நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 12 அக்டோபர், 2026

டோரதி எனும் இறைவி !




பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கு சென்று பார்க்கும் படம் என்பதாலும், கூடுதலாக கார்த்திக் சுப்புராஜ் - இளையராஜா இணையும் படம் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன். கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய திரைப்படங்களில் (பீட்சா தவிர்த்து) ஒரு சில விஷயங்களை தொடர்ச்சியாக கதையில் இடம்பெற வைப்பார். மதுரை சுற்றுவட்டாரத்தைக் கதைக்களமாகக் கொண்டு,அங்கிருக்கிற கேங்க்ஸ்டர்கள், 80கள் பாணி உடைகள் அல்லது அந்த காலகட்டத்தில் நடக்கிற கதை, இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் ரெஃபரன்ஸ்கள், ப்ரூஸ்லீ, கருப்பு வெள்ளை கால திரைப்பாடல்கள், கராத்தே பாணி சண்டை, ஈ*ழம் சார்ந்த ரெஃபெரன்ஸ்கள், சூப்பர்ஸ்டார் ரெஃபரன்ஸ்கள், ஒரு குறிப்பிட்ட சமூகப் பின்னணி, திரைப்படத்தின் முதல் பாதியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு பயணிக்கிற இரண்டாம் பாதி, ஒரு க்ளைமாக்ஸ் திருப்பம். இவற்றில் பெரும்பாலான அல்லது ஒரு சில அம்சங்கள் அவருடைய எல்லா படங்களிலும் உண்டு .

\

இவையெல்லாமும் டோரதியிலும் உண்டு. அதைத் தாண்டி இதனை ஓரு முழுமையான திரைப்படமாக, காலத்துக்கும் நம் மனதில் நிலைக்கும் கலைப் படைப்பாக, அனுபவமாக மாற்றுவது இந்தக் கதையினை கார்த்திக் சுப்புராஜ் ஒட்டுமொத்தமாகக் கையாண்டிருக்கிற விதமும், இளையராஜாவின் இசையும் தான். டோரதி படம் தொடங்கியதிலிருந்தே எனக்கு மனதில் இறைவி திரைப்படமும் அது சார்ந்த காட்சிகளும் ஓடத்துவங்கிவிட்டன. அதுவும் ஆண்கள் உலகமாகத் தான் இருக்கும். பாபி சிம்ஹாவின் பாத்திரம் (ஜெகன்), அந்த கதையின் பெண்கள் ஆண்களால் நடத்தப்படும் விதம் குறித்த கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியபடியே இருக்கும். ஒரு காட்சியில் ”நீ.. நம்ம அப்பன்.. இவன்… எல்லாருமே அரக்கனுங்க தான்டா… ஒரு நாள் இந்த அரக்கர்களிடமிருந்து விடுபடுவாள் கண்ணகி..” என்று பாபி சிம்மாவின் பாத்திரம் பேசுகிற வசனம் ஒன்று உண்டு

 

அந்த ஜெகன் பாத்திரத்தின் நீட்சியாகத்தான் டோரதியில் சனந்த் எற்றிருக்கிற சுப்பு பாத்திரமும் எழுதப்படிருப்பதாகத் தோன்றுகிறது. சுப்புவுக்கும் தன் அண்ணன்களின் மீதும், அப்பாவின் மீதும் ஒரு வெறுப்பும் கோபமும் இருக்கிறது. பெண் இல்லாத வீட்டில் வளர்கிற அவனுக்கு அன்பு காட்டுகிற  அடைக்கலம் தருகிறவர்கள் எல்லோருமே பெண்கள். அண்ணன் மனைவி டோரதி, கார்த்தியின் அம்மா , வசீகரனின் தங்கை தனம்  - சுப்புவின் புதிய அடையாளத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவுடன் ஏற்றுக்கொள்கிறவர்களும் இவர்களே.

விசில் வீரைய்யா, அவர்களது மகன்கள், அந்த குடும்பத்தில் நிகழ்கிற சூழ்ந்திருக்கிற வன்முறை ,  இரத்தமும், குடியும், சூதுமாக இருக்கிற அந்த வீட்டில் பூப்பூத்தாற் போல் நுழைகிற டோரதி (பொம்ம வந்துருக்குடா ! ) பின்பு டோரதியின் அதிர்ச்சிகரமான முடிவு. அதன் பின் சுப்புவிடம் ஏற்படும் மாற்றங்கள் என முதல் பாதியில் வேகமாக விறுவிறுப்பாக நகர்கிற கதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. கார்த்தி , சுப்பு – இருவருக்குமே நிகழ்கிற மனப்போராட்டம், பயணம், இறுதியில் நிகழ்கிற  மாற்றம் என்பதாக படம் முடிகிறது

 

இதில் சனந்த், ரிஷிகாந்த், முத்துக்குமார், ஆகியோரின் நடிப்பைப் பற்றியும் ஒரு இயக்குநராக கார்த்திக் சுப்புராஜ் இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கிய விதம் குறித்தும், அவருடைய காட்சிப் படிமங்கள், creative process and decisions குறித்தும் பரவலாக பலரும் பேசி எழுதி விவாதித்து விட்டதால் நான் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தது இருவரைப் பற்றி மட்டுமே.

முதலில் ராஜா – கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை முழுதாக எடுத்து முடித்துவிட்டபின்பே இசைக்காக ராஜாவிடம் சென்றதாக குறிப்பிட்டார். ராஜா இந்தக் கதையினை உள்வாங்கிய விதமும் ஒவ்வொரு காட்சியிலும் தனது இசையினால் மெருகூட்டிய விதமும் நினைக்க நினைக்க வியப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. படத்தின் முதல் பாதியில் கொண்டாட்டமும் அதிரடியுமாக நம்மை ஆடவைக்கிற இசை பின்பு போராட்டமும், சீற்றமும் பின்பு பேரமைதியுமாக உருமாறி இறுதியில் பித்துநிலை (Trance ?!) அதன் பின்னான நிறைவு என திளைக்கவைத்திருக்கிறது. உண்மையில் இசைக்கு தனியாக திரைக்கதை இருக்குமா என்பது தெரியாது – ஆனால் டோரதியில் ராஜா நிகழ்த்தியிருப்பது அப்படி ஒன்றுதான் எனத் தோன்றுகிறது. பின்னணி இசைக் கோர்ப்பின் வழியாகவும், இசைத்துணுக்குகளின் வழியாக மட்டுமே காட்சிகளாகக் கதையின் மையத்தை புரிந்து கொள்ள முடிகிறது – அப்படி புரிந்துகொள்ளும்படி ராஜா இசையமைத்திருக்கிறார். He has definitely internalized the soul of the story and beautifully captured it, vividly communicated it to the audience through his music composition; Elevating the overall movie watching experience. I am not even sure whether I am articulating it right. For me listening to his scores in itself was a cathartic process. I am kinda trapped into that limbo. Thank you Raja <3 and Thank you Karthik Subburaj for this gem.

அடுத்ததாக எழுத்தாளர் சரவணன் சந்திரன் – அவர் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பதை அவரே பேஸ்புக்கில் குறிப்பிட்ட பின்னர் டோரதி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. அவர் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரையிலுமான அவருடைய புனைவுகளையும் கட்டுரையும் வாசித்தவன் என்கிற வகையில் இந்த திரைப்படத்தில் அவருடைய பங்களிப்பில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஒரு விளையாட்டு போல திரைப்படத்தில் இந்த இடத்தில் இந்த விஷயத்தை அவர் தான் எழுதியிருப்பார் என தேடித்தேடி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ராஜாவைப் போலவே சரவணன் அண்ணனும் ஒரு mystic சாமியார் தான் என்பதால் இந்தத் திரைப்படத்தில் இவருடைய பங்களிப்பையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். வாழ்த்துகள் அண்ணே ! தொடந்து நிறைய படங்களுக்கு எழுதுங்க. உங்க எழுத்தின் தடயத்தை திரையில் தேடுகிற விளையாட்டை நானும் தொடர்வேன்.

 

கார்த்திக்கிற்கும் சுப்புவுக்குமான பால்யகால நட்பிற்கு இருந்த பின்கதையும் ஆழமும் நேரமும் அது காதலாக மாறுவதற்கு கொடுக்கப்படவில்லை எனத் தோன்றியது. Felt it was rushed without enough screen time. டோரதி திரைப்படம் பற்றிய விமர்சனங்களில்  பல பேர் இது முழுமையான அரசியல் பிரதியாக வெளிப்படவில்லை என்றும், படத்தில் அநீதி இழைக்கிற ஆண்களுக்கு எதுவுமே நிகழாமல் சுப்பு மட்டும் தப்பியோடி வேறொரு இடத்தில் அவளுக்கான நல்ல முடிவு கிடைப்பதாக எழுதப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு இதுவும் ஒரு தமிழ்சினிமா தேய்வழக்கு cliché எனவும், இறுதிக்காட்சி வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும்,  இன்னும் பல விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் லாரி ஓட்டுநருக்கு திருநங்கை என்பதே ஸ்டீரியோடைப்பிங் தானே என்றும் நண்பரொருவர் ஆதங்கப்பட்டார். எல்லாவற்றையும் தாண்டி ஒரு படைப்பாக சமூகத்தில் ஒரு தாக்கத்தையும் உரையாடலையும் ஏற்படுத்திய வகையில் டோரதி மிக முக்கியமான திரைப்படம். மற்றபடி ஒரு திரைப்படமாக டோரதி எனக்கு பிடித்தமானதாகவே இருந்தது.

 

 

 

புதன், 29 ஜூலை, 2026

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து - சுந்தர் சருக்கை (மொ.பெ - சீனிவாச ராமாநுஜம்) - எதிர் வெளியீடு | Following a Prayer



 

உண்மையில் மொழி என்பது என்ன ? ஒரு சொல்லின் மதிப்பு அதன் பொருளைப் பொருத்ததா அல்லது கேட்பவரின் எதிர்வினையைப் பொருத்ததா ? ஒலிதான் மொழியெனில் மனதுக்குள் பேசுவதெல்லாம் மொழியாகாதா ? பேசுகிறவர்களையும் கேட்கிறவர்களையும் இணைக்கிற கருவிதான் மொழியா ? இசையென்பது மொழியா அல்லது வெறும் ஒலியா ? விலங்குகளின் சப்தங்களும் மொழிதானா ? கடவுள் எங்கிருக்கிறார் ? கடவுள்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழி என்று ஒன்று உண்டா ? நமது பிரார்த்தனைகள் என்னும் சொற்கள் எங்கே செல்கின்றன ?

இப்படியான கேள்விகளுக்கு மூன்று பதின்வயது சிறுமிகளின் தேடலின் வழியே தத்துவார்த்தமாக விடை தேட முயலும் புத்தகம்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை எழுதிய ‘Following a Prayer’ என்னும் நாவல். இந்நூலை தமிழில் ‘பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து ; என்ற பெயரில்  சீனிவாச ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார் (எதிர் வெளியீடு).

இதற்கு முன்பு நான் வாசித்த ‘ப்ரோஜக்ட் ஹெய்ல்மேரி’ என்னும் அறிபுனைக் கதையில் முதன் முதலில் ஒரு வேற்றுலகவாசியுடன் மனிதன் உரையாடும் பகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மொழி பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும், எழுத்து / ஒலி வடிவமாக அது உருப்பெறுவதற்கான சூழல் குறித்தும் விளக்கங்களைக் கொண்ட, நாவலின் ஒரு சிறிய பகுதி அது. அதனைத் தொடர்ந்து மொழி, உரையாடல், மெளனம், புரிதல், தொடர்பாகவே வாசித்துக் கொண்டிருந்த நான், கண்டடைந்த புத்தகம் தான் சுந்தர் சருக்கையின் இந்நூல்.

 கதையின் முதல் அத்தியாயத்தில் , கர்நாடகத்தின் மலைசார்ந்த பகுதியிலுள்ள ஒரு பசுமையான கிராமத்தில் , வாய்த்துடுக்கான பன்னிரண்டு வயது சிறுமி கல்பனா வீட்டிலிருந்து காணாமல் போகிறாள். தன்னுடைய அஜ்ஜி (பாட்டி) பிரார்த்தனைகளைச் சொல்லி சாமி கும்பிடும்பொழுது அதனைக் கேலியாகக் கேள்வி கேட்கிறாள் கல்பனா. “நீங்கள் சொல்லும் இந்த பிரார்த்தனைகள் எங்கே செல்கின்றன ? கடவுள் எங்கிருக்கிறார் ? எங்காவது இருந்து இந்த பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா ?” எனக் கேட்க, கல்பனாவின் கேள்விகளால் துனுக்குற்ற அஜ்ஜி ஏதோ ஒரு பிரார்த்தனையை கண்மூடி சொல்லிவிட்டு , “இதோ இந்த பிரார்த்தனை எங்கே செல்கிறதென் நீயே தேடிப்போய்ப் பார்த்து கண்டுபிடி” எனச் சொல்லிவிட , கல்பனா விளையாட்டாக அஜ்ஜியின் சொற்களைப் பின்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற , அப்படியாகத்தான் தொலைந்து போகிறாள்.

 அவள் குடும்பமும் ஊரும் அதிர்ந்து போய் அவளைத் தேடும் முயற்சிகளில் இறங்க, மூன்று நாட்களுக்குப் பின் காட்டுவழி மலைப்பாதையில் மயங்கிக் கிடக்கும் அவளை ஒரு பேருந்து ஓட்டுநர் பார்த்து காப்பாற்றி வீட்டிற்கு கொண்டுவந்து விடுகிறார். கல்பனாவுக்கு என்ன நேர்ந்ததோ என அனைவரும் அச்சத்திலிருக்க , அவளோ ஒரு வார்த்தை கூட யாரிடமும் எதுவும் பேசாமல் தவிர்க்கிறாள். பேச மறுக்கிறாள்.  மனம்  முழுக்க கோபமும் வெறுப்புமாக மெளனமாக நாட்களைக் கடத்தும் கல்பனா , தன் தங்கை தீக்‌ஷாவிடம் மட்டும் வாய் திறந்து பேசாமல், எழுத்தின் வழியாக , ஓரிரு சுருக்கமான சொற்களில் பேசுகிறாள் (!) . இதன் பின் கல்பனா, அவள் தங்கை தீக்‌ஷா, தீக்‌ஷாவின் தோழி குமாரி – இந்த மூன்று சிறுமியரைச் சுற்றியே கதை நகர்கிறது.

குழந்தைகளின் அறிவை மெச்சுகிற பெரியவர்களின் பெருந்தன்மை என்பது ,அவர்கள் பதில் சொல்லமுடியாத கேள்விகளை எதிர்கொள்ளும் வரை மட்டுமே. இந்தக் கூற்றை மெய்யாக்கும்படி தொடர்ந்து தங்களுடைய கேள்விகளாலும் , தேடலாலும் , குடும்பத்தினரையும் , ஆசிரியர்களையும் துளைத்தெடுக்கிறார்கள். மொழியைப் புரிந்து கொள்ள நிகழ்த்தும் தேடலும், படிப்படியாக உண்மையை நோக்கிய அவர்களின் பயணமும் தத்துவார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன.   மொழியில் தொடங்கி , ஒலிக்கு நகர்ந்து, பின்பு கடவுளைத் தேடி , பின்பு ஒலிக்கும், இசைக்கும், மொழிக்குமான வேறுபாட்டைப் பேசி இறுதியில் நம்மையும் ஒரு சிந்தனைச் சுழலுக்குள் தள்ளுகிறார் எழுத்தாளர். கதையாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும் அந்த கதையின் வழி எழுத்தாளர் முன்வைக்கிற தத்துவார்த்தமான கேள்விகளும் அதற்கான பதில்களுமே வாசகர்களுக்கான பெறுமதி என்பது என் கருத்து.

நான் ஆங்கில மூலத்தையும் , தமிழ் மொழிபெயர்ப்பையும் அடுத்தடுத்து வாசித்திருந்தாலும் மொழிபெயர்ப்பில் இந்நூலின் கருதுகோளும் ஆழமும் மிகச்சரியாக வந்திருப்பதாக உணர்ந்தேன்  இன்னொன்று, தத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கிற பொறுமை நமக்கு இல்லை என்னும் அவநம்பிக்கையுடனேயே இந்நூலை வாசிக்கத் துவங்கினேன். வாசிக்கத் தொடங்கி அதனை முடிக்கிற தருவாயில் என்னுடைய பேச்சின் அளவும் குறைந்து போய்விட்டதாக, அதற்கான தேவை இல்லாமல் போனதாக உணர்ந்தேன். பெரும்பாலான உரையாடல்களை உள்முகமாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தேன். இதற்கு முழுமுற்றாக இந்த புத்தகத்தை காரணமாகக் கொள்ளாவிட்டாலும் (அன்றாடத்தில் எதிர்கொண்ட சில சிக்கல்களும் வேறு காரணங்களும்  இருந்தாலும்) உறுதியாக அதன் தாக்கம் இருந்தது.

 கதையின் முடிவில் எனக்கு உவப்பில்லை. ஆனால் அந்த முடிவைப் போலவே முற்றுப்பெறாத , விடைதெரியாத கேள்விகள் நமக்கும் தோன்றலாம். நமது சொற்களின் தேவையற்ற அல்லது தேவைப்படாத இடங்களில், சொற்களால் இட்டு நிரப்பமுடியாத மெளனத்தின் மதிப்பை ,இந்நூல் உறுதியாகக் கூட்டியிருக்கும்.

இந்த நூலை வாசிக்கும்போது, ஒரு நாவலை வாசிப்பதைவிட, தன்னுடைய தத்துவச் சிந்தனைகளைப் பாத்திரங்களின் உரையாடல்களாகவும் நிகழ்வுகளாகவும் வடிவமைத்த ஒரு தத்துவவியலாளரின் நீண்ட சிந்தனைக் குறிப்பை வாசிப்பதைப் போன்ற உணர்வே அதிகமாக இருந்தது. 
தத்துவங்களை விரும்பி வாசிக்கிறவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.

 Following a Prayer – Sundar Sarukkai – Tranquebar/Westlandbooks – Rs.599

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து – சுந்தர் சருக்கை – மொ.பெ/ சீனிவாச ராமாநுஜம் – எதிர்வெளியீடு – ரூ.569 / 344 பக்கங்கள்

சனி, 16 மே, 2026

வீனஸ் - பா.கண்மணி - எதிர் வெளியீடு

 


 பா.கண்மணி எழுதிய ’வீனஸ்’ பற்றி
**************************************************

பெங்களூரில் வீனஸ் என்ற பெயரில் அழகுநிலையத்தை தொடங்கி நடத்திவரும் ரஞ்சனி, வாடிக்கையாளர்களாக அங்கு வரும் நிஷா என்னும் மாடல் , உயர்நடுத்தர வர்க்க குடும்பத்தலைவி சந்தியா, அழகு நிலையத்துடன் இணைந்த உடற்பயிற்சிக்கூடத்தில் டயட்டீசியனாகப் பணிபுரியும் திலோத்தமா, உடற்பயிற்சியாளன் ப்ருத்வி, ரஞ்சனியின் மனோதத்துவ மருத்துவரும் நண்பருமான டாக்டர் ஆகியோரின் வாழ்வும் கதைகளுமே வீனஸ் என்னும் இந்த கதைத்தொகுப்பு (anthology ?! )

இதனை நாவல் என்றோ குறுநாவல் என்றோ வகைமை செய்ய முடியாததற்கான காரணம் இந்த வடிவமே. பாத்திரங்களின் வாழ்வையும் அவர்களின் குணவார்ப்பையும் மட்டும் சொல்லிவிட்டு பின்பு பெரிய சிக்கலோ தீர்வோ முடிச்சுகளோ எதுவுமின்றி அடுத்தடுத்த பாத்திரத்தின் கதைக்கு/ அத்தியாயத்திற்கு நகர்ந்து விடுவதனால் ஒட்டுமொத்தமாக ஒரு போதாமை அல்லது முடிவின்மையினை உணர முடிந்தது.

கண்மணியின் மொழி ஒரு மாதிரி அண்மையில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய வீட்டைப்போல பழமையும் நவீனமும் கலந்தாற்போலான தன்மை கொண்டிருக்கிறது. அதுவே நம்மைத் தொடர்ந்து வாசிக்கவும் வைக்கிறது. புளகம், சிவிறி போன்ற வழக்கிலில்லா அருஞ்சொற்களின் பயன்பாடும்,அழகுக்கலை சார்ந்த கலைச்சொற்களும் ,பன்மொழி பேசும் மக்களைக் கொண்ட பெங்களூரின் தன்மைக்கேற்ப ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசும் பாத்திரங்களின் சொற்றொடர்களை அந்தந்த மொழியிலே தமிழில் ( வோ ஜாத்தீ நயி திதி, கடையினிந்தா ராண்டம் செக்குக்கு பந்திதினி ) எழுதிவிட்டதும் கதைக்களத்திற்கேற்றார்போல பொருந்தி வந்திருக்கிறது. வசீகரமான வர்ணனைகளும், சில இடங்களில் அப்பட்டமான விவரணைகளும் ஆங்காங்கு விரவிக்கிடக்கின்றன . ஸ்டெல்லா ப்ரூஸும் , பாலகுமாரனும், சிவசங்கரியும் , சாரு நிவேதிதாவும் கலந்துகட்டிய மொழியே இந்நூலின் பலம்.

இதில் கதைப்பாத்திரங்களின் மையம் அல்லது கதை/அத்தியாயங்களின் மையம் என்பது இளமை, உடல், காலம், பொறுப்புகள், கடமை, மோகம் இவற்றுக்கிடையேயான போராட்டங்களும் மனசஞ்சலங்களுமாக அமைந்திருக்கிறது.
The characters were introduced and set up in a fantastic manner, hooking us in to get involved and then ending abruptly only for us to be left hanging and wanting more . இதே கதை மாந்தர்களைக் கொண்டு கண்மணி இன்னொரு நாவல் எழுதினாலோ அல்லது இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகமென வெளியிட்டாலோ அதனையும் உறுதியாக வாசிப்பேன்.

வீனஸ் - பா.கண்மணி - எதிர் வெளியீடு - 128 பக்கங்கள் - விலை ரூ.180





திங்கள், 11 மே, 2026

ரகுராய் நினைவஞ்சலி - சென்னை

 







சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் அரங்கில் பிரபு காளிதாஸ் ஒருங்கிணைத்த , நிழற்படக்கலைஞர் ரகுராய்க்கான நினைவஞ்சலிக் கூட்டம் பற்றி...
 
அண்மையில் மறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த நிழற்படக்கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரகுராய் அவர்கள் குறித்து நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உரையாடவும் ஒவியர் ட்ராட்ஸ்கி மருது, நிழற்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற நிழற்படக்கலைஞர் ஷேக் முகமுகது ஃபைசல் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 
 
முதலில் பேசிய மருது அவர்கள் ரகுராயை டெல்லியில் முதன் முதலாக கலைக்கண்காட்சிகளின் போது சந்தித்ததில் துவங்கி அவருடைய வாழ்வின் பல நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். ரகுராய் எப்போதும் ஒரு பரபரப்புடனேயே காணப்பட்டதாகவும் அவருடைய கண்கள் அவரைச் சுற்றியுள்ள சூழலில் யாருக்கும் புலப்படாத சப்ஜெக்டுகளைத் தேடியபடியே இருந்ததாகவும் சொன்னார்.
 
அதுவரையிலும் ஐரோப்பிய நிழற்டக் கலைஞர்களுக்கு மட்டுமே இருந்த பிரத்யேக பாணியிலிருந்து மாற்றி இந்தியாவின் நிலவமைப்பையும் மக்களையும் முற்றிலும் புதியதொரு கோணத்தில் ரகுராய் காட்சிப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
ரகுராய் எப்போதும் அவரது துறைசார்ந்த அடுத்தடுத்த தொழில்நுட்ப பாய்ச்சல்களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றைக் கற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் கலையை வெகுமக்கள் திரளிடம் கொண்டு சேர்த்ததைப் பற்றி சொன்னார். 
 
மருது அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஓவியம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் சார்ந்த தொழிநுட்பங்களைத் தேடியலைந்து கற்றுக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அத்தனையும் பொக்கிஷமான தகவல்கள். இந்தியாவில் ஆப்பிளின் மேக், மைக்ரோசாஃப்டின் பிசி ஆகியவை நுழைவதற்கு முன்பே பிரபலமடைந்த அமிகா என்ற கணினியை செய்தித்தாளில் வரிவிளம்பரம் பார்த்து உடனே வாங்கிவிட முயன்றதையும் , பின்பு அந்த விற்பனையாளர்களின் இடத்துக்கே நேரில் சென்று விசாரித்ததையும் சொல்லி , அவர்கள் அப்போதைய அரசின் இறக்குமதி கெடுபிடிகளின் காரணமாக அதீதமான ரகசியத்தன்மையுடன் செயல்பட்டதையும் குறிப்பிட்டார்.
பின்பு 45000 ரூபாய்களுக்கு (ரெண்டு க்ரவுண்ட் இடம் வாங்கிருப்பேன் அப்போ என்றார் 😃) அமிகா கணினியை வாங்கியவுடன் அதில் 8 பிட் வண்ணங்களில் ஓவியம் வரைந்ததையும் ஒரே க்ளிக்கில் பல அடுக்காக வரையப்பட்ட ஓவியங்களை நகரும்படமாக மாற்ற முடிந்ததையும் சொல்லி அதுவரையிலும் காகிதத்தில் வரைந்து ப்ரேம்களைப் பார்த்து பின்பு ஃபிலிமுக்கு மாற்றி அதனை பெரிய திரையில் ஓடவிட்டுப் பார்க்க பிரசாத் அரங்கில் காத்திருந்த நிலை மாறி உடனுக்குடன் கணினியில் அனிமேஷனை பார்க்க முடிந்தது ஒரு கலைஞனாக பெரும் விடுதலையுணர்வை தந்ததென சொன்னார்.
 
பின்பு அவருடைய பேச்சு திரைத்துறையில் அவர் பணிபுரிந்த திரைப்படங்கள் குறித்து நகர்ந்தது. நாசரின் அவதாரம் திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிக்காக கிராபிக்ஸில் நரசிம்ம அவதாரம் செய்ய முயன்று பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டதையும், தேவதை படத்தின் போது செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் முயற்சிகள் குறித்தும், இறுதியாக சங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படப்பாடலில் (அவர் பணிபுரியவில்லை) செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் பற்றியும் சொன்னார். செல்போன் பயன்பாடு பரவலாகிவிட்ட இந்த காலத்தில் ஐரோப்பாவைப் போல் இங்கும் காட்சி ஊடகம் / ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக் கல்வியில் செயல்முறைகளாக புகுத்த வேண்டிய தேவையையும் அவசியத்தையும் குறிப்பிட்டார். 
 
டிஸ்னியின் ‘லயன்கிங்’ (1994) அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற 6 நிமிட Wildebeest stampede காட்சிக்காக ஓவியக்கலைஞர்கள் மூன்று ஆண்டுகள் உழைத்ததையும் , ஒரு வேளை கணினிப் பயன்பாடு இல்லாதிருந்தால் இதற்கு மட்டுமே பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்பதையும் சொல்லிவிட்டு, தொழிநுட்பம் எப்போதும் கலையை ஜனநாயகப்படுத்தியதையும் துறைசார்ந்த முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ள விரும்பாத கலைஞர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனதையும் சொல்லி, ரகுராய் இறுதி வரை தன்னை காலத்திற்கேறார்போல் புதுப்பித்துக் கொண்டே இருந்ததைச் சொல்லி அவருடைய நீண்ட உரையினை முடித்துக் கொண்டார் .
பின்பு ஃபைஸல் , ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற காலத்தின் நினைவுகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் வகுப்புகள் என்றால் மீதம் மூன்று நாட்கள் மாணவர்களை படமெடுக்க வெளியிடங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவாராம். அப்படி அனுப்பும்பொழுது அவர்கள் செல்லும் இடம் பற்றிய முழு விவரங்கள், அந்நாளின் வானிலை , உள்ளூரில் ஏதேனும் பரப்பான சூழல் இருந்தால் அது பற்றிய விவரங்கள் என அத்தனையும் விசாரித்துவிட்டு கருத்தில் கொண்டே அவர்களை வெளியில் அனுப்புவாராம். டெல்லியில் இருந்ததால் ரகுராய் பெரும்பகுதி டெல்லி அரசியல் சார்ந்த முக்கியத் தருணங்களைப் படம்பிடித்ததையும் வேறு சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
 
அன்னை தெரசாவின் சென்னை சுற்றுப்பயணத்தில் அவரைப் படமெடுக்க உடன் வந்திருந்த ரகுராயை, முதன்முதலில் நேரில் பார்த்தது பற்றி சொன்ன வைட் ஆங்கிள் ரவிஷங்கர் நிழற்படக்கலைஞராக தன்னுடைய வாழ்க்கை துவங்கியதையும், தமிழ்நாட்டின் பிரபலமான ஃபோட்டோ ஏஜன்ஸிகளுடன் பணிபுரிந்ததையும் , கலைஞரை மிக இயல்பாக நெருக்கமாக படம்பிடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் வீட்டில் புகழ்பெற்ற நிழற்படக்கலைகர் ஹேரி மில்லர் எடுத்த பேரறிஞர் அண்ணாவின் நிழற்படம் பற்றி கலைஞர் பகிர்ந்து கொண்ட தகவல்களையும், கலைஞரின் photo sense பற்றியும் சொல்லி, பின்பு ஒளிப்பதிவாளராக தன்னுடைய தற்கால திரையுலக அனுபவங்கள் வரை சுருக்கமாகப் பேசி தன் உரையை முடித்துக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் ரகுராயின் கருப்பு வெள்ளைப் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய செயல்பாடுகள் பற்றி மேலோட்டமாகத் தெரிந்திருந்தாலும் இன்னும் நுணுக்கமான விஷயங்களையும் அனுபவங்களையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் உரையாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது . நிகச்சியை ஒருங்கிணைத்த பிரபுவின் குடும்பத்தினர் அங்கிருந்தவர்களை ஓடி ஓடி கவனித்தபடி இருந்தனர். சுட்டிப் பையனாக பார்த்த அபய் (பிரபுவின் மகன்) இன்று கல்லூரி செல்லும் இளைஞராக வளர்ந்து நிற்கிறார். அவரும் பிரபுவுடன் இந்நிகழ்வினைப் படமெடுத்தபடி இருந்தார். ஒட்டுமொத்தமாக மனதிற்கு நெருக்கமான நிறைவானதொரு நிகழ்வாக அமைந்தது. Thanks for inviting me and for the fantastic evening Prabhu…! 
 
வெளியே நிறுத்திவைத்திருந்த காரை உடனே நகர்த்தும்படி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசியில் அழைத்துச் சொன்னதால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் நன்றி சொல்ல முடியாமல் அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டியாதாகிவிட்டது ☹

Related Posts Plugin for WordPress, Blogger...