அப்பா எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இன்றுடன் முப்பது நாட்கள் கடந்து விட்டன. மரணம் எதிர்பாராமல் வருமென தெரியும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அது நிகழும்போது அதன் தாக்கத்தை கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அரைமணிநேரம் முன்பு என்னைத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசிவிட்டு அடுத்த அரைமணியில் என் கண்முன்னே என் கைகளில், எங்களைப் பிரிந்து செல்வார் என நினைக்கவில்லை.
துக்கம் நெஞ்சயடைப்பது, கால்களின் கீழ் உலகம் நழுவுவது, தோள் மீது அழுத்தும் பாரம், சுற்றிலும் உலகம் இருண்டு போதல் என எல்லா சொற்றொடர்களுக்குமான பொருளை நேரடியாக அனுபவித்து உணர்ந்து கொண்டேன்.
நாங்கள் ஊரை விட்டு வந்த கடந்த பதினான்கு ஆண்டுகளில் அவர் முழுமையாக எங்களுடன் இருந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே. அதுவரையிலும் சொந்த ஊரில் அவருடைய வங்கிப் பணி மட்டுமே அவருக்கு எல்லாமுமாக இருந்தது. வீடு , கடை , நிலபுலன்கள் என அத்தனையையும் இழந்த பின்பு அவர் தேடிக்கொண்ட வேலை அது. 23 ஆண்டுகள் தன்னுடைய அத்தனையையும் தந்த வங்கி தனக்கான நியாயமான பணி நிரந்தரத்தையும் ஊதியத்தையும் தரவில்லை என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது ஒன்றைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவருக்குப் பெரிதாக கவலைகள் எதுவுமில்லை.
நானும் அவரிடம் பெரிதாக எந்த விஷயத்திலும் கண்டிப்புடன் நடந்து கொண்டதேயில்லை, அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்தே இருக்கிறேன். அவருடைய மறைவுக்கு ஒரு வாரம் முன்னதாக அவர் கேட்டுக்கொண்டபடி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கான கோரிக்கை மனுவையும் நானே தட்டச்சு செய்துதந்தேன். மிகத் தீவிரமாக பதிவுத்தபாலில் அனுப்பிவைத்து எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.
திரைப்படங்களைப் பற்றிப் பேசாமல் அப்பாவைப் பற்றிப் பேசவே முடியாது. அப்படியொரு அதீதமான சினிமா விரும்பி .அவருடைய பழைய டைரிகளின் பெரும்பகுதி அவர் பார்த்த திரைப்படங்களால் நிரம்பியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த இழப்புகளுக்கு அவருக்கு மருந்தாக இருந்தவை திரைப்படங்களே. அவன்தான் மனிதன், உயர்ந்த உள்ளம் , தவமாய் தவமிருந்து திரைப்படங்களை எப்போது பார்த்தாலும் நாங்கள் அவரிடம் சொல்வோம்... ப்பா..உங்க கதப்பா...
அவன்தான் மனிதன் திரைப்படத்தில் எல்லாவற்றையும் இழந்த பின் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உணவளிக்கும் பொருட்டு என்ன செய்வதென தவிப்பது, உயர்ந்த உள்ளம் திரைப்படத்தில் பழம் விற்கும் பாட்டியிடம் நீங்க என்ன இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க..எனக்கு ஏமாந்து தான் பழக்கம் என்பது, தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் தீபாவளிக்கு முந்தைய இரவில் பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்க அலைந்து திரிந்து கடன் வாங்கி எப்படியாவது வேண்டியதைச் செய்ய முயல்வதென... இந்தக் காட்சிகள் எப்போதும் அப்பாவை நினைவூட்டுபவையாகவே இருந்திருக்கின்றன. இனிமேலும் அப்படியே இருக்கும். இந்த எல்லா கட்டத்திலும் நாங்கள் அப்பாவை பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் கடந்து வந்து இன்று நாங்கள் தலையெடுத்தபின் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வைக் கடத்த வேண்டிய நேரத்தில் அப்பாவின் இந்த திடீர் மறைவு தான் எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.எப்போதும் பரபரப்பாக அவசரமாகவே இருந்தவர் இப்போது அதே பரபரப்புடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.
