்கியிருக்கிறார். வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் , தஞ்சை பெரிய கோவில், நீடாமங்கலம், பேருந்து வழித்தடம் , தெரு, வீடு இவையனைத்தையும் சேர்த்து அங்கே சில கதைமாந்தர்களையும் உலவவிட்டு தான் சொல்லவந்த கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார் (Thanjavur in his mind or his idea of Thanjavur). இந்த அழகியலின் காரணமாகவே திரைப்படத்தில் அதீதமான நாடகத்தன்மை இருந்தாலும், கதையின் போக்கில் அது மறந்துவிடுகிறது. அசலான டெல்டா திரைப்படம் எனக்கேட்டால் இன்னமும் ‘களவானி’ திரைப்படத்தைத்தான் சொல்வேன். 

 சென்னையில் தக்‌ஷின் சித்ரா என்று ஒரு இடம் உண்டு. கிராமங்களும் அங்குள்ள வீடுகளும், பொருட்களும் எப்படி இருக்குமென வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். பணிபுரிகிற நிறுவனத்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் நம்மாட்கள் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிற முதல் இடம் அதுவாகத்தான் இருக்கும். அவர்களும் village experience என்று மகிழ்ந்து போவார்கள். கிட்டத்தட்ட அந்த மாதிரியான அழகியல் தான் மெய்யழகன் திரைப்படத்தினுடையதும். அதனைத் தவிர்த்து படத்தில் ரசிக்கவும் , ஒன்றிப்போகவும் நிறைய விஷயங்கள் உண்டு. ராஜ்கிரணுக்கும் ஜெயப்பிரகாஷுக்குமான தொலைப்பேசி உரையாடல் காட்சி, கார்த்தி அரவிந்த்சாமியிடம் அவர் விட்டுச்சென்ற சைக்கிள் தங்கள் வாழ்க்கையையே மாற்றியது பற்றி சொல்லுமிடம், அதிகம் பேரால் குறிப்பிட்டு சொல்லப்பட்ட கல்யாண மேடையில் தங்கைக்கு கொலுசு அணிவிக்கிற காட்சி என இன்னும் நிறைய. 

   பரபரப்பில்லாத கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்துப் பழகாத நமக்கு ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் நிதானம் ஆரம்பத்தில் பிடிபடவில்லை.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என எல்லாவற்றிலும் அதே நிதானம். கொஞ்சம் கொஞ்சமாய் அதற்குப் பழகி படத்தில் நாம் ஒன்றிப்போகும்போது படம் முடிவடைகிறது. ஜல்லிக்கட்டு காளை தொடர்பான காட்சிகள் தவிர்த்து (வெட்டப்பட்டவை உட்பட) படத்திலிருந்து விலகி நிற்கிற அம்சம் என எதுவுமில்லை. It was so calming at the end , that I forgot to even look at my phone for more than hour. கோவிந்த் வசந்தாவின் இசையும் கமல் குரலில் வருகிற பாடலும் அதனைப் பயன்படுத்தியிருந்த விதமும் அற்புதம். படம் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது இதுவும் ஒருமாதிரியான fantasy திரைப்படம் தான் என. சுற்றியிருக்கிற அத்தனை உறவுகளும் நம் மீதான அன்புடனும் பரிவுடனும் வெள்ளந்தியாகவும் வெளிப்படையாகவும் இருப்பதான காட்சிப்படுத்தல் ஒரு மிகையான ஆனால் அழகான கற்பனை. போலவே ஒருகட்டத்தில் மெய்யழகனும் அருள்மொழியும் ஒரே ஆளின் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தின் வயதின்/பிரதிபலிப்பு என்று தோன்றியது.Meyyazhagan is Arul's past/lost self which he eventually rediscovers through his journey . இரண்டு ஆண்களுக்கு இடையேயான நட்பை கடைசியாக இத்தனை அழகாக திரையில் பார்த்தது கார்த்தியின் ‘தோழா’ திரைப்படத்தில்தான். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அழகான bromance. அதிஷா இதைப் பற்றி மட்டுமே சிறப்பான ஒரு பதிவெழுதியிருக்கிறார். தேடிப்படித்துவிடவும்

 கார்த்தியைத் தவிற இந்தப் பாத்திரத்தை இவ்வளவு சிறப்பா நடிச்சிருக்க முடியுமா தெரியல. பேசுற தொனி உட்பட அப்படியே மாறியிருக்காரு. அரவிந்த்சாமியுடைய நடிப்பு பத்தியும் நாம தனியா  சொல்லத்தேவையில்லை. கடைசில அந்த மனப்போராட்டத்தோட ஊரவிட்டு கிளம்பி வர்ரதெல்லாம் அவ்வளவு அழுத்தம். கொஞ்ச நேரம் வந்தாலும் ஸ்ரீதிவ்யாவுடைய பாத்திரமும் நடிப்பும் கூட அழகா இருந்துச்சு. எனக்கு ரொம்பவே பிடிச்சது. I absolutely love then way how Premkumar writes the leads in his movies. Their awkwardness and how they unravel later is all so poetic and pleasing.

And yes நானும் ஒரு சில இடங்கள்ல அழுதேன் தான். This movie is capable of doing that to you.

மத்தபடி ராவோட ராவா ஏன் கிளம்பி வந்தாங்க, வேற யார்கிட்டயாவது  அவன் யாருன்னு கெட்ருக்கலாமே, கேட்டவ்வுடனே 25 லட்சம் எவன் தருவான் மாதிரியான logical கேள்விகளை பெருசா எடுத்துக்க தேவையில்லை. இந்த மாதிரி உடைக்க ஆரம்பிச்சா எல்லா சினிமாவையும் எல்லா கதைகளையும் சுலபமா உடைச்சிட்டு போகலாம். அது அவசியமில்லைன்னு தோணுது. At least I cannot be that cynical while approaching any work of art and could never ridicule it baseless just for my clout .

 Meyyazhagan is beautiful tale and a much needed breather. Please do watch it if you haven't already. <3 <3 <3

 

 

ஞாயிறு, 26 மே, 2024

The random urge and the trip down the musical rabbit hole


என்றைக்கும் இல்லாமல் திடீரென ஒரு நாள், தூங்கி எழுந்ததும் காலை ஒரு மாதிரி வெறுமையாக இருக்கும். வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பேன். தூக்கம் தெளிந்தும் தெளியாமல் இருக்கும். அப்படியே பல்துலக்கி விட்டு முகம் கழுவிவிட்டு, ஒரு காப்பி போட்டுக் கொண்டு, லேப்டாப்பைத் திறந்து ஏதாவது ஒரு பாடலைத் தேடுவேன். அது எப்போதோ கேட்ட அல்லது யாரோ சொன்ன ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டேயிருக்கிற பாடலாக இருக்கலாம். அல்லது இதுவரை கேட்டேயிராத ஆனால் அப்போதைய மன அலைக்கழிப்பை ஆற்றுப் படுத்துகிற ஒரு பாடலாக/ இசைத்துணுக்காக இருக்கலாம். 
 
அந்தப் பாடலைக் கேட்டதும் , இவர்களைப் பற்றி நம் நட்புவட்டத்தில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிப் பார்ப்பதுண்டு. எப்படியும் ஓரிருவர் எழுதியிருப்பார்கள். அதிலிருந்து மற்றுமொரு திறப்பு கிட்டும். வேறொரு பாடல்; வேறொரு இசைக்கலைஞர் ; வேறொரு பரிமாணம் வேறொரு உலகம். ஒன்றை அடியொற்றி மற்றொன்றென நம்மை சுற்றியிருக்கிற உலகை மறந்து, வேலை நாளின் பரபரப்பை மறந்து, ஒரு இசைச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருப்பேன். பின்பு ஏதோவொரு புள்ளியில் மனம் அடங்கியதும் ஒரு மாதிரி புத்துணர்வுடன் இந்த புற உலகிற்கு மீண்டு வருவேன். 
 
