நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜூன், 2025

நெஞ்சில் சுமக்கின்ற பாறாங்கல்


----------------------------------------------------------------
நான் எனது நெஞ்சில் நெடுநாட்களாக ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

எனது இடது தோள்பட்டைக்கு முன்னே மார்புக்கு கொஞ்சம் மேலாக அந்த பாறாங்கல்லை வைத்து இரு கைகளாலும் அழுத்திப் பிடித்திருக்கிறேன்

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றிய போது அதன் பாரம் குறித்தான அச்சமோ சுமையின் காரணமான வலியோ தெரியவில்லை

அல்லது நான் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை

எப்போதிலிருந்து இந்த பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறாய் எனக் கேட்பீர்களானால் என்னிடம் பதிலில்லை

அல்லது நான் அதனை நினைவில் கொள்ளவில்லை

இரண்டாண்டுகள் ஆகியிருக்கலாம் இருபதாண்டுகள் ஆகியிருக்கலாம்
யுகங்களாகக் கூட இருக்கலாம்

எவ்வளவு கனம்? என்ன எடை?
என்னால் அளவிட முடியவில்லை

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றியபோது இருந்த எடை தான் இப்போதும். 
அவ்வப்போது கொஞ்சம் கூடியும் குறைந்தும் இருக்கலாம்
சரியாக சொல்லத்தெரியவில்லை

அல்லது நான் அதனை அளவிடவில்லை

உங்களுக்குப் புரியாத வகையில் சொல்வதானால்
என் தந்தையின் உடலிலினின்று பிரிந்த உயிரின் எடையாக இருக்கலாம்
என் நண்பர்களின் மரணத்தின் கனமாக இருக்கலாம்
வேறு சில நண்பர்களின் பிரிவின் சுமையளவாய் இருக்கலாம்
பிரியமானவர்களின் மெளனத்தின் கனமாக இருக்கலாம்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

இறக்கி வைக்கலாமே எனக் கேட்பீர்களானால் எங்கே அல்லது யாரிடம் எனத் திரும்பக்கேட்பேன்
சிலரிடம் பதில் இருக்கும் சிலரிடம் பதில் இருக்காது
எங்கே எப்படி யாரிடம் இறக்கி வைப்பதென யாருக்கும் தெரியவில்லை...! 

அல்லது யாருக்கும் நேரமில்லை 

இந்த பாறாங்கல்லை சுமந்தபடி உறங்கி விழிக்கிறேன்
குளித்து உடுத்தி அலுவலகம் செல்கிறேன்
புகைப்படங்களுக்குச் சிரிக்கிறேன்
புத்தகங்கள் படிக்கிறேன்
சமைத்து உண்கிறேன்
குழந்தையைக் கொஞ்சுகிறேன்
அவ்வப்போது இந்தப் பாறாங்கல் இருப்பதே தெரியாமல் மறைந்து போய்விடுகிறது

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

- சுதர்சன் ஹரிபாஸ்கர்

புதன், 22 ஜூன், 2022

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்
-------------------------------------------------

முதன்முதலில் நட்சத்திரங்களை எப்போது வியந்து பார்க்கத் தொடங்கினேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? 

சிறு வயதில் நட்சத்திரங்களுக்கும் விட்டில் பூச்சிகளுக்கும் வேறுபாடு தெரியாதவனாக இருந்திருக்கலாம்.

வளர்ந்து, கேள்வி கேட்டு, வாசித்து, தேடத் துவங்கியபின் நட்சத்திரங்களைப் பார்த்தல் என்பது எப்போதுமே வியப்புக்குரியதாகிப் போனது

இந்த அண்டத்தின் எங்கோ ஓர் மூலையில் பல நூறாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் வாழ்ந்து ஒளிர்ந்து மறைந்து போன ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுளின் ஒரு கனத்தை, ஒரு நொடியின் ஒளிச்சிமிட்டலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தர்க்கப்பூர்வமாய்... இரவு வானில் நட்சத்திரங்கள் பார்த்தலென்பது கடந்தகாலத்தைப் பார்த்தல் தானே ?

சில நாட்களுக்கு முன் வீட்டின் பழைய காகிதங்களுக்கு நடுவே ஏதோ ஓர் ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் கைகளில் தட்டுப்பட்டன 

நூறாண்டுகள் பழைய புகைப்படமொன்றும்
நூறாண்டுகள் பழைய திருமண அழைப்பிதழொன்றும்

அப்பா சொன்னார்.. என் பாட்டனுக்குப் பாட்டனாரின் குடும்பப் புகைப்படமென்றும், அவர் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் அதுவென்றும்

பழுப்பேறிய அந்த புகைப்படத்தையும் அழைப்பிதழையும் கைகளில் ஏந்துகையில் நூறாண்டுகளின் வரலாற்றையும், மூதாதையரின் கதைகளையும், அவர்தம் வாழ்வின் மிச்சத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது 

கடந்தகாலத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது

ஒரு நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது...!

<3

வெள்ளி, 15 ஜூன், 2018

நாடோடித்தடம் - ராஜ சுந்தர்ராஜன்


புனைவல்லாதவற்றில் இத்தனை ஈர்ப்போடான ஒரு புத்தகத்தைப் படித்தேனில்லை. தனித்தமிழ் மிளிர் கவித்துவ உரைநடை தொடக்கத்தில் சற்றே தடுக்கினாலும், போகப் போக சுவையுணர்த்தி போதையில் கிறங்கடிக்கச் செய்யும். வார்த்தைகளின் கோவையும் உணர்வுகளின் குவியலுமாய் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு தேடல்களோடு திரிந்தலைந்து, கடவுளும், கவிதையும், காமமும் நிறைந்து/நிறைத்துக் கதை சொல்லுகிற நாடோடியின் பெருங்குரல் பாடலெனக் கொள்ளலாம்.

புனைவுகளில் கூட morality தேடுபவர்களாயின் இது உங்களுக்கான புத்தகமன்று. முகத்திலறைகிற நிஜங்கள் எப்போதுமே தனிப்பட்டவர்களின் அரசியல்/ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. முன்பொருமுறை இப்புத்தகம் குறித்து  யாரோ கேட்டபோது இப்படிச் சொல்லியிருக்கிறேன், சாருநிவேதிதா முழுமையாய் கவிஞராய் இருந்து பின் பத்தியெழுத வந்திருந்தால் நிச்சயம் இப்படித்தான் இருந்திருக்குமென.

கலைச்சொற்களின் பயன்பாடு, ஆங்காங்கு தனித்தமிழ் அழகியல் அத்தனையையும் தாண்டி தனிக் கட்டுரைகளாய் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு எப்படி ஒரு பொதுவான மையச்சரடைக் கொண்டிருக்கமுடிந்தது ?
அதை என்னவென்று விளக்கிச்சொல்லக் கேட்பீர்களானால் இன்னதென சுட்டிவிடமுடியாது என்னால். Abstract என்பதற்கு அருவமானது எனப் பொருள் சொல்கிறது இணையம். அதுவே பொருத்தமா எனத் தெரியவில்லை. I'd probably say, what connects these writeups which gives us the feeling of reading a novel; is probably an abstract sense of truth...! And abstracts necessarily need not to anything. It could be physical, metaphysical, poetic, naked, truth, lust, love...! Anything...!

ராஜ சுந்தர்ராஜன் நம்மை வெவ்வேறு களங்களுக்கு அழைத்துச் சென்று கதை சொல்ல பயன்படுத்துகிற வாகனமாக/கருவியாக மொழியையும், சாலையாக/ பாதையாக அவருடைய SPIC பணியையும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். தோரோவ் (Hendry David Throreau) சொன்னதுபோல after all , "the world is but a canvas to our imagination". Autobiographyயை autofictionஆக எழுதிவிட்டு (taking all the liberty fiction  could offer) புனைவில் படைப்பாளியைத் தேட முற்படாதீர்கள் என அறைகூவும் படைப்பாளிகளைக் கண்ட நமக்கு, “கோழையாகையால் நான் ஓடி ஒளிகிறேன் என்பதல்ல,ஓடி ஒளிவதால் நான் கோழையாகிறேன் என்பதே சரி. இதன்படி, ஒளிவுமறைவற்று வெளிப்பட்டு இருக்கிறது எழுத்து எனது இந்த எழுத்தும்.என்றால் இதில் புனைவே இல்லையா ? மொழிநடையில் இல்லாமல் இல்லை; நிகழ்ச்சிகளில் இல்லை. ஆம்” என தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகின்றார் கவிஞர்.

ஒரு நல்ல கவிதை எழுதப்படுவதற்கு முன்போ அல்லது ஒரு மிகச்சிறந்த புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்போ ஒரு leading moment இருக்குமென்றும், அந்த நொடியில் உணர்வுகள் ஏற்படுத்துகிற வெற்றிடத்தை ஒரு புகைப்படத்தாலோ கவிதையாலோ இட்டுநிரப்புகிற முயற்சிதான் படைப்பூக்கம் என்றும் நம்புகிறேன் நான். Also it is at the creator's liberty whether he/she decides to capture a speck of that moment or let it pass. இப்படியான leading moment அல்லது ஒன்றை நோக்கிச் செலுத்துகிற நிகழ்வுகளின் விளைவுகள் , (அவை பொதுவில் வைக்கப்படும்பட்சத்தில்) படைப்பாளிக்கு நிகழ்ந்த அதே உணர்வெழுச்சியை வாசிக்கிறவருக்கும்/பார்க்கிறவருக்கும் கடத்திவிடக்கூடும். ’நாடோடித் தடம்’ முழுக்க முழுக்க அந்த மாதிரியான தருணங்கள் நிறைந்து கிடக்கின்றன. Now that I've identified those moments of creations, I'd love to see those creations now. அவருடைய கவிதைகளை இதுவரை படித்ததில்லை. நிச்சயமாகப் படிக்கவேண்டும்.

எனக்கு மிகவும் விநோதமானதொரு pattern recognition habit இருப்பதாக உணர்ந்திருக்கின்றேன். முகங்கள், அலைப் பேசி எண்கள், குரல்கள், வாசனைகள், சாலைகள் என அனைத்திலுமே மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாததொரு symmetry/சீர்மையை அடையாளம் கண்டிருக்கின்றேன். ஏதோவொரு ஒற்றுமை; ஏதோவொரு சாயல்.  ஒரு இடத்தில் இந்த சாயல் குறித்து இப்படிச் சொல்கிறார் கவிஞர்.
"சாயல் என்பது பழமையின் நீழல். எனில் பழஞ்சுவைக்கு மீளும் பயனிலை தானோ மகிழ்ச்சி இன்பம்? பண்டே கண்டு கடக்கப்பட்டது, பழையதென்று கழியாமல், இன்றுக்கும் நாளைக்கும் இலக்குவிதி ஆவதென்ன? இத்தனை கிண்ணங்கள் மாறி மாறி நான் எத்தகு போதையின் சாயலை விழைகிறேன்? கைக்கொள்ளும் ஓரொரு கிண்ணத்திலும் பழமையின் சாயல் படிந்திருக்கிறதா? அல்லது அவ்வாறு நம்பித்தான் புதைகிறோமா? Happiness: a talent or a gift? "
இங்கே மேலே சொல்லப்படுகிற போதையும் கிண்ணங்களும் abstracts. எனக்குப் பயணங்களும் புத்தகங்களுமாயும் வேறொருவருக்கு மற்றொன்றுமாயும் இருந்திருக்கலாம்.

அவருடைய மொழியாளுமையில் நான் ரசித்த மற்றொரு விஷயம் usage of negatives. ஆஃப்ரிக்க அமெரிக்கர்களுக்கென பேச்சுவழக்கில் ஒரு பிரத்தியேகமான double negatives பயன்பாடு உண்டு. உ.ம்: ain't never seen no such thing, nobody ain't never have done that. இது பற்றி உலகம் முழுக்க பல மொழி ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு signature பயன்பாடு. நினைக்கவில்லை; பார்க்கவில்லை; செய்யவில்லை என்பதற்குப் பதிலாய் நினைந்தேன் இல்லை; பார்த்தேன் இல்லை; செய்தேன் இல்லை. இலக்கண விளக்கம் அறியாவிடிலும் நான் மிகவும் நுணுக ரசித்த மொழிக்கூறு இது.

சோதிடமும், வானவியலும், மத போதனைகளும், போதையும், காமமும், பெண்களும், வேதியியலும், இயற்பியலும், அரசியலும், மொழிவளமும், இலக்கணமும், சங்க  இலக்கியமும், வேற்று மொழி படைப்புகளும் என எல்லாவற்றைப் பற்றியும் இந்த நெடும்பயணத்தினூடே தன் தனித்துவ மொழியில் பேசிக்கொண்டேயிருக்கிறார். இந்தியாவில் பெரும்பகுதியும் உலகில் கொஞ்சமும் பயணித்திருக்கின்றார்.  கவிஞருடைய அறிவின் விரிவு நிச்சயமாய் நம்மை அயர்த்தி விடுகின்றது. ராமாயணம் குறித்தும் அதன் வரலாற்றுத் தன்மை குறித்து தன் சக ஊழியருக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை இப்போது பொதுவில் வைத்தால் பல விவாதங்களைக் கிளப்பக் கூடும்.

கடைசி அத்தியாயமான ‘கனவுக்கதை மனிதன்’ நாடோடித்தடத்தின் ஒட்டுமொத்த சாரம் எனப் பட்டது எனக்கு. Observing one's astral self as a third person and writing it all down in words. பா.வெங்கடேசனின் சிறு(!)கதைகளுள் ஒன்றில் இப்படியான ஒரு narrative உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி, நிதானமாக நினைவுகளை அசைபோடுகிற திண்ணைப் பெரியவர்களின் மனநிலையிலல்லாது ஆரவாரமாய், கொண்டாட்டமாய்  நம்மோடு நினைவு பகிர்கிறார் கவிஞர்.

It has been an absolute pleasure traveling with you sir..!!

நாடோடித்தடம் - ராஜசுந்தர்ராஜன்
தமிழினி பதிப்பகம்
மறுபதிப்பு: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க: இங்கு


வியாழன், 8 ஜூன், 2017

இசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று


ஒரு கலைப் படைப்பு எப்போது உச்சம் பெறும் ? மற்றவர்களால் கொண்டாடப்படும் போதா ? காலம் தாண்டியும் நிலைக்கும்போதா ? படைப்பாளியை மக்கள் கொண்டாடும்போதா ? எனக்குத் தோன்றுகிற பதிலை கடைசியில் சொல்கிறேன்.

பொதுவாகவே படைப்பாளிகளுக்குத் தன் படைப்புகளின் மீது அதீதமான பெருமையும்/உரிமையும் இருக்கும். அத்தகைய உயர்ந்த படைப்பை உருவாக்கிய ஒரு கவிஞன், தன் படைப்பை, தன் மகத்தானதொரு கவிதையை ”இது இனி என்னுடையதல்ல. எனக்குரியதல்ல…இது வேறொருவருக்குச் சொந்தமானது” என்று சொன்னவரையும் , சொல்லவைத்தவரையும் பற்றிய கதை இது.

நூர் ஜெஹான் - பிரிவினைக்கு முந்தைய இந்தி(ய) திரையுலகின் பிரபலமான பாடகி/நடிகை. பாகிஸ்தான் பிரிந்தபின் “நான் எங்கே பிறந்தேனோ அங்கேயே செல்ல விரும்புகிறேன்” என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு பாகிஸ்தான் சென்றவர். அந்நாட்டு மக்களால் ’மேடம்’ நூர்ஜெஹான் என அன்போடு அழைக்கப்பட்டவர்...! பாகிஸ்தானின் உருது திரைப்படங்களில் அற்புதமான பல பாடல்களைப் பாடியவர்.


ஃபைஸ் அகமது ஃபைஸ் - . தீவிரமான மார்க்சிய-இடதுசாரி சிந்தனையாளர்; எழுத்தாளர்; உருதுக்கவிஞர். ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தில் இந்தியாவுக்காக இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றவர்,1947க்குப்பின் ராணுவத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு லாஹூருக்குச் சென்றபின் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.பாகிஸ்தான் டைம்ஸ் என்க்ற இடதுசாரி ஆங்கில பத்திரிகையிலும், வேறு சில உருதுப் பத்திரிக்கைகளிலும் பணிபுரியத் தொடங்கினார்.இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகள் உச்சக்கட்டதிலிருந்த காலத்திலேயே காந்தி கொல்லப்பட்டபோது லாஹூரிலிருந்து டெல்லிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றவர். பாகிஸ்தானின் இடதுசாரி தலைவர்களோடான நட்பும், கம்யூனிச சித்தாந்தப்பிடிப்பும்,இவரை பாகிஸ்தான் அரசாங்கத்தால் சிறையில் தள்ளப்படுமளவு கொண்டுபோனது.
நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையான ஃபைஸை வரவேற்க கவிஞர்களும், கலைஞர்களும் சிறைவாசலில் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நூர்ஜெஹானும்.

 ஃபைஸ் வந்ததும் அவருடைய புகழ்பெற்ற கவிதைகளில் (Nazm) ஒன்றான ’முஜ்சே பெஹ்லி சி ’  (Mujhse pehli si mohabbat mere mehboob na mang) யை தானே மெட்டமைத்து பாடுகிறார் நூர்ஜெஹான்.சுற்றியிருந்த அத்தனை பேரும் அவருடைய குரலில் கட்டுண்டதுபோகிறார்கள். நூர்ஜெஹான் பாடிய விதத்தில் நெகிழ்ந்து போன ஃபைஸ் “இதை விட சிறப்பாக இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியாது. இந்தக் கவிதை இனி உன்னுடையது” என்று சொல்லி அந்தப் பாடலையே அவருக்கு பரிசாக வழங்கிவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் 1962ஆம் வருடம் ‘கைதி’ திரைப்படத்தில் நூர்ஜெஹான் இந்தப் பாடலைப் பாட , பாடல் சூப்பர்ஹிட்டாகிறது. அதன் பின் பல தருணங்களில் பல் மேடைகளிலும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார் நூர்ஜெஹான். பின்னாட்களில் ஃபைஸிடம் இந்தக் கவிதை குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் அவர் சொன்ன பதில், “ அந்தப் பாடல் என்னுடையதல்ல. என்றோ நூர்ஜெஹானுடையதாகிவிட்டது...!”

நான் இந்தப்பாடலை முதன் முதலில் கேட்டது 'Ae dil hai mushkil' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தான். பின்பு அந்தப் பாடல்வரிகளை வைத்துக் கொண்டு தேடப்போக அதன் பின் இப்படியொரு நெகிழ்ச்சியான வரலாறு இருப்பது தெரியவந்தது. எதற்காக இந்தப் பாடல் இப்படி கொண்டாடப் பட்டது என்பதற்கான காரணம் அந்தப் பாடல்வரிகளின் பொருளைத் தெரிந்து கொண்டபோது புரிந்தது. 


Mujh se pehli si muhabbat mere mehboob na maang
Maine samjhaa tha ke tu hai to darakhshaan hai hayaat
Tera gham hai to gham-e-dehar ka jhagdaa kyaa hai
Teri surat se hai aalam mein bahaaron ko sabaat
Teri aankhon ke siwaa duniyaa mein rakhkhaa kya hai

Tu jo mil jaaye to taqdir nigoon ho jaaye
Yoon na thaa maine faqat chaahaa thaa yoon ho jaaye
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa

Anginat sadiyon ki taareeq bahemaanaa tilism
Resham-o-atlas-o-kamkhwaab mein bunvaaye hue
Ja-ba-ja bikte hue koochaa-o-baazaar mein jism
Khaak mein lithade hue, khoon mein nehlaaye hue
Jism nikle hue amraaz ke tannooron se
Peep behti hui galte hue naasooron se

Laut jaati hai udhar ko bhi nazar, kya keeje?
Ab bhi dilkash hai tera husn, magar kya keeje?
Aur bhi dukh hai zamaane mein muhabbat ke siwaa
Raahatein aur bhi hain vasl ki raahat ke siwaa

Mujh se pehli si muhabbat mere mehboob na maang


My love, do not ask from me
the love we shared once before.
If you were here, I always thought
life would shine, eternally.

We share our grief, so why argue
over the sorrows of the world?
Your countenance is the assurance
of perennial spring, everywhere.

For what is the worth of this world
but the sight of your eyes?
If only I found you, the fates
would be enthralled.

This wasn’t how it should have been,
except that I wanted it to be;
there are more sorrows in this world
beyond the anguish of love.

There is more to happiness
than the relief of reunion;
the blight of dark magic
of years beyond counting,

while draped in silk,
satin and brocade; everywhere,
in alleys and marketplaces,
young flesh is up for sale.

Dragged in the dirt,
bathed in blood, bodies
emerge from furnaces
of pestilence.

Pus flows untapped
from leaking ulcers.
My eyes can't look away,
what should I do?

Your beauty still allures, but
what can I do?
There are sorrows in this world
beyond the pleasures of love.

There is more to happiness
than the relief of reunion;
so my love, do not ask from me
the love we shared once before.


இந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் கதையையும்,  உயிர்தந்து காற்றில் மிதக்கவிட்ட பாடகியின் கதையையும் தாண்டி, ஏதோவொன்று நம்மை அலைக்கழிக்கின்றது. வரிகளில் பொதிந்து கிடக்கிற தனிமையும் துயரமும் மகிழ்ச்சியும் ஒருங்கே உறக்கம் கெடுக்கின்றன. There's something about this song. Something mystic and spiritual at the same time.

இது கைதி திரைப்படத்தில் அவர் பாடிய version :
(In a soft and sharp voice tone) 


இது unplugged version. ஃபைஸின் முன்பு முதன்முதலில் பாடப்பட்ட பாடலின் பதிவு என்றும் சொல்லப்படுகின்றது: 
(Bass/dense voice tone) 


பின்னொரு நாளில் BBCன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடியது:


ஃபைஸின் குரலிலேயே கேட்க:


நான் கேட்டதிலேயே அட்டகாசமான வெர்ஷன்  ஸோரா செகல்’ன் recital (டைட்டன் விளம்பர பாட்டி) 


If at all you're interested to dig up more on F.A.Faiz and Noor Jehan...below are the external references:

1. https://scroll.in/article/678792/someday-i-might-end-up-as-a-poet-prison-letters-from-faiz-ahmed-faiz-to-his-wife

2. https://scroll.in/article/805932/how-faiz-ahmed-faizs-most-famous-poem-came-to-be-written

3. https://thereel.scroll.in/927/how-noor-jehan-took-mujh-se-pehli-si-mohabbat-mere-mehboob-na-maang-away-from-poet-faiz-ahmed-faiz

4. https://scroll.in/article/756301/indias-loss-pakistans-gain-the-journey-of-singing-great-noor-jehan-after-1947

5. http://lithub.com/why-we-need-revolutionary-poet-faiz-ahmed-faiz-more-than-ever/

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாழ்மனம்

Courtesy: http://drawingschool.net
பாழ்மனம்
மனம் எந்த நொடியில் உடைந்துபோகுமோ
எனத் தெரியாத ஒரு கனத்தில் தான்
ஏதொவொரு பாடல்வரியோ
யாரோ ஒருத்தியின் புன்னைகையோ
எந்தப் பித்தனின் கவிதையோ
ஒரு பழைய புத்தகத்தின் தலைப்போ
காலில் மிதிபடுகிற பூவின் நிறமோ
வெகுதூரத்தில் தென்படும் மலைச்சிகரமோ, மொழிதெரியா ஊர்வழி செல்கிற சாலையோ
ஒரு பழைய மாநகரப் பேருந்தோ
கோவில் வாசலில் குவிந்து கிடக்கிற செருப்புகளில் ஒரு ஜோடி சிகப்பு செருப்புகளோ
ஓர் நிறம் மங்கிய கைக்குட்டையோ
சாலையோர மரத்தில் செதுக்கப்பட்ட ஏதோவொரு பெயரோ
நாடோடியொருவன் விற்றுச்செல்கிற மரவளையல்களோ
’பேரன்பின்’ எனத்தொடங்கி எழுதாமல் விட்ட கடிதம் தாங்கிய கசங்கிய தாளோ
நினைவுகளைச் சுண்டிவிடுகிற ஓர் நறுமணமோ
நுரைத்த காப்பியோடான ஓர் பீங்கான் கோப்பையோ
நிலவில்லாத முழுமையான ஓர் இரவோ
ஒழுங்கற்று கலைந்துகிடக்கிற பொருட்களோடான மேஜையோ
ஏதோவொன்று...
இவைகளில் ஏதோவொன்று

அல்லது புதிதாய் ஏதோவொன்று
நினைவெச்சங்களை சுமந்தபடி வந்து
முழுமையாய்க் கலைத்துப் போட்டு விடுகிறதென்னை...!

முழுதாய்த் தேர.. இன்னும் எத்தனை இரவுகள் தீருமோ..!

சனி, 10 டிசம்பர், 2016

பிரிவன்றிப் பெரிதாய் பிறிதொன்றும் உண்டோ


போகத் திசையற்று
வாய்பேச வக்கற்று
காண வழியற்று
உறுபசியோ டுலவித்திரிந்தபடி
விழுந்தரற்றிப் புரண்டழுது
தன் குருதி தான் கண்டு
வலிமிகுந்து வலிமறத்து
என் செய்து தேற்றுவன்
இந்த பொல்லா புல் மனத்தை
ஆற்றாரும் உண்டோ
தேற்றாரும் உண்டோ
வேறாறும் உண்டோ
பிரிவன்றிப் பெரிதாய்ப் பிறிதொன்றும் உண்டோ...!!?

செவ்வாய், 17 மார்ச், 2015

ஆத்மாநாம், குமாரசாமி, எஸ்.ரா மற்றும் நான்


Pic Courtesy: www.artfire.com
நான் நிறைய கவிதைகள் படிச்சதில்ல. கவிதை படிக்க ஆரம்பிச்சது (வழக்கம் போல) வைரமுத்துல இருந்து தான். “தமிழ்ரோஜா...பொறுக்கி எடுத்த உலக அழகுகளை...நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம் அவள்’ன்னு பேஸ் வாய்ஸ்ல பேத்திகிட்டு திரிஞ்சேன்.அப்புறம் மிஞ்சிப் போனா காலேஜ் படிக்கும்போது தபூசங்கருடைய காதல் கவிதைகள் கொஞ்சம் எளிமையா இருந்ததுனால நெறைய படிச்சிருக்கேன்.அப்புறம் அறிவுமதி எழுதுன ‘நட்புக்காலம்’னு ஒரு கவிதைத் தொகுப்பு என்னுடைய ‘தோழி’களுக்கு பரிசா கொடுக்க அதப் படிச்சு அதுவும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கட்டக் கடைசியா நா.முத்துக்குமாருடைய ’அணிலாடும் முன்றில்’. படிச்சது பூராவுமே கிட்டத்தட்ட விகடன், வாரமலர் கடைசிப் பக்கம் டைப், கண்ல தண்ணி வெச்சுக்குற கவிதைகள் தான்.

சென்னைக்கு வந்து இலக்கிய படிப்பாளிகள் சகவாசம் ஓவரானதுக்கப்புறம் தான் மனுஷ், ரமேஷ் பிரேதன், பிரமிள், ஆத்மாநாம் னு தினுசு தினுசா கவிஞர்கள் பெயரெல்லாம் பரிச்சயமாச்சு (கவிதைகள் ஆகல).ஏதோ நமக்கு புரியுற அளவுக்கு கொஞ்சமா மடக்கி மடக்கி எழுதியிருந்தா கண்டிப்பா படிச்சுப் பாப்பேன். லதாமகன் அண்ணாத்த அவரோட ப்லாக்ல தினம் ஒரு கவிதைன்னு எழுத ஆரம்பிச்சப்புறம் இந்த ஆர்வம் இன்னும் அதிகமாச்சு.அந்த ருசி புரிய ஆரம்பிச்சுது. (பாதியில கடைய மூடிட்டாப்ல). ஆனாலும் ஸ்பெஷல் தரிசனம் பாக்குற பக்தனாட்டம் கவிதைகள தூரத்துலேர்ந்து பவ்யமா பாத்து கும்புட்டுட்டு பம்மிகிட்டு ஓடிட்டே இருப்பேன்.

இப்போ எதுக்கு இவ்ளோ பில்டப்புன்னா.. அதுக்குக் காரணம் சமீபத்துல படிச்ச ஒரு சிறுகதைதான். யார்ராவன் சரியான ’கேடிகள குறிவெச்சு’ பிடிக்கிறவனா இருப்பாம் போல.. கதையப் பத்தி எழுத வந்துட்டு கவிதைக்கு என்னா பில்டப்பு வேண்டியகிடக்குன்னு காய்ச்சிறாதீங்க.இந்த சிறுகதைக்கும் கவிதைக்கும் கனெக்‌ஷன் இருக்கு. எஸ்.ரா எழுதுன ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி’ங்குற  கதைய சில நாட்களுக்கு முன்னாடி படிச்சேன்.ஜோதின்னு ஒருத்தன் ஃப்ளைட்ல போய்ட்டிருக்கும்போது திடீர்னு அவனுடைய காலேஜ் ஜூனியர் குமாரசாமியப் பத்தி நெனச்சுப் பாக்க ஆரம்பிக்கிறான். குமாரசாமி ஒரு கவிதைப் பித்தன். ஆத்மாநாம் உபாசகன். கவிதைகளோடே வாழ்கிறவன்.ஜோதி, கொஞ்சம் ’என் படிப்பு..என் வாழ்க்கை’ டைப்பு.இவங்களுக்குள்ள அடிக்கடி நடக்கிற உரையாடல்கள்.
அப்பப்போ குமாரசாமி மேற்கோள் காட்டுகிற ஆத்மாநாம் கவிதைகள்.அதுக்கு ஜோதியுடைய எதிர்க்கேள்விகள்; அப்புறம் வாழ்க்கையுடைய வெவ்வேற காலகட்டத்துல இவங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கிறது; குமாரசாமி குடும்பஸ்தனா மாறுறது;ஆனாலும் கவிதைப் பித்து விடாம இருக்குறது; ஒரு கட்டத்துல ஜோதியுடைய வாழ்க்கைலேர்ந்து குமாரசாமி இல்லாமலே போறது.ஃப்ளைட்ல அவன் ஞாபகம் வந்து ஜோதி திடீர்னு சொல்ல ஆரம்பிக்கிற ஆத்மாநாமின் கவிதையும்.. அதைக் கேட்டுகிட்டு பக்கத்து சீட்ல உக்காந்திருக்குற ஜப்பான் காரரின் அறிமுகமும்.. ஃப்ளைட் விட்டு இறங்கும்போது அவர் ஜோதியிடம் சொல்கிற வார்த்தையும், அதுக்கப்புறம் ஜோதியுடைய மனநிலையும் தான் இந்தக் கதை. (ஒரு வழியா சுருக்கி சொல்லிட்டேன்)

இதுல எனக்குப் பிடிச்சது அல்லது என்னை யோசிக்க வெச்சதுன்னு சில் விஷயங்கள சொல்லலாம்.கீழ இருக்குற கதைல வர்ர உரையாடல்கள பாருங்க


//“நீ பேசுவது புரியவில்லை“


“சராசரிகளின் பேச்சை கேட்டுப் பழகியது உங்கள் தவறு“ என்றான் குமாரசாமி


“சராசரியாக இருப்பது ஒன்றும் சாதாரணமில்லை குமார்“


“கரெக்ட் சீனியர் அது தான் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கான பொது அடையாளம். சராசரிகள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள். “

“இப்படி பேசுவதற்கு ஆத்மாநாம் கற்றுக் கொடுத்திருக்கிறானா“ எனக்கேட்டான் ஜோதி

“சீனியர், கோப்ப்படுகிறீர்களா, சராசரி என்ற வார்த்தையை யார் கேட்டாலும் கோபம் கொண்டுவிடுவார்கள், சராசரியாக வாழ்வதற்கு நிச்சயம் திறமை வேணும் சீனியர், எனக்கும் அப்படி வாழ ஆசையாகத் தானிருக்கிறது“ என்றான்

“இப்போது தான் சராசரிகளுக்கு எதிராகப் பேசினாய், அதுக்குள் என்ன“

“இயலாதவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான்“ எனச்சிரித்தான் குமார் //


//“ஒரு அவசியமில்லை, பெரும்பான்மையினர் இப்படித் தானிருக்கிறார்கள், அப்படியே இருநதுவிட்டால் அதிர்ஷடம். உலகம் அப்படியே இருக்கவிடாது, யோசிக்கச் சொல்லும், பிரச்சனைகளில் தள்ளி யோசிக்க வைக்கும், ஒருவேளை யோசிக்கத் துவங்கிவிட்டால் உருப்படாமல் போய்விடுவாய் என ஒடுக்கவும் செய்யவும்“


