நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மே, 2021

அரசியல் - சமூக அறிவியல் - புரிதல் ?

இதுவரைக்கும் இல்லாத வகைல இந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தான் என் வட்டத்தில் உள்ள பலரிடமும் நேரடியாக அதிகளவில் அரசியல் பேசியிருக்கிறேன்.. கேள்விகள் கேட்டிருக்கிறேன்... விவாதித்திருக்கிறேன்.. சண்டையிட்டு முரண்பட்டிருக்கிறேன். இந்த வட்டம் என்பதில் சொந்த ஊர் பள்ளி/கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் , பணியிட/வாழிட நண்பர்கள் ஆகியோர் அடக்கம்...(முழுக்க முழுக்க என்னுடைய உரையாடல்/ புரிதல் அடிப்படையிலான அனுமானம் தான்...தரவுகளின் அடிப்படையிலான சர்வே அல்ல) 

இதுல தெள்ளத்தெளிவா புரிஞ்ச விஷயம் வயது, பாலினம், கல்வி, சமுகப் பொருளாதரப் பின்னணி... எந்த வேறுபாடுமில்லாம பலருக்கும் அரசியல் பற்றிய புரிதலும் தெளிவும் ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு...சட்டமன்றம்னா என்ன? ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய வேலை என்ன ? உள்ளாட்சித் தேர்தல்னா என்ன ? அதுக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன தொடர்பு ? எத்தனை சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ? பாரளுமன்ற உறுப்பினருடைய பணி என்ன ? மக்களவைக்கும் மாநிலங்களவைக்குமான வேறுபாடு என்ன ? ஒரு சட்டத்திருத்தம் எப்படி நிறைவேற்றப் படுது ? மசோதான்னா என்ன ? சட்டமன்ற ஓட்டெடுப்பு எப்படி நடக்கும் ? ஆட்சி அதிகாரம் எப்படி பகிர்ந்தளிக்கப்படுது ? அமைச்சர்கள் துறை சார்ந்து எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுது ? மாநில பட்ஜெட்..மத்திய பட்ஜெட்... தொகுப்பு நிதி.. இட ஒதுக்கீடு மாதிரி சமூக நீதி சார்ந்த விஷய்ங்கள்... இன்னும் சுத்தம்....! இந்த மாதிரி பல விஷயங்கள் அரசியல் பேசுகிறவர்கள், சமூக வலைத்தள பரிச்சயம் உள்ளவர்கள், TNPSC மாதிரியான அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் தவிர்த்து பொது நீரோட்டத்தில் உள்ளவர்களுக்கு பெரிய பரிச்சயம் இல்ல.

 இன்னொரு வியப்பூட்டும் விஷயம் இதுல பெரும்பாலானவர்கள் இருபதுகளின்/முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறவர்கள் என்பது தான். வயதில் பெரியவர்கள் (40+ ) தோராயமாகவாவது புரிந்து வைத்திருக்கிறார்கள் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிக்கிற பெரிய கூட்டம் ஒன்னு இருக்கு ...!! )

 இதெல்லாம் தெரிஞ்சுக்கிறது அத்தியாவசியமா.. ஓட்டு மட்டும் போட்டா பத்தாதான்னு கேட்டீங்கன்னா நிச்சயமா பத்தாது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க தானே. எனக்கு தனிப்பட்ட முறைல பள்ளி பாடப்புத்தகங்கள் தாண்டி அறிவியலின் மீது ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்படக்காரணம் த.நா.அ.இ தான். தமிழ் வழிப்பள்ளிகளுக்காக துளி விநாடி வினா, ஆங்கில வழி பள்ளிகளுக்காக ஜந்தர் மந்தர் விநாடி வினா என தமிழகத்தோட சந்து பொந்துல இருக்கிற பள்ளி மாணவர்களிடமும் அடிப்படை அறிவியலை கொண்டு சேர்த்த பெருமை இந்த இயக்கத்துக்கு உண்டு . 

நான் பல வருஷம் பல போட்டிகள்ல கலந்துட்டு இருக்கேன். இது போக இளம் அறிவியலாளர் மாநாடு மாதிரியான (National Children Science Congress/ Young Scientist ) மாதிரி பல செயல்பாடுகளை பல வருடங்களா தொடர்ந்து நடத்திட்டு வர்ராங்க. மாணவர்கள் கிட்ட அரசியலைக் கொண்டு போன அதே அளவுக்கு (SFI/DYFI) அறிவியலையும் கொண்டு சேர்த்ததுல இடதுசாரி இயக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு,

இளைஞர்களுள், அரசியல்வயப்படாதவர்களை / அரசியல்படுத்தப்படாதவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள் என குறை மட்டும் சொல்லி ஒரு பயனும் இல்லை. தேர்தல் அரசியலுக்கு முன்பே சமூக அறிவியலை, பாடப்புத்தகம் தாண்டி எளிமையாக ஆழமாக கொண்டு சேர்க்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாதிரியான ஒரு இயக்கம் கட்டாயம் வேண்டும் என்பது என் எண்ணம். இதனை கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.... ஓரளவு தெளிவான கொள்கைப்பிடிப்புள்ள சமூக இயக்கம் (எ.கா: திராவிட இயக்கத் தமிழர் பேரவை) இதனை முன்னின்று நடத்தினால் கட்சிகளின் network/infrastructure/financial support இதனை மாநிலம் முழுவதும் பரவலாக கொண்டு செல்ல பெரிதும் உதவும். 

 உங்க கருத்து என்ன ? உங்களுடைய வட்டத்துல ஒரு கட்சி சார்ந்து அல்லது ஒரு கட்சியை எதிர்த்து பேசிய அனுபவம் எப்படி இருந்தது ? இந்த Social science awareness பற்றிய உங்கள் கருத்து என்ன ? சொல்லுங்க பேசுவோம்...!

வெள்ளி, 29 மார்ச், 2013

இந்த 'கலாச்சாரம்'னா என்னங்க…??



”பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது”.

"பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்புஎன்பனவற்றை சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்." இப்படிச் சொல்கிறது விக்கி.

சாதாரணமான வார்த்தைகளில் சொல்லனும்னா ஒரு நாடுன்னு எடுத்துகிட்டா அங்க இருக்கிற மக்களுடைய உணவுப்பழக்கம், உடைகள், இனம், பேசும் மொழி, பழங்கால இலக்கியங்கள்,  வாழ்வியல், இசை, நாகரிகம், ரசனை, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் வழக்கங்கள், விளையட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகள் ஆகியவையே அடிப்படைக் காரணிகள் (Basic Factors). இவை அனைத்தின் அடிப்படையிலேயே இந்த கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை வரையறுக்கப்படுகின்றன.

உலக அளவில் பல நாட்டு மக்களிடையே பலவகை கலாச்சாரங்கள் பழக்கத்தில் இருந்தாலும் இந்திய நாட்டைப் பொறுத்தவரை இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகளாக நாம் குறிப்பிட்டவை அனைத்துமே மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டவையாகத் திகழ்கின்றன. இன்னும் அணுக்கமாகப் பார்த்தால் நம் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகள் வேறுபடும்.(உதாரணம் – பேச்சு வழக்கு, உணவு பழக்கம், இறை வழிபாடு, சடங்குகள்)

இந்த கலாச்சாரத்தின் முக்கியமான கூறாக நான் கருதுவது இதன் மாற்றம் அல்லது வளர்ச்சி. இந்த மாற்றமும் வளர்ச்சியும் காலத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. இந்த காலத்தினால் ஏற்படும் மாற்றம் என்பது ‘கலாச்சாரம்’ மட்டுமல்லாது  சமூகத்தில் உள்ள ஏனைய விஷயங்களிலும் எதிரொலிக்கும். உதாரணமாக எண்பதுகளில் மக்களின் இசை ரசனை, பெல் பாட்டம் உடைகள், ஹிப்பி ஹேர்ஸ்டைல், அதன் பிறகு 90களில் ஏற்பட்ட மாற்றங்கள், இப்போது இந்த விஷயங்களில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி முன்னேற்றம் இவைகளே.


இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்களாக நான் கருதுவது புத்தகங்களும் ,திரைப்படங்களும் தான். அதனாலேயே வித்தியாசமான கலாச்சாரங்களையும், வெவ்வேறு காலகட்டங்களையும்,அந்தந்த காலகட்டத்தின் ரசனைகளையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கக்கூடிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித்தேடி பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன்…!!

என்னாலியன்றவரையிலும் எனக்குப் புரிந்தவரையிலும் அவைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்கின்றேன்…!! உங்களுக்குப் பிடித்தமான,மேற்சொன்ன வரையரைக்குள் வருகின்ற திரைப்படங்களையும், புத்தகங்களையும் பற்றி பின்னூட்டங்களில் மறக்காமல்  பகிர்ந்து கொள்ளுங்கள்…!!
Images Courtesy: Original uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...