
உண்மையில் மொழி என்பது என்ன ? ஒரு சொல்லின் மதிப்பு அதன் பொருளைப் பொருத்ததா அல்லது கேட்பவரின் எதிர்வினையைப் பொருத்ததா ? ஒலிதான் மொழியெனில் மனதுக்குள் பேசுவதெல்லாம் மொழியாகாதா ? பேசுகிறவர்களையும் கேட்கிறவர்களையும் இணைக்கிற கருவிதான் மொழியா ? இசையென்பது மொழியா அல்லது வெறும் ஒலியா ? விலங்குகளின் சப்தங்களும் மொழிதானா ? கடவுள் எங்கிருக்கிறார் ? கடவுள்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழி என்று ஒன்று உண்டா ? நமது பிரார்த்தனைகள் என்னும் சொற்கள் எங்கே செல்கின்றன ?
இப்படியான கேள்விகளுக்கு மூன்று பதின்வயது சிறுமிகளின் தேடலின் வழியே தத்துவார்த்தமாக விடை தேட முயலும் புத்தகம்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை எழுதிய ‘Following a Prayer’ என்னும் நாவல். இந்நூலை தமிழில் ‘பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து ; என்ற பெயரில் சீனிவாச ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார் (எதிர் வெளியீடு).
இதற்கு முன்பு நான் வாசித்த ‘ப்ரோஜக்ட் ஹெய்ல்மேரி’ என்னும் அறிபுனைக் கதையில் முதன் முதலில் ஒரு வேற்றுலகவாசியுடன் மனிதன் உரையாடும் பகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மொழி பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும், எழுத்து / ஒலி வடிவமாக அது உருப்பெறுவதற்கான சூழல் குறித்தும் விளக்கங்களைக் கொண்ட, நாவலின் ஒரு சிறிய பகுதி அது. அதனைத் தொடர்ந்து மொழி, உரையாடல், மெளனம், புரிதல், தொடர்பாகவே வாசித்துக் கொண்டிருந்த நான், கண்டடைந்த புத்தகம் தான் சுந்தர் சருக்கையின் இந்நூல்.
கதையின் முதல் அத்தியாயத்தில் , கர்நாடகத்தின் மலைசார்ந்த பகுதியிலுள்ள ஒரு பசுமையான கிராமத்தில் , வாய்த்துடுக்கான பன்னிரண்டு வயது சிறுமி கல்பனா வீட்டிலிருந்து காணாமல் போகிறாள். தன்னுடைய அஜ்ஜி (பாட்டி) பிரார்த்தனைகளைச் சொல்லி சாமி கும்பிடும்பொழுது அதனைக் கேலியாகக் கேள்வி கேட்கிறாள் கல்பனா. “நீங்கள் சொல்லும் இந்த பிரார்த்தனைகள் எங்கே செல்கின்றன ? கடவுள் எங்கிருக்கிறார் ? எங்காவது இருந்து இந்த பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா ?” எனக் கேட்க, கல்பனாவின் கேள்விகளால் துனுக்குற்ற அஜ்ஜி ஏதோ ஒரு பிரார்த்தனையை கண்மூடி சொல்லிவிட்டு , “இதோ இந்த பிரார்த்தனை எங்கே செல்கிறதென் நீயே தேடிப்போய்ப் பார்த்து கண்டுபிடி” எனச் சொல்லிவிட , கல்பனா விளையாட்டாக அஜ்ஜியின் சொற்களைப் பின்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற , அப்படியாகத்தான் தொலைந்து போகிறாள்.
அவள் குடும்பமும் ஊரும் அதிர்ந்து போய் அவளைத் தேடும் முயற்சிகளில் இறங்க, மூன்று நாட்களுக்குப் பின் காட்டுவழி மலைப்பாதையில் மயங்கிக் கிடக்கும் அவளை ஒரு பேருந்து ஓட்டுநர் பார்த்து காப்பாற்றி வீட்டிற்கு கொண்டுவந்து விடுகிறார். கல்பனாவுக்கு என்ன நேர்ந்ததோ என அனைவரும் அச்சத்திலிருக்க , அவளோ ஒரு வார்த்தை கூட யாரிடமும் எதுவும் பேசாமல் தவிர்க்கிறாள். பேச மறுக்கிறாள். மனம் முழுக்க கோபமும் வெறுப்புமாக மெளனமாக நாட்களைக் கடத்தும் கல்பனா , தன் தங்கை தீக்ஷாவிடம் மட்டும் வாய் திறந்து பேசாமல், எழுத்தின் வழியாக , ஓரிரு சுருக்கமான சொற்களில் பேசுகிறாள் (!) . இதன் பின் கல்பனா, அவள் தங்கை தீக்ஷா, தீக்ஷாவின் தோழி குமாரி – இந்த மூன்று சிறுமியரைச் சுற்றியே கதை நகர்கிறது.
குழந்தைகளின் அறிவை மெச்சுகிற பெரியவர்களின் பெருந்தன்மை என்பது ,அவர்கள் பதில் சொல்லமுடியாத கேள்விகளை எதிர்கொள்ளும் வரை மட்டுமே. இந்தக் கூற்றை மெய்யாக்கும்படி தொடர்ந்து தங்களுடைய கேள்விகளாலும் , தேடலாலும் , குடும்பத்தினரையும் , ஆசிரியர்களையும் துளைத்தெடுக்கிறார்கள். மொழியைப் புரிந்து கொள்ள நிகழ்த்தும் தேடலும், படிப்படியாக உண்மையை நோக்கிய அவர்களின் பயணமும் தத்துவார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. மொழியில் தொடங்கி , ஒலிக்கு நகர்ந்து, பின்பு கடவுளைத் தேடி , பின்பு ஒலிக்கும், இசைக்கும், மொழிக்குமான வேறுபாட்டைப் பேசி இறுதியில் நம்மையும் ஒரு சிந்தனைச் சுழலுக்குள் தள்ளுகிறார் எழுத்தாளர். கதையாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும் அந்த கதையின் வழி எழுத்தாளர் முன்வைக்கிற தத்துவார்த்தமான கேள்விகளும் அதற்கான பதில்களுமே வாசகர்களுக்கான பெறுமதி என்பது என் கருத்து.
நான் ஆங்கில மூலத்தையும் , தமிழ் மொழிபெயர்ப்பையும் அடுத்தடுத்து வாசித்திருந்தாலும் மொழிபெயர்ப்பில் இந்நூலின் கருதுகோளும் ஆழமும் மிகச்சரியாக வந்திருப்பதாக உணர்ந்தேன் இன்னொன்று, தத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கிற பொறுமை நமக்கு இல்லை என்னும் அவநம்பிக்கையுடனேயே இந்நூலை வாசிக்கத் துவங்கியினேன். வாசிக்கத் தொடங்கி அதனை முடிக்கிற தருவாயில் என்னுடைய பேச்சின் அளவும் குறைந்துபோய்விட்டதாக, அதற்கான தேவை இல்லாமல் போனதாக உணர்ந்தேன். பெரும்பாலான உரையாடல்களை உள்முகமாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தேன். இதற்கு முழுமுற்றாக இந்த புத்தகத்தை காரணமாகக் கொள்ளாவிட்டாலும் (அன்றாடத்தில் எதிர்கொண்ட சில சிக்கல்களும் வேறு காரணங்களும் இருந்தாலும்) உறுதியாக அதன் தாக்கம் இருந்தது.
கதையின் முடிவில் எனக்கு உவப்பில்லை. ஆனால் அந்த முடிவைப் போலவே முற்றுப்பெறாத , விடைதெரியாத கேள்விகள் நமக்கும் தோன்றலாம். நமது சொற்களின் தேவையற்ற அல்லது தேவைப்படாத இடங்களில், சொற்களால் இட்டு நிரப்பமுடியாத மெளனத்தின் மதிப்பை ,இந்நூல் உறுதியாகக் கூட்டியிருக்கும்.
தத்துவங்களை விரும்பி வாசிக்கிறவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.
Following a Prayer – Sundar Sarukkai – Tranquebar/Westlandbooks – Rs.599
பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து – சுந்தர் சருக்கை – மொ.பெ/ சீனிவாச ராமாநுஜம் – எதிர்வெளியீடு – ரூ.569 / 344 பக்கங்கள்