நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

விட்னஸ் - Witness - 2022


இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மிக முக்கியமான திரைப்படம் 'விட்னஸ்' தான். மலக்குழி மரணங்கள் (உண்மையில் அவற்றை கொ.லை.கள் என்றே சொல்ல வேண்டும்) நம் நாட்டின் மிகப்பெரிய அவலம். பல வருடங்களாக யாராரோ என்னென்னவோ முயற்சிகள் செய்தும் சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிறகும் கூட தடுக்க முடியாத துயரம்.

இந்தியாவில் கழிப்பறை சார்ந்தும், துப்புறவு பணியாளர்கள் சார்ந்தும் சாதியின் அடிப்படையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்து Where India Goes, Unseen (The story of India's manual scavengers), மாதிரியான ஒரு சில புத்தகங்களிலும்.. கக்கூஸ் ஆவணப்படத்தின் வாயிலாகவும் பேசியிருக்கிறார்கள். பெஸாவாடா வில்சன் மாதிரியான தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் இது குறித்து கேள்வி எழுப்பியபடியே இருக்கின்றார்கள்.  புகைப்படக் கலைஞர் பழனிகுமார் கடந்த 6/7 ஆண்டுகளாக மலக்குழி மரணங்களை தன்னுடைய புகைப்படங்களின் வழியாக ஆவணப்படுத்தி வருகிறார். 

எத்தனை பேர் எவ்வளவு போராடியும் இந்த சிக்கலுக்கு ஒரு நிரந்தரமான தீர்வோ முடிவோ இதுவரை இல்லை. கடந்த 27 ஆண்டுகளில் 1014 பேரின் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது  ஒன்றிய அமைச்சரைவையின் (Ministry for social justice and empowerment) அதிகாரப்பூர்வமான தகவல். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம்.

 இதுவரை மலக்குழி மரணங்களுக்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் 99 சதவிகிதம் இந்திய தண்டனை சட்டபிரிவு 304A, 1860 ன் படி அலட்சியம் காரணமாக நிகழ்ந்தவை என்றே பதியப்பட்டிருக்கின்றன. (Death due to negligence) ஒரே ஒரு சதவிகிதம்  மட்டுமே Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 ன் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. (link for article

விட்னஸ் திரைப்படத்தின் கரு மேற்சொன்ன தகவலின் அடிப்படையிலானது தான். ஒரு 20 வயது  இளைஞனின் அகால மரணமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தான் திரைப்படம். ஒரு பரபரப்பான investigative thriller திரைப்படமாக மாற்றிவிடக்கூடிய அத்தனை சாத்தியமும் இருந்தாலும் அதைச் செய்யாமல் எந்த வித romanticismம் இல்லாமல் நிதானமாக தான் சொல்ல வந்ததை நேர்பட சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதுவே திரைப்படம் சொல்ல வந்த கருத்தை மிக ஆழமாக நம் மனதில் பதியவைத்திருக்கிறது.
கூடவே பெருநகரின் மத்தியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு புறநகர்ப் பகுதிகளில் குடிவைக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், இந்த அரசு இயந்திரத்தின் அமைப்புச் சிக்கல்களில் அவர்கள் சிக்கித் தவிப்பதையும் கதையினூடாகவே பேசியிருக்கிறார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை நேரடியாக வெளிப்படையாக சித்தரித்திருக்கின்றார்கள். (இதுல என்ன பல பேருக்கு கோவம்/வெறுப்பு/வன்மம்னு தெரியல) உண்மையில் தோழர் செல்வா  நிஜவாழ்வில் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற பணியையே இந்த திரைப்படத்தில் தான் ஏற்ற பாத்திரமாகவும் செய்திருக்கிறார். (அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு - விகடனில் செல்வா தோழர் பற்றி எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் கட்டுரை இணைப்பு

 
இத்தனை ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத இந்த அவலத்திற்கு இனியேனும் ஒரு முடிவு பிறக்குமா தெரியவில்லை. 
ஆனால் இப்படியொரு பிரச்சனை இருப்பதையும், இதன் பின்னணியில் இருக்கிற சாதியின் அடிப்படையிலான சிக்கல்களையும் குறித்து ஒரு உரையாடலை ஏற்படுத்திய வகையில் இந்த ஆண்டின் கருத்தியல் அடிப்படையில் மிக முக்கியமான திரைப்படமாகிறது விட்னஸ். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 

Witness (Tamil) movie is streaming on Sony Liv OTT

செவ்வாய், 13 டிசம்பர், 2022

நெருநல் உளனொருவன் இன்றில்லை - Eulogy Hymn


 
என் நண்பர்கள் இறக்கிறார்கள்
வரிசையாக
கண்ணாடி சவப்பெட்டிகள் முன்
தலை கவிழ்ந்து நிற்பது
வழக்கமான கடமையாகிவிட்டது
 
நான் இப்போதெல்லாம்
சாவுக்கு அவ்வளவு சகஜமாகிவிட்டேன்
சாவு ஒரு சிறுபூனைபோல
என் நெஞ்சில் படுத்து
கதகதப்பாக உறங்குகிறது
அதன் களங்கமற்ற கண்களைக்காண
என் கண்களில் நீர் தளும்புகிறது
 
- நெஞ்சில் தூங்கும் மரணம், மனுஷ்ய புத்திரன்

 பேரன்பின் ராஜாவுக்கு,

 நீ எங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடை பெற்று இன்றுடன் நூற்றி சொச்சம் நாட்கள் கடந்து விட்டன. நீயில்லாத உலகில் தனக்கும் இடமில்லையென உன் அம்மாவும் புறப்பட்டுவிட்டார்கள்

இயல்பு வாழ்வென ஒன்று இருப்பதால்,  உன் இழப்பிலிருந்தும் நினைப்பிலிருந்தும் மீண்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு மற்ற அனைத்திலும் கவனம் செலுத்த முயன்று கொண்டேயிருக்கேன். விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன். பசிக்கு மீறி உண்டு திணறுகிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அலுவல்கள், கடமைகள், நண்பர்கள், பயணங்களென முற்றாய் என் உடலும் உள்ளமும் களைத்துப் போகுமளவு எல்லாவற்றிலும் எல்லாரிடமும் என்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன். 

ஆனாலும் உன் இன்மை, ஒரு நிழல் போல . கருமேகம் போல, ஒரு பூனையைப்போல என்னைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றது. நானும் என்னைப் போல் உன் மீது அன்பு கொண்ட, நீ வாழ்ந்து தொலைத்திருக்கலாம் என்று திட்டித்தீர்க்கிற ஏனையோரும் என்ன செய்திருந்தால் உன்னைப் பிடித்து வைத்திருக்கலாமென யோசித்துக் களைத்து , இப்போதாவது அவன் விரும்பிய அமைதியை அவன் அடைந்துவிட்டிருப்பானென சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். குற்ற உணர்விலிருந்தும் கையறு நிலையிலிருந்தும் எங்களை விடுவித்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும் ?

நீ சிக்கிக் கொண்டிருந்த சுழலிருந்து மேலேறி வர, உன்னை மீட்கும் பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் ஒன்றையேனும் நீ பற்றிகொண்டிருக்கலாம் ராஜா. 

 ஆனால் உன் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. எப்போதும் மனிதர்கள் சூழ இருந்தவன் நீ. உன்னுடைய விருப்பத்தை விடவும் சுற்றத்தாரின் விருப்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை தந்து அவர்களைக் கொண்டாடித் தீர்த்தவன் நீ . எல்லா கொண்டாட்ட பொழுதுகளிலும் உன்னை எளிதாக பொருத்திக் கொள்வாய். உன் வட்டத்து நண்பர்களின் வாழ்வில் அவர்களுடைய நன்னாட்கள் அத்தனையிலும் நீ உடனிருந்திருக்கிறாய். நான் உட்பட; ஆனாலும் எங்கள் யாருக்கும் உன்னோடு நிற்கும் அந்த நல்வாய்ப்பைத் தர மறுத்துவிட்டாய்.என் வருத்தமெல்லாம் இத்தனை பேருக்கு மத்தியிலும் நீ தனியனாய் உணர நேர்ந்ததைப் பற்றித்தான்.

 நீ முற்றிலுமாய் உனது இருப்பை அழித்துக் கொள்வதற்கு முன் எல்லோரிடமிருந்தும் உன்னை விலக்கிக் கொண்டாய். நீ ஒரு கடும் பிடிவாதக்காரனாக உன்னை வரித்துக் கொண்டது உன் விலகலை விடவும் வேதனையானது . ஒரு பயணியானவன் தான் நிழலுக்காய் அமர்ந்த மரங்களை எப்போதும் காயப்படுத்தில்லை. உன் மீதான அன்பை மறக்கச்செய்யுமளவு கடுமையான கோபத்துடனேயே இருந்தேன் நான். இப்போதும் ஏதெனும் ஒரு வசை சொல்லி அவ்வப்போது உன்னை வாய்விட்டு திட்டிவிடுகிறேன். 

விலகிச் செல்கிற தேவதைகளின் முன்பு உள்ளங்கைகளில் மெழுகுவர்த்தியுடன் நீ மண்டியிட்டு பிரார்த்தித்திருக்க வேண்டாம் ராஜா. 

இன்னும் கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ எனத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.நீ வசித்த தெருவை கடந்து போகும்போதெல்லாம், நீ எப்போதும் செல்கிற டீக்கடையை தாண்டும்போதெல்லாம், நீ அடிக்கடி திரிகிற மாலுக்கும் திரையங்கிற்கும் செல்லும்போதெல்லாம், உனக்கு விருப்பமான நடிகனின் திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம்,  நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நீ ஆடிக்களைத்த பாடல்களை கேட்கும் போதெல்லாம், உனது இருப்பை இந்த உலகம் எனக்கு நினைவூட்டியபடியே இருக்கின்றது.

அழ வேண்டியதெல்லாம் அழுது முடித்தாயிற்று. கேட்க வேண்டிய அத்தனையும் கேட்டு முடித்தாயிற்று. எந்த முடிவுக்கும் வர வேண்டிய நிர்பந்தமோ, காரணம் தேடும் கட்டாயமோ இல்லை. உன்னையும் உனது நினைவுகளையும்
இந்த உலகம் நிதானமாக ஆனால் நிச்சயமாக கடந்து சென்றுவிடும்.எங்கள் மனதில் உனது இன்மை அல்லது உன் இருப்பின் வெற்றிடம் வேறு பல மனிதர்களாலும் அவர்தம் கதைகளாலும் நினைவுகளாலும் நிரப்பப்பட்டுவிடும். உன்னைப் பற்றி மற்ற யாரிடத்திலும் இனி பேசுவேனா தெரியாது ராஜா.

இந்தக் கடிதத்துக்காக எந்த விதமான பதிலையும் நான் எதிர்பார்க்கவில்லை . என் மனச்சுமையை இறக்கிவைக்கும் பொருட்டு சுயநலமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ராஜா . இன்னும் ஓரிரு வாரங்களில் உனது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்மஸ் விடுமுறையில் தொடங்கி ஏதேனும் ஒரு  ஊருக்கு பயணப்பட்டு, உன் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்து விட்டு புத்தாண்டுக்கு ஊர் திரும்புவாய். எப்போதும் உனது பிறந்தநாளின் போது நீ ஊரில் இருந்ததேயில்லை.இப்போதும் அப்படித்தான் என எண்ணிக்கொள்கிறேன். இம்முறை நீ வெகு தொலைவில் ஓரிடத்துக்கு பயணப்பட்டிருக்கிறாய். நீ விரும்பிய யாவும் அங்காவது உனக்கு கிடைக்க வேண்டுமென இந்த பிரபஞ்சத்திடம் உன் சார்பில் கோரிக்கை வைக்கிறேன் ராஜா. 

Advanced birthday wishes...Long may you live in our hearts Raja...! :'( :'( :'(

என்றென்றும் அன்புடன்,

நான்


 

 



வியாழன், 8 டிசம்பர், 2022

 Dall-Eம் ChatGPTம் பின்னே நானும்




சில பல மாதங்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் (AI - Artificial Intelligence) அடிப்படையில் இயங்கும் Dall-E என்ற வலைத்தளம் பேசுபொருளானது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் சொற்களாக எழுதும் குறிப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல டிஜிட்டல் ஓவியமோ நிழற்படமோ உருவாக்கித் தரும்.

உதாரணத்துக்கு a digital art with Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று குறிப்பெழுதினால் இணைப்பில உள்ளதைப் போன்ற படம் கிடைக்கும். இந்தக் குறிப்பையே வேறு சில சொற்களுடன் உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்றார் போல் மாற்ற, படத்தில் மாற்றங்கள் செய்து டாலி உங்களுக்குத் தரும்.

A van gogh style painting of Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று ஒரு சில சொற்களைச் சேர்த்தால் வான்காவின் பாணியில் வரையப்பட்ட ஓவியமாக உங்கள் கற்பனைக்கு உருவம் கிடைத்துவிடும்.

 





இந்த டாலி, OpenAI என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் ஆக்கம். அதே நிறுவனத்தின் மற்றுமோர் புரட்சிகரமான தொழில்நுட்ப ஆக்கம் தான் ChatGPT எனப்படும் செயலி . உலகம் முழுக்க பல நிறுவனங்கள் தங்களுடைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கவும் அவர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தரவும் Chatbot என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உள்ளீடு இல்லாமல் செய்ய தாமாகவேசெயல்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக்கூடியவை இந்த பாட்கள். ChatGptம் இதே மாதிரியான ஒரு பாட் தான். ஆனால் அதீத திறன்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட chat bot.

எந்தளவுக்கு திறன் வாய்ந்ததென்றால் ஒரு கணினி நிரலின் பகுதியைக் (code snippet) கொடுத்து சந்தேகம் கேட்டால் அதனைத் தீர்த்து வைப்பதோடல்லாமல் மாற்று வழிகளையும் தரும்.

ஒரு சில சொற்களையோ அல்லது சொற்றொடரையோ தந்து கதையெழுதச் சொன்னால் எழுதும்.

ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை குறித்த கட்டுரை எழுதித்தரச் சொன்னால், கருத்துக் கேட்டால் தெள்ளத் தெளிவாகத் தரும்.

ஒரு சிறிய கணினி நிரலையோ (code/program), செயலியையோ உருவாக்கித் தர குறிப்புகள் தந்தால் அதையும் செய்யும்.

சமையல் குறிப்புகள், ஜோக்குகள், கவிதை எனத் துவங்கி உங்கள் ரெஸ்யூமில் செய்ய வேண்டிய மாற்றங்கள் வரை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.

கூகுள் அடிப்படையில் ஒரு தேடுபொறி. இது இங்கே இருக்கிறது; இதற்கான தீர்வு இங்கே கிடைக்கலாம்: அதற்கான பதில் அங்கே கிடைக்கும் என சரியான திசைக்கு நம்மைச் செலுத்தும் வழிகாட்டி போல என வைத்துக்கொண்டால் ChatGpt அதன் அடுத்தகட்டமாக நமக்கு வேண்டியதைச் செய்துதருகிற விளக்கு பூதம் போல எனச் சொல்லலாம்.

உண்மையில் இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம். கற்பனைத் திறனின் உச்சமும் தொழில்நுட்பமும் சந்திப்பது குறித்து எனக்கு பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உண்டு. இப்போதைக்கு ஆங்கிலம் மட்டும் புரிந்துகொள்ளும் டாலி, தமிழ் உட்பட உலக மொழிகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. ChatGPT இப்போதே அதையும் செய்கிறது. தமிழ் உட்பட பல மொழிகளிலும் உள்ளீட்டைப் புரிந்துகொள்கிறது.

டாலியின் துணை கொண்டு நான் உருவாக்கிய படங்களையும், ChatGPTன் தற்போதைய பயன்பாடுகளின் பட்டியலையும் (usecases/applications) இணைத்திருக்கிறேன். அந்த தளங்களின் இணைப்பு கமெண்ட்டில். இலவச சேவைகளாக வழங்கப்படும் இவையிரண்டும் விரைவிலேயே கட்டணச் சேவைகளாக மாறக்கூடும்

ஏற்கனவே விகடன் மாதிரியான சில பத்திரிகைகள் அவர்கள் வெளியிடும் கவிதைகளுக்கான ஓவியத்தை டாலியின் துணை கொண்டு வரையத் துவங்கியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் fillers எனப்படும் பகுதிகள் அத்தனையும் ChatGPTன் துணை கொண்டு எழுதப்படலாம். இன்னும் இதன் முழுமையான சாத்தியக் கூறுகள் போகப் போகப் புலப்படலாம். நிறுவனங்கள் முழுநேரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக OpenAI மாதிரியான தளங்களில் credits வாங்கி வைத்துக் கொண்டு நுண்ணறிவு செயலிகளை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கலாம்.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் எந்தளவுக்கு வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவு கொஞ்சம் அச்சத்தையும் மெலிதான கலக்கத்தையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எதிர்காலம் நமக்காக மேலும் என்னவெல்லாம் வைத்திருக்கிறதோ?! பார்க்கலாம்.

#DallE2art #ChatGPT


 https://openai.com/dall-e-2/  

https://openai.com/blog/chatgpt/

திங்கள், 10 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - திரையனுபவம்

 


பொன்னியின் செல்வன் was a delightful watch for me...! 

 
முதல் நாள் காலையிலேயே அடித்துப் பிடித்துப் போய் படத்தைப் பார்த்துவிட்டாலும், நேற்றிலிருந்து இன்றுவரை அந்த அனுபவத்தை நினைத்து அசைபோட்டபடியே இருக்கிறேன்.
 
பல வருடங்களுக்கு முன்பு பொ.செ நாவலை வாசித்திருந்தாலும் இப்போது திரையில் பொன்னியின் செல்வனைக் காணும் பொருட்டு மறுவாசிப்பு ஏதும் செய்யாமல் , கதையையும் பாத்திரங்களும் மேலோட்டமாக நினைவில் வைத்திருந்தபடியே போனேன். பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் எதையுமே பொய்யாக்காமல் பொ.செ சிறப்பானதொரு அனுபவமாக அமைந்தது. 
 
குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இயக்குநர் மணிரத்னம் இப்படி ஒரு பெருங்கதையை (2000+ பக்கங்கள் !) எடுத்துக் கொண்டு , படத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய நிகழ்வுகள், அதற்குப் பொருத்தமான பாத்திரங்கள் எனத் தேர்வுசெய்து ஒட்டுமொத்தமாய் திரையாக்கம் செய்திருக்கும் விதம், மிகச்சிறப்பு. Well crafted and presented ! ❤ 
 
அடிப்படைக் கதையையும் கதை நகரும் போக்கையும் முடிவெடுப்பதில் அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்திருக்கும். ஆனால் அதுவே சரியான விதத்தில் திரைக்கதை அமைக்கவும் உதவியிருக்கலாம். நடிகர்களின் பங்களிப்பைப் பற்றியும் , ரஹ்மானின் இசை எந்தளவுக்கு திரையனுபவத்தை உயர்த்தியிருக்கின்றது என்பதையும் அனைவருமே பேசிவிட்டனர்.
 
ஒரு வரலாற்றுப் புதினம் படமாக்கப் படுகிறது என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றும் over dramatic, larger than life, heroic , visual grandeur காட்சிகள் அத்தனையையும் மிக இயல்பாகவும் சாகசத்தன்மை இன்றியும் காட்சிப்படுத்திருப்பது (சண்டைக் காட்சிகள் உட்பட). பெரிய ஏற்ற இறக்கங்களோ, திருப்பங்களோ, ரசிகர்களை மயிர்கூச்செறிய வைக்கும் cinematic தருணங்களோ இல்லை.இதுவே திரைப்படத்துக்கு பின்னடைவாகவும் அமையலாம். (Pan India angle might not work ?! )
 
போலவே கதையில் குறைவான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களை மனதில் பதியவைக்க போதுமான திரைநேரம் (screen time) இருந்திருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் உண்டு; அத்தனையும் முக்கியமான பாத்திரங்கள் வேறு. நாவல் அளவுக்கு பாத்திரங்களை நிறுவுவதற்கான நேரம் எடுத்து கொள்ள முடியாதபடியால் பரபரவென கதை ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப் படுத்தியபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. 
 
இறுதியில் நமக்கு கிடைத்திருக்கவேண்டிய திரை அனுபவம் almost there என்றே முடிந்தாலும் (எனக்கு), இரண்டாம் பாகம் நம் அனைவரின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் சிறப்பான ஒன்றாக அமையுமென நினைக்கிறேன். மேலும் இத்தனை ஆண்டுகளாக மணிரத்னம் தனக்கென வைத்திருந்த பல கட்டுப்பாடுகளையும் மீறி, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தக்கூடிய ஒரு திரைப்படத்தை எடுத்து , அதனை வெற்றிப்படமாகவும் தந்திருக்கிறார். 
 
A well adapted historical fiction from Tamil film industry...! ❤ Thank you Ponniyin Selvan team...! ❤ 
*********************************************************************************
 
இத்துடன் மூன்றாவது முறையாக பொன்னியின் செல்வன் பார்த்தாயிற்று. உட்லண்ட்ஸ், தி.நகர் கிருஷ்ணவேணி, கேசினோ....இவற்றுள் மிகச்சிறந்த ஒளி/ஒலி அனுபவம் வாய்க்கப்பெற்றது தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் தான் (பரிந்துரைத்த ஷ்ருதி டிவி கபிலன் அண்ணனுக்கு நன்றி ❤️)
எனக்குப் படம் இன்னும் அலுக்கவேயில்லை. திரையிலும், பின்னணி இசையிலும் சின்னச்சின்னதாய் பல புதிய விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. 
 
அருண்மொழி - வந்தியத்தேவன் முதல் மோதலின் போதான பின்னணி இசை ஒரு மாதிரியான Doo wop + a capella கலவையாக இருந்தது. அந்த சண்டைக்காட்சியில் வேகம் கூடக்கூட பின்னணியும் ராட்டினமாய் சுற்றத்தொடங்குகிறது.
'சாய சஞ்சரே' என்கிற நந்தினியும் குந்தவையும் சந்திக்கிறபோது ஒலிக்கிற சேர்ந்திசைப் பின்னணிப் பாடல்,
 
நந்தினிக்காக மட்டும் அவ்வப்போது ஒலிக்கிற; துயரத்தையும் வஞ்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் அந்தக்குரலிசை,
வந்தியத்தேவன் கோட்டையிலிருந்து தப்பி ஓடும்போது ஒலிக்கிற இசைக்கோர்ப்பு,
 
போர்க்காட்சிகளுக்கான முழக்கங்களும் பின்னணி இசையும், இறுதிக்காட்சிக்குப் பிறகு ஒலிக்கிற அந்த சோகப்பாடல் என அத்தனையுமே தனித்தனியாக ரசிக்கும்படியான இசைத் துணுக்குகள். ரஹ்மான் பொன்னியின் செல்வன் பின்னணி இசைக் கோர்ப்பை வெளியிடப்போகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
 
கதை, வரலாறு, புனைவு, அரசியல் என இந்த திரைப்படத்தைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றையும் தாண்டி திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மூன்று முறையும் அந்தக் காட்சிகளின் போது சிலிர்த்துப் போனது எனக்கு.
 
(mild spoilers ahead) 
 
இலங்கைக்கான மணிமுடியை மறுக்கும் அருண்மொழி வர்மனிடம், மண் வரைப் பணிபவன் வான் வரை உயர்வான் என பெளத்த பிக்கு சொல்லி வாழ்த்துகிற காட்சி;
 
தங்களை பாண்டிய ஆபத்துதவிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஊமைராணி பற்றி வந்தியத்தேவனிடமும் ஆழ்வார்கடியானிடமும் அருண்மொழிவர்மன் சொல்லும் போது 'யார் இந்தத் தாய். எதற்காக ஒரு காவல் தெய்வம் போல என்னைப் பின் தொடர்ந்து காக்கிறாள்?' எனக் கேட்குமிடம்;
 
குந்தவை ஆதித்த கரிகாலனை சந்திக்கிறபோது அவர்களுக்குள் நிகழ்கிற உரையாடலின் இறுதியில் நந்தினியைப் பற்றிப் பேச்சு வர.. 'அவள் எப்படி என்னை மறந்தாள்?' என ஆதித்த கரிகாலன் கேட்குமிடம்.
 
(spoiler ends)
 
ரசிக்கும்படியான காட்சிகளைப்போலவே கொஞ்சம் எள்ளலுக்குரிய காட்சிகளும் உண்டு 😝 எ. கா. சோழ தேசத்து அரசர்கள் அனைவரின் உடை அமைப்பும் , சிகையலங்காரமும் கொஞ்சமாய் ஜப்பானிய சாமுராய்களைப்போலவே இருந்தது; அதுவும் silhouette காட்சிகளில் அந்த சாயல் அப்பட்டமாகவே தெரிந்தது.
 
போலவே நாகத்தீவு (இலங்கை) தொடர்பான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது. மரக்கலம்/படகுகள் வந்து நிற்கிற அந்தக் கரைப்பகுதி பிரபலமான சுற்றுலாத்தலம் என நினைக்கிறேன் ( புக்கெட்டின் ஜேம்ஸ்பாண்ட் தீவு?) இலங்கையின் தம்பள்ளையில் நடக்கிற காட்சிகளில் துணைநடிகர்கள் கூட்டத்தினரில் பெரும்பலானோர் கிழக்காசிய முகங்களாக இருந்தது, கதை நிகழும் இடம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படி இன்னும் நிறைய 😊
ஒவ்வொன்றாக ரசித்து மனதில் அசைபோடவும் கேள்வி கேட்கவும் படத்தில் பல காட்சிகள் உண்டு.
 
எப்படியும் இன்னொரு முறை Imaxஇலும் பார்த்து விடுவேனென நினைக்கிறேன் 🙈☺️ பிறகு மறுபடியும் எழுதுவோம். இரண்டாம் பாகம் வருவதற்குள் நாவலை மீண்டுமொரு வாசித்து விட்டு, இந்த புனைவுலகில் முழுமையாக மூழ்கிவிடுவேனென நினைக்கிறேன் 🤣😅

சனி, 24 செப்டம்பர், 2022

அம்பரம் - போர்கண்ட நெஞ்சம்

ambaram-book-cover

 

மனிதன் தன் நிலத்தின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறான். பருவகாலங்களுக்குத் தக்கபடி நிலம் தன்னை மாற்றிக் கொண்டு முன்னகர்த்திச் செல்லும்போதெல்லாம் மனிதன் அச்சம் கொள்கிறான். மற்றங்களைப் புரிந்து கொண்டு வாழப்பழகாமல் நிலம் தன்னைக் கைவிட்டுவிட்டதான அச்சத்தில் ஓடத்துவங்கும் போது இடம்பெயர்தல் நிகழ்கிறது.

- அம்பரம்/ ரமா சுரேஷ்

 ***********************************************************************************

  உண்மையில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்பது என்ன ?   அவனுடைய நாடா ? அவன் பேசும் மொழியா ? அவன் கடைபிடிக்கும் மதமா ? அவனுடைய தொழிலா ? அவனுடைய பெற்றோரும் சுற்றத்தாருமா ? ஒரே இடத்தில் பிறந்து , வளர்ந்து, அங்கே புழக்கத்தில் இருக்கிற மொழியைப் பேசி, வாழ்ந்து, பின்பு மரித்துப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் மேற்கண்டபடி நிலையான அடையாளமாய் சொல்லிக் கொள்ள ஏதேனும் இருக்கலாம். ஆனால், உயிரையும் உடைமைகளையும் , குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும், உயிர்பிழைத்துக் கிடக்கவும் புலம் பெயர்கிறவர்களுக்கு அப்படியான நிலையான அடையாளமென்று ஏதுமிருப்பதில்லை. அவர்கள் செல்லும் எந்த நாடும், வாழும் எந்த ஊரும் , பேசும்  எந்த மொழியும், அவர்களுக்கான  நிலையான அடையாளமாக இருந்ததில்லை. அப்படி நிலையான அடையாளங்களை அவர்கள் கைக்கொள்வதையும் ஏனையோர் விரும்பியதில்லை. மனதில் நினைவுகளைச் சுமந்து கொண்டு என்றாவது ஓர் நாள் ஊர்திரும்பிவேண்டுமென அன்றாடம் ஓடிக்கொண்டேயிருக்கிற அல்லது தங்களது வேர்களை வேறிடத்தில் பதியம் போட்டுக்கொள்ளத் துடிக்கிற ஒருவனின் கதையைத் தான் அம்பரம் நாவல் பேசியிருக்கின்றது.

 ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மோக்லி பதிப்பகம் வெளியிடும் நாவல்; அதுவும் பர்மாவை கதைக்களமாகக் கொண்ட நாவல் என்பதே போதுமானதாக இருந்தது ‘அம்பரம்’ நாவலை வாசிப்பதற்கு. 1824ல் பர்மாவில் துவங்குகிறது கதை. முதல் ஆங்கிலோ-பர்மிய போர்க்கால பின்னணியில்,  ஸ்வெடகன் பகோடா என்னும் பழமையான பெளத்த ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ‘சிண்ட் கூ’ எனும் பெரிய மணியையும் எடுத்துச் செல்ல ப்ரிட்டிஷாரின் முயற்சிகளும் அதனைத் தடுக்க முயலும் பெளத்த பிக்குகளின் முயற்சிகளுமாக காட்சிகள் விரிகின்றன. முதல் பதினைந்து பக்கங்களைப் படிக்கையில் ஒருவேளை இந்த நாவல் ஒரு முழு வரலாற்று நாவலாக இருக்குமோ என யோசிக்க வைத்தாலும், பின்பு கதை வேறு திசையில் வேறு கோணத்தில் பல்வேறு பாத்திரங்களினூடாகவும் அவர்தம் வாழ்வினூடாகவும் நகர்கின்றது.

 பர்மியனான ’மெளன் போ’வைக் காதலித்துக் கரம்பிடித்து, பின்னாட்களில் அவன் தன் தன்னையும் தன் மகனையும் விட்டு எங்கோ சென்றுவிடுகையில் மகனின் கைபிடித்து கணவனைத்தேடி புறப்படும் ஆயிஷாவின் கதை; எங்கோ மன்னார்குடியில் பிறந்து நாகப்பட்டிணத்தில் வளர்ந்து, பிழைப்புத் தேடி கப்பலில் சிங்கப்பூருக்கு செல்வதாக எண்ணிக்கொண்டு பர்மாவில் செட்டியார்கடைக்கு பெட்டிப்பையனாக வந்து சேர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தையும் சமூக அந்தஸ்த்தையும் வளர்த்துக் கொண்டு பர்மாவில் காலூன்றும் சிவராமனின் கதை: ஆயிஷா பெற்ற மகனாக இருந்து பின்பு சிவராமனின் வளர்ப்பு மகனாய் மாறுகிற நாவலின் மையப்புள்ளியான முகமக யூசுப்பின் கதை. இம்மூவரைத் தவிர்த்து மற்ற பாத்திரங்களும் அவர்களின் வாழ்வும் இம்மூவரைச் சுற்றியே எழுதப்பட்டுள்ளது.

யூசுப் ஆயிஷாவிடமிருந்து சிவராமனிடம் வந்து சேர்தல், அதன் பின் பர்மாவில் ஒரு குத்துசண்டை வீரனாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் ,காஜியாவுடனான அவனுடைய காதல்,  பாஹிர் உடனான அவனது நட்பு என பர்மாவிலும் சிங்கப்பூரிலுமாக யூசுப்பின் வாழ்வில் நடப்பவையே ’அம்பரம்’ நாவலின்  மீதிக்கதை. குத்துச்சண்டை குறித்த வர்ணணைகள் எழுதப்பட்டிருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. போலவே சிட்-போ வுக்கும்  யூசுப்பிற்குமான நட்பை எழுதியிருந்த விதமும் புதியதாய் இருந்தது. போட்டி மனப்பாங்கு கொண்ட இரண்டு முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரர்களுக்கிடையேயான நட்பை  (almost bromance !?)  இத்தனை மென் உணர்வுகளுடனான ஒன்றாக எழுதமுடியுமா என யோசிக்க வைத்திருக்கிறார் ரமா சுரேஷ் . முகமது யூசுப்பின் பாத்திரப்படைப்பு என அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலியை நினைவூட்டியது. காரணம் என்னவென நாவலை வாசிக்கையில் உணர்ந்து கொள்வீர்கள். இங்கு குறிப்பிடப்படாத மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கதைகளும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் பின்னணியில் அமைந்த நாவல் என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடி, பர்மாவின் வரலாறு, ப்ரித்தானிய காலனியாதிக்கம், பெளத்த மத தத்துவங்கள், ஷின்பியு உள்ளிட்ட பல பர்மிய கலாச்சார நிகழ்வுகள் , அங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை, இந்தியா-பர்மா-சிங்கப்பூர்-சீனா-ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளின் இரண்டாம் உலகப்போர் காலத்து சர்வதேச புவியரசியல் நிகழ்வுகள்,  என அத்தனையையும் 400 பக்கங்களுக்குள் சொல்லிவிட முயன்றிருக்கிறார். 1930ஆம் ஆண்டில் பர்மாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், Prince of Wale, Repulse உள்ளிட்ட பிரித்தானிய போர்க்கப்பல்கள் ஜப்பானால் சிங்கப்பூர் படையெடுப்பின் போது மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு, ஜப்பானியர்கள் சிங்கப்பூரிலும் பர்மாவிலும் இந்திய சீன போர்க்கைதிகளை நடத்திய விதம், சீனாவின் மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது சீனாவுக்கு உதவும் பொருட்டு ப்ரிட்டிஷ் உதவியுடன் அமைக்கப்பட்ட  லெடோ சாலை (Ledo road),  INA வின் தோற்றமும் மலேயாவிலும், பர்மாவிலும் சிங்கப்பூரிலும் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர்கள் பெருமளவில் INAவில் சேர்ந்ததற்கான காரணமும், என பல உண்மை நிகழ்வுகளையும் துல்லியத்தன்மையுடன் நாவலின் போக்கில் இணைத்து சிறப்பாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ரமா சுரேஷ் அவர்கள்.

இந்த அதீதமான வரலாற்றுத் தகவல்களும் , நிலவியலை விளக்க துல்லியத்தன்மைக்காக குறிப்பிடப்படும் அளவீடுகளும் எண்களுமே ( 4000 சதுர கிலோ மிட்டர் பரப்பளவு, 300 அடி உயரம் , இங்கிருந்து கிழக்கே அங்கிருந்து வடமேற்கில்.. மாதிரியான அளவீடுகள் தொடர்ந்து வருவது) கதையை விட்டு நம்மை கொஞ்சம் வெளித்தள்ளிவிடுகின்றன. போலவே கதைக்களம் சூழல் பற்றி விவரணைகளுக்கும், கதைப் பாத்திரங்கள் அவர்களுடைய உணர்வுகள் பற்றி விவரணைகளுக்குமான சமநிலை சரியாக அமையாதது போலவும் தோன்றியது.மேலும் ‘அம்பரம்’ நாவலில் அந்தந்த  நாடுகளைச் சார்ந்த நிறைய கலாச்சார கலைசொற்களும், நிலவியல் குறிச்சொகளும் இடம்பெற்றிருக்கின்றன.  

எ.கா: 

தணக்கா (Thanaka) - பர்மியர்கள் முகத்தில் அழகுக்காக பூசிக்கொள்ளும் ஒருவகை மாவு

ஏ கலா - பர்மியர்கள் தமிழர்களைக் குறிப்பிடும் விளி

சுவெ மொடா பயாச்சி (Shwehmawdaw Pagoda) - பர்மாவின் பெகு நகரில் அமைந்துள்ள ஒரு பெளத்தமடாலயம்

இம்மாதிரியான சொற்களுக்கு எந்தவகையான அடிக்குறிப்போ (footnote)  இணையான ஆங்கில உச்சரிப்போ குறிப்பிடப்படவில்லை. நாவலில் சொல்லியிருக்கிற தகவல்கள் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ள இணையத்தை நாடுவதிலும் சிரமமிருந்தது. 

அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, கடல், உயர்ந்த வெளி, வானம், என பல பொருள் சொல்லுகிறது இணைய அகராதி. நாவல் புலம்பெயர்ந்தோரின் நிலம் சார்ந்த அடையாளம் குறித்தது என்பதால் நிலத்தைக் கடலாகவும், அடையாளத்தை ஆடையாகவும் உருவகித்துக் கொண்டால் இரண்டுக்கும் ‘அம்பரம்’ எனும் தலைப்பு பொருந்திப் போகின்றது

இறுதியாக, தன்னுடைய முதல் நாவலுக்கு இத்தனை பெரிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதன் வழியே தத்துவம், மதம், சர்வதேசிய அரசியல், போரினால் சாமனியர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம், புலம்பெயர்வோரின் அடையாளச்சிக்கல்கள் ,தனி மனிதர்களின் உணர்வுப்போராட்டகளென அத்தனையையும் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர். அவருடைய முன்னுரையிலிருந்து இந்த நாவலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்திருப்பதையும், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகப் பயணித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த உழைப்பு வீண்போகவில்லை. நாவலின் இறுதிவடிவம் சிறப்பாக அமைந்ததற்கு அந்தக் கடுமையான உழைப்பே காரணமென நினைக்கிறேன்.

 ரமா சுரேஷ் அவர்களுக்கும், பதிப்பாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் <3 

அம்பரம் | ரமா சுரேஷ் | மோக்லி பதிப்பகம் | 400 பக்கங்கள் | விலை ரூ. 350

புத்தகம் வாங்க: இணைப்பு இங்கே

References:

https://en.wikipedia.org/wiki/First_Anglo-Burmese_War

https://en.wikipedia.org/wiki/Shinbyu

https://en.wikipedia.org/wiki/1930_Bago_earthquake

https://en.wikipedia.org/wiki/Ledo_Road

https://en.wikipedia.org/wiki/Second_United_Front

https://en.wikipedia.org/wiki/Thanaka

https://en.wikipedia.org/wiki/Shwemawdaw_Pagoda

https://www.bbc.com/news/world-asia-28832296


புதன், 3 ஆகஸ்ட், 2022

லகுடு - அதிர்ஷ்டத்தின் சூதாட்டம்

 


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

குறள் 932 - அதிகாரம்: சூது

பொருள்:    ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

 நாம் தற்செயல் என்றோ அதிர்ஷ்ட்டம் என்றோ நினைக்கிற விஷயங்கள் உண்மையில்  தற்செயலானவை தானா ? நிகழ்தகவுகளைக் கொண்டு எண்களோடு விளையாடி பெரும்பாலான களங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான எல்லா வாய்ப்புகளையும் கணித்து விட முடிந்தாலும், உண்மையில் நிகழக்கூடியவை நமது தனிப்பட்ட அனுமானங்கள் எல்லாவற்றையும் மிஞ்சியவையாக இருந்தால் என்ன செய்வது ? காரண காரியங்களை ஆராய்ந்து கேள்விகளுடன் துறத்தி , சூட்சுமங்களை அறிந்துகொண்டு எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துவிட முடியுமா ? ஒரு தனிமனிதன் செய்யக் கூடியவையா இவையெல்லாம் ? 

 கால்பதித்து நடப்பதற்கு சரியான பாதையோ, கையால் பற்றிக்கொண்டு மேலெறி விட கொடிகளோ எதுவுமற்ற பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு மலையுச்சியையும் தாண்டி பறக்கத் துடிக்கிறவனின் கதை தான் லகுடு. ’லகுடு’ என்பது ஒரு வகைக் கழுகின் பெயர்; கிட்டத்தட்ட அதற்கு இரையாகிவிடக் கூடிய ஒரு சிற்றுயிரைப் போன்றவன், வேட்டைப் பறவையாக உணவுச் சங்கிலியின் மேலேயிருக்கிற லகுடாக தன்னை வறித்துக்கொள்கிறான். அவன் மனதளவில் எப்போதுமே உயரங்களை விரும்புகிற உயரப்பறத்தலை விரும்புகிற ஒரு வேட்டைப் பறவையாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்ளுகிறான்.  

காலில் கட்டியிருக்கிற சிறுநூலை வெட்டி அறுத்துவிட்டு  எப்போது பறப்பது ? எது உயரமென எப்போது தெரியும்? எனக்குக் கற்றுக் கொடுக்க ஆளில்லையா ? 

’லகுடு’- சரவணன் சந்திரன்

 சூதின் வேறொரு பெரு வடிவமான லாட்டரிச்சீட்டுகளின் உலகம் தான் கதைக்களம், அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணியாக, தெருத்தெருவாய் லாட்டரிச் சீட்டு விற்கிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டு ஏதேனும் ஒரு இழையைப் பிடித்து மேலேறிவிடத் துடிக்கிறவன் லகுடு. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் செய்கிற சில்லறைத் தொழிலில் நியாயமும் நேர்மையும் வேண்டுமென நினைக்கிறவர் அப்பா. அதிர்ஷ்டத்தை தற்செயல் என எண்ணிக்கொண்டு அதை எதிர்நோக்கி காத்திருக்கிற இடத்தில் இருந்து தான் நினைக்கிற நேரத்தில்  விரும்புகிற ஆளுக்கு அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரக் கூடிய இடத்திற்கு நகர்கிறான் கதைசொல்லி. ஒவ்வொரு கட்டத்திலும் அந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு யாராவது ஒருவரின் கைபிடித்து மேலேறிவிடத் துடித்தவன் கடைசியில் என்னவானான் என்பது மீதிக்கதை 

உள்ளூரில் துணை நிற்கிற கதிர்வேலு, அடுத்தகட்டத்துக்கு இழுக்கிற பாலக்காடு ஜோசப் என்கிற செல்வம், லகுடை நம்பி தொழிலில் இறங்கிய அந்தப் பெயரில்லாத முதலீட்டாளர், காசு பணம் பார்த்தாலும் நிதர்சனம் பேசுகிற நண்பன் சோலைச்சாமி, வேளொரு தளத்தில் கூட நிற்கிற நண்பன் மாணிக்கவாசகம், காலைத்தாங்கி நடந்து தேய்ந்தாலும் நேர்மை பேசும் அப்பா,  அம்மா விட்டுப் போன மாதா சிலைய, கடைசியாக நிலாப் பெண் அர்ச்சனா என அத்தனை பாத்திரங்களும் மனதில் நிற்கின்றார்கள். 

உண்மையில் லாட்டரிச்சீட்டுகள் பற்றியும் அது எத்தனை பெரிய வலைப்பின்னல், எத்தனை கைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன, அதிர்ஷ்டம் யாரால் யாருக்காக நிர்ணயிக்கப்படுகிறது என்கிற  விவரங்களையும் படிக்கையில் வியப்பும் ஆயாசமுமே ஒருசேர மிஞ்சுகிறது. சரவணன்சந்திரன் அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியினால் நம்மை இந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறார்.ஒரு காலத்தில் அதிர்ஷ்டத்தின் பெயரால் எத்தனையோ உழைக்கும் மக்கள் தங்களுடைய் வருமானத்தையும் வாழ்வாதரத்தையும் லாட்டரிச்சீட்டுகளில் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில், இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமாவது லாட்டரிச்சீட்டுகளை அரசு முழுமையாக தடை செய்திருப்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

 ’லகுடு’ நாவலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமான விஷயம் எதுவென்றால், அடிமட்டத்தில் இருக்கிற ஒருவன் கடைத்தேற்றம் பெறுவான் என்கிற முகக்குறி தெரிந்தால் சுற்றியிருப்பவர்கள அவனை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவன் பாதை மாறி போவது தெரிந்தால் ‘தம்பி இது தப்புடா, ஒதுங்கிப்போ’ என எச்சரிப்பார்கள். மனம் நிறைய நம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு வெறும் கையோடு நிற்கிறவனுக்கு தைரியம் சொல்லி சரியான நேரத்தில் கைதூக்கி விடாவிட்டாலும் வழியாவது காட்டிவிடுவார்கள். இந்த நாவல் முழுக்கவும் அந்த மாதிரி நிகழ்வுகளும் மனிதர்களும் உண்டு. என்னுடைய வாழ்விலும் வெவ்வேறு தருணங்களில் அப்படியானவர்களைக் கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரியான தருணத்தில் படிக்க வேண்டுமென இரண்டாண்டுகளாய் காத்திருந்துவிட்டு, ஒரு வழியாக 7800  அடி உயர மலைமேல்  தேயிலைத்தோட்டத்தின் குளிர் சாரலில் அமர்ந்து கொண்டு, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படித்து முடிக்கையில் ஒரு லகுடாக பறந்து கொண்டிருந்தேன். இதுவரை அவருடைய ‘அஜ்வா’ நாவலை எனக்கானதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி அந்த இடம் ‘லகுடு’க்கு தான். சுபிட்ச முருகனிலும், அத்தாரோவிலும் எனக்கு பிடிபடாதது லகுடுவில் பிடிபட்டதாக உணர்கிறேன்.

வாழ்த்துகளும் நன்றியும் அண்ணே..! <3

லகுடு - சரவணன் சந்திரன்

கிழக்கு பதிப்பகம் | விலை ரூ. 200 | 183 பக்கங்கள்

புதன், 22 ஜூன், 2022

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்
-------------------------------------------------

முதன்முதலில் நட்சத்திரங்களை எப்போது வியந்து பார்க்கத் தொடங்கினேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? 

சிறு வயதில் நட்சத்திரங்களுக்கும் விட்டில் பூச்சிகளுக்கும் வேறுபாடு தெரியாதவனாக இருந்திருக்கலாம்.

வளர்ந்து, கேள்வி கேட்டு, வாசித்து, தேடத் துவங்கியபின் நட்சத்திரங்களைப் பார்த்தல் என்பது எப்போதுமே வியப்புக்குரியதாகிப் போனது

இந்த அண்டத்தின் எங்கோ ஓர் மூலையில் பல நூறாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் வாழ்ந்து ஒளிர்ந்து மறைந்து போன ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுளின் ஒரு கனத்தை, ஒரு நொடியின் ஒளிச்சிமிட்டலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தர்க்கப்பூர்வமாய்... இரவு வானில் நட்சத்திரங்கள் பார்த்தலென்பது கடந்தகாலத்தைப் பார்த்தல் தானே ?

சில நாட்களுக்கு முன் வீட்டின் பழைய காகிதங்களுக்கு நடுவே ஏதோ ஓர் ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் கைகளில் தட்டுப்பட்டன 

நூறாண்டுகள் பழைய புகைப்படமொன்றும்
நூறாண்டுகள் பழைய திருமண அழைப்பிதழொன்றும்

அப்பா சொன்னார்.. என் பாட்டனுக்குப் பாட்டனாரின் குடும்பப் புகைப்படமென்றும், அவர் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் அதுவென்றும்

பழுப்பேறிய அந்த புகைப்படத்தையும் அழைப்பிதழையும் கைகளில் ஏந்துகையில் நூறாண்டுகளின் வரலாற்றையும், மூதாதையரின் கதைகளையும், அவர்தம் வாழ்வின் மிச்சத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது 

கடந்தகாலத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது

ஒரு நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது...!

<3

சனி, 11 ஜூன், 2022

விக்ரம் - 2022 - There lived a ghost

விக்ரம் பாத்து முடிச்சு ரெண்டு மூனு நாளா திரும்பத் திரும்ப படத்த மண்டைக்குள்ள ஓட்டிப் பாத்து, ஒவ்வொரு mass moment ஆ  recollect பண்ணி சந்தோஷப் பட்டுட்டு இருந்தேன்.

பயங்கரமா பசியெடுத்து ரொம்ப நேரம் ஆன பிறகு சாப்பாடு கெடச்சா அது நமக்கு ரொம்ப பிடிச்ச உணவா இருந்தாலும் வழக்கமா சாப்பிட்ற அளவு கூட இல்லாம கொஞ்சமா சாப்ட்ட உடனள தெகட்டிடும். ஒரு சில திரைப்படங்களுக்கு ஏற்பட்ட இந்த அதீத hype அந்தப் படங்கள ஒரு சராசரி ரசிகனா ரசிக்க முடியாம பண்ணியிருக்கு.

ஒரு சில திரைப்படங்கள் தான் இதுக்கு விதிவிலக்கா அந்த hypeக்கும் குடுத்த காசுக்கும் worthஆ இருந்துருக்கு.
இந்த வருஷம், முதல்ல நான் அப்டி என்னை மறந்து தேட்டர்ல ரசிச்ச படம் 'மாநாடு'. அவ்ளோ flawless ஆ ன்னு கேட்டா இல்லைதான்... ஆனா சின்னச்சின்ன விஷயங்கள ஊதிப் பெருசாக்கி பாக்க ஆரம்பிச்சா எந்த கலைவடிவத்தையும் முழுசா ரசிக்க முடியாம போயிடுமோங்குற பயத்துல I always choose to tell myself, if you get lost in a movie for those two and half hours then it's totally worth itனு. அதுக்கப்புறம் 'விக்ரம்' படத்துக்கு தான் அப்படியொரு feel கெடச்சுது.

கமல்ங்குற பேரே excitementக்கு போதுமானதா இருந்தாலும் Lokesh and team + Fahad+ VJS +Anirudh இவங்க எல்லாருடைய பெயர்களும் சேர்ந்ததால எதிர்பார்ப்பும், excitementம் இன்னும் அதிகமா இருந்துச்சு. கடைசியா படம் வெளியாகி தேட்டர்ல பாக்கும் போது கொஞ்சம் கூட ஏமாத்தல.

Mild spoilers ahead

Masked men sequenceல தொடங்கி அமர் ஒவ்வொரு விஷயமா தேடித்தேடி investigate பண்ணப் பண்ண பரபரப்பு அதிகமாகிட்டே போனாலும் Interval block reveal க்கு கொஞ்சம் முன்னாலேயே ' இந்த sceneல நான் தான் ஹீரோ' dialogue kinda gave it away... Still I was so lost and engrossed in the movie that I was screaming my hearts out. 

Stunt choreo, cinematography, editing, இசைன்னு எல்லாமே சிறப்பா அமைஞ்சு அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயார்படுத்திகிட்டே இருந்த மாதிரி இருந்தது. Anirudh has done a tremendous job as well (இசை பத்தி டெக்னிக்கலான விஷயங்கள எனக்கு சொல்லத்தெரியாது.. My opinion is just based on the engagement factor)

 கதை,கைதி படத்துல நடக்குற சம்பவங்களை இந்தப் படத்தோட இணைச்ச விதம், flow of events, scene sequences, கடைசில ரோலக்ஸ் intro,  பத்தியெல்லாம் எல்லாருமே  நிறையவே பேசிட்டாங்க. நாம புதுசா சொல்ல எதுவுமில்ல.

ஹாலிவுட்ல Harrison Ford, Clint Eastwood, Mel Gibson, Bruce Willis, Liam Neeson, Denzel Washington, Samuel Jackson மாதிரியான ஆக்ஷன் கிழ சிங்கங்கள் நடிச்ச பல படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை RED (Retired and Extremely dangerous), Expendables, Equalizer, Shaft, மாதிரியான படங்கள் அந்த பட்டியல்ல உண்டு.

இந்த வகை படங்கள் மேல சொல்லபட்ற முக்கியமான குற்றச்சாட்டு Engagement factor இருக்குற அளவுக்கு emotional factor இல்லன்னு.. விக்ரம் படத்துக்கும் அதே தான் சொல்றாங்க... ரொம்ப shallowஆ இருக்குன்னு தான். இன்னும் dark and grim, emotionally strong plot இருந்துருக்கலாம்னு. But if the movie reaches to the mass audience and satisfies , I don't actually think there's any harm in it. 

ஆனா பிரச்சனை அது இல்ல இவ்வளவு விஷயங்கள மெனக்கெட்டு திட்டமிட்டு பண்ற படக்குழு அந்த emotional depth quotientஐயும் கொஞ்சம் effort போட்டுப் பண்ணா இதே mass appeal படத்தோட output இன்னும் பல காலம் நிலைச்சு நிக்குற ஒரு cult classicஆ மாறலாம் இல்லையா?  ஆனாலும் ஒன்னும் மோசமில்ல. எனக்கு, கர்ணன் தன்னுடைய மகனுக்காக வருந்துற பகுதியும், அதைத் தொடர்ந்த போர் கண்ட சிங்கம் பாடல் பகுதிகளுமே போதுமானதா இருந்துச்சு.

விஜய் சேதுபதியுடைய நடிப்புமே அவருடைய வழக்கமான ஸ்டைல்ல இருந்து மாறுபட்டு நல்லா இருந்துச்சு. ஒரு மாதிரி நளினமா, தன்னை குறுக்கிக் கொள்கிற உடல்மொழியோட ஒரு கொடூர வில்லன் ரோல். கடைசியா இந்த மாதிரி பாத்த வில்லன்  'அஞ்சாதே' படத்துல தயா (Prasanna nailed it - Actually Mysskin thr GOAT nailed it) VJS ஓட intro தொடங்கி கல்யாண fight வரைக்கும் மனுஷன் மெரட்டி விட்ருக்காரு. 

ஃபஹத் பத்தி சொல்லியே ஆகனும். உண்மையில கமலுக்கு இந்திய சினிமால ஒரு protégéன்னு சொல்லனும்னா அதுக்கு எல்லா வகைலயும் தகுதியான ஆள் ஃபகத் பாசில் தான். எப்படி கமல் calibreக்கு விக்ரம் role பஞ்சு முட்டாய் சாப்புட்ற மாதிரியோ ஃபகத்துக்கும் இந்தப்படம் அப்படியே.

Best reveal of the movie ன்னா இடைவேளைக்கு பிறகான அந்த female agent ஓட intro and சண்டை தான். அப்படியொரு goosebumps எனக்கு. 'Raid' ன்னு ஒரு Indonesian படத்துல பெரிய stunt sequence ஒன்னு வரும்... நான் நிறைய முறை பாத்த hand to hand combat அது. அதுக்கப்புறம் தமிழ்ல அந்தளவு intense ஆ பாத்த சண்டை sequence இதான். (இதுலயும் தலைவன் Mysskin has done a similar sambavam with Cheran and a nail cutter knife🔥🔥🔥) 

கடைசி கடைசியா விக்ரம்ல  துப்பாக்கிகள் பத்தி இவ்வளவு details வந்ததும், பலருக்கும் என்னோட all time favorite 'வட்டாரம்' படம் நினைவுக்கு வந்துருக்கு. Facebookல இயங்குற 'வட்டாரம் appreciation club' ஓட நீண்டகால உறுப்பினரா I felt so happy 😜

லோகேஷ் கனகராஜ் உடைய  execution பத்தி தான் திரும்ப திரும்ப யோசிச்சுட்டே இருந்தேன். இப்படி ஒரு ensemble castஅ வெச்சுகிட்டு எல்லா பக்கத்துல இருந்தும் வந்த அழுத்தங்கள் தன்னை பாதிக்க விடாம அட்டகாசமா ஒரு படத்த குடுத்துட்டு இன்னும் நாலு படத்துக்கு தேவையான premiseஐயும் செட்டப் பண்ணிட்டு முடிச்சுருக்காரு. Tremendous efforts and control...! ❤️ வாழ்த்துகள் 

As much as Kamal needed this we Tamil audience also needed this one after disappointing outings from big stars. And it feels wholesome to see him happy and content....! 😊❤️

Please do not miss it on theatres. நான் இன்னும் ரெண்டு மூனு முறையாவது பாப்பேன்னு நினைக்கிறேன்.

Once upon a time
There lived a ghost
He was known to be a killer
And fear the most...

He is not a myth anymore... His name is... 

விக்ரம்ம்ம்ம்ம்... Absolutelyyyy lit 💥💥💥🔥🔥🔥

புதன், 8 ஜூன், 2022

இறவான் - பா.ராகவன் | இசையிற் பெருந்தக்க யாவுள ?

 


” ஒரு மேதையின் பெரும் சிக்கலே அவன் ஒரு மேதையாக இருப்பதும் அதை அவன் அறிந்திருப்பதும் தான்.இது விவரிக்க முடியாத பாடு. சராசரிகளுக்குப் புரியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் சராசரிகளின் உலகில் தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. தன் குழந்தையின் சந்தோஷத்துக்காக மண்டி போட்டு யானை போல நடந்துகாட்டும் தந்தைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். தந்தைகள் சில நிமிடங்களில்  விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறார்கள். மேதைகள் இறக்கும்வரை மண்டிபோட்டே நடக்கவேண்டியதாகிவிடுகிறது”

              -இறவான் (பா.ராகவன்)

சிறிதொரு இடைவெளிக்குப்  பின் ஒரு புனைவு நூலைக் கையிலெடுக்கலாமென முடிவு செய்ததும் வாசிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் ’இறவான்’.  மேற்கண்ட பத்தி நாவலின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் மேதைகள் என்போர் யார் ? மேதைமை எனும் பண்பு ஒரு தனி மனிதருக்கு பிறவியிலேயே அமையப்பெற்ற ஒன்றா ? அல்லது கடுமையான பயிற்சியினால் அடையப் பெறுவதா ? போலவே ஒருவரின் மேதைமையைக் கண்டுணர எல்லோராலும் முடியுமா ? அல்லது சக பேரறிவாளர்கள் மட்டுமே கண்டு காமுறுவரா ? எத்தனை எத்தனைக் கேள்விகள்...! 

இந்தப் புத்தகம் அப்படியொரு இசைமேதையான ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசப் என்கிற சந்தானப்ரியனைப் பற்றியது. எட்வினின் சிறுவயதில் ஓர் நாள், அப்பா வாங்கித் தந்த 5 ரூபாய் புல்லாங்குழலில் அற்புதமான திரைப்பாடலை பிசிறின்றி வாசிக்க அவனது பெற்றோர் வியந்து திகைத்துப் போகிறார்கள். முறையாக எந்த வகை இசைப் பயிற்சியையும் அதுவரை மேற்கொண்டிராத எட்வின் அந்த தருணத்திலிருந்து 'Prodigy' ஆகிறான். எந்த இசைக்கருவியிலும் எந்த இசையையும் வாசிக்கக்கூடிய மகா மேதையாகிறான்.

 இசை மேதைமை அவனை தேடிக் கண்டடைந்த அதே நேரத்தில் மனப் பிறழ்வும் அவனை ஆட்கொள்கிறது. தனது பெயர் ‘ஆப்ரஹாம் ஹராரி’ எனவும் தான் ஒரு யூதன் எனவும், இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் சொல்லத் துவங்குகின்றான்.சிறுவயதில் எங்கோ கேட்ட ஒரு பெண்குரலின் பாடலை மனதில் வரித்துக் கொண்டு அவளை, அவளது குரலை தேடியலைவதில் தொடங்கி, இசைக்குழு அமைத்து நண்பர்களுடன் பாடிக்கொண்டு திரிவதிலிருந்து, திரைப்படத்திற்கு இசையமைப்பது, அதுவரையில் உலகம் கேட்டிடாத ஒரு சிம்பொனியை எழுதி பெர்லினில் அரங்கேற்ற விழைவது, இசையைத் தேடி நாடோடியாய் போதையில் அலைவது, தன்னை ஒரு யூதனாக அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது, என ஒரு இலக்கேயில்லாமல் காற்றிலலையும் இலையாய் திரிகிற எட்வின் என்கிற ஆப்ரஹாம் என்கிற சந்தானப் ப்ரியனுக்கு என்ன ஆனதென்பது மீதிக்கதை. 

எட்வினின் இசைக்குழுவில் ட்ரம்மராக வரும் ஜானவியின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் தெளிவான ரகளையான ஒன்றாக இருந்தது. ஆனாலும் தேய்வழக்காக இசையைத் தவிர ஏதுமறியா மேதையை விழுந்து விழுந்து  காதலிக்கிற, அவனுக்காக எதையும் செய்யத் துணிகிற, முற்றிலும் சரணடைந்து விடுகிற ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது.ஆனால் காதல் பற்றிய திருமணம் அவளுடைய புரிதலும் தெளிவாகவே இருக்கிறது. அதை அவள் எட்வினிடம் எடுத்துச் சொல்லும் விதமும் அட்டகாசம். 

//”காதல் வண்ணமயமானதில்லை. அது ஒற்றை வண்ணம் கொண்டது. கருஞ்சாம்பல் வண்ணம் . ஆனால் சரணாகதி வண்ணமற்றது. நீரைப் போன்றது. தாகத்துக்கோ கு*டி கழுவவோ மிகவும் உபயோகமானது”              

-இறவான் (பா.ராகவன்)//

மெண்டல்ஷானையும் , இளையராஜாவையும், மொசார்ட்டையும், அவர்களின் இசையை தரம்பிரித்து ஆராய்ந்து இது சரி இது தவறு என மதிப்பீடு செய்கிற ஒரு ஏதிலியை , அவன் உண்மையான மேதையாகவே இருந்தாலும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவோ, அவன் சொல்வதை ஒப்புக் கொள்ளவோ தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். 

//நூறு நூறு வருடங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு பீடத்தில்  ஏற்றி அமர வைத்து சிலையாக்கிவிட்ட சில மேதைகளை இந்த அற்பன் மட்டம் தட்டுகிறான் என்று தோன்றும். அப்படித்தோன்றினால் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிழையில்லை.அவர்கள் மேதைகள் என்பதும் உண்மை. நான் அற்பன் என்பதும் உண்மை. மட்டம் தட்டுவதாகத் தோன்றுவது மட்டும் பிழை. ஒரு தராசுக்குரிய மரியாதையை இச்சமூகம் தருவதில்லை

              -இறவான் (பா.ராகவன்) //

இசைக்கருவிகளை வாசித்தல் குறித்தும், இசை குறித்தும், ஒரு மேதையின் சிந்தனைப் பாட்டை சாமானியர்கள் (அலட்சியமாக) எதிர்கொள்கிற விதம் குறித்தும், மனப்பிறழ்வு கொண்டவனான எட்வினின் குரலாக பேசும் அத்தனையுமே தனித்தனியாக பொன்மொழியாகக் கொண்டாடப்பட வேண்டியவை. உண்மையில் இசைகுறித்த கூர்நோக்கும், உணர்வுகள் பற்றிய ஆழமான சிந்தனையும் இல்லாமல் ஒரு புனைவில் கூட இந்த மாதிரியான சொற்றொடர்களை எழுதிவிட முடியாதென தோன்றுகிறது.

// எனக்கென்னவோ கலைமனம் என்று ஒன்று இருந்துவிட்டால் கருவிகள் ஒரு பொருட்டில்லை என்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.மனத்துக்குள் இசை நிரம்பியிருந்தால் போதும் குறிப்பிட்ட கருவியின் அடிப்படை சூட்சுமம் குறித்த  அறிவு இருந்தால் போதும். சில் தடுமாற்றங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கிவிட முடியும் என்றே நினைத்தேன்.

              -இறவான் (பா.ராகவன்) //

இறுதி அத்தியாயத்தை வாசிக்கையில் பா.ரா நிகழ்த்தியிருக்கிற சொல் விளையாட்டுகளை முதலில் அச்சுப்பிழை என்றே கருதியிருந்தேன். பின்பு தான் கதையின் போக்குடன் இணைத்து அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. Brilliance...! நாவலின் துவக்கத்தில் கதை தொடங்குகிற நிகழ்கிற சூழல் தெளிவாகத் தெரிந்த பின்பும் கதையின் ஓட்டத்தில் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு இறுதி அத்தியாயத்தில்  நமக்கு திடீரென மூளையில் உதிக்கிற போது எல்லாமும் முடிந்து விடுகிறது. 

 ஒரு பாடலையோ அல்லது இசைத்துணுக்கையோ நேரடியாகக் கேட்டால் நாம் உணர்ந்து கொள்ளுவதை , வெறுமனே அந்த உணர்வைப் பற்றி எழுதுவதன் மூலம் கடத்திவிட முடியுமா என்ன ? இந்த நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கிற வெவ்வேறு பாடல்களையும், இசை துணுக்குகளையும் , எட்வின் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கிற அத்தனையையும் தனது எழுத்தின் வழியே நமக்கு கடத்திவிடுகிறார் எழுத்தாளர் பா.ராகவன். ஒருவேளை இன்னாரைப் பற்றிய கதையாக இருக்குமோ, அல்லது அவராக இருப்பாரோ என நாம் யாரை நினைத்தாலும் அவர்களையும் கதையினூடாகவே உலவவிட்டு எட்வின் என்னும் மேதை இவர்களினின்று மாறுபட்டு தனித்து நிற்பவன் என நிறுவிவிடுகின்றார்.இதுவரையில் பா.ரா அவர்களின் எழுத்தில் புனைவல்லாதவையையே வாசித்திருந்த எனக்கு,  அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்திருந்தது இறவான் நாவல். 

இறவான் - இசையைத் தேடி <3


 இறவான் - பா.ராகவன் | எழுத்து பிரசுரம்| 329 பக்கங்கள் | ரூ.350/- 

 இறவான் நாவலில் இடம்பெற்ற பாடல்களை யூட்யூப் ப்ளேலிஸ்ட்டாகத் தொகுத்தளித்திருக்கும் சிவராமன் கணேசன்  அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி <3.

 இணைப்பு  இங்கே - https://www.youtube.com/playlist?list=PLeuoo_Cwzt0BtcnE6lsFD3CyLYnkv3m1T

 



வெள்ளி, 22 ஏப்ரல், 2022

காலங்களில் அது வசந்தம் - இளம்பரிதி கல்யாணகுமார்


 ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியானது. ரசனை என்கிற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுவையுணர்ச்சி அல்லது சுவையுணர்தல் எனச் சொல்லலாமா தெரியவில்லை.  இசை, மொழி, உணவு, இலக்கியம், கலை என அத்தனையிலும் தனக்கு ஏற்ற ஒன்றையோ அல்லது தன்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றையோ கண்டுணர்வது, மெச்சுவது, அதனை தனக்கானதாகக் கருதுவது; இவையனைத்தையுமே ரசனை என்கிற வரையறையின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு திரைப் பாடலையோ அல்லது திரைப்படக் காட்சியையோ நாம் ரசிப்பதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்.ஏதோ ஓர் நினைவுடன் அவை பிணைந்திருப்பதாலோ, நமது வாழ்வின் முக்கியமானதொரு கட்டத்தில் அந்தப் பாடலை நாம் கேட்டதாலோ, மனதுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு அது விருப்பமான பாடல்/படம் என்பதாலோ , கடந்த காலத்தை மனதில் மீட்டுருவாக்கம் செய்வதாலோ, ஒரு பாடல் அல்லது திரைப்படம் நமக்கு முக்கியமானதாகி விடுகின்றது. நமக்கு விருப்பமான , முக்கியமான அந்தப் பாடல் வேறொருவருக்கு வேறு மாதிரியான உணர்வையும்  நினைவுகளையும் தந்திருக்கலாம். அந்தப் பாடலுக்கான களமும், காட்சியும், பாத்திரங்களும் அவர்களின் மனதில் முற்றிலும் வேறொன்றாக இருக்கலாம்.  பாடல் ஒன்றே; பார்வைகளோ பல்லாயிரம்.

அப்படி, ஒரு தலைமுறைக்கே பல நினைவுகளையும், உணர்வுகளையும் அள்ளித்தந்த பாடல்களுள் ஒரு நூறு பாடல்கள் பற்றிய புத்தகமே ‘காலங்களில் அது வசந்தம்’. உண்மையில் பொதுமக்களின் ரசனையென்பது கால/சமூக மாற்றங்களுக்கேற்ப பத்தாண்டுகளுக்கொரு முறை மாறிக் கொண்டேயிருக்கும் (அல்லது நான் அப்படி நினைக்கிறேன்).  அவ்வகையில் கையில் இருக்கிறவற்றை ரசிக்கும் அதே வேளையில், கடந்த காலத்தில் கொண்டாடப்பட்டவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். 

அதனாலேயே நண்பர் இளம்பரிதி அவரது முந்தைய புத்தகமான ‘மடை திறந்து’ போல பாடல்வரிகள் (சொல் நயம், சந்தம்) பற்றி மட்டும் எழுதாமல் இந்நூலில் ’இடம் சுட்டி பொருள் விளக்கம்’ சொன்னாற்போல் பாடல்கள் எழுதப்பட்ட சூழல், பாடல் இடம்பெற்ற திரைப்பட உருவாக்கம் குறித்த தகவல்கள், பாடலாசிரியர்களின் அனுபவங்கள், இயக்குநருக்கும் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான உறவு பற்றி, பாடல் படமாக்கப் பட்ட விதம், பாடல்வரிகள் கதையுடன் பொருந்திபோகும் விதம் என இத்தனையையும் தன்னுடைய ரசனையின் பார்வையில் அழகாக எழுதியிருக்கிறார். வெறுமனே சொல்லக்கேள்வியாக இல்லாமல், சொல்லியிருக்கிற தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் கடுமையாக உழைத்திருக்கின்றார்.

உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமானவை என்றால், அப்பாவும் அம்மாவும், தாத்தாவும் மனமுருகி ரசித்த பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழ்த் திரையிசையின் மேல் காதல் கொண்டவரென்றால், உறுதியாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

காலங்களில் அது வசந்தம் - திரையிசையின் நினைவோடையில் ஒரு அழகிய படகுப் பயணம் <3 <3 <3 நன்றியும் வாழ்த்துகளும் இளா..! 

