வியாழன், 26 ஜூன், 2025

நெஞ்சில் சுமக்கின்ற பாறாங்கல்


----------------------------------------------------------------
நான் எனது நெஞ்சில் நெடுநாட்களாக ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

எனது இடது தோள்பட்டைக்கு முன்னே மார்புக்கு கொஞ்சம் மேலாக அந்த பாறாங்கல்லை வைத்து இரு கைகளாலும் அழுத்திப் பிடித்திருக்கிறேன்

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றிய போது அதன் பாரம் குறித்தான அச்சமோ சுமையின் காரணமான வலியோ தெரியவில்லை

அல்லது நான் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை

எப்போதிலிருந்து இந்த பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறாய் எனக் கேட்பீர்களானால் என்னிடம் பதிலில்லை

அல்லது நான் அதனை நினைவில் கொள்ளவில்லை

இரண்டாண்டுகள் ஆகியிருக்கலாம் இருபதாண்டுகள் ஆகியிருக்கலாம்
யுகங்களாகக் கூட இருக்கலாம்

எவ்வளவு கனம்? என்ன எடை?
என்னால் அளவிட முடியவில்லை

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றியபோது இருந்த எடை தான் இப்போதும். 
அவ்வப்போது கொஞ்சம் கூடியும் குறைந்தும் இருக்கலாம்
சரியாக சொல்லத்தெரியவில்லை

அல்லது நான் அதனை அளவிடவில்லை

உங்களுக்குப் புரியாத வகையில் சொல்வதானால்
என் தந்தையின் உடலிலினின்று பிரிந்த உயிரின் எடையாக இருக்கலாம்
என் நண்பர்களின் மரணத்தின் கனமாக இருக்கலாம்
வேறு சில நண்பர்களின் பிரிவின் சுமையளவாய் இருக்கலாம்
பிரியமானவர்களின் மெளனத்தின் கனமாக இருக்கலாம்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

இறக்கி வைக்கலாமே எனக் கேட்பீர்களானால் எங்கே அல்லது யாரிடம் எனத் திரும்பக்கேட்பேன்
சிலரிடம் பதில் இருக்கும் சிலரிடம் பதில் இருக்காது
எங்கே எப்படி யாரிடம் இறக்கி வைப்பதென யாருக்கும் தெரியவில்லை...! 

அல்லது யாருக்கும் நேரமில்லை 

இந்த பாறாங்கல்லை சுமந்தபடி உறங்கி விழிக்கிறேன்
குளித்து உடுத்தி அலுவலகம் செல்கிறேன்
புகைப்படங்களுக்குச் சிரிக்கிறேன்
புத்தகங்கள் படிக்கிறேன்
சமைத்து உண்கிறேன்
குழந்தையைக் கொஞ்சுகிறேன்
அவ்வப்போது இந்தப் பாறாங்கல் இருப்பதே தெரியாமல் மறைந்து போய்விடுகிறது

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

- சுதர்சன் ஹரிபாஸ்கர்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக