செவ்வாய், 3 ஏப்ரல், 2018

எங்கேயோ கேட்ட குரல்...!!

பிசிறடிக்கிற பெண் குரலுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வசீகரம் இருப்பதாய் உணர்கிறேன். வழமைபோல மென்மையாகவோ, கீச்சுக் குரலாகவோ, கணீர் வெண்கலக்குரலாகவோ, மொத்தமாய் மிரட்டுகிற முரட்டுக் கடுமையாகவோ அல்லாமல் கொஞ்சம் அங்கும் இங்குமாய் எத்தன்மைக்கும் மையமாய் ஒலிக்கிற குரல்.
முகங்களின் சாயல் தேடுகிற மனிதர்கள் பற்றியோ அல்லது முகங்களின் சாயல் பற்றியோ, வாசனைகளை அடையாளம் காணுபவர்கள் பற்றியோ, கட்டாயமாக மனுஷ்யபுத்திரன் போல யாரேனும் கவிதைகளாகவும், ஜி.ஆர்.சுரேந்திரநாத் போல யாரேனும் கதைகளாகவும், ராஜ சுந்தர்ராஜன் போல யாரேனும் கட்டுரைகளும், எங்கேனும் எப்போதேனும்  எழுதியிருக்கக் கூடும்.
இம்மாதிரி குரல் சாயல் தேடுதல் கொஞ்சம் வித்தியாசம். காலங்காலமாய்க் காதறிந்த பாடகிகளின் குரல் சாயலல்ல நான் சொல்வது. பாட்டுப்பாட வாகில்லாத குரல் பதம் அது. என் நினைவில் நிற்கிற சற்று பிசிறடிக்கிற குரல் கொண்ட தேவதைகள் பெரும்பாலும் பாட்டுப் பாட விரும்பாத அல்லது பாடப் பிடிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.நிறையவும் பேசப் பிடித்தவர்களாய் இருந்திருக்கலாம். கவிதைகளையோ அல்லது பாடல்வரிகளையோ உரக்க வாசித்துக்க விரும்புபவர்களாய் இருந்திருக்கலாம். குரல்கள் நினைவிருக்குமளவு முகங்களோ குணங்களோ நினைவிலில்லை.
ஆட்டோக்ராஃப் படத்தில் மலையாளத்தில் கொஞ்சுகிற கோபிகாவின் குரல் இந்த வகையறா. அந்தக் குரலுக்காகவே அந்தப் படத்தை நிறைய பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் இதற்கிணையாய் காதுகளில் ஒலித்த பெரும்பான்மை மலையாளக் குரல்களென்பது தற்செயலா தெரியவில்லை.
அதற்கு முன்பு இதே ஒலிச்சாயலில் கேட்டது ஹேராம் திரைப்படத்தில் பெங்காலிக் கவிதை சொல்லும் ராணி முகர்ஜியின் குரல். இப்போதும் ’நீ பார்த்த பார்வை’ பாடல் தொடங்கி நாற்பத்தி ஒன்பதாவது நொடியில் ஜிபோனந்த தாஸின் ஆகாஷ் ஜ்யோத்ஸ்னா கவிதையை ராணி தன் பிசிறடிக்கிற குரலில் பியானோ பின்னிசையோடு உச்சரிக்கத் தொடங்குகையில் சர்வநிச்சயமாய் நமக்குப் பைத்தியம் பிடிக்கும்.
இன்று மாலை காஃபிக் கோப்பையோடு அலுவலகம் அமைந்திருக்கிற பெருவளாகத்தில் வெயில்வாங்கி நடந்து கடக்கையில் தூரத்தில் யாரோ ஒரு பெண் ஒருமாதிரி உடைந்த உத்தரப்பிரதேசத்து இந்தியில் செல்ஃபோனில் கெஞ்சிக் கொஞ்சி பேசியபடி என்னை தாண்டிச் சென்றாள்.
அதே...கொஞ்சமாய்ப் பிசிறடிக்கிற மென்குரல்...!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக