நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

கூலியும் மதராஸியும் செட் ப்ராபர்டி கதைகளும்..!

 


கூலி - மதராஸி ரெண்டு படமும் அடுத்தடுத்த நாட்கள்ல பாத்து முடிச்சேன். பிடிச்சிருக்கு பிடிக்கலங்குறதைத் தாண்டி பல விஷயங்கள் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. கூலி படம் பத்தி பலரும் பல கோணங்கள்ல எழுதி பேசி முடிச்சுட்டாங்க. நான் புதுசா ஏதும் சொல்லப் போறதில்ல. ரொம்ப ரொம்ப underwhelming ஆன படம். எனக்கு உணர்வுப்பூர்வமான எந்த highs ans lowsம் இல்லாம அப்டியே பாத்து முடிச்சேன். ஷெளபின் நடிப்பையும் ஒரு சில காட்சிகள்ல பின்னணி இசையையும் (உபேந்திராவுக்கான பின்னணி இசை) தாண்டி ஆக்‌ஷன் காட்சிகள் உட்பட எதுவுமே மனசுல நிக்கல.

இவ்வளவு stars and budget இருந்தும் execution and staging சிறப்பா பண்ற லோகேஷ்னாலயே அத ஒழுங்கா பண்ண முடியலன்னு தெரியுது. Thuglife பாத்துட்டு லோகேஷ் விக்ரம் படத்தை கையாண்டிருந்த விதம் பத்தி வியந்து எழுதியிருந்தேன். I did not except he'd become this , in such a short span of time. அநிருத் ஏற்கனவே நெறைய ஒப்பேத்தி வைக்குற மாதிரி தான் தெரியுது இது அடுத்ததா சாய் அப்யங்கர் பின்னாடி நிக்கிறார். sigh...!

Disclaimer: மனநலம் மற்றும் உளவியல் சிக்கல்கள் பற்றி என்னுடைய கருத்து அத்தனையும் கேள்வியறிவு மற்று இணையத்திருந்து தெரிந்து கொண்டது மட்டும். நான் பயிற்சி பெற்ற மருத்துவரோ அல்லது மனநல ஆலோசகரோ அல்ல. feel free to point out any mistakes in my interpretations

இப்போ மதராஸிக்கு வருவோம். இந்தப் படத்துக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இதை யாரும் எந்த வகையிலும் பெருசா ஹைப் பண்ணி பேசாதது தான். அதனாலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படம் பாத்தேன். படத்துல பிரச்சனைகள் இருந்தாலும் நமக்கு சட்டுன்னு கோவம் வராததுக்கு அதுதான் காரணம்னு நெனைக்கிறேன்.

பொதுவா கதையின் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ ஒரு மனநல சிக்கல் (Psychological and psychiatric disorders ) இருந்து அதன் வழியாக கதையினை நகர்த்துவது அல்லது திரைப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை, காட்சிகளை அதன் மனநல சிக்கல் சார்ந்து காலங்காலமாக உலகம் முழுக்க பல திரைப்படங்களில் தொடர்ந்து செய்யப்படும் ஒரு விஷயம் தான். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கதை நாயகனுடைய மன நல சிக்கலை பயன்படுத்திய படங்கள் என்று எடுத்துக்கொண்டால் மூன்று ( bipolar disorder), அந்நியன் (multiple personality disorder) , நான் சிகப்பு மனிதன் (Narcolepsy) என சிலவற்றை குறிப்பிடலாம். ஹாலிவுட்டில் Split ( Dissociative identity disorder) , Accountant (Autism ) , Fight Club (split personality) ஆகிய உதாரணங்கள் உண்டு. இதில் ஸ்ப்ளிட் படத்தை குறிப்பிட தனிக்காரணம் உண்டு.

mild spoilers ahead

இந்த வகையில் மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு Fregoli Delusion என்கிற மனச்சிக்கல். சிறுவயதில் தன் கண் முன்னே குடும்பத்தினரை மொத்தமாக ஒரு விபத்தில் இழந்த அவருக்கு அதன் காரணமாக மனநலம் பாதிப்படைகிறது. ஆபத்தில் இருக்கும் எவரையும் தன்னுடைய குடும்பத்து உறுப்பினராகவே உருவகப்படுத்திக் கொண்டு ஓடிப்போய் உதவுகிற மனப்பாங்க. மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல விஷயம் போலத் தோன்றினாலும் வாழ்வில் எப்போதோ நிகழ்ந்த ஒரு கொடுமையான அதிர்ச்சிகரமான நிகழ்வினை அது தந்த வலியை திரும்பத் திரும்ப மனதால் அனுபவிப்பது போன்ற ஒரு நிலை.

இப்படிப் பட்ட நாயகனுக்கு ஒரு காதல் தோல்வி , அதனால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்கிற அவரை வேறொரு உளவுத்துறை / காவல்துறை உயரதிகாரியான பிஜூமேனன் சந்திக்கிறார். தமிழகத்தில் து**ப்பாக்கி கலாச்சாரம் பரவாமல் தடுக்க, இங்க கொண்டு வரப்பட்டிருக்கும் பெருமளவிலான கள்ளத்துப்பாக்கிகள் மக்களை சென்றடையாமல் தடுக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நெருக்கடியான சூழல் இருப்பதால் , எப்புடியோ போற உயிரு மக்கள காப்பாத்த போகட்டும் சார்னு சிவகார்த்திகேயன் சொல்ல பிஜூமேனன் குழுவினரும் இவருடைய மனநல பிரச்சனை பற்றி தெரியாமல் இவரை தங்களுடைய மிஷனுக்காக அனுப்பி வைக்கிறார்கள் . இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

படம் துவங்கியதிலிருந்தே நான் ஒரு மாதிரி conflicted மனநிலையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த conflict இன்னும் அதிகமானது மருத்துவம் படிக்கிற நாயகி empathy க்கும் delusion க்கும் வேறுபாடு தெரியாமல் நாயகனுடைய இந்த உதவும் மனப்பாங்கை பார்த்து அவரை காதலிக்கத் துவங்குகிறார் .(காலங்காலமா நாம் தமிழ்சினிமாவில் பார்த்த விஷயம் தான். ofcourse we are expected to overlook all this in a commercial action masala film. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே) அது மட்டுமின்றி இது நோயில்லடா வரம் என்பது மாதிரி அசட்டுத்தனமான பேசவும் செய்கிறார்.

இதையெல்லாம் தாண்டி படம் தொய்வில்லாமல் சென்றது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முருகதாஸ் ஓரளவு கதையையும் பாத்திரங்களையும் யோசித்து எழுதியிருக்கின்றார். ஒரு சில பாத்திரங்களை மேலோட்டமாக எழுதியிருக்கிறார். மேலே குறிப்பிட்ட நாயகியின் வசனம் ஒரு உதாரணம். இன்னொரு இடத்தில் பிஜூமேனன் சிகா விடம் “உனக்கு மெண்டல் பேலன்ஸ் இல்ல. நாங்க உன்ன மாதிரி எமோஷனலா யோசிச்சு முடிவெடுக்க முடியாது. இதுக்கெல்லாம் படிச்சு பயிற்சி எடுத்திருக்கோம்” என சொல்வார். ஆனால அதுவரையிலும் அவரே எமோஷனாலக முடிவெடுத்து தான் மனச்சிக்கல் உடைய சிவகார்த்திகேயன் பாத்திரத்தை தன்னுடைய மிஷனுக்கு பயன்படுத்தியிருப்பாரு. இந்த மாதிரி முரணான விஷயங்கள் நிறைய உண்டு. இரண்டாவது பாதியில் திடீரென வரும் animal instinct அது சார்ந்த காட்சிகளும் இந்த ரகம்.

ஆக்‌ஷன் காட்சிகளை ரொம்பவே ரசித்தேன். டான்சிங் ரோஸ் ஷபிர் , வித்யுத் ஜம்வால் என இரண்டு அட்டகாசமான acrobatic வில்லன்களை வைத்துக் கொண்டு சண்டை இல்லாவிட்டால் எப்படி. இருவருக்குமே நிறைய வாய்ப்பிருக்கிற சண்டைக் காட்சிகள் உண்டு. அதிலும் வித்யுத் கதைநாயகனை மிஞ்சும் அளவுக்கு பில்டப் / மாஸ் காட்சிகள் உண்டு அதனால் தான் க்ளைமாக்ஸ் payoff சிறப்பாக இருந்தது. போலவே சிவாவின் physical stature க்கு வித்யுத் உடன் வெறுமனே சண்டை வைத்தால் எடுபடாமல் போயிருக்கும் என்பதால் அந்த animal instinct வைத்து சரிக்கட்டி விட்டார்கள். கார் சேஸிங் உட்பட பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது . ஸ்டண்ட் மாஸ்டருக்கு இணையாக ஓளிப்பதிவாளரும் உழைத்திருக்கிறார். job well done.

சிவகார்த்திகேயன் ஒரு முழுநீள ஆக்‌ஷன் நாயகனா இறங்காம அவருக்கு பழக்கமான naive/innocent/emotional நடிப்பையே செய்திருக்கிறர். He definitely emotes better than before. And Rukmini looked so beautiful <3 இன்னும் அவங்களப் பாத்தா சப்த சாகரதாச்சே ஞாபகம் தான் வருது. அதோட தாக்கம் அப்புடி.

அண்மையில் சாய்வித் சித்ரா பேட்டியில் ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட விஷயம் “அப்பவெல்லாம் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டும் தான் தனியா செட் போட்றது எல்லாம். மத்தவங்களுக்கு ஏறகனவே போட்ட செட்ட தான் திரும்ப திரும்ப மாத்தி யூஸ் பண்ணுவாங்க” இப்போ செட்டுக்கு பதிலா கதைக் களம் அப்டித்தான் மறுசுழற்சி செய்யப்படுது போல. கடைசியா வந்த பத்து ஆக்‌ஷன் படம் எடுத்தா அதுல பாதிக்கு மேல ஒரே மாதிரி ட்ரக், துப்பாக்கி, கண்டெய்னர், போர்ட், சிண்டிகேட், ஃபேக்டரி, ஆர்கன் ட்ராஃபிக்கிங் ந்னு அதே அரைச்ச மாவு. How long are we gonna milk Breaking bad / Narcos :( It has become extremely tiresome and monotonous.

பாப்போம்...eagerly waiting for an amazing action entertainer next..!

சனி, 25 நவம்பர், 2023

ஜிகர்தண்டா Double X

 

Pizza வுக்கு முந்தைய கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்கள் தொடங்கி இப்போதைய web series முயற்சிகள் வரையில் அத்தனையையும் பார்த்திருக்கிறேன். அவருடைய குறும்படங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு quirky யான நகைச்சுவையும் திடீரென நிகழும் அசட்டுத்தனமான திருப்பங்களுமாக நிறைந்திருக்கும்.

இதுவரையிலும் தனிப்பட்ட முறையில் எனக்கு பீட்சா தவிர்த்து ஜிகர்தண்டா 1 மட்டுமே நிறைவான திரை அனுபவமாக அமைந்தது. பேட்டை முழுக்க முழுக்க ஒரு fanboy சம்பவம் (ஆண்டவர் விசிறிகள் லோகிண்ணாவை கூட்டிக்கொண்டு வர வேண்டாம்) ஏன் எதற்கென தெரியாமல் ஜாலியாக கொண்டாடிய படம். ஆனாலும் அது கார்த்திக் சுப்புராஜின் trademark படமல்ல. மெர்க்குரி படமெல்லாம் பார்க்கவேண்டும் என்கிற ஆவலே இருந்ததில்லை.

இறைவி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்து பெரிதாக வெற்றியடையாமல் போன திரைப்படம். நடிகராக SJ.சூர்யாவுக்கான மீள்வருகை சிறப்பாக அமைந்தாலும், ட்ரைலர் ஒரு ஆக்ஷன் திரைப்படம் போல வெட்டப்பட்டிருந்தாலும் படம் முழுக்க முழுக்க ஒரு emotional dramaவாகவே அமைந்திருந்தது. தங்களுடைய egoவின் காரணமாக தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளுகிற ஆண்களும் அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிற பெண்களும் என ஒரு மாதிரி நன்றாகவே இருக்கும். இன்றும் content ஆக்கப்படுகிற, ‘ஆண் நெடில்’, 'மனிதி வெளியே வா' மாதிரியான குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல விஷயங்கள் படம் முழுக்க உண்டு.

ஜகமே தந்திரம் கார்த்திக் சுப்புராஜ் மீது ஒரு படைப்பாளியாக வைத்திருந்த நம்பிக்கையை மொத்தமாக உடைத்த படம். இவ்வளவு மேம்போக்காகவும் அலட்சியமாகவும் ஒரு திரைப்படம் இயக்க முடியுமாவென யோசிக்க வைத்தது. மஹான் கொஞ்சம் 50/50. திரையரங்கில் வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என யோசிக்க வைத்த படம்.

கார்த்திக் சுப்புராஜின் திரைப்படங்களில் அரசியல் எனப் பார்த்தால் ஈழ அரசியலை மட்டும் தனது படங்களிலும் வலைத்தொடர்களிலும் பேசி வந்ததைத் தாண்டி வேறெதுவும் இருந்ததில்லை. அது போக அவருடைய படங்களைப் பார்க்கையில் அவர் ஒரு retro-obsessed wannabe Quentin Tarantino ரசிகர் தானோ என்ற வகையில் குறைத்து மதிப்பிட்டிருந்தேன். அத்தனையையும் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மாற்றியிருக்கிறது

ஒரு கொடூர கேங்க்ஸ்டரை பிடிக்கும் பொருட்டு காவல்துறையின் துணையுடன் குழுவுக்குள் அனுப்பப்படுகிற ஒரு சராசரி திரைக்கலைஞன், அவன் வந்த நோக்கம் வேறு; இறுதியில் நடப்பது வேறு. இதை கதையின் மையமாக வைத்து ஒரு பரபரப்பான மசாலா திரைப்படமாக எடுக்கப்பட்டது ஜிகர்தண்டா முதல் பாகம். அதே கதைக் கருவை 70/80கள் பின்னணியில் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 

பிரதமராகும் எண்ணத்துடன் அதிகார வெறிபிடித்துத் திரியும் ஒரு பெண் அரசியல் தலைவர், தன் திரை பிரபலத்தின் மூலம் முதல்வராக முயலும்/விரும்பும் நடிகர், தென் மாவட்டங்களில் ரவுடிகளின் துணையுடன் ஆளுமை செலுத்தும் அரசியல்வாதி, யானைகளைக் கொடூரமாகக் கொல்லும் ஒருவன், அவனை பிடிப்பதற்காக காட்டில் வாழும் பழங்குடி மக்களை அரசாங்கத்தின்  துணையுடன் துன்புறுத்தும் காவல்துறை, ஷெட்டானி ஆட்கள் அரசு/காவல்துறை என இரண்டு பக்கமும் மாட்டிகொண்டு தவிக்கும் பழங்குடி மக்கள், இந்த பழங்குடி மக்களுள் ஒருவனாக இருந்தாலும் அவர்களுக்காக போராடாமல் தன்னுடைய வசதிக்காக வாழ்கிற ஒரு கேங்க்ஸ்டர் , அந்த கேங்க்ஸ்டரின் சினிமா ஆசையை பயன்படுத்தி அவனை கொன்று போலீசாகத் துடிக்கும் ஒரு போலி இயக்குநர்..! இவர்களுக்கிடையேயான கதை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

 இது போக படம் முழுக்க க்ளிண்ட் ஈஸ்ட்வுட், வீணை பாலச்சந்தர் , ரே தாசன், சத்யஜித் ரே, அலியஸ் சீஸர், க்ளிடீஸ் திரையரங்கம் என ஏகப்பட்ட references/tributes.
கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் கொண்டாடப்படக் காரணம் படத்தின் இரண்டாம் பகுதி தான் என நினைக்கிறேன். இந்திய சினிமாவின் தற்போதைய வழக்கமான ‘க்ளைமாக்ஸ்ல வர்ர பெரிய துப்பாக்கி’ மாதிரி ஒரு காட்சியை வைத்து அல்லியஸ் சீஸர் பழங்குடி மக்களுடன் சேர்ந்து காவல்துறையினரை எதிர்த்து சுட்டு வீழ்த்தியிருந்தாலோ, அல்லது அதே துப்பாக்கியை ரே தாஸன் எடுத்திருந்தாலோ இது KGF போன்ற ஒரு மாஸ் மசாலா திரைப்படமாகியிருக்கும்.

 But it was a conscious decision from Karthik Subburaj to not do that, as he mentioned in an interview. ”எனக்கு அத பண்ண வேண்டாம்னு தோணுச்சு. அப்படி இருக்க வேண்டாம்னு விட்டுட்டேன்” என்பது போல சொல்லியிருந்தார். 
அதற்கு பதிலாக ரேதாஸன் சொல்வது கலை தான் என் ஆயுதம். சினிமா தான் என் ஆயுதம் என்பது தான். ஒரு utopian கனவு போலத் தெரிந்தாலும் அதிலிருக்கிற உண்மைத் தன்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. இது தான் என்னுடைய அரசியல், அதனை இப்படித்தான் என் திரைப்படங்களின் வழியாகப் பேசுவேன் என கார்த்திக் இந்தப் படத்தின் வழியாக அறிவித்திருப்பது போல தோன்றுகிறது. திரைப்படம் அவருடைய சொந்தத் தயாரிப்பு என்பதும் அந்த சுதந்திரத்துக்கான காரணமாக இருக்கலாம். 

ராகவா லாரன்ஸைப் பொருத்த வரையிலும் இது தான் அவருடைய career best எனச் சொல்லலாம். அதுவும் எஸ்.ஜே.சூர்யா மாதிரி ஒருவர் ஃப்ரேமில் இருக்கும்போது அவரைத் தாண்டி தான் ஸ்கோர் செய்வதெல்லாம் பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா அவருடைய வழக்கமான over the top theatrics எதுவும் இல்லாமல் (ஒரு சில காட்சிகள் தவிர்த்து) ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். நிமிஷா சஜயனைப் போன்ற ஒரு நடிப்பாற்றல் மிகுந்த திறமையாளருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இசையமைப்பாளர் சந்தோஷ் தன் பங்குக்கு பாடல்களிலும் பின்னணி இசையிலும் அடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதிலும் ஜிகர்தண்டா முதல் பாகத்தின் பின்னணி இசைக் கோர்ப்புகளை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்த விதம் இடைவேளையின் போதான அசால்ட் சேது இசையும், இறுதியில் ஒலிக்கிற உயிர்ப்பிச்சை இசையும் அவ்வளவு பொருத்தம். ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு internalize செய்து பின்பு வேறு வடிவில் வெளிப்படுத்துவது கலைஞர்களுக்கான/படைப்பாளிகளுக்கான முக்கியமான கூறு. அதனை கார்த்திக் ஒரு வகையில் சிறப்புற செய்திருந்தாலும், சந்தோஷும் இத்திரைப்படத்தின் கதையையும் கார்த்திக் சுப்புராஜின் நோக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு இசையில் வெளிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. 