நானும் தம்பியும் வெகு சீக்கிரமாக பதின் பருவத்திலேயே எங்களுடைய தோள்களில் எல்லா சுமையையும் ஏற்றிப்பழகிவிட்டோம். We know what he could and couldn't do. And we had no expectations and no complaints. Appa was a man of taste. He had his own preferences in the food he ate, the dress he worn, the music he listened to and the movies he watched.He was also a man who was stuck in his past. எதிலும் எந்த வகையிலும் சமரசமின்றி தனக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிட்டு, வேண்டியதை குடித்து, நண்பர்களுடன் சேர்ந்து நேரம் செலவிட்டு ,கொண்டாட்டமாக வாழ்ந்து அப்படியே தன்னுடைய வாழ்க்கையை கடத்திவிட்டார். அவருடைய அப்பா அவருக்குத் தந்ததை விட எங்களுடைய அப்பா எங்களுக்கு இருபது ஆண்டுகள் அதிகமாகவே தந்திருக்கின்றார்.
மனம் திரும்பத்திரும்ப நிறைய What if? கேள்விகளை அடுக்கியபடி இருக்கிறது. மூன்று மாதம் முந்தைய செக்கப்பில் கூட எதுவும் சிக்கலாக சொல்லவில்லையே... நாம் ஏதும் கவனிக்கத் தவறி விட்டோமோ... அவருடைய உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றில் இன்னும் கண்டிப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ... மீண்டும் இங்கு வேலைக்கு போக வேண்டாம்... நிறைய அலைய வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை...இன்னும் தீவிரமாக தடுத்திருக்க வேண்டுமோ...இப்படியாக, மனதிற்குள் நானே என்னுடன் வாக்குவாதம் செய்து,
எனக்கு நானே சமாதானம் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக இந்தச்சுழலிருந்து மீண்டுவர முயன்று கொண்டிருக்கிறேன்.
எல்லாவற்றையும் தாண்டி உள்ளுக்குள் ஒரு கோபம் கனன்றபடியே இருக்கிறது. இன்னார் மீது... இதனால் என... எந்த காரண காரியமும் இன்றி ஒரு பொருளற்ற கோபம். Imploding anger...! வெளிப்படுத்தாத, வெளிப்படுத்த விரும்பாத இந்தக் கோபம் என்னை ஒரு கசப்பான மனிதனாக மாற்றிவிடுமோ என அச்சமாக இருக்கிறது. சென்ற ஆண்டு என் நண்பன் ராஜசேகர் மறைந்தான். அதிலிருந்தே இன்னும் முழுமையாக மீண்டு வர முடியாத நிலையில் அப்பாவின் மறைவு மற்றுமொரு பேரிடி. வாழ்வின் மீதான என் மதிப்பீடுகள் மொத்தமாக கலைத்துப் போடப்பட்டதைப் போல் உணர்கிறேன். எது முக்கியம்? எது நிரந்தரம்? எந்த உறவு நிலைக்கும்? என எல்லாவற்றையும் கேள்வி கேட்டபடி இருக்கிறேன். எதையாவது பற்றிக்கொண்டு அந்த பிடிப்பைத் தளரவிடாமல் வாழ்வை நகர்த்திவிட முயல்கிறேன்.
இந்த கடுமையான சூழலில் என்னுடன் நின்ற, தொடர்ந்து நலம் விசாரித்தபடியும் ஆறுதல் சொல்லியபடியும் இருக்கிற என்னுடைய நண்பர்களுக்கும் சுற்றத்தாருக்கும் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன். Your presence and your words means so much to all of us, for when we are at loss of words and loss of hope, we hold onto yours and gathering ourselves back up. 




அவர் எங்களுக்கு அறிமுகம் செய்த பாடல்கள், திரைப்படங்கள், அவர் சொன்ன கதைகள், அவருடைய கதைகள், அவருடைய நண்பர்கள், அவருடைய உலகம் என எல்லாவற்றையும் ஏதோ ஓர் வகையில் எழுதிவிட வேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். காலம் அனுமதித்தால்... பார்க்கலாம்
Onwards and upwards...! 





