நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
சரவணன் சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரவணன் சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஆகஸ்ட், 2022

லகுடு - அதிர்ஷ்டத்தின் சூதாட்டம்

 


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

குறள் 932 - அதிகாரம்: சூது

பொருள்:    ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

 நாம் தற்செயல் என்றோ அதிர்ஷ்ட்டம் என்றோ நினைக்கிற விஷயங்கள் உண்மையில்  தற்செயலானவை தானா ? நிகழ்தகவுகளைக் கொண்டு எண்களோடு விளையாடி பெரும்பாலான களங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான எல்லா வாய்ப்புகளையும் கணித்து விட முடிந்தாலும், உண்மையில் நிகழக்கூடியவை நமது தனிப்பட்ட அனுமானங்கள் எல்லாவற்றையும் மிஞ்சியவையாக இருந்தால் என்ன செய்வது ? காரண காரியங்களை ஆராய்ந்து கேள்விகளுடன் துறத்தி , சூட்சுமங்களை அறிந்துகொண்டு எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துவிட முடியுமா ? ஒரு தனிமனிதன் செய்யக் கூடியவையா இவையெல்லாம் ? 

 கால்பதித்து நடப்பதற்கு சரியான பாதையோ, கையால் பற்றிக்கொண்டு மேலெறி விட கொடிகளோ எதுவுமற்ற பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு மலையுச்சியையும் தாண்டி பறக்கத் துடிக்கிறவனின் கதை தான் லகுடு. ’லகுடு’ என்பது ஒரு வகைக் கழுகின் பெயர்; கிட்டத்தட்ட அதற்கு இரையாகிவிடக் கூடிய ஒரு சிற்றுயிரைப் போன்றவன், வேட்டைப் பறவையாக உணவுச் சங்கிலியின் மேலேயிருக்கிற லகுடாக தன்னை வறித்துக்கொள்கிறான். அவன் மனதளவில் எப்போதுமே உயரங்களை விரும்புகிற உயரப்பறத்தலை விரும்புகிற ஒரு வேட்டைப் பறவையாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்ளுகிறான்.  

காலில் கட்டியிருக்கிற சிறுநூலை வெட்டி அறுத்துவிட்டு  எப்போது பறப்பது ? எது உயரமென எப்போது தெரியும்? எனக்குக் கற்றுக் கொடுக்க ஆளில்லையா ? 

’லகுடு’- சரவணன் சந்திரன்

 சூதின் வேறொரு பெரு வடிவமான லாட்டரிச்சீட்டுகளின் உலகம் தான் கதைக்களம், அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணியாக, தெருத்தெருவாய் லாட்டரிச் சீட்டு விற்கிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டு ஏதேனும் ஒரு இழையைப் பிடித்து மேலேறிவிடத் துடிக்கிறவன் லகுடு. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் செய்கிற சில்லறைத் தொழிலில் நியாயமும் நேர்மையும் வேண்டுமென நினைக்கிறவர் அப்பா. அதிர்ஷ்டத்தை தற்செயல் என எண்ணிக்கொண்டு அதை எதிர்நோக்கி காத்திருக்கிற இடத்தில் இருந்து தான் நினைக்கிற நேரத்தில்  விரும்புகிற ஆளுக்கு அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரக் கூடிய இடத்திற்கு நகர்கிறான் கதைசொல்லி. ஒவ்வொரு கட்டத்திலும் அந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு யாராவது ஒருவரின் கைபிடித்து மேலேறிவிடத் துடித்தவன் கடைசியில் என்னவானான் என்பது மீதிக்கதை 

உள்ளூரில் துணை நிற்கிற கதிர்வேலு, அடுத்தகட்டத்துக்கு இழுக்கிற பாலக்காடு ஜோசப் என்கிற செல்வம், லகுடை நம்பி தொழிலில் இறங்கிய அந்தப் பெயரில்லாத முதலீட்டாளர், காசு பணம் பார்த்தாலும் நிதர்சனம் பேசுகிற நண்பன் சோலைச்சாமி, வேளொரு தளத்தில் கூட நிற்கிற நண்பன் மாணிக்கவாசகம், காலைத்தாங்கி நடந்து தேய்ந்தாலும் நேர்மை பேசும் அப்பா,  அம்மா விட்டுப் போன மாதா சிலைய, கடைசியாக நிலாப் பெண் அர்ச்சனா என அத்தனை பாத்திரங்களும் மனதில் நிற்கின்றார்கள். 

உண்மையில் லாட்டரிச்சீட்டுகள் பற்றியும் அது எத்தனை பெரிய வலைப்பின்னல், எத்தனை கைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன, அதிர்ஷ்டம் யாரால் யாருக்காக நிர்ணயிக்கப்படுகிறது என்கிற  விவரங்களையும் படிக்கையில் வியப்பும் ஆயாசமுமே ஒருசேர மிஞ்சுகிறது. சரவணன்சந்திரன் அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியினால் நம்மை இந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறார்.ஒரு காலத்தில் அதிர்ஷ்டத்தின் பெயரால் எத்தனையோ உழைக்கும் மக்கள் தங்களுடைய் வருமானத்தையும் வாழ்வாதரத்தையும் லாட்டரிச்சீட்டுகளில் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில், இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமாவது லாட்டரிச்சீட்டுகளை அரசு முழுமையாக தடை செய்திருப்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

 ’லகுடு’ நாவலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமான விஷயம் எதுவென்றால், அடிமட்டத்தில் இருக்கிற ஒருவன் கடைத்தேற்றம் பெறுவான் என்கிற முகக்குறி தெரிந்தால் சுற்றியிருப்பவர்கள அவனை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவன் பாதை மாறி போவது தெரிந்தால் ‘தம்பி இது தப்புடா, ஒதுங்கிப்போ’ என எச்சரிப்பார்கள். மனம் நிறைய நம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு வெறும் கையோடு நிற்கிறவனுக்கு தைரியம் சொல்லி சரியான நேரத்தில் கைதூக்கி விடாவிட்டாலும் வழியாவது காட்டிவிடுவார்கள். இந்த நாவல் முழுக்கவும் அந்த மாதிரி நிகழ்வுகளும் மனிதர்களும் உண்டு. என்னுடைய வாழ்விலும் வெவ்வேறு தருணங்களில் அப்படியானவர்களைக் கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரியான தருணத்தில் படிக்க வேண்டுமென இரண்டாண்டுகளாய் காத்திருந்துவிட்டு, ஒரு வழியாக 7800  அடி உயர மலைமேல்  தேயிலைத்தோட்டத்தின் குளிர் சாரலில் அமர்ந்து கொண்டு, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படித்து முடிக்கையில் ஒரு லகுடாக பறந்து கொண்டிருந்தேன். இதுவரை அவருடைய ‘அஜ்வா’ நாவலை எனக்கானதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி அந்த இடம் ‘லகுடு’க்கு தான். சுபிட்ச முருகனிலும், அத்தாரோவிலும் எனக்கு பிடிபடாதது லகுடுவில் பிடிபட்டதாக உணர்கிறேன்.

வாழ்த்துகளும் நன்றியும் அண்ணே..! <3

லகுடு - சரவணன் சந்திரன்

கிழக்கு பதிப்பகம் | விலை ரூ. 200 | 183 பக்கங்கள்

வியாழன், 24 டிசம்பர், 2020

அத்தாரோ - சரவணன் சந்திரன்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள ‘Christ the redeemer' சிலையை நிச்சயமாக நீங்கள் ஏதோவொரு செய்தித்தாளிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ பார்த்திருக்கலாம். கிட்டத்தட்ட அந்த சிலையின் அமைந்திருக்கிற மலை கிராமத்தின் அதே மாதிரியான ஒரு புவியியல் அமைப்பைக் கொண்ட ‘அத்தாரோ’ எனும் மலைத் தீவு தான் கதைக்களம். மேலே மலையும் காடுமாகவும், கீழே அடிவாரத்தைச் சுற்றிலும் கடலுமாய் இருக்கிற இடம். 

ஏடன் என்னும் மூப்பனைப் பற்றிய அறிமுகம் நமக்குச் சொல்லப்படுகிறது. அந்த காடும் மலையும் கடலும் அவனுக்கு எவ்வளவு பழக்கப்பட்டவை என அறிந்து கொள்கிறோம்.சரவணன் சந்திரனின் பிற கதைகளைப்போலவே கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லி வேறெங்கோ ஒரு தூர தேசத்திலிருந்து அத்தாரோ மலையை வந்தடைந்த விதத்தை சொல்கிறான். அதன்பின் அந்த காட்டுக்கு அவனை ஏடன் பழக்கப்படுத்துவதும், அவன் என்னவாக மாறி எதைக் கற்றுக் கொண்டான் என்பதையுமே மீதிக்கதை எனக் கொள்ளலாம். 

”காடுகளுக்கு பகலும் இரவும் ஒன்றுதான். காடு எப்போதும் தனித்தே இருக்கிறது. அதுதான் காட்டின் இயல்பும்.  பகலும் இரவும்தான் மாறி மாரி வருகின்றன.ஒவ்வொன்றின் அடிப்படையையும் புரிந்து கொண்டால், அச்சத்திற்கு இடமேயில்லை”

”எல்லைகளை மட்டும் மறுபடி நினைவூட்டுகிறேன்.இதைச் சத்திய வாக்காகக் கொள். முதலில் உன் எல்லை எது என உணர்ந்து கொள்”

 ஏடன் காடுகளைப் பற்றியும் எல்லைகளைப் பற்றியும் இப்படித்தான் முதலில் சொல்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறான். பின்பு கதைசொல்லியிடம் விலங்குகளைப் பற்றிப் பேசிவிட்டு, “நீ வேட்டை விலங்கா ? சார்பு விலங்கா ?” எனக் கேட்குமிடத்தில் கிட்டத்தட்ட நாம் இதுதான் கதையின் மையமென முடிவு செய்துகொள்ளலாம். 

ஆனால் நிறைய கிளைக்கதைகளையும் வர்ணனைகளையும் என்னால் பொருத்திக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இது கதைசொல்லியின் transformation பற்றிப் பேசும் நாவலா ? அல்லது அவனுடைய survival பற்றிப் பேசும் நாவலா ? அல்லது காடு-மலை-கடல் கொண்ட ஒரு தீவின் கதையா ? இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஏடனும் கதைசொல்லியும் மனிதர்களா அல்லது இரு புலிகளின் கதைகளைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் கூட எழுந்தது. மேலும் முள்ளங்கிக்காரிகளைப் பற்றிய வர்ணனைகளும், அந்தக் காட்டில் உலவித் திரியும் புலியும், நாய் போல மாற சாபம் வாங்கிய மூதாட்டியின் மகன்களும் எதற்காகவென  இப்போதும் புரியவில்லை.

உண்மையில் ஒரு நூற்றி இருபது பக்க நாவலை (நாற்பது வெற்றுப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு) படிக்க மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சரவணனின் பிற படைப்புக்களைப் போல ஒரு தடையில்லாத கதையோட்டமோ இலகுவான மொழிநடையோ இல்லை என்பது முதல் காரணம். இங்கு அத்தாரோ என்னும் நாவலில் மையம் நிலையான ஒன்றாக இல்லாமல் பல கதைகளையும் தொட்டுச் செல்வதாலும், அனைத்துமே ஒரு மாதிரியான abstract ஆக சொல்லப்பட்டிருப்பதாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்து முடித்தேன்.

இறுதியாக...

”அறிந்து  திகட்டிப் போன ருசியை விட்டு, அறியாத ருசியை நோக்கிப் போ, இந்த மலை பல ருசிகளைக் காட்டிக் கண்கட்டி வித்தை காட்டும். அதில் எது சிறந்தது எனக் கணக்கிடுவதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும்”

ஏடனின் இந்த வாக்கியத்தையே எனக்கானதாகவும் எடுத்துக்கொள்கிறேன். இது நான் அறியாத ருசி. எனக்குப் புரியாத களம். சில காலம் கழித்து இந்த நாவல் எனக்கு முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரியலாம். மறுவாசிப்பின் போது வேறொரு கதையை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கும் கூட அப்படியே ஆகலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இணைப்பு இங்கே

ஞாயிறு, 3 மார்ச், 2019

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

 
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.

எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்ற வரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம்.  ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு. 
- ஜெயமோகன் (சுபிட்ச முருகன் நாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து)
சரவணன் சந்திரன் எழுதத் தொடங்கி முதல் புனைவு வெளிவந்த போது, நிறைய பேர் அவருடைய எழுத்தில் சாருவுடைய தாக்கம் நிறையவே இருப்பதாகச் சொல்வார்கள். அவரிடமே கேட்கும்போதும், ”அது அந்த ஃபார்ம் தான் தம்பி. ஆனா உள்ளுக்குள்ள மொத்தமா வேற தான்.“ என்று சொல்வார். சாருவும் சரவணன் சந்திரனின் படைப்புகளை அறிமுகப்படுத்தியும் விதந்தோதியும் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த நாவலுக்கு ஜெயமோகனின் முன்னுரை எனும்போதே நான் யோசித்தேன், இவருடையது முற்றிலும் வேறுபட்ட தளமாயிற்றே என. சுபிட்ச முருகன் வாசித்து முடிக்கையில் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தது.

ச.ச வின் புனைவுகளில் ஒரு பொதுத்தன்மை இருக்கும் .தன்மையில், பெரும்பாலும் கதைசொல்லியின் பார்வையிலேயே நிகழ்கிற கதையில் அவர்களுடைய பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. அச்சம், வெறுப்பு, வஞ்சம், ஆசை, காமம், சாபம், போதை என ஏதோவொரு உணர்வால் சூழப்பட்டு மனச்சுழலில் தன்னிலை மறந்து வீழ்ந்து கிடப்பார்கள். தூரத்து ஒளிக்கீற்றாய் ஒன்றைப் பற்றிக் கொண்டு தேடல், பயணம் , மீட்சி என மீண்டு வருவார்கள். சுபிட்ச முருகனும் கிட்டத்தட்ட இந்த அமைப்போடு ஒத்துப் போகிற படைப்புதான். ஆனாலும், விவரணையிலும், ஜெயமோகன் முன்னுரையில் சொல்லியிருக்கிற  ’அன்றாடமின்மை’யையும் (ஆங்கில நிகர் சொல் unusualness என வைத்துக்கொள்வோம்),  கையாண்டிருக்கிற அடர்த்தியான மொழிபுமே (narrative) இந்த படைப்பினை தனித்து அடையாளப் படுத்துகின்றன.

அந்த மலையடிவார மண்ணின் வெக்கையை அவன் உணரும்போது, அவனுடைய மனப்பிறழ்வின் போதும், கால்கள் செயலிழந்து உடலை இழுத்துக்கொண்டு அவன் தரையில் தேயும்போதும் , இறுதியாய் ‘சுபிட்ச முருகனை’ கைகளிலேந்தி பெருமழையில் நனைகிறபோதும், தீயில் கருகிய மரத்தில் மஞ்சள் முகம் செதுக்கிய மரப்பாச்சியாய் இளங்கா அத்தையின் மஞ்சள் முகம் அவனைத் துரத்தும்போதும்,  சத்தியமாக நீங்களும் வெக்கையில் வியர்த்து, உடல் சோர்ந்து, பயந்து, மழையில் நனைந்து ஆற்றுப்படுத்திக் கொள்ளக்கூடும்.

