ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியானது. ரசனை என்கிற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுவையுணர்ச்சி அல்லது சுவையுணர்தல் எனச் சொல்லலாமா தெரியவில்லை. இசை, மொழி, உணவு, இலக்கியம், கலை என அத்தனையிலும் தனக்கு ஏற்ற ஒன்றையோ அல்லது தன்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றையோ கண்டுணர்வது, மெச்சுவது, அதனை தனக்கானதாகக் கருதுவது; இவையனைத்தையுமே ரசனை என்கிற வரையறையின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு திரைப் பாடலையோ அல்லது திரைப்படக் காட்சியையோ நாம் ரசிப்பதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்.ஏதோ ஓர் நினைவுடன் அவை பிணைந்திருப்பதாலோ, நமது வாழ்வின் முக்கியமானதொரு கட்டத்தில் அந்தப் பாடலை நாம் கேட்டதாலோ, மனதுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு அது விருப்பமான பாடல்/படம் என்பதாலோ , கடந்த காலத்தை மனதில் மீட்டுருவாக்கம் செய்வதாலோ, ஒரு பாடல் அல்லது திரைப்படம் நமக்கு முக்கியமானதாகி விடுகின்றது. நமக்கு விருப்பமான , முக்கியமான அந்தப் பாடல் வேறொருவருக்கு வேறு மாதிரியான உணர்வையும் நினைவுகளையும் தந்திருக்கலாம். அந்தப் பாடலுக்கான களமும், காட்சியும், பாத்திரங்களும் அவர்களின் மனதில் முற்றிலும் வேறொன்றாக இருக்கலாம். பாடல் ஒன்றே; பார்வைகளோ பல்லாயிரம்.
அப்படி, ஒரு தலைமுறைக்கே பல நினைவுகளையும், உணர்வுகளையும் அள்ளித்தந்த பாடல்களுள் ஒரு நூறு பாடல்கள் பற்றிய புத்தகமே ‘காலங்களில் அது வசந்தம்’. உண்மையில் பொதுமக்களின் ரசனையென்பது கால/சமூக மாற்றங்களுக்கேற்ப பத்தாண்டுகளுக்கொரு முறை மாறிக் கொண்டேயிருக்கும் (அல்லது நான் அப்படி நினைக்கிறேன்). அவ்வகையில் கையில் இருக்கிறவற்றை ரசிக்கும் அதே வேளையில், கடந்த காலத்தில் கொண்டாடப்பட்டவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.
அதனாலேயே நண்பர் இளம்பரிதி அவரது முந்தைய புத்தகமான ‘மடை திறந்து’ போல பாடல்வரிகள் (சொல் நயம், சந்தம்) பற்றி மட்டும் எழுதாமல் இந்நூலில் ’இடம் சுட்டி பொருள் விளக்கம்’ சொன்னாற்போல் பாடல்கள் எழுதப்பட்ட சூழல், பாடல் இடம்பெற்ற திரைப்பட உருவாக்கம் குறித்த தகவல்கள், பாடலாசிரியர்களின் அனுபவங்கள், இயக்குநருக்கும் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான உறவு பற்றி, பாடல் படமாக்கப் பட்ட விதம், பாடல்வரிகள் கதையுடன் பொருந்திபோகும் விதம் என இத்தனையையும் தன்னுடைய ரசனையின் பார்வையில் அழகாக எழுதியிருக்கிறார். வெறுமனே சொல்லக்கேள்வியாக இல்லாமல், சொல்லியிருக்கிற தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் கடுமையாக உழைத்திருக்கின்றார்.
உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமானவை என்றால், அப்பாவும் அம்மாவும், தாத்தாவும் மனமுருகி ரசித்த பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழ்த் திரையிசையின் மேல் காதல் கொண்டவரென்றால், உறுதியாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
காலங்களில் அது வசந்தம் - திரையிசையின் நினைவோடையில் ஒரு அழகிய படகுப் பயணம் <3 <3 <3 நன்றியும் வாழ்த்துகளும் இளா..!
பி.கு:
புத்தகத்தில் எனக்கு சிக்கலாகப் பட்ட விஷயங்களைப் பற்றி சொன்னபோது திறந்த மனதுடன் செவிசாய்த்த இளாவுக்கு என் அன்பு <3 உருவாக்கத்திலும், அச்சுக்கோர்ப்பிலும் திருத்தம் தேவைப்படும் இடங்களையும் பதிப்பாளர்களிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் எனது நன்றி <3
’காலங்களில் அது வசந்தம்’
இளம்பரிதி கல்யாணகுமார்
377 பக்கங்கள் - விலை ரூ:420.00
வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க - தொடர்புக்கு: 9942633833, 9790443979
ஆன்லைனில் வாங்க: https://www.commonfolks.in/books/d/kaalangalil-athu-vasantham
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக