ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று




நானூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட நாவல், ஊதாப் பூக்களின் நீலப் புத்தகமாகவும், ரத்தப் பூக்களின் சிவப்புப் புத்தகமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. “சுண்ணாம்புக் குழிக்குள்ள குதிக்கிறவனத் தான் கட்டிப்பேன்” எனச் சொல்கிற சிறுமியின் பேச்சைக் கேட்டு கொதிக்கிற சுண்ணாம்புக் குழிக்குள் குதிக்கிற அளவுக்கு அதீத குறும்புத்தனமும் வெகுளித்தனமும் கொண்ட சிறுவன் கதிரின் கதையில் தொடங்குகிறது நீலப்புத்தகம். அவனுடைய பால்யமும், குறும்புத்தனங்களும். விடுதி வாழ்க்கையும், விவிலிய வாசகங்களும், அவன் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகளுமாய்த் தொடர்கிற கதை, பொருள் தேடும் பொருட்டு நாடோடியாய் வேவ்வேறு தொழில்கள் செய்து அலைந்தபடி வாழ்கிற கதிர், ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தால் கீழ்மையாகக் கருதப்படுகிற அத்தனைக் குற்றங்களையும் செய்யத்தொடங்குகிறான். 

கம்போடியாவின் தலைநகர் நோம்ப்பென்-ல் (Phnom Penh) நிகழ்கிற கோவிந்தசாமியின் கதை. இந்தக் கதையினூடாக ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையின் காட்சிகளும் விவரணைகளும் நம் கண் முன்னே விரிகின்றன. க்மெர் ரோஜ் (Khmer Rouge) என்கிற புரட்சிப்படையும் கம்போடிய ராணுவமும் போரின் பெயரால் செய்த கொடுமைகளும் கொலைகளும் மனிதத்தின் மீதான நமது நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கக்கூடியவை. இந்த குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் இடையே சிக்கி அவதிப்படுகிற கோவிந்தசாமியின் குடும்பத்தினர்; இதிலிருந்து எப்படியோ தப்பித்து ஊர்வந்து சேர்கிறான் அவருடைய மகன் அழகர்சாமி.

சிறுவயதில் தன் கண் முன்னே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இரக்கமென்றால் என்னவென்றே தெரியாத குரூரமும் சுயநலமும் மிகுந்தவனாக மாறிவிட்ட அழகர்சாமி, கதிரின் தந்தை. செய்த குற்றச்செயல்களுக்காக பல காலம் சிறைச்சாலையில் கடத்துகிறவர். அவர் சார்ந்த கதைப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ள மனிதர்களும், அவர்களின் கதைகளும், அதிகாரத்தின் பெயரால் நடக்கிற அவலங்களும் அரசியலும் நமக்குச் சொல்லப்படுகின்றன. 

தன் தந்தை அழகர்சாமியின் மீது கதிர் கொண்டிருக்கிற அதீத வெறுப்பும், கொலைவெறியும், அதற்கான காரணமும், கதிரின் நோக்கமுமே மீதிக்கதை.
இரத்தம் தெறிக்கிற ஒரு கொலையைக் காட்சிப்படுத்துவதினூடாக மானுட மேன்மையையும் அன்பையும் பேசிச் செல்கிற கொரியப்படங்களுக்கு இணையான கதை சொல்லல் என்பேன். குறிப்பாக ’சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்’ என்கிற பதினைந்துபக்க அத்தியாயத்தில் அதிகாரங்களாகவும் சிறு சிறு பத்திகளாகவும் எழுதப்பட்டிருக்கிற கதையின் பகுதிகளும் கருத்துகளும் நிச்சமாக ஒரு மாறுபட்ட வாசிப்பனுவத்தை நமக்கு வழங்குகின்றன

”இங்கே எல்லாம் சரியாய் இருக்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து, துரோகமும் சூதும்தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லாப் பெருங்காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பைச் சுமந்துகொண்டு அலையக் காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாகப் பார்க்கப்பட்டாலும். எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்." 
-லஷ்மி சரவணகுமார் 
முன்னுரையில் இப்படிச் சொல்லித்தான் துவங்குகிறார் எழுத்தாளர். கொமோரா நாவலின் மொத்த அடித்தளமும் இதுதானென இங்கேயே நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது.’கொமொரா’ என்பது பைபிளில் சொல்லப்படுகிற ஒரு நகரத்தின் பெயர். அங்கே வாழ்கிற மக்களின் பாவங்களுக்கான கடவுளின் தண்டனையாக முழுமையாய் தீக்கிரையான இரு நகரங்கள் சோதோம் (Sodom) மற்றும் கொமோரா (Gomorrah) ஆகியவை. 

இந்தப் பெயரை நாவலுக்கு வைத்ததன் மூலம் நமக்குச் சொல்லப்படும் செய்தி, இது பொதுவான தேவதைகளின் உலகில் அன்பு ஊற்றெடுக்க நிகழ்கிற நல்லவர்களின் கதை அல்ல என்பதே. இங்கே இவர்களெல்லோரும் நல்லவர்கள்; எங்கிருந்தோ வருகிற ஒரு தீயவன்; அவன் செய்த தீமை; இறுதியில் அன்பால் தீமை தோற்று நன்மை வெல்லுகிற தேய்வழக்கு; இது மாதிரியான பொய்த்தோரணங்கள் எதுவும் எல்லை. நன்மை தீமையை தட்டையாக ஒற்றைப்படையாக அணுகுகிற கதையும் இதுவல்ல. 

வன்முறையும், வஞ்சமும், கோபமும், துரோகமும், பயமும், இரத்தமும், காமமும் நிறைந்து கிடக்கிற மனிதர்களும், அவர்களின் கதைகளின் ஊடாக அவரவர்கள் கண்டடைகிற உண்மைகள் அல்லது ஒளிக்கீற்றுகள் அல்லது நம்பிக்கைகளையும் பற்றிப் பேசுகிற நாவல் இது. 

ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக