நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
பார்ட்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ட்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2019

கேள்விகளின் தொடர்சுழல் - Qarrtsiluni


பேரன்பின் பார்ட்னருக்கு,

கடிதங்கள் எழுதுவதற்கான காரணங்கள்  அற்றுப்போய்விடவில்லை எனினும், ஓய்ந்தமர்ந்து எழுத நேரமிருந்தும், ஏனோ மனம் வரவில்லை. இந்தப் புதிய பாதையில் கொஞ்சமாய்  நடந்து பழகத் துவங்கியிருக்கின்றேன் பார்ட்னர். ஆங்காங்கே சிராய்ப்புகளும் சிறு கீறல்களும் இல்லாமலில்லை. விழுந்து, எழுந்து, நிதானித்து, பின் தொடர்ந்து நடக்கிற செயற்சுழல் ஓரளவு பழகி, புரிந்து, தொடர்கிறது. பெரிதாய் இளைப்பாறல்கள் ஏதுமில்லை; தேடும் திசையும் தெரிந்தேனில்லை. வழக்கமாய் கைதரும் வாசிப்பும் , யாருக்காகவேனும் பாட்டுப் பாட வாய்க்கிற இரவுகளும், சேர்த்து யோசிக்க இன்னொரு உயிருமாய் நாட்கள் நகர்த்துகின்றேன்.

எந்தன் பழைய கடிதங்களை, அவ்வப்போது வாசிக்க நேர்கையில் முற்றிலும் வேறொருவனாக என்னை நானே கற்பனை செய்து கொள்கின்றேன் பார்ட்னர். நித்ய பயணியாயும், நாடோடியாயும், வனாந்திரங்களில் உலவித்திரிகிறவனாயும், தனிமையின் காதலனாயும்,  வெறுமையின் கவிஞனாயும் என்னை நானே உருவகித்துத் திரிந்த, அந்த கற்பிதங்களின் தொகுப்புருவானவனை எங்கே எனத் தேடிக் கொண்டிருக்கிறேன் பார்ட்னர். வலிந்து வருந்தி உருவாக்கி, வலிந்து வருந்தித் தொலைத்த அந்த உருவின் இன்மை உணர்கின்றேன் பார்ட்னர்.

இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்த கடலை கண்னீராக நான் வெளியேற்ற முடியும்! என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது எப்படி நான் அழாமலிருக்க முடியும்!- ஜெ பிரான்சிஸ் கிருபா ,கன்னி

இப்போதைய என் இரவுகள் அத்துனை நீளமில்லை பார்ட்னர். மாதக்கணக்கில் வாராதிருக்கிற மழையும் , வான் நீங்கி வாட்டித் தீய்த்துக் கொண்டிருக்கிற காலமிது. சாலைகளின் தகிப்பும், காற்றின் அனலும், வியர்வை நெடியும் ஒன்றுகூடி தோள்மீதமர்ந்து சுமை சேர்க்கின்றது பார்ட்னர். நாள்தோரும் உலகில் நிகழ்கிற அத்தனை மரணங்களுக்காவும் உள்ளூர வலிய துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். எல்லா மரணங்களுக்காகவும் கோபப்பட்டு, எல்லா மரணங்களுக்காகவும் வருந்தி, எல்லா மரணங்களுக்காகவும் கண்ணீர் சிந்தி , பின் என்னை நானே மீளத் தேற்றிக் கொள்ளுகிறேன். மனம் துயருறும் பொருட்டான காரணங்கள் ஏதுமில்லாததே பெரும் அழுத்தமும் அச்சமுமாய்க் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர்.

குளிர் தனிமையென்றால் கோடை பிரிவல்லவா ? பின்பு, மழையே கூடல்...! காலமும் வார்த்தைகளும் பெரும் பாலைவனத்தின் மணல் புயல் பார்ட்னர். சுட்டுப் பொசுக்கும் புதைமணலிலிருந்து மீட்டெடுத்துக் கைதூக்க தோதாய் ஒரு கவிதையோ, பாடலோ, இசைத் துணுக்கோ எக்கனமும்  தோன்றிவிடக்கூடும். நெடிந்து நீள்கிற சிறகுகளையும் பிழைத்தலின் பொருட்டு முடக்கி கூடடைக்க வேண்டியிருக்கின்றது. வானக் கூரை இடிந்து விழுந்தாலென்ன பார்ட்னர். நான் பறக்கா வானமும், நான் ஓட்டா சாலைகளும் யார் பொருட்டு இருக்கின்றன பார்ட்னர்

இதுவரையான என் வாழ்வின் எல்லா முடிவுகளும் எல்லா தெரிவுகளும் கேள்விகளுக்கு உட்படுகின்றன. நானே கேட்டுக் களைக்கிறேன். எது சரி எது தவறென திண்ணமாய் முடிவுசெய்யமுடியாத வெளியொன்றின் ஒற்றைப் பேரரசனாய் முடிசூட்டிக்கொள்ளுகின்றேன். நான் தவறவிட்ட மனங்களுக்காயும் என்னைத் தவறவிட்ட மனங்களுக்காயும் அன்றாடம் சில நொடிகள் மெளனமாய் இரங்கல் தெரிவிக்க வேண்டியதாயிருக்கின்றது. உலகம் முழுக்கவே கூட்டத்தில் தனித்துவிடப்பட்டு, துயருறும் மனங்களுக்கான பொதுப்படை பண்புநலன்களையும், ஆற்றுப்படுத்தும் வழிகளையும் யாரேனும் ஆராய்ந்து சொல்வார்களாயின் நான் அவர்தம் நம்பிக்கையாளனாவேன் பார்ட்னர்.

மகிழ்ச்சிக்கும்மகிழ்ச்சி என நான் நம்புவதற்கும் இடையே ஆயிரம் மைல்கள் இருக்கின்றனஇந்த நகரத்தில் என்னைப் போல் எங்குமிருக்க முடியாமல்அலைந்துழல்பவர்களில் நான் எத்தனையாவது ஆள்?-மனுஷ்ய புத்திரன்
அல்லால், தனிமையின்பாற்பட்ட எவனொருவனும் எவளொருத்தியும் மற்றேனைய மனங்களோடு தங்களைப் பொருத்திக் கொள்வார்களாயின்; இந்த உயிர்க்கூட்டங்களில் கலந்துவிட முயல்வார்களாயின்; இப்படி ஊசலாடி அலைக்கழிய வேண்டுமென்பதே உலக முறைமையோ ?அல்லது தம்மை எங்கே பொருத்திக் கொள்ளவேண்டுமென யோசித்து யோசித்தே சோர்ந்தயர்வதால் ஏற்படும் அடையாளச் சிக்கலோ ? Existential Crisis என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா பார்ட்னர் ? இருத்தலியலின் நெருக்கடி...! இங்கே பிழைத்துக் கிடத்தலும் அடையாளங்களைத் தேடிக் கண்டடைதலுமே போராட்டம் பார்ட்னர். எல்லாவற்றையும் தாண்டியும் தானே இங்கு எல்லாமுமே ? சில்வியா ப்ளாத் சொன்னதைப் போல ,' I am a victim of introspection'. தொடர்கேள்விகள் ஒரு சுழலும் முடிவிலி பார்ட்னர். அத்தனை எளிதாய் ஒருவனால் விடை தேடி விட முடியுமா என்ன ?

மனித மனங்களை நிரந்தரமாய் நம்பப்போவதில்லையென தீர்மானித்தேனாயின் இன்னமும் பிழைத்துக்கிடக்க வாய்ப்பு உண்டு. நட்புக்கும், அன்புக்கும், காதலுக்கும், குடும்பத்துக்கும், உறவுக்கும், பிரிவுக்கும், எதற்குமே தனித்தனியே இடமொதுக்காதிருந்து, மொத்தமாய் சாலையைக் கடக்கிற மந்தையாடுகளெனக் கொண்டால், நான் மேய்ப்பனாய் இருப்பதைக் காட்டிலும் சாலையாய் இருப்பதையே அதிகம் விரும்புகிறேன் பார்ட்னர். பொறுப்புத் துறப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் வேலையில்லை. உடைந்த எதையும் ஒட்டவைக்க பெரிதாய் முயற்சி செய்வதில்லை; யாருடைய நேரத்தையும் கோருவதில்லை; எழுதுவதை வாசிக்கச் சொல்லி கேட்டேனில்லை; ஆனாலும் எழுதுவதையும், படிப்பதையும், கேட்பவர்களுக்காகவும் பிடித்தவர்களுக்காகவும் பாடுவதையும்,  நிறுத்தவில்லை. பாதை நீள நீள, என் பயணம் தொடர்கின்றது பார்ட்னர்.

இதோ இந்தக் கடிதத்தின் கடைசிப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கையில் இத்தனை நாட்களாய்க் காத்திருந்த மழை, தயங்கித் தயங்கி பெய்யத் தொடங்கின்றது. எல்லா துவக்கங்களையும் ஒரு பெருமழை உன்னதமாக்கி விடுகிறது இல்லையா ? எல்லா உயிர்களின் தனிமையையும் வெறுமையையும் மொத்தமாய் இட்டு நிரப்பிவிட முடிந்தவளல்லவா மழை..!!


இப்படிக்கு,
மழைதரும் நம்பிக்கையோடும்,
விடையில்லாக் கேள்விகளோடும்,
நான்..!






வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தேடலின் முடிவு அல்லது அடைதலின் தொடக்கம் - Ineffable Epiphany

Caption: https://minimograph.files.wordpress.com/2013/10/mg_roach1.jpg
பேரன்பின் பார்ட்னருக்கு,

ஓவ்வொருமுறை உனக்கு கடிதமெழுதும் போதும் ஒரு காரணத்தை யோசிப்பது பெரும் அயற்சியைத் தருகிறது பார்ட்னர். இப்போதும் அன்றி இனியெப்போதும் உனக்கு கடிதமெழுத நேர்ந்தால், ஒரு போதும் அதற்கான காரணம் சொல்லப்போவதில்லை நான்.

ஆங்கிலத்தில் 'Hopeless Romantic' என்றொரு சொற்றொடர் உண்டு. பகல் கனவு காண்பவர்களாகவும், எப்போதும் காதல் பற்றிய நினைப்பிலேயே மூழ்கியிருப்பவர்களாகவும், கனவுலாவிகளாகவும், கவிஞர்களாகவும் திரிகிறவர்களை அப்படிச் சொல்வார்களாம் . என்னைப் பற்றிக் கேட்போரிடத்தில் நானும் இப்படிச் சொல்லிக்கொள்ளலாமோ என யோசித்திருக்கிறேன். காதலும், தனிமையும், வலியும் அன்றி கவிதைகள் ஏது பார்ட்னர் ?

அவ்வப்போது ஏதேனும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு அன்பால் நிறைந்துகிடக்கிற மனத்தினின்று ஒரு போதும் துயரம் தோய்ந்த வார்த்தைகள் வந்து விழுவதில்லை பார்ட்னர்.  அத்தனையும் வடிந்தபின்னான தனிமைசூழ் இரவுகள் தாம் ஆகக் கொடுமையானவை. காதலற்ற வெற்றிடத்தில் ஆழ்மனத்திலிருந்து வார்த்தைகள் தோண்டியெடுக்கப்படுகிற பின்னிரவுகள். வார்த்தைகளின் பாரத்தில் சிக்கி உறக்கமிழந்து மூச்சு திணறத் திணற மெல்ல மெல்லக் கடக்கிற பின்னிரவுகள். கொஞ்ச காலமாய் இந்த வெற்றிடத்தை அவ்வப்போது  ரூமியின் கவிதை கொண்டு இட்டுநிரப்பிக்கொள்ளுகிறேன் பார்ட்னர்.

ஓர் தனிமைசூழ் இரவில் பெய்கிற பெருமழை, ஒன்றுபோல அற்புதமானதாகவும் அதீதமான வலிதரக்கூடியதாகவும் அமைந்துவிடுகின்றது பார்ட்னர்.அப்படியான சூறைக்காற்றோடு பெருமழை பெய்த ஒரு பின்னிரவில் ரூமியின் கவிதைப் புத்தகத்தைக் கையிலேந்தியபடி வீட்டு மாடத்தில் நின்று இந்தக் கவிதையை உரக்கப் படித்தேன் .

’மிதத்தல்’

காதல்
எனது பழக்கங்களைப் பறித்துக்கொண்டு
கவிதையால் 
என்னை நிரம்பிவழியச் செய்தது

’நீயன்றி வேறெந்த பலமும் இல்லை’ 
என மீண்டும் மீண்டும் முனக முயன்றேன்
ஆனால் முடியவில்லை

கைகொட்டிப் பாடவேண்டிய 
நிர்பந்தத்திற்கு ஆளானேன் நான்
கெளரவமாகவும் ஒழுக்கம் தவறாதும்
மனவுறுதியோடும்தான்
இதுவரை இருந்துவந்தேன்
ஆனால் இந்த சூறைக்காற்றில் 
நின்றுகொண்டு
அவற்றையெல்லாம் எவரால்
நினைவூட்டிக்கொள்ள இயலும்?

ஒரு மலை தனது அடியாழத்தினுள்
ஒரு பேரொலியைத் தக்கவைத்திருக்கிறது.
உனது குரலை நான் வசப்படுத்தி வைத்திருப்பதும் 
அவ்வாறே
....

இப்படியாகத் தொடற்கிற அந்தக் கவிதையை வாசித்தபின், தொடர்ந்து மழை பெய்த அந்த இரவில் நான் கொஞ்சமும்  உறங்கவே இல்லை பார்ட்னர்.
இத்தனை ஆண்டுகளில் நான் கடந்து வந்து விட்டதாய் நினைத்த மனங்கள் எதையுமே நான் கடக்கவேயில்லை என உணர்கிறேன் . நான் அவ்விடத்திலேயே தான் நின்று கொண்டிருக்கிறேன். நான் கடந்ததாய் நினைத்த அத்தனை மனங்களும் என்னைக் கடந்து சென்றுவிட்டிருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன்; நான் அப்படியே அவ்விடத்திலேயேதான் நின்றுகொண்டிருக்கின்றேன் பார்ட்னர்.

அவ்வப்போது என் கூட்டிலிருந்து வெளியே வந்து சக உயிர்களிடத்தே பேச முயற்சி செய்கிறேன் பார்ட்னர். இரவும் பகலும் தேயத் தேய எவ்வளவு பேசினாலும் தீராத அளவு கதைகள் இருந்தாலும், மனம் முழுக்க பாடல்களும் கவிதைகளுமாய் நிறைந்து கிடந்தாலும் , ஏனோ மனமடங்கி  ஒரு புன்முறுவலோடு விடைபெற்று என் கூட்டிற்கே திரும்பிவிடுகிறேன் நான்.
தனிமையென்பது விதிக்கப்பட்டதில்லை பார்ட்னர்... பழக்கப்பட்டது... அவ்வளவே..!அடங்கலும் அலைதலுமாய் மனம் திரிகிறபோதெல்லாம் வாலாட்டியபடி என்னைப் பின் தொடர எனக்கொரு நாய்க்குட்டி இருந்திருக்கலாமெனத் தோன்றும். அல்லது நானே ஒரு நாய்க்குட்டியாய் இருந்திருக்கலாமெனத் தோன்றும்.

இந்தப் பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கிற இந்த இரவில் மீண்டுமொரு அசுர மழை. இந்தக் கடிதத்தை நான் எழுதத்தொடங்கியதும் இதே மாதிரியான ஒரு மழைநாளின் இரவில் தான் பார்ட்னர். சக பதர்களை விட்டு விலகி சலனமற்று  உயரப்பறக்கும் ஒற்றைப்பறவைகளுக்கென தனித்துவமாய்ப் படைக்கப்பட்டவை இந்த மழையிரவுகள் . வாதைகளினின்று மீள வார்த்தைகளைத் துணைக்கழைத்துக் கொள்ளுகிற  அற்ப கவிப்பயல்களுக்கானவை இவ்விரவுகள். போய்ச் சேருமிடத்தையோ போகிற வழியையோ முடிவு செய்யாமல் மனம்போலப் பயணிக்கிற ஒரு நாடோடியைப் போல, எந்த முடிவுகளுமின்றி தெளிவுகளுமின்றி வாழ்வைக் கடத்துகிறவனின் கடிதங்களும் அப்படியே மனம்போன போக்கில் தானே இருக்கும்.

உனக்காய் நான் எழுதிய முதல் கடிதம் அன்றி மற்ற அத்தனையும் நான் எனக்காய் எழுதியவை பார்ட்னர். நித்ய பயணியாய் இருந்தவன் சற்றே நின்று நிதானித்து யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.என்னால் எழுதப்படுகின்ற அத்தனைக் கடிதங்களும் எதனை அல்லது யாரை முன்வைத்து எழுதப்படுகின்றன ? நீயெனும் நீ நிஜத்தில் இல்லையெனக் கொண்டால் யார் வாசிக்கும்பொருட்டு நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ?

உலகின் எங்கோ ஒரு மூலையில் புதையல் நிறைந்துகிடக்கிற ஏதோவொரு குகையை திறந்துவிடும் மந்திரத்தை எப்படியோ கற்றுக் கொண்ட ஒரு சிறுவன், தான் கடந்து போகிற பாதையிலுள்ள அத்தனை மலைக் குகைகளின் முன்பும் அந்த மந்திரத்தைச் சொல்லி திறக்க முயற்சிப்பது மாதிரியானது என் செயல். எண்ணக் குமைச்சலின் எழுத்துக் குவியல்களை கடிதக் கற்றைகளாய் கைகளில் சுமந்தபடி, எதிர்படுகிற அத்தனை பேரிடமும் படிக்கச் சொல்லி, ஏதேனும் புரிகிறதாவெனக் கேட்டு முகம் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறேன் பார்ட்னர். கண்களில் தேடலும், நாவில் பாடல்களும், மனதில் கவிதைகளும், கைகளில் கடிதங்களும், கால்களில் சோர்வும் கொண்டு நான் தொடர்ந்த/தொடர்கிற என் தனிப்பயணம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாய் உணர்கிறேன் பார்ட்னர்.

ஆம். அந்தக் கடைசி வரியை எழுதும்போது இடது கண்ணிலிருந்து உருண்ட ஒற்றைக் கண்ணீர்த் துளியைச் இடதுகை ஆட்காட்டிவிரலால் சுண்டிவிட்டபடி மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன் பார்ட்னர்.

ஆனாலும்... இன்னும் முடிவாய் ஏதும் சொல்லாமலேயே விடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவே செய்தி .

மகிழ்ந்திரு...!

தேடல் தீர்ந்ததென முடிவுசெய்யும் தருவாயில்,
நான்...!

ஞாயிறு, 4 ஜூன், 2017

உறவு, பிரிவு மற்றும் பல - Rhetoric of a Solivagant

Courtesy: Psychedelic Drawing by Japanese Artist Lutamesta - Pinterest

பேரன்பின் பார்ட்னருக்கு,

என் உலகத்து நிகழ்வுகள் குறித்தான விவரனைகளோடும் அயற்சியோடும் நான் எழுதத்தொடங்கிய.. எழுதுகிற கடிதங்கள் இப்படி தொடர்கதையாகுமென ஒருபோதும் நினைத்ததில்லை பார்ட்னர். மனிதக்கூட்டத்தோடிருக்கையில் தனிமையையும் தனிமையில் இருக்கையில் மனிதர்களையும் தேடுகிற வித்தியாசப் பிறவியாய் மாறி வருகிறேன். புத்தகங்களுள் உறைந்துலாவல் வேறு மாதிரியான தற்காலிக தப்பித்தல். அவ்வப்போது அவ்வுலகிலும் திரிந்து திரும்புகிறேன். இலக்கில்லாத பயணியாயினும் திரும்பி வர வீடில்லாது போனால் அத்தனையும் அற்றுப்போகுமல்லவா. அது போல, எத்தனை முகங்கள் கண்டு, எத்தனை குரல்கள் கேட்டு, எத்தனை சிரிப்புகளைக் கடந்து வந்தாலும் திரும்பி வந்து தஞ்சமடைந்து இளைப்பாற எனக்கென ஒரு மனம் காத்திருக்காத இரவுகள் மிக நீளமானவை பார்ட்னர்.

மனங்களின் அருகாமையை விரும்புகிற மனது மனிதர்களை விட்டு விலகி நடக்கின்றது. திடீரென எனக்காய் யாரேனுமோ அல்லது யாருக்கேனும் நானோ ஒரு பாட்டுப் பாடினால் நன்றாயிருக்குமெனத் தோன்றுகிற பின்னிரவுகளின் போதேல்லாம் உன் இன்மையை உணர்கிறேன் பார்ட்னர். அன்பைச் சொல்ல ஆயிரம் வழிகளுண்டு. இந்தப் பாழும் பிரிவை வெற்று வார்த்தைகளன்றி வேறு எப்படித்தான் சொல்லித் தொலைவதாம். கண்டு கேட்டுணர்ந்த கதைகளை உரையாடல்களின் பொழுது கொட்டித்தீர்த்துவிடும் பொருட்டு, மனதுள் சூல் கொண்ட வார்த்தைகள் சூழ்ந்தழுத்திச் சுழல்கின்றன.

பிரிவுகளைக் குறித்து எழுதுகிற பெருங்கவிகளைப் பற்றி நான் கொண்டிருக்கிற அதீத மனச்சித்திரங்களைப் போலவே நானும் மனந்திரிந்து கொண்டிருக்கின்றேனோ என்கிற கேள்வி அடிக்கடி எழுகின்றது பார்ட்னர். முழுவதுமாய் பிறழ்ந்துவிடாத ஆனால் இரட்டை நிலையைக் கொண்டிருக்கிற ஒரு மனநிலை எனக்கு.ஆனாலும் உறங்கி விழிக்கிற ஒவ்வொரு நாளும் எதிர்படுகிற அத்தனை மனங்களையும் புன்னகையோடும் ஆரவாரத்தோடுமே எதிர்கொள்கிறேன். ஒவ்வொரு நொடியையும் கொண்டாடிக் கடக்கிறேன்.நெடியதொரு தேடலுக்கிடையேயான கொண்டாட்டங்களா அல்லது மிக நீண்ட காத்திருத்தலுக்கு முன்பான கொண்டாட்டங்களாவெனத் தெரியாமலேயே, தெரிந்துகொள்ள விரும்பாமலேயே அனுபவித்துக் கடந்துகொண்டிருக்கின்றேன்.

சமீபத்திய தனிப் பயணம் நீண்ட நாட்களுக்குப் பிறகான பெரும் ஆறுதல். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வு குறித்த பெரும் கவலைகளோடும் , அதீத உயிர்பயத்தின் காரணமாகவும், ஒவ்வொரு கொண்டையூசி வளைவிலும் காலூன்றி மெல்ல முன்நகர்ந்து மேலேறிய மலைப்பாதைகளில், எவ்வித அச்சமோ கவலையோ இன்றி மலைப்பாதையின் ஒவ்வொரு வளைவிலும் இரும்புக்குதிரையின் குளம்புகள் உரச உரச காடதிரச் சிரித்தபடி மேலேறினேன். காடும் , இரவும், குளிரும் இன்ஜின் உறுமலும், வெப்பமும் பின் நானும் ஒரு புள்ளியில் கலந்துவிட்ட இரவது. வாழ்க்கையையும் இப்படியே ஒரு மலைப்பாதையில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத இரவுப்பயணம் போலவே எதிர்கொள்ள விரும்புகின்றேன்.

உயிரறுக்கிற பிரிவுகளின் மீது தீராக் கோபம் உண்டெனக்கு. ஆனாலும் பிரிவுகளைப் போல் மகத்தானவை வேறேதும் இல்லையென்பேன் பார்ட்னர். ஒவ்வொரு பிரிவும் ஒரு மரணம். ஒவ்வொரு முதல் சந்திப்பும் ஒரு மறுபிறப்பு. உறவுக்கும் பிரிவுக்கும் இடையே ஊடாடி மாண்டு மீள்கிற அற்பனுக்கு, வாழ்நாளைக்கும் நினைத்து அசைபோடவும், பொருத்தமில்லாத தருணங்களில் தனக்குத்தானே ஒற்றைச் சிரிப்பு சிரித்துக் கொள்ளவும், வார்த்தை தீரக் கடிதமெழுதவும், சுற்றம் முற்றும் மறக்கவும், தீராக் காதலை எதிர்கொள்ளவும், இன்னும் யாருக்கும் வாய்க்காத ஏதேதோ விஷயங்களைக் கைக்கொள்ளவும், கதைகளையும், கனவுகளையும் வாரி வழங்கிவிட்டுச் செல்வதே அந்த உறவுக்கும் பிரிவுக்குமிடையேயான சுழற்சி தான் இல்லையா ?  ஆதலால் பிரிவுகள் எப்போதும் மகத்தானவை பார்ட்னர்.

நாட்கணக்காய் நான் எழுதிக்கொண்டேயிருக்க, நீண்டுகொண்டே செல்கிற இந்தக் கடிதம் போல, இரவுகளுக்கும் பகலுக்குமான தூரம் நீண்டபடியே செல்கிறது. பகல் ஒன்றேதான். மாறுவதும் நீண்டு தேய்வதும் இந்த பாழும் இரவுகள் தான் பார்ட்னர். பல்லாண்டுகளாய் பற்றித் திரிந்த உறவுக் கயிற்றின் கடைசி ஒற்றை இழையும் இப்போது  அறுந்துவிட்டதாய் உணர்கிறேன். உறவுகள் குறித்தான கேள்விகளுக்கு எப்போதுமே தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தவனில்லை நான். முடிவான முடிவை வார்த்தைகளில் சொல்ல யத்தனித்து இறுதியில் மென்று விழுங்கி, ஏதும் சொல்லாமல் காலமெனும் பெருந்திரையின் பின்னே ஓடியொளிந்து கொள்கிற அற்பன். எப்போது திரும்பினாலும் விட்ட இடத்திலேயே நின்று, தொடங்கித் துரத்துகின்றன கேள்விகள். தப்பியோடலும் வீடுதிரும்பலுமாய் நிகழ்கிற இந்த காலச்சுழல் எப்போதுதான் முற்றுப்பெறுமோ தெரியாது பார்ட்னர். எல்லோருடைய கதைகளுக்கும் கனவுகளுக்கும் எப்போதுமே செவிமடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறவனுடைய கதைகளை யார்தான் கேட்கப் போகிறார்கள் ?

கேட்க யாருமில்லாமல் போனால் அர்த்தமற்றுப் போகிற உரையாடல்களைப் போலல்லாது ,ஒரு கடிதம் எக்காலத்திலும், யாருக்கும், எப்போதும், பொருள்படக்கூடியதாய் இருக்கும் என்பதனாலேயே நிறைய கடிதங்கள் எழுத விரும்புகிறேன் பார்ட்னர். சமீபத்தில் ஓர் உறக்கமற்ற இரவினை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட பாடலின் வரிகளை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் பார்ட்னர்.

Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat

Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai
Teri surat se hai aalam mein bahaaron ko sabaat
Teri aankhon ke siwaa duniyaa mein rakhkhaa kya hai
Tu jo mil jaaye to taqdir nigoon ho jaaye

Yoon na thaa maine faqat chaahaa thaa yoon ho jaaye
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Anginat sadiyon ki taareeq bahemaanaa tilism

Resham-o-atlas-o-kamkhwaab mein bunvaaye hue
Ja-ba-ja bikte hue koochaa-o-baazaar mein jism
Khaak mein lithade hue, khoon mein nehlaaye hue
Jism nikle hue amraaz ke tannooron se
Peep behti hui galte hue naasooron se

Laut jaati hai udhar ko bhi nazar, kya keeje?
Ab bhi dilkash hai tera husn, magar kya keeje?

Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa
Mujh se pehli si muhabbat mere mehboob na maang


**************************************************

My love, do not ask from me
the love we shared once before.
If you were here, I always thought
life would shine, eternally.

We share our grief, so why argue
over the sorrows of the world?
Your countenance is the assurance
of perennial spring, everywhere.

For what is the worth of this world
but the sight of your eyes?
If only I found you, the fates
would be enthralled.

This wasn’t how it should have been,
except that I wanted it to be;
there are more sorrows in this world
beyond the anguish of love.

There is more to happiness
than the relief of reunion;
the blight of dark magic
of years beyond counting,

while draped in silk,
satin and brocade; everywhere,
in alleys and marketplaces,
young flesh is up for sale.

Dragged in the dirt,
bathed in blood, bodies
emerge from furnaces
of pestilence.

Pus flows untapped
from leaking ulcers.
My eyes can't look away,
what should I do?

Your beauty still allures, but
what can I do?
There are sorrows in this world
beyond the pleasures of love.

There is more to happiness
than the relief of reunion;

so my love, do not ask from me
the love we shared once before.


நூர்ஜஹான் பாடிய  ஃபைஸ் அஹமதின் கவிதை வரிகளை, உலகம் முழுவதும் விலகிச்செல்கிற அத்தனை இதயங்களுக்காகவும்  சமர்ப்பித்தபடி என் தேடலையும் பயணத்தையும் தொடர்கிறேன் பார்ட்னர்.

மகிழ்ந்திரு...!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான்...!!

சனி, 18 மார்ச், 2017

பதிலற்ற கேள்விகள் - Exhortation

நான் பேசித்தீர்க்கிற வார்த்தைகளை
கேட்க யாருமற்ற பொழுதுகளே
கடிதமெழுத உந்தித்தள்ளி
உறக்கமற்ற இரவுகளைப் பரிசளிக்கின்றன.
https://in.pinterest.com/pin/523965737873453107/

பேரன்பின் பார்ட்னருக்கு,


மீண்டும் ஓர் கடிதமெழுத வாய்த்ததை எண்ணி மகிழ்வதா அன்றி வருந்துவதாவெனத் தெரியாத நிலையில் எழுதத் தொடங்குகிறேன் பார்ட்னர்.புத்தகங்களுள் மூழ்கிவிடமுடியாத, பாடல்களில் கரைந்துவிடமுடியாத, திரைப்படங்களில் தொலைந்துவிட முடியாத இரவுகள் மிகக் கொடுமையானவை . ஒரு பக்கம் மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்திருந்தாலும் மறுபக்கம் ஈடுசெய்யமுடியாத இருன்மையும் தனிமையும் சூழ்ந்தழுத்தித் திணறடிக்கின்றன. நான் ஓடிக்கொண்டிருக்கிற பாதையில் இலக்கென நான் நினைக்கிற இலக்குகளையும், வெற்றி என நான் நினைக்கிற வெற்றிகளையும், சாதாரணர்கள் தங்கள் அளவுகோல்களால் அளந்து ஒதுக்கி உதாசீனப்படுத்திவிடுகின்றார்கள். அன்னோரின் அறுவை சிகிச்சைக் கேள்விகளுக்கு அருஞ்சொற்பொருள் சொல்லும் நிலையில் நான் இல்லை பார்ட்னர். ”அதென்னடா.. விளக்கங்களுக்கும் பதில்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிற ஆணவமுனக்கு ? கடவுளா நீ ?” எனக் கேட்பாயானால் வெறுமையாகச் சிரித்தபடி ”அற்பன்” என்பேன் பார்ட்னர்.

அவ்வப்போது நிறைகிற காரணமில்லாத கண்ணீருக்கே இன்னும் பதிலறியாதவன் நான். ஒரு கட்டத்துக்கு மேல் வாழ்க்கையாலும் சுற்றத்தாலும் ’வளர’ நிர்ப்பந்திக்கப் படுகிற கனவுலாவிகளால் நிஜங்களின் வெம்மையை கொஞ்சமும் தாங்கமுடியாது பார்ட்னர். நான் எப்போதும் பதிலளிக்கத் தயாராயிருக்கிற கேள்விகளை உன்னையன்றி யாரும் கேட்டதில்லை... கேட்பதில்லை...அல்லவா ? எப்போதும் தனிமையையும் துயரத்தையுமே உன்னோடு பகிர்கிறேனென நினைக்காதே. மனங்கொள்ளா மகிழ்ச்சியான ஓர் கனத்தில்  அருகே நீயில்லாமல் தவித்துப் போனேன் பார்ட்னர். ’சலங்கை ஒலி’ திரைப்படம் பார்த்திருப்பாயென நினைக்கிறேன். தனக்கான முதல் வாய்ப்பு கிடைத்துவிட்டதை அறிந்த அக்கனத்தில் அந்த மகா கலைஞன் தன் அருகிலிருக்கிற தேவதையின் கைகளைப் பற்றி முகம் புதைத்து குலுங்கியழுவான். அப்படியொரு நிகழ்வு நீயிருந்திருந்தால் நடந்தேறியிருக்கக் கூடும் பார்ட்னர்.

போகட்டும்; நடக்கவிருக்கிற நல்லவைகளுக்கு இஃதோர் தொடக்கமென மனந்தேற்றிக் கொள்ளுகிறேன். பதில்களையும் விளக்கங்களையும் குறித்த என்னுடைய நிலைப்பாட்டையே நான் உன்னிடத்திலும் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர். எவ்வகையிலும் நீயெனக்கு மறுமொழி சொல்லவேண்டிய நிர்ப்பந்தமில்லை. கதை கேட்க சற்றே நீ மனந்தந்தால் போதுமெனக்கு. உன் வானத்து நிலவொளியை நான் மறைக்க விருப்பமில்லை. உன் வானம் உனக்கு. என் வானம் எனக்கு, பொதுவாய் இரவின் கீழ் கதை கேள் அது போதும்.

பூஞ்சையான மனங்கொண்ட மனிதர்கள் எடுக்கிற அதிதீவிர முடிவுகளைக் குறித்தான அச்சமும் ஆச்சர்யமும் எப்போதும் எனக்கு உண்டு. அம்மென்மனங்களை அந்நிலைக்குள்ளாக்குமளவு என்ன துயரம் இருந்துவிடப்போகிறதென யோசித்தவனுக்கு இப்போதுதான் சாமான்யர்களின் உலகத்து நியதிகள் விளங்க ஆரம்பிக்கின்றன பார்ட்னர். காலவோட்டத்தின் ஓவ்வொரு சுழற்சியிலும் எனக்காக நான் செய்கிறவையன்றி இந்த உலகுக்கு நான் என்னை நிரூபித்துக்கொள்ளும்பொருட்டு செய்யப் பணிக்கப்படுகிறவற்றை எல்லாம் முற்றிலும் வெறுக்கிறேன். ” உங்கள் சில்லறை உலகில் நான் இல்லை. விட்டுவிடுங்கள்” என ஏதோவோர் கவிஞன் மன்றாடியதாய் நினைவு. நமக்கான கனவை எப்போதும் யாரும் காணவே முடியாது பார்ட்னர்.
எழுத்தாளர்களின், குறிப்பாய் கவிஞர்களின் பிறழ்வுநிலை குறித்து சமீபத்தில் நிறைய அறியநேர்ந்தது. பெரும் கவிஞர்களும் கனவுவாதிகளும் தங்களை புற உலகத்தினின்று விலக்கியே வைத்திருந்ததன் காரணம் விளங்கத் தொடங்குகின்றது பார்ட்னர். நானும் என்னை ஓர் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துகொண்டு புற உலக சப்தங்களினின்று விடுபட்டு நடமாட விரும்புகின்றேன்.நானொன்றும் மகா படைப்பாளியென என்னைச் சொல்லிகொள்ளவில்லை. என் கனவுகளை நான் வாழும் பொருட்டே என்னைச் சார்ந்தோரின் கனவுகளையும் கொஞ்சம் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு அற்ப கனவுவாதி.  நானொரு அற்ப கனவுவாதி பார்ட்னர். அவ்வளவே..!!

மற்றோரின் கேள்விகட்கு பதிலில்லையே அன்றி எனக்கென கேள்விகள் இல்லாமலில்லை.உறவுகளைக் குறித்தும், பிரிவுகளைக் குறித்தும், மனிதர்களின் எண்ணவோட்டம் குறித்தும், கனவுகளைக் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகள் தொடர்ந்து எந்தன் தூக்கம் கெடுக்கின்றன. ஒர் உறவின் மென்னிழை எப்போது பின்னப்படுகிறதென்றும் எப்போது அறுந்துபோகிறதென்றும் யாராலும் சொல்லவே முடியாது பார்ட்னர். ஒரு கட்டத்துக்குமேல் எல்லா உறவுகளின் மேலான பிடிப்பும் அற்றுப்போய்விடுகின்றதல்லவா. என்னைப் பற்றிக் கொள்ள நீளாத கைகளை நானெதற்கு பற்றித்திரிய வேண்டும். கூடச் சிரிக்கவும், கூடிச் சிரிக்கவும், தேடி அழவும், தேவதைகள் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் பார்ட்னர்.

எப்போதோ... யாராரோ... யாராருக்காகவோ... எழுதிய கடிதங்களிலிருந்து எனக்கான வார்த்தைகளை பொறுக்கி சேர்த்துவைத்துக் கொள்கிறேன் நான். முகந்தெரியாதவர்களால் முகந்தெரியாதவர்களுக்காக எழுதப்பட்ட பிரியமும் கோபமும் சோகமும் காதலும் வாதையும் நிரம்பிய வார்த்தைகளே வலியிலுழலும் இந்த வெற்றுத் தனியனுக்கு பேராறுதல் பார்ட்னர். நில்லாத இசையாலும் நீளமான கடிதங்களாலும் சூழப்பட்டு  நெடிந்து நீள்கிற சாலையின் மேலே நான் மிதந்துகொண்டேயிருக்கிற கனவொன்றில் மூழ்க விரும்புகிறேன் பார்ட்னர்.உறக்கமே வாய்க்காதவனுக்கு கனவேது ?

நூற்றி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எழுத்தாளன் ஒருவன் இளங்கவி ஒருவனுக்கு சொன்ன வார்த்தைகளை  இங்கே சொல்ல விரும்புகிறேன் பார்ட்னர்.

”You must not let yourself be diverted out of your solitude by the fact that something in you wants to escape from it. Precisely this desire, if you use it calmly and judiciously as a kind of tool, will help you to extend your solitude over a greater expanse of ground."

"We know little, but that we must hold fast to what is difficult is a certainty that will never forsake us. It is good to be alone, for solitude is difficult; that something is difficult should be one more reason to do it. To love is also good, for love is hard" 

Letters to a Young Poet - Rainer Maria Rilke

இவற்றை எனக்கான வார்த்தைகளாய் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் பார்ட்னர். சாதாரணர்களற்ற என் தனிமை வெளியில் எனக்கான தீர்வை நானே முயன்று கொண்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் உனக்கு. எவ்வகையிலும் உன்னிடமிருந்து ஒரு பதிலை நான் எதிர்நோக்கவில்லை பார்ட்னர்.

என் வானம் எனக்கு. உன் வானம் உனக்கு.

மகிழ்ந்திரு..!!

தேடித் திரியுமொரு தனியனாய்,
நான்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

சாத்தான்களின் வரம் - Harangue

இப்போது நீ இருக்கிறாயே என
உன்னிடம் வந்து
அழுது தொலைத்துவிட்டால்
நாளை நீ தேடும்போது
நான் இல்லாமல்போனால்
என்னாகுமோ என
எனக்காய் நானே
வெம்பிச் சாகிறேன்
போ...!
Courtesy: http://creativeartandcraftideas.blogspot.in/2016/05/abstract-art-drawing-in-black-and-white.html

பேரன்பின் பார்ட்னருக்கு,

பெரும் மன அழுத்தமே இந்தப் பின்னிரவில் என்னைக் கடிதமெழுத நிர்பந்தித்திருக்கின்றது. வழக்கம் போலக் கேட்டுத் தொலைய வேண்டிய சாபமுனக்கு. மற்றவர்களின் உலகத்துப் பிரச்சனைகளை நான் பெரிதாயொன்றும் பொருட்படுத்துவதில்லை பார்ட்னர்.  போலவே அவர்களும் என்னை. என் உலகத்தின் பிரச்சனைகள் வேறு மாதிரியான சிக்கல்களைக் கொண்டவை. தேடலும், தேடலின் நிமித்தமுமாய்க் கடந்து கொண்டிருக்கிற இந்த வாழ்க்கையில் இளப்பாறுதலுக்காய் எந்த மரத்தடியின் நிழலில் சாய்வேனென்று அறிந்தவனில்லை. அகச்சிக்கலா புறச்சிக்கலாவென ஆராய்பவர்களை மழுப்பிச்சிரித்து மறுதலித்துவிடுகிறேன். கேட்போரெல்லாம் நீயல்லவே. நீயாயிருந்தால் கேட்காமலே உணர்ந்திருப்பாயே. உனக்கு நானும் எனக்கு நீயும் கொடுத்திருக்கிற இந்த வெளிக்கு பெயர்சூட்டித் தாலாட்ட விருப்பமில்லையெனக்கு. குழந்தையைக் கொஞ்சிட பெயர் வேண்டுமா என்ன. சற்றேறக்குறைய பற்றற்றுதான் திரிகின்றேன். ஏதேனும் ஒரு போதைக்கு அடிமைப் பட்டிருந்திருக்கலாமோ என அடிக்கடி தோன்றுகிறதெனக்கு. ’எதை மறக்க எது’வென வெடித்துச் சிரித்தபடி  நீ கேட்பதாய் உணர்கிறேன். உனக்கா புரியாது...!!?

முன்பொருமுறை வாசனைகளைப் பற்றிய நம் உரையாடலை நினைவில் வைத்திருக்கிறாயா ? ’சிதம்பர நினைவுகளில்’ பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறிப்பிட்ட அந்த சோப்பு விற்கிற பெண் அவளுடைய திருமணப் பத்திரிக்கையை தந்துவிட்டுப் போனதும் வீடு முழுக்க நிறைந்திருந்த அவளுடைய மணம் பற்றி எழுதியிருந்ததைச் சொன்னதும், எப்போதோ நீ படித்த ஒரு புத்தகத்தில் தன் தோழியைக் காண நாடுவிட்டு நாடுவந்த ஒருத்தி வந்து திரும்பியபின் அந்த அறைக்குச் சொந்தக்காரி “I feel like I don't belong here anymore. All that is left was her fragrance" என்று சொன்னதாய், நீ சொல்ல நான் கேட்ட அந்தத் தருணம் பல யுகங்களுக்கான ஒற்றை கருப்பு வெள்ளை புகைப்படம்போல் மகத்தானதாய் என் மனதில் பதிந்திருக்கிறது.பெயர் தெரியாத அந்தப் புத்தகத்தை இன்றும் உனக்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான மகத்தான தருணங்கள் இப்போது வாய்ப்பதில்லையெனக்கு. அற்பர்களின் வாழ்வில் அற்புதங்கள் எப்போதுமே நிகழ்வதில்லையே.

எழுத்துக்களில் மீண்டு எழுத்துக்களிலேயே தொலைந்து கொண்டிருக்கிறேன். ஆம்... மீண்டும் புத்தகங்களாலான வாழ்க்கை. பல வருடம் பழைய ஒயினை தனிமையில் ருசித்துக் குடிக்கிற ஒரு கவிஞன் போல, துயரத்தை ரசித்துப் பருகிக்கொண்டிருக்கிறேன். உனக்குத் தெரியுமா பார்ட்னர் ? ஒரு வலியை மறக்க அதைவிட அதிகமான வலியை ரசித்து அனுபவிக்கிற Masochism பற்றி ?
வெகு சமீபத்தில் ஒரு மிக நீண்ட பயனத்தினூடாய் அதனைக் கண்டுணர்ந்தேன். கேள்விகள், கல்லெறியப்பட்ட கூட்டின் தேனீக்கள் போல சுற்றி மொய்த்து கொட்டிக் கொண்டிருக்கின்றன. நான் பித்தன் போலச் சிரித்தபடி சாலைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறேன். காலத்துக்கும் நிலைத்திருக்கிற மகத்தான உணர்வுகளைத் தந்த உறவுகளத்தனையும் மனதில் மட்டுமே நிலைத்து வாழ்கிற சாபம் பெற்று வந்திருக்கிறேனோ எனத் தோன்றுகிறது பார்ட்னர்.  சாத்தான்கள் அளிக்கிற வரங்களாலும் தேவதைகளின் சாபங்களாலும் ஆனவையாக என்னுடைய  மேற்குறிப்பிட்ட தருணங்களைக் கொள்கிறேன்.யாருக்கு வாய்க்கும்  இந்த வாழ்க்கை? மறுபடியும் உன் சிரிப்பு..!

கடிதமெழுதும் போது எனது வலது தோளுக்கு மேலே எட்டிப் பார்க்கிற கண்களாக அவ்வப்போது நானே மாறிக்கொள்கிறேன். கண்களில் கோர்த்துக் கொண்டிருக்கிற கண்ணீர் கன்னத்தில் உருண்டோடும்போது வலிந்து இளித்து இடக்கையால் தட்டிவிடுகிறேன். இந்தக் கடிதத்தை காவியத்தன்மையுடையதாய் மாற்றப் போகிற அந்த ஒற்றைத் துளி கண்ணீர் இதுவாகவும் இருக்கலாம்.  அல்லது வழக்கம் போல் ‘போடா’ என்றபடி தலைநொடித்துச் சிரித்து திரும்பிக்கொள்வாயாக.

தொலைத்த இடத்தில் தேடிக் கண்டடைந்து விடுகிற நம்பிக்கையோடே துயரக்கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான சுவையையும் மெல்லக் கொல்லுகிற தன்மையையும் ஒருங்கே பெற்றிருக்கிற தனித்தன்மை வாய்ந்த விஷம் போலானது இந்தத் துயரமென்பது. ’The Sorrows of Young Werther' என்கிற புத்தகத்தை உனக்குப் பரிந்துரைக்கிறேன் பார்ட்னர். நூற்றாண்டுகளுக்கு முந்தைய கடிதத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறான் அந்தப் பாவி ’கதே’.

”I might blame the weather, or an acquaintance, or some personal disappointment, for my discontented mind; and then this insupportable load of trouble would not rest entirely upon myself. But, alas! I feel it too sadly. I am alone the cause of my own woe, am I not? Truly, my own bosom contains the source of all my sorrow, as it previously contained the source of all my pleasure. Am I not the same being who once enjoyed an excess of happiness, who, at every step, saw paradise open before him, and whose heart was ever expanded toward the whole world? And this heart is now dead, no sentiment can revive it; my eyes are dry; and my senses, no more refreshed by the influence of soft tears, wither and consume my brain. I suffer much, for I have lost the only charm of life: that active, sacred power which created worlds around me,— it is no more.”

நமக்கான வார்த்தைகளை யாரோ எழுதிவைத்துவிட்டுச் செல்வது போல் தான், யாருக்கோ ஆன வார்த்தைகளை நான் இன்று எழுதிக் கொண்டிருக்கின்றேனா பார்ட்னர் ?

மறுபடியும் சொல்கிறேன்; சாத்தான்கள் தந்த வரங்களாலும், தேவதைகளின் சாபங்களாலும் ஆனது இந்த வாழ்க்கை. இன்னும் தனிமைசூழ் இரவுகள் மிச்சமிருந்தால் நிச்சயமாய் அப்போது எழுதுகிறேன் மற்றுமோர்க் கடிதம்.

மகிழ்ந்திரு..!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான்.

புதன், 29 ஜூன், 2016

தேவதைமொழிச் சாபம் - Soliloquy

உரையாடல்களுக்கு உடனிருக்காமல்
நினைவுகளை மட்டும் துணையிருத்தி
பறந்து போதல்
தேவதைமொழிச் சாபம்...!!

http://mangaworkshop.net/images/art/7235/27821.jpg
அன்பின் பார்ட்னர்,

நலமாகவே இருப்பாயென நம்புகிறேன். இடத்தைப் பழக்கிக் கொள்ளலும் மனிதர்களை அறிந்து கொள்ளலும் அத்தனை கடினமில்லையுனக்கு. எங்காயினும் யாராயினும் பறந்து திரிவாய் நீ... சிறகில்லாப் பட்சி...! நான் சாதாரணனல்லவோ.  நாட்களைக் கடத்தியபடி முடிவில்லாச் சாலைகளையும், எதிர்காற்றையும், இஞ்சின் உறுமலையும் உணர்ந்தபடி என்னைப் புதுப்பித்துக் கொள்கிற எனது நெடும்பயணங்களுக்காய் காத்திருக்கிறேன். காப்பி உறிஞ்சுவதை நிறுத்தவில்லை. உன் முன்னால் கொட்டிவிடும் பொருட்டு காலநேரம் பாராது சேர்த்துவைத்த கதைகளின் பாரம் தலைமேல் கனக்கிறது.ஆதலால் புத்தகங்கள் படிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன். உனக்குச் சொல்லும் பொருட்டு மூளையில் கோர்வையாக்கிய தனி நிகழ்வுகளை உதிர்த்துவிடாமல் அப்படியே காய்ந்துபோகவிட்டிருக்கிறேன்

உனக்கான மாலைநேரமாய் இருந்ததை நானும் எனது ஒரு கோப்பை காப்பியும் வலிந்திழுத்துத் தனியாய்ப் பழ(க்)க முயன்றுகொண்டிருக்கிறோம்.
நான் நல்ல கதைசொல்லியா எனத் தெரியாது. ஆனால் உன்னைக் காட்டிலும் பொறுமையாய்க் கதை கேட்கும் வேறெவளையும் எனக்குத்தெரியாது. இன்னமும் புத்தகங்கள் படிக்கிறாயா ? வாசனைகளை வியக்கிறாயா ?
மனிதப் பதர்களின் மன முரண்களை ஒற்றைப் புன்னகையில் கடந்துவிடுகிறாயா ? உனக்கான பிரத்யேகப் புன்முறுவலை யார் முகத்திலும் தேட விருப்பமில்லையெனக்கு. கிடக்கட்டும்...யாவும். அரற்றுதல் பொருட்டாய் விழுகிற வார்த்தைகளைக் கண்டுகொள்ளாதே. இந்த பொறுப்புத் துறத்தல் உன்னிடத்தில் தேவையில்லையெனத் தெரியுமெனக்கு.

அப்புறம், வார்த்தைகளின் பாரம் குறித்துச் சொன்னேனல்லவா ? அதற்காகத்தான் இந்தக் கடிதம். தாள்மடித்து உரையிலிட்டு முகவரி எழுதியனுப்புகிற மரபுக்கடிதமல்ல. கண் இமையில் ஒரு முடி உதிர்ந்தால்...பருத்தி வெடித்து பறந்த விதை கையில் அகப்பட்டால்.. கண்மூடி வேண்டியதைச் சொல்லி ஊதிப்பறக்க விடுவதுபோல் ஒன்று.
ஒப்படைப்பு, அரற்றல், ஓதல், உதறல், சிதறல்..... உளறல்..கோரிக்கை  ஏதோவொன்றெனக்கொள்..!

எனக்கான உனது வார்த்தைகளை எங்கே கொட்டிக் குவிக்கிறாய் ? கேட்பாருண்டா ? பின்னே... சிறப்பாய்ச் சொல்லிக் கொள்ளும்படி உன் இன்மை அன்றி வேறேதுமில்லை இங்கே. நான் முன்பொருமுறை உன்னிடத்தில் சொன்னது போல், நீயில்லாத வெற்றிடத்தை அற்றவைகளால் இட்டுநிரப்புதல் கூடுமா என்ன ? சக பைத்தியத்தைக் கண்டடைதல் சாதாரணமல்லவே.

போகட்டும்..!பின்னொரு யாருமற்ற பின்னிரவில் எழுதுகிறேன் உனக்கு. மகிழ்ந்திரு..! It was great running into you..!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான். 
Related Posts Plugin for WordPress, Blogger...