இம்மாதிரி musical rabbit holeல் விழுவதும் தேடுவதும் கேட்டிராத புது இசையைக் கண்டடைவதும் அண்மையில் (கடந்த ஒரு சில ஆண்டுகளில்) வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்க்கைச் சூழல், பணி , பொறுப்புகள், தேவைகள், சோம்பேறித்தனம், மன அயற்சி, என பல காரணிகள் உண்டு. கேட்ட பாடல்களையே கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதியான சொகுசு உண்டு. பழகிவிட்ட மனமும் அதனைத் தாண்டி வேறெங்கும் செல்ல அனுமதியாது. அத்தனையையும் தாண்டி ஒரு நாள் இந்த தேடலில் இறங்கினால் கிடைக்கிற அத்தனையும் புதையல்களாக இருக்கும். இன்றைய நாள் அப்படியொரு நாள்.
  
 
 
 முதலில் கேட்டது Glass beams - Mahal . ஆஸ்த்ரேலிய இசைக்குழுவானாலும் ஒரு மாதிரி துருக்கிய வாடையுடனான இசையாகத் தோன்றியது. மத்திய கிழக்கும் இந்தியாவும் மேற்கத்திய இசையில் சந்திக்கிற புள்ளி போல. தொடர்ந்து அவர்களைப் பற்றி தேடிப் படித்து மற்ற பாடல்களையும் கேட்கத்துவங்கினேன். Such a trip it was ❤ Mahal தொடங்கி rattlesnake, mirage, taurus என ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம் ஒரு அனுபவம். இவர்களைப் பற்றி தேடியதில் ரெட்டிட்டின் r/Khruangbin குழுமத்தில் இவர்களுடைய காணொலியைப் பகிர்ந்து பாராட்டி பேசியிருந்தார்கள். அதில் ஒரு கமெண்ட் 'They sound like middle eastern khruangbin' என்றிருந்தது. உடனே khruangbin பற்றித் தேட.. voila மற்றுமொரு கதவு திறந்தது. And yes , I discovered Khruangbin , only now. க்ஹ்ராங்பின் பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேட Srinivasan Rம் , Ravi kiranம் பகிர்ந்திருந்த இவர்களுடைய பாடல்கள் கண்ணில் பட்டன. 
 
மாஸ்டர் சரவண கணேஷின் மற்றுமொரு கட்டுரையும் கிடைத்தது. அவர் பகிர்ந்திருந்த பாடல் க்ஹ்ராங்பின்னுடையதாக இருந்தாலும் கட்டுரை மற்றுமொரு ஆஸ்த்ரேலிய funk இசைக்குழுவான Hiatus Kaiyote பற்றியது. அதுவரையில் இவர்களையும் கேட்டதில்லை. Laputa, Jekyll, Shaolin monk motherfunk என இது ஒரு ரோலர் கோஸ்ட்டர் பயணம். இறுதியாக toumani diabate ல் வந்து நின்றிருக்கிறேன். What a wonderful experience and what a ride it has been. எல்லா பாடல்களின் இணைப்புகளையும் கமெண்ட்ல போட்றேன். 
❤
 
 

 
//...have no idea to this day what those two Italian ladies were singing about. Truth is, I don't want to know. Some things are best left unsaid. I'd like to think they were singing about something so beautiful, it can't be expressed in words, and makes your heart ache because of it. I tell you, those voices soared higher and farther than anybody in a gray place dares to dream. It was like some beautiful bird flapped into our drab little cage and made those walls dissolve away, and for the briefest of moments, every last man in Shawshank felt free. - Red (Shawshank redemption) //