Pic Courtesy: |
நான் நிறைய கவிதைகள் படிச்சதில்ல. கவிதை படிக்க ஆரம்பிச்சது (வழக்கம் போல) வைரமுத்துல இருந்து தான். “தமிழ்ரோஜா...பொறுக்கி எடுத்த உலக அழகுகளை...நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம் அவள்’ன்னு பேஸ் வாய்ஸ்ல பேத்திகிட்டு திரிஞ்சேன்.அப்புறம் மிஞ்சிப் போனா காலேஜ் படிக்கும்போது தபூசங்கருடைய காதல் கவிதைகள் கொஞ்சம் எளிமையா இருந்ததுனால நெறைய படிச்சிருக்கேன்.அப்புறம் அறிவுமதி எழுதுன ‘நட்புக்காலம்’னு ஒரு கவிதைத் தொகுப்பு என்னுடைய ‘தோழி’களுக்கு பரிசா கொடுக்க அதப் படிச்சு அதுவும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கட்டக் கடைசியா நா.முத்துக்குமாருடைய ’அணிலாடும் முன்றில்’. படிச்சது பூராவுமே கிட்டத்தட்ட விகடன், வாரமலர் கடைசிப் பக்கம் டைப், கண்ல தண்ணி வெச்சுக்குற கவிதைகள் தான்.
சென்னைக்கு வந்து இலக்கிய படிப்பாளிகள் சகவாசம் ஓவரானதுக்கப்புறம் தான் மனுஷ், ரமேஷ் பிரேதன், பிரமிள், ஆத்மாநாம் னு தினுசு தினுசா கவிஞர்கள் பெயரெல்லாம் பரிச்சயமாச்சு (கவிதைகள் ஆகல).ஏதோ நமக்கு புரியுற அளவுக்கு கொஞ்சமா மடக்கி மடக்கி எழுதியிருந்தா கண்டிப்பா படிச்சுப் பாப்பேன். லதாமகன் அண்ணாத்த அவரோட ப்லாக்ல தினம் ஒரு கவிதைன்னு எழுத ஆரம்பிச்சப்புறம் இந்த ஆர்வம் இன்னும் அதிகமாச்சு.அந்த ருசி புரிய ஆரம்பிச்சுது. (பாதியில கடைய மூடிட்டாப்ல). ஆனாலும் ஸ்பெஷல் தரிசனம் பாக்குற பக்தனாட்டம் கவிதைகள தூரத்துலேர்ந்து பவ்யமா பாத்து கும்புட்டுட்டு பம்மிகிட்டு ஓடிட்டே இருப்பேன்.
இப்போ எதுக்கு இவ்ளோ பில்டப்புன்னா.. அதுக்குக் காரணம் சமீபத்துல படிச்ச ஒரு சிறுகதைதான். யார்ராவன் சரியான ’கேடிகள குறிவெச்சு’ பிடிக்கிறவனா இருப்பாம் போல.. கதையப் பத்தி எழுத வந்துட்டு கவிதைக்கு என்னா பில்டப்பு வேண்டியகிடக்குன்னு காய்ச்சிறாதீங்க.இந்த சிறுகதைக்கும் கவிதைக்கும் கனெக்ஷன் இருக்கு. எஸ்.ரா எழுதுன ‘ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி’ங்குற கதைய சில நாட்களுக்கு முன்னாடி படிச்சேன்.ஜோதின்னு ஒருத்தன் ஃப்ளைட்ல போய்ட்டிருக்கும்போது திடீர்னு அவனுடைய காலேஜ் ஜூனியர் குமாரசாமியப் பத்தி நெனச்சுப் பாக்க ஆரம்பிக்கிறான். குமாரசாமி ஒரு கவிதைப் பித்தன். ஆத்மாநாம் உபாசகன். கவிதைகளோடே வாழ்கிறவன்.ஜோதி, கொஞ்சம் ’என் படிப்பு..என் வாழ்க்கை’ டைப்பு.இவங்களுக்குள்ள அடிக்கடி நடக்கிற உரையாடல்கள்.
அப்பப்போ குமாரசாமி மேற்கோள் காட்டுகிற ஆத்மாநாம் கவிதைகள்.அதுக்கு ஜோதியுடைய எதிர்க்கேள்விகள்; அப்புறம் வாழ்க்கையுடைய வெவ்வேற காலகட்டத்துல இவங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கிறது; குமாரசாமி குடும்பஸ்தனா மாறுறது;ஆனாலும் கவிதைப் பித்து விடாம இருக்குறது; ஒரு கட்டத்துல ஜோதியுடைய வாழ்க்கைலேர்ந்து குமாரசாமி இல்லாமலே போறது.ஃப்ளைட்ல அவன் ஞாபகம் வந்து ஜோதி திடீர்னு சொல்ல ஆரம்பிக்கிற ஆத்மாநாமின் கவிதையும்.. அதைக் கேட்டுகிட்டு பக்கத்து சீட்ல உக்காந்திருக்குற ஜப்பான் காரரின் அறிமுகமும்.. ஃப்ளைட் விட்டு இறங்கும்போது அவர் ஜோதியிடம் சொல்கிற வார்த்தையும், அதுக்கப்புறம் ஜோதியுடைய மனநிலையும் தான் இந்தக் கதை. (ஒரு வழியா சுருக்கி சொல்லிட்டேன்)
இதுல எனக்குப் பிடிச்சது அல்லது என்னை யோசிக்க வெச்சதுன்னு சில் விஷயங்கள சொல்லலாம்.கீழ இருக்குற கதைல வர்ர உரையாடல்கள பாருங்க
//“நீ பேசுவது புரியவில்லை“
“சராசரிகளின் பேச்சை கேட்டுப் பழகியது உங்கள் தவறு“ என்றான் குமாரசாமி
“சராசரியாக இருப்பது ஒன்றும் சாதாரணமில்லை குமார்“
“கரெக்ட் சீனியர் அது தான் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கான பொது அடையாளம். சராசரிகள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள். “
“இப்படி பேசுவதற்கு ஆத்மாநாம் கற்றுக் கொடுத்திருக்கிறானா“ எனக்கேட்டான் ஜோதி
“சீனியர், கோப்ப்படுகிறீர்களா, சராசரி என்ற வார்த்தையை யார் கேட்டாலும் கோபம் கொண்டுவிடுவார்கள், சராசரியாக வாழ்வதற்கு நிச்சயம் திறமை வேணும் சீனியர், எனக்கும் அப்படி வாழ ஆசையாகத் தானிருக்கிறது“ என்றான்
“இப்போது தான் சராசரிகளுக்கு எதிராகப் பேசினாய், அதுக்குள் என்ன“
“இயலாதவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான்“ எனச்சிரித்தான் குமார் //
|
//“ஒரு அவசியமில்லை, பெரும்பான்மையினர் இப்படித் தானிருக்கிறார்கள், அப்படியே இருநதுவிட்டால் அதிர்ஷடம். உலகம் அப்படியே இருக்கவிடாது, யோசிக்கச் சொல்லும், பிரச்சனைகளில் தள்ளி யோசிக்க வைக்கும், ஒருவேளை யோசிக்கத் துவங்கிவிட்டால் உருப்படாமல் போய்விடுவாய் என ஒடுக்கவும் செய்யவும்“
“குமார், நீ நிறைய உன்னைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறாய்.இதை எல்லாம் உன் ஐம்பது வயதில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே, இப்போதைக்குப் போய்ப் படிக்கிற வழியைப் பார்“
“சீனியர், ஐம்பது வயசில் ஒருவன் தன்னைப் பற்றி யோசிப்பது பயத்தால், அதுவும் சாவு மீதான பயத்தால், நான் வாழும் போது என்னைப் பற்றிப் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். “//
|
கதைல இருக்குற கவிதை படிக்கிறவன் கடைசி வரைக்கும் பிச்சைக்காரனா திரிவான்ங்குற க்ளிஷேவ விட்டுடுங்க. ஒட்டுமொத்தமா இந்த சிறுகதை தந்த உணர்வு இருக்கே...செம்ம...!! நெறைய யோசிக்க வெச்சுது என்ன. இந்த கதைல வர உரையாடல்கள் எல்லாம் குமாரசாமி, ஜோதிங்குற ரெண்டு தனிப்பட்ட மனுஷங்களோட பேச்சா தெரியல எனக்கு. ஒரே மனுஷனுடைய இரண்டு மனநிலைகள் தான்னு தோணுது. நம்ம எல்லாருக்குள்ளேயுமே கோப்பையில் கனவுகளை நிரப்பித் திரிகிற ஒரு கற்பனாவாதியும்... வியர்த்து வழிய, சோத்துக்காகவும் சர்வைவலுக்காகவும் சுற்றியுள்ள எதையுமே பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு பிழைப்புவாதியும் இருந்துகிட்டே இருக்குறதாத்தான் நான் நினைக்குறேன். அந்த ரெண்டு பேருக்குமான போட்டியும்.. வாதமும்.. தர்க்கங்களும்... வேற வேற. சர்வைவலுக்காக கனவுகளையும் கற்பனைகளையும் பொதச்சிட்டு ஓடுறவன உலகம் ஜெயிச்சவனா பாக்குது.ஆன உள்ளுக்குள்ள நிம்மதியில்லாம் திரியுறான் அவன். எதைப்பத்தியும் கவலைப்படாம பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவிச்சுகிட்டு கவிதையிலயும் கற்பனையிலயும் அது தர்ர போதைலயும் திரியுரவன் உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கான்.ஆனா வெளில பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஒரு உதிரியா பார்க்கப்பட்றான். இந்த contrasting வாழ்க்கையைத் தான் இந்த சிறுகதை சொல்லுதுங்குறது என்னுடைய பார்வை.
கதைய படிச்சுப் பாருங்க: ‘ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி’ உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லுங்க. இவ்ளோ சொல்லிட்டு ஆத்மாநாமுடைய கவிதைய சொல்லாமப் போனா எப்புடி...?
நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்
என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை
உணவைக் கேட்கவில்லை
குடியிருப்பைக் கேட்கவில்லை
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
நான் வேறு நீ வேறு
என்பது பொய்
நானும் நீயும் ஒன்றுதான்
என்பதை உணர்“
|
இந்த எடத்துல ஆத்மாநாம் பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்...
ஆத்மாநாம் அறிமுகமானது ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதுன ’என் நண்பன் ஆத்மாநாம்’ங்குற கட்டுரைல இருந்துதான்.அவருடைய கவிதைகள் அப்பவும் தெரியாது. இங்க்லீஷ்ல எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe) ன்னு ஒரு எழுத்தாளர் இருந்தாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் எழுதுன ஆர்த்தர் கானன் டாயலுக்கெல்லாம் முன்னோடி. 19 நூற்றாண்டுல இவர் எழுதுன மர்மக் கதைகள்லாம் பட்டாசா இருக்கும்.எல்லா லெஜண்டுகள் மாதிரியே இவரையும் வாழும்போது கண்டுக்காம செத்தப்புறம் உலகம் பூரா கொண்டாடுனாங்க(றாங்க). அவர் பத்தி வந்த ‘The Raven' படத்துல ஒரு வசனம் வரும் 'Every woman he has ever loved have died in his arms. I believe that God gave him a spark of genius and quenched it in misery. But as far as something like this... The only thing he's ever killed is a bottle of brandy.’ அப்டின்னு.எனக்கென்னவோ ஆத்மாநாமும் அவருடைய நெருங்கிய நண்பரான ஸ்டெல்லா ப்ரூஸும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க இந்த வசனத்தைக் கேட்டதும்.ரெண்டு பேருமே பூமிங்குற கிரகத்துலேர்ந்து ரொம்ப சீக்கிரமாவே கெளம்பிட்டவங்க.
அப்புறம்.. ரொம்பப் பிடிச்ச இன்னொரு கவிதையோட இந்த போஸ்ட் முடியுது.
இதுவும் லதாமகனுடைய தினம் ஒரு கவிதை தளத்துல படிச்சது தான்
பெண்களுடன் உரையாடுபவன்
பெண்களுடன் உரையாடுவதில்
அலாதிப்பிரியம், அவனுக்கு
அதிலும் குறிப்பாக
திருமணம் ஆகாத இளம் பெண்களுடன்
மணிக்கணக்காகப் பேசுகிறான் அவன்
இடையிடையே
அவர்களை
சிரிக்க வைக்கவும் செய்கிறான்.
தன் வார்த்தை சாதூர்யத்தால்
அவர்களை உற்சாகப்படுத்தும் அவன்
அவர்கள் பேசுவதையும்
கவனமாகவே கேட்டுக் கொள்கிறான்.
அவர்களுடன்
தொடர்ந்து உரையாடலில் ஈடுபடும் அவன்
அவர்களை
வேறு எதுவும் செய்வதில்லை.
தொடுவதில்லை
முத்தமிடுவதில்லை
சாப்பாடு மேசைக்கடியில் காலை விட்டு
காலைச் சுரண்டுவதில்லை
உண்மையிலேயே கம்பீரமான ஆண்மகன்தான்.அவன்
அவனுக்குத் தேவையெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
கோவில், குளம்
புடவை, நகை
சினிமா, செக்ஸ் ஜோக்
விரதம், விளக்கு பூஜை
சமையல், சானிடரி நாப்கின்..
எது குறித்து வேண்டுமானாலும்
இருக்கலாம் பேச்சு.
பெண்களுடன் பேசும்போது
அவனுக்கு
தூக்கம் கிடையாது
பசி கிடையாது
(சுரணை கிடையாது
என்று நீங்கள் நினைத்தால்,
அது கூட பரவாயில்லை)
கறுப்போ, சிவப்போ
நெட்டையோ, குட்டையோ
அழகியோ அவலட்சணமோ
புத்திசாலியோ புண்ணாக்கோ
பேசுவதற்கு
அவனுக்கு ஒரு பெண் துணை வேண்டும்
உங்களுக்குத் தெரிந்த
பேசுவதில்
ஆர்வமுடைய
பெண் யாரேனும் இருந்தால்
அவனிடம் அனுபி வையுங்கள்
– தவசி (குறுவாளால் எழுதியவன் , புதுமைப்பித்தன் பதிப்பகம், விலை ரூ.100)
|
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக