நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
லஷ்மி சரவணகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லஷ்மி சரவணகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 நவம்பர், 2019

’ரூஹ்’ - லஷ்மி சரவணகுமார்



லஷ்மி சரவணகுமாரின்ரூஹ்நாவல் குறித்து .

 அமேசான் நிறுவனம் நடத்தும் கிண்டில் #PenToPublish போட்டி குறித்தும், இம்முறை அதிகளவு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் வெளிவந்த படைப்புகளில் நான் முதலில் படித்தது லஷ்மியின்ரூஹ்’. ரூஹ் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள் சொல்கிறது இணையம்.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.

 பாவ்லொ கொய்லோ (Paulo Coelho) எழுதியதி அல்கெமிஸ்ட்நாவல் போன்று, தமிழில் தத்துவமும் வாழ்வியலும் ஆன்மிகமும் சேர்ந்த புனைவுகள் வெகு சொற்பமே. சமகால எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த தத்துவம்/வாழ்வியல் சார்ந்து தீவிரத்தன்மையோடு அணுகியது சரவணன் சந்திரனின்சுபிட்சமுருகன்’. அதனைத் தொடர்ந்து தமிழில் தத்துவம் சார்ந்த, அன்பின் மகத்துவத்தை எளிமையாகப் பேசுகிற ஒரு படைப்புரூஹ்’.


எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.

 ஏர்வாடியில் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழாவில் தொடங்குகிற கதை, பதினெட்டாம் நூற்றாண்டில் அரபிக்கடலில் மராட்டிய கடற்படைத் தளபதி கனோஜி அங்க்ரேவால்  சிறைபிடிக்கப்படும் பாக்தாத் கப்பல்; அதன் தலைமை மாலுமி அஹமது; இவர்களில் துவங்கி , பேரையூரில் வாழும் தோல்பாவைக் கலைஞர் விட்டல்ராவ்; அவருடைய மகன் ஜோதி, அதே ஊரில் வாழ்கிற அன்வர், அன்வரின் மனைவி ராபியா என்னும் தேவதை; என அத்தனை பேருடைய கதைகளையும் அத்தனை இடங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கிற அற்புதமான கதை சொல்லல்

சிறுவயதிலிருந்தே குடும்பமும் சுற்றமும் வெறுக்கிற, அவனுடைய உடல்மொழியின் பெண்மைக்காக சீண்டப்படுகிற கேலிக்குள்ளாகிற  ஜோதி என்கிற உணர்வுகளின் பாற்பட்ட வெற்று மனிதன்; அவனுடைய எண்ணவோட்டங்களும் மனவக்கிரங்களும் அவனைச் செலுத்துகிற பாதை; இறுதியில் அவன் கண்டடைகிற முடிவு. இந்த உருமாற்றமும் அதனூடான உரையாடல்களும் தத்துவார்த்தமான கேள்விகளுமே ஒரு cathartic process (இணையான தமிழ்சொல்லாம் துப்புறவாக்கத்தில் catharsisன் அழகு இல்லை).

அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம்,  சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது  யாதுமான பேருரு
 ராபியாவின் பாத்திரப் படைப்பு குறித்து நிச்சயமாய் பல உரையாடல்கள் நிகழும். தேய்வழக்கான சொல்லாடலில்கத்தி மேல் நடக்கிறமாதிரியான கதை சொல்லல்நிபந்தனையற்ற அன்பின்  மொத்த உருவானவளாய் திகழ்கிற ராபியாவும் அவள் அன்பால் நிகழ்த்துகிற அற்புதங்களுமாய்
நிறைந்திருக்கின்றது ‘ரூஹ்’. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாய் நிகழ்கிற பெரும் பயணங்களாலும் அதில் பங்குகொண்டு பயணிக்கிறவர்களின் கதைகளாலும் ஆனது ‘ரூஹ்’
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
லஷ்மி சரவணகுமாரின் முந்தைய படைப்பான கொமொரா முழுக்க முழுக்க வெறுப்பையும் அது சார்ந்த உணர்வுகளையும் பேசியதெனில், ‘ரூஹ்’ அதன் எதிர் துருவத்தில் நின்று முழுமையான அன்பையும் சரணடைதலையும் பேசுகின்றது. என்னளவில் இதுவரையிலான லஷ்மியின் படைப்புகளில் ‘ரூஹ்’ எப்போதுமே முதலிடத்தில் இருக்கும்.

தவறவிடக் கூடாத படைப்பு...! கட்டாயம் வாசித்துவிடவும்...!

மின் புத்தகம் வாங்க: இந்த இணைப்பை க்ளிக்கவும்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று




நானூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட நாவல், ஊதாப் பூக்களின் நீலப் புத்தகமாகவும், ரத்தப் பூக்களின் சிவப்புப் புத்தகமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. “சுண்ணாம்புக் குழிக்குள்ள குதிக்கிறவனத் தான் கட்டிப்பேன்” எனச் சொல்கிற சிறுமியின் பேச்சைக் கேட்டு கொதிக்கிற சுண்ணாம்புக் குழிக்குள் குதிக்கிற அளவுக்கு அதீத குறும்புத்தனமும் வெகுளித்தனமும் கொண்ட சிறுவன் கதிரின் கதையில் தொடங்குகிறது நீலப்புத்தகம். அவனுடைய பால்யமும், குறும்புத்தனங்களும். விடுதி வாழ்க்கையும், விவிலிய வாசகங்களும், அவன் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகளுமாய்த் தொடர்கிற கதை, பொருள் தேடும் பொருட்டு நாடோடியாய் வேவ்வேறு தொழில்கள் செய்து அலைந்தபடி வாழ்கிற கதிர், ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தால் கீழ்மையாகக் கருதப்படுகிற அத்தனைக் குற்றங்களையும் செய்யத்தொடங்குகிறான். 

கம்போடியாவின் தலைநகர் நோம்ப்பென்-ல் (Phnom Penh) நிகழ்கிற கோவிந்தசாமியின் கதை. இந்தக் கதையினூடாக ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையின் காட்சிகளும் விவரணைகளும் நம் கண் முன்னே விரிகின்றன. க்மெர் ரோஜ் (Khmer Rouge) என்கிற புரட்சிப்படையும் கம்போடிய ராணுவமும் போரின் பெயரால் செய்த கொடுமைகளும் கொலைகளும் மனிதத்தின் மீதான நமது நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கக்கூடியவை. இந்த குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் இடையே சிக்கி அவதிப்படுகிற கோவிந்தசாமியின் குடும்பத்தினர்; இதிலிருந்து எப்படியோ தப்பித்து ஊர்வந்து சேர்கிறான் அவருடைய மகன் அழகர்சாமி.

சிறுவயதில் தன் கண் முன்னே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இரக்கமென்றால் என்னவென்றே தெரியாத குரூரமும் சுயநலமும் மிகுந்தவனாக மாறிவிட்ட அழகர்சாமி, கதிரின் தந்தை. செய்த குற்றச்செயல்களுக்காக பல காலம் சிறைச்சாலையில் கடத்துகிறவர். அவர் சார்ந்த கதைப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ள மனிதர்களும், அவர்களின் கதைகளும், அதிகாரத்தின் பெயரால் நடக்கிற அவலங்களும் அரசியலும் நமக்குச் சொல்லப்படுகின்றன. 

தன் தந்தை அழகர்சாமியின் மீது கதிர் கொண்டிருக்கிற அதீத வெறுப்பும், கொலைவெறியும், அதற்கான காரணமும், கதிரின் நோக்கமுமே மீதிக்கதை.
இரத்தம் தெறிக்கிற ஒரு கொலையைக் காட்சிப்படுத்துவதினூடாக மானுட மேன்மையையும் அன்பையும் பேசிச் செல்கிற கொரியப்படங்களுக்கு இணையான கதை சொல்லல் என்பேன். குறிப்பாக ’சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்’ என்கிற பதினைந்துபக்க அத்தியாயத்தில் அதிகாரங்களாகவும் சிறு சிறு பத்திகளாகவும் எழுதப்பட்டிருக்கிற கதையின் பகுதிகளும் கருத்துகளும் நிச்சமாக ஒரு மாறுபட்ட வாசிப்பனுவத்தை நமக்கு வழங்குகின்றன

”இங்கே எல்லாம் சரியாய் இருக்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து, துரோகமும் சூதும்தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லாப் பெருங்காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பைச் சுமந்துகொண்டு அலையக் காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாகப் பார்க்கப்பட்டாலும். எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்." 
-லஷ்மி சரவணகுமார் 
முன்னுரையில் இப்படிச் சொல்லித்தான் துவங்குகிறார் எழுத்தாளர். கொமோரா நாவலின் மொத்த அடித்தளமும் இதுதானென இங்கேயே நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது.’கொமொரா’ என்பது பைபிளில் சொல்லப்படுகிற ஒரு நகரத்தின் பெயர். அங்கே வாழ்கிற மக்களின் பாவங்களுக்கான கடவுளின் தண்டனையாக முழுமையாய் தீக்கிரையான இரு நகரங்கள் சோதோம் (Sodom) மற்றும் கொமோரா (Gomorrah) ஆகியவை. 

இந்தப் பெயரை நாவலுக்கு வைத்ததன் மூலம் நமக்குச் சொல்லப்படும் செய்தி, இது பொதுவான தேவதைகளின் உலகில் அன்பு ஊற்றெடுக்க நிகழ்கிற நல்லவர்களின் கதை அல்ல என்பதே. இங்கே இவர்களெல்லோரும் நல்லவர்கள்; எங்கிருந்தோ வருகிற ஒரு தீயவன்; அவன் செய்த தீமை; இறுதியில் அன்பால் தீமை தோற்று நன்மை வெல்லுகிற தேய்வழக்கு; இது மாதிரியான பொய்த்தோரணங்கள் எதுவும் எல்லை. நன்மை தீமையை தட்டையாக ஒற்றைப்படையாக அணுகுகிற கதையும் இதுவல்ல. 

வன்முறையும், வஞ்சமும், கோபமும், துரோகமும், பயமும், இரத்தமும், காமமும் நிறைந்து கிடக்கிற மனிதர்களும், அவர்களின் கதைகளின் ஊடாக அவரவர்கள் கண்டடைகிற உண்மைகள் அல்லது ஒளிக்கீற்றுகள் அல்லது நம்பிக்கைகளையும் பற்றிப் பேசுகிற நாவல் இது. 

ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...