எஸ்.ரா எப்போதும் சொல்கிற விஷயமுண்டு.”எத்தனை பெரிய காவியமாக எழுதப்பட்டிருந்தாலும், நம்மாட்களுக்கு அதனுடைய நாலு வரி கதைச்சுருக்கம் வேண்டும்” என. இதுதானே கதை...இதுதான பிரச்சனை...இதுதானே முடிவு..என அத்தனையையும் ஒற்றைப்படையாக அணுக முயல்வது . ஊழ்வினையாலும் பெண் சாபத்தாலும், அவனுக்கு  காமம் சார்ந்து ஏற்படுகிற உடல் தடைக்கும் பிணிக்கும் , பழனி மலையடிவாரத்தில் ஆன்மிகத்தேடலோடும் முருகனின் அருளோடும் தீர்வு கிட்டி அனைத்தும் நீங்கிவிடுகிறதென... ஒற்றைப்படையாய் கதைச்சுருக்கம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எழுத்து குறித்த விவாதங்களை எப்போதுமே கூர்ந்து கவனிப்பதுண்டு. இன்னது தான் எழுத்து; இப்படித்தான் எழுதப்பட வேண்டும்; இவ்வாறு தொடங்கி இங்கே முடிக்கவேண்டுமென ஏகப்பட்ட வரையறைகள். எல்லாமுமே நமக்கு நாமே வகுத்துக் கொண்டவை. ”நான் ஒரு கதையை மற்றவர்களுக்கு சொல்லும் பொருட்டே எழுத விழைகிறேன்.அது இன்னதென புரியவைப்பதே எனது நோக்கம்” என எழுதுவது ஒரு வகை.

“நான் உணர்ந்த கதையை...அல்லது ஒரு அனுபவத்தை ஏதோவொரு வகையில் வெளிக்கொணர்ந்தேயாக வேண்டும். நான் எழுத முடிவெடுத்து எழுத்துக்களில் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எதையும் யாருக்காகவும் சொல்ல விழையாமல், கதைசொல்லலுக்கான சராசரி சமரசங்கள் ஏதுமில்லாமல் ,நானுணர்ந்ததை கதையினூடாகவே அதே அடர்த்தியுடன் எழுதியிருக்கிறேன். இதையே வேறு யாரும் உணர்ந்தால் அதுவே இந்த மனப்பதிவின் வெற்றி” என்ற கருதுகோளோடு எழுதுவது இன்னொரு வகை.

இதில் சரவணன் சந்திரனின் ‘சுபிட்ச முருகன்’ இரண்டாவது வகை. இதுவரை நீங்கள் அவருடைய புனைவுகளையோ கட்டுரைத் தொகுப்புகளையோ படித்திருந்து  இப்போது ’சுபிட்சமுருகன்’ வாசிப்பீர்களேயானால், அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறான ஒரு படைப்பாளியாக ’சுபிட்சமுருகன்’ அவரை முன்னிறுத்தக்கூடும்.

மேலும் சுபிட்ச முருகன் குறித்து இரண்டு வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளின் இணைப்புகள் கீழே.

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை? - டி. தருமராஜ்

மெய்யறிதலின் அபூர்வத் தருணங்கள்! - லஷ்மி சரவணகுமார்

சுபிட்ச முருகன் - புத்தகம் வாங்க:

https://www.commonfolks.in/books/d/subitcha-murugan

திங்கள், 26 டிசம்பர், 2016

அஜ்வா - சரவணன் சந்திரன் - மீட்பனின் மீட்சி


 'அஜ்வா’ என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது.  ஏழு அஜ்வா பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.  

அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு பழமொழி உண்டு “ தான் செத்து மீன் பிடிக்கக்கூடாதுடா” என்று. மீன் பிடிப்பது எதற்கு ? பசியாறி உயிர்வாழ்வதற்கு. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரைவிட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகுமில்லையா. ’அஜ்வா’ முழுக்க இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தபடியே இருந்தது.

”மூன்று தலைமுறை வாழ்ந்தோரும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டோரும் இல்லை” என ஊர்ப்பக்கம் சொல்வார்கள். தலைமுறைகளின் வீழ்ச்சியையும் இடிந்து தரைமட்டமான சாம்ராஜ்யங்களையும் என் கண்முன்னே எங்கள் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும். இதன் பின் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்று ஏதோவொரு அர்த்தமற்ற வேண்டுதலை, நேர்த்திக்கடனை செய்துவிடும் பொருட்டு அதை நோக்கியே தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடுகிற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அது நமக்குத்தான் அர்த்தமற்ற செயல்; அவர்களுக்கல்ல. There are people who hold onto something which doesn't mean absolutely anything to anybody other than themselves.

எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன் , அதைப்பற்றி கண்கள்விரிய  பேசுவதைக் கேட்டால் ஆகநிச்சயமாய் இதை நாம் ருசித்துப் பார்த்தால் என்னவென்று உங்களுக்கே தோன்றக்கூடும். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவோ... இவை  அத்தனைக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். அப்படியொருவன் தான் ‘அஜ்வா’வின் கதைசொல்லி.அவனுடைய பெயரை அவன் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான். தன் வாழ்க்கையின் மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர்களின் கதைகளையும் சொல்கிறான். தன் ஆழ்மனதின் அச்சங்களைப் பற்றிப் பேசுகிறான். 

இந்த நாவலின் கதைசொல்லி இருக்கிறானில்லையா ? அவனும் மேற்குறிப்பிட்ட ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல் தான். ஒரு வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்து மறைந்த தன் கணவனைப் போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாதென பார்த்துப் பார்த்து வளர்க்கிறாள் அவன் தாய். கையிலிருக்கிற சொத்தை அபகரிக்கும் பொருட்டு அடித்துத் துன்புறுத்துகிற தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.  வெவ்வேறு வகை போதைப் பொருட்களைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டே காஞ்சிரம்பள்ளிக்கும், பழனிக்கும், திருப்பதிக்கும் இன்னும் ஏதேதோ இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறான். 

அந்த உலகத்தில் தவறி வந்து சிக்கிக்கொள்கிறவர்களை பேசி மீட்கிறான். ஆனாலும் தான் மட்டும் தெரிந்தே அந்தச் சுழலுக்குள்ளிருந்தபடி உழல்கிறான். இவன் அம்மா , கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் துத்தநாகம் கலந்த பசையைத் தின்று விடுகிற பசுபதி அத்தை, தனக்குப் பிடிக்காத ’முதுகில் அடிக்கிற’ உரிமையை இவன் வழங்கியிருக்கிற ஒரே நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, ஜார்ஜ் ஆண்டனியின் அம்மா, கடைசியாய்  டெய்சி...!! வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.

”சரி என்னதான் கதை ?” என்று கேட்பீர்களேயானால் அதற்கான பதிலைச் சுருக்கமாய் சொல்லிவிட முடியாது. இந்த நாவலுக்காக வெளியிடப்பட்ட ஒரு நிமிடக் காணொளியின் ஒரு நொடி ஃப்ரேமில் சிலுவை தாங்கிய ஏசுவின் படம் வந்து போகும். ”இது தலைமுறைகளின் கதை, சாபங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுபட நினைக்கிறவர்களின் கதை” என்று பின்னணிக்குரல் ஒலிக்கும். இந்தக் கதையை நம்மிடம் சொல்கிற அவன் தான், பிறரின் பாவங்களுக்காக தான் சிலுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகின்றான். அந்த மீட்பனின் மீட்சிதான் ‘அஜ்வா’வின் கதை. 

நீங்களும், நானும், நம்மைச் சுற்றியிருக்கிற உயிருள்ள எல்லாமும், தன்னைத்தானே அழித்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிற செல்களாலானவை தானே. ஒரு முடிவில்தான் மற்றுமொரு தொடக்கம்;அழிபவையெல்லாம் மீண்டும் பிறக்கவும் துளிர்க்கவும் செய்யும் என்கிற நம்பிக்கைக் கீற்று தான் ‘அஜ்வா’.

நிச்சயமாகப் படிக்கலாம்.!! 

வாழ்த்துகள் சரவணன் அண்ணா..!! 

’அஜ்வா’
உயிமை பதிப்பக வெளியீடு
விலை: ரூ.130
ISBN: 978-93-85104688

ஆன்லைனில் வாங்க: இங்கு சொடுக்கவும்

’அஜ்வா’ நாவலின் டீசர் : இங்கு
Related Posts Plugin for WordPress, Blogger...