நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
Sports genre லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sports genre லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜூன், 2016

Underdog கழுகு


Underdog: 

-a competitor thought to have little chance of winning a fight or contest.

-a person or group of people with less power, money, etc. than the rest of society

இப்படித்தான் அர்த்தம் வருது  இந்த வார்த்தைக்கு..!!

பொதுவா “இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் மச்சி..” அப்டின்னு மத்தவங்க மட்டம் தட்ற ஆள Underdogனு சொல்லலாம்.

விளையாட்டு, சினிமா, அரசியல் எல்லாத்துலையும் நீங்க இந்த மாதிரி ஆளுங்கள பாக்கலாம், அவங்ககிட்ட நெஜம்மாவே திறமை இருந்து சுத்தி இருக்குறவங்க மட்டம் தட்றதுனாலேயோ அல்லது சரியான வாய்ப்பு கிடைக்காததுனாலேயோ அவங்க அந்த விஷயத்த சரியா பண்ணாம இருக்கலாம்.ஆனா என்ன பிரச்சனைன்னா போராடி ஜெயிச்சு தன்னை  நிரூபிக்குறவரைக்கும் சுத்தி இருக்கிறவங்க யாருமே நம்பவும் மாட்டாங்க மதிக்கவும் மாட்டாங்க.இந்த மாதிரியானவர்களுக்கு கண்டிப்பா ஒரு நோக்கம் இருக்கும்.அதை அடியுறதுக்கான பாதை எப்படிப்பட்டது... யார் என்ன சொல்லுவாங்க... நாம சரியான திசைலதான் போறோமான்னு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது. அதப்பத்தின கவலையும் இருக்காது.

 எனக்கு இப்படியான underdogs மேல ஒரு தனிப்பாசம் உண்டு. ஸ்கூல் படிக்கும்போது நானும் என்ன ஒரு underdogஆ நெனச்சுகிட்டது ஒரு காரணமா இருக்கலாம்.Physically ரொம்ப வீக்கான பையன். மூக்குக் கண்ணாடி வேற (1000+ பசங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஒருத்தன்மட்டும் தான் கண்ணாடி.. அப்போ எங்க ஊர்ல இதான் நெலம) So பசங்க எந்த விளையாட்டுலயும் சேத்துக்க மாட்டாங்க. சேத்தாலும் ஒப்புக்கு சப்பானி இல்லேன்னா umpire தான். இவனுங்க என்ன விளையாண்டாலும் நான் அம்ப்பயர் தான். கடுப்பா இருக்கும். திடீர்னு டெய்லியும் க்ரவுண்ட்ல ஓடலாம்னு ஆரம்பிப்பேன். ஒரு ரவுண்டு ஓடி முடிக்கிறதுக்கு முன்னாடியே மூச்சு இரைக்கும். அப்படியே மண்ல படுத்துகிட்டு அந்த ஆசைய விட்ருவேன். Kho kho டீம்ல போய் சான்ஸ் கேப்பேன். பி.டி வாத்தியார் கண்ணாடி..போடான்னு விரட்டி விட்ருவாரு. பசங்க விளையாடும்போது கூடப் போயி ஓடி விழுந்து வாரி முட்டிய தேச்சுட்டு வருவேன். 


லாங் ஜம்ப் தாண்டுறேன்னு தாண்டி   கண்ணா பின்னானு லேண்ட் ஆகி உள்ளங்கால் கிழிஞ்சு வருவேன். ஸ்கூல் க்ரவ்ண்ட் ஓரத்துல கெடக்குற டபுள் பார்ல தெனமும் போய் தலைகீழா தொங்கிகிட்டு பல்டி அடிச்சுட்டு கெடப்பேன். கையெல்லாம் தேய்ஞ்சு போவும். ஒரு கட்டத்துல கடுப்பாகி இது எதுவுமே நமக்கு வராதுன்னு முடிவு பண்ணி இலக்கிய மன்ற போட்டிகள்னு எங்க ஸ்கூல்ல நடக்குற எல்லா போட்டியிலயும் பேர் குடுத்து கலந்துக்க ஆரம்பிச்சேன். கதை, கட்டுரை, ஓவியம், பாட்டு, பேச்சு,  வினாடி-வினா, பக்தி இலக்கியங்கள் ஒப்புவித்தல், பாவேந்தர் கவிதைகள் ஒப்புவித்தல், அது இதுன்னு ஒன்னு விடாம கலந்துக்கவும் செஞ்சேன். பத்துல கலந்துகிட்டா எட்டு போட்டில கண்டிப்பா பரிசு அடிப்பேன். ரெண்டுலேர்ந்து மூனு முதல் பரிசாவது வரும். ஆண்டு விழால நம்ம பேர படிச்சு நாம ஸ்டேஜ் ஏறி பரிசு வாங்குறது இருக்கே அது ஒரு தனி சுகம். அன்னைக்கு பெத்தவங்க மத்தவங்க எல்லார் முன்னாடியும் நாம தான் ஹீரோ. அப்புறம் வருஷா வருஷம் அந்த obsession அதிகமாகி ஒரு கட்டத்துல படிப்ப விட இந்த காம்படிஷன் தான் முக்கியம்னு யோசிச்சு பன்னெண்டாவதுல புட்டுக்குற வரைக்கும் அடங்கல.

யாருக்கு எதை நிருபிக்குறதுக்காக இதப் பண்ணோம்னு யோசிச்சா இப்பவும் தெரியல. இப்ப யோசிச்சாலும் கல்லூரி, வேலை, வாழ்க்கைன்னு எந்த இடத்துலயும் என்னோட இந்த கேரக்டர் மாறவே இல்ல. எப்பவும் ஏதாவதொரு வகைல எதையோ competitive பண்ணி அதுல ஜெயிக்கிற அந்த சந்தோஷத்த அனுபவிச்சபடி போய்க்கிட்டே இருக்கேன். அது எனக்கு வெற்றியா இல்லையாங்குறதப்பத்தி மத்தவங்க என்ன யோசிக்கிறாங்கன்னு கருத்துல எடுத்துக்காம விட்ருவேன்


 ரைட்டு எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எதையாவது பாத்தா படிச்சா உடனே நம்மள அந்த எடத்து வெச்சுப் பாக்குறதுதான நம்ம புத்தி. பொதுவா biopicனாலே மொக்கையா (சில விதிவிலக்குகள் தவிர்த்து) தான் இருக்கும். அதுவும் விளையாட்டு வீரர்னா கேக்கவே வேணாம். இந்த மாதிரி underdog sports teams and sports people பத்தி ஹாலிவுட்ல நூற்றுக்கணக்கான படங்கள் வந்துருக்கு. பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட் தான்.அப்படியான ஒரு படமா நெனச்சு தான் இந்த படத்த டவுன்லோட் பண்ணேன்.

Michael Edwards. இங்கிலாந்துல சாதாரண குடும்பத்துல பொறந்த சாதாரணமான பையன் தான். ஒலிம்பிக்ல கலந்துகிட்டு நாட்டுக்காக மெடல் வாங்கனும்ங்குறது தான் கனவு. ஒரு கட்டத்துல அப்படி இப்படி மனசு மாறி Ski-jumping தான் தனக்கான sportனு முடிவு பண்றாரு. அப்பா அம்மா வழக்கம்போல பையன நெனச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க. சுத்தி இருக்குறவங்களுடைய கேலி கிண்டலுக்கு நடுவுல குளிர்கால ஒலிப்பிக் போட்டில ski-jumping தகுதி அடைய என்ன பண்ணனும்னு யோசிச்சு ரொம்ப வருஷமா இங்கிலாந்துலேர்ந்து யாருமே ski-jumping ல கலந்துக்காம இருக்குறதுனால விதிமுறைகள் மாறாம இருக்குங்குறத தெரிஞ்சுக்கிட்டு அந்த தூரத்த தாண்டிடுறாரு. ஆனாலும் இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டி இவரு ஒலிம்பிக் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணி தகுதிக்கான தூரத்த இன்னும் அதிகப்படுத்திடுறாங்க. மனச விடாம தானே பயிற்சி எடுத்து கண்டபடி விழுந்து அடிபட்டு வேறொரு வாழ்ந்து கெட்ட பயிற்சியாளர் (நம்ம வுல்வரின் புகழ் Hugh Jackman) ஒருத்தரோட உதவியால ஒரு வழியா அந்த குறிப்பிட்ட தூரத்த தாண்டி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைஞ்சு 1988ஆம் வருஷம் கனடாவுல நடந்த போட்டியில கலந்துக்குறாரு.
அவரு ஜெயிச்சாரா இல்லையா... அட்லீஸ்ட் அடிபடாம வந்து சேர்ந்தாரா... 70 மீட்டர் தாண்டுறதுக்காக பயிற்சி எடுத்துட்டு 90 மீட்டர் உயரத்தையும் தாண்டனும்னு ஆசைப்பட்டா என்னாகும்..?? அவ்வளவு கஷ்டத்துக்கப்புறம் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டதுக்கு ஏதும் பிரயோஜனம் இருக்கா இல்லையா...?
Courtesy: historyvshollywood.com

இதையெல்லாம் படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க...!!

கடைசில நீங்களே ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் வரும். கொஞ்சம் எமோஷனல் பார்ட்டியா இருந்து கண்ல ரெண்டு சொட்டு தண்ணி கூட வரலாம்...!!

Eddie the eagle..!!  ட்ரெய்லர் இங்க...!!



ஞாயிறு, 4 மே, 2014

Here Comes The Boom (2012) - இது ‘மான் கராத்தே’ அல்ல

நம்ம படத்தோட ஹீரோ ஒரு அப்பாவி.பாக்சிங் மாதிரியான சண்டைகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமா ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டை போட்டில கலந்துக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுது.எதிராளி ஒரு professional fighter. தோல்விங்குற விஷயத்த கேள்வியேபடாத Killer அவரு. நம்மாள் அதுநாள் வரைக்கும் காமெடியான opponents கூடவே மோதி ஜெயிச்சவரு.இந்த மிகப்பெரிய போட்டில எதிராளி அவ்ளோ டெர்ரர் பார்ட்டின்னு தெரிஞ்சதும் நம்ம ஹீரோவுடைய சுற்றமும் நட்பும் இவர சண்ட போட வேணாம்னு தடுக்குறாங்க.ஆனா நம்ம ஹீரோ வெறியோட போட்டில கலந்துக்குறாரு.முதல் ரவுண்ட்லேயே சாவடி வாங்குறாரு. எப்படியோ தாகுப்பிடிச்சு கடைசில.. ஹீரோ ஜெயிச்சாரா... இல்லையா...?? க்ளைமாக்ஸ்.... 

Wait... இந்தக் கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு உங்களுக்கு டவுட் வருமே…??! ஆங்.. நம்ப future perfect continuous சூப்பரு இசுடாரு சினா.கானா ’நடிச்ச’ டுபாக்கூர் கராத்தேங்குற காமெடி (!) காவியம் ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்பில்ல.ஏன்னா இது அது இல்ல.இது வேற படம். ஒரு ‘நிஜமான’ ஸ்போர்ட்ஸ் காமெடி படம்.


காமெடி படத்துக்கெல்லாம் எதுக்கு சார் லாஜிக்னு கேக்குறவங்க தயவுசெஞ்சு இந்த படத்த ஒரு தபா பாத்துடுங்க.கதைப்படி ஹீரோ  ஒரு பயாலஜி வாத்தியார். எப்பவோ சின்ன வயசுல ஸ்கூல் மல்யுத்த டீம்ல இருந்துருக்காரு. அவ்ளோதான் அவருக்கும் சண்டைக்கும் இருக்குற தொடர்பு.சரி இவருக்கு ஏன் இந்த  அடிதடியெல்லாம்.காதல்..கீதல்னு எதுலயாவது உழுந்து... காதலிய இம்ப்ரெஸ் பண்றதுக்காக குத்துச்சண்டைக்கு போறாரா..?? ஒரு புடலங்காயும் இல்ல.

அவரு வேல செய்யுற ஸ்கூல்ல அரசாங்க ஸ்பான்சர்ல ஒரு இசைப்பயிற்சி வகுப்பு நடந்துட்டிருக்கு. அத ஒரு (அல்மோஸ்ட்) வயசான ம்யூசிக் வாத்தியார் தான் நடத்துறாரு. திடீர்னு அரசாங்கம் அந்த இசை வகுப்புகளுக்கான நிதியை கட் பண்ணிடறதனால பள்ளி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையை காரணமா காட்டி இசை பயிற்சி வகுப்புகளுக்கு கத்தரி போடப்போறதா சொல்றாங்க. அப்புடி நிறுத்துனா obviously நம்ப வயசான வாத்தியாரையும் வூட்டுக்கு அனுப்பிடுவாங்க. அவரு குடும்பஸ்தரு. அவருடைய குடும்பத்துக்கு ஒரு புது ஆள் வேற ‘ஆன் தி வே’.

இந்த நெலமைல அவருக்கு வேல போயிட்டா என்ன பண்ணுவார்னு பாவப்பட்டு அதுக்கு நிதி திரட்டத்தான் நம்ப ஹீரோ சின்ன லெவல் சண்டைப்போட்டிகள்ல கலந்துக்க யோசிக்கிறாரு. சின்ன லெவல் போட்டியா இருந்தாலும் பயிற்சி இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுங்குறதுனால அவரு பார்ட் டைமா பாடம் நடத்துற immigrants கூட்டத்துலேர்ந்து ஒரு மெக்சிகன் ‘முன்னாள்’ குத்துச்சண்டையாளன தேர்ந்தெடுத்து அவன்கிட்ட உதவி கேக்குறாரு. அவரும் சாதாரணமா ஒத்துக்கல...எப்டியோ அவர கன்வின்ஸ் பண்ணி பயிற்சியெடுக்க ஆரம்பிச்சு சின்ன சின்ன போட்டிகளா ஜெயிக்க ஆரம்பிக்குறாரு. அதுல   வர்ர பணத்தையெல்லாம் அவங்க ஸ்கூல் அக்கவுண்டண்ட் கிட்ட கொடுத்து வைக்குறாரு (இத ஞாபகம் வெச்சுக்கோங்க..கடைசில இத வெச்சு தான் ட்விஸ்ட்..)

நம்ப ஹீரொவுடைய சண்டைகள பாக்குற UFC (Ultimate Fighting Championship) ஆளுங்க அவருக்கு UFCல ஒரு ஃபைட் பண்ண ஒரு சான்ஸ் தராங்க.
அதுக்கப்புறம்….

முதல் பத்திய படிச்சுக்கோங்க…!!

செம்ம டைம்பாஸ் படம்… சிரிப்புக்கு நான் உத்திரவாதம் J J ஜாலியா பாக்கலாம்.

கொசுறு: இந்த படத்துல வர்ரது exact-ஆ பாக்சிங் இல்ல. ஒரு மாதிரி எல்லா சண்டையும் கலந்த Mixed Martial Arts(MMA). இதே MMA வெச்சு வெளிவந்த ஒரு சீரியஸ் ஆக்‌ஷன் படத்தைப் பத்தி இங்கே க்ளிக் பண்ணி படிக்கலாம்.
Images Courtesy: Original Uploaders

ஞாயிறு, 19 மே, 2013

அமெரிக்கன் ஃபுட்பால் - ஹாலிவுட் 'Sports' படங்கள் - ஒரு பார்வை




நம்மூரில் ஸ்போர்ட்ஸை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரிய பட்ஜெட் மசாலா படங்களில் ஊறுகாயாக (உ.ம் கில்லி – கபடி, M.குமரன் – கிக் பாக்ஸிங்) அவ்வப்போது ஏதாவதொரு விளையாட்டை பயன்படுத்தியதைத் தவிர, முழுமையாக ஒரு விளையாட்டை முன்வைத்து அதில் வெற்றியும் பெற்ற படங்கள் என எடுத்துக்கொண்டால் சென்னை 28 (கிரிக்கெட்), வெண்ணிலா கபடி குழு (கபடி) உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம்.

 ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரையில் இந்த ‘Sports’ வகையைச் சார்ந்த படங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பேஸ்பால் (Baseball), அமெரிக்கன் ஃபுட் பால் (American Football), கூடைப்பந்து (Basketball), குத்துச்சண்டை (Boxing) என ஒரு விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் Sports-Drama, Sports-Bio-pic, Sports-Comedy, Sports-Family என sub-genreகள் நிறைய உண்டு.

இந்த வகை ஸ்போர்ட்ஸ் படங்களின் கதைகளுக்கென ஒரு பொதுவான டெம்ப்ளேட் இருக்கும். ஏதாவதொரு அணி தங்களுடைய வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததனாலோ அல்லது வேறு காரணங்களாலோ சரியாக விளையாடாமல் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும். அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் திறமையிருந்தும் பெரிதாய் சோபிக்க முடியாதவராய் இருப்பார். எங்கிருந்தோ ஒரு புதிய பயிற்சியாளர் வருவார். அவருடைய ஊக்கத்தினாலும் உந்துதலினாலும் முன்னேறும் அணி க்ளைமாக்ஸில் ஏதாவதொரு மிகப்பெரிய அணியைத் தோற்கடிக்கும்.சுபம் படம் இனிதே நிறைவுற்றது…!!

சில படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி மாறினாலும் இந்த வரையறைக்குள் கொஞ்சமாவது அடங்கும்.குழு விளையாட்டை பற்றிய படங்களுக்கு இந்த விதிகள் கட்டாயம் பொருந்தும்.அதுவே தனி ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய கதையாக இருந்தால் இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் மாறும். அந்த குறிப்பிட்ட வீரருடைய வீழ்ச்சியும் எழுச்சியும் (Fall and Rise) சுற்றியே இருக்கும். அவனுடைய குடும்பப் பின்னணியும், குண நலன்களைப் பற்றியும், திறமைகளைப் பற்றியும் கொஞ்சம் டீட்டெய்லிங் இருக்கும்.மற்றபடி இறுதியில் ‘அவருடைய கடுமையான முயற்சியால்/பயிற்சியால் வென்றார்’ வகை கதையாகத்தான் முடியும்.

சரி மேட்டருக்கு வருவோம்… அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ்பால்-ஆக இருந்தாலும் இந்த ஃபுட்பால்னா ( நமக்குத் தெரிஞ்ச Football இல்ல. கோழி முட்டை மாதிரி ஒரு பந்தை வெச்சு கிட்டத்தட்ட ரக்பி மாதிரி விளையாடப்படும் (American Football) உயிரையே விட்டுடுவாங்க போல. இந்த விளையாட்டைப் பத்தி எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுருக்கமா சொல்ல முயற்சி பன்றேன்.அணிக்கு 11 பேர். எல்லா அணியிலுமே வீரர்கள் Defence – Offense என இரண்டு குழுக்களா இருப்பாங்க. இந்த ஃபுட்பால் கிரவுண்டின் மொத்த நீளம் 120 கெஜம் (yard) கிட்டத்தட்ட 110 மீட்டர். இரண்டு பக்கங்களும் கோல் போஸ்ட்கள் உண்டு.ஆட்டம் வழக்கம் போல ஆடுகளத்தின் மையத்திலிருந்து தான் தொடங்கும். இந்த செண்டர் கோட்டுக்கு ‘Line of Scrimmage’னு பேரு.என்னதான் footballனு சொல்லிக்கிட்டாலும் பெரும்பாலும் பந்தை கையால மத்தவங்ககிட்ட பாஸ் பண்ணியோ, தூக்கி எறிஞ்சோ அல்லது பந்தை தூக்கிட்டு ஒடியோ தான் விளையாடவேண்டியிருக்கு.

நம்முடைய டீமின் Offense க்ரூப் களத்துல இருக்குன்னா அவங்களுடைய குறிக்கோள் எதிரணியின் Defense-இடம் இருந்து எப்படியாவது தப்பிச்சு பந்தை அப்படி இப்படி பாஸ் பண்ணி பந்தை மீட்டு 40மீட்டர் ஓடி இடையில எதிரணி டிஃபன்ஸ் கிட்டயிருந்தும் தப்பிச்சு கோல் போஸ்ட் இருக்குற கடைசி பத்து மீட்டர் (End Zone)-க்கு பந்தை வெற்றிகரமா கொண்டு வந்துட்டா…!! அது ‘Touchdown’ .உங்க அணிக்கு ஏழு பாயிண்ட்கள்.. (உஸ்ஸ்ஸ்ஸப்பா சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குது.)

Wait…! பந்தை தூக்கிட்டு பூந்து பூந்து ஓடனும். எதிரணி ப்ளேயர்ஸ் வந்தா சிக்காம தப்பிக்கனும். இதுல என்ன பிரச்சனைன்னு நீங்க கேக்கலாம். பிரச்சனையே அதான்.இது ஒரு ‘Contact Sport’.அதாவது நீங்க எப்படி வேணாலும் முட்டி மோதிக்கலாம்.ரொம்ப ரொம்ப மோசமா அடிபட வாய்ப்பிருக்கு. அதனாலதான் Shoulder pad, Thigh Pad, Helmetனு ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்.எதிரணி Defense டீம்ல இருக்குற ஒவ்வொருத்தரும் சும்மா பீமசேனன் மாதிரி ஆறடி உயரத்துக்கு மேல 150 கிலோ எடைல இருப்பாங்க (Line backers) .அவங்க வேலையே பந்தை தூக்கிட்டு ஒடுற ப்ளேயர தடுக்குறது (Tackle) தான். பந்தை தூக்கிட்டு ஒடுறவர (Running Back) தடுத்து/மோதி பந்தை அவர் தவறவிட்டாத்தான் (Fumble) எதிரணிக்கு அடுத்ததா வாய்ப்பு கிடைக்கும்.இதுல யார்கிட்ட எப்போ பந்தை பாஸ் பண்ணனும்…எதிரணி Defense கிட்டேயிருந்து எப்படி எஸ்கேப்பாகனும்னு எல்லா வியூகங்களையும் வகுக்குறவர் ‘Quarter Back’ (QB). யெஸ்ஸு.. யூ ஆர் ரைட்டு… இந்த QBதான் பெரும்பாலும் அணித்தலைவரா இருப்பாரு.

இங்க கிரிக்கெட்டுக்கு IPL மாதிரி (அந்தளவு லஞ்ச ஊழல்லாம் இல்லீங்கோ.அவிங்கள்லாம் ரொம்ப ரோஷக்காரங்க) அமெரிக்கன் ஃபுட்பாலுக்கு NFL (National Football League) ரொம்ப பிரபலம். அமெரிக்கா முழுவதுமிருந்து 32 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் மோதிக்கொள்கிற Superbowl (உலகக்கோப்பை மாதிரி – ஆனா அது இல்லை) உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 கோடி ரசிகர்களால் பார்க்கப்படுது. அவங்கவங்க State டீமுக்காக அப்புடியே உசுரையே விடுறாங்கைய்யா இந்த மக்கள். ஃபுட்பாலை பொறுத்தவரையில் அமெரிக்கர்களுக்கு அது ஒரு ‘National Pride’.

ஹப்பா…!! ஓரளவு கவர் பண்ணிடேன்னு நெனைக்குறேன்…!! :) :) இனிமே இந்த அமெரிக்கன் ஃபுட்பாலை அடிப்படையா வெச்சு வெளிவந்த.. நான் பார்த்த அரை டஜன்+ படங்களைப் பற்றி விரிவா... கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்..!! படங்களின் பட்டியல் கீழே…!

1.   Remember the Titans (2000)
2.   Invincible (2006)
3.   Any Given Sunday (1999)
4.   Friday Night Lights (2004)
5.   The Waterboy (1998)
6.   The Longest Yard (2005)
7.   The Blind Side (2009)
8.   Gridiron Gang (2006)
9.   Varsity Blues (1999)
10. We are marshal (3006)

ஆரம்பத்துல இந்த விளையாட்டு ஒரு மண்ணும் புரியலைன்னாலும் நிறைய படங்கள் பார்த்து அப்புறம் அந்த படங்களை இன்னும் ரசிக்க இந்த விளையாட்டைப் பற்றியும் படிச்சு… இப்போ எனக்கு இந்த ‘American Football’ புடிச்ச கேம் ஆயிடுச்சு. :) :)

கடைசியா ஒரு ஃபினிஷிங் டச் : சிறந்த பத்து டச்டவுன்கள் - வீடியோ
Photos Courtesy: Original Uploaders

டிஸ்க்ளைமர்: இந்த கேம் பத்தி நல்லா தெரிஞ்ச அமெரிக்கவாழ் நண்பர்கள் யாரவது இதை படிக்க நேர்ந்தால் எப்படி எழுதிருக்கேன்னு தயவுசெய்து சொல்லிட்டு போங்க. :) :)

Related Posts Plugin for WordPress, Blogger...