சனி, 21 செப்டம்பர், 2013

வட்டியும் முதலும் - ராஜு முருகன்

 

  இது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘ராஜுமுருகன்’ அவர்கள் எழுதிய வட்டியும் முதலும் தொடர் அனைவரும் அறிந்ததே. அந்த தொடரின் தொகுப்பாக விகடனில் வெளிவந்த புத்தகமே இது.பொதுவாகவே கொஞ்சம் உணர்வுப்பூர்வமான, நாடகத்தன்மை கலந்த, எழுத்து உட்பட எல்லாமே பகடிக்குள்ளாக்கப் படுகிற இந்த யுகத்திலும் இப்படி ஒரு எமோஷனல் தொடர் பெருவெற்றி பெற்றது சாதனை தான். ஆனாலும் நம்ம ‘டுட்டர்’ மக்கள் #TweetLikeRajuMurugan னு ஒரு ஹாஷ்டேக் போட்டு தாளிக்கத் தவறவில்லை.

நான் ராஜுமுருகனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருந்தன என்னிடம்.சினிமா தொடங்கி எழுத்துலகு வரை ‘என்னா பங்காளி… அம்ம பயலுக இப்புடி பண்ணிபுட்டாய்ங்க…? ...க்காலி போட்றா’ வகையறா மதுரை மொழி வட்டார வழக்கே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காலகட்டத்தில் ‘என்ன மாப்ள.. நம்ம பயலோ.. என்னா சொல்றானோ… கம்னாட்டி செவுட்ட பேத்துபுடுவேன்னு சொல்றா..’ மாதிரியான தஞ்சை வட்டார வழக்கு தமிழை கண்குளிர எழுத்தில் படித்ததே பெரிய ஆனந்தம். அப்புறம் திருவாரூர் தொடங்கி நீடாமங்கலம், அபிவிருத்தீஸ்வரம், வெட்டாத்துப்பாலம், கொரடாச்சேரி, குடவாசல், செல்லூர், ஓகை, மூலங்குடி, கூத்தாநல்லூர், ஒளிமதி, என ராஜுமுருகன் விவரிக்கிற எல்லா சிற்றூர்களும் இடங்களும் திருவாரூர்காரனான  எனக்கு பள்ளி-கல்லூரி காலத்திலிருந்தே ரொம்பவும் பரிச்சயம். ஆக ஒவ்வொரு அத்தியாயத்தையும் சும்மா அனுபவிச்சு ரசிச்சேன்.

சரி அப்புடி என்னத்ததான் எழுதிருக்காருன்னு கேட்டீங்கன்னா… நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையான ஃப்ளாஷ்பேக் இருக்கும். அது மறக்கவே  முடியாத மகிழ்ச்சியைத் தந்த இளமைக்காலமா இருக்கலாம். அல்லது சொல்ல முடியாத துயரங்களைக் கடந்து இழப்புகளைத் தாண்டி வந்த பதின்பருவமா இருக்கலாம். முட்டி மோதி எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து சாதித்துக்காட்டிய இருபதுகளின் இறுதியா இருக்கலாம். இப்படியான காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். மூன்றாம் வகுப்பு பள்ளித்தோழி, பக்கத்து வீட்டு ட்யூஷன் அக்கா, பள்ளிகூட வாசல் ஐஸ்வண்டி அண்ணன், பிள்ளையார் கோவில் பிச்சைக்காரன்,  திருவிழா கடையில் துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்த மாமா, கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்றுத்தந்த தாத்தா, ப்ரூஸ்லீ கதை சொன்ன கடைசி பென்ச் நண்பன், வேலை தேடியலைந்த காலத்தில் சோறு போட்ட நண்பன், திருமணப் பத்திரிக்கை அனுப்பிவிட்டு வரவை எதிர்நோக்காத காதலி, பத்து மணி நேர ரயில் பயணத்தில் பல வருட சொந்தம்போல் பழகிவிட்ட குடும்பம், தினமும் ஒரே சிக்னலில் கண்களில் பசியோடு நம்மைக் கடந்து போகிற சிறுமி... இப்படி எத்தனையோ பேரைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இது மாதிரி தன் வாழ்க்கையில் கடந்து வந்த அத்தனை பேரையும் அந்த மனிதர்கள் தந்த மறக்கமுடியாத அனுபவங்களையும் ஒட்டு மொத்தமாக நினைத்துப் பார்த்து உருப்போடுகிற, பொருள் தேடும் பொருட்டு சிற்றூர்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்த, நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய, ஒரு சராசரி முதல் தலைமுறை மத்தியவர்க்க இளைஞனின் ’நாஸ்டால்ஜியா’ நிறைந்த பதிவு தான் இந்த ‘வட்டியும் முதலும்’.

ஆறேழு வரிகளில் பத்து விதமான மனிதர்களையும் அவர்கள் வாழும் சூழலையும் தட தடவென ஸ்டாப் ப்ளாக்கில் வாசிப்பவர்களுக்குக் காட்டிவிடக் கூடிய வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர் ராஜுமுருகன். தஞ்சை மண்ணுக்கே உரித்தான கிண்டலுக்கும் கேலிக்கும் கொஞ்சமும் குறைவல்ல. 500 பக்கங்களானாலும் அலுக்காமல் விறுவிறுப்பாகப் படித்து முடிக்க அதுவே காரணம்.ராஜுமுருகனின் எழுத்து பேசாதவைகளையெல்லாம் ஹாசிஃப்கானின் சித்திரங்கள் பேசிவிடுகின்றன. அவ்வளவு உயிரோட்டமான பொருத்தமான ஓவியங்கள். 

மொத்தமாய்ப் படித்து முடித்த பின்னர்… சொல்லாமல் விட்ட நன்றிகளையும், கேட்காமல் விட்ட மன்னிப்பையும், மறந்து போகவே முடியாத முகங்களையும், சிலிர்த்துப்போன தருணங்களையும், இழந்துவிட்ட உறவுகளையும், வெளிப்படுத்தாத காதலையும், தொடர்பு விட்டுப்போன நட்புகளையும், நெகிழ்ந்துபோன நிகழ்வுகளையும், இன்னும் வார்த்தைகளில் அடைக்கமுடியாத எத்தனையோ உணர்வுகளையும் அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து போட்டு நினைவுகளில் மூழ்கடித்துவிட்டுப் போவதே…  ராஜுமுருகனின் எழுத்துக்குக் கிட்டிய ஆகச்சிறந்த அங்கீகாரமாய் / வெற்றியாய்க் கருதுகின்றேன்.   
ராஜுமுருகன்
’வட்டியும் முதலும்’-இல் இருந்து என்னைக் கவர்ந்த வரிகள்....

”அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது? கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், ஜோதி மாதிரி நிம்மதியான வாழ்க்கையை வாழவிடாமல் என்னைத் துரத்தி அடிப்பது இந்த அறிவு முகமூடிதான் எனத் தோன்றுகிறது. எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன்”

”நிஜமாகவே நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்து சாமான்யர்கள் ஹீரோவாகிற தருணங்கள் மிக மிகச் சொற்பம்தான். அதுவும் அதிக நேரம் நீடிப்பது இல்லை. 'நான் கமல்ஹாசன்... நான் கமல்ஹாசன்...’ என நாம் கத்திக்கொண்டு திரிந்தாலும், சமூகம் நம்மைச் 'சப்பாணி... சப்பாணி...’ என்றுதான் பேசுகிறது. வில்லனாக டெரர் முகம் காட்டும்போது, 'ஏய்! மயில்சாமிக்குக் கோவத்தப் பாரு...’ எனக் கைகொட்டிச் சிரிக்கிறது. இந்தச் சமூகத்தில் காமெடியனாக இருக்கும்போதுகூட, நம்மால் கவுண்டமணியாக இருக்க முடிவது இல்லை... செந்திலாகத்தான் இருக்க முடிகிறது”

“பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? "

“அற்பத்துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன் படுத்துகிறோம்...?அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகிவிட்டது இந்த தேசத்தில்.”

“பசி… காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்! பசி என்றால்… வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா? இல்லை. பசி உருவாக்கும் புன்னகையும், துயரமும், நன்றியும், துரோகமும் காற்றைப்போல எங்கெங்கும் நிறைந்துகிடக்கின்றன!”

”பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வோர் உயிரும். “உனது பசியை நான் உண்ர்ந்துகொள்கிறேன்” என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம். ஆனாலும், ஏன் பிறர் பசியை பலர் உணர மறுக்கிறோம்? பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும்விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான்… ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!”

”யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில் தான் நடக்கும்! காத்திருப்பின் வலியை சுகமாக்கும் உயிர்கள் தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா..?”

”கனவு , லட்சியம் , வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேதான் போய் நிற்கப்போகிறோம்?பாழாய்ப்போன மனசு எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலோ, விடுபடுவதற்கான விமோசனங்களிலோதான் இருக்கிறது.அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. தளைகள் அற்ற சந்தோஷத்திற்கு காத்திருக்கிறது.. மாடிப்படியின் கீழ் இரவெல்லாம் கத்தும், குட்டிகள் ஈன்ற பூனையைப்போல எப்போதும் பரிசுத்தமான காதலுக்காக பரிதவிக்கிறது”

”ஏதோ நினைவு, பாடல், வருத்தம்.. நமது இரவுக்குள் நம்மை கேட்காமல் நுழைந்து விடுகிறது ! வீட்டுக்கு கொடுக்க முடியாத பணம், அடைய முடியாமல் தவிக்கவைக்கும் இலக்கு, அணையாமல் எரியும் ஓர் அவமானம், பிரிவின் வெக்கை, அன்பின் அவஸ்தை, ஈழம், கூடங்குளம், நெஞ்சறுக்கும் செய்திகள், செரிக்கமுடியாத மனிதர்கள்... ஏதாவது வந்துவிடுகிறது உறக்கத்தைக் கலைத்துப் போட…”

”பறவைகள் தடயங்களே இல்லாமல் போய்விடுகின்றன.. அவற்றின் எச்சங்கள் மரங்கள் ஆவதைப் போலதான் இந்த இசையும் பாடல்களும்.”

”இயலாமை ஒரு கரையிலும் அன்பு மறு கரையிலுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது காதல் நதி. பிரிவை விடவும் பெரிய பரிசு காதலில் இருக்கிறதா என்ன..??”

”பால்யம் என்ற திரும்பி வாராத பேராற்றின் கரையில் சந்திக்கும் போது,
நினைவுகளின் ருசியும் நிகழ்வுகளின் வலியும் கைகுலுக்கிக்கொள்கின்றன.
விளையாடுவதை நாம் நிறுத்தும் போது, நம்மை வைத்து இந்த உலகம் 
விளையாட ஆரம்பிக்கிறது.”

”வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரலால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரியங்களையும் பிரிவுகளையும் நிரப்பிக்கொண்டே இருக்கிறோம்! யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்!”

_________________________________________________________________________________
வட்டியும் முதலும்
விகடன் பதிப்பகம்
விலை: 215
ஆன்லைனில் வாங்க: http://goo.gl/VU8Jes




3 கருத்துகள் :