பி.கு:

புத்தகத்தில் எனக்கு சிக்கலாகப் பட்ட விஷயங்களைப் பற்றி சொன்னபோது திறந்த மனதுடன் செவிசாய்த்த இளாவுக்கு என் அன்பு <3 உருவாக்கத்திலும், அச்சுக்கோர்ப்பிலும் திருத்தம் தேவைப்படும் இடங்களையும் பதிப்பாளர்களிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் எனது நன்றி <3 


’காலங்களில் அது வசந்தம்’

இளம்பரிதி கல்யாணகுமார்

377 பக்கங்கள் - விலை ரூ:420.00

வாசகசாலை பதிப்பகம்

புத்தகம் வாங்க - தொடர்புக்கு: 9942633833, 9790443979

ஆன்லைனில் வாங்க: https://www.commonfolks.in/books/d/kaalangalil-athu-vasantham




 

 

சனி, 8 ஜனவரி, 2022

என்னுடைய 2021 – ஒரு பார்வை

 #My2021 #my2021recap #sudharsanh

இது என்னுடைய self-reconciliation அல்லது self-appraisal எப்படி வேணா வெச்சுக்கலாம். பெருந்தொற்றுக் காலத்துல பிழைத்துக் கிடப்பதே சாதனை தான். ஆனாலும் எல்லாரும் அவங்கவங்களோட நோக்கத்துக்காக ஓடிட்டேதான் இருந்துருக்காங்க. நாம ஓடலைன்னாலும் எந்தளவு நடந்துருக்கோம்னாவாது பாத்துக்கத்தான் இந்த பட்டியல்
 

 
1. வாசகசாலையின் புரவி முதல் இதழில் மனுஷ்யபுத்திரனுடைய நேர்காணலுக்காக அவரை புகைப்படம் எடுத்தது. அதற்காக ’புகைப்படம்:சுதர்சன்’ என என்னுடைய பெயர் புரவி முதல் இதழில்இடம்பெற்றது. இது போக ஆஸ்கருக்கு தேர்வான திரைப்படங்கள் குறித்து ஒரு கட்டுரையும், நெட்ஃப்ளிக்ஸ்ல வெளிவந்த ஆவணக் குறுந்தொடர் பற்றி ஒரு கட்டுரையும் ’புரவி’க்காக எழுதியிருக்கிறேன். அது போக திரைக்களம் நிகழ்வில் மண்டேலா திரைப்படம் குறித்தும், கதையாடல் நிகழ்வில் எம்.கே.மணி அவர்களின் சிறுகதை குறித்தும் பேச வாய்ப்பமைந்தது. அடுத்த ஆண்டில் நான் கலந்து கொள்ளவிருக்கும் முதல் நிகழ்வும் வாசகசாலையுடனே. தொடர்ந்து பயணிக்கும், வாய்ப்பளிக்கும் அருணுக்கும், கார்த்திக்கும் நன்றியும் அன்பும் ❤
 

 
 
 2. இரண்டாவது முழு அடைப்பின் போது என்ன செய்வதெனத் தெரியாத வேளையில் சென்றடைந்த இடம் தான் ‘Clubhouse’. ஆரம்பகட்டத்தில் புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அரசியல் என பல குழுக்களில் பங்கேற்ற நான், என்னுடைய யூட்யூப் சேனலான ‘Read Ride Rant’ன் பெயரிலேயே ஒரு குழுமத்தைத் துவக்கி புத்தகங்கள்/பயணங்கள் குறித்து பேசத்தொடங்கினேன். இப்போதுவரை குழுவை 1000 பேருக்கு மேல் பின் தொடர்ந்தாலும், பின்னாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் வந்தவுடன் Clubhouse பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது;என்னுடைய செயல்பாடுகளும் நின்று போனது.
ஆனாலும் பல்வேறு புதிய நண்பர்களின் அறிமுகம் , நட்பு என அள்ளித்தந்தது க்ளப்ஹவுஸ் . Loads of love to my Clubhouse amigos ❤ who were part of our celebrations, ears to my ups and downs last year. Clubhouse நண்பர் ஒருவரின் பரிந்துரையிலேயே வேறு ஒரு புது நிறுவனத்திற்கு மாறினேன்
 
3. ஆம்.. 🙂 என்னுடைய பணி அனுபவத்திற்கும், திறனுக்கும் ஏற்ற, கற்றுக்கொள்ளவும் வளரவும் நிறைய வாய்ப்புகளிருக்கிற ஒரு நல்ல நிறுவனத்தைத் தேர்வு செய்து இணைந்திருக்கிறேன். வேலை பட்டையை கிளப்புகிறது . Thank you Vincent
❤
 
4. என்னுடைய பணி சார்ந்த அடுத்தடுத்த படிநிலைகளுக்கு அடிப்படைத் தகுதியாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் கூடுதலாக உதவும் என , நண்பர்களிடம் பேசி முடிவெடுத்து, ஒரு பல்கலைக்கழகத்தில் MBA (for working executives) – பகுதிநேரமாக சேர்ந்து, வெற்றிகரமாக முதல் செமஸ்ட்டர் தேர்வுகளையும் எழுதிமுடித்து விட்டேன். பெரும் குழப்பங்களோடு படிக்கும் திட்டத்தை தள்ளிப்போட்டபடி இருந்தவனை , கட்டணம் கட்டி, தைரியமூட்டி சலிக்காமல் ஊக்குவித்த என் சுரேகாவுக்கு ❤ Love you
 
5. யூட்யூப் சேனல் ஆரம்பித்ததே 2020ல் தான். இந்த ஆண்டு மற்ற பணிகளின் காரணமாக பயணம், புத்தகங்கள் என 4,5 காணொலிகள் மட்டுமே பதிவேற்ற முடிந்தது. என்னுடைய கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் காரணம். ஆனாலும் எனக்கு மற்றுமொரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த நுழைவுச்சீட்டாக என்னுடைய யூட்யூப் வீடியோக்களே உதவின
இதுவரை சப்ஸ்க்ரைக் பண்ணவில்லை எனில் இப்போது பண்ணவும்
6. தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சிக்காக எழுத்தாளர்களையும், பிற படைப்பாளிகளையும் நேர்காணும் வாய்ப்புக் கிடைத்ததை தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ஒன்றாகக் கருதுகிறேன். It’s a paid gig too. கருந்தேள் ராஜேஷ் முன்பு எப்போதும் சொல்கிற விஷயம் ஒன்று உண்டு ;” எந்த ஒரு விஷயத்தை நாமாக விரும்பி, கற்றுக்கொண்டு செய்யத் தொடங்கி, அதைச் செய்யவும், கற்றுக்கொடுக்கவும் பிறர் நமக்கு ஊதியம் தருமளவு வளர்கிறோமோ அதுவே நம்முடைய passion” என. அந்தவகையில் நான் மகிழ்கிற வளர்ச்சி இது; மூன்று மாதங்களில் ஐந்து நேர்காணல்களோடு, ஒரு நிகழ்ச்சிக்கு இணைப்பு-தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறேன். வாய்ப்பு அமையக் காரணமாக இருந்த த.ராஜனுக்கும், தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விஜயன் அவர்களுக்கும் என்மனம்நிறைந்த நன்றி
Podhigai Interview -Youtube Playlist: https://www.youtube.com/playlist...
அதுபோக சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் விஜய் டிவியின் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறேன்
 
 

7. வாசிப்பு 2021 – ஆண்டின் தொடக்கத்தில் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்-ன் பட்டக்காடு, கார்த்திக் பாலசுப்ரமணியம் எழுதிய நட்சத்திரவாசிகள் உள்ளிட்ட நாவல்களை படித்திருந்தாலும் மேற்கொண்டு நிறைய படிக்க நேரம் போதவில்லை. டிசம்பர் மாதம் கடைசியாக வாசித்தது கிருஷ்ணமூத்தியின் ‘பாகன்’ நாவல் .
ஆண்டின் இறுதியில் சரியாக தேர்வுகளுக்கு முன்பு ,நிறுவனம் மாறும் இடைவெளியில் ஸீரோ டிகிரி-தமிழரசி அறக்கட்டளையின் நாவல் போட்டிக்காக முதல் சுற்றில் 23 நாவல்களை (ஒரு மாத காலத்தில்) வாசித்தவர்களுள் நானும் ஒருவன். மனதுக்கு நெருக்கமான நல்ல படைப்புகளாகத் தெரிந்த பெரும்பாலான படைப்புகள் நெடும்பட்டியலிலும், குறும்பட்டியலிலும் இடம்பெற்றன. எனக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி சென்னை புத்தகத்திருவிழா சமயத்தில் எழுதவும், வீடியோக்கள் வெளியிடவும் முயல்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் காயத்ரிக்கும் ராம்ஜிக்கும் நன்றியும் அன்பும் ❤
பொதிகைத் தொலைக்காட்சி நேர்காணல்களுக்காக தொடர்புடைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து குறிப்பெடுக்க வேண்டியிருந்ததால் அதனைத் தாண்டி பெரிதாக புத்தகங்கள் வாசிக்க முடியவில்லை.
 
8. எல்லாவற்றுக்கும் இடையே திரைப்படங்கள்/தொடர்கள் என நிறையவே பார்த்தேன். பார்த்தவற்றில் பெரும்பாலானவை பற்றி சிறியதும் பெரியதுமாய் 50 அறிமுகங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கின்றேன்.
Facebook link for ‘What I watch 2021’ album - https://www.facebook.com/media/set/...
 
9. தனிப்பட்ட முறையில் அதிகம் கவனம் செலுத்த முடியாத, நேரம் ஒதுக்க முடியாத விஷயங்கள் என்றால் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு , பயணங்கள், தனிநபர் நிதி மேலாண்மை ஆகியவற்றைச் சொல்லலாம்.
அடுத்த ஆண்டு நிச்சயம் இவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம்…!
 
10. பிரச்சனைகள் எதுவுமே இல்லையா எனக் கேட்டால்.. இல்லாமலில்லை. அம்மாவின் உடல்நலம் உட்பட பல தனிப்பட்ட பிரச்சனைகளும், பணிச்சுமை, உறவுச்சிக்கல்கள் , பொருளாதார நெருக்கடி என எல்லாமும் கொஞ்சமும் ஆட்டம் காட்டின தான். அத்தனையையும் தாண்டித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். உலகமே அப்படி இருக்கும்போது நாம் மட்டுமென்ன விதிவிலக்கா. ஆனாலும் எனக்கு நானே திரும்பத்திரும்ப நினைவூட்டிக் கொண்ட ஒரு விஷயம் ‘Move at your own pace’ என்பதைத்தான். இன்னும் நிறைய படிச்சு, எழுதி, பேசி, பாட்டுப்பாடி ,பயணிச்சு, சிரிச்சு மகிழ
வாழ்த்துகள்
…!
மற்றபடி, had an eventful 2021 and looking forward to an exciting 2022…! Loads of love and wishing you all a happy new year…! ❤

 

Related Posts Plugin for WordPress, Blogger...