நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மே, 2021

அரசியல் - சமூக அறிவியல் - புரிதல் ?

இதுவரைக்கும் இல்லாத வகைல இந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தான் என் வட்டத்தில் உள்ள பலரிடமும் நேரடியாக அதிகளவில் அரசியல் பேசியிருக்கிறேன்.. கேள்விகள் கேட்டிருக்கிறேன்... விவாதித்திருக்கிறேன்.. சண்டையிட்டு முரண்பட்டிருக்கிறேன். இந்த வட்டம் என்பதில் சொந்த ஊர் பள்ளி/கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் , பணியிட/வாழிட நண்பர்கள் ஆகியோர் அடக்கம்...(முழுக்க முழுக்க என்னுடைய உரையாடல்/ புரிதல் அடிப்படையிலான அனுமானம் தான்...தரவுகளின் அடிப்படையிலான சர்வே அல்ல) 

இதுல தெள்ளத்தெளிவா புரிஞ்ச விஷயம் வயது, பாலினம், கல்வி, சமுகப் பொருளாதரப் பின்னணி... எந்த வேறுபாடுமில்லாம பலருக்கும் அரசியல் பற்றிய புரிதலும் தெளிவும் ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு...சட்டமன்றம்னா என்ன? ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய வேலை என்ன ? உள்ளாட்சித் தேர்தல்னா என்ன ? அதுக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன தொடர்பு ? எத்தனை சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ? பாரளுமன்ற உறுப்பினருடைய பணி என்ன ? மக்களவைக்கும் மாநிலங்களவைக்குமான வேறுபாடு என்ன ? ஒரு சட்டத்திருத்தம் எப்படி நிறைவேற்றப் படுது ? மசோதான்னா என்ன ? சட்டமன்ற ஓட்டெடுப்பு எப்படி நடக்கும் ? ஆட்சி அதிகாரம் எப்படி பகிர்ந்தளிக்கப்படுது ? அமைச்சர்கள் துறை சார்ந்து எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுது ? மாநில பட்ஜெட்..மத்திய பட்ஜெட்... தொகுப்பு நிதி.. இட ஒதுக்கீடு மாதிரி சமூக நீதி சார்ந்த விஷய்ங்கள்... இன்னும் சுத்தம்....! இந்த மாதிரி பல விஷயங்கள் அரசியல் பேசுகிறவர்கள், சமூக வலைத்தள பரிச்சயம் உள்ளவர்கள், TNPSC மாதிரியான அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் தவிர்த்து பொது நீரோட்டத்தில் உள்ளவர்களுக்கு பெரிய பரிச்சயம் இல்ல.

 இன்னொரு வியப்பூட்டும் விஷயம் இதுல பெரும்பாலானவர்கள் இருபதுகளின்/முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறவர்கள் என்பது தான். வயதில் பெரியவர்கள் (40+ ) தோராயமாகவாவது புரிந்து வைத்திருக்கிறார்கள் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிக்கிற பெரிய கூட்டம் ஒன்னு இருக்கு ...!! )

 இதெல்லாம் தெரிஞ்சுக்கிறது அத்தியாவசியமா.. ஓட்டு மட்டும் போட்டா பத்தாதான்னு கேட்டீங்கன்னா நிச்சயமா பத்தாது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க தானே. எனக்கு தனிப்பட்ட முறைல பள்ளி பாடப்புத்தகங்கள் தாண்டி அறிவியலின் மீது ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்படக்காரணம் த.நா.அ.இ தான். தமிழ் வழிப்பள்ளிகளுக்காக துளி விநாடி வினா, ஆங்கில வழி பள்ளிகளுக்காக ஜந்தர் மந்தர் விநாடி வினா என தமிழகத்தோட சந்து பொந்துல இருக்கிற பள்ளி மாணவர்களிடமும் அடிப்படை அறிவியலை கொண்டு சேர்த்த பெருமை இந்த இயக்கத்துக்கு உண்டு . 

நான் பல வருஷம் பல போட்டிகள்ல கலந்துட்டு இருக்கேன். இது போக இளம் அறிவியலாளர் மாநாடு மாதிரியான (National Children Science Congress/ Young Scientist ) மாதிரி பல செயல்பாடுகளை பல வருடங்களா தொடர்ந்து நடத்திட்டு வர்ராங்க. மாணவர்கள் கிட்ட அரசியலைக் கொண்டு போன அதே அளவுக்கு (SFI/DYFI) அறிவியலையும் கொண்டு சேர்த்ததுல இடதுசாரி இயக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு,

இளைஞர்களுள், அரசியல்வயப்படாதவர்களை / அரசியல்படுத்தப்படாதவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள் என குறை மட்டும் சொல்லி ஒரு பயனும் இல்லை. தேர்தல் அரசியலுக்கு முன்பே சமூக அறிவியலை, பாடப்புத்தகம் தாண்டி எளிமையாக ஆழமாக கொண்டு சேர்க்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாதிரியான ஒரு இயக்கம் கட்டாயம் வேண்டும் என்பது என் எண்ணம். இதனை கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.... ஓரளவு தெளிவான கொள்கைப்பிடிப்புள்ள சமூக இயக்கம் (எ.கா: திராவிட இயக்கத் தமிழர் பேரவை) இதனை முன்னின்று நடத்தினால் கட்சிகளின் network/infrastructure/financial support இதனை மாநிலம் முழுவதும் பரவலாக கொண்டு செல்ல பெரிதும் உதவும். 

 உங்க கருத்து என்ன ? உங்களுடைய வட்டத்துல ஒரு கட்சி சார்ந்து அல்லது ஒரு கட்சியை எதிர்த்து பேசிய அனுபவம் எப்படி இருந்தது ? இந்த Social science awareness பற்றிய உங்கள் கருத்து என்ன ? சொல்லுங்க பேசுவோம்...!

செவ்வாய், 14 ஜூலை, 2020

வைரமுத்து - #MeToo மற்றும் #CancelCulture

(C) - Illustration by Taylor Callery for TIME


அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்கிற ஆஃப்ரிக்க அமெரிக்கர் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முக்கியத்துவம் பெற்றது இந்த #CancelCulture என்கிற விஷயம். ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை கடந்த காலங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவமதித்த, அவதூறாக, மதிப்பைக் குறைக்கும் வகையில் சித்தரித்த திரைப்படங்களையும், அவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்களையும் எதிர்த்து போராடத் துவங்கினர். விளைவாக hbo சேனலிலிருந்து ‘Gone with the wind’ திரைப்படமும், netflixல் இருந்து ‘the help’ திரைப்படமும் நீக்கப்பட்டன.


#MeToo இயக்கத்தில் தொடங்கி இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வரை எல்லா தரப்பிலும் இந்த Cancel culture கடைபிடிக்கப்பட்டது/படுகிறது.



ஒரு துறையில் பெரும் புகழ்பெற்ற தனிமனிதர் (சினிமா/விளையாட்டு/அரசியல்/கலை etc) அவருடைய கடந்தகாலத் தவறுகளின் அடிப்படையிலோ அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ பொதுத் தளத்திலும் பிற இடங்களிலும் (அவரின் கலைத்திறம் ஆளுமை உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல்) நிராகரிக்கப்பட்டால், அது தான் #CancelCulture இந்த வரிசையில் காலம் கடந்த புத்தகங்களையும், திரைப்படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது அந்த படைப்பு உருவான காலகட்டத்தில் சரியான பார்வையோ புரிதலோ இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தேதிக்கு அந்த திரைப்படமோ/புத்தகமோ பேசும் விஷயம் தவறு (irrelevant/incorrect) எனக் கொள்வது.

இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை நூறாண்டுகளுக்கு முன்பே ஃபோர்ட் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் இதைப் போல நிராகரிக்கப்பட்டிருக்கிறார். ’The Dearborn Herald' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த அவர், யூதர்களை மோசமாக சித்தரித்து அவதூறாக எழுதப்பட்ட ஒரு தொடர் கட்டுரையையும் அந்த பத்திரிக்கையில் வெளியிட்டுவந்தார்.பின்பு அமெரிக்கா முழுக்கவும் யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பாலும், அறப்போராட்டங்களாலும், நீதிமன்ற வழக்குகளாலும் ஒரு கட்டத்தில் ஃபோர்ட் தனது தவறுகளுக்காக பொது மன்னிப்புக் கேட்க வேண்டிவந்தது.அப்படியாக அந்த cancellation campaign முடிவுக்கு வந்தது.

இதே போல் சமகாலத்தில் sexual assault / harassment பாலியல் புகார் காரணமாக cancel செய்யப்பட்டவர்கள் ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், இயக்குநர் வுடி ஆலன், நடிகர் கெவின் ஸ்பேசி உள்ளிட்டோரும் உண்டு.

இந்த #CancelCulture சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு பிரபலத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
இது இப்படி இருக்க, இந்த sexual assault/harassment allegations ஐப் பொருத்த வரையில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே அன்றி பொதுவில் அவர் எப்படி நடத்தப் பட வேண்டுமென்றோ ஊடகம் உள்ளிட்டவற்றில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி அணுக வேண்டும் என்றோ எந்த guidelinesம் இருப்பதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரியப்படுத்தவும்)

நம்மளால, நம்முடைய மனசாட்சிப்படி, moral compass படி, நமக்குத் தெரிஞ்ச தகவல்களை வெச்சு தான் முடிவெடுக்க முடியும். அப்படிப் பாத்தா benefit of doubtஅ position of powerல இருக்குறவங்களுக்கு குடுக்காம இருக்குறதுதான நியாயம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தானே நிக்கனும்.

வைரமுத்து எழுதுன பாடல்களைக் கேக்குறது guilty pleasure தான்..ஆமாம் அவருடைய எழுத்தைப் புகழத்தோணும் தான் அதே சமயம் அவரால பாதிக்கப்பட்ட இந்த victims பத்தி ஞாபகம் வந்தா நமக்குள்ள ஒரு conflict வரனும். அதான் நியாயம்…! பரவால்ல… இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கிறவரை, நம்மால முடிஞ்சவரைக்கும் அவரைக் கொண்டாடாம இருந்தாலே போதும்னு நெனைக்கிறேன்.

இவ்வளவு எழுதுறதுக்கு காரணமும் அந்த internal conflict தான்.

வைரமுத்து, தாம்ப்ராஸ் நாராயனன், காஞ்சிபுரம் ஜெயேந்திரன், உள்ளிட்ட எல்லாரையும் ஒரே தட்டுல தான் வெச்சுப் பாக்கனும்..எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒரே மாதிரி தான் அணுகனும்… போலவே ஸ்ரீரெட்டி அவர்களுடைய புகாரையும் சின்மயி அவர்களுடைய புகாரையும் ஒரே மாதிரி தான் எடுத்துக்கனும். Partialஆ அறம் பேசக் கூடாது…!


எனக்கு எழுந்த இன்னொரு கேள்வி, இந்த #CancelCulture மாதிரியான விஷயங்களைப் பத்தி இங்க நம்முடைய தமிழ் சமூகத்துல ஏன் பரவலான விவாதங்கள் எதுவும் நடக்கல ? குழப்பத்துல இருக்குறவன் தன்னுடைய referenceக்காக தேடுனா கூட இங்க எந்த ஆய்வுகளோ விவாதங்களோ கட்டுரைகளோ இல்லை…இந்த போஸ்ட் எழுத அதுவும் ஒரு காரணம்.


உங்களுடைய கருத்துகளை சொல்லுங்க. I’m eager to learn, unlearn and listen


(மேற்கண்ட போஸ்ட் நான் ஃபேஸ்புக்கில் எழுதிய. பின்னாட்களில் referenceக்காக இங்கே பதிகிறேன். கூடவே நண்பர்களுடைய கருத்துகளையும்)



புதன், 26 மே, 2010

எது அழகு - கருப்பு/சிகப்பு - ஒரு விளம்பர மாயை

சிறிது இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் பதிவிட நேரம் கிடைத்தது. நான் வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயத்தைப்பற்றி இன்று  எழுதலாம் என்று இருக்கிறேன்.

இது விளம்பர யுகம். பொங்கித்தின்னும் அரிசியிலிருந்து போட்டு நடக்கும் செருப்பு வரைக்கும் எல்லா பொருட்களுக்குமே விளம்பரம். தகவல் தொடர்பு ஊடகங்களில் தங்கள் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ற மாதிரி விளம்பரம் செய்கிறார்கள்.குறைந்த நேரத்தில் நம் கவனத்தை நுகர்பொருளின் மீது திருப்ப பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள்.என்னதான் கருத்து சுதந்திரம் இருந்தாலும் சில நிறுவனங்களின் வர்த்தக விளம்பரங்கள் நிச்சயமாக சகிக்க முடியாதவை.

துணி சோப்பு விற்பவர்கள் நமது குடுமபத்தலைவிகளின் புத்திசாலித்தனத்தை குறிவைப்பார்கள்.  உ.ம்        "அறிவாளிகள் எப்போதும் இந்த சோப்பை தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் எப்படி..?" இது போல. இதுவே ஒரு தவறான அணுகுமுறை என்பேன் நான்.தனிப்பட்ட ஒருவரின் அறிவு நிலையை மறைமுகமாக
கேலி செய்யும் தந்திரம்.

ஆண்களுக்கான நுகர் பொருட்களாகிய சோப்பு, சென்ட், பாடி ஸ்ப்ரே ஆகியவையின் விளம்பர யுக்தி இன்னும் அநியாயமானது...இவை பெரும்பாலும் "இந்த சோப்பு/சென்ட் உபயோகித்தால் பெண்கள் உங்கள் பின்னால் அலைவார்கள்/தேடி வருவார்கள்", என்ற நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன.இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.ஆண்களையும், பெண்களையும், அவர்களின் தனி மனித ஒழுக்கத்தையும் சீண்டிப்பார்க்கும் கேவலமான வேலை இது.

இவர்கள் அனைவரையும் விட மோசமானவர்களாகவும் கண்டனத்திற்குரியவர்களாகவும் நான் கருதுவது இந்த சிகப்பழகு கிரீம்கள் விற்பவர்களைத்தான். முதலில் இந்த சிகப்பழகு என்ற வார்த்தையே தவறானது; இவர்களின் பொருளை விற்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு மாயை. உண்மையில் அழகு என்பது தோலின் நிறத்தில், உடல் அமைப்பில் இல்லவே இல்லை.அழகு என்பதன் அடிப்படை கூறுகள் முற்றிலும் வேறுபட்டவை. தனிப்பட்ட ஒரு ஆணின்/பெண்ணின் அழகு என்பது எதிராளியின் பார்வையைப் பொருத்தது. அழகுக்கு அளவுகோல் வைப்பதே முதலில் தவறான ஒன்று.


ஒவ்வொரு தேசத்திலும் வாழும் மக்களின் உருவ அமைப்பு,தோலின் நிறம், உணவுப்பழக்கம் ஆகியவை தட்பவெப்ப நிலைகளுக்கேற்பவும், பருவ நிலை மாற்றங்களைப் பொறுத்துமே அமைந்தன. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் பரிணாம வளர்ச்சியில் மாற்றம்(முன்னேற்றம்) அடைந்து உணவுக்காகவும் நீருக்காகவும் இடம் மாற ஆரம்பித்த பொழுதே நிகழத்துவங்கியது. உ.ம் பூமத்திய ரேகைக்கு அருகில் - சூரியனின் நேரடி வெப்பம் படும் - பகுதிகளில் உள்ளவர்களின் கரு நிற தோல்.வெப்பத்தைத் தாங்க மெலனின் அதிகம் சுரப்பதால். துருவ -பனி பிரதேசங்களில் - சூரிய வெப்பம் குறைவான பகுதிகளில் உள்ளவர்களின் வெளிர் நிறத்தோல் - அதிக வெப்பமில்லாமையால் மெலனின் அதிகம் தேவைப்படாது - ஆதலால் வெளிர் நிறம்.
ட்ராப்பிகல் ரீஜியன் எனப்படும் அதிக குளிரும் - அதிக வெப்பமும் அல்லாத மித வெப்ப பகுதியில் வாழும் (நம் நாட்டைப்போன்ற) மக்களின் கருப்பும் வெளுப்புமல்லாத மாநிறம். (தகவல் உதவி : பேராசிரியை.திவ்யா குருநாதன்.)

ஆதலால் ஒருவர் கருப்பாகவோ / நிறக்குறைவாகவோ பிறப்பது அவர்களின் குற்றமல்ல.அது இயற்கை.இதை மாற்ற அந்த க்ரீமாலும் முடியாது.நாலு வாரம்...ஆறு வாரம் என்பதெல்லாம் அவர்களின் பொருள் விற்கும் தந்திரம்.இவற்றை நம்பி யாரும் காசைக்கரியாக்க வேண்டாம்.அழகு என்பதை நாமாக வரையறுத்துக்கொள்ள வேண்டாம்.இந்த பதிவை நான் எழுதக்காரணமே சென்ற வாரம் தொலைக்காட்சியில் கண்ட ஒரு புது ரியாலிட்டி ஷோ தான். கொஞ்சம் நிறக்குறைவாகவும், பருமனாகவும், கருப்பாக இருக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழகாக மாற்றுகிறேன் என்று கேமரா முன்பு நிற்கவைத்து, " நான் அசிங்கமாக இருக்கிறேன், அழகாக மாற வேண்டும் " என சொல்லவைத்து, அழவைத்து...."நீங்க அதிகம் சாப்பிட்டதுனால தான் இப்படி இருக்கீங்க.அதனால் இனிமே குறைச்சு சாப்பிடுங்க" என அவமானப்படுத்தி... ஸ்ஸ்ஸ்....அப்ப்பா... அவர்கள் செய்த அட்டூழியத்திற்கு அளவே இல்லை.அதில் வந்த எந்த பெண்ணும் என் கண்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லை.அழகாய்த்தான் இருந்தார்கள்.சமூகத்தில் கருப்பு என்றால் அசிங்கம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இவர்களை எதனால் அடித்தால் தகும்...??

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.
உங்கள் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கும்
- சுதர்
Related Posts Plugin for WordPress, Blogger...