புதன், 8 ஜூன், 2022

இறவான் - பா.ராகவன் | இசையிற் பெருந்தக்க யாவுள ?

 


” ஒரு மேதையின் பெரும் சிக்கலே அவன் ஒரு மேதையாக இருப்பதும் அதை அவன் அறிந்திருப்பதும் தான்.இது விவரிக்க முடியாத பாடு. சராசரிகளுக்குப் புரியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் சராசரிகளின் உலகில் தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. தன் குழந்தையின் சந்தோஷத்துக்காக மண்டி போட்டு யானை போல நடந்துகாட்டும் தந்தைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். தந்தைகள் சில நிமிடங்களில்  விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறார்கள். மேதைகள் இறக்கும்வரை மண்டிபோட்டே நடக்கவேண்டியதாகிவிடுகிறது”

              -இறவான் (பா.ராகவன்)

சிறிதொரு இடைவெளிக்குப்  பின் ஒரு புனைவு நூலைக் கையிலெடுக்கலாமென முடிவு செய்ததும் வாசிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் ’இறவான்’.  மேற்கண்ட பத்தி நாவலின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் மேதைகள் என்போர் யார் ? மேதைமை எனும் பண்பு ஒரு தனி மனிதருக்கு பிறவியிலேயே அமையப்பெற்ற ஒன்றா ? அல்லது கடுமையான பயிற்சியினால் அடையப் பெறுவதா ? போலவே ஒருவரின் மேதைமையைக் கண்டுணர எல்லோராலும் முடியுமா ? அல்லது சக பேரறிவாளர்கள் மட்டுமே கண்டு காமுறுவரா ? எத்தனை எத்தனைக் கேள்விகள்...! 

இந்தப் புத்தகம் அப்படியொரு இசைமேதையான ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசப் என்கிற சந்தானப்ரியனைப் பற்றியது. எட்வினின் சிறுவயதில் ஓர் நாள், அப்பா வாங்கித் தந்த 5 ரூபாய் புல்லாங்குழலில் அற்புதமான திரைப்பாடலை பிசிறின்றி வாசிக்க அவனது பெற்றோர் வியந்து திகைத்துப் போகிறார்கள். முறையாக எந்த வகை இசைப் பயிற்சியையும் அதுவரை மேற்கொண்டிராத எட்வின் அந்த தருணத்திலிருந்து 'Prodigy' ஆகிறான். எந்த இசைக்கருவியிலும் எந்த இசையையும் வாசிக்கக்கூடிய மகா மேதையாகிறான்.

 இசை மேதைமை அவனை தேடிக் கண்டடைந்த அதே நேரத்தில் மனப் பிறழ்வும் அவனை ஆட்கொள்கிறது. தனது பெயர் ‘ஆப்ரஹாம் ஹராரி’ எனவும் தான் ஒரு யூதன் எனவும், இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் சொல்லத் துவங்குகின்றான்.சிறுவயதில் எங்கோ கேட்ட ஒரு பெண்குரலின் பாடலை மனதில் வரித்துக் கொண்டு அவளை, அவளது குரலை தேடியலைவதில் தொடங்கி, இசைக்குழு அமைத்து நண்பர்களுடன் பாடிக்கொண்டு திரிவதிலிருந்து, திரைப்படத்திற்கு இசையமைப்பது, அதுவரையில் உலகம் கேட்டிடாத ஒரு சிம்பொனியை எழுதி பெர்லினில் அரங்கேற்ற விழைவது, இசையைத் தேடி நாடோடியாய் போதையில் அலைவது, தன்னை ஒரு யூதனாக அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது, என ஒரு இலக்கேயில்லாமல் காற்றிலலையும் இலையாய் திரிகிற எட்வின் என்கிற ஆப்ரஹாம் என்கிற சந்தானப் ப்ரியனுக்கு என்ன ஆனதென்பது மீதிக்கதை. 

எட்வினின் இசைக்குழுவில் ட்ரம்மராக வரும் ஜானவியின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் தெளிவான ரகளையான ஒன்றாக இருந்தது. ஆனாலும் தேய்வழக்காக இசையைத் தவிர ஏதுமறியா மேதையை விழுந்து விழுந்து  காதலிக்கிற, அவனுக்காக எதையும் செய்யத் துணிகிற, முற்றிலும் சரணடைந்து விடுகிற ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது.ஆனால் காதல் பற்றிய திருமணம் அவளுடைய புரிதலும் தெளிவாகவே இருக்கிறது. அதை அவள் எட்வினிடம் எடுத்துச் சொல்லும் விதமும் அட்டகாசம். 

//”காதல் வண்ணமயமானதில்லை. அது ஒற்றை வண்ணம் கொண்டது. கருஞ்சாம்பல் வண்ணம் . ஆனால் சரணாகதி வண்ணமற்றது. நீரைப் போன்றது. தாகத்துக்கோ கு*டி கழுவவோ மிகவும் உபயோகமானது”              

-இறவான் (பா.ராகவன்)//

மெண்டல்ஷானையும் , இளையராஜாவையும், மொசார்ட்டையும், அவர்களின் இசையை தரம்பிரித்து ஆராய்ந்து இது சரி இது தவறு என மதிப்பீடு செய்கிற ஒரு ஏதிலியை , அவன் உண்மையான மேதையாகவே இருந்தாலும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவோ, அவன் சொல்வதை ஒப்புக் கொள்ளவோ தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். 

//நூறு நூறு வருடங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு பீடத்தில்  ஏற்றி அமர வைத்து சிலையாக்கிவிட்ட சில மேதைகளை இந்த அற்பன் மட்டம் தட்டுகிறான் என்று தோன்றும். அப்படித்தோன்றினால் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிழையில்லை.அவர்கள் மேதைகள் என்பதும் உண்மை. நான் அற்பன் என்பதும் உண்மை. மட்டம் தட்டுவதாகத் தோன்றுவது மட்டும் பிழை. ஒரு தராசுக்குரிய மரியாதையை இச்சமூகம் தருவதில்லை

              -இறவான் (பா.ராகவன்) //

இசைக்கருவிகளை வாசித்தல் குறித்தும், இசை குறித்தும், ஒரு மேதையின் சிந்தனைப் பாட்டை சாமானியர்கள் (அலட்சியமாக) எதிர்கொள்கிற விதம் குறித்தும், மனப்பிறழ்வு கொண்டவனான எட்வினின் குரலாக பேசும் அத்தனையுமே தனித்தனியாக பொன்மொழியாகக் கொண்டாடப்பட வேண்டியவை. உண்மையில் இசைகுறித்த கூர்நோக்கும், உணர்வுகள் பற்றிய ஆழமான சிந்தனையும் இல்லாமல் ஒரு புனைவில் கூட இந்த மாதிரியான சொற்றொடர்களை எழுதிவிட முடியாதென தோன்றுகிறது.

// எனக்கென்னவோ கலைமனம் என்று ஒன்று இருந்துவிட்டால் கருவிகள் ஒரு பொருட்டில்லை என்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.மனத்துக்குள் இசை நிரம்பியிருந்தால் போதும் குறிப்பிட்ட கருவியின் அடிப்படை சூட்சுமம் குறித்த  அறிவு இருந்தால் போதும். சில் தடுமாற்றங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கிவிட முடியும் என்றே நினைத்தேன்.

              -இறவான் (பா.ராகவன்) //

இறுதி அத்தியாயத்தை வாசிக்கையில் பா.ரா நிகழ்த்தியிருக்கிற சொல் விளையாட்டுகளை முதலில் அச்சுப்பிழை என்றே கருதியிருந்தேன். பின்பு தான் கதையின் போக்குடன் இணைத்து அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. Brilliance...! நாவலின் துவக்கத்தில் கதை தொடங்குகிற நிகழ்கிற சூழல் தெளிவாகத் தெரிந்த பின்பும் கதையின் ஓட்டத்தில் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு இறுதி அத்தியாயத்தில்  நமக்கு திடீரென மூளையில் உதிக்கிற போது எல்லாமும் முடிந்து விடுகிறது. 

 ஒரு பாடலையோ அல்லது இசைத்துணுக்கையோ நேரடியாகக் கேட்டால் நாம் உணர்ந்து கொள்ளுவதை , வெறுமனே அந்த உணர்வைப் பற்றி எழுதுவதன் மூலம் கடத்திவிட முடியுமா என்ன ? இந்த நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கிற வெவ்வேறு பாடல்களையும், இசை துணுக்குகளையும் , எட்வின் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கிற அத்தனையையும் தனது எழுத்தின் வழியே நமக்கு கடத்திவிடுகிறார் எழுத்தாளர் பா.ராகவன். ஒருவேளை இன்னாரைப் பற்றிய கதையாக இருக்குமோ, அல்லது அவராக இருப்பாரோ என நாம் யாரை நினைத்தாலும் அவர்களையும் கதையினூடாகவே உலவவிட்டு எட்வின் என்னும் மேதை இவர்களினின்று மாறுபட்டு தனித்து நிற்பவன் என நிறுவிவிடுகின்றார்.இதுவரையில் பா.ரா அவர்களின் எழுத்தில் புனைவல்லாதவையையே வாசித்திருந்த எனக்கு,  அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்திருந்தது இறவான் நாவல். 

இறவான் - இசையைத் தேடி <3


 இறவான் - பா.ராகவன் | எழுத்து பிரசுரம்| 329 பக்கங்கள் | ரூ.350/- 

 இறவான் நாவலில் இடம்பெற்ற பாடல்களை யூட்யூப் ப்ளேலிஸ்ட்டாகத் தொகுத்தளித்திருக்கும் சிவராமன் கணேசன்  அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி <3.

 இணைப்பு  இங்கே - https://www.youtube.com/playlist?list=PLeuoo_Cwzt0BtcnE6lsFD3CyLYnkv3m1T

 



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக