நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

புல்லட் டைரி - ’வட்டக்கனல்’ - பறவையே எங்கு இருக்கிறாய் ?




இந்த வாட்டி தமிழ் புத்தாண்டோட சேத்து எனக்கு நாலு நாட்கள் லீவு இருந்துச்சு. கண்டிப்பா எங்கேயாவது ரைட் போயே ஆகனும்னு நெறைய நண்பர்கள்கிட்ட கேட்டுப் பாத்தேன். எல்லாரும் ஏதோ ஒரு கமிட்மெண்ட்ல இருந்ததால நாம இந்தவாட்டி தனியாவே போய்டுவோம்னு முடிவு பண்ணேன். இதுக்கு முன்னாடி திருவாரூர், கடலூர், பாண்டி, வடலூர், பண்ருட்டின்னு பல ஊர்களுக்கு solo ride போயிருந்தாலும் மலைப்பாதைகள் இருக்கிற இடங்கள் எதுக்கும் தனியா போனதில்ல.


வட்டக்கனல் பத்தி என் மச்சான் ஒருத்தன் ரெண்டு மூனு வருஷம் முன்னாடி நெறைய சொல்லிருக்கான். அப்பவே போகனும்னு நெனச்சிட்டே இருந்தேன். இப்பதான் வாய்ப்பு கெடைச்சுது. கொடைக்கானலுக்கு உள்ள ஒரு 7 கிலோமீட்டர்ல இருக்கு வட்டக்கனல். சென்னைலேர்ந்து 14ஆந்தேதி சாயந்திரம் நாலு மணிக்கு தான் கெளம்புனேன். திருச்சி-திண்டுக்கல் ரூட்ல போறதாதான் திட்டம். ஆனா திருச்சி தாண்டும்போது மனசு மாறி மதுர போய் போவோம்னு முடிவு பண்ணேன். போற வழில விராலிமலைல நிறுத்தி பரோட்டா சாப்டுட்டு அப்டியே மதுர டவுன தொட்டு அடுத்ததா வத்தலகுண்டு போய்ச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பத்து மணி. அதுக்குள்ள ஃபேஸ்புக்ல போட்ட போஸ்ட்ட பாத்துட்டு சக ரைடர் ஒருத்தர் ஃபோன் பண்ணி “எதுக்கு ப்ரோ தனியா போறீங்க. நம்ம பசங்க கொஞ்சம் பேர் கொடைக்கானல் தான் போயிருக்காங்க. அவங்ககிட்ட பேசுங்க”ன்னு சொன்னாரு. நானும் அவங்க கூட போய் தங்கிக்கலாம்னு யோசிச்சு ஃபோன் பண்ணா, அவங்க பண்ணைக்காடுங்குற ஊர்ல தங்கிருக்குறதா சொன்னாங்க.  (நைட்டு மலைப்பாதைகள்ல வண்டியோட்ற த்ரில் பத்தியெல்லாம் ஏற்கனவே நெறைய பேசிருக்குறதனால இப்போ அதப்பத்தி எதுவும் சொல்லப்போறதில்ல)

கொடைக்கானலுக்கு 28 கிலோமீட்டர் முன்னாடி இருக்கு அந்த ஊர். அங்க போய் சேரும்போது மணி கிட்டத்தட்ட 12.00 மணி. ஊர்ல ஏதோ திருவிழா போல. சீரிய்ல் செட்டு, சாமி ஊர்வலம்னு ஜெகஜ்ஜோதியா இருந்துச்சு ஊரே. என்னோட நண்பர்கள் ஒரு கல்யாண மண்டபத்துல ரூம் எடுத்து தங்கிருந்தாங்க. அவங்க கூடவே தங்கிட்டேன். நைட்டு குளிர் தாங்க முடியாம உடம்பு தூக்கித் தூக்கி போட ஆரம்பிச்சுது.  அப்டியொரு நடுக்கம். கால்ல சாக்ஸ மாட்டிகிட்டு, முகத்த ரெண்டு balaclava போட்டு மூடிகிட்டு, ரைடிங் ஜாக்கெட்டோட தெர்மல் லைனர எடுத்து போட்டுட்டு அதுக்கு மேல கம்பளியால போத்திகிட்டு தூங்க முயற்சி பண்ணேன். பயங்கரமா பித்தம் தலைக்கேறி தலவலி, பிரட்டல், இருமல்னு கஷ்டப்பட்டு சுத்தி இருந்தவங்களையும் கஷ்டப்படுத்தி ஒருவழியா ரெண்டு மூனு மணிக்கு என்ன அறியாம தூங்கிட்டேன். காலைல ஊர்ல ஸ்பீக்கர் கிழிச்ச கிழில 7.30க்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு. சட்டு புட்டுன்னு குளிச்சு கெளம்பி, பக்கத்துல இருந்த ஒரு சின்ன கடைல காலை உணவ முடிச்சு, gear-up பண்ணி ரெடி ஆனேன். நண்பர்கள்ல சொல்லிகிட்டு வட்டக்கனல் நோக்கிய பயணத்த ஆரம்பிச்சேன். நெஜம்மா அங்க தங்குற எண்ணமெல்லாம் இல்ல. இடமும் எதுவும் முன்னாடி புக் பண்ணி வைக்கல. சும்மா அங்க என்னதான் இருக்குன்னு பாப்போமேன்னு ஒரு ஆர்வம். அவ்ளோதான். 

கொடைக்கானல்ல இது சீசன். போதாக்குறைக்கு long weekend வேற. கேக்கவே வேணாம். சீனிவாசபுரத்துல ஆரம்பிச்சு உள்ள லேக் வரைக்கும் கார்,பஸ், வேன் எல்லாம் வரிசகட்டி நின்னுச்சு. ஒருவழியா ஊடால புகுந்து புகுந்து போய் 11.00 மணி வாக்குல வட்டக்கனல் போய்ச்சேர்ந்தேன். சரி மொதல்ல டால்ஃபின் நோஸ் பாயிண்ட்டுக்கு போய்ட்டு வந்து அப்புறம் எங்க போறதுன்னு முடிவுபண்ணிக்கலாம்னு பைக்க பார்க் பண்ணிட்டு டேங்க் பேக். ட்ரைபாட், எல்லாத்தையும் தூக்கிகிட்டு ரைடிங் கியர்ஸோட இறங்கி நடக்க ஆரம்பிச்சேன். முழுக்க முழுக்க கடினமான பாறைகளாலும் மர வேர்களாலும் நெறைஞ்ச ஒரு பாதை அது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் இறங்குனேன்.
முதல் view point வந்ததும் இதோட நிறுத்திக்குவோம்னு முடிவு பண்ணி அங்க கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் தூக்கிகிட்டு மேல ஏற ஆரம்பிச்சேன்.

Wheezing ரொம்ப டார்ச்சர் பண்ணுச்சு. கொஞ்ச தூரம் போனதுக்கே முடியல. மூச்சிரைக்க அப்டியே உக்காந்து உக்காந்து தான் போனேன். மேல ஏற இன்னும் கொஞ்ச தூரம் இருந்தப்ப தான் ஒரு பாறைல உக்காந்தேன். அப்போ தான் எதிர்ல இருந்த ஒருத்தர் என்னப் பாத்து பேச ஆரம்பிச்சாரு. "Are you a biker ? I see that you are with your riding gears. What are you riding ? " அப்டின்னு கேட்டுகிட்டே ” கமான் மச்சா, சிட் வித் அஸ்” ன்னு கூப்டதும் போய் பக்கத்துல உக்காந்தேன்.கூட இன்னொரு வெளிநாட்டுக்காரரும் இருந்தாரு.  என்ன கூப்பிட்டு பேசுனவன் தன்னை ஜித்தின்னு அறிமுகப்படுத்திகிட்டான். மத்தியப் பிரதேசத்துல செட்டிலான மலையாளின்னு சொன்னான். அப்புறம் பேச்சு முழுக்க முழுக்க கார்கள்,பைக்குகள் பக்கம் திரும்புச்சு. ஜெர்மன்காரன்  ஃபெலிக்ஸ் ஜெர்மனியோட ஆட்டோபான் ரோடுகள் பத்தியும் அங்க அதிகபட்ச வேக அளவுகள் பத்தியும் சொல்ல ஆரம்பிச்சான். ஸ்போர்ட்ஸ் பைக்குகள வாடகைக்கு எடுத்துகிட்டு ஆட்டோபான்ல் ட்ரிப் போறதப் பத்தி பேசுனான்
கொஞ்ச நேரத்துக்கப்புறம் ஜித்தின் “What's you itinerary dude ? Where are you staying ?" னு கேட்டதும், எனக்கு எந்த திட்டமும் இல்ல; இப்போதைக்கு எங்கேயும் தங்கல; இந்த ட்ரெக்கிங் முடிச்சுட்டு அப்டியே மன்னவனூர், பூண்டின்னு சுத்தலாம்னு ப்ளான் பண்ணிருக்குறத சொன்னேன்.

"If you don't have a place to stay, you can stay in our accommodation. Its very closer"ன்னான். சரின்னு வண்டிய கீழ பார்க் பண்ணிட்டு saddle bag, tank bag , tripod, helmet எல்லாத்தையும் கைல தூக்குனா அப்போதான் ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான் ஜித்தின். அவங்க தங்கியிருந்த accommodationக்கு போறதுக்கு கிட்டத்தட்ட ஒரு நூறு படி மலை மேல ஏற வேண்டியிருந்தது. நான் கைல லக்கேஜோட பெக்க பெக்கன்னு முழிக்கிறதப் பாத்த ஃபெலிக்ஸ் "I'm a back packer. I can carry all your stuff. I see that you are struggling to breath"னு சொல்லிட்டு டபடபன்னு என் கைல இருந்து எல்லாத்தையும் வாங்கிகிட்டு மேல ஏற ஆரம்பிச்சான். ஜித்தினும் அவன் பங்குக்கு helmet, tripod, knee guard எல்லாத்தையும் வாங்கிகிட்டு "you walk freely macha.."அப்டின்னு அவனும் படியேற ஆரம்பிச்சேன். நான் இருந்த நெலைமல அவங்க ரெண்டு பேரும் தெய்வம் மாதிரி தெரிஞ்சாங்க.

இந்த இடத்துல வட்டக்கனல் பத்தி ஒரு trivia. மேஜிக் மஷ்ரூம்னு ஒரு சமாச்சாரம் கேள்விப்பட்டிருப்பீங்களான்னு தெரியல. பச்சையா சொன்னா போதைக் காளான். வட்டக்கனல்ல முக்காவாசி வெளிநாட்டு ஆளுங்கதான். பெரும்பாலும் backpackers. ஐடி ப்ரூஃப், அது இதுன்னு எந்த தொல்லையும் இல்லாததுனால அவங்க இங்க தங்குறதை விரும்புறாங்க. ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வாடகையே 300 ரூபா தான். Off-seasonனா இன்னும் கம்மி. ஆங்..அந்த மேஜிக் மஷ்ரூம் பத்தி சொன்னேன்ல, அதோட availability இங்க ரொம்ப அதிகம். சமீபத்துல இந்த மஷ்ரூம் ரொம்ப ஓவரா சாப்ட்டு போதையாகி நெறைய ஃபாரினர்ல் மலைல குதிச்சு செத்துப் போனதால போலிஸ் கெடுபிடி ரொம்ப அதிகமாயிட்டதா உள்ளூர்க்காரங்க சொல்றாங்க.

ஒரு வழியா நின்னு நின்னு படியேறி மேல போய்ச் சேர்ந்தேன். ஆச்சரியமான விஷயம் கீழ தெரிஞ்ச வெய்யில் மேல இல்ல. மத்தியானத்துக்கே ஜில்லுன்னு இருந்துச்சு. நான் ட்ரெஸ் மாத்திட்டு ரூம் வாசல்ல வந்து உக்காந்தேன். பக்கத்து ரூம்ல ஒரு பெங்களூர் பையனும் டார்ஜிலிங் பொண்ணும் தங்கியிருந்தாங்க. அவங்களும் வெளில சேர் போட்டு உக்காந்ததும் பேச ஆரம்பிச்சோம்.அவங்க நாலு பேருக்கு மத்தியில ஒரு ஜாயிண்ட் சுத்தி வர ஆரம்பிச்சுது. ஃபெலிக்ஸ் இதுவரைக்கும் 20 நாடுகளுக்கு மேல பயணம் பண்ணியிருக்குறதப் பத்தியும் எல்லா இடத்துலயும் மக்கள அரசாங்கம் எப்படியெல்லாம் exploit பண்ணுதுங்குறதப் பத்தியும் பேசுனான். தன்னுடைய உடம்புல இருக்குற ஒவ்வொரு டாட்டூவுக்கும் ஒரு விளக்கம் தந்தான்.

ஃபெலிக்ஸ் ஜெர்மனில தேசிய அளவிலான ஸ்கேட்போர்டிங் சேம்பியன். சில பல நிறுனங்களுக்கு brand ambassador. அதுல கெடைக்கிற பணத்த வெச்சு தான் உலகம் பூரா சுத்துறதா சொன்னான்.. பெரும்பாலும் ஐரோப்பிய ஆஃப்ரிக்க நாடுகள்ல தான் சுத்தியிருக்கான். இந்தியா வர்ரதுக்கு முன்னாடி கானா (Ghana)வுலயும் இன்ன பிற ஆஃப்ரிக்க நாடுகள்லயும் தங்கியிருந்ததப் பத்தி நெறைய பேசுனான். LGBT சமூகத்தினரை கடவுளுக்கு எதிரான சாத்தானின் தூதுவர்களா பாக்குறதா சொன்னான். சட்டப்படியும் அங்கே ஓரினச்சேர்க்கை குற்றம் தானாம், அங்க இருக்குற ரேசிஸம் வேற மாதிரியானது. அவங்கள பொறுத்தவரைக்கும் வெள்ளையர்கள் எல்லாருமே பணக்காரங்க. கைல எப்பவும் காச வெச்சுகிட்டே திரியுறவங்க. யாராவது ஒரு Ghana குடிமகன் ரோட்ல ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரர பாத்தாங்கன்னா ”Hey Oburoni (வெள்ளைத் தோல்காரா),you have so much money. Why don't you buy me a car ?"னு கேட்டபடி பின்னாடியே நடந்து வருவாங்களாம். ஆனா ஒருபோதும் டூரிஸ்ட்டுங்க மேல, அதும் white டூரிஸ்ட் மேல கண்டிப்பா வன்முறைய கையாளவே மாட்டாங்களாம். டூரிஸ்ட்டுங்கள அடிச்சிட்டா எங்க தங்களோட நாட்டு மேல மத்த நாடுகள் போர் தொடுத்துடுமோன்னு ஒரு பயம் தான் காரணமாம்.

ஒரு வாட்டி ஃபெலிக்ஸ அன்பா கட்டிப்பிடிச்ச ஒரு கானா காரர் பர்ஸ உருவிட்டாராம். இவன் டக்குன்னு நோட் பண்ணி அவரோட கைய பிடிச்சிருக்கான். அவரு தப்பிக்க முயற்சி பண்ணாம பர்ஸ தரமாட்டேன்னு அடம்பிடிச்சிருக்காரு. போலிஸ் சுத்தமா செயல்படாதுங்குறத தெரிஞ்சதனால இவன் என்ன பண்றதுன்னு தெரியாம "thief..thief.. "னு கத்தியிருக்கான். உடனே உள்ளூர் ஆட்கள் கொஞ்சம் பேரு ஓடி வந்து அந்த பிக்பாக்கெட்ட அடிச்சு ஒதச்சுட்டு பர்ஸ மீட்டு இவன்கிட்ட குடுத்துட்டு திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டாங்களாம். அந்த பிக்பாக்கெட்டும் கடைசில சாரி சொல்லிட்டு போனானாம்.

அப்புறம் பேச்சு weed பக்கம் திரும்புச்சு.  மூளைக்குள்ள இருக்குற டோப்பமைன் சேமிப்பிலிருந்து அப்பப்ப கொஞ்சமா release ஆகி அதுல கெடைக்குற சந்தோஷம், உற்சாகம்லாம் பத்தாம மொத்த டோப்பமைனையும் ஒரே நேரத்துல மூளைக்குள்ள drain பண்ணி (இதப்பத்தி கொழந்த ஒரு கட்டுரைல செமத்தியா விளக்கியிருக்காரு) ஒரு மாதிரி sustained excitementக்கு கொண்டு போறது Marijuana தான்னு சொல்லிட்டு கடைசியா ஒரு இழுப்பு இழுத்து முடிச்சான். பேச்சு மறுபடியும் சர்வதேச அரசியல் பத்தியும் சமூக நீதி பத்தியும் திரும்புச்சு. மக்களுக்கு நியாயம் கெடைக்குறதுக்காக உருவாக்கப்பட்ட நீதி அமைப்புகள் உலகம் பூராவுமே ஒழுங்கா செயல்படாம மக்களுடைய நிம்மதியைக் குலைக்கிறதப் பத்தி ரொம்ப ஆதங்கப்பட்டான் (கைல ஒரு நீதிதேவதை டாட்டூ இருந்துச்சு) கால்ல ஒரு டாட்டூ 'Fick die Polizei' (Fuck the police) ன்னு சொல்லுச்சு. அதுக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சான்.

முன்னாடியெல்லாம் ஜெர்மனில போலிஸ் ஆகுறது ரொம்ப கஷ்டம். வருஷக்கணக்காகும் selection,training எல்லாம் முடிய. தகுதியான ஆஃபிசர்ஸ் மட்டும் தான் வெளில வருவாங்க. ஆனா இப்போ மூனு மாசத்துலயே போலிஸ் ஆகிடலாம். இவங்களுக்கு சட்டமும் தெரியல ஒரு மண்ணும் தெரியல. ஏதாவது சின்னதா ஒரு demonstration (போராட்டம்) பொது இடத்துல நடந்தா இவங்களுக்கு எப்படி கையாளனும்னு தெரியாம உடனே கண்ணீர்புகை , அது இதுன்னு வன்முறைல இறங்கிடுறாங்கன்னு கோவப்பட்டு பேசுனான். என் கைல இருக்க ஸ்டீல் வளையத்தப் பாத்துட்டு இதுக்கு பின்னாடி ஏதாவது கதை இருக்கான்னு கேட்டான். ஏண்டான்னு கேட்டா, ஜெர்மனில முதலாளித்துவத்தை வெறுக்கிறவங்க நெறைய பேர் இருக்காங்க. அவங்க யாரவது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பாத்தா உடனே கடுப்பாகி அந்த லோகோவ உடைச்சிடுவாங்க. அந்த ஸ்டார உடைச்சு தூக்கிப்போட்டுட்டு வளையத்த பெருமையா ("See, I fucked a Mercedes") கைல மாட்டிட்டு சுத்துவாங்கன்னு ஒரு தகவல சொன்னான்.


இப்படியாக பேச்சு எங்கெங்கேயோ சுத்துனபடி இருந்துச்சு. அப்புறம் ஜித்தின் அவனுடைய UK அனுபவங்கள் பத்தி கொஞ்சம் பகிர்ந்துகிட்டான். அவன் ஒரு பல் மருத்துவன்னு அப்போதான் தெரியவந்துச்சு. சாய்ந்திரம் ஃபெலிக்ஸுக்கு கொடைக்கானல்ல பஸ். அங்கிருந்து பழனி-கொச்சின் போய்ட்டு அடுத்த நாள் நேபாளத்துக்கு ஃப்ளைட் ஏறுறதா திட்டம் வெச்சுருந்தான். ஜித்தினும் நானும் மன்னவனூர்/பூம்பாறை ஏரியாவெல்லாம் கொஞ்சம் சுத்தலாம்னு முடிவுபண்ணோம். ரூமை பூட்டிகிட்டு ஒரு ஃபெலிக்ஸ் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு கீழ எறங்குனோம். வண்டில ட்ரிபிள்ஸ் போய் ஃபெலிக்ஸ பஸ் ஸ்டாண்ட்ல எறக்கி விட்டுட்டு நானும் ஜித்தினும் மன்னவனூர் கெளம்புனோம். அட்டகாசமான பாதை. அவனும் பைக்கர் தான்ங்குறதனால நான் என்னதான் வளைச்சு வளைச்சு ஓட்னாலும் கொஞ்சம் கூட பயமில்லாம இருந்தான். இருட்ட ஆரம்பிச்சதும் நாங்க பூம்பாறை மட்டும் போய்ட்டு திரும்பிடலாம்னு முடிவு பண்ணோம். அதே மாதிரி பூம்பாறை போய்ட்டு கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துட்டு. திரும்ப வர ராத்திரி ஆயிடுச்சு. வந்து கொஞ்ச நேரம் திபெத்தியன் மார்க்கெட்ல சுத்திட்டு, ரூம் போகலாம்னு முடிவு பண்ணோம், ஜித்தின் தன் நண்பன் ஒருத்தன பாத்துட்டு அவன்கூட வரேன்னு சொன்னதால நான் ரூமுக்கு கெளம்புனேன்.

அன்னைக்கு ராத்திரி தூங்குனது ரொம்ப நிம்மதியான தூக்கம். ஜித்தின் 1.00 மணிக்கு மேல தான் ரூமுக்கு வந்தான். நான் காலைல எந்திரிக்கவே மணி 9.00 ஆயிடுச்சு. ஒருவழியா குளிச்சு கெளம்பி gear-up பண்ணி ஜித்தினுக்கு பிரியாவிடை சொல்லி அங்கிருந்து கெளம்புனேன். (திரும்பி வந்த கதையெல்லாம் ஃபேஸ்புக்ல பாத்துருப்பீங்க. அதனால மொக்க போடல)
பொதுவா எந்த திட்டமும் இல்லாத பயணங்கள் தான் நெறைய சுவாரஸ்யமான அனுபவங்களையும் புதுப்புது மனுஷங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும். அந்த பயணத்த தொடங்கும்போது இருந்த மனநிலை பயணத்தை முடிக்கும்போது மாறியிருக்கும். நிச்சயமா புதுசா எதாவது ஒரு விஷயமாவது கத்துட்டு இருப்போம். இந்தப் பயணமும் இந்த டெம்ப்ளேட் மாறாம தான் முடிஞ்சுது.

பெரும்பாலும் எதாவது லாங் ரைட் போனா, வீட்டுக்கு வந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு பயணம் பத்தின நினைவுகள அசைபோட்டபடி இந்த பாட்ட கேப்பேன். மனசு ஒரு மாதிரி முழுமையடைஞ்சிட்டதா தோணும்.


I'd rather be a sparrow than a snail
Yes I would, if I could, I surely would
I'd rather be a hammer than a nail
Yes I would, if I only could, I surely would

Away, I'd rather sail away
Like a swan that's here and gone
A man gets tied up to the ground
He gives the world its saddest sound
Its saddest sound

I'd rather be a forest than a street
Yes I would, if I could, I surely would
I'd rather feel the earth beneath my feet
Yes I would, if I only could, I surely would



பயணங்கள் முடிவதில்லை...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1


ஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந்தாச்சு அதுக்கப்புறம்.ஆனாலும் ஆகும்பே ட்ரிப் பார்ட் 2 எழுதும்போது திரும்ப வரும்போது நடந்த ஒரு விபத்து பத்தி எழுத முடியாம தான் ஒரு மாதிரி அப்டியே மூளை block ஆகி எழுதமுடியாமப் போச்சு.விட்ட எடத்துலேர்ந்து எழுதும்போது பேச்சு வழக்குலேயே தொடர்ந்து எழுதிட்டேன்.. இனி...

======================================================================


நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட் ஆகும்பேவுக்கு சற்று முன்பு ஊருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது.ரொம்பவும் அமைதியான இடம்.நன்றாகத் தூங்கியெழுந்த பின் காலை (மதியம்..??!!) உணவுக்குத் தயாரானோம். குறைந்தது அருகிலுள்ள இடங்களையாவது சுற்றிப் பார்த்துவிட வேண்டுமெனக் கிளம்பினோம். இதற்குள் கொஞ்சம் நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே இருந்த 'Cave walk' என்றழைக்கபடுகிற இடத்துக்குச் சென்று திரும்பியிருந்தார்கள். துபாய் சுரேஷ் அண்ணனும் அருணும் தொப்பல்லபுராவிலிருந்து 250 சொச்சம் கிலோமீட்டர்கள் நான்ஸ்டாப்பாக வந்து காலையில் எங்களோடு சேர்ந்தார்கள்.
துபாய் சுரேஷ் அண்ணன், அருண்


நான், ரத்னா அண்ணன், பேய் சுரேஷ் (இது காரணப் பெயர் :) ),மணிப்பூர் சஞ்சீப், கார்த்தி,சதீஷ் அண்ணன், அஷ்வின் மட்டும் அருகிலிருந்த ‘ஜோகிகுந்தி’ அருவிக்குக் கிளம்பினோம், எங்களோடு வழிகாட்டுவதற்காக ரிஸார்ட்டிலிருந்தே ஒரு பெரியவரை கூட அனுப்பியிருந்தார்கள், அவரையும் கூட்டிக் கொண்டு மொத்தம் நாலு வண்டிகளில் பறந்தோம். மெலிதான மழை அப்போதும் நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி கொஞ்சம் கரடு முரடான பாதையில் போய் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். அட்டகாசமான அருவி..! கொஞ்ச நேரம் நின்று படமெடுத்துக்கொண்டு அடுத்த அருவிக்குக் கிளம்பினோம். ’கட்டின மடிகே’ என்று அழைக்கப்படும் அந்த இடத்துக்கு போகும் வழியே செம்ம Off-road ஆக இருந்தது. சாலையின் குறுக்கே ஓடிய ஒரு சிற்றோடையையும் கடந்து இன்னும் கொஞ்ச தூரம் போய்ச்சேர்ந்தோம். அதற்கு மேல் மழை தாறுமாறாக கொட்ட ஆரம்பித்தது.. மண் சாலை சகதியானது மட்டுமல்லாம.. பயங்கர மேடாகவும் இருந்ததால் திரும்பிவிட முடிவு செய்தோம். மழை வலுக்கும் முன்பு ரிஸார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


அஷ்வின், பேய் சுரேஷ், சஞ்சீப்

போபண்ணாவின் மஞ்சள் குதிரை 
மழையில் கொஞ்ச நேரம் வாலிபால் ஆடிவிட்டு குளியல் போட்டு தூங்கியெழுந்து அடுத்து ஆரவாரமாய் இரவு உணவையும் முடித்து ஆட்டம் போட்டு அடுத்தநாள் அதிகாலை கிளம்பத் தயாரானோம்.மலைப் பாதைகளில் பகலில் இறங்குவது தனி சுகம். அதுவும் ஓரளவு வண்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கற்றுக்கொண்ட பின் மிகவும் ரசித்து ஓட்டமுடியும். மதியம்போல சக்லேஷ்பூரில் ஒரு கரடு முரடான off-roadஐ கடந்து மாலை கிட்டத்தட்ட பெங்களூருக்கு முந்தைய நெடுஞ்சாலையை அடைந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சோர்வுறத்தொடங்கியது.




பெங்களூர் ட்ராஃபிக்ல நாங்க ஒரு அஞ்சு பேரு மட்டும் மத்தவங்கள விட்டு பிரிஞ்சுட்டோம். மழை வேற செம்ம டார்ச்சரா இருந்துச்சு. பெங்களூரு ஹோசுர் ரூட்ல நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள போறதுக்கு இடது பக்கம் ஒரு சரிவான சின்ன பாதை அங்கங்க இருக்கும். அது நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள சர்வீஸ் ரோட்ல இறங்குறதுக்கு மட்டும் தான். ஊர்களுக்கு உள்ளேர்ந்து நெடுஞ்சாலைக்கு வரவங்களுக்கு வேற மாதிரியான, சிக்னலோட இணைப்பு சாலைகள் இருக்கும்.

ஆங்... என்ன சொல்லவந்தேன்னா... இந்த மாதிரி ஊருக்குள்ள இறங்குற சின்ன ரோடு இருக்குல்ல... அதுலேர்ந்து முழுவேகத்துல ஒரு வண்டி ராங் ரூட்ல பறந்துகிட்டு வந்துச்சு.. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே புரியாம டக்குனு லெஃப்ட்ல வண்டிய சாய்ச்சு கட் பண்ணேன்.கட்டுப்பாட்ட இழந்து வந்த வேகத்துல என் வலது ஹாண்டில்பார்ல இடிச்ச அந்தாளு அப்டியே எனக்கு பக்கத்துல வந்த தீனோட வண்டி இடது ஹாண்டில்பார்ல ஒரு இடி இடிச்சாரு.. தீன் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குங்குறதனால அவரும் சுதாரிச்சு ரைட்ல ஒரு ஷார்ப் கட் பண்ணி தப்பிச்சாரு. மூனாவது இம்பாக்ட் எங்க ரெண்டு பேருக்கு பின்னாடி வந்த அருண் வண்டில. 1 2 3ன்னு ஒரு zig zag மூவ்மெண்ட்ல.. அருண் சுதாரிக்கல. அருணுடைய இடது கை மணிக்கட்டுல மோதி அந்த ஆள் தனியா அவரோட ஸ்டார் சிட்டி வண்டி தனியா போய் விழுந்தாங்க.


அருண் வண்டி டெஸர்ட் ஸ்டார்ம் 500, so அவன் இருந்த எடத்துலேர்ந்து ஒரு அடி அசையல. ஆனா இடது கை சுண்டு விரல் மூட்டு ஒடஞ்சு ரெண்டு இன்ச் உள்ள போய்டுச்சுன்னு அவனுக்கு தெளிவா தெரிஞ்சுச்சு. ஒரு நிமிஷம் எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. இருட்டு.. மழை.. ஹைவே வேற... வண்டிய அப்டியே ஸ்டாண்ட் போட்டுட்டு கீழ விழுந்த அந்த ஆள தூக்க கிட்ட போனோம். கைலி கட்டியிருந்ததனால ரெண்டு கால் முட்டியிலயும் சிராய்ப்பு.. செம்ம போதை.. தள்ளாடி தள்ளாடி எழுந்தவன தூக்குனது மணிப்பூர் பையன் சஞ்சீப் தான். அந்தாளு செம்ம குடிச்சிருக்கான்னு தெரிஞ்சதும் சஞ்ஜீப்புக்கு செம்ம கோவம். This fucker is full drunk. Tell me fucker.. Are you drunk..are you drunk னு கேட்டுகிட்டே ரெண்டு அறை விட்டான். நான் என்ன பண்றதுன்னு புரியாம அருண எப்டி கூட்டிட்டு போறதுன்னு தெரியாம பேயறஞ்ச மாதிரி நின்னுட்டு இருந்தேன். அதுக்குள்ள அந்த ஆள் “ டேய் ...**@@யாப் பசங்களா என்ன அடிச்சுட்டீங்கள்ள..இருங்கடா வரேன்னு எறங்கி ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்சான். சஞ்சீப் உடனே guys..lets get the fuck outta here.. on the bikes.. come on ன்னு கத்துனான்... அதுக்குள்ள எங்களுக்காக கிருஷ்ணாகிரிக்கு முன்னாடி ஒரு பெட்ரோல் பங்க்ல காத்துகிட்டிருந்த மத்தவங்களுக்கு ஃபோன பண்ணி தீன் விஷயத்த சொல்லியிருந்தாரு. எல்லாரும் அவங்கவங்க வண்டில ஏறுனோம்... என் வண்டி ஸ்டார்ட் ஆகல பேட்டரி டவுன். செல்ஃப் எடுக்கல.. கிக்கரும் வேல செய்யல...நான் காலை உந்தி உந்தி வண்டிய தள்றேன்.. தீன் வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு கத்துறேன்...


சஞ்சீப் இன்னொரு வண்டி பில்லியன்லேர்ந்து எறங்கி man... put it on second gear and release the clutch.. I'll pushனு கத்திகிட்டே வண்டிய வேகமா தள்ளுனான். தீன் ஒருபக்கம் டோ பண்ற மாதிரி காலால தள்ளிகிட்டே வந்தாரு ஒரு வழிய வண்டி ஸ்டார்ட் ஆகி எல்லாரும் 6கிலோமீட்டருக்கு அடுத்து எங்களுக்காக காத்திருந்த ரைடர்ஸோட வந்து சேர்ந்தோம். அருண் ஒடஞ்ச விரலோடவே வண்டியோட்டிட்டு வந்திருந்தான். ரொம்ப பதட்டமா இருந்தான்.அவன் backup support கார்ல ஏத்திவிட்டுட்டு வேற ஒரு டெக்னீஷியன் அருண் வண்டிய ஓட்டிட்டு வந்தாரு. எல்லாருமே பதட்டத்துல தான் இருந்தாங்க. மழை..குளிர்..பயம்...எல்லாம் சேர்ந்து எனக்கு உடல் நடுங்க ஆரம்பிச்சுது ஆக்ஸிலேட்டரை முறுக்க முடியல.. ஹரி நான் ஸ்வீப் பண்றேன்னு சொல்லிட்டு கடைசில வந்தாரு. ஹெல்மெட் வைசர் வேற condensationனால கண்ண மறைக்க ஆரம்பிச்சுது நான் வைசர தொறந்துட்டு முகத்த தொடச்சபடி பொறுமை ஓட்டிகிட்டே வந்தேன். ஒரு எடத்துல ஹரி வண்டிய ஓரம்கட்டி நிறுத்த சொன்னாரு. நான், ஹரி, ரிஷி மூனு பேரும் மட்டும் ஓரமா நின்னுட்டோம் மத்தவங்க எல்லாம் முன்னாடி போய்ட்டு இருந்தாங்க. ஹரி என் ஹெல்மெட்ட வாங்கி வைசர க்ளீன் பண்ணி மாட்டிக் குடுத்தாரு. உங்களால ஓட்ட முடியுமா சுதர்சன்.. இல்ல கார்ல வரீங்களான்னு கேட்டாரு. ரிஷியும் என்னாச்சு மச்சி முடியலையான்னு கேட்டான். இல்ல.. மழை வேற நான் பொறுமையாவே வரேன்னு சொன்னேன். ரிஷி உடனே ஹரி கிட்ட “நான் இவன கூட்டிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்கன்னு” ஹரிய அனுப்பி வெச்சான். என்கிட்ட வந்து ”மச்சான்..ஒன்னும் பயப்படாத ஒன்னும் இல்ல.. வண்டிலாம் ஸ்லிப் ஆகாது... காத்து கொஞ்சம் கொறஞ்சு இருக்கும்..அதனால friction கெடைக்கும். நீ என் டெயில் லாம்ப்ப மட்டும் பாத்து ஃபாலோ பண்ணிட்டு வா.. நான் பொறுமையாவே போறேன்”னு சொன்னான்.

நானும் சரின்னு ஒத்துகிட்டு அவன ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஒரு 10-15 கிலோமீட்டர் வரைக்கும் 70கிமீ தாண்டல.அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வேகத்த அதிகரிக்க ஆரம்பிச்சான்.என்னாலையும் அத உணர முடிஞ்சுது. 80..85..90..95..100..ன்னு ஒரு வழியா வேகம் பிடிச்சுது என் வண்டி. மழை கொட்ட ஆரம்பிச்சுது. ரிஷி பின்னாடி வந்து எனக்குப் பக்கத்துல கட்டி விரலை உயர்த்துனான்.அப்டியே கைய காமிச்சு இன்னும் போ மச்சான்..இப்டியே போ..விட்றாதன்னு கத்தி சொன்னான்... முறுக்குனேன் நான் 100..110..115... மழையும் தெரியல ஒன்னும் தெரியல... ஒவ்வொரு வண்டியா 16+ வண்டிகளையும் தாண்டித் தாண்டி லீட் கிட்டவே போய்ட்டேன் ரிஷியும்..ஹரியும் கூடவே வந்து எனக்கு கைய உயர்த்தி செம்மன்னு சிக்னல் காட்னாங்க. மூட் மாறி சிரிப்பு வந்துச்சு. மறுபடியும் ஆக்ஸிலேட்டர ஒரு முறுக்கு மேல்மருவத்தூர் வரைக்கும் அதே formல வந்து சேர்ந்தேன்.

ரிஷி...!!
இந்த எடத்துல ரிஷி பத்தி சொல்லியே ஆகனும்.அவன் ஒரு horse trainer.அதிகம்
பேச மாட்டான்.லாரி ஸ்டியரிங் மாதிரியா ஒரு பெரிய ஹேண்டில்பார் வெச்ச Thunderbird 500 தவிர ஒரு Yamaha R1 (R15 அல்ல..இது 1000cc)ம் வெச்சுருக்கான். ட்ராக் ஓட்ற ப்ரொஃபஷனல் ரேசர்/ரைடர்.எனக்கு மலைப்பாதைகள் மேல இருக்குற பயத்தைப் போக்குனது தொடங்கி..wet road riding... வண்டிய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுருக்குறது... bends போடுறதுன்னு பல விஷயங்கள்ல எனக்கு குரு இவன் தான். ரைட் அப்போ.. பேய் சுரேஷ் தோனின்னா...இவன் சச்சின்... செம்ம classy rider. இந்த ட்ரிப்புக்கு அப்புறம் தான் ரிஷி இன்னும் நெருக்கமானான்.


மழை விட்டுருந்ததனால எல்லாரும் அவங்கவங்க ஈர ஆடைகள மாத்திகிட்டு காஃபி..டீ குடிச்சபடி உக்காந்திருந்தோம். கடைசி 100 சொச்சம் கிலோ மீட்டர்கள். ஒரு வழியா அதிகாலை மூனு மணி வாக்குல சென்னை வந்து சேர்ந்தோம். வழக்கம்போல ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்ல எல்லாரும் ஃபோட்டொ எடுத்துகிட்டு ஒவ்வொருத்தரும் அடுத்த ரைட்ல சந்திப்போம்னு ஹக் பண்ணிட்டு தனித்தனியா பிரிஞ்சு கெளம்புனோம். 4.00 மணி வாக்குல கே.கே நகர் வந்து சேர்ந்தேன் நான்,.. மனசு நடந்தத எல்லாம் அசை போட்டபடி இருந்துச்சு..செம்ம களைப்போட அடுத்த ரைட எதிர்பார்த்தபடி தூங்கிப்போனேன் நான்.


செவ்வாய், 6 அக்டோபர், 2015

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... அட்டகாசம் - 3



V11 குழும நண்பர்கள் அடுத்த நெடுந்தூரப் பயணம் போக இடம் முடிவு செய்தபோது நாம் பரிந்துரைத்தது இரண்டு இடங்கள். ஒன்று கூர்க்.. மற்றது ஆகும்பே. ஆகும்பே கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள ஒரு மழைக்காடுகள் நிறைந்த மலைப் பகுதி. Land of King Cobras எனவும் Cherapunji of south என்றும் அழைக்கப்படுகிற இடம். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 360 கிலோ மீட்டர்கள். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையே கொஞ்சம் சுத்தலான வழிதான். ரத்தினா அண்ணன், பிரபாகரன், துபாய் சுரேஷ் அண்ணன், அருண்,போபண்ணா சார் ஆகியோர் மட்டும் முதல் நாளே கிளம்பி பெங்களூரு சென்று தங்களுடைய சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு எங்களுக்காக தொப்பல்லபுராவில் காத்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை 3.30க்கு விருகம்பாக்கம் V11 ஷோரூமிலிருந்து புறப்படுவதாக இருந்தது.முதல் நாள் இரவிலிருந்து எல்லாவற்றையும் தயார் செய்வதிலேயே நேரம் கடந்து விட்ட படியால் சுத்தமாக தூக்கமில்லை 2.30க்கெல்லாம் வண்டியில் saddle bagஐ கட்டிவிட்டு எப்படா விடியுமெனக் காத்திருந்தேன்.இந்த ரைடுக்கு ஹரி தான் லீட் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் முன்னதாகவே எந்தெந்த ஊர்கள் வழியாக போகப் போகிறோம் ; எந்த வழியாக திரும்ப வரப்போகிறோம்; என பட்டியல் போட்டு ரூட் மேப்போடு அனுப்பிவைத்திருந்தார். கிட்டத்தட்ட 750 சொச்சம் கிலோமீட்டர்களை கடக்க வேண்டி இருந்ததால் நிறைய திட்டமிடல் அவசியமாக இருந்தது.


ஒருவழியாக எல்லோரும் வந்து சேர்ந்து கிளம்பும்போது மணி 4.30ஐத் தொட்டிருந்தது.குடியாத்தம், சித்தூர் தாண்டி வந்து காலை உணவுக்காக விஜயபுரா வந்து சேர்ந்தோம். காலை உணவை முடித்துவிட்டு கோலார் வழியாக தொட்டபெல்லபுரா தாண்டி தெபஸ்பேட் வந்து சேரும்போது மணி மதியம் 12.00.முந்திய நாள் கிளம்பி வந்த ஐவர் அணி தங்கியிருந்த ஹோட்டல் முன்பு எல்லோருடைய வண்டிகளையும் பார்க் செய்து விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். அப்போது தான் ஒரு பெரிய ஆப்பு வந்து எங்கள் பயணவேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. அருணுடைய desert storm 500ன் இஞ்சின் சிலிண்டரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கான உதிரி பாகங்கள் வந்து வண்டி சரியாகிற நேரத்தில் எல்லோரும் மதிய உணவை அங்கேயே முடித்து விடலாமென திட்டமிட்டோம்.சாப்பிட்டு முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகும்போதும் அருணுடைய வண்டி பிரச்சனை சரியாகாததால் அருணும் சுரேஷ் அண்ணனும் மட்டும் அடுத்த நாள் அதிகாலை கிளம்பிவருவதாக சொன்னார்கள்.மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பினோம்.





மாலை வெயில் மின்ன ஹிரியூர், சிரா வழியாக நெடுஞ்சாலைகள் அல்லாத அழகான பாதைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினோம்.அங்கங்கே நிறுத்தி தேனீர் மட்டும் அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். இருட்டுகிற வேலையில் ஹோசதுர்கா தாண்டி பத்ராவதி வந்து சேர்ந்தோம். செக்போஸ்ட்டில் எண்ட்ரி போட்டுவிட்டு ஒரு நீண்ட நெடும் மலைப் பாதை வழியான பயணத்தை எதிர்நோக்கியபடி இஞ்சின்கள் உறும ஆரம்பித்தன

மெலிதாக மழை தூற ஆரம்பித்தவுடனேயே அத்தனை பேரும் ரெயின் கோட்டும் saddle bagக்கான ரெயின் கவரையும் அணிவித்து/அணிந்துகொண்டு கிளம்பினோம். இதற்கு மேல் நிறைய மலைப்பாதைகளை வேறு எதிர்நோக்கியிருந்தோம்.மழை, இருட்டு, மலைப்பாதை அத்தனையும் சேர்ந்து உள்ளுக்குள் மெலிதாக திகிலைக் கிளப்பியிருந்தது எனக்கு. முந்தைய நாள் தூங்காமல் போனதன் விளைவை உடல் காட்ட ஆரம்பித்தது. கண்ணிமைகள் கனக்கத் தொடங்கின.தங்குமிடம் போய்ச் சேர்ந்தால் போதுமென வெறுப்போடு வண்டியோட்ட ஆரம்பித்தேன். பிற ரைடர்களை முன்னே போகவிட்டு நான் வேகம் குறைக்க ஆரம்பித்தேன்.கடைசியாக நான், ரத்தினா அண்ணன், பிரபா, தீன், ஆனந்த் நாயர் ஆகியோர் மட்டும் தான் பின்னே சென்று கொண்டிருந்தோம் . அவ்வப்போது முன் செல்லும் லாரிக்காரர்களிடும் ஹெட்லைட்டில் கெஞ்சி வழி கேட்டு முன்னேற வேண்டியிருந்தது ஒரு கட்டத்தில் எனக்கு முன்னே பின்னே யார் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது . கழுத்துக் கயிற்றில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் கன்றுக் குட்டிபோல என் வண்டி எனது கட்டுப்பாட்டிலிருந்து மிக மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு வளைவில் தார்ச்சாலையை விட்டுக் கீழே இடதுபக்க மண்பாதையில் இறங்கியது. நான் அரைமயக்கத்துல் காலூன்றி செய்வதறியாது அப்படியே நின்றேன். பின்னே வந்து கொண்டிருந்த ரத்னாவும் பிரபாவும் பதறியடித்து வண்டியை நிறுத்திவிட்டு என்னை பிடித்தார்கள். வண்டியை சாலையில் ஏற்றிவிட்டு .ஒரு கேன் முழு Redbullஐ அருந்தவைத்தார்கள்.

”தம்பி..வண்டிய திருவாத.. என் டெயில் லேம்ப்ப மட்டும் அப்படியே ஃபாலோ பண்ணி வா. பொறுமையாவே போவோம். பசங்க எங்க இருக்காங்களோ அங்க வண்டிய வேற ஆள்ட்ட மாத்திவிட்டுட்டு நீ வேற வண்டியில பில்லியனா வரலாம்.. “ ரத்னா அண்ணன் சொன்னது எங்கோ தொலைவில் கேட்டது எனக்கு. பொறுமையாய் உருட்ட ஆரம்பித்தேன் கிட்டத்தட்ட 18 மணி நேரத்துக்குமேல் வண்டியோட்டிருந்தோம் எல்லோருமே. ஒரு இடத்தில் முன்னே சென்ற நண்பர்கள் எங்களுக்காக காத்திருந்தார்கள்.மணிப்பூர் பையன் சஞ்ஜீப்பிடம் என் பைக்கைக் கொடுத்துவிட்டு நான் சதீஷ் அண்ணன் வண்டியில் பில்லியன் ஏகினேன். என்னைத்தவிர பிரபாவும் சதீஸ் அண்ணனும் மட்டுமே எலெக்ட்ரா வாசிகள். மற்ற எல்லோருமே தண்டர்பேர்ட்/க்ளாசிக் தான். நான் அவர் தோளைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தேன். இன்னும் 20 சொச்சம் கிலோமீட்டர்கள் போக வேண்டுமென பேசிக் கொண்டார்கள்.


எக்சாக்ட்லி இந்தக் காட்சி தான். இந்த இடத்திலிருந்து பாருங்கள்

என் ஹெல்மெட் வைசர் மூடியபடியே இருந்தது. கண்டென்சேஷனால் வைசரின் உட்பக்கம் ஆவி படர்ந்தது. வெளியே மழை.எனக்கு அரைத்தூக்கம். சதீஷ் அண்ணன் வண்டியைக் கிளப்பியதும் சாலையின் மின்விளக்குகளின் ஒளி மட்டும் மங்கலாக பின்செல்ல ஆரம்பித்தது.இஞ்சின் சத்தம் தவிர்த்து வேறெதுவும் காதில் விழவில்லை.ஒவ்வொரு வளைவிலும் வண்டி சாய்ந்து திரும்புவதை உணர முடிந்தது. இண்டர்ஸ்டெல்லார் படத்தில் கூப்பர் தன் விண்கலதோடு கருந்துளைக்குள் புகுந்து தன்னை விடுவித்துக் கொள்வாரில்லையா.. கிட்டத்தட்ட அதே காட்சியை என்னால் உணர முடிந்தது.வண்ணங்கள்.. வெளிச்சம்.. இருட்டு.. மழை.. இஞ்சின் சப்தம்.. சாலையின் வளைவுகள்..அரை மயக்கம்.. வேறெதுவுமில்லை. அந்த 18 கிலோமீட்டர்கள் ஏதோ கருந்துளைக்குள் நுழைந்த யுகப்பயணம் போலத் தோன்றியது.ஒருவழியாக ரிஸார்ட் வந்து சேர்ந்தோம்.



அதிகாலைக்கு கொஞ்சம் முந்திய மூன்று மணி இருள்.வண்டியை பார்க் செய்துவிட்டு ரைடிங் கியர்களைக் களைந்து ட்ராக்ஸ் ஷார்ட்ஸுக்கு மாறி அவரவர்க்கு பிடித்து உணவுப் பதார்த்தங்களோடு காரிடரில் அமர்ந்தோம். கடகடவென உண்டு முடித்து அறைகளில் கட்டிலில் விழும்போது மணி 4.30க்கு கொஞ்சம் அதிகம்.முதுகும் தோள்களும் ”என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா” எனக் கதறின.. ஒருவழியாய் உறங்கினேன்.


திரும்பிவந்ததே தனி கதை - அதனால 3.1ல தொடரும்...

செவ்வாய், 30 ஜூன், 2015

புல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2




இந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ கேள்விப்பட்டிருப்பீங்க.நிஜத்துல அந்த காந்தளூர் எங்க இருக்குன்னா  மூனாருக்கு 23 கிலோமீட்டருக்கு முன்னாடி மறையூர் அப்டிங்குற ஊர்லேர்ந்து 16 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.V11 RERC ஜனவரி மாசம் போயிட்டு வந்த கொடைக்கானல் ட்ரிப்புக்கு அப்புறம் லாங் ரைட்ஸ் எதுவும் போகவேயில்ல. அரை நாள் ட்ரிப்பா ECRல இருக்க சத்ராஸ் ஃபோர்ட்டுக்கு மட்டும் போய்ட்டு வந்தோம்.திரும்ப வரும்போது மாமல்லா ரிஸார்ட்ல காலை உணவு.அப்போதான் அடுத்த ட்ரிப் காந்தளூர் போகலாம்னு கிருஷ்ணன் சார் சொன்னாரு.



உடுமலைப்பேட்டைலேர்ந்து மூனாறு போற வழில மறையூர்லேர்ந்து இடது பக்கம் திரும்பி 15 கிலோமீட்டர் போனா காந்தளூர். ரொம்ப அழகான அமைதியான ஊர்.இடுக்கி மாவட்டத்துக்கு கீழ வருது. வழக்கம் போல போக வேண்டிய ரூட்டெல்லாம் முன்னாடியே பேசி முடிவு பண்ணாங்க.
ஏப்ரல் மாசம் 11ஆந் தேதி சனிக்கெழம காலைல 4.30க்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ் ஷோரும்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அப்டி இப்டின்னு மொத்தம் 17 புல்லட் வந்து சேந்துச்சு அதுல ஒரு வண்டி எங்க புது மாடல் வண்டிக்கெல்லாம் பாட்டன். 1972 மாடல்; Cast Iron இஞ்சின்.வலதுகால் பக்கம் கியர் பாக்ஸ்.இடது கால் பக்கம் ப்ரேக்குன்னு... டிபிக்கல் ரெட்ரோ. புதுசா பெயிண்டிங்கெல்லாம் பண்ணி சும்மா மின்னிக்கிட்டு வந்துச்சு.காலைல 5.00 மணிக்கு சொல்லி வெச்சபடி கெளம்புனோம். கிருஷ்ணகிரி கிட்ட பள்ளிகொண்டாவுல ப்ரேக்ஃபஸ்ட் சாப்புட்றதா ப்ளான். வழக்கம் போல வெயில் வரதுக்கு முன்னாடி எவ்ளோ தூரம் போக முடியுமோ போயிடனும்கிறதுதான் திட்டம். சொல்லிருந்த மாதிரியே கரெக்ட்டா 7.30க்கெல்லாம் பள்ளிகொண்டா வந்தாச்சு. அங்க ஒரு ரோட்சைட் ஹோட்டல்ல ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு கெளம்புனோம். இதுக்கு நடுல 72 மாடல் வண்டி ஏதோ பிரச்சனையால சென்னைக்கு திரும்பிப் போச்சு.




மத்தியான சாப்பாட்டுக்கு கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்துல இருக்குற ஒரு கடைல சாப்புட்றதா முடிவு பண்ணோம்.தர்மபுரி. சேலம் வழியா கோபிச்செட்டிப்பாளையம் வந்து அங்கிருந்து ஒரு 40கிலோ மீட்டர் ஸ்டேட் ஹைவேஸ்ல  உள்ள போகவேண்டியதா இருந்துச்சு.ஆனா அந்த சாப்பாட்டுக்கு இந்த ட்ராவல் வொர்த்து.’மைவிழி’ உணவகம்னு கடை பேரு. 300 ரூபாய்க்கு அன்லிமிட்டட் அசைவ பஃபே சாப்பாடுஅதுவும் வீட்டு சாப்பாடு மாதிரி. எல்லாரும் சும்மா புகுந்து விளையாடுனோம். சைவ சாப்பாடும் உண்டு.. ஆனா அது கொஞ்சம் விலை குறைவு.சாப்ட்டு முடிச்சு எல்லாரும் வெளில கீற்று கொட்டகைல ஆளுக்கொரு பக்கம் சாஞ்சிட்டோம்.அடுத்து தாராபுரம்..உடுமலைப் பேட்டை வழியா போய் மலை மேல ஏறுறதுதான் திட்டம். அப்பவே மணி நாலு ஆயிடுச்சு. அப்போ தான் வெங்கட் வண்டியில பெட்ரோல் டேங்க் ஓட்டையாகி லீக் ஆனது தெரிஞ்சுது. அப்புறம் டேங்க்கை கழட்டி, காலி பண்ணி, கழுவி, வெல்ட் பண்ணி திரும்ப வரும்போது மணி 5.30க்கு மேல ஆகிடுச்சு. ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சு மலை ரோடு மேல ஏறுறதா முடிவு பண்ணி கெளம்புனோம்.



உடுமலைப்பேட்டைல வழக்கம் போல சில பேர் வேற ரூட்ல கொஞ்ச தூரம் போயிட்டதனால அவங்க வரதுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு.கடைசியா கேரளா செக்போஸ்ட்ல வண்டி நம்பர் குடுத்துட்டு பேரெழுதிட்டு கெளம்பும்போது மணி 8.30க்கு மேல ஆச்சு. ஃபார்ஸ்ட் ஆஃபிஸர்ஸ் முன்னாடியே சொல்லிதான் அனுப்புனாங்க.வழில வண்டிய எங்கேயும் நிறுத்தக்கூடாது , அனிமல்ஸ் வெளில வரும்னு. நாங்களும் எல்லாரும் மொத்தமா போனா சத்தம் ரொம்ப அதிகமா இருக்கும்னு கொஞ்சம் இடைவெளிவிட்டு போக ஆரம்பிச்சோம்.மலை ஏற ஏற செம்ம இருட்டு.நம்ம வண்டி ஹெட்லைட் தவிர  வேற எந்த வெளிச்சமும் இல்ல.கொஞ்சம் பதட்டத்தோட தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்.என் வண்டிக்கு 50 அடி முன்னாடியும் பின்னாடியும் வேற வண்டி எதுவும் இல்ல.
ரோட்டோட ரெண்டு பக்கமும் அவ்வளவு அடர்த்தியா மரங்கள்.  என் வண்டியுடைய இஞ்சின் சத்தமும் காட்டுக்குள்ளிருந்த வந்த விநோத சப்தங்களையும் தாண்டி வேறெதுவும் கேக்கல.

கொஞ்ச தூரம் தள்ளி ரோட்டோட இடது பக்கம் ஒரு பெரிய மரக்கிளை ஆடிட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட 600 மீட்டர் இடைவெளில. இது என்னடா எல்லா மரமும் அசையாம இது மட்டும் அசையுதேன்னு வண்டிய கொஞ்சம் லெஃப்ட்ல ஓரங்கட்டி ஹை பீம் போட்டா...!! யானை....!!! சாதுவா கிளைய இழுத்து என்னவோ சாப்டுட்டு இருந்துச்சு. எனக்கு செம்ம பதட்டம். சுத்தியும் வேற யாரும் வரல. என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு தார் ரோட்லேர்ந்து இறங்கி வலது பக்கம் கொஞ்சம் கரடு முரடான் மண் தரைல வண்டிய ஓட்டிட்டு போய்ட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு திட்டம்போட்டு வண்டிய ரைட்ல ஓரம் கட்னேன். பொறுமையா முன்னாடி போக ஆரம்பிச்சேன். ஒரு 200 மீட்டர் போனப்புறம் மறுபடியும் வலது பக்கம் ஏதோ அசைவு.என்னடா இது சோதனைன்னு மறுபடியும் ஹைபீம் போட்டா... ஒரு குட்டியானை...!! ரைட்டுடா... ரெண்டு பக்கமும் ஃபேமிலியோட நின்னுட்டு இருக்கே..என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு வண்டிய ஆஃப் பண்ணிட்டேன். அப்புறம் நடுவுல ஒரு சின்ன கேப் இருந்துச்சு அதுலயே போயிடலாம்னு முடிவு பண்ணி ஹெட்லைட்ட ஆஃப் பண்ணிட்டு டைகர் லேம்ப்னு ஒரு சின்ன லைட் இருக்கும் ஹெட்லைட் பக்கத்துல..அத மட்டும் ஆன் பண்ணிட்டு பொறுமையா வண்டிய உருட்டிகிட்டே பக்கத்துல போனேன். ரெண்டு பக்கமும் யானை பக்கத்துல வந்த ஒரு நொடி இருக்கே..யப்பா... யானைய தாண்டிட்டேன்னு தெரிஞ்சதும் லை ஆன் பண்ணி ஒரே திருவு தான் ரெண்டரை கிலோ மீட்டர் தள்ளிப் போய் தான் ஸ்லோ பண்ணேன். செம்ம அனுபவம். மறையூருக்கு முன்னால ஒரு டீக்கடைல எல்லாரும் அசெம்பிள் ஆனோம். இந்த இடைப்பட்ட கேப்ல திரும்பிப்போன அந்த 72 மாடல் வண்டிய சரி பண்ணி திரும்பவும் எங்க கூட அந்த டீக்கடை கிட்ட வந்து சேந்துகிட்டாங்க.


மறையூர் தான் செண்டர் பாயிண்ட். அங்கிருந்து நேராப் போனா மூணாறு.இடது பக்கம் திரும்பி 18 கிலோமீட்டர் போனா காந்தளூர். நாங்க எங்கெங்கேயோ தப்பான வழில கொஞ்ச நேரம் சுத்திட்டு ஒருவழியா நாங்க தங்க வேண்டிய ரிஸார்ட்டுக்கு வந்து சேந்தோம்.கொஞ்ச நேரத்துலேயே எல்லாரும் ரெஃப்ரஷ் ஆய்ட்டு கேம்ப் ஃபயர் சுத்தி உக்காந்து சப்பாத்தி சிக்கன் கறி...அது இதுன்னு வெளுத்துக் கட்டிட்டுப் போய்ப் படுத்தாச்சு. அடுத்த நாள் காலைல நாங்க தங்கியிருந்த ரிஸார்ட்டுக்கு எதிர் பக்கம் கொஞ்ச தூரத்துல ஒரு அருவி இருக்குறதா சொன்னாங்க. அதனால மொத்தமா கெளம்புனோம். ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்து போனதுக்கு அப்புறம் அட்டகாசமான ஒரு அருவி வந்துச்சு.ஒரு மணி நேரத்துக்கு மேல செம்ம குளியல் செம்ம ஆட்டம். திரும்பி மேல ஏறி வரும்போது பெண்டு கழண்டுபோச்சு. வந்து கேரளா ஸ்டைல் காலை டிஃபன் புட்டு, தேங்காய்ப் பால், ஆப்பம், கடலை கறி, சிக்கன் கொழம்புன்னு செம்ம மெனு. வெளுத்துக் கட்டிட்டு அப்புறம் மறுபடியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரம் டீ அடிச்சுட்டு ஸ்ட்ராபெரி தோட்டம் , கும்க்கி படத்துல வர ஒரு ஸ்பாட்னு ரெண்டு மூனு எடம் சைட் சீயிங் எல்லாம் முடிச்சு 7.00 மணி வாக்குல ரூமுக்கு வந்து சேந்தோம்.




அன்னைக்கு நைட் கேம்ப் ஃபயரோட சிக்கன் பார்பெக்யூவும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. முதல் நாள் பயணக்களைப்பால தூங்கப் போனவங்க எல்லாருமே அன்னைக்கு உற்சாகமா காத்துட்டு இருந்தாங்க. ரைடர்ஸ் எல்லாரும் தங்கள அறிமுகம் செஞ்சுகிட்டு அப்டியே பாட்டு ஆட்டம்னு நடு ராத்திரி வரைக்கும் கொண்டாட்டமாவே போச்சு.அடுத்த நாள் காலைல கொஞ்சம் சீக்கிரம் கெளம்பி மூனாறு வழியா தேனி, போடிநாயக்கனூர் மதுரை வரைக்கும் போறதா திட்டம். ஆனா சதீஷ் அண்ணன் வண்டி பஞ்சர் ஆனதால கொஞ்ச டிலே ஆகி ஒரு வழி 7.00 மணி கிட்ட கெளம்புனோம். மூனாறுல தான் காலை டிஃபன். அதுக்கப்புறம் அங்கிருந்து தேனி போடிநாயக்கனூர் வழியா மதுரைக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப ரொம்ப அழகான மலைப் பாதைப் பயணாம் அது. டீ எஸ்டேட்டுகளுடைய பசுமைக்கு நடுவுல... கொஞ்சம் குளிர்.. கொஞ்சம் வெயில்...ரெண்டையும் மாத்தி மாத்தி அனுபவிச்சபடி... ஒரு மாதிரி வெளிர் ஊதா நிற பூக்கள் ரெண்டுபக்கமும் கொட்டிக்கிடந்த ஈரமான சாலைகள்ல வண்டியோட்டுன அனுபவம் இருக்கே.....!! அடடா... கண்டிப்பா வாழ்க்கைல ஒரு முறையாவது அத அனுபவிச்சே தீரனும்.


அங்கிருந்து இறங்கி மதுரைக்கு வெளில மத்தவங்க வர்ரதுக்காக காத்திருக்கும்போது லேசா மழை தூர ஆரம்பிச்சுது.அப்டியே நனைஞ்சபடியே வண்டியோட்டுனோம்.மத்தியான சாப்பாடு திண்டுக்கல் பொன்ராம்ல .ஹரி அவருடை இன்ஃப்ளூயன்ஸ பயன்படுத்தி எங்களுக்காக பிரியாணி ப்ளாக் பண்ணி வெச்சுருந்தாரு. ஒருவழியா சாயந்திரம் 4.30க்கு தான் அங்க வந்து சாப்புடவே ஆரம்பிச்சோம்.சாப்ட்டு முடிச்சு அங்கிருந்து கெளம்பி அப்டியே NH45 பிடிச்சாச்சு. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை தான்.அங்கங்க டீ சாப்புட நிறுத்திப்போம். திருச்சிக்கு உள்ள போனா ட்ராஃபிக்ல் மாட்டிப்போம்னு முன்னாடியே மனப்பாறைல ஒரு ஸ்டேட் ஹைவேல திரும்புனோம். பொதுவா ஸ்டேட் ஹைவேஸ்னாலே எதிர்பக்க ட்ராஃபிக், மோசமான ரோடுன்னு கடுப்பேத்துற விஷயங்கள் இருக்கும் ஆனா இந்த ரோடு ஏதோ நந்தவனத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி ரெண்டுபக்கமும் அடர்த்தியா மரங்களோட ஏதோ கே.கே நகர் நிழல்சாலை மாதிரி இருந்துச்சு. ஒரே ஸ்ட்ரெட்ச்ல மறுபடியும் NH வந்து சேந்தோம். அங்க ஊருக்கு வெளில ஒரு டீ ப்ரேக் எடுத்துகிட்டு கிளம்புனோம். இங்க தான் எங்க லீட் பிரசாத் ஒரு ட்ரிக் ப்ளான் போட்டாரு.”அடுத்து நாம் செங்குறிச்சி டோல் ப்ளாசா தாண்டி தான் நிக்க போறோம்.இங்கிருந்து அது 80 கிலோ மீட்டர். இது நான் ஸ்டாப் லெக்” அப்டின்னு எலார்கிட்டயும் சொல்லிட்டாரு. ஆனா நெஜம்மா அங்கிருந்து 110 கிலோமீட்டருக்கு அப்புறம் தான் செங்குறிச்சி. நான் சும்மா வெரட்டு வெரட்டுன்னு போய்க்கிட்டே இருந்தேன்.வாழ்க்கைல முதல் முறையா 100 கிலோமீட்டருக்கு மேல நான்ஸ்டாப் ரைட் போனது அப்போ தான். மத்த 350 cc வண்டிக்கு முன்னாலயே வந்து சேந்தேன். கொஞ்ச நேரம் மத்தவங்களுக்காக காத்திருந்தோம். அப்புறம் கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற A2Bல டின்னர் முடிச்சு கரெக்ட்டா கெளம்புற நேரத்துல செம்ம மழை. என்கிட்ட ரெய்ன் கோட் இருந்துச்சு.. டக்குன்னு எடுத்து மாட்டிகிட்டேன். எல்லாரையும் போலாம் போலாம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்ச பேருக்குத் தயக்கம். எனக்கும் உள்ளுக்குள்ள மழைல வண்டியோட்ட பயந்தான். ஆனாலும் ஒரு ஆசை.

ஒரு வழியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கிளம்பும்போது மணி 10.30க்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சென்னைக்கு 273 கிலோ மீட்டர் இருந்துச்சு. மழையினால யாரும் வேகமா போறதில்லன்னும் பொறுமையாவே போய்க்கலாம்னும் பேசி முடிவு பண்ணிகிட்டோம். மழை விட்டு விட்டு தூத்தல் போட்டபடியே இருந்துச்சு. ஹெல்மெட் வைசர்ல தண்ணி ஓடிகிட்டே இருக்கும். எதிர்பக்கத்துல வர்ர வாகனங்களுடைய வெளிச்சம், நம்மள தாண்டி போற பெரிய வாகனங்கள் வாரியிறைக்குற அழுக்கு தண்ணி, சரியான பிடிமான இல்லாம வழுக்க தயாரா இருக்குற சாலைன்னு, ஹெல்மெட் வழியா பின் கழுத்துல இறங்கி உள்ளாடை வரைக்கும் நனைக்குற மழை தண்ணின்னு இத்தனையையும் சமாளிச்சு தான் வண்டியோட்னோம்.மழைக்கு முன்னாடி வரைக்கும் பேயோட்டு ஓட்டிக்கிட்டிருந்த நான் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பம்ம ஆரம்பிச்சேன். எந்த லாரியையும் ஓவர்டேக் பண்ணி முன்னாடி போறதுக்கே பயமா இருந்துச்சு. ஹரிஷ் மணி அண்ணாத்த இத கவனிச்சுட்டாரு. என் பக்கத்துல வந்துட்டு என்ன guide பண்ண ஆரம்பிச்சார். ஒவ்வொரு லாரியை ஓவர் டேக் பண்ணும்போதும் பக்கத்துலயே அவரும் வருவார். தாண்டுன உடனே ஒரு thumbs up காட்டுவாரு. இப்டியே பொறுமையா ஒட்டிகிட்டு வந்தோம். மழை கொஞ்சம் விட்டவுடனே பழையபடி விரட்ட ஆரம்பிச்சோம். வண்டி டயர்லயும் கொஞ்சம் பிடிமானம் கிடைக்க ஆரம்பிச்சுது.

ஒருவழியா அதிகாலை 2.30 மணிக்கு மேல்மருவத்தூர் வந்து சேர்ந்தோம். அங்க ஒரு வண்டிக்கு சின்னதா ஒரு fall.அதனால காஃபி ப்ரேக், வண்டி ரெடி பண்ற நேரம், ஈர சட்டைய மாத்திக்கிற நேரம்னு எல்லாம் சேர்த்து ஒரு நேரத்துக்கு மேல ஆச்சு. மழை சுத்தமா விட்டுடுச்சு.ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணி போல கடைசியா எல்லாரும் மதுரவாயல் டோல் கேட்கிட்ட அசெம்பிள் ஆனோம். ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிட்டு கைகுலுக்கி பிரியாவிடை சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். V11 ஷோரூம் உடைய மேனேஜிங் பார்ட்னர்ஸ் பிரபுவும், ஹரியும் அவங்க கார்ல எங்ககூட வந்திருந்தாங்க. அவங்களும் கடைசிவரைக்கும் இருந்து எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு தான் கெளம்புனாங்க. நான் கே.கே நகர் வந்து சேரும்போது மணி 5.30. நிறைய களைப்போடவும் அட்டகாசமான அனுபவங்களோடவும் கிட்டத்தட்ட 1400+ கிலோ மீட்டர் பயணம் செஞ்சுட்டு வீட்டுக்கு வரும்போது மனசுல ஒரு இனம்புரியாத அமைதி. அடுத்த ட்ரிப்பை எதிர்ப்பார்த்தபடி வண்டிய ஏத்தி போட்டுட்டு வந்து படுக்கைல விழுந்தேன்.


அடுத்த ட்ரிப்ல சந்திப்போம்....!!

மேலும் படங்கள் இங்கே

வியாழன், 23 ஏப்ரல், 2015

புல்லட் டைரி - முதல் பயணம் - 1


முன்னறிவிப்பு: இது ஜனவரி மாசம் நான் போய்ட்டு வந்த என் முதல் ரோட் ட்ரிப் பத்தின போஸ்ட்டாக்கும்.



ஏற்கனவே வண்டி வாங்குன கதையப் பத்தி மாங்கு மாங்குன்னு எழுதியாச்சு.வாங்குன வண்டிய நாலு எடத்துக்கு எடுத்துட்டு போனா தான அதுக்கொரு மரியாத. அதனால வண்டில ஊர் சுத்துறதுக்காக ஒரு க்ரூப்பைத் தேடிக் கண்டுபிடிச்சேன். 'V11 Royal Enfield Riders Club' - வேலவன் மோட்டார்ஸ் கூட சேந்து இன்னபிற புல்லட் காதலர்கள் தொடங்குன க்ரூப் தான் இது. அந்த குழுவுடைய மூன்றாவது வருட நிறைவு நாள் ஜனவரி 26 அன்னைக்கு. அதே நாள் V11 குழுவுடைய Core member ஹரிக்கு மதுரைல கல்யாணம். இது எல்லாத்தையும் கனெக்ட் பண்ற மாதிரி ஒரு ரோட் ட்ரிப் ப்ளான் பண்ணாங்க, எங்க ரைடர்ஸ் க்ளப்போட வாட்சப் க்ரூப்ல அறிவிப்புகள் வெளியாச்சு. எப்படா ஊர் சுத்த சான்ஸ் கெடைக்கும்னு காத்திருந்த நான் உடனே வரேன்னு பெயர் குடுத்துட்டேன். ஆனா இது ஒரு long distance ride ங்குறதுனால Full faced helmet, Gloves, Knee Pad, Padded Jacket, ஆகிய பாதுகாப்பு கவசங்கள்லாம் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாங்க.



அதுக்கப்புறம் ஒன்னொன்னா வாங்க ஆரம்பிச்சேன்.ஒருவழியா அந்த பர்சேஸ் முடிஞ்சுது. எப்பவுமே இந்த மாதிரி ரோட் ட்ரிப்புகளுக்கான வழியை முன்னாடியே பேசி முடிவு பண்ணிடுவாங்க. வெறும் நேஷனல் ஹைவே மட்டும் இருந்தா போர் அடிச்சுடும்னு கொஞ்ச தூரம் ஸ்டேட் ஹைவேஸ்; அப்புறம் கொஞ்சம் கிராமங்கள் வழியா போற மாதிரி கரடுமுரடு சாலைகள்; ஒரு வேளை நாம போறது மலைவாச ஸ்தலமா இருந்தா மலை சாலைகள்; இப்டி எல்லாமே கலந்துகட்டி இருக்குற மாதிரியா பாதையை தான் தேர்ந்தெடுப்பாங்க. போகும் பாதை எப்பவுமே தூரமானதா கொஞ்சம் சுத்துவழியா தான் இருக்கும்.ட்ரிப் முடிஞ்சு திரும்பி வரும்போது எல்லாருக்குமே ரொம்ப களைப்பா இருக்கும்ங்குறதுனால நேர் வழியா, ஒரே நேஷனல் ஹைவேல வர மாதிரி இருக்கும்.


இதையெல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. 23ஆம் தேதி காலைல 5.00 மணிக்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அதுக்கப்புறம் அப்படியே போரூர் சிக்னல் வழியா பூந்தமல்லி பைப்பாஸ பிடிச்சு போறதுதான் ப்ளான்.அங்க tollgate பக்கத்துல சின்னதா ஒரு gathering.அவ்ளோதான்.

இந்த இடத்துல இன்னொரு தகவல்.இந்த மாதிரி பைக் ட்ரிப்புல மொத்த குழுவையும் வழிநடத்திட்டு முன்னாடி போறவங்கள 'Lead'னு சொல்லுவோம்.எந்த வழியா போறோம்.. எங்க ப்ரேக் எடுக்குறோம்.. எந்த ஸ்பீட்ல போகனும்னு எல்லாத்தையும் லீட் தான் மத்த ரைடர்ஸ்கூட பேசி முடிவு பண்ணுவாங்க.பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் தான் லீடா இருப்பாங்க. அதே மாதிரி எல்லா ரைடர்ஸையும் பத்திரமா அனுப்பி வெச்சுட்டு பின்னாடி கடைசியா வரவங்களுக்கு 'Sweeper'னு பேரு. இந்த ஸ்வீப்பரா வரவங்க பெரும்பாலும் மெக்கானிக்கா தான் இருப்பாங்க. அவங்கிட்ட கொஞ்சம் ஸ்பேர்ஸ், இஞ்சின் ஆயில், பெட்ரோல் கொஞ்சம், எல்லாமே இருக்கும். இது ஏதும் வண்டி breakdown ஆனா அதுக்கான safety backup.


இப்போ  back to எங்க ட்ரிப். என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு வண்டி.ராஜா தான் இந்த ட்ரிப்புக்கு லீட். ஸ்வீப்பர் வேலவன் மோட்டார்ஸ் டெக்னீஷியன் கார்த்திக்.வெயிலுக்கு முன்னால எவ்ளோ தூரம் கவர் பண்ண முடியுமோ பண்ணிடலாம்னு சொன்னாங்க. தட தடன்னு கெளம்புனோம். அதுக்கப்புறம் அங்கங்க டீ ப்ரேக், ரீஸஸ் ப்ரேக்லாம் எடுத்தாலும் காலை உணவுக்கு திருவண்ணாமலை போய் சேர்ந்தாச்சு.9.00 மணி வாக்குல போய் சேர்ந்தாச்சு.அது முடிஞ்சு 11.00 மணி ஆகும்போது கள்ளக்குறிச்சி. டீ குடிக்க நிறுத்துனோம். செம்ம மழை ஆரம்பிச்சுது. பின்னாடி கட்டியிருந்த பேகுக்கு ஒரு பாலித்தீன் கவரப்போட்டு கவர் பண்ணிட்டு மழை விட்டதும் வண்டிய கெளப்புனோம். மதியம் சாப்பாட்டுக்கு சேலம் செல்வி மெஸ் போயிட்றதா திட்டம். வெற்றிகரமா 2.00 மணி கிட்ட போய் சேர்ந்தோம். சாப்ட்டு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையை புடிச்சு ராசிபுரம் திருச்செங்கோடு வழியா வத்தலகுண்டு போய் சேர்ரதுதான் தான் ப்ளான். அப்பவே மழை பெய்ய ஆரம்பிச்சு எங்க வேகம் குறைஞ்சிடுச்சு.நடுவுல நேஷனல் ஹைவேலேர்ந்து பிரிஞ்சு ஸ்டேட் ஹைவேஸ்ல போக வேண்டிய சூழ்நிலை. Opposite traffic வேற கடுப்பேத்துது.இத்தனைக்கும் நடுவுல ஒரு வழிய 8.00 மணிக்கு கரெக்ட்டா வத்தலகுண்டு வந்து சேரும்போது என் க்ளட்ச் கேபிள் கட் ஆயிடுச்சு.

அப்புறம் அத மாத்திகிட்டு அங்கிருந்து கெளம்பும்போது மணி 9.00க்கு மேல.இன்னும் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் மலைப் பாதைல வண்டியோட்டனும். எனக்கு நார்மல் ரோடே பயங்காட்டும். Ghat ரோடு இன்னும் பிரமாதம். Two way traffic வேற. சக ரைடர்கள் குடுத்த தைரியத்துல மலை ஏற ஆரம்பிச்சேன். 40-50 லயே வண்டிய உருட்டிட்டுப் போய் ஒருவழியா 11.00 மணிக்கு நாங்க புக் பண்ணிருந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.அடுத்த நாள் முழுக்கு ரெஸ்ட் எடுக்குறது தான் திட்டம்.ஆனாலும் பகல் 11.00 மணிக்கு மேல போரடிக்க ஆரம்பிச்சதுனால நாங்க நாலு பேர் மட்டும் லோக்கல் sight seeingக்கு கெளம்பி போனோம்.



 ஊர சுத்தி முடிச்சு சாயந்திரம் வந்து ரூமடைஞ்சாச்சு.அடுத்த நாள் காலைல மதுரை கிளம்புறதா முடிவாச்சு.ஆனா வழக்கமான பாதை இல்லாம வேற வழியில போலாம்னு உள்ளூர் மக்கள் கிட்ட  விசாரிச்சு தாண்டிக்குடி வழியா கீழ இறங்க முடிவாச்சு.








வழக்கமான ghat roads மாதிரி இல்லாம இது கொஞ்சம் கரடு முரடான ரோடு.ஒவ்வொரு வளைவும் சும்மா 180 டிகிரிக்கு நம்மள சுத்தியடிக்கும்.ரொம்பக்  குறுகலான சாலை.ஒரு பக்கம் பகீர் பள்ளத்தாக்கு. கொஞ்ச தூரம் போன இடது பக்கம் ஏதாவது நீர்நிலை இருக்கும்.திடீர்னு ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு இருக்கும்.இப்படியாக mother nature kept surprising us with her fantastic creations. 1.00 மணி ஆகும்போது ஒட்டன்சத்திரம் வந்து சேந்தோம்.அம்மா மெஸ்ல மத்தியான சாப்பாடு.அடுத்தது வேடசந்தூர், தாடிக்கொம்பு, பேகம்பூர் வழியா மதுரைக்கு போய் சேர்றதுன்னு முடிவாச்சு.



சாயந்திரம் இருட்டுறதுக்கு முன்னாடியே மதுரைக்கு போய் சேந்தாச்சு. அப்புறம் கல்யாண வீட்டுகாரங்க புக் பண்ணி வெச்சிருந்த சர்வீஸ்டு அப்பார்ட்மென்ட்க்கு போய்  refresh ஆய்ட்டு கல்யாண reception க்கு போய்ட்டு வந்தோம்.





அடுத்த நாள் காலைல கல்யாணத்த அட்டெண்ட் பண்னிட்டு உடனே சென்னை கிளம்பறதா இருந்ததனால நான் riding gears எல்லாம் போட்டுட்டே தான் மேடையேறுனேன். ஒரு வழியா சாப்பாடெல்லாம் முடிஞ்சப்புறம் NH45 பிடிச்சோம்.அங்கங்க re-fuel பண்ண வண்டிய நிறுத்துனதோட சரி.100 கிலோமீட்டருக்கு மேல தான் ப்ரேக் எல்லாம். கடைசியா சாயந்திரம் 99km கடைல காஃபிய குடிச்சுட்டு அடுத்த ஸ்டாப் சென்னைன்னு சொல்லிகிட்டு பிரிஞ்சோம். சிட்டி கிட்ட வந்தப்புறம் மறைமலை நகர்ல ஒரு மெகா நற்செய்திக் கூட்ட மாநாடு. செம்ம ட்ராஃபிக் ஜாம். எப்படா வீட்டுக்குப் போய் சேருவோம்னு இருந்த எங்களுக்கெல்லாம் செம்ம கடுப்பு. ரோட்ட விட்டு சைட்ல வண்டிய எறக்கி ஓட்ட ஆரம்பிச்சோம். அப்டி இப்டின்னு கத்திப்பாரா கிட்ட வந்து சேரும்போது நைட்டு 10.00 மணி ஆயிடுச்சு.வெற்றிகரமா என்னுடைய முதல் லாங் ரைட் முடிச்சுட்டு வீட்டுக்கு  வந்து சேந்தேன்.

ஒட்டுமொத்தமாவே இது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நெடுந்தூர பயணம் நிஜம்மாவே இவ்வளவு விஷ்யங்கள் கத்துக் கொடுக்கும்னு அப்போ தான் புரிஞ்சுது.வெவ்வேற வானிலைல... வேற வேற மாதிரி சாலைகள்ல.. வித்தியாசமான சூழல்ல எல்லாம் பயணப்பட்டு கடைசியா நாம சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேரும்போது ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கையையே வாழ்ந்த மாதிரி உணருவோம். பயணத்தைத் தவிர வேறெதுவும் இந்த உணர்வைத் தருமான்னு தெரியல.
- தொடரும்


Related Posts Plugin for WordPress, Blogger...