“குமார், நீ நிறைய உன்னைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறாய்.இதை எல்லாம் உன் ஐம்பது வயதில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே, இப்போதைக்குப் போய்ப் படிக்கிற வழியைப் பார்“


“சீனியர், ஐம்பது வயசில் ஒருவன் தன்னைப் பற்றி யோசிப்பது பயத்தால், அதுவும் சாவு மீதான பயத்தால், நான் வாழும் போது என்னைப் பற்றிப் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். “//

கதைல இருக்குற கவிதை படிக்கிறவன் கடைசி வரைக்கும் பிச்சைக்காரனா திரிவான்ங்குற க்ளிஷேவ விட்டுடுங்க. ஒட்டுமொத்தமா இந்த சிறுகதை தந்த உணர்வு இருக்கே...செம்ம...!! நெறைய யோசிக்க வெச்சுது என்ன. இந்த கதைல வர உரையாடல்கள் எல்லாம் குமாரசாமி, ஜோதிங்குற ரெண்டு தனிப்பட்ட மனுஷங்களோட பேச்சா தெரியல எனக்கு. ஒரே மனுஷனுடைய இரண்டு மனநிலைகள் தான்னு தோணுது. நம்ம எல்லாருக்குள்ளேயுமே கோப்பையில் கனவுகளை நிரப்பித் திரிகிற ஒரு கற்பனாவாதியும்... வியர்த்து வழிய, சோத்துக்காகவும் சர்வைவலுக்காகவும் சுற்றியுள்ள எதையுமே பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு பிழைப்புவாதியும் இருந்துகிட்டே இருக்குறதாத்தான் நான் நினைக்குறேன். அந்த ரெண்டு பேருக்குமான போட்டியும்.. வாதமும்.. தர்க்கங்களும்... வேற வேற. சர்வைவலுக்காக கனவுகளையும் கற்பனைகளையும் பொதச்சிட்டு ஓடுறவன உலகம் ஜெயிச்சவனா பாக்குது.ஆன உள்ளுக்குள்ள நிம்மதியில்லாம் திரியுறான் அவன். எதைப்பத்தியும் கவலைப்படாம பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவிச்சுகிட்டு கவிதையிலயும் கற்பனையிலயும் அது தர்ர போதைலயும் திரியுரவன் உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கான்.ஆனா வெளில பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஒரு உதிரியா பார்க்கப்பட்றான். இந்த contrasting வாழ்க்கையைத் தான் இந்த சிறுகதை சொல்லுதுங்குறது என்னுடைய பார்வை.

கதைய படிச்சுப் பாருங்க: ‘ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லுங்க. இவ்ளோ சொல்லிட்டு ஆத்மாநாமுடைய கவிதைய சொல்லாமப் போனா எப்புடி...?
நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்

என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை

உணவைக் கேட்கவில்லை

குடியிருப்பைக் கேட்கவில்லை

கேட்பதெல்லாம் ஒன்றுதான்

நான் வேறு நீ வேறு

என்பது பொய்

நானும் நீயும் ஒன்றுதான்

என்பதை உணர்“

இந்த எடத்துல ஆத்மாநாம் பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்...

ஆத்மாநாம் அறிமுகமானது ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதுன ’என் நண்பன் ஆத்மாநாம்’ங்குற கட்டுரைல இருந்துதான்.அவருடைய கவிதைகள் அப்பவும் தெரியாது. இங்க்லீஷ்ல எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe) ன்னு ஒரு எழுத்தாளர் இருந்தாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் எழுதுன ஆர்த்தர் கானன் டாயலுக்கெல்லாம் முன்னோடி. 19 நூற்றாண்டுல இவர் எழுதுன மர்மக் கதைகள்லாம் பட்டாசா இருக்கும்.எல்லா லெஜண்டுகள் மாதிரியே இவரையும் வாழும்போது கண்டுக்காம செத்தப்புறம் உலகம் பூரா கொண்டாடுனாங்க(றாங்க). அவர் பத்தி வந்த ‘The Raven' படத்துல ஒரு வசனம் வரும் 'Every woman he has ever loved have died in his arms. I believe that God gave him a spark of genius and quenched it in misery. But as far as something like this... The only thing he's ever killed is a bottle of brandy.’ அப்டின்னு.எனக்கென்னவோ ஆத்மாநாமும் அவருடைய நெருங்கிய நண்பரான ஸ்டெல்லா ப்ரூஸும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க இந்த வசனத்தைக் கேட்டதும்.ரெண்டு பேருமே பூமிங்குற கிரகத்துலேர்ந்து ரொம்ப சீக்கிரமாவே கெளம்பிட்டவங்க.

அப்புறம்.. ரொம்பப் பிடிச்ச இன்னொரு கவிதையோட இந்த போஸ்ட் முடியுது.
இதுவும் லதாமகனுடைய தினம் ஒரு கவிதை தளத்துல படிச்சது தான்


பெண்களுடன் உரையாடுபவன்


பெண்களுடன் உரையாடுவதில்
அலாதிப்பிரியம், அவனுக்கு

அதிலும் குறிப்பாக
திருமணம் ஆகாத இளம் பெண்களுடன்

மணிக்கணக்காகப் பேசுகிறான் அவன்
இடையிடையே
அவர்களை
சிரிக்க வைக்கவும் செய்கிறான்.
தன் வார்த்தை சாதூர்யத்தால்
அவர்களை உற்சாகப்படுத்தும் அவன்
அவர்கள் பேசுவதையும்
கவனமாகவே கேட்டுக் கொள்கிறான்.
அவர்களுடன்
தொடர்ந்து உரையாடலில் ஈடுபடும் அவன்
அவர்களை
வேறு எதுவும் செய்வதில்லை.

தொடுவதில்லை
முத்தமிடுவதில்லை
சாப்பாடு மேசைக்கடியில் காலை விட்டு
காலைச் சுரண்டுவதில்லை
உண்மையிலேயே கம்பீரமான ஆண்மகன்தான்.அவன்

அவனுக்குத் தேவையெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

கோவில், குளம்
புடவை, நகை
சினிமா, செக்ஸ் ஜோக்
விரதம், விளக்கு பூஜை
சமையல், சானிடரி நாப்கின்..
எது குறித்து வேண்டுமானாலும்
இருக்கலாம் பேச்சு.

பெண்களுடன் பேசும்போது
அவனுக்கு
தூக்கம் கிடையாது
பசி கிடையாது
(சுரணை கிடையாது
என்று நீங்கள் நினைத்தால்,
அது கூட பரவாயில்லை)

கறுப்போ, சிவப்போ
நெட்டையோ, குட்டையோ
அழகியோ அவலட்சணமோ
புத்திசாலியோ புண்ணாக்கோ
பேசுவதற்கு
அவனுக்கு ஒரு பெண் துணை வேண்டும்

உங்களுக்குத் தெரிந்த
பேசுவதில்
ஆர்வமுடைய
பெண் யாரேனும் இருந்தால்
அவனிடம் அனுபி வையுங்கள்

தவசி (குறுவாளால் எழுதியவன் , புதுமைப்பித்தன் பதிப்பகம், விலை ரூ.100)

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தனிமைத் திணை


நீ களவாடிச் செல்லும் என்னுடைமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது..!


என் இரவுகள்... 


என் தனிமை.. 


என உறக்கம்... 


என் கனவுகள்...

காணக் காத்திருத்தலின் சுகத்தை மட்டும் மிச்சமாய் விட்டுவிட்டு...


தனிமையும் தனிமையின் நிமித்தமுமாய் ஆன ஒரு புதுத் திணையில் என்னை இருத்திவிட்டு...


உனக்கும் எனக்குமான இடைவெளியை மட்டும் அதிகமாக்கி..


எங்கோ ஓடி மறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றாய் நீ.


சலிக்காமல் களைக்காமல் தேடியோடி வந்து கொண்டிருக்கின்றேன் நான்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

நெஞ்சக் குளத்தில் நீ கல்லை எறிந்தாய்…!!



பக்கங்கள் படபடத்தபடி

திறந்து கிடக்கும்
புத்தகங்கள்….
தன்னிலை மாறி
ஒழுங்கற்று
கலைந்து கிடக்கும்
துணிகள்..
பாதி பக்கங்கள்
மட்டும் நிரம்பிய
பழைய டைரி..
நில்லாமல் இயங்கும்
கணினி…
நினைவுக் குளத்தில்
கல்லெறிந்தபடி
ஒலிக்கும்
பழைய பாடல்கள்…
முற்று பெற
முரண்டுபிடிக்கும்
வாக்கியங்கள்….
காற்றை சலனப்படுத்தும்
கண்ணீர்த்துளிகள்…
என் அறை முழுதும்…
சிந்திச்சிதறி…
நிரம்பி வழிகிறது…
நீ தவறவிட்ட
உனக்கான என் காதல்…!!!

புதன், 11 ஜனவரி, 2012

நீ நான் மற்றும் நம் நினைவுகள்...!!!


அழகான பூந்தோட்டங்களின் ஊடே

கை கோர்த்தபடி

மகிழ்ச்சியாக

சுற்றித் திரிகின்றோம் நாம்..



பூக்களை நுகர்ந்தபடி

சிரித்து சிரித்து

என்னவோ

பேசிக்கொண்டேயிருக்கின்றாய் நீ...

தலையசைத்தபடியே உன் முகத்தை

பார்த்துகொண்டு நடக்கின்றேன் நான்..



ஏதோவொரு பாடலை

முணுமுணுக்கிறாய் நீ..

உலகின் மிக

இனிமையான பாடலாக

அது இருந்திருக்கவேண்டும்

என்பதுபோல்

ரசிக்கத் தொடங்குகிறேன் நான்...



வசந்த காலத்தின் வாசம்

நம்மைச் சுற்றிலும்...

பின்பு கடற்கரை

மணல்வெளியில்

கால்தடம் பதிக்கத் தொடங்கிறோம்....

நம்மை பிடிக்க முயன்ற

அலைகளோடு விளையாடி நகர்கிறோம்..



திடீரென்று கையை உதறிவிட்டு..

முடிவில்லா கடலின் நடுவே

ஓட ஆரம்பித்தாய் நீ...



என்னென்னவோ

அழுது அரற்றியபடி

பின் தொடர்ந்து

ஓடிவருகின்றேன்  நான்...



ஓடி ஓடி..

சிறு புள்ளியாய்.. ஒளிக்கீற்றாய்..

தேய்ந்து மறைந்தாய் நீ..!!



அழுது சோர்ந்த

கண்களோடு..

அயர்ச்சியில்

விழித்தெழுகின்றேன் நான்...!!

கனவுகளின்

மிச்சமாய் எச்சமாய்

சிதறிக்கிடந்த உன் நினைவுகளை

அசைபோட்டபடி...
Related Posts Plugin for WordPress, Blogger...