புதன், 14 பிப்ரவரி, 2018

பெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan

Courtesy: https://thumbs.dreamstime.com/z/pintura-colorida-abstracta-de-los-pares-del-amor-38765203.jpg
பேரன்பின் உனக்கு,

இத்தனை மனநிறைவோடும் பொங்கும் புன்னகையோடும் ஒரு கடிதத்தை எழுதத் தொடங்குவேனென சத்தியமாய் நினைத்தேனில்லை. எப்போதுமே சேருமிடம் குறித்த கவலைகளோடும், போகும் பாதை குறித்த பயங்களோடும், நினைவின் சுமைகளோடும், நீள் நெடுங்கனவுகளோடும் பயணித்துத் திரிந்தவனுக்கு, உன் காதல் எத்தனை பெரிய விடுபடலென வார்த்தைகளில் சொல்லி மாளாது.

எதிர்பாராத நேரத்தில் என் தோள்மேல் வந்தமர்ந்து பின் விலகிப் பறக்க மறந்து என்னையே சுற்றிவருகிற ஒரு பட்டாம்பூச்சியைப் போல, என் தோட்டத்துப் பழங்களின் ருசிக்குப் பழக்கப்பட்டு தினந்தவறாது வரும் சிற்றணில் போல, வழிதவறி வந்தக் காட்டினுள் வாழப்பழகிவிட்டதொரு முயல்குட்டி போல, என்னை உன் நினைவுகளால் எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறாய் நீ.

உன் அருகாமையால்,  உன் வியர்வை மணத்தால், உன் சிணுங்கல்களால், உன் மென் தொடுதல்களால்,  உன் முத்தங்களால், உன் புன்னகையால், உன் கண்ணீரால், உன் சொற்களால், உன் உடலால், உன் பேச்சால், உன் நினைவால், உன் வெப்பத்தால், உன் கண்சிமிட்டல்களால்,
உன் இருத்தலால்,
உன்னால்...
என் உலகு நிறைத்து...பிழைத்துக் கிடக்கின்றேன் நான்.

நான் படித்த அத்தனைக் கதைகளும்,ரசித்த அத்தனைக் கவிதைகளும், கேட்ட அத்தனைப்  பாடல்களும், கடந்து வந்த அத்தனை மனிதர்களும், மேற்கொண்ட அத்தனைப் பயணங்களும், காலம் மறந்து, சுற்றம் மறந்து, யாவும் மறந்து, நெடிந்து நீள்கிற நம் உரையாடல்களுக்காயென பிரத்யேகமாய் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாய் உணர்கின்றேன். போலவே உன் கனவுகளைக் காணவும், உன் உலகத்துக் கதைகளைக் கேட்கவும், உன் உலகத்துக் கடவுள்களையும் மனிதர்களையும் சாத்தான்களையும் தேவதைகளையும் சந்தித்துக் கை குலுக்கவும் தயாராய்க் காத்துக் கொண்டிருக்கிறேன் .

இனி நான் பயணிக்கிற எல்லா சாலைவழிகளிலும், எல்லா மலையேற்றங்களிலும், எல்லா விடியல்களிலும், எல்லா பனிக்காலப் பின்னிரவுகளிலும், எல்லா மழைநாள் மதியங்களிலும், உன்னோடும் உன் நினைவோடுமே வாழ்ந்து களிக்க விழைகிறேன்.

வெறும் வார்த்தைகளிலும் பாடல்வரிகளிலுமாய் அன்பைத் தேடித்திரிய விதிக்கப்பட்டவன் நான்; மறுப்புகளின் வாதையை ருசித்துப் பழகியவன்;
திறக்கப்படாத கதவுகளெனத் தெரிந்தே தினமும் பூங்கொத்துகளோடு காத்திருந்தவன்;

கடந்து வந்த அத்தனை மனங்களில் ஒன்றேனும் வார்த்தைகளினூடாய் என்னைப் படித்துணர்ந்துவிடாதாவென கைகளில் எப்போதுமே ஒரு கற்றைக் கடிதங்களைச் சுமந்தலைந்தவனை,
ஒரு தனிமை கொண்டாடியை,
எவ்வித முன்முடிவுமின்றி
எவ்வித தன்னிலைவிளக்கங்களுக்கும் இடங்கொடாது
என் எல்லா பிழைகளோடும் என்னை ஏற்றுகொண்டு
ஆரவாரமாய் எந்தன் கைபிடித்திழுத்துச் சென்று
உன் உலகினுள் சேர்த்துக் கொண்ட பெருங்காதல் தேவதைக்கு...

முத்தங்கள்..!

இந்நாளும் இனி வரும் எந்நாளும் நமக்கே நமக்கானதென வாழ்ந்து தீர்ப்போம் வா..!

தேடித்திரிந்தாலும்
இன்று தீராக்காதலனாய்,

நான் <3 nbsp="" p="">

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக