நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

புத்தகத்திருவிழா - 2026 - இதுவரை வாங்கியவை

 
நாவல்/குறுநாவல்
**********************************
1. பன்றிவேட்டை - லஷ்மி சரவணகுமார் - எழுத்து பிரசுரம் - ஜீரோ டிகிரி - (நண்பரின் பரிசு)
2. மயல்- சிவராமன் கணேசன் - எழுத்து பிரசுரம்
3. நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர் - எழுத்து பிரசுரம்
4. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - பால கணேசன் - ஸ்வாசம் புக்ஸ்
 
 
சிறுகதைகள்/ தொகுப்பு
*****************************
5. யுவன் சந்திரசேகர் கதைகள் - 1 - எழுத்து பிரசுரம்
6. இடந்தலைப்பாடு - சேவியர் ராஜதுரை - வாசகசாலை
7. மழைக்கண் - செந்தில் ஜெகன்நாதன்- சொற்றுணை பதிப்பகம்
8. ஒரு க்ளாஸ் விஸ்கி - கவிதா சொர்ணவல்லி - வான்கோ பதிப்பகம்
9. சாட்லா - சத்தியபெருமாள் பாலுசாமி - வேரல் புக்ஸ்
10. சார்வாகன் கதைகள் - நற்றிணை பதிப்பகம்
11.சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் - போகன் சங்கர் - யாவரும் பதிப்பகம்
12. பூமர் - செளம்யா - எழுத்து பிரசுரம்
 
 
அபுனைவுகள்/கட்டுரைகள்
********************************************
13. தூத்துக்குடி - ஜி.ரா - மின்னங்காடி பதிப்பகம்
14. தமிழை ஆண்டாள் - ஜி.ரா - மின்னங்காடி பதிப்பகம்
15. ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி - அரவிந்த் சச்சிதானந்தம் - the talkie / ஜீரோ டிகிரி
16. சினிமாவின் அகமும் புறமும் - பிரதீப் பாலு - நீலம் பதிப்பகம்
17. கறுப்புத் திரை - ஜா.தீபா - நீலம் பதிப்பகம்
18. மாதர் திரையுலகு - ஜா.தீபா - the talkie / ஜீரோ டிகிரி
 
 
கவிதைகள்
**************************************************
19. சூனியக்காரியின் பாடல்கள் - அனுராதா ஆனந்த் - சால்ட் பதிப்பகம்
20. விரைவில் சந்திப்போம் விண்மீனே - கடைசி கடிதங்கள் - கீகீ - சால்ட் பதிப்பகம்
21. மஹாபிடாரி - யுகபாரதி - நேர்நிரை
22. உலகை மூடும் ஆடைகள் - யவனிகா ஸ்ரீராம் - வேரல் புக்ஸ்
23. இன்னும் சில வீடுகள் - பா.வெங்கடேசன்- வேரல் புக்ஸ்
24. காதலூறிக் கனியும் காழ்வை - மித்ரா அழகுவேல் - வாசகசாலை
25. பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் - அருள்ஜோதி முரளிதரன் - யாவரும்
26. நறுமணத் துயரே நறுமணத் துயரே - இசை - விஷ்ணுபுரம் பதிப்பகம்
 
 
குழந்தைகளுக்கான கதைகள்
*****************************************************
1. குழந்தைகளின் ரகசியம் - உஷா ராஜேந்திரன் - Books for children
2. டடங் - விழியன் - Books for children
3. பென்சில்களின் அட்டகாசம் - விழியன் - Books for children
4. மியாம்போ - விழியன் - Books for children
5. டாலும் ழீயும் - விழியன் - Books for children
6. சகி வளர்த்த ஓகி - விழியன் - Books for children
7. கிச்சா பச்சா - விழியன் - வானம் பதிப்பகம்
8. மட்டில்டாவும் தொப்பிப் பூனையும் - ஆதி வள்ளியப்பன் - வானம் பதிப்பகம்
9. வித்தைக்காரச் சிறுமி - விஷ்ணுபுரம் சரவணன் - வானம் பதிப்பகம்
10. பறக்கும் ஹேர் க்ளிப் - விஜய்பாஸ்கர் விஜய் - வானம் பதிப்பகம்
இவை போக அரசியல், ஆய்வு, பாடநூல் வகைமையில் வாங்கிய புத்தகங்களும், போட்டிகளில் பரிசு பெற்ற நாவல்/தொகுப்பு சிலவும் தனியே வாங்கியிருக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள் தனி.
 
Happy reading...! ❤

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தீம்புனல் - ஜி.கார்ல் மார்க்ஸ்

”நிலம் என்பது வெறும் கண்ணும் மனசுமல்ல.மொத்த உடலும்தான்”
-தீம்புனல், ஜி.கார்ல் மார்க்ஸ்
இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிகம் கொத்துக் கறி போடப்படுகிற விஷயமாகவும்,  நீயா நானா மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் புண்ணியத்தில் ’ஐடி வேலைய விட்டுட்டு ஆர்கனிக் ஃபார்மிங் பண்ணப்போறேன்’ என fashion statementஆகவும் திகழ்கிற ஒன்று ‘விவசாயம்’.  உண்மையில், இந்த வீக்கெண்ட் விவசாயிகள் உள்ளிட்டோர் உழவுத்தொழிலை பெருமைக்கு எருமை மேய்க்கிற பாங்கிலேயே அணுகிக்கொண்டிருப்பவர்கள்.

 நிலத்திலேயே உழன்று, உழைத்துக் கொட்டி, நிலத்தைச் சுற்றியே தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டு இறுதியில் நிலத்தை நம்பியே உயிரை விடுகிற டெல்டா விவசாயிகளில் யாரேனும் ஒருவரிடம் கேட்டாலே போதும்; அவர்கள் விடுகிற இரத்தக் கண்ணீரில் ‘விவசாயம்’ குறித்து மனதில் நாம் வறித்துக் கொண்டிருக்கிற போலிச் சித்திரங்கள் மொத்தமாய் சிதைந்துவிடக் கூடும்.

தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு வயலும் விவசாயமும் வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதிகள். கோடையோ, வாடையோ, வசந்தமோ, எந்த பருவகாலத்தில் நாங்கள் பேருந்து ஏறினாலும் பசுமையின் எதோவொரு நிறம் கண்களில் பட்டபடியே இருக்கும். எங்கள் கதைகளில் வாய்க்கால்களும், ஆற்றுப் பாலங்களும், வரப்புகளும், மதகுகளும், வயல்களும், தோப்புகளும், கட்டாயம் இருக்கும். சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ, பக்கத்து சிற்றூர்களில் எங்கோ கொஞ்சமாவது நிலம் இருந்து மகசூல் பார்த்து, வருடத்திற்கு ஒரு முறை நெல்மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கியிருக்கும்.

ஆனால் இன்றைக்கு, இவையெல்லாமே பத்திருபது வருடப் பழங்கதைகள். காலமும் மாறி காட்சிகளும் மாறிவிட்டன. மழைவெள்ளம், வறட்சி, காவிரி நீர், நகர்மயமாக்கம், சாலைகள் விரிவாக்கம், மோசமான நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் அளவு, ஆற்றுமணல் கொள்ளை என விவசாயம் நொடித்துப் போக காரணிகளைப் பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். இவையத்தனையும் தாண்டியும் விருப்பத்தின் பேரிலோ கட்டாயத்தின் பேரிலோ இன்றும் உழவைக் கைக்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறாக நிலம் குறித்து கண்முன்னே நமக்குப் புலப்படும் அனைத்திற்குப் பின்னாலும், பிறந்து வாழ்ந்து மறைகிற மனிதர்களைப் பற்றிய கதையே தீம்புனல்.

முதலில், இத்தனை பசுமையை எழுத்தில் கொண்டுவந்த படைப்பாக அண்மையில் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஒவ்வொரு முறையும் யாரேனும் படலைத் திறந்துகொண்டு வயலிலோ, தோட்டத்திலோ, கொல்லையிலோ, தோப்பிலோ நுழைகையில் பச்சைக் கொடிகளின் வாசனையை நீங்களும் உணரக்கூடும். அத்தனை உயிர்ப்பான அழகான விவரனைகள் புத்தகம் முழுக்கவும் விரவிக்கிடக்கின்றன. இந்தப் பசுமை இத்தனை நெருக்கமாகிவிடுவதால் தானோ என்னவோ, பின்பு எல்லாம் மாறிப் போகிற போதான வெம்மையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

வீம்பும், வீராப்பும், வைராக்கியமும், மோடுமுட்டித்தனமுமான  எத்தனை மனிதர்கள்; நிலத்தின் மீதான பிடிப்பால் அதன் மீது தனக்கிருக்கிற உரிமையை நிலைநாட்டத் துடிக்கும் சோமு, கசந்து போன திருமணத்தால் தோட்டத்தை வசிப்பிடமாக்கிக் கொள்கிற கலியமூர்த்தியின் வைராக்கியம், எழுத்தாளரின் மொழியில் “தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் சாம்பலாக்கும் பிரத்யேக குணவார்ப்பைக்” கொண்ட கலியமூர்த்தியின் மனைவி விசாலாட்சி...! இன்னும் எத்தனையோ பேர்...! தத்தமது உடல் தளர்வின் பொருட்டும், பிற தேவைகளுக்காகவும் பிள்ளைகளையோ அல்லது ஏனைய மற்றோரையோ சார்ந்திருக்க வேண்டி சர்க்கஸ் கூண்டின் புலிகளாக மாறிவிட்ட பெரியவர்களையே அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு இத்தனை வைராக்கியமான உறுமலும் சீற்றமுமான வயசாளிகளின் இருப்பே வியப்பூட்டக்கூடிய விஷயம் தான்.

நான் வியந்த மற்றொரு விஷயம் நிலத்தின் மீது எழுத்தாளர் கொண்டிருக்கிற அபரிமிதமான புரிதல். ஒரு இடத்தில் “வேளாண்மையிலிருந்து விலகிச் செல்லும் ஒருவனை நிலம்  மீண்டும் தன்னிடம் சேர்த்துக்கொள்வதில்லை.அவனால அதனுடன் ஒன்றிணைய முடிவதில்லை.இழந்துவிட்ட சொர்கத்தின் கனவுடன் நிலத்தைக் கொத்துபவனுக்கு அது இளகிக் கொடுப்பதில்லை.அவனை முழுக்கவும் நிராகரிக்கிறது. அப்படித் தோற்றவர்கள் நிலத்தின் மீது வன்மம் கொண்டவரானார்கள்” என மணல் கொள்ளைக்குத் துணை போகிற வேளாண் குடிமக்களைப் பற்றி சொல்லும்போது குறிப்பிடுகிறார்.

நிலவுடைமையாளனாகப் பிறந்து பின்பு செட்டியாரின் வழக்கால் நிலங்களனைத்தும்  துண்டாடப்பட்டு, இருக்கிற சொற்ப நிலத்தில் விவசாயமும் கைவராமல், ஹார்ட்வேர் கடைக்கு வேலைக்குப் போகிற ராஜேந்திரன், அடையாளச் சிக்கலில் உழல்கிற வாழ்ந்துகெட்ட இரண்டாம் தலைமுறை நிலவுடைமையாளனின் பிரதிநிதி. கடை முதலாளியோடு மனதளவில் முரண்பட்டு, பின் வேலை மும்முரத்தில் அத்தனையும் மறத்துப் போகிற இடம் ,பிழைப்புவாதத்தின் சான்று.

ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் நான் பார்த்த என் சுற்றத்து மனிதர்களோடு பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாத்திரத்தை மட்டும் என்னால் நான் கடந்து வந்த பெரும்பாலான குடும்பங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது சோமுவின் மூத்த மருமகள் ரமணி. ரமணிக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, சுதந்திரமோ இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது அவள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எதைப் பற்றியும் அவளுக்கு கேள்விகளும் இல்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் வீடு தேடி வருபவர்களுக்காகவும் சமைத்துப் போடவே பிறப்பெடுத்ததைப் போல நடந்துகொள்கிறாள். அவளுடைய உலகம் பெரும்பாலும் வீட்டின் உள்ளேயே முடிந்து போகிறது. குடும்பம் பொருளாதாரரீதியாக நலிந்து போகையில் வந்து ஒட்டிக்கொள்கிற பிடிக்காத சொந்தங்களோடு உறவாட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே, அவளுடைய தனித்தன்மையும் மன வார்ப்பும் வெளிப்படுகிற இடம். அல்லது நமக்கு அப்போதே சொல்லப்படுகிறது.

திருடன் பெரியசாமியின் பாத்திரம் தஞ்சை பிரகாஷின் ஒரு கதையில் வருகிற திருடனை நினைவுபடுத்துவது போலிருந்தது.

அரசியல் தெளிவோடு கட்டுரைகள் எழுதுகிற ஒருவர் புனைவெழுத வந்தால், அவருடைய அரசியல் கட்டாயம் படைப்பிலும் வெளிப்படுமல்லவா. அது தீம்புனலிலும் உண்டு; ராஜேந்திரனின் திராவிடக் கட்சியின் மீதான ஈர்ப்பு, கடைசி மகன் மகேந்திரனின் கடவுள் மறுப்புக் கொள்கை, தமிழ்த் தேசியம் பேசுகிற புலவர், எம்ஜியார் கட்சியின் கோபால், பேராசிரியர் ரத்தினம், இறுதியாக ரஞ்சிதத்தின் காதலைத் தொடர்ந்து சாதியின் பெயரால் நடக்கிற நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் என அடித்தாடியிருக்கிறார். கேலி கிண்டலுக்கும் குறைவில்லை. இலுப்பைத் தோப்புக்கு போகிற இன்ஸ்பெக்டர் பற்றிய விவரிப்பில் நீங்கள் விலா நோகச் சிரிப்பது உறுதி.

இன்னும் மனதைக் கவர்ந்த பாத்திரங்களையும் அவற்றின் வார்ப்பையும் பற்றிப் பேசுவதானால் மொத்தக் கதையையும் சொல்ல வேண்டியதாய் இருக்கும். ஆகையால் இப்போதைக்கு இது போதும். அவ்வப்போது எனக்குப் பிடித்த மனதில் நின்ற பத்திகளை எடுத்துப் போடுகிறேன். பேச வாய்ப்புக் கிடைத்தால் புத்தகம் குறித்து விரிவாகப் பேசுவேன்.

தமிழ் இலக்கியத்தில், நிலம் சார்ந்து அல்லது நிலத்தின் வழியாக கதை சொல்லப்படுவது நமக்குப் புதிதன்று. பூமணியின் வெக்கை உள்ளிட்ட பல கதைகள்  இருந்தாலும், மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையோடு ’தீம்புனலில்’ கார்ல் மார்க்ஸ் ஒட்டுமொத்தமாய்ச் சொல்லிச் செல்கிற கதைகள் அசாத்தியமானவை. உங்களுக்கு நிலவுடைமைச் சட்டம் குறித்தோ, நில உச்சவரம்பு குறித்தோ, வேளாண்மை சார்ந்த வேறு எதுவுமோ, ஒன்றுமே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ‘தீம்புனல்’ நாவலைப் படித்துவிடுங்கள்; கட்டாயமாய் உங்களுக்கொரு மறக்கமுடியாத வாசிப்பனுபவத்தைத் தரும்...!

வாழ்த்துக்கள் கார்ல்...!
”எல்லோருக்கும் ஏதோ ஒன்று தேவையானதாக இருக்கிறது. அந்த ஏதோ ஒன்று மிகவும் அற்பமானதாக இருக்கிறது. அது கிடைத்துவிடுகிறபோது கண்முன் இருக்கிற இந்த பரந்த வாழ்க்கையே அவர்களுக்கு பொருளற்றதாக மாறிவிடுகிறது. தன்னளவில் அவர்கள் மிகவும் சுருங்கிப் போகிறார்கள். பதட்டமடைந்து விடுகிறார்கள். எல்லாவற்றிலும் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள். பழைய நினைவைத் தூண்டும் மனிதர்களிடம் இருந்து அப்புறப்பட்டுவிடுவது அதன் முதல் நடவடிக்கையாக இருக்கிறது. அது எளிது என்பது மாத்திரம் அல்ல, அதுவொரு சவுகரியமும் கூட”-தீம்புனல், ஜி.கார்ல் மார்க்ஸ்

திங்கள், 26 டிசம்பர், 2016

அஜ்வா - சரவணன் சந்திரன் - மீட்பனின் மீட்சி


 'அஜ்வா’ என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது.  ஏழு அஜ்வா பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.  

அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு பழமொழி உண்டு “ தான் செத்து மீன் பிடிக்கக்கூடாதுடா” என்று. மீன் பிடிப்பது எதற்கு ? பசியாறி உயிர்வாழ்வதற்கு. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரைவிட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகுமில்லையா. ’அஜ்வா’ முழுக்க இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தபடியே இருந்தது.

”மூன்று தலைமுறை வாழ்ந்தோரும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டோரும் இல்லை” என ஊர்ப்பக்கம் சொல்வார்கள். தலைமுறைகளின் வீழ்ச்சியையும் இடிந்து தரைமட்டமான சாம்ராஜ்யங்களையும் என் கண்முன்னே எங்கள் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும். இதன் பின் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்று ஏதோவொரு அர்த்தமற்ற வேண்டுதலை, நேர்த்திக்கடனை செய்துவிடும் பொருட்டு அதை நோக்கியே தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடுகிற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அது நமக்குத்தான் அர்த்தமற்ற செயல்; அவர்களுக்கல்ல. There are people who hold onto something which doesn't mean absolutely anything to anybody other than themselves.

எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன் , அதைப்பற்றி கண்கள்விரிய  பேசுவதைக் கேட்டால் ஆகநிச்சயமாய் இதை நாம் ருசித்துப் பார்த்தால் என்னவென்று உங்களுக்கே தோன்றக்கூடும். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவோ... இவை  அத்தனைக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். அப்படியொருவன் தான் ‘அஜ்வா’வின் கதைசொல்லி.அவனுடைய பெயரை அவன் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான். தன் வாழ்க்கையின் மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர்களின் கதைகளையும் சொல்கிறான். தன் ஆழ்மனதின் அச்சங்களைப் பற்றிப் பேசுகிறான். 

இந்த நாவலின் கதைசொல்லி இருக்கிறானில்லையா ? அவனும் மேற்குறிப்பிட்ட ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல் தான். ஒரு வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்து மறைந்த தன் கணவனைப் போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாதென பார்த்துப் பார்த்து வளர்க்கிறாள் அவன் தாய். கையிலிருக்கிற சொத்தை அபகரிக்கும் பொருட்டு அடித்துத் துன்புறுத்துகிற தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.  வெவ்வேறு வகை போதைப் பொருட்களைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டே காஞ்சிரம்பள்ளிக்கும், பழனிக்கும், திருப்பதிக்கும் இன்னும் ஏதேதோ இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறான். 

அந்த உலகத்தில் தவறி வந்து சிக்கிக்கொள்கிறவர்களை பேசி மீட்கிறான். ஆனாலும் தான் மட்டும் தெரிந்தே அந்தச் சுழலுக்குள்ளிருந்தபடி உழல்கிறான். இவன் அம்மா , கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் துத்தநாகம் கலந்த பசையைத் தின்று விடுகிற பசுபதி அத்தை, தனக்குப் பிடிக்காத ’முதுகில் அடிக்கிற’ உரிமையை இவன் வழங்கியிருக்கிற ஒரே நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, ஜார்ஜ் ஆண்டனியின் அம்மா, கடைசியாய்  டெய்சி...!! வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.

”சரி என்னதான் கதை ?” என்று கேட்பீர்களேயானால் அதற்கான பதிலைச் சுருக்கமாய் சொல்லிவிட முடியாது. இந்த நாவலுக்காக வெளியிடப்பட்ட ஒரு நிமிடக் காணொளியின் ஒரு நொடி ஃப்ரேமில் சிலுவை தாங்கிய ஏசுவின் படம் வந்து போகும். ”இது தலைமுறைகளின் கதை, சாபங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுபட நினைக்கிறவர்களின் கதை” என்று பின்னணிக்குரல் ஒலிக்கும். இந்தக் கதையை நம்மிடம் சொல்கிற அவன் தான், பிறரின் பாவங்களுக்காக தான் சிலுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகின்றான். அந்த மீட்பனின் மீட்சிதான் ‘அஜ்வா’வின் கதை. 

நீங்களும், நானும், நம்மைச் சுற்றியிருக்கிற உயிருள்ள எல்லாமும், தன்னைத்தானே அழித்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிற செல்களாலானவை தானே. ஒரு முடிவில்தான் மற்றுமொரு தொடக்கம்;அழிபவையெல்லாம் மீண்டும் பிறக்கவும் துளிர்க்கவும் செய்யும் என்கிற நம்பிக்கைக் கீற்று தான் ‘அஜ்வா’.

நிச்சயமாகப் படிக்கலாம்.!! 

வாழ்த்துகள் சரவணன் அண்ணா..!! 

’அஜ்வா’
உயிமை பதிப்பக வெளியீடு
விலை: ரூ.130
ISBN: 978-93-85104688

ஆன்லைனில் வாங்க: இங்கு சொடுக்கவும்

’அஜ்வா’ நாவலின் டீசர் : இங்கு

செவ்வாய், 28 ஜனவரி, 2014

2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

2014 – சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1. சாமானியனின் முகம் – சுகா – வம்சி பதிப்பகம் – ரூ.170

2. பீக்கதைகள் – பெருமாள் முருகன் – அடையாளம் பதிப்பகம் – ரூ.60

3. அனுபிஸ் மர்மம் – சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்) – பாரதி புத்தகாலயம் – ரூ.30

4. நெப்போலியனின் கடிதம் - சத்யஜித் ரே (வீ.பா.கணேசன்) – பாரதி புத்தகாலயம் – ரூ.50

5. ’குடி’யின்றி அமையா உலகு… - முத்தையா வெள்ளையன் (தொகுப்பு) – புலம் – ரூ.120

6. என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா ப்ரூஸ் – விருட்சம் – ரூ.100

7. வளையல்கள் அடித்த லூட்டி – விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

8. பென்சில்களின் அட்டகாசம் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

9. மாகடிகாரம் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.30

10. டாலும் ழீயும் - விழியன் - பாரதி புத்தகாலயம் – ரூ.25

11. மலர் அல்ஜீப்ரா – ‘ஆயிஷா’ இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் - ரூ.30

12. புனைவின் நிழல் – மனோஜ் – உயிர்மை – ரூ.70

13. பட்டு – அலெசான்ட்ரோ பாரிக்கோ (சுகுமாரன்) – காலச்சுவடு – ரூ.95

14. எப்படி ஜெயித்தேன் – எம்.ஜி.ஆர் – நாதன் பதிப்பகம் – ரூ.50

15. ஆதிமங்கலத்து விசேஷங்கள் – க.சீ.சிவகுமார் – விகடன் பிரசுரம் – ரூ.50

16. உலக இலக்கிய பேருரைகள் – ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் –   
 எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.60

17. அணுவின் உள்ளே – ஐஸக் அஸிமோவ் (என்.ராமதுரை) – தையல் வெளியீடு – ரூ.70

18. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன் – காலச்சுவடு

19. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? – ராஜ் சிவா – உயிர்மை – ரூ.175

20. கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை – ரூ.70

21. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – விசா பப்ளிகேஷன்ஸ்

22. விவாதங்கள் விமர்சனங்கள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்

23. தோரணத்து மாவிலைகள் – சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ்

24. நேனோ-ஓர் அறிமுகம் – அருண் நரசிம்மன் – தமிழினி – ரூ.75

25. ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் ஞானப்பறவை – ரிச்சர்ட் பாக் – விஜயா 
பதிப்பகம் – ரூ.35

26. இராசராசன் துணுக்குகள் நூறு – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

27. லிண்ட்சே லோஹன் – w/o மாரியப்பன் – வா.மணிகண்டன் – யாவரும்.காம் – ரூ.90

28. 6174 – சுதாகர் கஸ்தூரி – வம்சி பதிப்பகம் – ரூ.300


புத்தகங்கள் வாங்குவதைக் காட்டிலும் நண்பர்களையும் ஆதர்சங்களையும் சந்திப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்காகத்தான் ஓவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது குதூகலாமாய் போய் வருவது. இந்த முறையும் ஏகப்பட்ட நண்பர்களை சந்தித்தேன்.புதிய நட்புகள் கிடைக்கப் பெற்றேன். இதுவரையில் நேரில் பார்த்திராத ஆதர்சங்கள் பலரையும் பார்த்துப் பேசியதில் மகிழ்ச்சி.

பட்டியலில் சில பல புத்தகங்கள் நண்பர்கள் பரிசளித்தவை. பரிசல் அண்ணனின் திடீர் பரிசு தான் ஜி.நாகராஜனின் புத்தகம். ரொம்ப மகிழ்ச்சியளித்தது J J. சுஜாதாவின் புத்தகங்கள் அனைத்தும் என் மாமா வாங்கித் தந்தவை. ரொம்பவே எதிர்பார்த்து புத்தகத் திருவிழா நிறைவடையும் வரையில் வெளிவராத புத்தகங்கள் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு (உயிர்மை), அருண் நரசிம்மனின் அறிவியல் கட்டுரைகள் (தமிழினி, அமிர்தா) ஆகியவை. ஏகப்பட்ட புதினங்களை நண்பன் வேதாளம் வாங்கிக் குவித்திருப்பதால் ‘டேய் நீ எதுவும் வாங்கிடாத…என்கிட்ட கேட்டுட்டு வாங்கு’ என மிரட்டல் விடுத்திருந்தான்.

அதனால் முடிந்தவரையில் புனைவல்லாதவையில் அறிவியல் கட்டுரைகள், பிற கட்டுரை தொகுப்புகள், சிறுவர் இலக்கியம், வரலாறு தொடர்பான புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். வாங்குறது முக்கியமில்ல படிக்குறது தான் முக்கியம் என்று யாரவது கமெண்ட் பண்ணும் அபாயமிருப்பதால் நிச்சயம் எல்லா புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன் என முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி - 2013 - நான் வாங்கிய புத்தகங்கள்

2013ல் நான் எழுதும் முதல் வலைப்பதிவு இது.அதுவும் புத்தகங்கள் பற்றியே என்பதில் மெத்த மகிழ்ச்சி. அலுவலகத்தின் இடம்/ப்ராஜெக்ட் மாற்றம் காரணமாக நேரமெடுத்து எழுதுவதென்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது.அது போகட்டும்.சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்கள் ரொம்பக் குறைவு. அவையும் பெரும்பாலும் குறுநாவல்களாகவும், புனைவுகளாகவும் (Fiction) அமைந்துவிட்டபடியால் அவற்றை பற்றி பெரிதாய் எழுத விருப்பமில்லை. இருந்தும் என்னை ரொம்பவே கவர்ந்த மூங்கில் மூச்சு, சொல்லாததும் உண்மை என ஒன்றிரண்டு புத்தகங்கள் பற்றி மட்டுமே எழுதியிருந்தேன். திரைப்படங்கள் ரொம்ப நிறையவே பார்த்துவிட்டாலும் ஒன்றும் எழுத நேரமில்லை.

இந்தாண்டு புத்தகத் திருவிழாவில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகமே புத்தகங்கள் வாங்கினேன்.புனைவல்லாத புத்தகங்கள் மட்டுமே அதிகளாவில் வாங்கவேண்டுமென முடிவுசெய்துவிட்டபடியால் நிதானமாய் தேர்ந்தெடுத்து நினைத்தபடி வாங்க முடிந்தது.பட்டியல் கீழே

1. வட்டியும் முதலும் - ராஜூ முருகன் - விகடன் பதிப்பகம் - 215
2. விகடன் சுஜாதா மலர் - தொகுப்பு - விகடன் பதிப்பகம் - 165

3. கடவுள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 200
4. கிமு-கிபி - மதன் - கிழக்கு பதிப்பகம் - 130
5. ஓடும் நதி - கலாப்ரியா - அந்திமழை பதிப்பகம் - 135
6. மனுஷா மனுஷா - வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம் - 85
7. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - உயிர்மை பதிப்பகம் - 110
8. ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் - 75

9. 60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா -  உயிர்மை பதிப்பகம் - 50
10. இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 85
11. உங்கள் உடல் பேசுகிறேன் - கீதா - புதிய தலைமுறை - 80
12. கண்டோம் கடவுள் துகளை - த.வி.வெங்கடேஸ்வரன் - அறிவியல் வெளியீடு - 40
13. அறிவாளியா? முட்டாளா? -  த.வி.வெங்கடேஸ்வரன் - பாரதி புத்தகாலயம் - 10
14. ஆயிஷா - இரா.நடராசன் - பாரதி புத்தகாலயம் - 15
15. கை - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
16. மனைவி கிடைத்தாள் - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
17. ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை - 25
18. விளிம்பு - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 25


என்னடா ஒரே ‘சுஜாதா’ மயமாக இருக்கிறது என யாவரும் நினைக்கலாம். என்ன செய்வது இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டியாதலால் வாத்தியாரைத் தவிர மற்ற எவரையும் பெரிதாக வாசித்து பழகவில்லை.புரியாததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் :) கூடிய விரைவில் அடுத்த நிலைக்கு முன்னேறி தீவிர இலக்கிய வெறியனாகவும், கவிதை பித்தனாகவும் மாற என்னை ஆசிர்வதிப்பீர்களாக.


விகடன் பதிப்பகத்தை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புத்தகம் நமது எதிர்பார்ப்பைத் தூண்டும். சென்றாண்டு சுகா அவர்களின் ‘மூங்கில் மூச்சு’, அதற்கு முந்தைய ஆண்டு அண்டன் பிரகாஷ் அவர்களின் ‘வருங்கால தொழில்நுட்பம்’. அவ்வகையில் இந்த வருடம் மிகுந்த எதிர் பார்ப்புடன் வாங்கிய புத்தகம் விகடனில் தொடராக வெளிவந்த ராஜு முருகன் அவர்களின் ’வட்டியும் முதலும்’. வ.மு பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை விகடன் படித்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்... :) :)

இவைகளில் ‘விகடன் சுஜாதா மலர்’ படித்து முடித்தாயிற்று. இந்த புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ‘விகடனில் சுஜாதாவின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கின்றன... இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், கட்டுரைகள், சிறுகதைகள் இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம்.பின் ‘சுஜாதா’ அவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் கலவை. என்னை மாதிரியான அன்னாரின் வெறித்தனமான ரசிகர்கள் கட்டாயம் வாங்கிப்படிக்கலாம். :) :) இப்புத்தகம் பற்றி விரிவாகப் பின்னாளில் எழுதுகின்றேன்.இப்போது ‘கடவுள்’ படித்துக் கொண்டிருக்கின்றேன்.

புத்தகக் கண்காட்சிக்கு மூன்று நாட்கள் சென்று வந்ததில் மனதில் தோன்றிய சில எண்ணங்கள் :) :)

  • தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் ‘நீயா நானா’ கோபிநாத், இறையன்பு IAS, சுகி சிவம் அவர்கள், (அவங்க புக் மட்டும் தான் நெறைய விக்குது)
  • சென்னையின் பெரும்பாலான குழந்தைகள் தமிழ் புத்தகங்களே படிப்பதில்லை .தமிழே தெரியாதது காரணமாக இருக்கலாம் ( எல்லா பிள்ளைக கையிலேயும் Only English.. அதுசரி அவுக அப்பாம்மா வாங்கி குடுத்தா தான)
  • ரொம்ப தரமான இலக்கிய புத்தகங்கள் யாவும் குறைந்தபட்சம் 150 ரூபாயாவது இருக்கும் (காலக்கொடும... எல்லாம் Hardboundதேன் கொஞ்சம் கூட கட்டுபடியாகல)
  • பதின்பருவத்திலுள்ள 50 சதவிகித மாணவர்கள் IAS ஆக விரும்புகின்றார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தினர் எல்லா போட்டித் தேர்வுகளிலும், மேற்படிப்பிற்கான தேர்வுகளிலும்  வெற்றி பெற விரும்புகின்றார்கள். (நான் பார்த்தவரை TOEFL, IELTS, GRE, UPSC Prep materials ஜாஸ்தி)
  • புத்தகங்களைவிட சாப்பாட்டு கவுண்டர்களில் விற்பனை பெருமளவு அதிகமாக இருந்திருக்கும். (எவ்வளவு வெரைட்டி... என்னா தீனி)
  • இன்னும் பத்து வருஷமானாலும் சரி... ‘சுஜாதா’ அப்டிங்குற எழுத்தாளரை யாராலும் ஒன்னியும் அசைச்சுக்க முடியாது. வாத்தியார் வாத்தியார் தான்...!! :) :) :)


புதன், 18 ஜனவரி, 2012

சென்னை 35-வது புத்தகக் கண்காட்சி - நான் வாங்கிய புத்தகங்கள்


இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு நான் சிறிது தாமதமாகவே செல்ல நேர்ந்தது.வார நாட்களில்  அலுவலகப் பணிகளும் போரூர் டிராபிக்கும் போக விடாமல் தடுத்தன என்றால், வாரயிறுதியில் நண்பர்களுடனான ஊர்சுற்றல் காரணமாக இருந்தது.ஒருவழியாக நேரம் ஒதுக்கி கடந்த 12 -ஆம் தேதி அலுவலக நட்பு ஒருவருடன் சென்று வந்தாயிற்று.முதலில் உயிர்மை, கிழக்கு, விகடன், டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய ஸ்டால்களை நோட்டம் விட்டுவிட்டு மற்ற ஸ்டால்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு...திரும்ப புத்தகங்கள் வாங்க வரும்போது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. 9 .00  மணிக்கு ஸ்டால்களை மூடிவிடுவார்களே என்பதை சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன்.தலயிலடித்துக்கொண்டு தோழியும் நானும் வேக வேகமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தோம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்
மூங்கில் மூச்சு - சுகா
கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா
வண்ணத்துப் பூச்சி வேட்டை - சுஜாதா
நானோ டெக்னாலஜி - சுஜாதா
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
குருபிரசாதின் கடைசி தினம் - சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
ஜோதி - சுஜாதா
தெர்மக்கோல் தேவதைகள் - கேபிள் சங்கர்
அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா

நட்பு வாங்கியவை:
தாயார் சன்னதி - சுகா
எப்போதும் பெண் - சுஜாதா
அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்
வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
தெர்மக்கோல் தேவதைகள் - கேபிள் சங்கர்
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என நினைத்து நேரமின்மையால் தவற விட்டேன்.சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள், விஞ்ஞான சிறுகதைகள் ஆகியவை இந்த மாத இறுதியில் வாங்கவிருப்பதால் வாத்தியாரின் சிறுகதைகள் வேறெதுவும் வாங்கவில்லை.படிக்காத குறுநாவல்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். நான் தவறவிட்ட சில பல புத்தகங்களை இன்று டிஸ்கவரி புக் பேலஸில் சென்று அள்ளிக்கொள்வேன்.

சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கியவை:
வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா
கடவுளும் நானும் - சாரு நிவேதிதா
கற்பனைக்கு அப்பால் - சுஜாதா
உயிரின் ரகசியம் - சுஜாதா
கற்றதும் பெற்றதும் - 3 - சுஜாதா
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - 'நீயா நானா' கோபிநாத்
வருங்காலத் தொழில்நுட்பம் - அண்டன் பிரகாஷ்

இந்தாண்டு தவறவிட்டவைகளில் மிகப்பெரிதாக நான் கருதுவது எஸ்.ரா -வின் இலக்கியப் பேருரைகள் டி.வி.டி யும், இன்னு சில எஸ்.ரா வின் புத்தகங்களும் தான்.எப்படியும் இந்த மாதத்திற்குள் அவற்றையும் வாங்கி விடுவேன்.தற்போது 'நானோ டெக்னாலஜி'-யும், 'அணிலாடும் முன்றிலு'ம்  படித்துக்கொண்டிருக்கின்றேன்.ஒவ்வொரு புத்தகமாகப் படித்து முடித்துவிட்டு அவற்றை பற்றி எழுதுகிறேன்.பார்க்கலாம்....!!
Related Posts Plugin for WordPress, Blogger...