இந்த படத்துக்குள் படமெடுக்கிற meta narrative ஐ தமிழில் பலரும் முயன்று பார்த்திருக்கிறார்கள் . இதில் நமக்கு நல்ல உதாரணங்களும் உண்டு (ஜிகர்தண்டா 1) எடுபடாத உதாரணங்களும் உண்டு (உத்தம வில்லன், கதை திரைக்கதை வசனம் இயக்கம்). ஜிகர்தண்டா முதல் பாகத்தில் கூட அந்த அ.குமார் படம் கதையுடன் கொஞ்சம் ஒட்டாமல் ஆனால் முக்கிய பங்கு வகிக்கிற மாதிரி இருக்கும். டபுள் எக்ஸைப் பொருத்த வரையில் இந்த meta narrativeஐ மிகச்சிறப்பாக திரைக்கதையாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
Everything everywhere all at once திரைப்படம் பார்த்த போது ஒரு மாதிரி நிறைவுடன் கொஞ்சம் புன்னகையுடன் திரையரங்கிலிருந்து வெளியே வந்தேன். அதன் பிறகு அந்த மாதிரியான ஒரு நிறைவைத் தந்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான்.

கார்த்திக் சுப்புராஜ் அவருடைய படங்களில்  வைத்த இரண்டு வசனங்கள்

1. நாம பேசக்கூடாது... படம் தான் பேசனும்
2. நான் செஞ்சதுலயே சிறப்பான தரமான சம்பவம்

இதையே இந்தப்படத்துக்கும் பொருத்தமாகச் சொல்லிக் கொள்ளலாம். 

You Don't Choose Art. Art Chooses You <3

திங்கள், 13 மார்ச், 2023

Everything everywhere all at once

 

இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிற முதுமை வரை சிறியதும் பெரியதுமாய் பல முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. கல்வி, உணவுத்தேர்வு, வாழ்க்கை முறை, காதல், திருமணம், தொழில், நட்பு , குடும்பம் என எல்லாவற்றிலுமே நமக்கு முன் வாய்ப்புகளும் கேள்விகளும் கொட்டிக்கிடக்கும்போது, அவற்றுள் நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது நமக்கு இது சரியானதாக இருக்கும் என நாம் நம்பும் ஒன்றையோ தேர்ந்தெடுப்போம். அந்த நேரத்து முடிவு நம் வாழ்வை என்னவாக மாற்றப் போகிறதென யாராலும் கணிக்க முடியாது.

ஒருவேளை , காலம் நமக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்து, நமது முடிவுகள் குறித்த தெளிவை ஏற்படுத்தும்போது  எதையுமே மாற்ற முடியாமல் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம். ஆனால் நம் மனதை ஆற்றிக்கொள்ளும் பொருட்டு ,” ஒரு வேளை நாம் இப்படிச் செய்யாமல், இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்காமல் வேறொன்றை தேர்ந்தெடுத்திருந்தால் கட்டாயம் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்” என சமாதானம் சொல்லி கொள்வோம். உண்மையில் வேறு பாதையில் சென்றிருந்தால் வாழ்வு எப்படி இருந்திருக்குமென யாராலுமே கணிக்க முடியாது . அப்படி கணிக்கவோ, அந்த உலகில் நமது வாழ்க்கை நாம் விரும்பியபடி அமைந்திருக்கிறதாவென தெரிந்து கொள்ள முடிந்தால் ? இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையிருந்து விடுபட்டு விருப்பமான வேறொரு வாழ்க்கைக்குள் புகுந்து கொள்ள முடிந்தால் ?

இதுதான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything everywhere all at once) திரைப்படத்தின் அடிநாதம்.  திரைப்படம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்பு ’மல்டிவெர்ஸ்’ (Multiverse) என்றால் என்னவென்று பார்ப்போம். அண்மையில் வெளிவந்த ஸ்ப்டைர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸின் பல திரைப்படங்களிலும் லோகி, வாண்டாவிஷன் உள்ளிட்ட வலைத்தொடர்களிலும் இந்த மல்டிவெர்ஸ் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால் நாம் வாழும் இந்த உலகம் இடம்பெற்றிருக்கிற பிரபஞ்சத்தைப் போலவே , பரந்து விரிந்த வெளியில் பல பிரபஞ்சங்கள் இருக்கலாம். அதில் நம்முடைய வேறொரு பிரதி இந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையில் வேறொரு குணாதிசயம் கொண்டவராக வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவை நாம் பயணித்து செல்ல முடியாத தூரத்தில், வேறொரு பரிணாமத்தில் இருக்கலாம். இந்த கருத்தாக்கமே மல்டிவெர்ஸ் என்றழைக்கப் படுகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இந்த பிரபஞ்சங்களுக்கு இடையேயான பயணத்தைs சாத்தியப்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் , என்கிற கற்பனையே பல படைப்பாளிகளையும் இந்த கருத்தாக்கத்தை நோக்கி திருப்பியிருக்கின்றது.

எவ்ரிதிங் எவ்ரிவேர்... திரைப்படமும் அப்படியொரு மல்டிவெர்ஸில் இடம்பெறும் கதை தான். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான எவ்லின் க்வான் வாங் என்கிற பெண், அவர் நடத்தி வரும் சலவை நிறுவனத்தின் கணக்குவழக்குகளை சரிபார்ப்பதில் தொடங்குகிறது திரைப்படம். எவ்லினின்  கணவர் வேமண்ட் வாங், மகள்  ஜாய் வாங் உள்ளிட்டோரின் அறிமுகத்துடன் , அவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இல்லாததும் இவர்களுக்கிடையேயான மனத்தாங்கல் குறித்தும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன்பின் எவ்லின் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்யும் பொருட்டு  தனது குடும்பத்தாருடன்  வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கே இருக்கிற கண்டிப்பான பெண் அலுவலர் எவ்லினிடம் கணக்குகள் குறித்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே எவ்லின் திடீரென அங்கிருந்து  நாற்காலியுடன் வேறெங்கோ இழுத்துச்செல்லப்படுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என உணரும் முன்பே அவருடைய கணவர் வேமண்ட் அவர்முன் தோன்றி தான் வேறொரு உலகத்திலிருந்த வந்திருப்பதாகவும் எவ்லின் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் ஒரு சக்தி வாய்ட்ந்த எதிரியின் மூலம் பெரும் ஆபத்து நேர இருப்பதாகவும் சொல்ல அங்கிருந்து திரைப்படம் வேறொரு களத்தில் பரபரப்பாக பயணிக்கத் துவங்குகிறது.

பின்பு வெவ்வேறு உலகங்களில் புகழ்பெற்ற ஆக்‌ஷன் நடிகையாகவும், சமையல் கலைஞராகவும், பாடகியாகவும், விஞ்ஞானியாகவும், பாறாங்கல்லாகவும் (!) இருக்கும் பல எவ்லின்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்க்கிறோம். எவ்லினுக்குக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நேரப்போகும் ஆபத்து என்ன ? யார் அந்த சக்திவாய்ந்த எதிரி? எவ்லினுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? எவ்லின் சிக்கல்களை முறியடித்து இந்த உலகிற்கு திரும்பினாரா இல்லையா ? என்பதெல்லாம் மீதிக்கதை.

எவ்லினாக மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கும் மைக்கேல் யோஹ் (Michael Yeoh)  க்ரவ்ச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன் (Crouching tiger hidden dragon) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சீன/ஹாங்காக் திரைப்படங்களில் 35 ஆண்டுகளாக நடித்து வருபவர். உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசானுக்கு இணையாக பெரும்பாலான சண்டைக்காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்த நடிகை என்ற பெருமையும் மைக்கேல் யோஹ்வுக்கு உண்டு. ஜாக்கிசான் பற்றிக் குறிப்பிடுகையில் மற்றுமொரு ருசிகரமான சம்பவத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

 டேனியல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் இயக்குநர்களான டேனியல் க்வான் (Daniel Kwan) டேனியல் ஷெய்னெர்ட் (Daniel Scheinert) இருவரும் ஜாக்கிசானை மனதில் வைத்தே கதையை எழுதியிருக்கின்றார்கள். சண்டைக்காட்சிகள் ,அபத்த நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இந்தப் படத்துக்குத் தேவையான அத்தனைக்கும் ஜாக்கி பொருத்தமானவராக இருப்பார் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால் அவர்கள், அவர்கள் சீனா சென்று ஜாக்கிசானை அணுகியபொழுது அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகே டேனியல்ஸ், பெண் பாத்திரத்தை மையமாக வைத்து கதையை மாற்றி எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 

மைக்கேல் யோஹ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதும் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததும் யாருமே எதிர்பாராத ஒன்று. ’எவ்ரிதிங் எவ்ரிவேர்’ திரைப்படம் உலகம் முழுக்க பெருவெற்றி பெற்றதை அறிந்த ஜாக்கிசான் , யோஹ்வுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு டேனியல்ஸ் இந்தப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதையும் சொல்லி குறுந்தகவல் அனுப்ப, ‘your loss my bro'  என விளையாட்டாக அவரைக் கேலி செய்திருக்கிறார் யோஹ். இதுமட்டுமின்றி எவ்லினின் கணவர் வேமண்ட் பாத்திரத்தில் ஜாக்கிசானைப் போலவே தோற்றமளிக்கும் கேஹ்யூய் க்வானையும் நடிக்கவைத்து குறும்பு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். 

’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் . அதீதமாக எளிமைபடுத்தி சொல்வதானால் ஒளிப்பதிவு, ஒப்பனை, காட்சியைப் படம்பிடிக்கும் விதம்,  கோணம் ஆகிவற்றில் மாறுபாடு செய்தல், ப்ரொடக்‌ஷன் வடிவமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு, கலை இயக்கம், உள்ளிட்டவற்றின் துணையுடன் உருவாக்கப்படுபவை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) எனவும் கணினியின் துணைகொண்டு டிஜிட்டலாக மேம்படுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு,உருவாக்கப்படுபவை விஷ்வல் எஃபெக்ட்ஸ் (VFX) எனவும் அழைக்கப்படுகின்றன.

ஹாலிவுட் திரைப்படங்களும் அவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியத் திரைப்படங்களும் பல நூறு கோடிகளில் செலவு செய்து, பல நூறு தொழிநுட்பக் கலைஞர்களின் துணை கொண்டு VFX செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், முறையான பயிற்சியோ முன்னனுபவமோ இல்லாமல் தாங்களாகவே கிராஃபிக்ஸ் வடிவமைப்பைக் கற்றுக் கொண்ட ஐந்தே  ஐந்து  தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட VFX  காட்சித்துண்டுகளை உருவாக்கியிருக்கிறது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ படக்குழு. VFX இயக்குநர் ஸ்சாக் ஸ்டல்ட்ஸ் (Zak Stoltz) உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஐவரும் லாக்டவுன் காலத்தில் தங்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய கணினியையே பயன்படுத்திபடி வீடியோவில் பேசிப் பேசியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் இத்தனை பெரிய காரியத்தை சாதித்திருக்கின்றார்கள். 

பெரும் ஸ்டூடியோக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த பத்தாண்டுகளாக  சிறப்பான சுயாதீன திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் A24 என்னும் நிறுவனமே  ’எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அவர்களுடன் இணைந்து இயக்குநர்கள் டேனியல்ஸும், ஹாலிவுட்டில் மார்வெல்லுக்காக பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்களும் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார்கள். இரண்டரை கோடி டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுக்க பத்தரை கோடி டாலர்களை சம்பாதித்திருக்கின்றது. அதுமின்றி ரசிகர்கள், விமர்சகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றது.

’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படம்  சிறந்த நடிப்பு, அபாரமான சண்டைக்காட்சிகள், அட்டகாசமான VFX, பொருத்தமான பின்னணி இசை என அத்தனையையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு வேறு சில பல காரணிகளும் உண்டு. தங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் புலம் பெயரும் பெற்றோர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பதின்பருவ இளைஞர்களின் மன அழுத்தம், பெறோருக்கும் அவர்களுக்குமான தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள், தனிமனிதர்கள் எதற்காகவாவது ஒடிக்கொண்டே இருக்க வேண்டிய போட்டிச்சூழல் , இருத்தலியல் சிக்கல்கள், என எல்லாவற்றையும் ஒரு தத்துவார்த்தமான அதே சமயம் அசட்டுத்தனமான நகைச்சுவையினூடாக உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதே அந்த உளப்பிணைப்பிற்குக் காரணம் எனக் கொள்ளலாம்.


’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்...’ -

வெள்ளி, 30 டிசம்பர், 2022

விட்னஸ் - Witness - 2022


இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மிக முக்கியமான திரைப்படம் 'விட்னஸ்' தான். மலக்குழி மரணங்கள் (உண்மையில் அவற்றை கொ.லை.கள் என்றே சொல்ல வேண்டும்) நம் நாட்டின் மிகப்பெரிய அவலம். பல வருடங்களாக யாராரோ என்னென்னவோ முயற்சிகள் செய்தும் சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிறகும் கூட தடுக்க முடியாத துயரம்.

இந்தியாவில் கழிப்பறை சார்ந்தும், துப்புறவு பணியாளர்கள் சார்ந்தும் சாதியின் அடிப்படையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்து Where India Goes, Unseen (The story of India's manual scavengers), மாதிரியான ஒரு சில புத்தகங்களிலும்.. கக்கூஸ் ஆவணப்படத்தின் வாயிலாகவும் பேசியிருக்கிறார்கள். பெஸாவாடா வில்சன் மாதிரியான தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் இது குறித்து கேள்வி எழுப்பியபடியே இருக்கின்றார்கள்.  புகைப்படக் கலைஞர் பழனிகுமார் கடந்த 6/7 ஆண்டுகளாக மலக்குழி மரணங்களை தன்னுடைய புகைப்படங்களின் வழியாக ஆவணப்படுத்தி வருகிறார். 

எத்தனை பேர் எவ்வளவு போராடியும் இந்த சிக்கலுக்கு ஒரு நிரந்தரமான தீர்வோ முடிவோ இதுவரை இல்லை. கடந்த 27 ஆண்டுகளில் 1014 பேரின் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது  ஒன்றிய அமைச்சரைவையின் (Ministry for social justice and empowerment) அதிகாரப்பூர்வமான தகவல். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம்.

 இதுவரை மலக்குழி மரணங்களுக்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் 99 சதவிகிதம் இந்திய தண்டனை சட்டபிரிவு 304A, 1860 ன் படி அலட்சியம் காரணமாக நிகழ்ந்தவை என்றே பதியப்பட்டிருக்கின்றன. (Death due to negligence) ஒரே ஒரு சதவிகிதம்  மட்டுமே Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 ன் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. (link for article

விட்னஸ் திரைப்படத்தின் கரு மேற்சொன்ன தகவலின் அடிப்படையிலானது தான். ஒரு 20 வயது  இளைஞனின் அகால மரணமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தான் திரைப்படம். ஒரு பரபரப்பான investigative thriller திரைப்படமாக மாற்றிவிடக்கூடிய அத்தனை சாத்தியமும் இருந்தாலும் அதைச் செய்யாமல் எந்த வித romanticismம் இல்லாமல் நிதானமாக தான் சொல்ல வந்ததை நேர்பட சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதுவே திரைப்படம் சொல்ல வந்த கருத்தை மிக ஆழமாக நம் மனதில் பதியவைத்திருக்கிறது.
கூடவே பெருநகரின் மத்தியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு புறநகர்ப் பகுதிகளில் குடிவைக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், இந்த அரசு இயந்திரத்தின் அமைப்புச் சிக்கல்களில் அவர்கள் சிக்கித் தவிப்பதையும் கதையினூடாகவே பேசியிருக்கிறார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை நேரடியாக வெளிப்படையாக சித்தரித்திருக்கின்றார்கள். (இதுல என்ன பல பேருக்கு கோவம்/வெறுப்பு/வன்மம்னு தெரியல) உண்மையில் தோழர் செல்வா  நிஜவாழ்வில் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற பணியையே இந்த திரைப்படத்தில் தான் ஏற்ற பாத்திரமாகவும் செய்திருக்கிறார். (அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு - விகடனில் செல்வா தோழர் பற்றி எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் கட்டுரை இணைப்பு

 
இத்தனை ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத இந்த அவலத்திற்கு இனியேனும் ஒரு முடிவு பிறக்குமா தெரியவில்லை. 
ஆனால் இப்படியொரு பிரச்சனை இருப்பதையும், இதன் பின்னணியில் இருக்கிற சாதியின் அடிப்படையிலான சிக்கல்களையும் குறித்து ஒரு உரையாடலை ஏற்படுத்திய வகையில் இந்த ஆண்டின் கருத்தியல் அடிப்படையில் மிக முக்கியமான திரைப்படமாகிறது விட்னஸ். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 

Witness (Tamil) movie is streaming on Sony Liv OTT

திங்கள், 10 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - திரையனுபவம்

 


பொன்னியின் செல்வன் was a delightful watch for me...! 

 
முதல் நாள் காலையிலேயே அடித்துப் பிடித்துப் போய் படத்தைப் பார்த்துவிட்டாலும், நேற்றிலிருந்து இன்றுவரை அந்த அனுபவத்தை நினைத்து அசைபோட்டபடியே இருக்கிறேன்.
 
பல வருடங்களுக்கு முன்பு பொ.செ நாவலை வாசித்திருந்தாலும் இப்போது திரையில் பொன்னியின் செல்வனைக் காணும் பொருட்டு மறுவாசிப்பு ஏதும் செய்யாமல் , கதையையும் பாத்திரங்களும் மேலோட்டமாக நினைவில் வைத்திருந்தபடியே போனேன். பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் எதையுமே பொய்யாக்காமல் பொ.செ சிறப்பானதொரு அனுபவமாக அமைந்தது. 
 
குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இயக்குநர் மணிரத்னம் இப்படி ஒரு பெருங்கதையை (2000+ பக்கங்கள் !) எடுத்துக் கொண்டு , படத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய நிகழ்வுகள், அதற்குப் பொருத்தமான பாத்திரங்கள் எனத் தேர்வுசெய்து ஒட்டுமொத்தமாய் திரையாக்கம் செய்திருக்கும் விதம், மிகச்சிறப்பு. Well crafted and presented ! ❤ 
 
அடிப்படைக் கதையையும் கதை நகரும் போக்கையும் முடிவெடுப்பதில் அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்திருக்கும். ஆனால் அதுவே சரியான விதத்தில் திரைக்கதை அமைக்கவும் உதவியிருக்கலாம். நடிகர்களின் பங்களிப்பைப் பற்றியும் , ரஹ்மானின் இசை எந்தளவுக்கு திரையனுபவத்தை உயர்த்தியிருக்கின்றது என்பதையும் அனைவருமே பேசிவிட்டனர்.
 
ஒரு வரலாற்றுப் புதினம் படமாக்கப் படுகிறது என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றும் over dramatic, larger than life, heroic , visual grandeur காட்சிகள் அத்தனையையும் மிக இயல்பாகவும் சாகசத்தன்மை இன்றியும் காட்சிப்படுத்திருப்பது (சண்டைக் காட்சிகள் உட்பட). பெரிய ஏற்ற இறக்கங்களோ, திருப்பங்களோ, ரசிகர்களை மயிர்கூச்செறிய வைக்கும் cinematic தருணங்களோ இல்லை.இதுவே திரைப்படத்துக்கு பின்னடைவாகவும் அமையலாம். (Pan India angle might not work ?! )
 
போலவே கதையில் குறைவான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களை மனதில் பதியவைக்க போதுமான திரைநேரம் (screen time) இருந்திருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் உண்டு; அத்தனையும் முக்கியமான பாத்திரங்கள் வேறு. நாவல் அளவுக்கு பாத்திரங்களை நிறுவுவதற்கான நேரம் எடுத்து கொள்ள முடியாதபடியால் பரபரவென கதை ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப் படுத்தியபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. 
 
இறுதியில் நமக்கு கிடைத்திருக்கவேண்டிய திரை அனுபவம் almost there என்றே முடிந்தாலும் (எனக்கு), இரண்டாம் பாகம் நம் அனைவரின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் சிறப்பான ஒன்றாக அமையுமென நினைக்கிறேன். மேலும் இத்தனை ஆண்டுகளாக மணிரத்னம் தனக்கென வைத்திருந்த பல கட்டுப்பாடுகளையும் மீறி, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தக்கூடிய ஒரு திரைப்படத்தை எடுத்து , அதனை வெற்றிப்படமாகவும் தந்திருக்கிறார். 
 
A well adapted historical fiction from Tamil film industry...! ❤ Thank you Ponniyin Selvan team...! ❤ 
*********************************************************************************
 
இத்துடன் மூன்றாவது முறையாக பொன்னியின் செல்வன் பார்த்தாயிற்று. உட்லண்ட்ஸ், தி.நகர் கிருஷ்ணவேணி, கேசினோ....இவற்றுள் மிகச்சிறந்த ஒளி/ஒலி அனுபவம் வாய்க்கப்பெற்றது தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் தான் (பரிந்துரைத்த ஷ்ருதி டிவி கபிலன் அண்ணனுக்கு நன்றி ❤️)
எனக்குப் படம் இன்னும் அலுக்கவேயில்லை. திரையிலும், பின்னணி இசையிலும் சின்னச்சின்னதாய் பல புதிய விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. 
 
அருண்மொழி - வந்தியத்தேவன் முதல் மோதலின் போதான பின்னணி இசை ஒரு மாதிரியான Doo wop + a capella கலவையாக இருந்தது. அந்த சண்டைக்காட்சியில் வேகம் கூடக்கூட பின்னணியும் ராட்டினமாய் சுற்றத்தொடங்குகிறது.
'சாய சஞ்சரே' என்கிற நந்தினியும் குந்தவையும் சந்திக்கிறபோது ஒலிக்கிற சேர்ந்திசைப் பின்னணிப் பாடல்,
 
நந்தினிக்காக மட்டும் அவ்வப்போது ஒலிக்கிற; துயரத்தையும் வஞ்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் அந்தக்குரலிசை,
வந்தியத்தேவன் கோட்டையிலிருந்து தப்பி ஓடும்போது ஒலிக்கிற இசைக்கோர்ப்பு,
 
போர்க்காட்சிகளுக்கான முழக்கங்களும் பின்னணி இசையும், இறுதிக்காட்சிக்குப் பிறகு ஒலிக்கிற அந்த சோகப்பாடல் என அத்தனையுமே தனித்தனியாக ரசிக்கும்படியான இசைத் துணுக்குகள். ரஹ்மான் பொன்னியின் செல்வன் பின்னணி இசைக் கோர்ப்பை வெளியிடப்போகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
 
கதை, வரலாறு, புனைவு, அரசியல் என இந்த திரைப்படத்தைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றையும் தாண்டி திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மூன்று முறையும் அந்தக் காட்சிகளின் போது சிலிர்த்துப் போனது எனக்கு.
 
(mild spoilers ahead) 
 
இலங்கைக்கான மணிமுடியை மறுக்கும் அருண்மொழி வர்மனிடம், மண் வரைப் பணிபவன் வான் வரை உயர்வான் என பெளத்த பிக்கு சொல்லி வாழ்த்துகிற காட்சி;
 
தங்களை பாண்டிய ஆபத்துதவிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஊமைராணி பற்றி வந்தியத்தேவனிடமும் ஆழ்வார்கடியானிடமும் அருண்மொழிவர்மன் சொல்லும் போது 'யார் இந்தத் தாய். எதற்காக ஒரு காவல் தெய்வம் போல என்னைப் பின் தொடர்ந்து காக்கிறாள்?' எனக் கேட்குமிடம்;
 
குந்தவை ஆதித்த கரிகாலனை சந்திக்கிறபோது அவர்களுக்குள் நிகழ்கிற உரையாடலின் இறுதியில் நந்தினியைப் பற்றிப் பேச்சு வர.. 'அவள் எப்படி என்னை மறந்தாள்?' என ஆதித்த கரிகாலன் கேட்குமிடம்.
 
(spoiler ends)
 
ரசிக்கும்படியான காட்சிகளைப்போலவே கொஞ்சம் எள்ளலுக்குரிய காட்சிகளும் உண்டு 😝 எ. கா. சோழ தேசத்து அரசர்கள் அனைவரின் உடை அமைப்பும் , சிகையலங்காரமும் கொஞ்சமாய் ஜப்பானிய சாமுராய்களைப்போலவே இருந்தது; அதுவும் silhouette காட்சிகளில் அந்த சாயல் அப்பட்டமாகவே தெரிந்தது.
 
போலவே நாகத்தீவு (இலங்கை) தொடர்பான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது. மரக்கலம்/படகுகள் வந்து நிற்கிற அந்தக் கரைப்பகுதி பிரபலமான சுற்றுலாத்தலம் என நினைக்கிறேன் ( புக்கெட்டின் ஜேம்ஸ்பாண்ட் தீவு?) இலங்கையின் தம்பள்ளையில் நடக்கிற காட்சிகளில் துணைநடிகர்கள் கூட்டத்தினரில் பெரும்பலானோர் கிழக்காசிய முகங்களாக இருந்தது, கதை நிகழும் இடம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படி இன்னும் நிறைய 😊
ஒவ்வொன்றாக ரசித்து மனதில் அசைபோடவும் கேள்வி கேட்கவும் படத்தில் பல காட்சிகள் உண்டு.
 
எப்படியும் இன்னொரு முறை Imaxஇலும் பார்த்து விடுவேனென நினைக்கிறேன் 🙈☺️ பிறகு மறுபடியும் எழுதுவோம். இரண்டாம் பாகம் வருவதற்குள் நாவலை மீண்டுமொரு வாசித்து விட்டு, இந்த புனைவுலகில் முழுமையாக மூழ்கிவிடுவேனென நினைக்கிறேன் 🤣😅

சனி, 11 ஜூன், 2022

விக்ரம் - 2022 - There lived a ghost

விக்ரம் பாத்து முடிச்சு ரெண்டு மூனு நாளா திரும்பத் திரும்ப படத்த மண்டைக்குள்ள ஓட்டிப் பாத்து, ஒவ்வொரு mass moment ஆ  recollect பண்ணி சந்தோஷப் பட்டுட்டு இருந்தேன்.

பயங்கரமா பசியெடுத்து ரொம்ப நேரம் ஆன பிறகு சாப்பாடு கெடச்சா அது நமக்கு ரொம்ப பிடிச்ச உணவா இருந்தாலும் வழக்கமா சாப்பிட்ற அளவு கூட இல்லாம கொஞ்சமா சாப்ட்ட உடனள தெகட்டிடும். ஒரு சில திரைப்படங்களுக்கு ஏற்பட்ட இந்த அதீத hype அந்தப் படங்கள ஒரு சராசரி ரசிகனா ரசிக்க முடியாம பண்ணியிருக்கு.

ஒரு சில திரைப்படங்கள் தான் இதுக்கு விதிவிலக்கா அந்த hypeக்கும் குடுத்த காசுக்கும் worthஆ இருந்துருக்கு.
இந்த வருஷம், முதல்ல நான் அப்டி என்னை மறந்து தேட்டர்ல ரசிச்ச படம் 'மாநாடு'. அவ்ளோ flawless ஆ ன்னு கேட்டா இல்லைதான்... ஆனா சின்னச்சின்ன விஷயங்கள ஊதிப் பெருசாக்கி பாக்க ஆரம்பிச்சா எந்த கலைவடிவத்தையும் முழுசா ரசிக்க முடியாம போயிடுமோங்குற பயத்துல I always choose to tell myself, if you get lost in a movie for those two and half hours then it's totally worth itனு. அதுக்கப்புறம் 'விக்ரம்' படத்துக்கு தான் அப்படியொரு feel கெடச்சுது.

கமல்ங்குற பேரே excitementக்கு போதுமானதா இருந்தாலும் Lokesh and team + Fahad+ VJS +Anirudh இவங்க எல்லாருடைய பெயர்களும் சேர்ந்ததால எதிர்பார்ப்பும், excitementம் இன்னும் அதிகமா இருந்துச்சு. கடைசியா படம் வெளியாகி தேட்டர்ல பாக்கும் போது கொஞ்சம் கூட ஏமாத்தல.

Mild spoilers ahead

Masked men sequenceல தொடங்கி அமர் ஒவ்வொரு விஷயமா தேடித்தேடி investigate பண்ணப் பண்ண பரபரப்பு அதிகமாகிட்டே போனாலும் Interval block reveal க்கு கொஞ்சம் முன்னாலேயே ' இந்த sceneல நான் தான் ஹீரோ' dialogue kinda gave it away... Still I was so lost and engrossed in the movie that I was screaming my hearts out. 

Stunt choreo, cinematography, editing, இசைன்னு எல்லாமே சிறப்பா அமைஞ்சு அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயார்படுத்திகிட்டே இருந்த மாதிரி இருந்தது. Anirudh has done a tremendous job as well (இசை பத்தி டெக்னிக்கலான விஷயங்கள எனக்கு சொல்லத்தெரியாது.. My opinion is just based on the engagement factor)

 கதை,கைதி படத்துல நடக்குற சம்பவங்களை இந்தப் படத்தோட இணைச்ச விதம், flow of events, scene sequences, கடைசில ரோலக்ஸ் intro,  பத்தியெல்லாம் எல்லாருமே  நிறையவே பேசிட்டாங்க. நாம புதுசா சொல்ல எதுவுமில்ல.

ஹாலிவுட்ல Harrison Ford, Clint Eastwood, Mel Gibson, Bruce Willis, Liam Neeson, Denzel Washington, Samuel Jackson மாதிரியான ஆக்ஷன் கிழ சிங்கங்கள் நடிச்ச பல படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை RED (Retired and Extremely dangerous), Expendables, Equalizer, Shaft, மாதிரியான படங்கள் அந்த பட்டியல்ல உண்டு.

இந்த வகை படங்கள் மேல சொல்லபட்ற முக்கியமான குற்றச்சாட்டு Engagement factor இருக்குற அளவுக்கு emotional factor இல்லன்னு.. விக்ரம் படத்துக்கும் அதே தான் சொல்றாங்க... ரொம்ப shallowஆ இருக்குன்னு தான். இன்னும் dark and grim, emotionally strong plot இருந்துருக்கலாம்னு. But if the movie reaches to the mass audience and satisfies , I don't actually think there's any harm in it. 

ஆனா பிரச்சனை அது இல்ல இவ்வளவு விஷயங்கள மெனக்கெட்டு திட்டமிட்டு பண்ற படக்குழு அந்த emotional depth quotientஐயும் கொஞ்சம் effort போட்டுப் பண்ணா இதே mass appeal படத்தோட output இன்னும் பல காலம் நிலைச்சு நிக்குற ஒரு cult classicஆ மாறலாம் இல்லையா?  ஆனாலும் ஒன்னும் மோசமில்ல. எனக்கு, கர்ணன் தன்னுடைய மகனுக்காக வருந்துற பகுதியும், அதைத் தொடர்ந்த போர் கண்ட சிங்கம் பாடல் பகுதிகளுமே போதுமானதா இருந்துச்சு.

விஜய் சேதுபதியுடைய நடிப்புமே அவருடைய வழக்கமான ஸ்டைல்ல இருந்து மாறுபட்டு நல்லா இருந்துச்சு. ஒரு மாதிரி நளினமா, தன்னை குறுக்கிக் கொள்கிற உடல்மொழியோட ஒரு கொடூர வில்லன் ரோல். கடைசியா இந்த மாதிரி பாத்த வில்லன்  'அஞ்சாதே' படத்துல தயா (Prasanna nailed it - Actually Mysskin thr GOAT nailed it) VJS ஓட intro தொடங்கி கல்யாண fight வரைக்கும் மனுஷன் மெரட்டி விட்ருக்காரு. 

ஃபஹத் பத்தி சொல்லியே ஆகனும். உண்மையில கமலுக்கு இந்திய சினிமால ஒரு protégéன்னு சொல்லனும்னா அதுக்கு எல்லா வகைலயும் தகுதியான ஆள் ஃபகத் பாசில் தான். எப்படி கமல் calibreக்கு விக்ரம் role பஞ்சு முட்டாய் சாப்புட்ற மாதிரியோ ஃபகத்துக்கும் இந்தப்படம் அப்படியே.

Best reveal of the movie ன்னா இடைவேளைக்கு பிறகான அந்த female agent ஓட intro and சண்டை தான். அப்படியொரு goosebumps எனக்கு. 'Raid' ன்னு ஒரு Indonesian படத்துல பெரிய stunt sequence ஒன்னு வரும்... நான் நிறைய முறை பாத்த hand to hand combat அது. அதுக்கப்புறம் தமிழ்ல அந்தளவு intense ஆ பாத்த சண்டை sequence இதான். (இதுலயும் தலைவன் Mysskin has done a similar sambavam with Cheran and a nail cutter knife🔥🔥🔥) 

கடைசி கடைசியா விக்ரம்ல  துப்பாக்கிகள் பத்தி இவ்வளவு details வந்ததும், பலருக்கும் என்னோட all time favorite 'வட்டாரம்' படம் நினைவுக்கு வந்துருக்கு. Facebookல இயங்குற 'வட்டாரம் appreciation club' ஓட நீண்டகால உறுப்பினரா I felt so happy 😜

லோகேஷ் கனகராஜ் உடைய  execution பத்தி தான் திரும்ப திரும்ப யோசிச்சுட்டே இருந்தேன். இப்படி ஒரு ensemble castஅ வெச்சுகிட்டு எல்லா பக்கத்துல இருந்தும் வந்த அழுத்தங்கள் தன்னை பாதிக்க விடாம அட்டகாசமா ஒரு படத்த குடுத்துட்டு இன்னும் நாலு படத்துக்கு தேவையான premiseஐயும் செட்டப் பண்ணிட்டு முடிச்சுருக்காரு. Tremendous efforts and control...! ❤️ வாழ்த்துகள் 

As much as Kamal needed this we Tamil audience also needed this one after disappointing outings from big stars. And it feels wholesome to see him happy and content....! 😊❤️

Please do not miss it on theatres. நான் இன்னும் ரெண்டு மூனு முறையாவது பாப்பேன்னு நினைக்கிறேன்.

Once upon a time
There lived a ghost
He was known to be a killer
And fear the most...

He is not a myth anymore... His name is... 

விக்ரம்ம்ம்ம்ம்... Absolutelyyyy lit 💥💥💥🔥🔥🔥

வெள்ளி, 31 டிசம்பர், 2021

Turning Point : War on terror - Netflix - திருப்புமுனை - 2021

 


 அண்மையில்  அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியதும் , அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மத அடிப்படைவாத தீவிரவாத அமைப்பான தாலிபன்கள் வசம் சிக்கியதும் உலகம் முழுக்க கவனம் பெற்ற ஒரு நிகழ்வு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னணி என்ன ? அதன் பின்னான தீவிரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் என்ன? உண்மையில் அமெரிக்காவின் ஆஃப்கன் உடனான போர் எப்போது, எந்த நோக்கத்திற்காக தொடங்கியது ? தாலிபன்கள் உருவானது எப்படி ? அமெரிக்காவின் ஈராக் மீதான போருக்கு என்ன காரணம் ? இப்படியான இன்னும் பல கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கின்றது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series)

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலுக்கு முன்பு, நான்கு உள்நாட்டு விமானங்கள் கடத்தப்பட்ட செய்தியில் தொடங்கி பின்பு முதல் விமானம் மோதியதும் மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த நூறு மாடிக் கட்டிடத்திலிருந்து இறங்க முயற்சி செய்தது , கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து மக்களை மீட்கப் போராடிய தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்தது, அடுத்தடுத்த விமானங்கள் இன்னொரு கோபுரத்திலும் பெண்டகன் எனப்படும் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை  பெருவளாகத்திலும் மோதியது  என பரப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகிறது தொடர்.

அமெரிக்க இராணுவத்தின் பெரும் பதவியில் இருந்தவர்கள், சட்ட வல்லுநர்கள்,9/11 சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க  முன்னாள் உளவுத்துறையினர்தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர், முன்னாள் தாலிபன் தலைவர்கள், ஆஃப்கன் போர்ப்படைத் தளபதிகள், ஆஃப்கன் அரசியல் தலைவர்கள் என பலருடனான நேர்காணலில் இந்நிகழ்வின் முன்னும் பின்னும் நடந்த பல சம்பவங்களை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அல்காயிதா தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனத் தெரியவந்தபின் அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்கிற வரலாறும் காட்டப்படுகின்றது.

2021 ஆண்டு வரையிலுமான அமெரிக்காவின் ஆஃப்கன் மீதான இருபது ஆண்டுகால போர் தொடங்குவதற்கு முக்கிய தூண்டுகோளாக  இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதத் தாக்குதலே அமைந்திருக்கின்றது. முன்பு 1979முதல் 89 வரையிலுமாக பத்தாண்டுகள் ஆஃப்கானிஸ்தான்ரஷ்யா இடையிலான போரின் போது ஆஃப்கன் போராளிகளான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்காவே மறைமுகமாக போர்ப்பயிற்சியும் ஆயுதங்களும் தந்து உதவியதாக சொல்லப்படுகிறது. பின்னாட்களில் இவர்களே தாலிபன்களாக மாறியதாகவும், ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாத அமைப்பிலும் சேர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்க இராணுவம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து சிறை பிடித்த நூற்றுக்கணக்கான கைதிகளை க்யூபாவில் அமைந்திருக்கிற க்வாண்டனமோ பே ( guantanamo bay) சிறைச்சாலையில் அடைத்து வைத்து enhanced interrogation techniques என்கிற பெயரில் செய்த கொடுமைகளைப் பற்றியும் பேசியிருக்கின்றார்கள். இவர்களில் 9/11 சம்பவத்துடன் நேரடித் தொடர்புடைய குற்றவாளிகள் ஓரிருவர் இருந்திருந்தாலும் , பெரும்பாலானோர் சட்டப்படி எந்தக் குற்றமும் சாட்டப்படாமல் (accused) தீவிரவாதிகளாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாகவோ இருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே சிறைபிடிக்கப்பட்டு ஆஃப்கானிஸ்தானிலிருந்தும் இன்னபிற நாடுகளிலிருந்தும்  நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனையையும் அனுபவித்திருக்கிறார்கள்

  பெட்டிச்செய்தி:


ஒரு சர்வதேசக் குற்றவாளியோடு தொடர்பில் இருந்ததாகவும், அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களுக்குக் காரணமானவர்களுள் ஒருவராகவும் கருதப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார் மொஹ்மதூ ஸ்லாஹி.அவருடைய நாடான மொரிட்டானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள க்வாண்டனமோ தீவின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட மொஹ்மதூ, செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து, பின்பு பலரின் முயற்சியாலும் சட்டப்போராட்டங்களாலும் விடுதலை அடைந்தார். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியானது தான் ’The Mauritanian’ திரைப்படம். இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

 ஆஃப்கானிஸ்தானில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையிலான அரசு, அதிபர் சதாம் உசேன் பேரழிவை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் (Weapons of mass destruction) வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக் நாட்டின் மீதும் போர் தொடுக்க முடிவெடுக்கிறது. எந்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அறிந்தால் நாம் மனம் நொந்து போகக் கூடும்.  ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் எந்த இலக்குமின்றி நிகழ்ந்ததைப் பற்றியும், ஆஃப்கனில் அமைந்திருந்த ஹமீது கர்சாய் தலைமையிலான அரசு ஊழலும் லஞ்சமும் நிறைந்த ஒன்றாக இருந்ததையும் அமெரிக்க முன்னாள் அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

தாலிபன்களைத் தோற்கடிக்க ஆஃப்கானிஸ்தானின் வடக்கு கூட்டணி (Northern alliance) இராணுவக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்காவுக்கு, காபூலிலிருந்தும் காந்தஹாரிலிருந்தும் தாலிபன்களை விரட்டியடித்தபின் அந்நாட்டில் என்ன செய்வது என்கிற தெளிவான திட்டம் ஏதும் இல்லை. அத்துடன் மீண்டும் அங்கு இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தவும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் எதுவுமே செய்யாத ஹமீது கர்சாய் தலைமையிலான மோசமான  அரசாட்சியும்  தாலிபன்கள் புத்துயிர்ப்புடன் மீண்டும் செயல்பட முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. ஆவணக் குறுந்தொடரின் இறுதிப் பகுதியில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில், பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் சர்வதேசக் குற்றவாளியும் தீவிரவாதியுமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நிகழ்வும் அது தொடர்பான சம்பவங்களும் பேசப்படுகின்றன.

இறுதியாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளும், பிற நாட்டு அரசியல்/இராணுவ அதிகாரிகளும் முழுமையாக வெளியேறிபின் தாலிபன்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிற  இவ்வேளையில், இரு தரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்சேதத்தையும் , பெருமளவிலான பொருட்சேதத்தையும் ஏற்படுத்திய இந்தப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தீவிரவாத செயல்களால் ஏற்படுகிற பாதிப்புகளையும் இழப்புகளையும் பற்றிப் பேசியிருக்கும்  அதே அளவு நாடுகளுக்கிடையேயான போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்கிற பாதிப்புகளையும்  இழப்புகளையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கின்றது இந்த ஆவணக் குறுந்தொடர் .

’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஆஸ்கர் 2021 - ஒரு பார்வை

 வாசகசாலையின் ’புரவி’ அச்சு இதழுக்காக சில மாதங்கள் முன்பு எழுதிய கட்டுரை...!!


 ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து  வெளியாகும் படைப்புகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்து விளங்கும்  திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும்  அடையாளப்படுத்தி ,பரிசளித்து, புகழாரம் சூட்டும் விழாக்களில் முக்கியமானதுஆஸ்கர்என்று அனைவராலும் அறியப்பட்ட அகாதமி விருதுகள் (Academy awards) விழா

 அமெரிக்காவில் ஆண்டுதோரும் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு, ஒரு சிறு தாமதத்திற்குப் பின் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. 

சர்ச்சைகளும் சலசலப்புகளும்:


எல்லா விருது நிகழ்ச்சிகளையும் போல ஆஸ்கர் விருதுகள் விழாவும் ஊடககங்களாலும் சமூகத்தாலும் பலவிதமான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறையைச் சேர்ந்த ஏப்ரல் ரெய்ன் (April Reign) என்ற ஆஃப்ரிக்க அமெரிக்க பெண் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடங்கிவைத்த #OscarSoWhite என்ற ஹாஷ்டேகும் அதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களும். 

விருதுக்கு தேர்வாகும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கறுப்பின நடிகர்களும், படைப்பாளிகளும் புறக்கணிக்கப்பட்டு வெள்ளையினத்தவரே முன்னிலை படுத்தப் படுவதாக எழுந்த இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பல ஆஃப்ரிக்க அமெரிக்க கலைஞர்களும் ஆஸ்கர் விழாவினைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இது மட்டுமின்றி கடந்த சில, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளிலும் கூட முழுக்க முழுக்க ஆண் இயக்குநர்களே நிறைந்திருப்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த ஆண்டு மேற்சொன்ன அனைத்துக்கும் தீர்வுகாணும் விதமாக இதுவரையில் முதன்மை படுத்தப்படாத ஆஃப்ரிக்க அமெரிக்க கறுப்பின கலைஞர்களும், பெண் இயக்குநர்களும், ஆசியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவின் பிற சிறுபான்மையினருக்கும் சம அளவில்  கவனம் பெற்றிருக்கின்றார்கள்

சிறந்த திரைப்படம்/இயக்குநர்/நடிகை - நோமேட்லேண்ட் (Nomadland )

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ஒரு ஜிப்சம் தொழிற்சாலை மூடப்பட்டுவிட, அதைச் சுற்றி அந்த ஊரில் வாழ்ந்த அனைவரும் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிடுகிறார்கள். அவர்களில் Fernம் ஒருவர். ஏற்கனவே கணவனும் இறந்துவிட்டபடியால் தனக்குச் சொந்தமான அத்தனையையும் விற்று விட்டு ஒரு வேனையே (Van) தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழத் தொடங்குகிறார் ஃபெர்ன்.

ஃபெர்ன் சந்திக்கிற மனிதர்கள், பழகும் நண்பர்கள், பார்க்கும் இடங்கள் என, கிட்டத்தட்ட ஒரு  ஆவணப்படத்திற்கான தன்மையுட தான் செல்கிறது திரைப்படம். ஒட்டுமொத்தமாக இந்தத் திரைப்படமும், காட்சிகளும், இசையும் தந்த உணர்வுகளை நிச்சயமாக வார்த்தைகளில் விளக்கிச் சொல்லிவிட முடியாது. .

உண்மையில் நாடோடிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.எந்த அடையாளத்தோடும் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பாத, எதையுமே தங்களை பிடித்து வைப்பதை விரும்பாத, நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கு பயணித்து, கிடைப்பதை உண்டு ,கிடைத்த வேலையைச் செய்து.. வாழ்கிற நாடோடிகளின் (nomads) வாழ்க்கை மிக மிகக் கடுமையானது. அப்படியொரு தீவிரமான விடுதலை உணர்வையும் , பிடிப்பற்ற தன்மையையும் எதிர்கொள்ள நம்மால் முடியாது.நாம் இருக்கிற, வாழ்கிற, கொஞ்சங்கூட விட்டு விலகிவிட முடியாத பாதுகாப்பான சொகுசான வட்டம் என்னவென்று உண்மையில் ஒரு நாடோடியை எதிர்கொள்ளும்போது தான் விளங்கிக் கொள்ள முடியும் . இதனை மிகச்சிறப்பாக ஃபெர்ன் பாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஃப்ரான்சின் மெக்டார்மண்ட்.

 சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான, நோமேட்லேண்ட் திரைப்படத்தின் இயக்குநர்  க்ளோ ஸாவ் (Chloe Zhao) தனது முந்தைய திரைப்படங்களில் பல பரிசோதனைகளை முயன்றிருக்கிறார். இந்தப் படத்தில் ஃபெர்னாக நடித்திருக்கும் ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் தவிர்த்து க்ளோவின் முந்தைய இரு படங்களிலும் முதன்மைப் பாத்திரங்களாக நடித்தவர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்லர். தத்தமது  சொந்த வாழ்வனுபவத்தையே திரைப்பாத்திரமாக ஏற்று நடிக்க முன்வந்த சாதாரணர்கள் அவர்கள்.

  அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குப்பின்பு தங்கள் உடைமைகளை விற்றுவிட்டு நாடோடி வாழ்வைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் ஜெஸ்ஸிகா ப்ரூடர் எழுதிய ’Nomadland' புத்தகத்தை அடிப்படையாக வைத்தே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் க்ளோ. 

சிறந்த திரைப்படம்சிறந்த இயக்குநர் - க்ளோ ஸாவ்  , சிறந்த நடிகை -  (முதன்மைப் பாத்திரம்) - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட், என  இத்திரைப்படம் மூன்று முக்கியமான பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றிருக்கின்றது.

 சிறந்த நடிகர் - ஆந்தனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins, The Father)

 முதுமையின் காரணமாக ஏற்படும் டெமன்ஷியா (Dementia) என்ற நோயினால் பாதிக்கப்பட்ட 80 வயதான ஆந்தனியின் கதை தான் த ஃபாதர் திரைப்படம்’.நோயினால் ஏற்படும் மறதி, குழப்பமான மனநிலை, இயலாமை, தன் மீதான வெறுப்பை பிறர் மீதான கோபமாக வெளிப்படுத்துதல், தான் பெற்ற மகளாகவே இருந்தாலும் அவள் உதவியை மறுப்பது என உணர்வுகளின் குவியலாக ஒரு சவாலான பாத்திரத்தை ஏற்று மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பழம்பெரும் நடிகர் ஆந்தனி ஹாப்கின்ஸ். 28 ஆண்டுகளுக்கு முன்பு சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ்’ ( Silence of the lambs) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற அவர், மீண்டும் தன்னுடைய 83வது வயதில் இவ்விருதை  வென்றிருக்கின்றார். சென்ற ஆண்டும் டூ போப்ஸ்’ (Two popes) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான  பிரிவின் கீழ் அவர் பெயர் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் உலகம் முழுதும் பல்வேறு திரைவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கிக் குவித்ததோடு மட்டுமின்றி ,ஆந்தனி ஹாப்கின்ஸ் அவர்களுக்கும் மென்மேலும் புகழ் சேர்த்திருக்கின்றது

மறைந்த ஆஃப்ரிக்க அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மனின் பெயர், ‘மா ரெய்னிஸ் ப்ளாக் பாட்டம் என்ற திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த பாத்திரத்திற்காக இதே பிரிவின் கீழ் முன்மொழியப்பட்டிருந்தாலும் விருது அவருக்குக் கிடைக்காதால் உலகம் முழுவதிலும் உள்ள அவருடைய ரசிகர்கள்  சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 

சிறந்த துணை நடிகர் - டேனியல் கலூயா ( Daniel Kaluuya, Judas And The Black Messiah)

19ஆம் நூற்றாண்டு தொடங்கிஅமெரிக்காவில் நிலவிய கடுமையான இனவெறி பற்றியும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகவும் சமூக அங்கீகாரத்திற்காகவும் போராடியவர்களான மார்ட்டின் லூத்தர் கிங், மால்கம் எக்ஸ் ஆகிய தலைவர்கள் பற்றியும் அறிந்திருப்போம். 1960களில் இனவெறியையும்கறுப்பின மக்கள் மீதான வெள்ளையின காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்த்தும் அமெரிக்க நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல அரசியல் அமைப்புகள் உருவாகின. சில அமைப்புகள் தங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை தேர்தல் அரசியலின் வாயிலாகவும், வேறு சில அமைப்புகள் வன்முறையின் வாயிலாகவும் தீர்வு காண முற்பட்டனர். அவற்றுள் முக்கியமானதொரு அமைப்பு தான் ப்ளாக் பேந்தர் பார்ட்டி (Black Panther Party).  

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ப்ளாக் பேந்தர் அமைப்பின் இல்லினாய்ஸ் பகுதியின் தலைவராக இருந்தவர் ஃப்ரெட் ஹாம்ப்டன் என்ற இளைஞர். அந்நாட்டு மத்திய புலனாய்வுத்துறையான FBIயின் உளவாளியாகச் செயல்பட்டு ப்ளாக் பேந்தர் அமைப்பில் ஊடுருவி அரசுக்கு தகவல்களைத் தந்து ஃப்ரெட் ஹாம்ப்டன் கொல்லப்பட காரணமானவர் வில்லியம் பில் ஓநீல். இந்த இருவரின் உண்மைக்கதையின் அடிப்படையில் உருவான திரைப்படம் ஜூடாஸ் அண்ட் த ப்ளாக் மெஸ்ஸியா’. ஃப்ரெட் ஹாம்ப்டன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் டேனியல் கலூயா சிறந்த துணை நடிகருக்கானஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றார். 2017ஆம் ஆண்டு வெளியானகெட் அவுட்என்ற திரைப்படத்தில் இனவெறி பிடித்த காதலியின் குடும்பத்தார் மத்தியில் சிக்கிக்கொள்ளும் கறுப்பின இளைஞரின் பாத்திரத்தில் நடித்த டேனியல், ’சிறந்த நடிகருக்கானவிருதுக்காக 2018ல் முன்மொழியப்பட்டார்

பிற பிரிவுகளும் விருதுகளும்:

நம்முடைய சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டிய விவாதிக்கப் படவேண்டிய விஷயங்களை சில சமயம் திரைப்படங்கள் வெகு எளிதாக பலரிடம் கொண்டு சேர்த்துவிடும். அதனாலேயே ஒரு திரைப்படத்தை நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கான ஒன்றாக மட்டும் நம்மால் பார்க்க முடிவதில்லை. அதற்காக கருத்தைச் சொல்கிறேன் பேர்வழி என திரைப்படத்தை பிரசாரப்படமாக எடுத்து வைத்தால் அதுவும் அந்தக் கலைக்குச் செய்கிற நியாயமாக இருக்காது

அதிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளைப் பற்றிய திரைப்படமாக இருந்தால் சொல்ல வந்த கருத்திலிருந்து பிசகாமல், இயக்குநர்/படைப்பாளியின் மனவக்கிரங்களை வெளிப்படுத்துவதாகவும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

இந்தியில் பின்க் திரைப்படம் , அதன் தமிழ் வடிவமானநேர்கொண்ட பார்வைஆகியவை இந்த வகையான திரைப்படங்களில் ஓரளவு நல்ல முயற்சிகளாகக் கொள்ளலாம். No means no என்கிற ஒரு மையப்புள்ளியை இந்தத் திரைப்படங்கள் பரவலாகப் பேசவைத்தன.

கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு தீவிரமான கதைக்களம் தான் ப்ராமிசிங் யங் வுமன்’ (Promising Young Woman) திரைப்படத்தினுடையதும். நமக்குப் பழக்கப்பட்ட பழிவாங்கும் கதையாக இருந்தாலும், நேரடியான வன்முறைக் காட்சிகளோ ரத்தமோ இல்லாமல் சொல்ல வந்ததை மனதில் ஆழமாகத் தைக்கும்படி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையும், கேரி முல்லிகனுடைய (Carey Mulligan) அசாத்தியமான நடிப்பும் ஒரு மறக்க முடியாத திரை அனுபவத்தை நமக்குத் தருகின்றன. இத்திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றது.

 அமெரிக்கர்களின் வாழ்வியலிலும் Blues இசைக்கு ஒரு மிக முக்கியமான பங்கு உண்டு.  அந்த வகையில் Mother or Blues என்று அழைக்கப்பட்ட Ma Raineyன் வாழ்வில் ஒரு நாள், அவரைச் சூழ்ந்திருக்கிற மனிதர்கள், அன்றைய நிகழ்வுகள், பின்பு இசை; இவை மட்டுமே கொண்டு படமாகியிருக்கும் திரைப்படம் மா ரெய்னிஸ் ப்ளாக் பாட்டம்’ (Ma Rainey's Black Bottom) வயோலா டேவிஸ் மாதிரியான அசுரத்தனமான நடிகை திரையில் இருக்கும் போது, வேறு யாருடைய நடிப்புமே கொஞ்சம் கூட எடுபடாது. ஆனாலும் அவருக்கு ஈடுகொடுத்து அற்புதமாக நடித்திருக்கிறார் சென்ற ஆண்டு நம்மைவிட்டு மறைந்த சாட்விக் போஸ்மன்.  

1920களின் அமெரிக்காவில் நிகழ்வதாக கதையமைப்பைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு  இந்த ஆண்டின் சிறந்த ஆடை,சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான இரண்டு பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருக்கின்றன

 அனிமேஷன் திரைப்படங்களில் எப்போதும் கோலோச்சும் டிஸ்னி பிக்ஸார் நிறுவனத்தின் தயாரிப்பான 'ஸோல்' (Soul), இவ்வாண்டின் சிறந்த  முழுநீள அனிமேஷன் படத்துக்கான விருதை வென்றிருக்கின்றது. நம் அன்றாட வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் நம் வாழ்க்கைக்கான பொருள் என்ன ?, நம்மை செலுத்திக்கொண்டிருக்கிற உந்துசக்தி எது ?, வாழ்வின் மீது நாம் கொண்டிருக்கிற பிடிப்பு எதன்மேல் ?, பொருளீட்டும் பொருட்டு நாம் செய்யும் வேலை, மனதிற்கு விருப்பமான வேலை என பலவற்றையும் பற்றி யோசித்திருப்போம். பல்வேறு  முடிவுகளையும் இவற்றின் அடிப்படையில் எடுத்திருப்போம். இந்த விஷயங்களனைத்தையும் அழகாக  ஒரு கதையில் இணைத்து, குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது ஸோல் திரைப்படம்.  சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் இத்திரைப்படமே வென்றிருப்பது கூடுதல் சிறப்பு.

  சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two distant strangers) கறுப்பினத்தவர்களின் மீதான காவல்துறையின் வன்முறைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கிற திரைப்படம். ஒரு இனவெறி பிடித்த போலிஸ் அதிகாரியும் ஒரு அப்பாவி கறுப்பின இளைஞனும் சிக்கிக் கொண்ட ஒரு காலச்சுழலில் (time loop) , அண்மையின் அமெரிக்க காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற இளைஞரின் மரணத்தில் தொடங்கி வெவ்வேறு வகையில் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர்களின்  கதைகள் இந்த காலச்சுழலுக்குள் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுகின்றன. எல்லா கதைகளிலும் இறுதியில் பாதிப்புக்குள்ளாவது யார் ? அது ஏன்? என்ற கேள்விகளை எழுப்பிச் செல்கிறது இந்த 20 நிமிட குறும்படம். 

 சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது பெற்ற 'If anything happens I love you', அமெரிக்காவின் பள்ளிக்கூடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஒரு குழந்தையின் மரணம் அதன் பெற்றோருக்கு ஏற்படுத்திற தாக்கத்தையும் இழப்பையும் உணர்வுப்பூர்வமாகக் காச்சிப்படுத்தியிருக்கின்றது. ஆக, சிறந்த அனிமேஷன் குறும்படம், மற்றும் சிறந்த குறும்படம் என இரண்டு பிரிவுகளிலுமே விருது வென்ற குறும்படங்களும் இன்றைய அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளையே பேசியிருக்கின்றன.

இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவதும் பெரும்பகுதி மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை வாழ முடியாமல் முடங்கிக்கிடந்த நாட்களில், திரைப்படங்கள், புத்தகங்கள், இசை என வெவ்வேறு கலை வடிவங்களே சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வழிவகுத்தன.  அடிப்படைத் தேவைகளுக்கே வசதி வாய்ப்பற்றவர்களுக்கு ஆசுவாசம் என்பதே ஆடம்பரத்தேவை தான் எனினும் , எதிர்காலம் குறித்த அச்சத்திலிருந்து தற்காலிகமாகத் தங்களை விடுவித்துக் கொள்ள பொதுமக்கள் கலையினிடத்தேயே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒரு சில நாடுகள் இடையிடையே திரையரங்குகளைத் திறக்க அனுமதித்திருந்தாலும் வேறு பல நாடுகளில் முழுமையாக மூடப்பட்டே இருந்தன. இன்னும் சில நாடுகளில் படப்பிடிப்புகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான சூழலே அமையவில்லை.இத்தனையையும் தாண்டி, சென்ற ஆண்டு  உலகம் முழுவதிலிருந்தும் பல நல்ல திரைப்படைப்புகள் வெளிவந்தபடிதான் இருந்தன.

 

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...