புதன், 23 அக்டோபர், 2013

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்



வெகு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட ஒரு தொலைக்காட்சித் தொடரை நீங்கள் இடையில் திடீரென பார்க்கத் தொடங்குகிறீர்கள். கதை புரிய கொஞ்சம் நாளானாலும் ஓரளவு புரிந்தபின் கதையோடும் கதைமாந்தரோடும் ஒன்றிவிடுகின்றீர்கள். பின் அந்தத் தொடர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அதனைப் பார்ப்பதை நிறுத்திவிடுகின்றீர்கள். கிட்டத்தட்ட இந்த மாதிரியான ஒரு உணர்வையே எனக்குத் தந்தது அசோகமித்திரன் அவர்களின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவல்.

சுதந்திரத்திற்குப் பின்னான ஆனால் இந்திய நாட்டுடன் இணையாத - நிஜாம்களால் ஆளப்பட்ட - ஹைதராபாத் – செகந்திராபாத் இரட்டை நகரங்கள் தாம் கதைக்களம். கிரிக்கெட் விளையாட்டில் பேரார்வம் உடைய வெறெதற்கும் துணிய தைரியமில்லாத… குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு நடக்கிற எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு சராசரியான பதின்பருவப் பையன் சந்திரசேகரின் பார்வையில் தான் (பெரும்பாலும்) கதை சொல்லப் படுகின்றது.
நகரின் குறுகலான வீதிகளைப் பற்றி, நிஜாமின் ஆட்சியிலிருந்த குறை நிறைகளைப் பற்றி, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக, அந்த காலத்தைய அரசியல் சூழல் பற்றி… அந்த ஊர்களிள் குடியிருந்த மக்களைப் பற்றி.. என அத்தனை வர்ணனைகள்..தனித்தனியாய்…!! ஒன்றோடொன்று உரசாமல் கதையினை நகர்த்திச் செல்கின்றன.

பெரும் பிரச்சனை நடந்துகொண்டிருக்கின்ற ஒரு ஊரில் திடீரென கிளம்பிச் சென்று தங்கிவிட்டு.. கொஞ்சநாள் அங்கேயே வாழ்ந்துவிட்டு அந்த பிரச்சனைக்கான தீர்வை அடையும் முன்னரே அந்த ஊரிலிருந்து திரும்பிவிட்ட உணர்வு எத்தகையதோ இந்த புத்தகம் தந்த உணர்வும் அத்தகையதே.

மின்னல் வேகமாய் ஓடப்பழகிக் கொண்ட நமக்கு சாவகாசமான ஒரு நடைபயணம் கொஞ்சம் அலுப்புத்தட்டவே செய்யும். அசோகமித்திரன் அவர்களின் கதை நடை அப்படியானது…! ஒரு தாத்தாவோடு பேசிக்கொண்டே பொறுமையாக அவரோடு நடந்து செல்கிற மாதிரியான ஒரு எழுத்துநடை…!!



நிச்சயமாகப் படிக்கவேண்டிய நாவல்..!!

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு செல்லவும்


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக